Saturday, January 20, 2024

உ.வே.சா.வின் என் சரித்திரம் 71 : சரசுவதி பூசையும் தீபாவளியும்

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 70 : சிலேடையும் யமகமும் – தொடர்ச்சி)

என் சரித்திரம்
அத்தியாயம்-43

சரசுவதி பூசையும் தீபாவளியும்

நான் பிள்ளையவர்களிடம் வந்து சேர்ந்து சில மாதங்களே ஆயின.
சித்திரை மாதம் வந்தேன் (1871 ஏப்பிரல்); புரட்டாசி மாதம் பட்டீச்சுரத்தில்
இருந்தோம். இந்த ஆறு மாதங்களில் நான் எவ்வளவோ விசயங்களைத்
தெரிந்து கொண்டேன். தமிழ் இலக்கியச் சம்பந்தமான விசயங்களோடு
உலகத்திலுள்ள பல வேறு வகைப் பட்ட மனிதர்களின் இயல்புகளையும்
உணர்ந்தேன். செல்வத்தாலும் கல்வியாலும் தவத்தாலும் நிரம்பியவர்களைப்
பார்த்தேன். அவர்களுள் அடக்கம் மிக்கவர்களையும், கருவத்தால் தலை
நிமிர்ந்தவர்களையும் கண்டேன். உள்ளன்புடையவர்களையும், புறத்தில்
மாத்திரம் அன்புடையவர்கள் போல நடிப்பவர்களையும் காண நேர்ந்தது.
வறுமை நிலையிலும் உபகாரம் செய்வதை மறவாத பெரியோர்கள் பழக்கமும்
ஏற்பட்டது. அடிக்கடி இன்ப நிகழ்ச்சிகளுக்கிடையே துன்பங்களும் விரவி
வந்தன. பட்டீச்சுரத்தில் திருமலைராயனாற்றிலிருந்து ஒரு வாய்க்கால் பிரிகிறது.
நான் அவ்விடத்தில் ஒருநாள் குளிக்கும் பொழுது சுழலில் அகப்பட்டுக்
கொண்டேன். இரண்டு பேர்கள் என்னை எடுத்துக் கரையேற்றினார்கள்.

இவ்வாறு இருந்த எனக்கு உறவினர்களைக் காணவேண்டுமென்ற
ஆசை உண்டாயிற்று. என் தாய் தந்தையர் அப்போது சூரியமூலையில் இருந்தார்கள். பட்டீச்சுரத்திற்குச் சமீபத்தில் உத்தமதானபுரம் இருக்கிறது. அதனால் ஒரு முறை அங்கே சென்று அங்கிருந்த சிறிய தந்தையாரையும் சிறிய தாயாரையும் பார்த்து வரவேண்டுமென்ற ஆசை இருந்தது. புரட்டாசி மாதமாதலால் நவராத்திரி ஆரம்பமாயிற்று. என் ஆசிரியரிடம் விடை பெற்று சரசுவதி பூசைக்கு உத்தமதானபுரம் சென்றேன். செல்லும்போது ஆசிரியர், “போய் நான்கு நாள் இருந்துவிட்டு வாரும்” என்று
கூறினார். பட்டீச்சுரத்தில் நிகழ்ந்த துன்பங்களைச் சில தினங்களேனும் நான்
மறந்திருக்கலாமென்பது அவர் எண்ணம் போலும்.

விசயதசமி

சரசுவதி பூசைக்கு உத்தமதானபுரத்தில் இருந்தேன்; ஊருக்குச்
செல்லும்போது அங்கே சில நாட்கள் தங்கலாமென்று தான் எண்ணினேன்.
சரசுவதி பூசை செய்துவிட்டு மறுநாட்காலையில் புனப் பூசையும் செய்தேன்.
விசயதசமியாகிய அன்று மாணாக்கர்களுக்கு விசேடமான தினம் அன்றோ?
தங்கள் தங்கள் ஆசிரியர்களிடம் புதிய பாடத்தை அன்று தொடங்குவது நம்
நாட்டு வழக்கம். பிள்ளையவர்கள் கையால் அன்று ஒரு நூல் பெற்றுக் கொள்ள
வேண்டுமென்ற விருப்பம் எனக்கு உண்டாயிற்று. “இவ்வளவு நாட்கள்
அவர்களோடு இருந்தோம். என்றைக்கு அவர்களோடு இருந்து பாடம் கேட்க
வேண்டுமோ அன்றைத் தினத்தில் அவர்களைப் பிரிந்து இருப்பது நியாயம்
அன்று. எப்படியாவது இன்று போய் அவர்களைப் பார்க்கவேண்டும்” என்று
உறுதி செய்து கொண்டேன்.

என் சிறிய தந்தையார் சில தினம் இருந்துவிட்டுப் போகும்படி என்னை
வற்புறுத்தினார். அவரும் சிறிய தாயாரும் என்னிடம் அளவற்ற அன்பு
பூண்டவர்கள். என்னைக் கடிந்து கோபிக்கும் இயல்பை அவர்களிடம் நான்
கண்டதே இல்லை. “சாமா, உன்னைப் பார்த்து ஆறு மாதங்கள் ஆயின. நான்
மாயூரம் வரலாம் வரலாமென்று இருந்தேன். இங்கே வேலை அதிகமாக
இருக்கிறது. அதனால் வரமுடியவில்லை. நீ வந்தாயே என்று எவ்வளவோ
சந்தோசம் அடைந்தேன். உடனே போக வேண்டுமென்று சொல்லுகிறாயே!
நான்கு நாள் பாடம் கேளாவிட்டால் என்ன நட்டம் வந்துவிடப் போகிறது?”
என்று அவர் சொன்னார். அவ்வூரில் அவர் கிராம முன்சீபாக இருந்தார்.
அவருக்குப் பல வேலைத் தொல்லைகள் உண்டென்பதை நான் அறிவேன்.
என் சிறிய தாயாரும் இருந்து போகும்படி வற்புறுத்தினார். “இங்கே இருப்பதில் எனக்கு ஆட்சேபம் ஒன்றும் இல்லை. விசயதசமியாகிய இன்றைக்குப் பிள்ளையவர்கள் கையால் ஏதாவது புத்தகம் வாங்கிக் கொண்டால் நல்லதென்று தோற்றுகிறது. நான் மறுபடியும் வருகிறேன்” என்று விடை பெற்று, பிற்பகலில் பட்டீச்சுரத்தை நோக்கிப் புறப்பட்டேன். பட்டீச்சுரத்திற்கு மாலை நான்கு மணியளவுக்கு வந்து சேர்ந்தேன். என்னைக் கண்டவுடன்,. “ஏன் அதற்குள் வந்து விட்டீர்?” என்று ஆசிரியர் கேட்டனர்.

