Saturday, December 31, 2011

வாழ்க்கையால் மேலோர் வளர்தமிழ் நூலோர் வ.உ.சிதம்பரனார் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 31/12/2011


41. வாழ்க்கையால் மேலோர் வளர்தமிழ் நூலோர் வ.உ.சிதம்பரனார் (1872-1936).

41. தன்வரலாற்றைச் செந்தமிழ்ப் பாக்களால் வனப்புடனும் வண்ணத்தமிழ் வளமுடனும் வரைந்து காட்டியுள்ள அருமை இப்பெருமகனார் பெற்ற தனிப் பெருமை.
தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்

Friday, December 30, 2011

பைந்தமிழ்ச் சித்தர் பா.வே.மாணிக்கநாயக்கர் ~ 

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 30/12/2011



40. பல்கலை வித்தகர் பைந்தமிழ்ச் சித்தர் பா.வே.மாணிக்க நாயக்கர் (1871-1931).

40. தமிழ் எழுத்துகளின் அமைப்பை, அருமைச் சிறப்பை, ஓர் ஆங்கில நூலின் உருவாக்கத்தால் உலகமறியச் செய்த இப்பேரறிஞர் தமிழ் எழுத்துகளை- ‘அறிவியல் ஆன்மீக ஓவியங்கள்’ என்றார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்


Thursday, December 29, 2011

தமிழ்ப்பேச்சு வீரர் சுப்பிரமணிய சிவா ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 29/12/2011


39. சித்தம் தமிழ்மூச்சு வித்தகத் தமிழ்ப்பேச்சு வீரர் சுப்பிரமணிய சிவா (1871-1925).

39. தமிழ்ப் பெரு நாவலராகவும், தமிழ் நூல் படைப்பாளராகவும் விளங்கிய இப்பெருந்தகை. தமிழுணர்ச்சியையும் தாய்நாட்டுப் பற்றையும் மேலோங்கச் செய்யப் பல நாடகங்களை உருவாக்கி நடித்தார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்

Wednesday, December 28, 2011


பேராசான் நா.கதிரைவேல் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 28/12/2011



38. பெரும்புலமைச் சிங்கம் பெருஞ்சொல் இமயம் பேராசான் நா.கதிரைவேற் பிள்ளை (1871-1907).

38. ‘தமிழ்த் தென்றல்’ திரு.வி.கவைத் தமிழ்ப் பெரியாராக உருவாக்கிய குருநாதரான இப்பெருமான். வெளியிட்ட தமிழ்ப் பேரகராதியை அரிய தமிழ்த் தொண்டென அறிஞர் உலகம் பாராட்டிப் போற்றியது.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

Tuesday, December 27, 2011


மகாவித்துவான் இரா.இராகவைய்யங்கார் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 27/12/2011


37. வடமொழி வல்லுநர் தமிழ்மொழிப் பேராசான் மகாவித்துவான் இரா.இராகவைய்யங்கார் (1870-1946).

37. சேதுபதிகளின் அரசவைப் புலவராகத் திகழ்ந்த இப்பேரறிஞர் இயற்றிய ‘பாரி காதை’ என்னும் பெருங்காப்பியம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் முதல் வெளியீடாக 1937-ஆம் ஆண்டில் மலர்ந்தது.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்

