Monday, December 29, 2014

சாதி, சமயமற்ற நாட்டை விரும்பிய பேராசிரியர் இலக்குவனார்!


55puthiyapaarvai_ilakkuvanar

சாதி, சமயமற்ற நாட்டை விரும்பிய பேராசிரியர் இலக்குவனார்!

சமய விடுமுறைகளும் பிராமணியச் செல்வாக்கின் அடையாளமே எனக்கூறி, ஒரேசமயம், ஒரேமொழி, ஒரே இனம்முதலான ஒற்றையாட்சிக்கு எதிர்ப்பை மக்களிடையே உருவாக்கினார்.
“பரதகண்ட முழுவதும் ஒரேஆட்சி, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே இனம் எனக் கொள்ள வைத்துப் பல மொழிகளையும், இனங்களையும், இந்து ஆட்சி எனப் பாகிசுதானுக்குப் போட்டியாக ஒன்றை உருவாக்க எண்ணுகின்றனரோ என ஐயுற வேண்டியுள்ளது.
இந்துமதம் என்பது பிராமணீயம் என்பதும் அதனைக் காக்க எந்த நிலையில் உள்ள பிராமணரும் பின்வாங்கார் என்பதும் என்றும் நினைவில்கொள்ள வேண்டியன.
சமயச்சார்பற்ற அரசில் சமயத் தொடர்பான நாட்களுக்கு விடுமுறை விடுவது எதற்கு? நிலநூல் வானநூல் பெருகியுள்ள இக்காலத்திலும், திங்களில் சென்று உறைவதற்குத் திட்டமிடும் இந்நாளிலும், ஞாயிற்று மறைப்புக்கு (Solar eclipse) விடுமுறை விடுகின்றது எற்றுக்கு? இவையெல்லாம் பிராமணர்களின் செல்வாக்கைத்தானே சுட்டுகின்றன. சமயச் சார்பற்றது என்னும் போர்வையில் பிராமணீயமாம் இந்துமதமே ஆட்சி புரிகின்றது.
சட்டம் செய்தால் மட்டும் போதாது. உள்ளங்களும் திருந்த வேண்டும். சாதிமத வேறுபாடுகள் ஒழிந்த மன்பதையை உருவாக்க உளமார உழைத்தல் நாட்டுநலன் நாடுவார் அனைவரின் கடனாகும். கல்விநிலையங்கள் இத்துறையில் முன்னோடிகளாகத் தக்கவழி காட்ட வேண்டும்.’’
குறள்நெறி (மலர்2 இதழ்22): கார்த்திகை 16, 1997 : 1.12.65
இவ்வாறு சாதி சமயமற்ற மன்பதை உருவாகக் கல்விநிலையங்களே வழிகாட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
- புதிய பார்வை (நவ.16-30, 2014) பக்கம் 46
தரவு : பாபு கண்ணன்



“தமிழ் மாநாடுகளில் தமிழ்ப் பகைவர்க்கே முதன்மை” : வருந்திய இலக்குவனார்


52puthiyaparvai_ilakkuvanar_chirappithazh01

“தமிழ் மாநாடுகளில்

தமிழ்ப் பகைவர்க்கே முதன்மை” :