“இன்று விசயதசமி; ஐயாவிடம் ஏதாவது ஒரு புத்தகம் பெற்றுக்
கொள்ள வேண்டுமென்று எண்ணி வந்தேன்” என்றேன்.

‘கலி தீர்ந்தது’

உடனே ஆசிரியர் அங்கு வந்த ஒருவரிடம், அந்த வீட்டிலே பூசையில்
வைத்திருந்த ஏட்டுச் சுவடிகளில் ஒன்றை எடுத்து வரும்படிச் சொன்னார்
. அவர்
அங்ஙனமே ஒன்றை எடுத்து வந்து பிள்ளையவர்களிடம் கொடுத்தார். அதை
அவர் என்னிடம் அளித்தார். நான் அதை மிக்க ஆவலோடு பெற்றுக்
கொண்டேன். “என்ன நூலென்று பிரித்துப் பாரும்” என்று அவர் கூறவே,
நான் பார்த்தேன். அது நைடதமாக இருந்தது. “நைடதம் படித்தால் கலிபீடை
நீங்குமென்று பெரியோர்கள் சொல்லுவார்கள்
. உமக்குக் கலி இன்றோடு நீங்கி
விட்டது. இனிமேல் கவலைப்பட வேண்டா” என்று ஆசிரியர் கூறிய பொழுது
எனக்கு மயிர்க் கூச்செறிந்தது. நான் பலவிதமான துன்பங்களுக்கு உள்ளானதை
அறிந்த அவர் என் மனத்தில் அவற்றால் துன்பம் உண்டாகியிருக்கும்
என்பதை உணர்ந்திருந்தார். அதனால்தான் அன்று அவ்வாறு எனக்கு ஆறுதல்
கூறினார். உண்மை அன்புடையார் சொல்லும் வார்த்தைகளுக்குப் பயன்
இல்லாமற் போகுமா
?

“மாயூரத்தில் ஐயாவிடம் முதலிற் பெற்றுக் கொண்டது நைடதந்தான்.
அப்பொழுதே இந்த மாதிரி எண்ணினேன்” என்று நான் சொன்னேன். பிறகு
நைடதத்திலிருந்து சில செய்யுட்களை ஆசிரியர் முன்னிலையில் படித்தேன்.
அதனால் எனக்கு உண்டான நிறைவு மிக அதிகம். அதுவரையில் ஒவ்வொரு
வருடமும் விசயதசமி வந்து போய்க்கொண்டுதான் இருந்தது. ஆனால் அந்த
வருடத்து விசயதசமியில் நான் என் ஆசிரியர் கைப்பட ஒரு புத்தகம்
பெற்றுப் படித்த பாக்கியம் கிடைத்தது. அதனால் அதற்கு ஒரு தனி விசேடம்
இருந்தது. உச்சிட்ட கணபதி தரிசனம்

சவேரிநாத பிள்ளையும் நானும் பாடம் கேட்டு வந்தோம்.
கும்பகோணத்திற்கு ஒரு முறை யாவரும் சென்று தியாகராச செட்டியாரைக்
கண்டு பேசி இருந்துவிட்டு வந்தோம். அவரும் சில முறை பட்டீச்சுரத்திற்கு
வந்து சென்றார். ஒரு நாள் சத்தி முற்றம் கோயிலுக்குச் சென்று தரிசனம்
செய்தோம். அங்கே அம்பிகை தவம்புரிந்து இறைவன் பிரசன்னமானபொழுது
தழுவிக் கொண்டதாக ஓர் ஐதியம் உண்டு. அங்ஙனம் தழுவிய
திருக்கோலத்தில் ஒரு விக்கிரகம் அங்கே இருக்கின்றது. அதையும்
தரிசித்தோம். அங்கே ஆலய வாசலில் உச்சிட்ட கணபதியின் கோயில் ஒன்று
இருக்கிறது. அந்த மூர்த்தியை உபாசனை செய்தால் நல்ல வாக்கு
உண்டாகுமென்று பெரியோர்கள் கூறக் கேட்டிருந்தேன். ஆதலால் மனத்தில்
அந்நினைவுடனே அப்பெருமானை வணங்கினேன்.

கோட்டூரில் தீபாவளி

புரட்டாசி மாதம் போய் ஐப்பசி மாதம் வந்தது. தீபாவளி அணுகிற்று.
என் தாய் தந்தையரையும் குழந்தையாக இருந்த தம்பியையும் பார்க்க
வேண்டுமென்ற ஆசை எழுந்தது. தீபாவளிக்குப் போய் என் பெற்றோர்களோடு
இருந்து வரலாமென்று எண்ணிப் பிள்ளையவர்களிடம் என் கருத்தை
வெளியிட்டேன்.