0

புரட்சியில் பூத்த மலர்

க.இந்திரசித்து
பதிவு செய்த நாள் : 27/12/2011



புரட்சியில் பூத்த மலர்
பேராசிரியர் சி.இலக்குவனார் தமிழ் மொழியின் எழுச்சிக்கும், ஏற்றத்திற்கும் போராடிய போர்ப்படை மறவர்களின் வரிசையில் முன்னணியில் நின்றவர். கார்ல்மார்க்சு, லெனின், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோருடைய வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்போதெல்லாம் ஏற்படும் உணர்ச்சியும், உந்துதலும், வேகமும், வீரமும், கிளர்ச்சியும், கிளர்ந்து எழுவதைப் போன்றே இவருடைய வாழ்க்கை வரலற்றைப் படிக்கும்போதும் தோன்றுகின்றன. என்னடா! இப்படியும் ஒரு மனிதன் வாழ்ந்து மறைந்திருக்கிறாரே – அவரை நாம் மறந்திருக்கிறோமே’ என்னும் வியப்பும், வேதனையும் ஒருங்கே எழுகின்றன. காவிய தலைவனாகவே காட்சியளிக்கும் பேராசிரியர் சி.இலக்குவனாரின் வரலாற்றை மறைமலை இலக்குவனார் நிரல் படத் தொகுத்தும், வகுத்தும், ஆய்ந்தும் இந்நூலில் எழுதியுள்ளார்.
தமிழ் மொழி காப்புப் போரில் புரட்சி வீரராகப் போராடிய சி.இலக்குவனார் தமிழ்ப் போராசிரியர்கள் தன்மானத்தோடு வாழ்ந்து காட்டவேண்டும் என்பதற்கு முன்னோடியாகத் திகழ்ந்துள்ளார். விடாமுயற்சியும், தளரா உழைப்பும் கொண்டு தன்னிகரில்லா பேராசிரியராக உயர்ந்து நிற்கிறார்.
1.இளமையும் கல்வியும், 2. கல்விப்பணி, 3.கவிதைப்பணி, 4.இதழாசிரியர், 5.நூலாசிரியர், 6.ஆராய்ச்சியாளர், 7.திருக்குறள் உரை நுட்பமும் ஆய்வுத்திறனும், 8.ஓய்வில்லா உழைப்பு, 9.பன்முக ஆளுமை என்னும் ஒன்பது தலைப்புகளில் பேராசிரியர் சி.இலக்குவனாரின் வாழ்வும், பணியும் பாங்குடன் படைக்கப்பட்டுள்ளன. இந்நூலை எழுதியுள்ள மறைமலை இலக்குவனாரின் மொழிநடை தனித்தமிழ் அருவியாய்த் தாலாட்டுகிறது. மொழிநடைச் சுவையில் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் பக்கத்தில் நிற்கும் தகுதியை மறைமலை இலக்குவனார் பெற்றுள்ளார்.
கார்ல் மார்ச்சு, தன்னுடைய பொதுவுடைமைக் கருத்துக்களுக்காக செர்மமி, உருசியா, பெல்சியம், இங்கிலாந்து ஆகிய நாடுகள் அவரைத் தம் நாட்டு எல்லையிலிருந்து துரத்தி அடித்ததைப் போலவே சி. இலக்குவனாரையும் அவருடைய தமிழியல் கொள்கைகளுக்காக ஒவ்வொரு கல்வி நிறுவனமும் துரத்தி அடித்த செய்தியைப் படித்துப் பார்த்து, படித்துப் பார்த்து நெஞ்சம் பதைபதைக்கிறது. விரிந்த மனப்பான்னையின்மை, அறிவியல் பார்வையின்மை,தொலை நோக்கின்மை, மாணவர் நலன் கருதாமை, தன்னலமே பெரிதாகப் பேணுதல் போன்ற இழிகுணங்கள் கொண்ட கயவர்களின் கைகளில் அன்றைய கல்வி நிறுவனங்கள் செயல் பட்டமையை கண்டு, அளப்பரிய அவலம் கொண்டு நெஞ்சம் தவிக்கிறது. (கல்வித்துறையில் தொழிற்சங்கங்கள் தோன்றிய இந்நாட்களிலும் இது தொடர்கதையாய்த் தொடர்வதே கண்கூடு). “பேராசிரியர் இலக்குவனாரைப் போல பணியாற்றிய இடங்களிலெல்லாம் மாறி மாறிப் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் வேறு எவரும் இலர் எனலாம்” (ப.54) என்னும் கூற்று அன்றைய கல்வித்துறை எப்படிப்பட்ட பிற்போக்கு மூடர்களின் கைக்குகைகளுக்குள் அகப்பட்டு, அல்லாடிக் கிடந்தன என்பதைப் பளிச்சென சுட்சுகிறது. ஒரு பேராசிரியர் எவ்வளவு இன்னலுக்கு ஆளாக்கப்பட்டிருந்தால் “துரத்தப்பட்டேன்” என்னும் தலைப்பிலேயே கவிதை படைக்கும் அவலத்திற்கு ஆளாகி இருக்கவேண்டும்? “புறநெறியில் சென்று பொல்லாங்கு கூறி என்னைத் துரத்தினர். துரத்தப்பட்டதால் அடைந்துள்ள துயரங்கள் எண்ணற்றன. என் உள்ள குமுறலை வெளிப்படுத்தினால்தான்  என் உளம் அமைதியுறும் போலிருந்தது. என்னுள்ளொலி இம்மறவழிச் செயலை மக்கள் மன்றில் முறையிடப் பணித்தது. அதன் விளைவே இந்நூல்” (ப.55) என்று இந்நூல் தோன்றியதற்கான காரணத்தை பேராசிரியர் சி.இலக்குவனார் கூறியுள்ளார்.
பகடியம் என்னும் புது உத்தியில் பண்டைய தமிழ்க் கவிதைகளை எடுத்துக்கொண்டு அதில் தன் கருத்துகளை, தன் காலச் சூழ்நிலைகளை எழுதியுள்ளார்.
“யாண்டு பலவின்றியும் நரையுளவாகுதல்
யாங்காகியர் என வினவுதிராயின்
ஆண்ட நம் மக்கள் அடிமைகளாயினர்
பூண்ட நம் பண்பு போலியதாகின்று
நற்றமிழ் மறந்தனர் நானிலமதனில்
பிறமொழிப் பற்றில் பெரியோராயினர்
தமிழகத் தெருவில் தமிழ்தான் இல்லை
ஊரும் பேரும் உயர்மொழி வழக்கும்
அயல்மொழி தன்னில் அமைந்திடக் கண்டோம்
தமிழைக் கற்றோர் தாழ்நிலை யுறுவதால்
தமிழைப் பயிலத் தமிழரே வந்திலர்
அல்லவை பெருகவும் நல்லவை குறையவும்
மக்கள் வாழ்வில் மகிழ்ச்சிதான் இன்றே
என்ற பாடல் இதற்கு மிகச் சிறந்த சான்றாக அமைந்துள்ளது.
குறிக்கோள் முழக்கம்:
‘எழுதுவதற்கு ஏடும் பேசுவதற்கு மேடையும் எப்போதும் வேண்டும் தமிழ் பரப்ப’ என்பதே இலக்குவனாரின் குறிக்கோள் முழக்கமாகும். அதற்கிணங்க, ‘சங்க இலக்கியம்’, ’இலக்கியம்’, ‘திராவிடக் கூட்டரசு’, ’குறள் நெறி’, ‘Dravidian Federation’ ஆகிய இதழ்களை நடத்தினார். பேராசிரியராக இருந்து கல்விப் பணியாற்றியதோடு இதழாசிரியராகவும் இருந்து தமிழ்ப்பணி புரிந்தார். ‘குறள்நெறி’ இதழை நாளிதழாக நடத்தி இதழியல் உலகில் புரட்சியை ஏற்படுத்தினார்.  வட்டத்தொட்டிக் குழுவினர். ‘கம்பன் புகழ் பாடிக்கன்னித்தமிழ் வளர்ப்போம்: சங்க இலக்கியத்தைத் தூக்கி வங்கக் கடலில் எறிவோம்’ என்று கூறிய முழக்கத்தை மறுத்து, ‘சங்கத்தமிழ் பாடி தமிழர் புகழ் வளர்போம்’ என்னும் முழக்கத்தை முன்வைத்தார். இதை நடைமுறைப்படுத்துவதற்காகவே ‘சங்க இலக்கியம்’ என்னும் இதழைத் தோற்றுவித்தார். “ஆண்டுதோறும் ஒரு நூலாவது எழுதி வெளிவர வேண்டும், நம் வயதை ஆண்டுகளைக் கொண்டு கணக்கிடகூடாது. நாம் எழுதிய நூல்களைக் கொண்டுதான் கணக்கிட வேண்டும்” (ப.96) என்று இலக்குவனார் கூறுவதற்கேற்ப, இருபது தமிழ் நூல்களையும் ஒன்பது ஆங்கில நூல்களையும் படைத்துள்ளார். ஏராளமான கட்டுரைகளையும் எழுதியுள்ளார். தொல்காப்பியம் குறித்து இவர் வெளியிட்டுள்ள ஆராய்ச்சி முடிவுகள் மாபெரும் அறிவுக் கொடையாக விளங்குகின்றன.
சில முடிவுகள்:
  1. தொல்காப்பியரின் காலம் கி.மு. 6ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது.
  2. ஆரியரின் வருகைக்கு முன்னரே தமிழ் தனக்கெனத் தனியான வரிவடிவம் பெற்றிருந்தது.
  3. தொல்காப்பியரால் அந்தணர்மறை எனக்கூறப்படுபவை சமஸ்கிருத வேதங்கள் அல்ல.
  4. ஒலிநிலைப்பாடும், ஒலியழுத்தமும் தொல்காப்பியரால் ஆய்ந்து கூறப்பட்டுள்ளன.
  5. தொல்காப்பியம் பல்வேறு மொழியியற் கோட்பாடுகளையும் இலக்கியக் கோட்பாடுகளையும் மொழிகின்றது.
  6. பிறப்பின் அடிப்படையிலான சாதிப்பாகுபாடு பற்றி தொல்காப்பியத்தில் எவ்விடத்தும் குறிப்பிடவில்லை.
சென்னை பல்கலைக்கழகத்தின் கல்விக்குழுவில் உறுப்பினராக இருந்தபோது பேராசிரியர் கொண்டுவந்த தீர்மானங்களின் உள்ளடக்கத்தில் உள்ள சிந்தனைகள் இவருடைய தொலைநோக்குப் பார்வையைச் சுட்டுகின்றன. இவருடைய தீர்மானங்கள்:(ப.28)
  1. தமிழ்நாட்டுக் கல்லூரி முதல்வர்கள் குறைந்த அளவேனும் தமிழ்ப்புலமை பெற்றிருக்க வேண்டும். அதன் அறிகுறியாக வித்துவான் முன்னிலை வகுப்புத் தேர்விலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
  2. கல்லூரிப் பாடத்திட்டத்தில் தமிழே முதற்பாக மொழியாகவும், ஏனைய மொழிகள் இரண்டாம் பாகமொழியாகவும் அமைதல் வேண்டும்.
  3. தமிழ்ப்பாடத் தேர்வில் திருக்குறளுக்கெனத் தனிக் கேள்வித்தாள் ஒன்று அமைதல் வேண்டும்.

