Sunday, April 28, 2024

உ.வே.சா. வின் என் சரித்திரம் 85: திருப்பெருந்துறைப் புராணம்

 




(உ.வே.சா. வின் என் சரித்திரம் 84: சிதம்பரம்பிள்ளையின் கலியாண நிறைவு தொடர்ச்சி)

ஆசிரியரின் உத்தரவுப்படி நான் திருவாவடுதுறைக்கு வந்து சேர்ந்த
பிறகு அவரைப் பிரிந்திருக்க நேர்ந்தது பற்றி மிகவும் வருந்தினேன். ஆனாலும் சுப்பிரமணிய தேசிகருடைய அன்பும் தம்பிரான்களுடைய பழக்கமும் அவ் வருத்தத்தை ஒருவாறு குறைத்தன. திருவாவடுதுறையில் உணவு விசயத்தில் எனக்கு ஒரு விதமான குறைவும் இல்லை. பொழுது போக்கும் இனிமையாக இருந்தது; குமாரசாமித் தம்பிரானுடைய சல்லாபம் எனக்கு ஆறுதலை அளித்தது. ஆசிரியர் கட்டளையிட்டிருந்தபடி, தம்பிரான்கள் எல்லாரிடமும் நான் மிக்க சாக்கிரதையுடனும் மரியாதையுடனும் பழகி வரலானேன்.

தேசிகர் கட்டளை

ஒரு நாள் இரவில் சுப்பிரமணிய தேசிகருடன் நான் பேசிக்
கொண்டிருக்கையில், “பிள்ளையவர்களிடம் போய் ஒரு சமாசாரம்
சொல்லிவிட்டு வர வேண்டும்” என்றார்.

“கட்டளைப்படியே செய்கிறேன்” என்று நான் சொன்னேன்.

திருப்பெருந்துறையில் ஆலய விசாரணை செய்து வந்த சுப்பிரமணியத் தம்பிரான் என்பவர் சுப்பிரமணிய தேசிகருக்கு ஒரு விண்ணப்பம் அனுப்பியிருந்தார். பிள்ளையவர்களை அந்தத் தலத்திற்கு நாடு நகரச் சிறப்புடன் ஒரு புராணம் பாடும்படி கட்டளையிட வேண்டுமென்றும், அவ்வாறு அவர் பாடி அரங்கேற்றி முடித்தால் இரண்டாயிரம் உரூபாய் தாம் சம்மானம் பண்ணுவதாகவும் தம்பிரான் அதில் தெரிவித்திருந்தார். அக்கடிதத்தைப் பற்றிச் சுப்பிரமணிய தேசிகர் என்னிடம் சொல்லிவிட்டு, “நல்ல சந்தர்ப்பத்தில் இந்த வேண்டுகோள் வந்திருக்கிறது. பிள்ளையவர்கள் தம் குமாரருக்கு விவாகம் செய்த வகையில் ஏதேனும் சிரமம் அடைந்திருக்கலாம். அதை நீக்கிக் கொள்வதற்கு இது நல்லது நீர் போய் இவ்விசயத்தைத் தெளிவாக எடுத்துச் செல்வதோடு, அவ்வாறு செய்வது பல விசயங்களில் அனுகூலமாக இருக்குமென்று நாமும் அபிப்பிராயப்படுவதாகச் சொல்லும்.
திருப்பெருந்துறைக்குரிய வடமொழிப் புராணத்தின் தமிழ் மொழி
பெயர்ப்பையும், அந்தத் தலத்திற்கு முன்பே உள்ள இரண்டு பழைய
புராணங்களையும் தம்பிரான் அனுப்பியிருக்கிறார். அவற்றையும்
பிள்ளையவர்களிடம் கொண்டு போய்க் கொடுத்து வாரும்” என்று சொல்லி அப்புத்தகங்களையும் என்னிடம் கொடுத்தார்.

ஒரு செய்யுளடி

நான் மறுநாட் காலையிலேயே மாயூரத்திற்கு நடந்து சென்றேன்.
ஆசிரியரிடம் செய்தியைச் சொல்லிப் புத்தகங்களையும் கொடுத்தேன். அவர்
அவ்விசயத்தை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார், அப்பொழுது அவர் மனம் திருப்பெருந்துறை விநாயகர் சந்நிதியிலேபோய் நின்றிருக்க வேண்டும். “செய்கிறேன்” என்றோ, திருவாவடுதுறைக்குப் புறப்படுவோம்” என்றோ அவர் சொல்ல வில்லை.

நிலவுவந்த முடியினொடு வெயிலுவந்த

மழகளிற்றை நினைந்து வாழ்வாம்”

என்ற ஒரு செய்யுளின் அடி அவர் வாக்கிலிருந்து புறப்பட்டது.
அப்போது, ‘இப்பொழுதே இவர்கள் புராணத்திற்குப் பிள்ளையார் சுழி போட்டு விட்டார்கள்’ என்று எண்ணினேன். வெயிலுவந்த விநாயகரென்பது
திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள தல விநாயகர் திருநாமம்வெயில் உவந்த விநாயகர் என்ற திருநாமத்தோடு வெயிலுக்குப் பகையாகிய நிலவின் ஞாபகமும்!   அதனை அவர் திருமுடியில் அணிந்திருப்பதன் ஞாபகமும்
ஒருங்கே வந்தன போலும். நான் அந்த அடியை ஏட்டிலே எழுதிக்
கொள்ளவில்லை; என் உள்ளத்திலே எழுதிக் கொண்டேன்.

“சந்நிதானத்தின் திருவுள்ளப்படி நடப்பதுதான் எனக்கு இன்பம். நீர்
திருப்பெருந்துறை பார்த்ததில்லையே?”

“இல்லை; மாணிக்கவாசகர் திருவருள் பெற்ற தலமென்று ஐயா
அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.”

“ஆமாம்; அது நல்ல தலந்தான். ஆவுடையார் கோவிலென்று இப்போது எல்லாரும் சொல்லுவார்கள். இறைவன் திருவருளால் புராணம் அரங்கேற்ற நேர்ந்தால் எல்லாவற்றையும் நீர் பார்க்கலாம்.”

திருப்பெருந்துறையைப் பார்க்க வேண்டுமென்ற விருப்பம் எனக்குத்
தோன்றியது; என் ஆசிரியர் அந்தத் தல புராணத்தைப் பாட நான் அதனை எழுத வேண்டுமென்ற ஆசை அதற்குமுன் எழுந்தது.

மூன்று நாட்கள் நான் மாயூரத்தில் தங்கியிருந்தேன். பிறகு ஆசிரியர்
புறப்படவே நானும் புறப்பட்டுத் திருவாவடுதுறையை அடைந்தேன்.

திருவாவடுதுறைக்கு வந்தபின் மீண்டும் பாடங்கள் வழக்கம் போல்
நடைபெற்றன. பெரிய வகையில் கந்தபுராணம் நடந்தது. சிறிய வகையில் திருவிளையாடல், திருநாகைக்காரோணப் புராணம், மாயூரப் புராணம் முதலியன நடந்தன.
குமாரசாமித் தம்பிரான்

குமாரசாமித் தம்பிரானுக்கு வரவர மடத்து நிருவாகத்தில் கவனம்
செலுத்த வேண்டிய அவசியம் நேர்ந்தது. அவர் பெரிய ஒடுக்கத்தில் இருந்தார். ஒடுக்கமென்பது பண்டார சந்நிதிகள் இருக்கும் இடத்திற்குப் பெயர்அவருடன் இருந்து காரிய தரிசியைப் போல முக்கியமான காரியங்களைக் கவனித்து வரும் தம்பிரானுக்கு ஒடுக்கத்தம்பிரான் என்று பெயர். நம்பிக்கையுள்ள தம்பிரான்களையே அப்பதவியில் நியமிப்பது வழக்கம் அந்த  
வேலையில் சின்ன ஒடுக்கமென்றும் பெரிய ஒடுக்கமென்றும் இரண்டு பிரிவுகள் உண்டு. பழம், சந்தனக்கட்டை, கற்கண்டு, பூசா திரவியங்கள் முதலியவை சின்ன ஒடுக்கத்தைச் சார்ந்தவை.ஆபரணங்கள் விலையுயர்ந்த பட்டு, பீதாம்பரங்கள், ஆடைகள் முதலியன பெரிய ஒடுக்கத்தில் உள்ளவை.
அப்பெரிய ஒடுக்கத்தில் உள்ளவர் அனுபவத்தில் முதிர்ந்தவராக இருப்பார். அத்தகைய வேலையையே குமாரசாமித் தம்பிரான் ஏற்று நடத்தி வரலாயினர்.  அதனோடு மடத்து வித்துவான் வேலையும் அவருக்கு இருந்தது. வித்துவானென்ற பட்டமும் அதற்கு உரிய சின்னமாகிய பல்லக்கும் அவருக்கு வழங்கப்பட்டன.

