Friday, October 27, 2017

மறைமலையடிகள் 2/5 – கி.ஆ.பெ.

மறைமலையடிகள் 2/5 

  அவரது நூல்களிற் பல தமிழ்ப்பற்றையும் சமயப் பற்றையும் வளர்க்கக் கூடியவை. சில ஆராய்ச்சி அறிவை வளர்க்கக் கூடியவை. அவரது ஆழ்ந்த, அகன்ற நுண்ணறிவைப் பல நூல்களிலும் கண்டு மகிழலாம்.அவற்றுள் சில அவரது அச்சகத்திலேயே அச்சிடப் பெற்றவை. சிலரது நூல்களிற் காணப்படுவதுபோன்ற அச்சுப்பிழைகள் எதையும் அவரது நூல்களிற் காணமுடியாது. அவர் தலைமை வகிக்காத, சொற்பொழிவு நிகழ்த்தாத, தமிழ்க் கழகங்களோ, சைவ சபைகளோ தமிழகத்தில் ஒன்றுகூட இல்லை.
  1914-இல் வடநாடுகளுக்கும், 1915-இல் இலங்கைக்கும் சென்று சமயச் சொற்பொழிவுகளும் தமிழ்ச் சொற்பொழிவுகளும் நிகழ்த்தி வந்தார். அவரது பேச்சும் எழுத்தும் இந்தியாவிலும் இலங்கை யிலும் பல புலவர்களை உண்டு பண்ணியிருக்கின்றன. இதனால், அவர் புலவர்க்குப் புலவராக விளங்கி வந்திருக்கிறார். அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, வடமொழியும் தமிழும் கலந்து பேசுகிற, எழுதுகிற மணிப்பிரவாள நடையே இருந்து வந்தது. அதை மாற்ற, தூய்மைப் படுத்த, அவர் எடுத்துக் கொண்ட முயற்சி, உழைத்த, உழைப்பு முதலியவை எவராலும் செய்ய முடியாதவை. தமிழ் மொழியில் ஒரு தனித் தமிழ் நடையைப் புகுத்தித், தன் காலத்திலேயே வெற்றி கண்ட ஒரு பேரறிஞர். இதனாலேயே தமிழ் அறிஞர்கள் பலர் அவரைத் ‘தனித். தமிழின் தந்தை‘ எனக் கூறுவதுண்டு. எனக்கு அவரது நட்பு ஐம்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பே கிடைத்தது. அஃதாவது 1921இலேயே கிடைத்தது. திரிசிரபுரம் சைவ சிந்தாந்த சபையின் துணையமைச்சராய் நான் பணி புரிந்தபோது நெருங்கிப் பழகும் வாய்ப்பும் கிடைத்தது. அவரோடு சில மணித் துளிகள் பேசிவரும் பொழுதெல்லாம் ஒரு பெரிய நூலைப் படித்து முடித்த அளவுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.
  திரிசிரபுரம் சைவ சித்தாந்த சபையில் ஆண்டு விழா வொன்றை மலைக்கோட்டை நூற்றுக்கால் மண்டபத்தில் நடத்தினேன். அதற்கு அவரைத் தலைமை வகிக்க அழைக்கப் பல்லாவரத்திற்குச் சென்றிருந்தேன். அவர், அச்சடித்து வைத்திருந்த பட்டியலொன்றை என்முன் நீட்டினார். அதைக் கண்டு பயந்து போனேன். அதில், அவர் தங்குமிடம் எப்படியிருக்க வேண்டும் என்பதும், படுக்கும் அறையில் இருக்க வேண்டிய பொருள்களும், காண வருவாரிடத்து இருக்க வேண்டிய பொருள்களும், இறை வழிபாட்டு அறையில் இருக்க வேண்டிய பொருள்களும், சமையலறையில் இருக்க வேண்டிய பொருள் களும் குறிக்கப் பெற்றிருந்தன. அவற்றுள்ளும் தண்ணீர் கலவாத ஆவின்பால் காலையில் காற்படி, மாலையில் அரைப்படி. நாலரை அங்குல சுற்றளவுள்ள எலுமிச்சம் பழம் நாள்தோறும் ஏழு. இரண்டடி நீளத்திற்கு மேற்படாத காய்ந்த வேம்பின் விறகு பன்னிரண்டு. முனை முறியாத பச்சரிசி, புளிப்பில்லாத தயிர், பச்சை மங்காத காய், அப்பொழுதே பிடுங்கிய கீரை என இவ்வாறு எழுதப்பெற்றிருந்ததோடு, இருக்கும் பலகையின் நீளமும், அகலமும், உயரமும், பூசைப் பொருள்களின் எண்ணிக்கையும், அவற்றின் அளவுகளும், கீழே விரிக்கும் விரிப்புகளின் எண்ணிக்கையும், அகலமும், நீளமும் குறிக்கப்பெற்றிருந்தன. இளமை முறுக்கினால் எதையும் செய்து முடித்துப் பழகிய பழக்கத்தினால் இவையனைத்தையும் தவறாது வழங்குவதாக வாக்களித்துவிட்டு, ‘வழிச் செலவுகளுக்கும் சேர்த்து இருநூறு வெண்பொற்காசுகள் கேட்கிறீர்களே? இவ்விதமானால் தங்களை அழைத்துத் தமிழ்த் தொண்டும் சைவத்தொண்டும் செய்ய என்னைப் போன்று எத்தனை பேர் முன் வருவார்கள்?’ என்று வருந்திக் கேட்டேன். அதற்கு அவர் ” ‘தா,தை’ என்று கூத்தாடுகிறவர்களிடம் இக்கேள்வியைக் கேட்பதில்லை. நான்கைந்து பாடல்களைப் பாடம் பண்ணி வைத்துப் பாடுகிறவர்களிடம் இக்கேள்வியைக் கேட்பதில்லை. அவர்களுக்கெல்லாம் ஆயிரக்கணக்கில் அள்ளிக் கொடுக்கின்ற தமிழகம், தமிழ்ப் புலவர்களிடத்தில் மட்டுமே இக்கேள்வியைக் கேட்கிறதே. இஃது ஏன் தமிழைப் படித்தீர்கள்? என்று கேட்பதுபோல் இருக்கிறது” என்றார். அதையும் வழங்குவதாக ஒப்புக்கொண்டு வந்து, அவர் குறித்த அத்தனை பொருள்களையும், அகலம், நீளம், உயரம், அளவு, எண்ணிக்கை, எடை தவறாமல் வாங்கி வைத்து விட்டேன். இதற்கு எனக்கு ஆறு நாட்கள் பிடித்தன. அவர் இரண்டு நாள் தங்குவதற்காகக் கேட்டிருந்த அமைப்பில் திருச்சிராப்பள்ளியிலேயே வீடுகள் இல்லை. இருந்த இரண்டொரு வீடுகளும் காலியாக இல்லை. அளவு கடந்த முயற்சி எடுத்து அதையும் கண்டு பிடித்து வழங்கி, ஒரு பெரிய போரில் வெற்றி பெற்றதைப் போன்று மகிழ்ந்தேன்.
(தொடரும்)
கி.ஆ.பெ.விசுவநாதம்
எனது நண்பர்கள்