1965ஆம் ஆண்டு அனைத்துக் கல்லூரிகளிலும் தமிழ் பயிற்றுமொழியாக இருக்கவேண்டும் என்பதற்காக ‘தமிழ் உரிமைப் பெருநடைப் பயணம்’ மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார். இதன் காரணமாக இவர் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டார். தமிழ் மொழிக்காக எத்தகைய இன்னல்களையும் ஏற்க அணியமாக இருந்த இவரின் நெஞ்சுரத்தை இந்நிகழ்வு எடுத்தியம்புகிறது.

எக்கரணியத்தை முன்னிட்டும் யாருக்காகவும் கொள்கையில் பேராசிரியர் சமரசம் செய்துகொண்டதே இல்லை. அறிஞர் அண்ணாவின் மீது அன்பு கொண்டிருந்தபோதும் (ப66மற்றும்67) அவர் கம்பராமாயணத்தை எரிக்க வேண்டும் என்று கூறிய கருத்தைப் பேராசிரியர் ஏற்கவில்லை (ப.17). அதனால் அறிஞர் அண்ணா ‘திராவிட நாடு’ இதழில் இவருக்கு  ‘நன்னிலம் நண்பர்க்கு’ என்னும் தலைப்பில் விடையெழுதியுள்ளார். திருமணமாகாத இளம் பேராசிரியர் பா.நமச்சிவாயம், முதுகலை வகுப்பிற்குப் பாடமாக ‘குடும்ப விளக்கை’ நடத்தினார். அப்போது அங்கு வந்த பாரதிதாசன் திருமணமாகாத அவருக்கு அப்பாடத்தை நடத்தத் தகுதியில்லை என்று கூறி, திருமண மான மாணவர் ஒருவரைப் பாடம் நடத்தப் பணித்தார். இது கண்டு வெகுண்டெழுந்த பேராசிரியர் இலக்குவனார், “அப்படியானால் இளங்கோ அடிகளும், திருத்தக்கதேவரும் திருமணம் புரிந்துகொண்டா இல்லற இன்பம் பற்றிப் பாடினார்கள்” என்று கூறி பாவேந்தரையும் மறுத்துரைத்து, நீதியின் பக்கம் நின்ற பேராசிரியரின் செயலை மறைமலை இலக்குவனார் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். ஒரு மனிதர், ஒரு பேராசிரியர், ஒரு நூலாசிரியர், ஒரு ஆராய்ச்சியாளர், ஒர் இதழாசிரியர் இப்படியும் வாழ்ந்திருக்க முடியுமா என்ற மலைப்பை  ஏற்படுத்துகின்றது இந்நூல். பேராசிரியர் சி. இலக்குவனாரின் வாழ்க்கை வரலாற்றைப் படித்து முடிக்கும் போது மனதின் அடியாழத்தில் குற்ற உணர்ச்சி தோன்றுவது தவிர்க்க இயலாததாகிறது. தமிழால் ஊதியம் பெறும் நாம் சிறிதளவாவது தமிழ் ஊழியமும் செய்யலாமே என்ற எண்ணத்தை எற்படுத்துவதே இந்நூலின் வெற்றி எனலாம்.

நன்றி: முதற்சங்கு, தீராநதி




0

Monday, December 26, 2011

பரிதிமாற் கலைஞர் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 26/12/2011


36. பைந்தமிழ் ஆர்வலர் பன்னரும் நூலாசிரியர் பரிதிமாற் கலைஞர் (1870-1903).

36.வடமொழிக் கலப்பில்லாத தனித்தமிழ் வளர்ச்சிக்கு ஆக்கம் அளித்த இப்பேரறிவாளர், நாடகத் தமிழின் செழுமைக்கு விளக்கம் வழங்க ‘நாடகவியல்’ என்றோர் உயர் நூலைப் படைத்தார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

Sunday, December 25, 2011


சோழவந்தான் அரசஞ் சண்முகனார் ~அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 25/12/2011


35. பயில்வித்த தமிழாசிரியர் பன்னிரு நூலாசிரியர் சோழவந்தான் அரசஞ் சண்முகனார் (1862-1915).

35. தமது இருபதாவது வயதிலேயே ‘சிதம்பர விநாயகர் மாலை’ என்றோர் அரிய நூலை இயற்றிய இப்பெரும்புலவர் ஆற்றிய இறவாத தமிழ்த் தொண்டால் தமிழர் நெஞ்சில் மறவாத நிலை பெற்றார். 

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0
 



Saturday, December 24, 2011

வள்ளல் பாண்டித்துரை ~அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 24/12/2011


34. சங்கம்கண்ட நாவலர் சங்கத்தமிழ்க் காவலர் வள்ளல் பாண்டித்துரைத் தேவர் (1867-1911).

34.‘பைந்தமிழ்க் காவலர்’ எனப் போற்றப் பெற்ற இப்பெருந்தகை, 1901-ஆம் ஆண்டில் மதுரையில் நான்காவது தமிச் சங்கம் உருவாக்கிக் கண்ணெனத் தமிழ் காத்துக் கவிஞராகவும் உரைஞராகவும் திகழ்ந்தார்.
 
தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்





Friday, December 23, 2011

பாவலர் தவத்திரு சங்கரதாசு ~அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 23/12/2011


33. நாடகத் தமிழ் நல்லாசிரியர் நற்றமிழ் இசைப் பாவலர் தவத்திரு சங்கரதாசு சுவாமிகள் (1867-1922).