பாடத்தில் மாறுதல்

இதனால் முன்போல் நாள்தோறும் பாடம் கேட்டு வருவது அவருக்கு
இயலாமற் போயிற்று. பெரிய வகுப்பென்பது பெயரளவில் வகுப்பேயன்றி உண்மையில் குமாரசாமித் தம்பிரானுக்காகவே அது நிகழ்ந்து வந்தது. அவர் நிலை மாறியவுடனே இரு பிரிவாக இருந்த பாடங்களும் மாறி, எல்லாத் தம்பிரான்களும் ஒருங்கே இருந்து கேட்க, காலையும் மாலையும் பாடங்கள் நடை பெற்றன. . குமாரசாமித் தம்பிரான் இடையிடையே ஓய்வு நேரும்போது வந்து கேட்பார்.

புராண ஆரம்பம்

சில தினங்களுக்குப் பிறகு பிள்ளையவர்கள் திருப்பெருந்துறைப்
புராணம் இயற்றத் தொடங்கினார். முதலில் விநாயக வணக்கம் ஒன்றைச்
சொல்லி முடித்தார். மாயூரத்தில் நான் அவரைப் போய்க் கண்டபோது ஒரடி
கூறியது அவருக்கு ஞாபகம் இல்லை. அதனால் வேறு ஒரு செய்யுளைச்
சொன்னார். அது முடிந்தவுடன் நான், “மாயூரத்திற்கு இது விசயமாக நான்
வந்தபோது வெயிலுவந்த விநாயகரைப்பற்றி ஒர் அடி சொன்னது என்
ஞாபகத்தில் இருக்கிறது” என்று சொல்லி அவ்வடியையும் கூறினேன். கேட்ட அவர் உடனே அதனையே இறுதி அடியாக வைத்து ஒரு செய்யுளைக் கூறினார். நான் எழுதினேன். மேலும் செய்யுட்கள் சொல்லச் சொல்ல எழுதி வரலானேன். சில நாட்களில் கடவுள் வாழ்த்தும் நாட்டுப்படலமும் நிறைவேறின. திருப்பெருந்துறைக்கு முன்பே இருந்த தமிழ்ப்புராணங்கள் இரண்டும் தல வரலாறுகளை வெளிப்படுத்தும்
நோக்கத்தோடு அமைந்தவை. பிள்ளையவர்கள் பாடும் புராணங்களில்
நாட்டுச்சிறப்பு நகரச்சிறப்பு முதலிய வருணனைகள் கற்பனைத்திறம் விளங்கஅமைந்திருப்பதை அறிந்தவர்கள் அம் முறையில் தங்கள் தங்கள் ஊருக்கும்
புராணம் வேண்டும் என்று விரும்புவார்கள். திருப்பெருந்துறைக்குப் புதிய
புராணம் பாட வேண்டுமென்ற முயற்சியும் அத்தகைய விருப்பத்தினால்
எழுந்ததே. ஆதலால் பிள்ளையவர்கள் நாட்டுச்சிறப்பை விரிவாகவே அமைத்தார்.

Thursday, April 25, 2024

என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 01. பதிப்பரை

 




என் தமிழ்ப்பணி

பதிப்புரை

இருபதாம் நூற்றாண்டுத் தமிழகத்தின் வரலாற்றில் ஒரு சிறப்பிடத்தைப் பெறத்தக்க வகையில், நல்ல தமிழ் அறிஞராக, வரலாற்றுத் திறனாய்வாளராக, செந்தமிழ்ப் பேச்சாளராக, இலக்கியப் படைப்பாளராக, பாதை மாறாத பகுத்தறிவுவாதியாக, அப்பழுக்கற்ற அரசியல் தலைவராக, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவராக, என பல்திறன் படைத்த நற்றமிழ்ப் புலவராக விளங்கியவர், புலவர் கா. கோவிந்தனார் அவர்கள்

“தமிழுக்கும், தமிழ்ப் புலவர்கட்கும், தமிழ் நாட்டுக்கும் தொண்டாற்றத் தன்னையே அருப்பணித்தவர்” என்று பேரறிஞர் அண்ணா அவர்களால் பாராட்டப்பெற்ற பேறு பெற்றவர், பைந்தமிழ்ப் புலவராய் உயர்ந்து, சங்கத் தமிழ் ஏடுகளிலெல்லாம் திளைத்து, வரலாற்றுக் கண்கொண்டு ஆய்ந்து, தொல்காலத் தமிழர் வாழ்வை இக்காலத்தவரும் தெளிந்திடுமாறு தேன்தமிழ்ச் சுவடிகளாக வரைந்து வழங்கிய பெருமை உடையவர், புலவர் கா. கோவிந்தனார் அவர்கள்.

புலவர்களுள் பெரும் புலவராய் விளங்கி, திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனத்தாரின் ‘புலவரேறு’ பட்டம், தமிழக அரசின் ‘திரு.வி.க. விருது’, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ பட்டம் போன்றச் சிறப்புகளைப் பெற்ற புலவர் அவர்களின் ‘தமிழ்ப்பணி’ பொன்விழாக் கண்ட பெருமையினை யுடையது.

‘என் தமிழ்ப்பணி’ என்ற தலைப்பில், புலவர் எழுதிய கடைசி கட்டுரையில், “என் எழுத்துப் பணி தொடரும். குறள் பற்றி, சங்க இலக்கியங்கள் பற்றி பல தலைப்புகளில் நூல் எழுதக் குறிப்பு எடுத்து வைத்துள்ளேன். “கல்வி கரையில, கற்பவர் நாள் சில” காலம் இடம் தந்தால், என் எழுத்துப் பணி தொடரும்” என்று அவர் தம் தமிழ்ப் பணியைத் தொடர வேண்டும் என்ற தனியா ஆவலை வெளியிட்டுள்ளார். ஆனால், காலம் இடம் தரத் தவறிவிட்டதனால், முற்றுப்பெறாத நிலையிலே அவருடைய எழுத்துப் பணி எச்சமாகவே நின்று போயிற்று! காலம் செய்த கொடுமை அது!

தமிழால் உயர்ந்து, தம் தமிழ்ப்பணி மூலம் தமிழுக்கும். உயர்வு தேடித் தரும் வகையில் எழுத்துலகம் நினைவு கொள்ளும் வண்ணம் நூற்பணியாற்றிய புலவர் அவர்கள், செத்தும் பொருள் கொடுத்த சீதக்காதி வள்ளல் போலத் தம் மறைவிற்குப் பின்னும் தமிழுக்கு அணி செய்யும் வகையில் பல இலக்கியப் படைப்புகளைத் தம் கையெழுத்து வடிவிலே அளித்துச் சென்றுள்ளார். அந்த எழுத்துச் சுவடிகளையெல்லாம் அச்சு வடிவில் வெளியிடுவதைத் தன் தலையாய கடமையாக எழிலகம் ஏற்று,

“வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி”
“மனையுறை புறாக்கள்”
“பெரும்பாணாற்றுப்படை – விளக்கவுரை”
“புலா அம் பாசறை”

ஆகிய இலக்கிய நூல்களையும்,

தமிழக வரலாறு-வரிசை என்ற தலைப்பில்,

“தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்”
“தமிழக வரலாறு-கோசர்கள்”
“தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்”

ஆகிய வரலாற்று நூல்களையும் வெளியிட்டுள்ளோம்.