“அப்படியே செய்யலாம்” என்று அவர் அனுமதி அளித்தார்.
புறப்படும்பொழுது இரண்டு பட்டுக்கரை அங்கவத்திரங்களை வருவித்து
என்னிடம் அளித்து, “தீபாவளியில் உபயோகப்படுத்திக் கொள்ளும்.
சௌக்கியமாகத் தீபாவளி குளியல் செய்து சில நாள் தங்கிவிட்டு அப்படியே
மாயூரத்திற்கு வந்துவிடலாம். நான் தீபாவளிக்கு அங்கே போவதாக
எண்ணியிருக்கிறேன்” என்றார்.

அவருடைய அன்பை அறிந்து நான் வியந்தேன்; அந்த
அங்கவத்திரங்களைப் பணிவுடன் ஏற்று விடைபெற்றுப் புறப்பட்டேன்.கோட்டூரென்பது பாடல் பெற்ற சிவத்தலமும் ஃகரதத்த சிவாசாரியரவர்களுடைய அவதார தானமுமாகிய கஞ்சனூருக்குக் கிழக்கே, கார் காத்த வேளாளர்களுக்கு ஆசிரியர்களாகிய சோழியப் பிராமணர்கள் வசிக்கும் துகிலிக்கு மேற்கே சமீபத்தில் உள்ளது. அதன் பெயர்
கோடையென்று செய்யுட்களில் வழங்கும். கஞ்சனூர், துகிலி, மணலூர் முதலிய இடங்களில் மாறி மாறித் தங்கிவந்த என் தந்தையார் அப்போது கோட்டூரில் என் சிறிய தாயார் (தாயாரின் தங்கை) வீட்டில் இருந்தார்; துலா மாதமாதலால் காவிரிக் குளியல் செய்ய எண்ணி என் பெற்றோர்கள் அங்கே இருந்தனர். சூரியமூலையிலிருந்து என் பாட்டனாரும் வந்திருந்தார். கோட்டூரில் காவிரி உத்தரவாகினியாக ஓடுகிறது. அதனால் பலர் அங்கே குளிக்க வருவார்கள். நான் அங்கே போனது
பலபேரையும் ஒருங்கே பார்ப்பதற்கு அனுகூலமாக இருந்தது யாவரும்
என்னுடைய சேம சமாசாரத்தையும் கல்வியபிவிருத்தியையும் பற்றி
விசாரித்தார்கள். நான் கொண்டு போயிருந்த அங்கவத்திரங்களைப் பார்த்த
என் தந்தையார் மிக்க திருப்தியை அடைந்தார். என் தாயாருக்கோ அவரைக்
காட்டிலும் அதிக மகிழ்ச்சி உண்டாயிற்று. “என்னவோ. பகவான் தான்
காப்பாற்றவேணும். எங்களால் ஒன்றும் முடியாதென்று தெரிந்து இப்படி ஒரு
நல்லவரைக் கொண்டுவந்துவிட்டிருக்கிறது, அவர் கிருபைதான்” என்று அவர்
சொல்லி உளம் பூரித்தார்.

தீபாவளிக் குளியல் செய்தேன். என் ஆசிரியர் அன்புடன் அளித்த
அங்கவத்திரங்களைத் தரித்துக் கொண்டேன். அப்போது எனக்கு ஒரு தனி
மகிழ்ச்சி உண்டாயிற்று.

ஒரு கனவான்

கோட்டூரில் இருந்தபோது பல பேர்கள் என்னைப் பார்த்துப்
பிள்ளையவர்களைப் பற்றி விசாரித்தார்கள். அநேகமாக யாவரும் அவரைப்
பாராட்டினார்கள் உலகத்தில் எல்லோரும் ஒரே விதமான
அபிப்பிராயமுடையவர்களாக இருக்கிறார்களா? நல்லதை நல்லதென்று
சொல்பவர்களுக்கு நடுவில் அதைக் கெட்டதென்று சொல்பவர்களும் இருந்து
வருகிறார்கள். 
ஒரு நாள் என் தகப்பனாருக்குத் தெரிந்த ஒருவர் வந்திருந்தார்.
நெடுநேரம் பேசினார். “உங்கள் பிள்ளை என்ன செய்கிறான்?” என்று
விசாரித்தார். என் தந்தையார், “தமிழ் படிக்கிறான்” என்று சொன்னார். அவர்
ஏதோ ஆச்சரியத்தைக் கேட்டவரைப் போலவே திடுக்கிட்டு, “என்ன? தமிழா!”
என்று கூறினார். அதோடு அவர் நிற்கவில்லை. “தமிழையா படிக்கிறான்!
இங்கிலீசு படிக்கக் கூடாதா? சமற்கிருதம் படிக்கலாமே? இங்கிலீசு படித்தால்
இகத்துக்கு லாபம்; சமற்கிருதம் படித்தால் பரத்துக்கு இலாபம். தமிழைப்
படித்தால் இரண்டுக்கும் இலாபம் இல்லை” 
என்று அவர் மேலும் தம் கருத்தை
விளக்கினபோது எனக்குக் தூக்கி வாரிப் போட்டது. அவ்வளவு அருமையான அபிப்பிராயத்தைச் சிறிதேனும் யோசனையில்லாமல் சொல்ல முன்வந்த அந்தப் பேர் வழி யாரென்று அறிய எனக்கு விருப்பம் உண்டாயிற்று. அவர் போனவுடன் நான் விசாரித்தேன். பாவம்! அவருக்கு இங்கிலீசும் தெரியாது; சம்ற்கிருதமும் தெரியாது; தமிழ் தெரியவே தெரியாது ஆகவே அவர் கருத்துப்படி அவரே இகபர சுகத்துக்கு
வேண்டியதைத் தேடவில்லையென்று தெரிய வந்தது ‘வாய் புளித்ததோ
மாங்காய் புளித்ததோ!’ என்று யோசனை இல்லாமலும், பிறர் மனம் புண்படுமே
என்பதைத் தெரிந்து கொள்ளாமலும், தமக்கு இந்த அபிப்பிராயத்தைக் கூற
என்ன தகுதி இருக்கிறதென்று ஆலோசியாமலும் வாய்க்கு வந்ததை, “என்
அபிப்பிராயம் இது” என்று சொல்லும் கனவான்களைச் சந்திக்கும்
போதெல்லாம் எனக்குக் கோட்டூரில் கண்ட மனிதர் ஞாபகம் வரும்.