33. இருபதாம் நூற்றாண்டில் சுவாமிகளின் பாடல்களை உரையாடல்களைப் பயன்படுத்தாத நாடக நடிகர் தமிழ் நாடக உலகில் இருந்ததில்லை. ‘தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்’ எனச் சுவாமிகள் போற்றப் பெற்றார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0
 



Thursday, December 22, 2011

படைப்பாளர் மு.சு.பூர்ணலிங்கம் ~

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 22/12/2011


32. போற்றும் தமிழ்த்தொண்டர் புகழ்மணக்கும் படைப்பாளர் மு.சு.பூர்ணலிங்கம் பிள்ளை (1866-1931).
32. ‘திருக்குறள் ஆராய்ச்சி’ என இப்பெருமகனார் ஆங்கில மொழியில் எழுதி வெளியிட்ட ஆய்வு நூல் மேன்மைக்குரியது. இப்பேரறிஞர் உருவாக்கியளித்த ஐம்பது நூல்களில் ஆங்கில நூல்கள் முப்பத்திரண்டு.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்

Wednesday, December 21, 2011


பாவலர் சென்னிகுளம் அண்ணாமலை 

 

~அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 21/12/2011


31. கன்னித்தமிழ்க் காவலர் காவடிச்சிந்துப் பாவலர் சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் (1865-1891).

31. குறவஞ்சியில் குற்றாலக் குறவஞ்சியும் கலம்பகத்தில் மதுரைக் கலம்பகமும், பள்ளில் முக்கூடற்பள்ளும் தமிழ் இலக்கியங்களில் புகழடைந்ததைப் போல சிந்து வகையில் இப்பெருந்தகையின் காவடிச்சிந்து புகழ் பெற்றது.
தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்




Tuesday, December 20, 2011


இசைத் தமிழ்ச் செல்வர் 

தி.இலக்குமணர்

~அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 20/12/2011


30. இசைஞானச் செம்மல் இசைத் தமிழ்ச் செல்வர் தி.இலக்குமணப் பிள்ளை (1864-1950).
30. இப்பெருமகனார் 1903-ஆம் ஆண்டில் வெளியிட்ட இசைத்தமிழ்ப் பாடல்களான ‘ஞானானந்தன் அடிமாலை’ தமிழிசைப் பேழையாக விளங்கி, பலர் விரும்பிப் பாடும் கீர்த்தனங்களாகத் திகழ்ந்தன.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்




Monday, December 19, 2011


செந்தமிழ் ஆர்வலர் செல்வக்கேசவராயர் ~ 

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 19/12/2011


29. சீரிய பதிப்பாசிரியர் செந்தமிழ் ஆர்வலர் செல்வக்கேசவராய முதலியார் (1864-1921).

29. புகழ்மிக்க தமிழாசிரியர் போற்றுதலுக்குரிய நூலாசிரியர் சிறப்புப் பெற்ற சொற்பொழிவாளர். பாராட்டத்தக்க பதிப்பாசிரியர் எனப் பன்முகச் சிறப்புடைய இப்பெருந்தகை தனித்தமிழ் ஆர்வலர் ஆவார்.
தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்

Saturday, December 17, 2011


ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை ~

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 17/12/2011


27. ஈழநாட்டு இதழாசிரியர் இனியதமிழ் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை (1860-1944).

27. புரட்சிப் பூவாக ஈழநாட்டில் மலர்ந்த ‘சுதேச நாட்டியம்’ என்னும் இதழுக்கு ஆசிரியராய்த் திகழ்ந்த இக் கவிஞர். தமிழின் உரைநடைச் செழுமைக்கும் உரமூட்டியவராவார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்


Friday, December 16, 2011


அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் 

~அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 16/12/2011


26. ஈடிலாச் செயலாற்றிய இசைத்தமிழச் சாகரம் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் (1859-1930).

26. இருபதாம் நூற்றாண்டின் உதய காலத்தில் வெளியிடப் பெற்ற “கருணாமிர்த சாகரம்” என்னும் திருநூல், இப்பேரறிஞர் தமிழ் மொழிக்கு வழங்கிய அருமைக்குரிய அபூர்வப் பெருஞ் சொத்து.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்

Thursday, December 15, 2011

வெள்ளக்கால் வெ.ப.சுப்பிரமணியனார் ~ 

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 15/12/2011



25. தமிழ்ச்செம்மல் தமிழாகரர் வெள்ளக்கால் வெ.ப.சுப்பிரமணிய முதலியார் (1857-1942).

25.இப்பேரறிவாளரின் ‘தமிழ்ப் புலமை எத்தகைய ஆழமும் அகலமும், உயரமும் கொண்டதென்பதை இப்பெருமகனார் உருவாக்கி அளித்துள்ள “அகலிகை வெண்பா” உணர்த்தி நிற்கிறது.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0
 

Wednesday, December 14, 2011


மாகறல் கார்த்திகேயனார் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 14/12/2011


மொழிநூல் அறிஞர் முத்தமிழ் உரைஞர் மாகறல் கார்த்திகேய முதலியார் (1857-1916).
24. மொழி நூல் படைத்த முதல்வராகக் கருதப் பெறும் இப்பெருமான் தமிழின் தொன்மை, நுண்மை, ஆகியவற்றை இரவு பகல் எந்நேரமும் எல்லையற்ற ஆர்வத்துடன் ஆராய்ந்த ஆய்வறிஞர்.
தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்

Saturday, December 03, 2011


அறிஞர் சொக்கலிங்கஐயா

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 03/12/2011


23. சித்தாந்த வித்தகர் செந்தமிழ்ச் செல்வர் அறிஞர் சொக்கலிங்கஐயா (1856-1931).

23. தமிழ் மணக்கும் சிவம் பெருக்கும் நூற்றெட்டு நூல்களை உருவாக்கி அருளியுள்ள இப்பெரியாரின் தமிழ்ப் பணியால் செட்டி நாட்டுப் பகுதியில் வீடெங்கும் தமிழ் கமழ, விளங்கும் திருக்கோயில்களில் சிவம் ஒளிரத் தொடங்கியது.
தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
 


Friday, December 02, 2011


புலவர் சிந்நயச் செட்டியார் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 02/12/2011


22. சிவம் பெருக்கிச் செந்தமிழ் வளர்த்த புலவர் சிந்நயச் செட்டியார் (1855-1900).

 இப்பெரும் புலவரின் தமிழாற்றலை அறிந்த அறிஞர் பாண்டித்துரைத் தேவர். இப்பேரறிவாளரைத் தேடி வந்து, உரையாடி உவகை கொள்வார். இப்பெருமானிடம் கொண்ட தொடர்பை, தமிழுறவாகவே கருதினார் தேவர்.
தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்





Thursday, December 01, 2011


அறிஞர் பெ.சுந்தரம்பிள்ளை ~ 

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 01/12/2011


21. நாடக நூல் வழங்கிய நல்லாசிரியப் பெருந்தகை அறிஞர் பெ.சுந்தரம்பிள்ளை (1855-1897).