புலவர் அவர்கள் விட்டுச் சென்றுள்ள, அச்சு வடிவம் பெறாத அவருடைய இலக்கியக் கட்டுரைகளைத் தொகுத்து இன்று,

“என் தமிழ்ப்பணி”

என்ற இக்கட்டுரைத் தொகுப்பைத் தமிழ்கூறு நல்லுலகத்தின் முன் படைக்கிறோம். .

“மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே”

என்ற புறநானூற்று மொழிகளுக்கேற்ப, புகழுடம்பு பெற்றுவிட்ட புலவர் பெருந்தகை, இறவாத புகழுடைய இலக்கியங்கள் பலவற்றைத் தமிழன்னைக்கு அணி செய்ய அளித்துவிட்டுச் சென்றுள்ளார். புலவர் அவர்களின் முன்னைய படைப்புகளுக்குத் தமிழகத்துப் பெரியோர்களாகிய தாங்கள் காட்டிய பேரன்பையும், பாராட்டையும், ஆதரவையும் தொடர்ந்து அளித்திட வேண்டுகிறோம்.

“தமிழுக்குத் தொண்டு செய்வார் சாவதில்லை” என்றார் பாவேந்தர். தம் வாழ்நாள் முழுவதும், காலம் கரம் பிடித்து அழைத்துப் போன அந்தக் கடைசி நொடி வரை, தமிழ்ப் பணி ஆற்றிய புலவர் அவர்கள் வாழ்வார்; அவர் தமிழ் உலகிற்கு அளித்துச் சென்றுள்ள இலக்கியச் செல்வங்கள் உள்ளவரை என்றென்றும் நிலைத்து வாழ்வார்; தமிழறிந்தோர் நெஞ்சமெல்லாம் நிலைத்து வாழ்வார் என்பது உறுதி!

—எழிலகம் பதிப்பகத்தார்.

Saturday, April 20, 2024

உ.வே.சா. வின் என் சரித்திரம் 53: சிதம்பரம்பிள்ளையின் கலியாண நிறைவு

 




(உ.வே.சா. வின் என் சரித்திரம் 52: சிதம்பரம்பிள்ளையின் கலியாணம் – தொடர்ச்சி)

என் சரித்திரம்
சிதம்பரம்பிள்ளையின் கலியாண நிறைவு


அவற்றைக் கவனிப்பதற்காக அவர் அங்கே இருக்கிறார்.
கல்லிடைக்குறிச்சியிலும் திருவாவடுதுறையைப் போலவே மடமும் அதற்கு
அங்கமாகிய கோயில் முதலிய இடங்களும் பரிவாரங்களும் உண்டு.
சந்நிதானம் சின்னப் பட்டத்தில் இருந்தபோது சில வருடங்கள் அங்கே
எழுந்தருளி இருந்தது இந்த ஆதீனத்திற்கு இராசதானி நகரம் போன்றது
திருவாவடுதுறை. இளவரசர் இருத்தற்குரிய நகரம்போல விளங்குவது
கல்லிடைக்குறிச்சி, சின்னப் பட்டத் திலுள்ளவர்கள்
கல்லிடைக்குறிச்சியிலிருப்பது வழக்கம். அவர்களை இளவரசென்றும்
சொல்வதுண்டு.”

“திருவாவடுதுறை ஆதீனம் தமிழ்நாடு முழுவதையும் ஆட்சி புரிவது
போலல்லவா இருக்கிறது?” என்று நான் ஆச்சரியத்தோடு வினவினேன்.

“மடத்தின் பெருமை உமக்கு வர வரத்தான் தெரியும் சீடர்கள்
எங்கெங்கே இருக்கிறார்களோ அங்கெல்லாம் இவ்வாதீனத்தின் சம்பந்தம்
இருக்கும். காசி முதல் கன்னியாகுமரி வரையில் முக்கியமான
சிவத்தலங்களிலும் ஆதீனத்தின் சம்பந்தம் உண்டு
” என்று ஆசிரியர்
உரைத்தார்.

கடிதங்கள் எழுதப் பெற்ற கனவான்களிற் பலர் சந்தோசத்தோடு விடை
எழுதினர். நமச்சிவாய தேசிகரும் எழுதியிருந்தார்.

சிதம்பரம் பிள்ளையின் விவாகம் குறிப்பிட்ட முகூர்த்தத்தில் மிகவும்
சிறப்பாக நடந்தது. அதற்குப் பல கனவான்கள் வந்து விசாரித்து மகிழ்ந்து
சென்றனர். அக்கனவான்களை அறிந்து கொண்டது எனக்குப் பெரிய
இலாபமாயிற்று.

கலியாண நிகழ்ச்சிகள்

கலியாணத்தில், திருவாவடுதுறையிலிருந்துவந்த காரியத்தர்கள் தங்கள்
தங்களால் செய்யக்கூடிய காரியங்களைச் செய்தார்கள். என்னுடைய
சகபாடியாகிய சவேரிநாத பிள்ளை பம்பரமாகச் சுற்றிப் பல காரியங்களை
நிறைவேற்றினார். என்னால் முடிந்தவற்றை நான் கவனித்தேன்.

முகூர்த்த தினத்தின் மாலையில் பாட்டுக் கச்சேரி, விகடக் கச்சேரி, பரத
நாட்டியம், வாத்தியக் கச்சேரி எல்லாம் நடந்தன. ஒரு பெரிய சமீன்தார் வீட்டு
விவாகம் போலவே எல்லாவிதமான சிறப்புகளோடும் அது நடைபெற்றது. பரத நாட்டியம் ஆடிய பெண்பாலுக்குச் சபையில் உள்ள கனவான்கள் இடையிடையே பணம்
கொடுத்தனர்.

அப்போது பிள்ளையவர்கள் என்னை அழைத்து அருகில் இருக்கச்
செய்து என் கையில் ஒரு உரூபாயைக் கொடுத்து அப்பெண்ணிடம் அளிக்கச்
சொன்னார். எனக்கு மிகவும் சங்கோசமாக இருந்தது; ஆனாலும்,
ஆசிரியருடைய கட்டளையை மறுத்தற்கு அஞ்சி அப்படியே கொடுத்தேன்.
அங்கிருந்த யாவரும் என்பால் பிள்ளையவர்களுக்கு இருந்த அன்பை
இதனாலும் அறிந்து கொண்டார்கள்.

தஞ்சைவாணன் கோவை

விவாகம் நிறைவேறிய பின்பும் சில வாரங்கள் நாங்கள் மாயூரத்தில்
தங்கியிருந்தோம். சவேரிநாத பிள்ளையும் நானும் பழைய பாடங்களைப் படித்து
வந்தோம். அதோடு தஞ்சைவாணன் கோவையைப் புதிதாக ஆசிரியரிடம்
பாடம் கேட்டு வந்தோம். அவர் அகத்துறைச் செய்திகளை விளக்கிச்
சொன்னார். முன்பே சீகாழிக் கோவையைப் பாடம் கேட்டபோது பல
விசயங்களை நான் தெரிந்து கொண்டிருந்தாலும் மீண்டும் அவற்றை
ஞாபகப்படுத்திக் கொண்டதோடு பல புதிய செய்திகளையும் அறிந்தேன்.

தஞ்சைவாணனென்பவன் பாண்டிய மன்னனுக்குச் சேனாதிபதியாக
இருந்த வேளாளச் செல்வனென்றும், அவன் வாழ்ந்திருந்த தஞ்சை பாண்டி
நாட்டிலுள்ள தஞ்சாக்கூரென்னும் ஊரைக் குறிப்ப தென்றும் சொன்னார்.

தஞ்சைவாணன் கோவையின் ஆசிரியராகிய பொய்யாமொழிப்
புலவரை
ப் பற்றிய வரலாற்றையும் ஆசிரியர் விரிவாக எடுத்துரைத்தார்.