சுர நோய்

கோட்டூரில் ஒன்றரை மாதம் இருந்தேன். தீபாவளியான சில நாளில்
எனக்குக் கடுமையான சுரம் வந்து விட்டது. மிகவும் சிரமப்பட்டேன்.
அவ்வூரிலிருந்த சக்கரபாணி என்ற ஒரு பரிகாரி வைத்தியம் பார்த்தார்.
“கண்காணாமல் சௌக்கியமாக இருந்து வந்த குழந்தை இங்கே வந்தவுடன்
நம்முடைய துரதிர்ட்டம் அவனையும் பிடித்துக்கொண்டது” என்று என் தாயார்
அழுதார்.

தீபாவளிக்குப் பின் நான் மாயூரம் செல்லாமையால் என் ஆசிரியர்
மிகவும் கவலைப்பட்டுக் கோட்டூருக்கு மனுசர்களை அனுப்பி விசாரித்து
வரச்சொன்னார் நான் நோய்வாய்ப்பட்டது தெரிந்து பெரிதும் வருந்தினார்
அடிக்கடி அவரிடமிருந்து யாரேனும். வந்து என் தேக திதியைப்பற்றி
அறிந்து கொண்டு சென்றனர். “அன்பென்றால் இதுவல்லவா அன்பு!” என்று
ஊரினர் ஆச்சரியப் பட்டனர்.

(தொடரும்)
என் சரித்திரம்
உ.வே.சா.

Saturday, January 13, 2024

உ.வே.சா.வின் என் சரித்திரம் 70 : சிலேடையும் யமகமும்

     14 January 2024      அகரமுதல



(உ.வே.சா.வின் என் சரித்திரம் 69 : ஒரு செய்யுள் செய் – தொடர்ச்சி)

என் சரித்திரம்
அத்தியாயம்-42

சிலேடையும் யமகமும்

பட்டீச்சுரத்தில் இருந்தபோது பிள்ளையவர்கள் இடையிடையே
கும்பகோணம் முதலிய இடங்களுக்குப் போய் வருவதுண்டு. அப்பொழுது
நானும் உடன் சென்று வருவேன். பட்டீச்சுரத்திலுள்ள ஆலயத்திற்கு ஒருநாள்
சென்று தரிசனம் செய்து வந்தோம். அக்கோயிலில் தேவி சந்நிதானத்தில் சிரீ
கோவிந்த தீட்சிதரது
 பிம்பமும் அவர் பத்தினியாரது பிம்பமும் இருக்கின்றன.
அவற்றை நாங்கள் கண்டு களித்தோம். தஞ்சையிலிருந்து அரசாண்ட அச்சுதப்ப
நாயக்கரிடம் அமைச்சராக இருந்து
 பல அரிய தர்மங்களைச் செய்தவர் சிரீ
கோவிந்த தீட்சிதர். அவர் பட்டீச்சுரத்து அக்கிரகாரத்தில் வசித்து வந்தனராம்.

சிலேடைப் பாட்டு

மற்றொரு நாள் சிறந்த சுப்பிரமணிய தலமாகிய சுவாமி மலைக்குச்
சென்று முருகக் கடவுளைத் தரிசனம் செய்தோம். முருகக் கடவுளுக்குரிய ஆறுபடை வீடுகளுள் ஒன்றாகிய திருவேரகமென்பது அந்தத் தலமென்று சொல்லுவர். சிரீ சாமிநாதனென்பது அங்கே எழுந்தருளிய முருகக் கடவுளின் திருநாமம். நாங்கள் அங்கே போனபோது ஆறுமுகத்தா பிள்ளையும் வந்திருந்தார்.

சுவாமி தரிசனம் செய்த பிறகு பட்டீச்சுரத்திற்குத் திரும்பினோம்;
காவிரிக் கரைக்கு வந்தபோது அங்கே பட்டுச்சாலியர்களிற் சிலர் பட்டு நூலை
சலத்தில் சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். ஆறுமுகத்தா பிள்ளை
திடீரென்று என்னைப் பார்த்து, “இந்த நூலுக்கும் நீருக்கும் சிலேடையாக ஒரு
வெண்பாப் பாடும், பார்க்கலாம். பத்து நிமிடத்தில் சொல்லவேண்டும்”
என்றார்.

“இதுவே பெரிய துன்பமாகி விடும்போலிருக்கிறதே!” என்ற
நினைவுதான் எனக்கு முதலில் எழுந்ததே ஒழிய அவர் சொல்லிய படி பாடல்
செய்ய முயல்வோம் என்று தோன்றவில்லை. அவர் அன்போடு இன்முகங்
காட்டி இன்சொல்லால் என்னிடம் விசத்தைச்சொல்லியிருப்பின் என்
மனத்தில் உற்சாகம் உண்டாகியிருக்கும். அதிகாரத் தோரணையோடு அவர்
இட்ட கட்டளைக்குப் பணிய வேண்டுமென்ற நினைவில் அந்த உற்சாகம்
ஏற்பட வழியேது?