21. பல்கலைப் பன்மொழிப் புலமை பெற்று, பல்வேறு சிறந்த நூல்களைத் தமிழ்ச் செல்வங்களாக வழங்கியிருப்பினும் இப்பெருந்தகை உவந்தளித்த ‘மனோன்மணீயம்’ உயர் தமிழ்ச் சொத்தாகக் கருதப்பெறுகிறது.
தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்

Wednesday, November 30, 2011


கற்றறிந்தார் போற்றும் வீ.கனகசபை பிள்ளை ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 30/11/2011


கற்றுணரும் நூல் படைத்த கற்றறிந்தார் போற்றும் வீ.கனகசபை பிள்ளை (1855-1906).

மாணவப் பருவத்திலேயே எழுத்தாற்றல் கொண்டிருந்த இப்பெருமகனார். “தமிழ் தமிழர்” என்னும் கருப்பொருள் கொண்டு, ஆங்கிலப் பத்திரிகைகளிலும், தமிழ் இதழ்களிலும் வாழ்நாள் முழுதும் தொடர்ந்து எழுதி வந்தார்.
தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

Tuesday, November 29, 2011


தமிழ்த்தாத்தா பேராசான் உ.வே.சா 

 அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 29/11/2011


புண்ணியத் தமிழாசுரர் தன்னிகரற்ற தமிழ்த்தாத்தா பேராசான் உ.வே.சா (1855-1906).

தமிழ் மக்களுக்குப் பெருமிதமும், தமிழ் மொழிக்குப் பெரும் புகழும் ஈட்டித் தந்த இப்பெருமான், ஏட்டுச் சுவடிகளில் இருந்த ஈடிணையற்ற தமிழ்ச் செல்வங்களைப் பீடுறப் பதிப்பித்தருளிய பெரும் பணி என்றென்றும் நினைக்கத்தக்கது.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

Friday, November 25, 2011


அறிஞர் நரசிம்மலு நாயுடு ~ அறிவோம் அறிஞர்களை!

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 25/11/2011


18. வரலாறு தந்த முதல்வர் வளர்தமிழ்த் தொண்டர் அறிஞர் நரசிம்மலு நாயுடு (1854-1922).

“தட்சிண இந்திய சரித்திரம்’ எனத் தாம் உருவாக்கிய மிகச் சிறந்த வரலாற்று நூலில் தென்னிந்திய வரலாற்றை விருப்பு, வெறுப்பின்றி எழுதிய இப்பெரியார். தொண்ணூற்று நான்கு தமிழ் நூல்களின் ஆசிரியராவார்.
0

Thursday, November 24, 2011


பூவை கலியாணசுந்தர முதலியார் ~ அறிவோம் அறிஞர்களை!

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 24/11/2011


17. சித்தாந்த சரபம் செந்தமிழ்த் தீபம் பூவை கலியாணசுந்தர முதலியார் (1854-1918).

“வாரும் ஞானப் பிள்ளாய்!” என வடலூர் வள்ளற் பெருமானால் அழைக்கப்பெற்ற இப்பெரும் புலவர் “கலியாண சுந்தர என் கண்மணியே!” என்று மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையால் போற்றப் பெற்றவர்.
0



மங்காத் தமிழ் வளர்க்கும்

மறைமலை இலக்குவனார்

மீண்டும் கவிக்கொண்டல்
பதிவு செய்த நாள் : 24/11/2011





0

Wednesday, November 23, 2011

தவச்சீலர் பாம்பன் சுவாமிகள் 

அறிவோம் அறிஞர்களை!

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 23/11/2011


16. தமிழ்த் தெய்வக் குகமணி தகைமையுறு அருள் நிதி தச்சீலர் பாம்பன் சுவாமிகள் (1851-1929).

முருகப் பெருமான் மீது ‘பரிபூசன பஞ்சாமிர்த வண்ணம்’ பாடி நிறைவு செய்தபோது சுவாமிகளின் அமிழ்தத் தமிழில் சொக்கிப்போய், முருகன் நேராகக் காட்சி தந்து சுவாமிகளை ஆட்கொண்டதாகச் சொல்லப்படுகிறது.
 




Monday, November 21, 2011


தண்டபாணி சுவாமிகள்

 அறிவோம் அறிஞர்களை!

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 21/11/2011



14. புண்ணிய அருட்கவி வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் (1839-1899)
.
இறைவனைப் போற்றுதல், தமிழைப் பேணிக் காத்தல், மனத்தை நெறிப்படுத்தல், இயற்கையில் எழிலுரைத்தல், புதுமைகள் படைத்தல் ஆகிய ஐவகை நோக்கங்களுக்காகப் பல்லாயிரம் பாடல்கள் படைத்த அருளாளர்
0









முகவை பொன்னுச்சாமித் தேவர்

 அறிவோம் அறிஞர்களை!

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 21/11/2011


13. நித்தம் தமிழ் வளர்த்த முத்தமிழ்க் காவலர்
முகவை பொன்னுச்சாமித் தேவர் (1837-1870).


தம்மைப் போலவே தமிழ்ப்பற்றுக் கொண்டு மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் உருவாக்கிய பாண்டித்துரைத் தேவரைத் தம் புதல்வராகப் பெற்று மகிழ்ந்த பெருந் தமிழ்த் தொண்டர்.
0



Sunday, November 20, 2011


மாம்பழக் கவிச்சிங்கநாவலர் 

அறிவோம் அறிஞர்களை!

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 20/11/2011



12. செந்தமிழ்க் கவிவாணர் சேதுபதிப் பாவலர் மாம்பழக் கவிச்சிங்கநாவலர் (1836-1864).

கண்ணொளி இழந்தும், கல்வி பெற்றுக் ‘கவிச்சிங்க நாவலர்’ எனப் போற்றப் பெற்ற இப்பெருந்தகை, சேதுபதியின் அரசவையில் அரசரை மகிழ்விக்க அவ்வப்போது பாடிய பாடல்கள் பன்னூறாகும்.
0

செம்மல் சி.வை.தாமோதரம் 

அறிவோம் அறிஞர்களை!

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 19/11/2011



11. பைந்தமிழப் பதிப்பாளர் செந்தமிழ்ச் செம்மல் சி.வை.தாமோதரம் பிள்ளை (1832-1901).

பதிப்புத் துறையின் ‘முன்னோடி’ எனப் பாராட்டப் பெற்ற இப்பேரறிஞர் அரிய தமிழ்ச் செல்வங்களை எவரும் அறிந்திராத காலத்தில் தேடிப் பிடித்துத் திறமுடன் பதிப்பித்து,பெரும் புகழ் கைக் கொண்டார்.
0

Friday, November 18, 2011


அறிஞர் கிருட்டிண பிள்ளை ~ அறிவோம் அறிஞர்களை!

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 18/11/2011


10. காப்பியப் புலவர் கம்பரெனப் புகழுடையார் அறிஞர் கிருட்டிண பிள்ளை. (1827-1900).