அப்பாத்துரை ஐயர்

இரண்டு மாத காலம் நான் மாயூரத்தில் இருந்தேன். அப்போது
தினந்தோறும் பிள்ளையவர்கள் விருப்பத்தின்படி, மாயூரநாதசுவாமி கோயில்
சந்நிதி வீதியில் இருந்த அப்பாத்துரை ஐயரென்பவர் வீட்டில் ஆகாரம் செய்து
வந்தேன். அவரும் அவர் மனைவியாரும் என்னிடம் மிக்க அன்பு
காட்டினார்கள். மடத்திலிருந்தோ பிள்ளையவர்களிடமிருந்தோ என் பொருட்டு
அவருக்கு எவ்விதமான உதவியும் கிடைக்கவில்லை. என்னாலோ
காலணாவுக்குக்கூடப் பிரயோசனம் இல்லை. அரிசி முதலிய பண்டங்கள்
அவருக்கு அளிக்கும்படி ஏற்பாடுசெய்யப்படுமென்று நம்பியிருந்தேன். அவ்வாறு ஒன்றும் நடக்கவில்லை.

அவர் வறியவரென்பதை அறிந்த நான் அவருக்குச் சிரமம் கொடுப்பதற்கு
அஞ்சினேன். என்ன செய்வதென்று தெரியாமல் கலங்கினேன்.

பழமும் பாலும்

ஒரு நாள் இரவு மற்ற மாணாக்கர்களுடன் பிள்ளையவர்களிடம் பாடம்
கேட்டபோது, அது முடிய ஒன்பது மணிக்கு மேல் ஆயிற்று. முடிந்தவுடன்
அவரவர்கள் உணவு கொள்ளச் சென்றார்கள். அப்பொழுது அதிக மழைபெய்து
கொண்டிருந்தது. எனக்கு மிகவும் களைப்பாகவும் தூக்கக் கலக்கமாகவும்
இருந்தமையால் போசனம் செய்யச் செல்லாமல் அப்படியே ஓரிடத்தில்
படுத்துத் தூங்கிவிட்டேன். ஆகாரம் செய்துவிட்டு வந்த ஆசிரியர் நான்
படுத்திருப்பதைக் கண்டார். தினந்தோறும் நான் சாப்பிட்டு வந்து ஆசிரியரோடு
பேசியிருந்துவிட்டுப் பிறகே துயில்வது வழக்கம். அன்று நான் அவ்வாறு
செய்யாமையால் நான் ஆகாரம் செய்யவில்லை என்பதை அவர் உணர்ந்து
என்னை எழுப்பச் செய்தார். நான் எழுந்தவுடன் உண்மையைக் கேட்டு அறிந்து
உடனே ஆகாரம் செய்து வரும்படி ஒரு மனுசருடன் என்னை அனுப்பினார்
இரவு நெடுநேரமாகி விட்டபடியால் அப்பாத்துரை ஐயர் வீட்டில் எல்லாரும்
படுத்துத் தூங்கிவிட்டனர். போசனம் கிடைக்கக்கூடிய வேறு சில
இடங்களுக்குப் போய்ப் பார்த்தும் ஒன்றும் கிடைக்காமல் திரும்பினேன்.
அதனை அறிந்த என் ஆசிரியர் மிகவும் வருந்திப் பாலும் பழமும் வருவித்து
அளித்து என்னை உண்ணச் செய்தார்.

மறுநாட் காலையில் நான் எழுந்தவுடன் ஆசிரியர் என்னை அழைத்து,
“நீர் திருவாவடுதுறைக்குப் போய் அங்கே உள்ளவர்களோடு பழைய
பாடங்களைப் படித்துக்கொண்டிரும். நான் விரைவில் அங்கு வந்து விடுவேன்”
என்றார்.

ஏன் அவ்வாறு சொன்னாரென்று எனக்குத் தெரியவில்லை. “நான்
அதுவரையில் இங்கேயே இருந்து ஐயாவுடன் வருகிறேனே?” என்றேன்.

“வேண்டா; இங்கே உமக்கு ஆகார விசயத்தில் சௌகரியம்
போதவில்லை. திருவாவடுதுறையில் சந்நிதானம் எல்லாவற்றையும் கவனித்துக்
கொள்ளும்” என்று வற்புறுத்திச் சொல்லவே நான் மறுப்பதற்கு அஞ்சி
அவ்வாறே செய்ய உடன்பட்டேன்.

சுருங்கிய தனமும் விரிந்த மனமும்

புறப்படுவதற்கு முன் அப்பாத்துரை ஐயரிடம் விடை பெற்றுக்
கொள்ளும் பொருட்டு அவர் வீட்டுக்குச் சென்றேன். “இவர்களுக்குஒரு பிரதியுபகாரமும் செய்யாமல் இருக்கிறோமே!” என்ற வருத்தத்தோடு செல்லுகையில், என் இடையில் இருந்த வெள்ளி அரைஞாண் ஞாபகத்திற்கு வந்தது. என் சிறிய தந்தையார் இரட்டை வடத்தில் அவ்வரைஞாணைச் செய்து எனக்கு அணிவித்திருந்தார். அப்பாத்துரை
ஐயரிடம் அதனைக் கழற்றிக் கொடுத்து, “நான் இப்போது திருவாவடுதுறை
போகிறேன். இவ்வளவு நாள் என்னால் உங்களுக்குச் சிரமம் நேர்ந்தது. இதை
வைத்துக் கொள்ளுங்கள். பிறகு செலவுக்கு அனுப்பி இதை வாங்கிக்
கொள்ளுகிறேன்” என்றேன்.

அதை அவர் திருப்பி என் கையில் அளித்து, “அப்பா, நன்றாயிருக்கிறது நீ பண்ணின காரியம்! உனக்குச் சாதம் போட்டா எங்களுக்குக் குறைந்து போய் விடுகிறது? உனக்காக நாங்கள் என்ன விசேச ஏற்பாடு பண்ணிவிட்டோம்? ஏதோ நாங்கள் குடிக்கிற கஞ்சியையோ கூழையோ உனக்கும் கொடுத்து வந்தோம். நீ நன்றாக வாசித்து விருத்திக்கு வந்தால் அதுவே போதும்” என்று சொன்னார். அவர் வருவாய் சுருங்கியிருந்தாலும், அவருக்குள்ள சௌகரியங்கள் சுருங்கியிருந்தாலும் அவருடைய அன்பு நிறைந்த மனம் எவ்வளவு விரிந்ததென்று நான் அறிந்து உருகினேன்.
இவர்களே மனிதர்கள்! இவர்களுக்காகத்தான் மழை பெய்கிறது; சூரியன்
உதயமாகிறான்”
 என்று என் மனத்துக்குள் சொல்லிக் கொண்டேன். அவரையும்
அவர் மனைவியாரையும் வணங்கிவிட்டுப் புறப்பட்டேன்.

அரைஞாணை ஏற்றுக்கொள்ள மறுத்த பிறகு நான் என்ன செய்ய
முடியும்? ‘செஞ்சோற்றுக் கடன் கழிக்கும் காலம் வருமோ?” என்று என்
உள்ளம் ஏங்கியது. பிற்காலத்தில் எனக்கு வேலையான போது அக்கடனை
ஒருவாறு தீர்த்துக் கொண்டேன்.

அப்பால் பிள்ளையவர்கள் முதலிய எல்லாரிடமும் விடை பெற்று
நான் திருவாவடுதுறை வந்து சேர்ந்தேன்.

(தொடரும்)

என் சரித்திரம், உ.வே.சா.