ஆறுமுகத்தா பிள்ளை கூறியதைக் கேட்ட என் ஆசிரியர் அப்பொழுது
அவர் இயல்பை நினைந்து வருந்தினாரென்றே தோற்றியது. “என்ன தம்பீ,
திடீரென்று இவ்வளவு கடினமான விசயத்தைச் சொல்லிச் சீக்கிரத்தில் பாடச்
சொன்னால் முடியுமா? பாட்டென்றால் யோசிக்காமல் யந்திரம்போல் இருந்து
செய்வதா?” என்று கூறி விட்டுச், ‘சிலேடை அமையும் படி இரண்டு அடிகளை
நான் செய்துவிடுகிறேன். மேலே இரண்டு அடிகளை நீர் செய்து பாடலைப்
பூர்த்தி செய்யும்” என்று என்னை நோக்கிக் கூறினார். உடனே,

வெள்ளைநிறத் தாற்செயற்கை மேவியே வேறுநிறம்
கொள்ளுகையாற் றோயக் குறியினால்”

என்ற இரண்டு அடிகளைச் சென்னார். எனக்கு ஆறுமுகத்தா
பிள்ளையின் நினைவு, அவர் என்னைச் செய்யுள் செய்யச் சொன்னது எல்லாம்
மறந்து போயின. சிலேடை அமைய என் ஆசிரியர் அவ்வளவு விரைவில்
இரண்டடிகளைக் கூறியது என்னை வியப்பில் ஆழ்த்தியது. அந்த
இரண்டடிகளை ஆசிரியர் மீண்டும் சொல்லி, “மேலே இரண்டடிகளைப் பூர்த்தி
செய்யும்” என்றார். நான் சிறிது நேரம் யோசித்து அவர் கட்டளையை
நிறைவேற்றினேன். பாட்டு முழுவதும் வருமாறு:

வெள்ளைநிறத் தாற்செயற்கை மேவியே வேறுநிறம்
கொள்ளுகையாற் றோயக் குறியினால்-உள்ளவன்பில்
தாய்நோந்த வாறுமுகத் தாளாளா நீமொழிந்த
ஆய்நூலு நீருநிக ராம்”

[நூலுக்கு: வெள்ளை நிறத்தை உடைமையாலும், செய்கையினால்
வெவ்வேறு நிறத்தை அடைதலாலும், சாயத்தில் தோய்க்கின்ற அந்தச்
செயலாலும். நீருக்கு: இயல்பாக வெண்மை நிறம் உடைமையாலும்,
செயற்கையால் வேறு வேறு நிறங்களைக் கொள்ளுதலாலும். தோயமென்னும்
பெயரை உடைமையாலும். தோய் அக்குறி, தோயம் குறி என இரண்டு
வகையாகப் பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும்; தோயம் – நீர்; குறி –
பெயர். தாய் நேர்ந்த – தாயை ஒத்த.]

நான் செய்யுளை முடித்துச் சொன்னதைக் கேட்டு ஆறுமுகத்தா பிள்ளை
ஏதேனும் குற்றம் கூற ஆரம்பித்தால் என்ன செய்வதென்ற பயம் எனக்கு
இருந்தது. என் ஆசிரியர் என்னை அதிலிருந்து மீட்டார். ஆறுமுகத்தாபிள்ளை
தம் அபிப்பிராயத்தைச் சொல்வதற்கு முன்பே, “நன்றாயிருக்கிறது; ‘உள்ள
அன்பில் தாய் நேர்ந்த ஆறுமுகத் தாளாளா’ என்ற பகுதி பொருத்தமாக
உள்ளது. அந்தரங்கத்தில் தம்பிக்கு எல்லோரிடத்திலும் எவ்வளவு அன்பு
இருக்கிறது என்பதை அது விளக்குகிறது” என்று அவர் கூறினார். ஆறுமுகத்தா
பிள்ளையின் முகத்திலே புன்னகை சிறிது அரும்பியது.

“முன் இரண்டடியில் அல்லவோ செய்யுளின் அருமை இருக்கிறது?
பின்பகுதியில் என்ன நயம் இருக்கிறது?” என்று நான் எண்ணினேன். சிலேடை
பாடுவதும், செய்யுள் நயம் தெரிவதும் அப்போது முக்கியமாக இல்லை;
ஆறுமுகத்தா பிள்ளையின் திருப்தியைப் பெறுவதுதான் முக்கியமாக இருந்தது.
இந்த இரகசியத்தை ஆசிரியர் உணர்ந்து அதற்கு ஏற்றபடி நடந்து காட்டினார்.

நாங்கள் பட்டீச்சுரம் வந்து சேர்ந்தோம். பாடம் நடந்து வந்தது.
ஆறுமுகத்தா பிள்ளையின் அன்பும் அதிகாரமும் கலந்து கலந்து
வெளிப்பட்டன.

யமகப் பாட்டு

பின் ஒரு நாட் காலையில் பட்டீச்சுரம் கோயிலுக்குச் சென்றோம்.
ஆறுமுகத்தாபிள்ளையும் வந்திருந்தார். அக்கோயிலில் திருமாளிகைப்பத்தியின்
மேற்குக் கோடியில் எழுந்தருளியுள்ள விநாயகருக்கு மதவாரணப் பிள்ளையார்
என்பது திருநாமம். அம்மூர்த் தியைத் தரிசித்து நிற்கையில் ஆறுமுகத்தாபிள்ளை, “இந்த விநாயகர்
திருநாமத்தை யமகத்தில் அமைத்து ஒரு செய்யுள் சொல்லும்” என்றார். யமகம்
பாடுவது சுலபமானதன்று. யமகச் செய்யுட்களைப் படித்து அருத்தம்
தெரிந்துகொள்வதே சிரமமாக உள்ளபோது அந்நிலையில் விரைவில்
மதவாரணப் பிள்ளையார் திருநாமத்தை வைத்து யமகச் செய்யுள் ஒன்று நான்
பாடுவதென்பது சாத்தியமான காரியமா? 
ஒன்றும் தோன்றாமல் ‘மிரள மிரள’
விழித்தேன். எனக்கு உண்டான வருத்தத்திற்கு ஓர் எல்லை இல்லை. வாய்
விட்டு அழவில்லையே ஒழிய என் முகம் அகத்திலுள்ள வருத்தம்
முழுவதையும் புலப்படுத்தியது. அதை என் ஆசிரியர் கவனித்தார். அவருடைய
பொறுமைக்கும் எல்லை உண்டு என்பது தெரிந்தது. ஆறுமுகத்தா பிள்ளையைப்
பார்த்தார். “என்ன தம்பீ, இந்த மாதிரி அடிக்கடி இவருக்குக் கடினமான
விசயங்களைக் கொடுத்துப் பாடச் சொல்வது தருமமா? இவர் செய்யுள் இயற்றக்
கூடிய பழக்கமுடையவரே. ஆனாலும் இப்படி வற்புறுத்தித் திடீர் திடீரென்று
சொல்லச் செய்தால் செய்யுள் வருமா? தானாகக் கனிந்து வரவேண்டியதைத்
தடியால் அடித்துக் கனியவைக்கலாமா?” என்று சொன்னபோது ஆறுமுகத்தா
பிள்ளை மேலே ஒன்றும் பேசவில்லை. தாம் செய்வது பிழை என்று அவர்
உணர்ந்தாரோ, இல்லையோ, மரியாதைக்குப் பயந்து பேசாமல் இருந்து
விட்டார்.