“இரட்சணிய யாத்திரிகம்” என்னும் இப்பெருந்தகை வழங்கிய பெரு நூலைச் சுவைத்துத் திறம் உணர்ந்த அறிஞர் உலகம் ‘கிறித்தவக் கம்பர்’ என இப்பெருமகனாரைப் பாராட்டிப் போற்றியது.
0

Thursday, November 17, 2011


மாயூரம் வேதநாயகர் ~ அறிவோம் அறிஞர்களை!

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 17/11/2011



9. நெடுங்கதை மூலவர் நீதித்துறை முதல்வர் மாயவரம் வேதநாயகர் (1826-1889).

‘மாயூரம் முன்சீப்’ என்னும் மகத்தான புகழுடன் திகழ்ந்த இப்பேரறிவாளர், தமிழின் முதல் புதினம் ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ வழங்கி, தமிழ் மொழிக்குப் புதிய நலமருளிய புத்திலக்கியச் செம்மல்.
0



 

வான்புகழாளர்கள்

  1.பெரும்போராளி 

பேராசிரியர் சி.இலக்குவனார்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 17/11/2011



(தமிழ் வளர்த்து நினைவில் வாழும் புகழ்வாணர்கள் பற்றிய தொடர் இத்தலைப்பில் வெளிவரும். அருந்தொண்டாற்றி வரும் தமிழறிஞர்கள் பற்றிய தொடர் வண்டமிழ் வலவர்கள் என்னும் தலைப்பில் வரும். அறிஞர்கள் பற்றித் தெரிவிக்க விழையும் குறிப்புகள் இருப்பின் நட்பு இணைய இதழுக்கு அனுப்ப வேண்டுகின்றோம். – ஆசிரியர்)
1. பெரும்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்
வையம் உள்ளளவும் வாழும் வளர்தமிழுக்கு வாழ்வு தந்த வான்புகழாளர்கள் எண்ணற்றோர் உள்ளனர். கடந்த நூற்றாண்டில் தங்கள் எழுத்தால் தமிழை நிலைக்கச் செய்த சான்றோர்கள் மிகுதியாக உள்ளனர். எண்ணம், சொல், எழுத்தால் மட்டுமன்றித் தம்முடைய செயல்பாட்டால் தமிழுக்குக் கேடயமாக விளங்கிய பெரும் போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் எனல் பொருந்தும். உலகில் நாட்டு நலனுக்காக, மக்கள் நலனுக்காக எனப் போராடிச் சிறை சென்ற செம்மல்கள் பலர் உள்ளனர். ஆனால், மொழிக்காகச் சிறைவாழ்வை ஏற்ற ஒரே கல்வியாளராகப் பேராசிரியர் திகழ்கிறார். அயல் மொழிகளால் தமிழுக்கு ஏற்படும் சிதைவுகளை எழுத்தாலும் உரையாலும் களைந்த அறிஞர்களிடையே களம் பல கண்டு தமிழியக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய ஆன்றோர் பேராசிரியர் இலக்குவனார் அவர்கள்.
பள்ளிஇறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்ற பேராசிரியர் சுற்றத்தார் தெரிவித்தவாறு கலைஅறிவியல் கல்லூரியில் சேர்ந்திருக்கலாம். அல்லது பணியில் சேர்ந்திருக்கலாம். ஆனால், தம்முடைய தமிழாசிரியர் உயர்மிகு பொன்னண்ணாக்களத்தில்வென்றார் ஆற்றுப்படுத்தியவாறு புலவர் பட்டம் பெற விரும்பித் திருவையாற்றிலுள்ள அரசர் கல்லூரியில் சேர்ந்தார். அவ்வாறு அவர் வேறு வகையாக முடிவெடுத்திருப்பின் பல உயர்நிலைகளை அடைந்திருக்கலாம். ஆனால், தமிழ் உயர்நிலையடைய தமிழ்த்தாய் அவரைப் புலவர் மாணாக்கராக அழைத்துக் கொண்டாள். புலவர் படிப்பில் பேராசிரியர் காட்டிய ஆர்வமும் ஆழ்ந்த கல்வியும் அவரை மெருகேற்றியதுடன் தமிழன்னையின் மீது சிலர் பூசிவரும் கறைகளையும் போக்க உதவியது. கல்லூரி நூலகத்தில் உள்ள மொழியியல் தொடர்பான ஆங்கில நூல்கள் அனைத்தையும் படித்ததால், அந்த நூற்றாண்டில் மேனாட்டு அறிஞர்கள் கூறிய கருத்துகளை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்ப்புலவர்கள் தெரிவித்திருந்த சிறப்பை உணர்ந்தார். எனவே, அவற்றைப் புலப்படுத்த உறுதி கொண்டு பணியாற்றினார்.
தொல்காப்பியம் கற்றறிந்தவர்களிடையேயே அறிமுகமாகா அக்காலத்திலேயே தொல்காப்பியச் சிறப்புகளைப் பிறருக்கு உணர்த்தினார். தொல்காப்பிய உரை விளக்கங்கள் அளித்தார். தமிழ்நாட்டு வரலாற்றினை எழுத விரும்புவோர் தொல்காப்பியத்தைக் கற்றிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தித் தொல்காப்பியச் சிறப்புகளை உரை வாயிலாகவும் கட்டுரைகள் வாயிலாகவும் பரப்பினார். தொல்காப்பியத்தின் காலம் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுப் பின்னர் மேல்வரம்பு கி.மு.10 ஆம் நூற்றாண்டு எனவும் கீழ் வரம்பு கி.மு.7 ஆம் நூற்றாண்டு எனவும் வரையறுத்தார்.
அயல்நாட்டினர் அருந்தமிழ்ச் சிறப்பை உணர வேண்டும் என்பதற்காக ஆங்கில நூல்களையும் எழுதினார். தமிழின் தோற்றமும் வளர்ச்சியும் (Origin and Growth of Tamil) என்னும் நூல் மூலம் இயற்கை மொழியாய்த் தமிழ் தோன்றி வளர்ந்த வரலாற்றையும் அதன் செம்மொழிச் சிறப்பையும் விளக்கினார்.
சிறப்பு மிக்க தமிழ் இலக்கணத்தை எளிதில் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தமிழ் இலக்கண ஆக்கம் (The Making of Tamil Grammar) என்னும் நூலை வெளியிட்டார்.
தமிழ்ச்சொற்களின் சிறப்பையும் தொன்மையையும் புரிந்து கொள்ளும் வகையில் ‘தமிழ்ச்சொற்கள் பற்றிய ஆய்வுச் சுருக்கம்-இலக்கணப் புலவர்களின் காலமுறைமை’ (A Brief Study of Tamil Words-The Chronology of Tamil Grammarians) என்னும் ஆய்வேட்டை வெளியிட்டார். இவ்வாய்வேட்டின் மூலம், ஆரியச் சொற்கள் எனத் தவறாகக் கருதப்பட்டுவந்த சொற்கள் பலவற்றின் தமிழ் மூலத்தையும் தமிழ்ச் சொற்களின் மூலத்தைக் கொண்ட ஆரியச் சொற்களையும் உணர்த்தித் தமிழ்ச் சொல் வளத்தை வெளிப்படுத்தினார்.
19, 20ஆம் நூற்றாண்டு மேனாட்டு மொழியியலறிஞர்கள் கருத்துகளோடு ஒப்பிட்டுத் தமிழின் மொழியியல் சிறப்பை விளக்கும் வகையில் மொழியியல் நூல்களையும் வெளியிட்டார். தமிழ்மொழியின் முதல்நிலைச்சொற்களும் இடைநிலைச் சொற்களும் (Semantemes and Morphemes in Tamil Language), ஒலியனியல் (Phonetics), சொல்லியல் (Semantics), முதலான நூல்களை வெளியிட்டார். பின் இவற்றைத் தொகுத்தும் பகுத்தும் தமிழ் மொழி (Tamil Language)என்னும் நூலை வெளியிட்டார். இவற்றின் மூலம் தமிழின் தனித்தன்மையைப் பேராசிரியர் நன்கு எளிமையாயும் செறிவாயும் விளக்கியுள்ளார். ஓரளவு ஆங்கில அறிவு உடையவர்கள்கூடப் பெரிதும் பயனுறும் வகையில் இந்நூல்கள்அமைந்துள்ளன என அறிஞர்களால் பெரிதும் இவை போற்றப்பட்டன.