Saturday, April 13, 2024

உ.வே.சா. வின் என் சரித்திரம் 52: சிதம்பரம்பிள்ளையின் கலியாணம்

 




(உ.வே.சா. வின் என் சரித்திரம் 51: மகா வைத்தியநாதையர் – தொடர்ச்சி

என் சரித்திரம்
அத்தியாயம்-51

சிதம்பரம்பிள்ளையின் கலியாணம்

திருவாவடுதுறையில் இரண்டு பிரிவாக நடைபெற்று வந்த பாடங்களில்
சின்ன வகைக்குரிய பாடம் பழனிக்குமாரத் தம்பிரான், ஆறுமுகத்தம்பிரான்
முதலியவர்கள் விரும்பியபடி சில தினங்களுக்குப் பிறகு காலையிலே நடைபெற
ஆரம்பித்தது. குமாரசாமித் தம்பிரானும் நானும் கேட்டு வந்த பாடம்
பிற்பகலிலும் முன் இரவிலும் நடந்தது. அப்பாடத்தில் திருநாகைக்காரோணப் புராணம் முடிந்தவுடன் காசி காண்டத்தையும் பிரமோத்தர
காண்டத்தையும் 
நாங்கள் படித்தோம். அப்பால் கந்த புராணம்
ஆரம்பிக்கப்பட்டது. பாடம் மிகவும் வேகமாக நடந்தது. அப்போது
கண்ணப்பத் தம்பிரானென்பவரும் கும்பகோணம் வைத்தியநாத
தேசிகரென்பவரும் 
உடனிருந்து பாடம் கேட்டு வந்தனர். அவ்விருவரும்
இசையில் வல்லவர்கள்.

குமாரபுரிப் படலம்

கந்தபுராணத்தின் முதற் காண்டத்தில் குமாரபுரிப் படலமென்ற ஒரு
பகுதி உள்ளது. அதில் முருகக் கடவுள் சேய்ஞலூரை உண்டாக்கி அங்கே
தங்கியிருந்தாரென்ற செய்தி வருகிறது. சண்டேசுவரர் அவதரித்த தலமும்
அதுவே.

முருகக் கடவுள் அங்கே எழுந்தருளியிருந்தபோது அவரோடு வந்த
தேவர்களும் இந்திரனும் தங்கியிருந்தார்கள். இந்திரன் இந்திராணியைப் பிரிந்து
வந்து வருத்தத்தை ஆற்ற மாட்டாமல் இரவெல்லாம் தூங்காமல்
புலம்பினானென்று கவிஞர் வருணிக்கின்றார். அப்பகுதி விரிவாகவும்
இந்திரனது மயல் நோயின் மிகுதியைத் தெரிவிப்பதாகவும் அமைந்துள்ளது.

சாமிநாத பிள்ளை

சில காலத்திற்குப் பின்பு திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள
வண்டானமென்னும் ஊரிலிருந்து சாமிநாத பிள்ளையென்பவர் மடத்தில் தமிழ்
படிப்பதற்காக வந்தார். ஓரளவு பயிற்சியுள்ளவர்களுக்கு என் ஆசிரியரும்
சுப்பிரமணிய தேசிகரும் பாடம் சொல்வார்கள். நூதனமாக வந்தவர்களுக்குப்
பழைய மாணாக்கர்கள் சிலர் பாடம் சொல்வதுண்டு. முக்கியமாகக் குமாரசாமித்
தம்பிரானும் நானும் அவ்வாறு சொல்லுவோம்.

சாமிநாத பிள்ளை குமாரசாமித் தம்பிரானுக்குப் பூர்வா சிரமத்தில்
உறவினர். அவர் அத்தம்பிரானிடம் பாடம் கேட்டு வந்தார். ஒரு நாள் இரவு
பத்து மணி வரையில் அம்மாணாக்கர் தம்பிரானிடம் பாடம் கேட்டனர். பிறகு
தம்பிரான் சயனித்துக் கொண்டார். நானும் அங்கே ஓரிடத்திற் படுத்துத்
துயின்றேன்.

சேய்ஞலூர் இந்திரன்’

குமாரசாமித் தம்பிரான் நள்ளிரவில் பன்னிரண்டு மணிக்கு எழுந்து
பார்த்தபோது, சாமிநாதபிள்ளை படுத்து உறங்காமலேதூணில் சாய்ந்தபடியே இருந்தார். ‘இவர் ஏன் இப்படி இருக்கிறார்?’ என்று எண்ணினார். “ஏதோ யோசித்துக் கொண்டிருப்பதாகத் தோற்றுகிறது. நாம் இப்போது கலைக்க வேண்டாம்” என்ற கருத்தோடு தம்பிரான் மீட்டும் படுத்தனர். அப்பால் சிறிது நேரங்கழித்து விழித்துப் பார்த்தபோதும் அம்மாணாக்கர் முன்பு இருந்த படியே இருந்தார். அன்று இரவு இப்படி நான்கு முறை விழித்துப் பார்த்தபோதும் அவர் அந்நிலையில் இருந்ததைக் கவனித்த
தம்பிரான், “இவர் ஏதோ மன வருத்தத்தால் இம்மாதிரி இருக்கிறார் போலும்!
அவ்வருத்தத்துக்குக் காரணம் இன்னதென்று தெரிந்து நீக்க வேண்டும்” என்று
முடிவு செய்தனர்.

தம்பிரான் தினந்தோறும் காலையில் ஐந்து மணிக்கே எழுந்து காவிரிக்கு
குளிக்கப் போவார். அப்படி அன்று காலையில் எழுந்தபோதும்
சாமிநாதபிள்ளை தூணிற் சாய்ந்தபடியே இருந்ததைப் பார்த்து, “இராத்திரி
முழுவதும் குத்த வச்சுக் கொண்டிருந்தீரே! காரணம் என்ன? என்ன துக்கம்
வந்துவிட்டது?” என்று கேட்டார்.

அவர் ஏதோ கனவிலிருந்து திடீரென்று தெளிந்தவரைப்போல எழுந்து,
“அவளைத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன்” என்றார்.

அம்மாணாக்கர் கலியாணம் ஆனவர். தம் மனைவியைப் பிரிந்து
வந்தவர் அந்த விசயம் தம்பிரானுக்குத் தெரியுமாதலின் சாமிநாதபிள்ளையின்
வருத்தத்திற்குரிய காரணத்தையும் தெரிந்து கொண்டார்.

நான் எழுந்தவுடன் தம்பிரான் என்னைப் பார்த்துச் சிரித்தபடியே,
“சேய்ஞலூர் இந்திரன் இங்கே இருக்கிறானே, தெரியுமா?” என்று கேட்டார்.

எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.

“கந்த புராணத்தில் குமாரபுரிப்படலத்தில் இந்திரன் இரவெல்லாம்
தூங்காமல் வருந்தியதாகச் சொல்லப்பட்டுள்ள விசயம் ஞாபகம்
இருக்கிறதோ?”

“ஞாபகம் இல்லாமல் என்ன? ஐயா அவர்கள், காவியங்களில்
அத்தகைய செய்திகள் வருமென்று சொன்னார்களே” என்றேன்.

“அதைப்பற்றி நான் சொல்ல வரவில்லை. சேய்ஞலூரில் தூங்காமல்
இந்திராணியை நினைத்துக் கொண்டிருந்த இந்திரன் இப்போது சாமிநாத
பிள்ளையாக அவதரித்து வந்திருக்கிறான்”என்று சொல்லிச் சிரித்தபடியே அம்மாணாக்கரைப் பார்த்தார். அவர் தம் முகத்தைக் கவிழ்த்துக் கொண்டார்.

பிறகு குமாரசாமித் தம்பிரான் எனக்கு விசயத்தை விளக்கின போது
நானும் அவரோடு சேர்ந்து சிரித்தேன். அதுமுதல் அம் மாணாக்கரை நாங்கள்
‘சேய்ஞலூர் இந்திரன்’ என்றே அழைத்து வரலானோம்.