Thursday, October 26, 2017

தமிழை உயர்தனிச் செம்மொழி என்று பறைசாற்றிய கால்டுவெல் – எழில்.இளங்கோவன்

இராபர்ட்டு கால்டுவெல் 

முனைவர் இராபர்ட்டு கால்டுவெல் (Robert Caldwell) அவர்களின் தாயகம்,  காட்டுலாந்து(Scotland).
ஜரோப்பாவின் மிகப்பெருந் தீவான அயர்லாந்தில் அவர் பிறந்தார். அந்நாட்டின் கிளாடி(Clady) ஆற்றங்கரையில் அமைந்த பெல்பாட்டு என்ற சிற்றூர் அவரின் சொந்த ஊர்.
 சித்திரை 26,  1845 / 1814 ஆம் ஆண்டு மேத் திங்கள் 7 ஆம் நாள் அவர் பிறந்தார். தொடக்கக் கல்வியை அயர்லாந்தில் பயின்ற அவர் தன் பத்தாம் அகவையில்  பெற்றோருடன் காட்டுலாந்துக்குப் போய்விட்டார்.
பதினோறாம் அகவையில் ஆங்கில இலக்கிய இலக்கணங்களைத் தெளிவுறப் பயின்ற கால்டுவெல், தன் தந்தையின் விருப்பப்படி ஓவியத்துறையிலும் பயின்றார்.
தபுளின்(Dublin) ஓவியக் கல்லூரியில் பயின்ற அவர், சிறந்த ஓவியருக்கான உயர்ந்த பரிசுகளைப் பெற்றிருக்கிறார். ஆனாலும் அவரின் சிந்தனையும் நாட்டமும் இறைப் பணியாற்றும் சமயத் துறையையே நாடியது.
அவரின் இருபதாம் அகவையில், இலண்டன் மாநகரக் கிருத்துவச் சமயத் தொண்டர் சங்கத்தில்  உறுப்பினராகச் சேர்ந்தார்.
இச்சங்கத்தின் சார்பில் கிளாசுகோ பல்கலைக் கழகத்தில்(University of Glasgow) சேர்ந்து, ஜரோப்பிய மொழிகளில் அமைந்த சமய நூல்களையும், நீதி நூல்களையும், படித்த கால்டுவெல், அப்பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் வயவர்(சர்). தானியல் கெய்த்தே சேண்டுபோர்டு (Daniel Keyte Sandford) என்பவரின் பாடப் பயிற்சியால் ஈர்க்கப்பட்டார்.
பேராசிரியர் தானியல், கிரேக்க மொழியின் சிறப்புகள், அதன் அருமை பெருமைகளைப் பிற மொழிகளுடன் ஒப்புமைப்படுத்திக் காட்டி விளக்கிய திறமையைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தார் கால்டுவெல்.
இந்த நிகழ்வே பின்னர்த் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுத அவருக்கு அடிப்படையாக அமைந்தது.
தென்னிந்திய திருச்சபை வேண்டுகோளை ஏற்று இலண்டன் திருச்சபை(London Missionary Society), சமய பரப்புரைக்காகக் கால்டுவெலைச் சென்னைக்கு அனுப்பியது. 1838 ஆம் ஆண்டு இளைஞரான கால்டுவெல், கப்பல் மூலம் சென்னை வந்து இறங்கினார்.
இங்கே துரூ, வின்சுலோ, பவர், ஆண்டர்சன் ஆகிய தமிழறிஞர்களாகிய  ஆங்கிலேயர்களின் நட்பு,  இவரின் தமிழார்வத்தை உந்தித் தள்ளியது. கால்டுவெல்லின் மனைவி, நாகர்கோயில் கிருத்துவச் சமயப் பணியாளரான மால்து (Mault) என்பவரின் மகள் எலிசா தமிழ்மொழியிலும், ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார் என்பது இவருக்கு கூடுதல் பலமாக அமைந்தது.
சங்க இலக்கிய- இலக்கணங்களையும், பழந்தமிழ் ஏடுகளையும் தேடித் தேடிப் படித்தார். அகழ்வாய்வுகளில் ஈடுபட்டார்.
இவரின் அகழ்வாய்வில் பண்டைய தமிழர்களின் ஈமத்தாழிகளைக் கண்டறிந்து கூறினார்.
பாண்டிய நாட்டின் மீன் சின்னம் பொறித்த தங்கக் காசுகளைக் கண்டறிந்தார்.