வருந்திய இலக்குவனார்


பேராசிரியரின் உழைப்பால் மக்களிடையே ஏற்பட்ட தமிழுணர்வை அறுவடை செய்து ஆட்சிக்கட்டிலில் ஏறிய தி.மு.க. ஆட்சியிலும் இதே அவலம்தான் தொடர்ந்தது. 1968இல் சென்னையில் நடைபெற்ற உலகத்தமிழர் மாநாட்டிலும்
“தமிழ்மொழிப்பற்றும் தாங்கிய புலமையும்
இல்லோரெல்லாம் இனிதிடம் பெற்றனர்.
எம் போன்றோரை எள்ளியே தள்ளினர்”
எனப் பேராசிரியர் வருந்தும் அளவிற்குத் தமிழ்ப்பகைவர்க்கு முதன்மை அளிக்கப்பட்டது. பகைவரையும் நட்பாக்க வேண்டும் என உணர்ந்தவர்கள் அன்பர்களின் சிறப்பைப் புறக்கணிக்கும் போக்கு இருந்தது. இருப்பினும் கட்டணம் செலுத்திப் பேராளராகப் பங்கேற்றுத் தமிழுக்கு எதிரான கருத்துகளைத் தமிழ்ப் பகைவர்கள் ஒலிக்கும் பொழுதெல்லாம் எதிர்த்து முழங்கிய அரிமாவாகப் பேராசிரியர் திகழ்ந்தார். குறிப்பாகப் பிரான்சு நாட்டின் பேராசிரியர் ழீன்பிலியோசா இந்தியா முழுவதும் ஆரியம் பொது மொழியாக இருந்ததாகத் தவறான கருத்து தெரிவித்த பொழுதும் ஐராவதம் மகாதேவன் கி.மு. முதல் நூற்றாண்டில்தான் தமிழ் எழுத்து வடிவம் கண்டது என வடிகட்டிய பொய்யை உதிர்த்த பொழுதும் பேராசிரியரின் கருத்துச் சம்மட்டிகள் அவற்றைத் தவிடுபொடியாக்கின எனலாம். தமிழ் மாநாடுகளின் நிலைகுறித்த பேராசிரியரின் படப்பிடிப்பு வருமாறு:
தமிழ் பற்றி எவரும் எதனையும்
துணிந்து கூறுவர்; பணிந்துகேட்டிடத்
தமிழரும் உண்டு, தமிழறிவின்மையால்.
தமிழ்பழித்தோனைத் தாய் தடுத்தாலும்
விடேன் எனும் வீறுவிட்டே வாழ்வோர்.
உண்மை வரலாறு ஓர்ந்து அறியாப்
புல்லறிவுடையோர், புதிய கருத்தென
இன்றமிழ் நூல்கள் எழுந்த காலத்தைப்
பின்னே தள்ளிப்பெருமை அடைவர்!
பட்டமும் பதவியும் பாரில் பெறுவர்!
சான்றுகள் காட்டி ஆன்ற உண்மையைச்
சாற்றும் புலவரைத் தூற்றி ஒதுக்குவர்!
இன்றைக்கும் இந்த நிலையே மேலோங்கி உள்ளமையால்தான் தமிழுக்காகக் குரல் கொடுப்போர் யாருமிலர் என்னும் அவலமும் மேலோங்குகிறது.
55puthiyapaarvai_ilakkuvanar
- புதிய பார்வை (நவ.16-30, 2014) பக்கம் 44
தரவு : பாபு கண்ணன்


Monday, September 08, 2014

‘இந்தி எதிர்ப்புப் போராளி’ சி.இலக்குவனார் – கதிர் நிலவன்


‘இந்தி எதிர்ப்புப் போராளி’ சி.இலக்குவனார் – கதிர் நிலவன்

‘இந்தி எதிர்ப்புப் போராளி’ சி.இலக்குவனார் நினைவு நாள் ஆவணி 18, 2004/ செப். 3, 1973