சிதம்பரம்பிள்ளையின் விவாக முயற்சி

என் ஆசிரியருக்குச் சிதம்பரம்பிள்ளை என்று ஒரு குமாரர் இருந்தார்.
அவருக்குத் தக்க பிராயம் வந்தபிறகு கலியாணம் செய்வதற்குரிய முயற்சிகள்
நடைபெற்றன. சீகாழியிலிருந்த குருசாமிபிள்ளை என்பவருடைய பெண்ணை
நிச்சயம் செய்து மாயூரத்திலேயே கலியாணம் நடத்த ஏற்பாடாகியிருந்தது. சிரீ
சுப்பிரமணிய தேசிகரும் மடத்து உத்தியோகத்தில் இருந்த தம்பிரான்களும்
வேறு கனவான்களும் பொருளுதவி செய்தனர். கலியாண
ஏற்பாடுகளையெல்லாம் கவனிக்கும் பொருட்டு ஆசிரியர் மாயூரத்திற்குச்
சென்றார். நானும் உடன் சென்றேன்.

சிரீ நமச்சிவாய தேசிகர்

அயலூரிலுள்ள கனவான்கள் பலருக்கு விவாக முகூர்த்த பத்திரிகை
அனுப்பப் பெற்றது. சிலருக்கு விரிவான கடிதங்களும் எழுதப்பட்டன.
ஒவ்வொரு கடிதத்திலும் தலைப்பில் ஒரு புதிய பாடலை எழுதச் செய்தல்
ஆசிரியர் வழக்கம்.
 அக்கடிதங்களை எல்லாம் எழுதியவன் நானே.
கல்லிடைக்குறிச்சியில் சின்னப் பண்டார சந்நிதியாக இருந்த சிரீ நமச்சிவாய
தேசிகருக்கு ஒரு கடிதம் எழுதத் தொடங்கும்போது அவர் விசயமாக ஐந்து
பாடல்களைச் சொன்னார். கடிதம் எழுதியபிறகு நமச்சிவாய தேசிகருடைய
இயல்புகளை எனக்கு எடுத்துக் கூறினார்:-

“சிரீ நமச்சிவாய தேசிகர் நல்ல கல்வி அறிவுள்ளவர். தமிழிலும் வட
மொழியிலும் ஆழ்ந்த பயிற்சியுடையவர். இடைவிடாமற் பாடம் சொல்லுபவர்.
இலௌகிகத்திலும் திறமையுள்ளவர். கல்லிடைக்குறிச்சியில் இருந்து கொண்டு பல
சீர்திருத்தங்களைச் செய்திருக்கிறார். அவரை யாராலும் ஏமாற்ற முடியாது
உம்மைக் கண்டால் அவர் மிகவும் சந்தோசிப்பார்.”

“திருவாவடுதுறையில் இராமல் கல்லிடைக்குறிச்சியில் இருப்பதற்குக்
காரணம் என்ன?” என்று நான் கேட்டேன் .திருவாவடுதுறை மடத்திற்குத் திருநெல்வேலி சில்லாவில் பல கிராமங்கள் இருக்கின்றன. கல்லிடைக்குறிச்சியைச் சார்ந்தும் பல உள்ளன.

(தொடரும்)

என் சரித்திரம், உ.வே.சா.

Saturday, April 06, 2024

உ.வே.சா. வின் என் சரித்திரம் 51: மகா வைத்தியநாதையர்

 




(உ.வே.சா. வின் என் சரித்திரம் 50: கலைமகள் திருக்கோயில் – தொடர்ச்சி)

என் சரித்திரம்
அத்தியாயம்-50
மகா வைத்தியநாதையர்

ஒவ்வொரு நாளும் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்கும் நேரம் போக
மற்ற நேரங்களிற் பழைய பாடங்களைச் சிந்தித்து வருவது மாணாக்கர்கள்
வழக்கம். சில சமயம் நான் ஆசிரியர் சொல்லும் புதிய பாடல்களையும்
கடிதங்களையும் எழுதுவேன்.

தேசிகர் பாடம் சொல்லுதல்

அவகாசம் ஏற்படும்பொழுது சுப்பிரமணிய தேசிகர் தாமே சிலருக்குப்
பாடம் சொல்லுவார். திருக்குறள் பரிமேலழகருரையில் அவருக்கு மிக்க
விருப்பம் உண்டு. அதனையும், திருக்கோவையார் இலக்கண விளக்கம் என்னும்
நூல்களையும் யாருக்கேனும் பாடம் சொல்லுவார். தேசிகர் இலக்கணச்
செய்திகளை வரையறையாகச் சொல்வதும், உரிய இடங்களில் வடமொழிப்
பிரயோகங்களையும் வடநூற் செய்திகளையும் சொல்லுவதும் மிகவும்
இனிமையாக இருக்கும். சில குறிப்பிட்ட பாடங்களையே அவர் சொல்வார். ஆனால் அவற்றைத் திருத்தமாகச் சொல்வார். தமக்குப் புலப்படாத விசயம் வந்தால்,
“பிள்ளையவர்களைக் கேட்க வேண்டும்” என்று வெளிப்படையாகச் சொல்வார்.

மகா வைத்தியநாதையர் பட்டம் பெற்ற வரலாறு

சில நாட்களில் இரவில் பாடம் நடவாதபோது சுப்பிரமணிய தேசிகரிடம்
நான் போவதுண்டு. அப்பொழுது பிள்ளையவர்கள் சொல்லும் பாடங்களைப்
பற்றி விசாரிப்பார்; என்ன என்ன அரிய விசயங்கள் சொன்னார்கள்
என்பதைக் கேட்டறிந்து பாராட்டுவார். பல பழைய வரலாறுகளைச்
சொல்லுவார். நான் சங்கீதத்திற் பயிற்சியுடையவன் என்பதை அறிந்தவராதலின்
சங்கீத வித்துவான்களைப் பற்றிய பல செய்திகளைச் சொல்லுவார்.

ஒரு நாள், “மகா வைத்தியநாதரைத் தெரியுமோ?” என்று அவர்
கேட்டார்.

“அவர்களைப் பற்றி நான் கேட்டிருக்கிறேன்; நேரே பார்த்ததில்லை”
என்றேன்.

“நீர் அவசியம் பார்த்து அவருடன் பழகவேண்டும். இம்மடத்துக்கு
வேண்டியவர்களுள் அவர் முக்கியமானவர். தமிழ் விசயத்தில்
பிள்ளையவர்கள் எப்படியோ அப்படியே சங்கீதவிசயத்தில் அவரைச்
சொல்லவேண்டும். அவர் தமிழிலும் நல்ல பயிற்சியுள்ளவர். அவர் இங்கே
அடிக்கடி வந்து நம்மை மகிழ்வித்துப் போவார்.”

‘அவர்களது சங்கீதத்தை இதுவரையில் கேளாமற் போனது என்
துரதிர்ட்டமே” என்றேன்.

“அவரை முதலில் நாம் கல்லிடைக் குறிச்சியில் சின்னப்பட்டத்தில்
இருந்தபோது பார்த்தோம். அப்பொழுது அவர் மிகவும் பால்யமாக இருந்தார்.
அப்போதே அவரிடத்தில் சங்கீதத் திறமை மிகுதியாக விளங்கியது. பெரிய
வைத்தியநாதையர், சின்ன வைத்தியநாதையர் என்ற இரண்டு வித்துவான்களும்
வேறு பலரும் வந்திருந்தனர். இவ்விடம் போலவே கல்லிடைக் குறிச்சியிலும்
அடிக்கடி பல வித்துவான்கள் வந்து போவார்கள். ஒரு நாள் ஒரு மகாசபை
கூட்டி இந்த மூன்று வைத்தியநாதையர்களையும் பாடச் சொன்னோம்.
மற்றவர்களைவிட மகா வைத்தியநாதையருடைய சக்திதான் சிறந்ததாக
இருந்தது. இவ்விசயத்தை அவரோடு போட்டியிட்ட வித்துவான்களே
ஒப்புக்கொண்டனர். அந்த மகா சபையில் எல்லாவித்துவான்களுடைய சம்மதத்தின் மேல் அவருக்கு ‘மஃகா’ என்ற பட்டம் அளிக்கப்பெற்றது. அதற்கு முன் வெறும் வைத்தியநாதையராக இருந்த அவரை அன்று முதல்தான் யாவரும் மகா வைத்தியநாதையரென்று அழைத்து வரலாயினர்.”