சென்னையில் இருந்து திருநெல்வேலி சென்ற இவர் தரங்கம்பாடி, தஞ்சாவூர், நீலகிரி, கோயம்புத்தூர், மதுரை வழியகச் செல்லும் போது அந்தந்தப் பகுதி மக்களின் வட்டாரத் தமிழ், பேச்சு மொழி, பண்பாடுகள் குறித்து அறிந்து கொண்டு வந்தார். அத்துடன் இவரின் தமிழ்க்கல்வி, வரலாற்றுக் கல்வி, அகழ்வாய்வும் சேர்ந்தன.
‘திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு’ (A Political and General History of the District of Tirunelveli) என்ற புகழ் பெற்ற நூலை எழுதினார்.
இந்நூலை 1881 ஆம் ஆண்டு அன்றைய மதராசு அரசு வெளியிட்டுள்ளது.
1856 ஆம் ஆண்டு Comparative Grammar of the Dravidian of South Indian Family Language என்ற ஆங்கில நூலை எழுதினார்.
இந்நூல் உலக அளவில் கால்டுவெல்லுக்குப் புகழைக் கொடுத்தது மட்டுமல்லாமல், உலக அளவில் மொழியியல் ஆய்வுக்குப் பெரிதும் துணை செய்யும் நூலாகவும் அமைந்து விட்டது.
இந்நூலுக்காக அவர் படித்த கிளாசுகோ பல்கலைக் கழகம் அவருக்கு முனைவர்(டாக்டர்) பட்டம் வழங்கி உள்ளது.
தமிழில் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்‘ என்று அழைக்கப்படும் இந்நூலின் தமிழ் வடிவப் பெயர் ‘திராவிட அல்லது தென்னிந்திய மொழிக் குடும்பங்களின் ஒப்பிலக்கணம்’.
இந்நூலில் குசராத்தி, மராத்தி, ஒரிசா, தக்காணப்பகுதி, நீங்கலாகப் பலுசித்தானம், வங்காளத்தின், இராசுமகால் மலைகள் தொட்டு, கன்னியாகுமரி வரையும் திராவிட மொழிக் குடும்ப மொழிகளே ஆளப்பெற்றிருந்தது. என்கிறார் கால்டுவெல்.
‘‘இந்திய நாட்டின் வடபகுதியிலோதென் பகுதியிலோ சமற்கிருதம் என்று அழைக்கப்படும் வடமொழிஉள்நாட்டு மொழியாகஇருந்ததில்லைஅப்படி நம்பவும் வழியில்லை” –என்றும்
‘‘உள்நாட்டுச் சிற்றூர் மக்கள், நாட்டுப் புறங்களிலும் வாழ்ந்து வரும் தாழ்த்தப்பட்ட மக்கள், வட மொழிச் சொற்களைப் பேச்சு வழக்கில் கையாளாமல், ஒதுக்கித் தள்ளும் தூய பழக்கம் காணப்படுகிறது. ஒரு மொழியின் தொன்மைச் சிறப்புகளை, அம்மொழியிலும், செய்யுள்களிலும், தாழ்த்தப்பட்ட குடி மக்களின் பேச்சுகளில் இருந்தே ஆய்ந்து காணமுடியும் என்பது உண்மை’’ என்றும்
‘‘தமிழ் என்னும் சொல்லுக்கு நேர் வடமொழிச் சொல் திரவிடம் என்பதாகும். இச்சொல் தமிழர் அல்லது திராவிடர் வாழ்ந்த நாட்டையும், அவர்கள் பேசும் மொழியையும் ஒன்றெனக் குறிப்பதாகும். தமிழ் என்ற சொல்லின் ஒலி வடிவிற்கும், திராவிடம் என்ற சொல்லின் ஒலி வடிவிற்க்கும் இடையே எத்துனையோ  வேறுபாடு காணப்பட்டாலும், இரண்டும் ஒரே வேரில் இருந்தே பிறந்ததாகக் கொள்வதற்கு இடம் உள்ளது. தமிழ் என்ற சொல்லே பின்னர் திரவிடம் எனத் திரிபுற்றது என்று  சொல்வதைக் காட்டிலும், திராவிடம் என்ற சொல்தான் தமிழ் என்று திரிபுற்றது என்று கூறுவது சரியானதாகும்” என்றும்
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூலில் வரிசையாகச் சொல்லிக்கொண்டு போகிறார் கால்டுவெல்.
தமிழர் – திராவிடர் இவ்விரு சொற்களும் தமிழரையே குறிக்கும் ஒரு பொருள் இரு சொற்கள் என்று முனைவர் அம்பேத்கர் சொல்வது இங்கு கருதத்தக்கது.