நாங்கள் வீடு சென்றவுடன் ஆசிரியர் தாமே மதவாரணப் பிள்ளையார்
விசயமாக யமகச் செய்யுளொன்றை இயற்றி, என்னை எழுதச் சொல்லி
ஆறுமுகத்தா பிள்ளையிடம் படித்துக் காட்டச் சொன்னார். நான் அவ்வாறே
செய்தேன்.

விரத பங்கம்

புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமைகளில் சில வீடுகளில் அட்சதை
வாங்கிக் கொண்டு சமைத்து ஒரு வேளை மாத்திரம் உண்ணுதல் எங்கள்
குடும்ப வழக்கம். காலையில் குளித்து விட்டு அயலார் வீடுகளுக்கு ஈர
வத்திரத்தோடு மௌனமாகச் சென்று ஈரச் சவுக்கத்தில் அட்சதை வாங்குவதை
ஒரு விரதமாக எங்கள் முன்னோர் கொண்டிருந்தனர்.

இதனைக், ‘கோபாலம் எடுத்தல்’ என்று சொல்வார்கள். பட்டீச்சுரத்தில்
நானிருந்தபோது முதல் சனிக்கிழமையன்று கோபாலம் எடுக்கும் பொருட்டுக்
காலையில் குளித்துப் புறப்பட்டேன். ஆறுமுகத்தா பிள்ளை என்ன
விசேடமென்று விசாரித்தார். நான் விசயத்தைச் சொன்னேன். அதைக் கேட்டவுடன் அவருக்கு மிக்க கோபம் உண்டாகி விட்டது. “நீர் வைணவரா? இந்த விரதத்தை எல்லாம்
உங்களூரில் வைத்துக் கொள்ளும். இந்த எல்லைக்குள் அப்படிச் செய்யக்
கூடாது. சைவர்களாகிய எங்களோடு பழகும் உமக்கு இப்படிப் புத்தி போனது
ஆச்சரியம்” என்று கண்டிக்க ஆரம்பித்தார் அன்றியும் நான் ஆகாரம் செய்து
கொள்ளும் வீட்டிற்கு, நான் கோபாலம் எடுத்து வந்தால் உணவு அளிக்க
வேண்டாமென்று சொல்லியனுப்பிவிட்டார். நான் என்ன செய்வேன்!
பரம்பரையாக வந்த வழக்கத்தை விட்டுவிடக்கூடாதென்றும், அதனால்
பெருந்தீங்கு நேருமென்றும் நான் நம்பியிருந்தேன். எங்கள் குல தெய்வமாகிய
சிரீ வேங்கடாசலபதியை நினைந்து மேற்கொள்ளும் அந்த விரதத்திற்குப் பங்கம்
நேர்ந்தால் குடும்பத்திற்கே துன்பம் வருமே என்று அஞ்சினேன். அத்தகைய
நம்பிக்கையுள்ள குடும்பத்திற் பிறந்து வளர்ந்த எனக்கு இந்த எண்ணம் மிகவும்
பலமாக இருந்தது. அன்று மத்தியான்னம் நான் உணவு கொள்ளவே இல்லை.
தென்னந்தோப்பிற் சென்று கீழே படுத்துப் பசியினால் புரண்டேன். இத்தகைய
துன்பங்களுக்கு ஆளாக்கிய என் விதியை நொந்து கொண்டேன்.

நான் உண்ணவரவில்லை என்று தெரிந்து எனக்கு ஆகாரம் அளிக்கும்
வீட்டினர் மிகவும் வருந்தினர். அவர்கள் அங்கே வந்து என்னைக் கண்டு
வற்புறுத்தினமையால் அன்று பிற்பகலில் ஐந்து மணிக்குப் போய்
உணவருந்தினேன். புரட்டாசி மாதச் சனிக் கிழமை விரதத்திற்கு அந்த ஊரில்
விடை கொடுத்து விட்டேன்.

மாயூரத்தில் இருந்தபோது இத்தகைய துன்பம் நேரவில்லை. அன்றியும்
சவேரிநாத பிள்ளையின் பழக்கம் எனக்கு மிக்க இன்பத்தை அங்கே
உண்டாக்கும். அவர் சிரிக்கச் சிரிக்கப் பேசும் பேச்சு எவ்விதமான
வருத்தத்தையும் போக்கிவிடும். பட்டீச்சுரத்திலோ மனம் விட்டுப் பேசி
மகிழ்வதற்குரிய நண்பர் ஒருவரும் எனக்கு இல்லை.