சுப்பிரமணிய தேசிகர் பின்னும் அச்சங்கீத வித்துவானுடைய
பெருமைகளை எடுத்துக் கூறிவிட்டு, “மகா வைத்தியநாதையருடைய
தமையனாராகிய இராமசுவாமி ஐயரென்பவர் தமிழிலே நல்ல அறிவுடையவர்.
செய்யுட்களும் கீர்த்தனங்களும் இயற்றுவார். பெரிய புராணம் முழுவதையும்
கீர்த்தனங்களாகச் செய்திருக்கிறார். மகா வைத்தியநாதையருடைய தமிழறிவு
விருத்தியாவதற்கு அவர் முக்கியமான காரணம்” என்றார்.

மகா வைத்தியநாதையரது பெருமையையும் அவரிடம் ஆதீனத்
தலைவருக்கு இருந்த அன்பையும் நன்றாகத் தெரிந்து கொண்டது முதல்
அப்பெரியாரைத் தரிசிக்க வேண்டுமென்ற விருப்பம் எனக்கு உண்டாயிற்று.
அவர் தமிழிலும் நல்ல அறிவுள்ளவரென்று தெரிந்தபோது என் விருப்பம்
அதிகமாயிற்று. அது நிறைவேறும் காலம் வந்தது. ஒரு நாள் கோடக நல்லூர்
சிரீ சுந்தர சுவாமிகள்
 என்னும் பெரியாருடன் அவர் மடத்திற்கு வந்தார்.

சுந்தர சுவாமிகள்

சுந்தர சுவாமிகள் என்பவர் அதி வருணாசிரமம் பூண்ட ஒரு துறவி.
வேதாந்த கிரந்தங்களிலும், சிவ புராணங்களிலும் தேர்ந்த அறிவுள்ளவர்.
சூதசம்ஃகிதையை அங்கங்கே விரிவாகப் பிரசங்கம் செய்து பலருடைய
உள்ளத்தில் சிவ பக்தியை விதைத்த பெரியார் அவர். திருவையாற்றோடு
சார்ந்த சப்த தான தலங்கள் ஏழிலும் திருமழபாடியிலும் பல
செல்வர்களைக் கொண்டு திருப் பணிகள் செய்வித்து அந்த எட்டு
தலங்களுக்கும் ஒரே நாளில் கும்பாபிசேகம் நடத்த எண்ணிய அப்பெரியார்
அதன் பொருட்டுத் தமிழ் நாட்டிலுள்ள சிவநேசச் செல்வர்களிடம் பொருளுதவி
பெற்று வந்தனர்.

அவருடைய சிசுயர்கள் பலர். எல்லா வகுப்பினரிலும் அவருக்குச்
சிசுயர்கள் உண்டு. மகா வைத்தியநாதையர் அவரிடம் மந்திரோபதேசம்
பெற்றுச் சில வேதாந்த நூல்களையும் பாடம் கேட்டனர். திருநெல்வேலியில்
ஐயாசாமிபிள்ளை என்னும் அன்பர் அவருடைய உபதேசம் பெற்று ஒரு மடம்
கட்டிக் கொண்டு தத்துவ விசாரமும் ஞானசாதனமும் செய்து வாழ்ந்து வந்தார்.
தத்துவராயர் இயற்றிய பாடுதுறை முதலிய நூல்களில் ஆழ்ந்த பயிற்சியுள்ளவர்
அவர்.

திருவாவடுதுறைக்குச் சுந்தர சுவாமிகள் வந்தது கும்பாபிசேகத்திற்குப்
பொருளுதவி பெறும் பொருட்டே. அவருடன் மகா வைத்தியநாதையர்,
திருநெல்வேலி ஐயாசாமி பிள்ளை முதலிய பலர் வந்தனர்.

பிள்ளையவர்களுக்கும் சுந்தர சுவாமிகளுக்கும் முன்பே பழக்கம் உண்டு.
பிள்ளையவர்கள் தமிழில் சூதசம்ஃகிதையை மொழிபெயர்த்து இயற்றியிருப்பது
தெரிந்து அதிலுள்ள செய்யுட்களை மகா வைத்தியநாதையர் மூலமாகக் கேட்டு
அதன் சுவையில் ஈடுபட்டுச் சுந்தர சுவாமிகள் பாராட்டுவார். வடமொழிச்
சூதசம்கிதையில் நிரம்பிய ஞானமுள்ள அவருக்குத் தமிழ் நூலின் பெருமை
நன்றாக வெளிப்பட்டது. அவர் தம்முடைய பிரசங்கங்களில் இடையிடையே
தமிழ்ச் சூதசம்ஃகிதையிலிருந்தும் சில செய்யுட்களைச் சொல்வதுண்டாம்.

சுவாமிகள் தம் பரிவாரத்துடன் ஓரிடத்தில் தங்கிச் சுப்பிரமணிய
தேசிகரை எப்பொழுது பார்க்கலாம் என்று விசாரித்து வர ஒருவரை
அனுப்பினார். அதற்குள் அவருடைய வரவை அறிந்த எங்கள் ஆசிரியர் அவர்
இருந்த இடத்திற்கு வந்து அவரை வந்தனம் செய்தார்.

சுவாமிகளும் தேசிகரும்

அப்பால் இருவரும் சைவ சம்பந்தமான அரிய விசயங்களைப் பற்றி
ஒருவரோடொருவர் சில நேரம் மிக அழகாகப் பேசிக்கொண்டார்கள்.
எங்களுக்கு அச்சம்பாசணையால் பல நூதன விசயங்கள் தெரியலாயின.

சுப்பிரமணிய தேசிகர் தம் வரவை எதிர்பார்த்திருக்கிறார் என்றறிந்து
சுவாமிகளும் பிறரும் எழுந்து சென்றார்கள். தேசிகர் ஒடுக்கத்தின் வாயிலுக்கு
வந்து சுவாமிகளை வரலேற்று அழைத்துச் சென்று அவரை இருக்கச் செய்து
தாமும் ஆசனத்தில் அமர்ந்தார். அவர் உத்தரவுப்படியே யாவரும் அருகில்
இருந்தனர். அக் கூட்டத்தில் இருந்த நான் மகா வைத்தியநாதையர்
முகத்தையும் சுந்தர சுவாமிகள் முகத்தையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டே
இருந்தேன்.

தேசிகரும் சுவாமிகளும் முதலில் முகமன் கூறிக் கொண்டு அப்பால் பல
விசயங்களைப் பற்றிப் பேசினர். தாம் வந்தகாரியத்தைச் சுவாமிகள் தெரிவித்தார். தேசிகர் உசிதமான பொருளுதவி செய்வதாக வாக்களித்தார்.

என் ஆவல்

மகா வைத்தியநாதையரைப் பார்ப்பதே எனக்கு மிகவும் ஆனந்தமாக
இருந்தது. அவர் முகத்திலே இருந்த ஒளியும் அமைதியும் அவர் உள்ளத்தின்
இயல்பை விளக்கின. அத்தோற்றத்தினால் மட்டும் என் ஆவல்
அடங்கவில்லை. அவர் இடையிடையே பேசின மெல்லிய வார்த்தைகளிலே
இனிமை இருந்தது. அந்த இனிமையும் என் மனத்தைக் கவர்ந்தது. ஆனால்
அவ்வார்த்தைகளாலும் என் ஆவல் அடங்கவில்லை. வைத்தியநாதையராக
இருந்த அவர் எதனால் மகா வைத்தியநாதையர் ஆனாரோ அச்சங்கீதத்தைக்
கேட்க வேண்டுமென்ற ஆசை எனக்கு அதிகரித்தது. ‘இவர் வந்திருக்கிற
காரியமோ வேறு. இக்கூட்டத்தில் ஒரு சம்பந்தமும் இல்லாமல் நமது ஆவலை
நிறைவேற்றுவதற்காக இவர் பாடுவது சாத்தியமாகுமா? நமக்கு இவ்வளவு ஆசை
இருப்பது இவருக்குத் தெரிவதற்குத்தான் சந்தர்ப்பம் உண்டா?……..எப்படியாவது
ஒரு பாட்டைக் கேட்டால் போதுமே…..ஒரு பாட்டானால் என்ன? நூறு
பாட்டானால் என்ன? அதற்கு இதுவா சமயம்?’ என்று என் மனத்துக்குள்ளே
ஆட்சேப சமாதானங்கள் எழுந்தன. இந்த யோசனையிலே சுந்தர சுவாமிகளும்
தேசிகரும் என்ன பேசினார்கள் என்பதைக் கூட நான் நன்றாகக்
கவனிக்கவில்லை.