திராவிடம் என்பதைக் குறியீட்டுச் சொல் என்கிறார் கால்டுவெல்.
“தமிழ்மொழி உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் பலவற்றையும் குறிப்பதற்கு குறியீடொன்று தேவைப்படுகிறது. திராவிடம் என்று அதனை வகுத்துக் கொண்டால், எடுத்துக் கொண்ட ஒப்பிலக்கண முறைக்கு அது மிகவும் பயனுடையதாக அமையும்” என்றும் விளக்குகிறார்.
திராவிட மொழிக்குடும்பம், ஆரிய மொழிக் குடும்பம் எனும் இரு குடும்ப மொழிகளைத் திருந்திய மற்றும் -திருந்தாத மொழிகளாகப் பகுத்துத் தன் ஒப்பிலக்கணத்தை விரிவுபடுத்தித் தமிழுக்குப் பெரும் தொண்டாற்றியிருக்கிறார் கால்டுவெல்.
முதன் முதலில் தமிழை உயர்தனிச் செம்மொழி என்று உலகுக்குப் பறைசாற்றி, 1941 முதல் நெல்லை மாவட்ட இடையன் குடியில் 50 ஆண்டுகள் வாழ்ந்து அரும் பணியாற்றித் தமிழுக்குப் பெருமை சேர்த்தார் இராபர்ட்டு கால்டுவெல் அவர்கள்.
தன் 77ஆம் அகவையில், தி.பி.  1924 /1891 ஆம் ஆண்டு ஆகத்து 28 ஆம் நாள், கொடைக்கானலில் இயற்கை எய்தித் தன் பணிகளை முடித்துக்கொண்டார்.