சவேரிநாத பிள்ளை வரவு

இப்படியிருக்கையில், நல்ல வேளையாக ஆசிரியர் சவேரிநாத
பிள்ளையை அழைத்துவரும்படி மாயூரத்திற்குச் சொல்லியனுப்பினார். அவர்
பட்டீச்சுரம் வந்தபோது எனக்கு எவ்வளவு சந்தோசம் உண்டாயிற்று என்பதை
எழுதி உணர்த்துவது இயலாது. “இனிமேல் ஆறுதலாகப் பேசி மகிழலாம்”
என்று எண்ணினேன்.

சவேரிநாத பிள்ளை வந்தவுடனே ஒரு பெரிய காரியத்தைச் சாதித்தார்.
ஆறுமுகத்தா பிள்ளை வீட்டில் இரவு பன்னிரண்டு மணிக்குமேல் ஆகாரம்
செய்து வந்த வழக்கம் அவரது முயற்சியால் நின்றது. அவர் தைரியமாகப் பேசுபவர். “பட்டீச்சுரத்தில் இரவில் நெடுநேரம் பசியோடு வருந்தும்படிச் செய்த பிரம தேவன் எங்களை மரமாகப் படைக்கவில்லையே!” என்ற கருத்து அமைய ஒரு பாட்டுப் பாடி அதை வெளிப்படையாகச் சொல்லி வந்தார். ஆறுமுகத்தா பிள்ளை அதைக் கேட்டார்.
சவேரிநாத பிள்ளை அவருக்கு ஏற்றபடி விசயங்களைப் பக்குவமாக எடுத்துச்
சொல்லி அவர் மனத்தை மாற்றினார். அதுமுதல் இரவு பத்து மணிக்குள்
யாவரும் ஆகாரம் செய்துகொள்ளும் வழக்கம் உண்டாயிற்று.
பிள்ளையவர்களும் நானும் வேறு பலரும் சவேரிநாத பிள்ளையின்
தைரியத்தையும் சாதுர்யத்தையும் மெச்சினோம். “இவருக்கு ஏற்ற கோடரி
சவேரிநாத பிள்ளையே” என்று நான் எண்ணி மகிழ்ந்தேன்.

சவேரிநாத பிள்ளையின் சல்லாபத்திலும் ஆசிரியரது அன்பிலும்
பட்டீச்சுர வாசத்தில் இருந்த கசப்பு எனக்கு நீங்கியது.

(தொடரும்)
என் சரித்திரம்
உ.வே.சா.

Saturday, January 06, 2024

உ.வே.சா.வின் என் சரித்திரம் 69 : ஒரு செய்யுள் செய்




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 68 : ஆறுமுக பூபாலர் – தொடர்ச்சி)

என் சரித்திரம் – அத்தியாயம் 41 தொடர்ச்சி
ஒரு செய்யுள் செய்

இவ்வளவு சாக்கிரதையாக ஏற்பாடு செய்து கொண்டு விழிக்கும்
ஆறுமுகத்தா பிள்ளையிடம் காலையில் நான் போய், “என் புத்தகத்தைக்
காணவில்லை” என்று சொல்லுவேனானால் அவருக்குக் கோபம் வருமென்பதை
நான் அறிவேன். ஆகையால் அவரிடம் சொல்லலாமென்று என் ஆசிரியர் கூறிய பின்பும், நான் பேசாமல் வாடிய முகத்துடன் அங்கேயே நின்றேன்.

‘ஒரு செய்யுள் செய்யட்டும்’

சிறிது நேரத்திற்குப் பின் ஆறுமுகத்தா பிள்ளை துயில் நீங்கி எழுந்து
அவ்வழியே சென்றார். செல்லும் போது நான் சும்மா நிற்பதைப் பார்த்து, “ஏன்

இவர் சும்மா நிற்கிறார்? பாடம் கேட்பதற்கு என்ன?” என்று சொன்னார். என்
ஆசிரியர் மெல்ல, “இவர் புத்தகம் வைத்த இடத்தில் அது
காணப்படவில்லையாம்” என்றார்.

“அப்படியா சமாசாரம்? படிக்கிற புத்தகத்தைக்கூட ஒழுங்காக வைத்துக்
கொள்ளாதவர் என்ன படிக்கப் போகிறார்?
 இவருக்கு ஐயா பாடம் சொல்வது
வீணான காரியம். படிப்பதில் ஊக்கமிருந்தால் இவர் இவ்விதம்
கவலையில்லாமல் இருப்பாரா?” என்று அவர் சொல்லிக்கொண்டே
போய்விட்டார்.

“இப்படியே புறப்பட்டு ஊருக்குப் போய்விடலாமா?” என்று கூட
எனக்குத் தோன்றிவிட்டது. அவர் கூறிய வார்த்தைகளுக்குப் பதில் கூறும்
துணிவு எனக்கு உண்டாகவில்லை.

மறுபடியும் அநத் மனிதர் வந்தார்: “இவர் இவ்வளவு காலமாகப் படித்து
வருகிறாரே; தமிழில் இவருக்கு ஏதாவது பயிற்சி ஏற்பட்டிருக்கிறதா? நீங்கள்
வருந்தி வருந்தி ஓயாமல் பாடம் சொல்லிக் கொடுக்கிறீர்களே; இவர் நன்றாகச்
சிந்தனை செய்து அறிந்து கொள்ளுகிறாரா? உங்களுடன் பழகும் இவர்
ஒழுங்காகப் பாடம் கேட்டிருந்தாரானால், இப்போது தமிழில் செய்யுள் இயற்றும்
பழக்கம் இவருக்கு ஏற்பட்டிருக்க வேண்டுமே. எங்கே, இப்போது இவரை ஒரு
செய்யுள் செய்யச் சொல்லுங்கள் பார்க்கலாம்
. நான் போய் வருவதற்குள் ஒரு
செய்யுளை இயற்றி இவர் சொன்னால் இவர் புத்தகங்கள் எங்கே இருந்தாலும்
வருவித்துக் கொடுக்கிறேன்; இல்லையானால் புதிய புத்தகங்களை வாங்கித்
தருகிறேன்” என்று சொன்னார்.