பேராசிரியரின் நூல்களுள் மகுடமாக அமைந்தது, அவரது தொல்காப்பிய ஆங்கில மொழி பெயர்ப்பும் ஆராய்ச்சி உரையும் (Tholkappiyam in English with Critical Studies) ஆகும். தமிழகத்தின் பண்பாட்டு வாயிலான தொல்காப்பியத்தை இன்றைக்கும் பன்னாட்டினரும் புரிந்து கொள்ளவும் அறிந்து கொள்ளவும் வாய்ப்பாக அமைந்துள்ள சிறப்பு மிக்க நூல் இதுவே ஆகும்.
இவ்வாறாக அன்னைத் தமிழின் சிறப்பை அனைத்து நாட்டினரும் தெரிந்து கொள்ளவும் உணர்ந்து கொள்ளவும் ஆங்கிலத்தில் சிறப்பான நூல்களை அளித்த மேதை இலக்குவனார் அவர்கள் தமிழ் மக்களுக்காகத் தமிழிலும் பல நூல்களைப்படைத்து அளித்துள்ளார்.
புலவர் மாணாக்கராக இருந்த பொழுதே சிறந்த படைப்பாளராகப் பேராசிரியர் திகழ்ந்துள்ளார். ‘எழிலரசி அல்லது காதலின் வெற்றி‘ என்னும் அவருடைய தனித்தமிழ்க் கதைப்பாவியம் அக்காலச் சீர்திருத்தப்படைப்புகளிலும் தனித்தமிழ்ப்படைப்புகளிலும் மொழிபெயர்ப்புப் படைப்புகளிலும் முதலிடத்தைப் பெற்றதென ஆராய்ச்சியாளர்களால் போற்றப்படுகிறது.
பேராசிரியரின் வாழ்க்கையின் ஒரு பகுதியை – கல்லூரிப்பணியினின்று நீக்கப்பட்ட அவலத்தை – மரபு நடையிலும் புதுக்கவிதைப் போக்கிலும் எழுதிய ‘துரத்தப்பட்டேன்’ என்னும் பாவியம் அக்காலத்தில் அனைத்துத் தரப்பினரின் மிகப்பெரிய வரவேற்பைப்பெற்றது. ‘என் வாழ்க்கைப்போர் (இளமைப்பருவம்)’ என்னும் தன்வரலாற்று நூல் பேராசிரியரின் தமிழ்ப்போர்க்களத்தைக் காட்சிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
சங்க இலக்கியத்தை மக்கள் இலக்கியமாக மாற்றிய பேராசிரியரின் ‘‘அம்மூவனார், மாமூலனார் காதல் காட்சிகள்(சங்க இலக்கியச் சொல்லோவியங்கள்), இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல்’’ ஆகியன சங்க இலக்கியச் சிறப்புகளை ஆழமாகவும் எளிமையாகவும் மக்களிடையே உணர்த்தின; பழந்தமிழர் உயர்வைப் பாரறியச் செய்து வருகின்றன.
குறட்பணியை வாழ்நாள் பணியாகக் கொண்டிருந்த பேராசிரியரின் ‘‘அமைச்சர்யார்?, எல்லோரும் இந்நாட்டுமன்னர், திருக்குறள் எளிய பொழிப்புரை, வள்ளுவர் வகுத்த அரசியல், வள்ளுவர் கண்ட இல்லறம்’’ முதலானவை பல்வேறு கண்ணோட்டங்கள் வாயிலாக வள்ளுவத்தை மக்களிடையே பரப்புவதில் வெற்றி கண்டன. பின் மூன்று நூல்கள் இன்றைக்கும் திருக்குறளை வழிகாட்டியாகக் கொள்வதற்கு வரவேற்பைப் பெற்று வருகின்றன.
‘‘தொல்காப்பிய ஆராய்ச்சி, பழந்தமிழ்,’’ ஆகிய நூல்கள் பழந்தமிழ் வளத்தையும் நலத்தையும் நன்கு அறிய உதவுகின்றன.
‘தமிழ் கற்பிக்கும் முறை’ தமிழைப் பிழையின்றியும் எளிமையாகவும் அயல் மொழியினரும் கற்கும் வகையிலும் தமிழ் கற்பிக்க தக்க வழிகாட்டிநூலாக அமைந்தது.
கருமவீரர் காமராசர் பற்றி அறியவும், அரசு தமிழுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை அறிவுறுத்தவும் அமைந்த நூலே பேராசிரியரின் ‘கருமவீரர் காமராசர்’ என்னும் நூலாகும்.
தமிழிசைப்பாடல்கள், ‘மாணவர் ஆற்றுப்படை’, வாழ்த்துப்பாக்கள், நினைவுப் பாக்கள் முதலான பல வகையிலும் அமைந்த பாடல்கள் ஆகியன பேராசிரியரின் பாடற்புலமைக்குத் தக்க சான்றுகளாகும்.
இதழ்களிலும் மலர்களிலும் வெளிவந்துள்ள பேராசிரியரின் கட்டுரைகளும் தமிழையே மூச்சாகக் கொண்ட அவரின் சீர்மையையும் நுண்மையையும் விளக்குவனவாக அமைந்துள்ளன.
படிப்போரை மட்டும் பாங்குற வழிநடத்தும் படைப்புப் பணியுடன் பேராசிரியர் நின்று விடவில்லை. ‘‘சங்க இலக்கியம், இலக்கியம், குறள்நெறி, திராவிடக் கூட்டரசு, Dravidian Federation, Kuralneri’’ முதலான பல இதழ்கள் நடத்தியும் பொதுமக்களிடம் தமிழ்ச்சிறப்பையும் தமிழுக்கு நேர்ந்து வரம் தீங்குகளையும் அவற்றைக் களைய வேண்டிய கடமைகளையும் விளக்கினார். அவரது மக்கட் பணியே ‘தமிழர் தளபதி’ எனத் தந்தை பெரியாரால் அவரைப் போற்றச் செய்தது.
தாம் பணியாற்றிய நகர்கள் யாவிலும் தமிழ் அமைப்புகள் நிறுவி இலவசத் தமிழ் வகுப்புகள் நடத்திப் பொதுமக்களிடம் தமிழ்க்கல்வி மீதான ஈடுபாட்டை உருவாக்கினார். தமிழ் வழிக்கல்விக்காகவும் அன்னைத் தமிழே அனைத்திலும் முதன்மை பெற வேண்டும் என்பதற்காகவும் முழக்க ஊர்வலங்கள் நடத்தியும் தமிழ்மறுமலர்ச்சி விழாக்களையும் புலவர்களைப் போற்றும் விழாக்களையும் நடத்தியும் தமிழ்க்காப்பினை மக்கள் இயக்கமாக மாற்றினார். பேராசிரியர் நிறுவித் தலைமை தாங்கிய தமிழ்க்காப்புக்கழகத்தின் செயற்பாடுகள் இந்தித்திணிப்பை எதிர்ப்பதில் மாணவர்களையும் இளைஞர்களையும் பொதுமக்களையும் ஈடுபடச் செய்தன. தமிழ் உரிமைப் பெருநடைப்பயணத்தால் பேராசிரியர் தளையிடப்பட்டுப் பதவியை இழந்தாலும் சிறை மீண்டபின்பும் வாழ்நாள் இறுதிவரையும் தமிழ்ப்பணியையே தொடர்ந்தார்.
கல்விப்பணியுடன் தமிழ்நலப்பணிகளையும் ஆற்றிய ஒரே பேராசிரியராக முத்தமிழ்ப் போர்வாள் முதுபெரும் புலவர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் திகழ்ந்ததால்தான் வான்புகழ் கொண்டு வையகமெங்கும் சிறப்பிக்கப்படுகிறார்.
பேராசிரியர் இலக்குவனார் கார்த்திகை முதல்நாள்(தி.பி.1940) நவம்பர் 17 ஆம் நாள்(கி.பி.1909) பிறந்தார். இவ்வாண்டும்(தி.பி.2042,கி.பி.2011) இரு நாள்களும் இணைந்து வந்துள்ளன. இந்நாளில் பேராசியரின் தமிழ் பரப்பிய தகைமையையும் போர்ப்பண்பையும் நாமும் கொண்டு தமிழ் சிறக்கவும் தமிழர் தன்னுரிமையுடன் திகழவும் உலகத் தமிழர் உயரவும் பாடுபட உறுதி கொள்வோம்.