எழில்.இளங்கோவன்
கருஞ்சட்டைத் தமிழர்
14 ட்டோபர் 2017

Wednesday, October 25, 2017

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (25) – வல்லிக்கண்ணன்

(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (24)   தொடர்ச்சி)

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன்

25

  பண்பு நலன்களாலேயே ஒருவன் நன்மணி மனிதன் ஆவான் என்றும், பழியிலா வாழ்வே பண்பின் ஒழுக்கமே பயன்தரு உயர்வாகும் என்றும் அவர் உறுதியாய்க் கூறுகிறார்.
எது தெய்வம் என்று கேட்டுப்பெருங்கவிக்கோ தெளிவுபடுத்தியுள்ள கவிதைகள் அவரது உளப்பண்பை, நல்நோக்கை, மனவிரிவைப் புலப்படுத்துகின்றன.
தீதில்லா நெறியினிலே தெய்வம் உண்டு!
திக்கெல்லாம் உறவாடும் இயற்கைத் தாயாள்
மோதிவரும் அழகுருவில் தெய்வம் உண்டு!.
முதிர்கின்ற அனுபவத்தில் தெய்வம் உண்டு!
யாதினிலும் இனிய தெய்வம் நம்மை ஆக்கும்.
நற்தெய்வம் கற்பிக்கும் ஆசானேதான்!

உழைக்கின்ற கரங்களிலே தெய்வம் உண்டு!
உண்மையிலே நன்மையிலே தெய்வம் உண்டு
விழைக்கின்ற தொண்டினிலே தெய்வம் உண்டு
வெற்றியிலே நற்தெய்வம் உண்டு! ஏழை
அழைக்கின்ற குரலினிலே தெய்வம் உண்டு!
அன்னவர்கள் துயர்தீர்ப்பான் உண்மைத் தெய்வம்:
தழைக்கின்ற கொழுந்துறை வாழ் மக்கள் தம்மின்
தமிழ்த் தொண்டில் தனித் தெய்வம் என்றும் உண்டு