தம்பியின் விசயமாகவே ஒரு செய்யுள் செய்து சொல்லும்,
பார்க்கலாம்” என்று ஆசிரியர் என்னை நோக்கிக் கட்டளையிட்டார்.

ஆறுமுகத்தா பிள்ளை நானாகச் செய்யுள் செய்கிறேனா என்பதைக்
கவனிக்கும் பொருட்டு ஒருவரைக் காவல் வைத்து, “நான் வருவதற்குள்
செய்யுளை இயற்றிச் சொல்ல வேண்டும்” என்று எச்சரிக்கையும் செய்து
சென்றார்.


‘மாறுமுகச் செம்மல்’

பிள்ளையவர்கள் என்னை அழைத்துக் கொண்டு வேறிடம் சென்றார்.
அப்போது எனக்குக் காவலாக இருந்தவரும் உடன் வந்தார். நாங்கள் செல்லும்
போதே நான் ஒரு வெண்பாவை மனத்துக்குள் இயற்றி முடித்தேன்; அதனை
ஆசிரியருக்குச் சொல்லிக் காட்ட நினைந்து, “சீர்மருவு மாறுமுகச் செம்மலே”
என்று ஆரம்பித்தேன். அதைக் கேட்டவுடன் பிள்ளையவர்கள், “இருக்கட்டும்”
என்று கூறி விட்டு எங்களுடன் வந்தவரிடம், “நீர் போய்த்
தவசிப்பிள்ளையிடம் என் பூசைக்கு இடம் பண்ணும்படி சொல்லிவாரும்” என்று
கூறி அவரை அனுப்பினார். பின்பு என்னை நோக்கி, “நீர் சொல்லிய
தொடர்களைச் சீர்மருவும் மாறுமுகச் செம்மலே என்றும் பிரிக்கலாம். தம்பி
அதைக் கேட்டால் கோபித்துக் கொள்வார்.
 இவ்வித தவறான அருத்தம்
தோன்றும்படிச் செய்யுள் செய்தல் கூடாது” என்று அறிவித்ததோடு ஒரு
வெண்பாவை எனக்காக முடித்து என்னிடம் சொன்னார். நான் அதை மனனம்
செய்து கொண்டேன்.

அந்தச் செய்யுள்

ஆறுமுகத்தா பிள்ளை அப்பக்கம் வரவே நான் அவரிடம் சென்று
மிக்க பணிவோடு என் ஆசிரியர் பாடித் தந்த செய்யுளைச் சொன்னேன்.

ஆறுமுக பூபால வன்பிலார் போலென்பால்
மாறுமுகங் கொண்டால் மதிப்பவரார்-கூறுதமிழ்
வாசிக்க வந்தவென்மேல் வன்மமென்ன யாவருமே
நேசிக்கு மாதயை செய் நீ”

என்ற அந்த வெண்பாவை நான் சொல்லும்போதே அவர் முகத்தில்
சிறிது சந்தோசத்தின் குறிப்புத் தோற்றியது. அவரைப் பூபாலரென்று
சொன்னதில் அதிகமான சந்தோசம் உண்டாயிருக்க வேண்டும். அவருடைய
முகத்தைக் கவனித்துக் கொண்டே பாடலைச் சொல்லி வந்த நான். “நல்ல
வேளையாக, இப்பாட்டில் குற்றம் கண்டு கோபம் கொள்ள மாட்டார்” என்று
தெரிந்து சிறிது ஆறுதல் அடைந்தேன்.

கண்டத்தினின்று தப்பியது

“இனிமேல் நன்றாகப் பாடம் கேட்டு வாரும்; சோம்பேறித்தனத்தை
விட்டு விடும். 
செய்யுள் இயற்றிப் பழகும்” என்று அவர் எனக்கு ‘உபதேசம்’
செய்யத் தொடங்கினார். அப்போது ஒரு வேலைக்காரன் என் புத்தகக்

கட்டையும் மாயூரப் புராணத்தையும் எடுத்து வந்தான். அவனிடமிருந்து மாயூரப்
புராணத்தை வாங்கி என்னிடம் கொடுத்துவிட்டுப் புத்தகக் கட்டை முன்
இருந்த இடத்திற் கொண்டுபோய் வைக்கும்படி கட்டளையிட்டார். நான்
அப்புராணத்தைப் பெற்று என் ஆசிரியர் இருந்த இடம் சென்றேன். “ஒரு
பெரிய கண்டத்திலிருந்து தப்பினோம்” என்ற எண்ணத்தோடு அவரை அணுகி
நிகழ்ந்தவற்றைச் சொன்னேன்.

அவர் செய்யுள் செய்யும் முறைகளைச் சிறிது நேரம் உதாரணங்களுடன்
சொல்லி விளக்கினார். பிறகு மாயூரப்புராணத்தில் விட்ட இடத்திலிருந்து பாடம்
கேட்க ஆரம்பித்தேன்.

ஆறுமுகத்தா பிள்ளையின் ஆக்ஞைப்படி நானாக இயற்றிய பாட்டு என்
மனத்தில் பிறந்தது; அது வெளிப்படாமலே நின்று விட்டது. நானும் அதை
மறந்து விட்டேன். “சீர்மருவு மாறுமுகச் செம்மலே” என்ற பகுதியை மாத்திரம்
நான் நினைவில் வைத்திருக்கிறேன். இயல்பாகவே நிமிசத்திற்கு நிமிசம்
மாறும் முகச் செம்மலாகிய ஆறுமுக பூபாலர் என் சொந்தப் பாட்டைக்
கேட்டிருந்தால் என்னை என்ன பாடுபடுத்தி வைத்திருப்பாரோ, கடவுளே
அறிவார்!

(தொடரும்)
என் சரித்திரம்
உ.வே.சா.