Wednesday, November 16, 2011


பூவாளூர் தியாராசச் செட்டியார் ~

அறிவோம் அறிஞர்களை!

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 16/11/2011



8. புலமைக்கோர் இமயம் புகழுக்கொரு கங்கை பூவாளூர் தியாராசச் செட்டியார் (1826-1888).

மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மனத்திற்கினிய மாணவராய்த் திகழ்ந்த இப்பெருமகனார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழைப் பேணிக் காத்த பெரியார்களுள் என்றும் நினைத்தக்கத்தவர்.

 

Tuesday, November 15, 2011


அருளாளர் இராமலிங்கர் ~ அறிவோம் அறிஞர்களை!

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 15/11/2011



7. திருவருட் செல்வர் தெய்வத்தமிழ் வள்ளலார் அருளாளர் இராமலிங்கர் (1823-1874).

உருக்கமும், பக்திப் பெருக்கமும் மிளிர, உள்ளத்தைக் கனிவிக்கும் தித்திப்புத் தமிழில்… இப்பெருமான் உருவாக்கி அருளிய பாடல்கள் பக்தியுணர்வை மட்டுமின்றி பைந்தமிழுணர்வையும் செழிக்கச் செய்தன.
0

Monday, November 14, 2011


ஆறுமுக நாவலர் 

அறிவோம் அறிஞர்களை!

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 14/11/2011



6. சிவநெறிச் செல்வர் 
   செழுந்தமிழ்ப் புலவர் அறிஞர் ஆறுமுக நாவலர் (1822).


தமிழில் என்ன இருக்கிறது?’ எனக் கேட்டு அறியாமையில் ஆழ்ந்து கிடந்த தமிழரை, நாவலர் பெருமானின் சொல்லாற்றல், எழுச்சி பெறச்செய்தது எங்கள் தமிழ்! எங்கள் தமிழ் எனப் பெருமிதம கொள்ள வைத்தது.

»

Sunday, November 13, 2011


அறிஞர். சி.யு.போப் ~ அறிவோம் அறிஞர்களை!

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 13/11/2011


5. சீரியதமிழ்க் காதலர் செந்தமிழ்ச் செம்மல் 
முனைவர். சி.யு.போப் (1820-1908).

அற நூல்களான திருக்குறளை நாலடியாரை, சமய நூலான திருவாசகத்தை ஐரோப்பியர் கற்றுணர வேண்டுமென்னும் தாகத்தால் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தருளிய பேரறிவாளர்.










Saturday, November 12, 2011

மகாவித்துவான் 

மீனாட்சிசுந்தரம் பிள்ளை ~ 

அறிவோம் அறிஞர்களை!

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 12/11/2011


4. கருவிலே தமிழுடையார் கவிப்பெருங்கடல் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை (1815-1876)

“தமிழ் இலக்கிய வரலாற்றில் கம்பருக்குப் பின்னர், ஓராயிரம் ஆண்டு ஓய்ந்து கிடந்த பின், வாராது வந்துதித்த, புலமைக் கதிரவன்” எனத் தமிழறிஞர்கள் போற்றிய தெய்வப் புலமை பெற்ற தென்மொழிப் பெரும் புலவர்.


Friday, November 11, 2011


முனைவர் இராபர்ட் கால்டுவெல் ~ 

அறிவோம் அறிஞர்களை!

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 11/11/2011


3. ஆற்றல்மிகு மொழிவல்லார் அயர்லாந்துத் தமிழறிஞர்
 
முனைவர் இராபர்ட் கால்டுவெல் (1814-1891). 

பெயர்களை ‘உயர்திணை’ என்றும், ‘அஃறிணை’ என்றும் தமிழ் இலக்கண நூலோர் வகுத்த முறை. உலகத்தில் வேறெந்த மொழியிலும் இல்லாத பகுப்பு. இது தமிழின் தனிச் சிறப்பு என்றார் இப்பேரறிஞர்.