திடீரென்று எனக்கு ஆச்சரியம் உண்டாகும்படி சுப்பிரமணிய தேசிகர்
பேசத் தொடங்கினார்: “உங்களுடைய சங்கீதத்தைக் கேட்க வேண்டுமென்று
இங்கே படிக்கும் மாணாக்கர்கள் சிலர் ஆசைப்படுகிறார்கள். பிள்ளையவர்கள்
வாக்கிலிருந்து சில பாடல்களைச் சொன்னால் திருப்தியாக இருக்கும்” என்று
அவர் மகா வைத்தியநாதையரை நோக்கிக் கூறிய போது, நான் என்
காதுகளையே நம்பவில்லை. ‘நாம் கனவு காண்கிறோமோ? நம்முடைய
யோசனையினால் விளைந்த பகற் கனவா இது?’ என்று கூட நினைத்தேன்
நல்லவேளை, அது வாசுதவமாகவே இருந்தது.

தேவகானம்

“அதற்கென்ன தடை? காத்திருக்கிறேன்” என்று சொல்லி மகா
வைத்தியநாதையர் பாட ஆரம்பித்து விட்டார். தேவகானமென்று
சொல்வார்களே அச்சங்கீதம் அப்படித்தான் இருக்குமோவென்று எனக்குத்
தோற்றியது. முதலில் தமிழ்ச் சூத சங்கிதையிலிருந்து சில செய்யுட்களைச்
சொல்லத் தொடங்கினார். தமிழ்ச் செய்யுளாகஇருப்பதனாலே முதலில் அவை மனத்தைக் கவர்ந்தன. பிள்ளையவர்கள் வாக்கென்ற பெருமையும் அவைகளுக்கு இருந்தது. மகா வைத்தியநாதையருடைய இன்னிசையும் சேர்ந்து அப்பாடல்களுக்கு
என்றுமில்லாத அழகைக் கொடுத்தது. அந்த இன்னிசை முதலில் இந்த
உலகத்தை மறக்கச் செய்தது. பாவத்தோடு அவர் பாடுகையில் ஒவ்வொரு
வார்த்தையும் உள்ளத்துள்ளே படிந்து படிந்து ஒரு பெரிய காட்சியை
நிருமாணம் செய்து வந்தது.

சூதசங்கிதையில் கைலாசத்தில் சிவபெருமான் எழுந்தருளியிருக்கும்
காட்சியை வருணிக்கும் செய்யுட்கள் அவை. வெறும் பாடல்களை மாத்திரம்
படித்தபோதும் எங்களுக்கு உள்ளத்துள்ளே காட்சிகள் எழும். புறத்தே உள்ள
பார்வையும் இருக்கும். ஆனால் அப்பாடல்கள் இசையோடு கலந்து
வந்தபோதோ எல்லாம் மறந்து போயின. அப்பாட்டு எப்படிச் சுருதியிலே
லயித்து நின்றதோ அப்படி எங்கள் மனம் அப்பாட்டின் பாவத்திலே லயித்து
நின்றது. ஒரு பாடலைக் கூறி நிறுத்தும் போதுதான் அவர் பாடுகிறார், நாம்
கேட்கிறோம் என்ற வேற்றுமை உணர்ச்சி உண்டாயிற்று.

பாடல்களைக் கூறிவிட்டுப் பிறகு பொருளும் சொன்னார். பாடல்
சொல்லும்போதே பொருள் தெரிந்து விட்டது.

பாட ஆரம்பித்துவிட்டால் அதை நிறுத்திவிட மனம் வருமா?
கேட்பவர்களுக்குப் போதுமென்ற திருப்திதான் உண்டாகுமா? சூத
சங்கிதையிலிருந்து அப்பெரியாருடைய இசை வெள்ளம் வேறு மடைகளிலே
திரும்பியது. பிள்ளையவர்கள் வாக்காகவுள்ள வேறு பல பாடல்களை அவர்
இசையுடன் சொன்னார்.

பிறகு சுப்பிரமணிய தேசிகர், “உங்கள் தமையனார் வாக்காகிய பெரிய
புராணக் கீர்த்தனையிலிருந்து சில கீர்த்தனங்கள் பாட வேண்டும்” என்றார்.
வைத்திய நாதையரிடத்திலுள்ள ‘சரக்கு’ இன்னதென்று தேசிகருக்கு நன்றாகத்
தெரியும். அவர் ஒவ்வொன்றாகக் கேட்டுக் கொண்டே வர அந்தச் சங்கீத
சிகாமணி தடையின்றிப் பாடி வந்தார்.

அவர் கீர்த்தனங்களைப் பாடும்போது பிடில், மிருதங்கம் முதலிய பக்க
வாத்தியங்கள் இல்லை. அக்காரணத்தால் அவர் இசைக்குக் குறைவு இருந்ததாக
எனக்குத் தோற்றவில்லை. அவர் கையினால் மெல்லத் தாளம் போட்டுப்
பாடியபோது ஒவ்வொருவருடைய இருதயமும் அப் பாட்டோடு ஒன்றிப்
பக்கவாத்தியம் வாசித்ததென்றுதான் சொல்ல வேண்டும்
.

இணையற்ற இன்பம்

அதுவரையில் அடைந்திராத இன்பத்தை அன்று அடைந்தேன்.
‘இவர்களுடனே போய் இருந்து சங்கீத அப்பியாசம் செய்யலாமா?’ என்ற
ஆசைகூட இடையே தோற்றியது. ஒருவாறு மகா வைத்தியநாதையரது கான
மழை நின்றது. சுந்தர சுவாமிகள் விடை பெற்றுக் கொண்டனர். அவரோடு மகா
வைத்தியநாதையரும் பிறரும் விடை பெற்று எழுந்தனர். அவர்கள் யாவரும்
மடத்தில் அவரவர்களுக்குரிய இடத்தில் விருந்துண்டு பிற்பகலில்
திருவையாற்றுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

அன்று பிற்பகலில் சுப்பிரமணிய தேசிகரை நான் பார்த்த போது,
“காலையில் மகா வைத்தியநாதையர் பாட்டைக் கேட்டீரா?” என்று அவர்
கேட்டார். “இந்த மாதிரி சங்கீதத்தை இதுவரை நான் கேட்டதே இல்லை.
அவர்களுடைய சாரீரம் எல்லாருக்கும் அமையாது. வெறும்
சாதகத்தால்மட்டும் வந்ததன்று அது” என்றேன்.

“சாதகம் மாத்திரம் போதாதென்பது உண்மைதான். அவர் நல்ல
சிவபக்தர். சிவகிருபை அவருக்கு நல்ல சாரீரத்தை அளித்திருக்கிறது. அவர்
செய்துவரும் அப்பியாசம் அந்தச் சாரீரத்திற்கு வளப்பத்தைத் தருகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக அவரது தூய்மையான ஒழுக்கம் அந்தத் திவ்விய
சாரீரத்தின் அழகு கெடாமல் பாதுகாக்கிறது” என்று சொல்லி விட்டு, “அவர்
தமிழறிவும் உமக்குப் புலப்பட்டிருக்குமே!” என்றார்.

“ஆம், அவர் பாடல் சொல்லும்போதே பொருள் தெளிவாகிறது”
என்றேன்.

(தொடரும்)

என் சரித்திரம், உ.வே.சா.