kathirnilavan01
http://www.ilakkuvanar.com/images/IlakkuvanarBG0.jpg
  1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு மாணவர் போராட்டத்தில் தமிழாசிரியர்களின்பங்கு முதன்மையானது. மாணவர்களுக்கு தமிழ்மொழி காக்கும் உணர்வையும் இந்தித்திணிப்பை எதிர்த்திடும் போர்க்குணத்தையும் கற்றுக் கொடுத்தவர்கள்தமிழாசிரியர்களே!
மதுரை தியாகராசர் கல்லூரி மாணவர்கள் நடத்திய முதல் போராட்டம்தான் தமிழகமெங்கும்மாணவர்களைப் போர்க்களத்தில் இறக்கி விட்டது. அந்தக் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றிய செந்தமிழ்க் காவலர் சி.இலக்குவனார் வைத்த முதல்தீ’ தான் காங்கிரசு ஆட்சிக்குக் கொள்ளி வைப்பதில் முடிந்தது. இலக்குவனார்இந்தி எதிர்ப்புப் போருக்கு மாணவர்களை அனுப்பியதோடு தாமும் போர்க்களத்தில்குதித்திட்டார்.
மதுரை முதல் சென்னை வரை ‘நடைப்பயணம்’ மேற்கொள்ளப்போவதாக அறிவித்த போது காங்கிரசு முதல்வர் பக்தவத்சலமோ குலை நடுக்கம்கொண்டார். உடனே பணி நீக்கம் செய்திடவும் ஆணையிட்டார்.என் அலுவல் போனால்போகட்டும், இந்தியை ஒரு போதும் ஆள விட மாட்டேன்! என்று இலக்குவனார்முழங்கிய போது தேசியப்பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுச்சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். அது முதல் தேசியப் பாதுகாப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட முதல் தமிழறிஞர் எனும் பெருமை இலக்குவனாருக்குவந்தடைந்தது.
பேராசிரியர் இலக்குவனார் ‘தொல்காப்பியம்’ நூலைஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். அவர் தொல்காப்பியம் குறித்துக்கூறியது பின் வருமாறு: “இன்று நமக்கு கிடைத்துள்ள பழந்தமிழ் நூல்களுள்தொல்காப்பியமே தமிழர் வாழ்வின் பலதுறை பற்றி அறிவதற்கு துணை புரிவதாகும்.இதனைத் தமிழ்ப்புலவர் மட்டுமே தேர்வு கருதிக் கற்று வருகின்றனர். இதுஇலக்கண நூல்தான் என்றாலும் ஏனைய மொழிகளிலுள்ள இலக்கண நூல் போன்றதன்று; அண்மை நூற்றாண்டில் தோன்றி வளர்ந்து வரும் மொழியாராய்ச்சியும், இலக்கியஆராய்ச்சியும் பண்பாட்டுக் கலைகளாம் உயிரியல், உளவியல், வாழ்வியல், முதலியனவும் தன்னகத்தே கொண்டு இலங்குகின்றது”
தொல்காப்பியத்தின்காலம் “கி.பி. 2ஆம் நூற்றாண்டு” என்று பல அறிஞர் பெருமக்கள் கூறியநிலையில், “கி.மு.7ஆம் நூற்றாண்டே” தொல் காப்பியத்தின் காலம் என்றுஆதாரங்களோடு மெய்ப்பித்தார். அதனை, “Tholkappiam in English with Critical Studies” என்னும் பெயரில் ஆங்கிலத்திலும் வெளியிட்டார். பேரறிஞர் அண்ணாவெளிநாடு சுற்றுப் பயணம் செய்த போது மேற்கண்ட ஆங்கில நூலைபோப்பாண்டவருக்கும் அமெரிக்கப் பேரவை (செனட்) உறுப்பினர்களுக்கும்ஏல் பல்கலைக்கழகத்திற்கும் பரிசாக அளித்தார்.
இலக்குவனார் பணிநீக்கம் செய்யப்பட்ட போதிலும் கவலையுறாது தமிழ்த் தொண்டுபுரிந்து வந்ததைக் கண்டுணர்ந்த அண்ணா ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் மீண்டும் பணி வழங்கிடச் செய்தார்
.
திராவிட இயக்கத்தின் அடியொற்றி வளர்ந்த அறிஞர்களுள் ஒருவராக இலக்குவனார்அறியப்பட்ட போதிலும் பெரியாரைப் போல் சிலப்பதிகாரத்தைக் பழித்தவர் அல்லர்; 1951ஆம் ஆண்டு ஆம்பூரில் திராவிடர்கழகத்தின் இலக்கியப் பரப்புரையாளராகஇருந்து கொண்டே சிலப்பதிகாரம் பெண்ணைப் பெருமைப்படுத்திப் பேசும் இலக்கியம்என்று பேசினார். அதை விடுதலை ஏடு (15.3.1951) ‘சிலப்பதிகாரத்தின் சிறப்பு’ என்று தலைப்பு கொடுத்து வெளியிட்டது.
அது போல் திராவிடஇயக்கங்களுக்கே உரிய ஆங்கிலப் பித்தும் கொண்டவரல்லர்; ஒருமுறை நாவலர்நெடுஞ்செழியன் தமிழ்ப்பயிற்று மொழி குறித்த மாநாட்டில் ஆங்கிலத்திற்குஆதரவாகப் பேசிடவே, அவர் சினங்கொண்டு “தமிழ்மொழி நாவலரா? ஆங்கில மொழிக்காவலரா?” என்று அவரிடம் அனைவர் முன்னிலையிலும்நேரிலேயே கேட்டார்.
.
உண்மையில் இன்றைக்குஆளும் திராவிடக்கட்சிகள் ஆங்கிலத்தின் காவல் தெய்வங்களாகவே மாறி விட்டன.இலக்குவனார் இன்று உயிரோடு இருந்திருந்தால் திராவிடக் கட்சிகளைக் காறிஉமிழ்ந்திருப்பார்! அண்மையில் தொடக்கப்பள்ளிகளில்ஆங்கிலவழிக்கல்வியைச்செயலலிதாஅரசு கொண்டு வந்துள்ளது. இது ஒட்டுமொத்தமாகத் தமிழ்வழிக்கல்வியைச் சாகடிக்கும்முயற்சியாகும். ஆரம்பக்கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை தமிழிலேயேநடத்தப்படவேண்டும் என்று ஓங்கிக் குரல் எழுப்பிய இலக்குவனார் நினைவு நாளிலேசெயலலிதா அரசின் ஆங்கில வழிக்கல்விக்கு எதிராகப் போராடச் சூளுரைப்போம்!