தென்னையிளங் கீற்றினிலே தெய்வம் காண்பேன்:
சிறுமையிலா அருமையிலே தெய்வம் காண்பேன்!
புன்னை மரச் சோலையிலே பூக்கும் வையப் 
பொழிலெல்லாம் தெய்வத்தைக் காண்பேன்! நன்றாய்
என்னைநான் எண்ணித்தான் பார்க்கும் போதென்
இதயத்தில் தெய்வத்தைக் காண்பேன்! ஒப்பில்
அன்னைமொழி எழுத்தில் நல் எழுது கோலில்
அகிலம் உள் அனைத்திலுமே தெய்வம் காண்பேன்!
உண்மையான ஆன்ம வழி நடை பயிலும் அருளாளர் கவிஞர் சேதுராமன் என்பதை அவரது கவிதைகள் பறை. சாற்றுகின்றன. தன்னைப்பற்றி அவரே கூறியிருப்பது: கவனத்துக்குரியது:
போதை இல்லாத
நீதிக் கவிஞன் நான்.
பாதை என்பாதை
பண்பான சீர்பாதை!
கைக்கூலி கட்குக்
கைகட்டி வாய்பொத்திப்
பைக்கூலி பெறுகின்ற
பாதையென் பாதையல்ல.

மெய்க்கூலி பெறுதற்காய்
மேன்மையாம் ஆன்மீகத்
தெய்வத்தாள் பற்றித்
திசையெல்லாம் தமிழ்வளர்ப்பேன்.

(தொடரும்)
வல்லிக்கண்ணன்: 
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்

Wednesday, October 18, 2017

மறைமலையடிகள் 1/5 – கி.ஆ.பெ.


 

மறைமலையடிகள் 1/5 – கி.ஆ.பெ.

மறைமலையடிகள்
சுவாமி வேதாசலம் என்கிற பல்லாவரம் உயர்திரு மறைமலையடிகள்
தமிழ்த்தாயின் தவமகன்.
பிறப்பு : 1876இல்
பிறந்த நாள் : சூலை 15
பிறந்த ஊர் :  காடம்பாடி
வட்டம் : நாகப்பட்டினம்
தந்தையார் பெயர் : சொக்கநாதப்பிள்ளை
இளமைப் பெயர் : வேதாசலம்
 படித்த கல்லூரி : நாகை வெசுலி மிசன்
 சைவ ஆசிரியர் :  சோமசுந்தர(நாயக்க)ர்
பொதுத் தொண்டு : 16ஆம் ஆண்டில்
முதல் தோற்றம் : இந்து மதாபிமான சங்கம்
திருமணம் : 17ஆம் ஆண்டில்
 படிப்பு முடிவு : 1894இல்
நட்பு : பேராசிரியர் சுந்தரம் பிள்ளை
தமிழாசிரியர் வேலை :  சென்னை கிறித்துவக் கல்லூரி
ஆசிரியராக அமர்ந்தது : 1898இல்
ஞானசாகரம் தொடங்கியது : 1902இல்
சைவ சித்தாந்த சமாசம் தொடங்கியது : 1905 இல்
கல்லூரியை விட்டது – : 1911இல்
அப்போது ஆண்மக்கள் நால்வர்; பெண் மக்கள் மூவர்
துறவு பூண்டது : 1911 ஆகத்து
பல்லாவரம் குடியேறியது : 1916இல்
பொதுநிலைக்கழகம் தோற்றியது : 1917இல்
யாழ்ப்பாணம் சென்றது : 1921இல்
திருவாசகவுரை வெளிவந்தது : 1926இல்
மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் வெளிவந்தது : 1929இல்
புலமை : ஆங்கிலம், தமிழ், வடமொழி
பயிற்சி : மூச்சுப்பயிற்சி, அறிதுயில் பயிற்சி (யோகாப்பியாசம், இப்னா டிசம்) கொள்கை : தமிழே சிவம்
தொண்டு : 60 ஆண்டுகள்
எழுதிய நூல்கள் : 50க்குமேற்பட்டன.
இவை, அவரது வரலாற்றை அறிவிக்கப் போதுமானவை,
(தொடரும்)
கி.ஆ.பெ.விசுவநாதம்
எனது நண்பர்கள்