Tuesday, January 24, 2017

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙாஙா] – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல 170, தை 09, 2048 / சனவரி 22, 2017

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙாஙா] –

 3. தமிழ்நலப் போராளி – தொடர்ச்சி

 பாவேந்தர் பாரதிதாசன் அவர்களும் பேராசிரியர் இலக்குவனாரும் தமிழ் காக்கும் எண்ணங்களில் ஒன்றுபட்டவர்கள். பாவேந்தரின் தமிழியக்க எண்ணங்களுக்கு வடிவம் தந்தவர் பேராசிரியர்; பாவேந்தர் வகுத்த தமிழ்ப்போராளி இலக்கணத்திற்கு இலக்கியமாகத் திகழ்ந்தவர் பேராசிரியர் எனத் தமிழ் உணர்வாளர்கள் உரைப்பர். அதே நேரம் மூத்த தலைமுறையினர் பேராசிரியரின் வாழ்வுப்பாதையைக் குறியீடாகக் கொண்டு தமிழ்உணர்வுப் பாடல்களைப் படைத்தவர் பாவேந்தர் என்பர். இரண்டிலும் உண்மைகள் உள எனவும் ஆன்றோர் எண்ணத்தால் ஒருவரே எனவும் கொள்ளலாம். இதற்குச் சான்றாகப் பேராசிரியரின் தமிழ் வருகைப் பதிவு குறித்த பாவேந்தரின் பதிவு குறித்துக் காண்போம். நெல்லையில் பேராசிரியரிடம் அப்பொழுது பயின்ற எளிமை ஏந்தல் தோழர் நல்லக்கண்ணு அவர்கள், பேராசிரியர் வருகைப்பதிவின் பொழுது ‘உள்ளேன் ஐயா’ என்று சொல்ல அறிவுறுத்தியது ஓர் இயக்கமாகத் தமிழ்நாடெங்கணும் பரவியது என்கிறார். இதற்குச் சில ஆசிரியர்களிடம் இருந்து எதிர்ப்புகளும் வந்தன. ‘உள்ளேன் ஐயா’ என்று சொல்வதை மறுக்கும் ஆசிரியர்களை மாணவர்கள் எதிர்த்ததுண்டா என்று கேட்டுப் பாவேந்தர் பாரதிதாசன்,
ஆரிய ஆசான் பேரைச் சொல்லி
 அழைக்க அதற்குத் தமிழ்மா ணாக்கன்
 ‘உள்ளேன் ஐயா’ என்றே உரைத்தான்
  ‘அப்படிச் சொல்லல் தப்படா’ என்ற இழிஞனை
எதிர்த்த துண்டா மாணவன்?”
 எனப் பாடிப் பேராசிரியரின் தொண்டினை ஆவணமாக்கி உள்ளார்.
 இக்காலத் தலைமுறையினர் சிலருக்கு ஐயம் வரலாம். பேராசிரியர் சி.இலக்குவனார் கல்வியாளராகத் தம் கடமையை ஆற்றினார்; மாணவர்களை நன்னிலை அடைய உருவாக்கினார்; சில புதிய திட்டங்களை அறிமுகப்படுத்திச் செயல்படுத்தி இருக்கிறார்; இவற்றில் என்ன பெரிய சிறப்பு உள்ளது என்றுகூட அறியாமையால் எண்ணலாம். பேராசிரியர் சி.இலக்குவனார் தம் பணிகளை எளிதில் ஆற்றும் வாய்ப்பான சூழல் இல்லாதபோதும் தன்னலம் நாடாமல் தமிழ்நலம் நாடி ஓயாது அருந்தொண்டுகள் ஆற்றினார் என்பதும்  ஒவ்வொன்றையும் போராடியே செய்து முடித்தார் என்பதும்தான் அவரது போராண்மைக்குச் சான்றாகும். பள்ளியில் தமிழாசிரியராகச் சேர்ந்தது முதலே மாணவர்களுக்குப் பாடம் நடத்தும் பொழுது பாடத்தோடு தொடர்புடைய வேர்ச்சொல் விளக்கங்களை அளித்துத் தமிழின் தூய்மையை விளக்குதல்; பாடங்கள் அடிப்படையில் சீர்திருத்தக் கருத்துகளை உள்ளத்தில் பதிய வைத்தல்; தமிழ்க்காப்பு உணர்வினை விதைத்தல் என அரும்பணியாற்றினார். எனவே, தமிழ்ப்பகைவர்கள் இவருக்கு எதிராகத் தொடக்கம் முதலே செயல்பட்டு வந்துள்ளனர். பணி விலக்கலையும் காவல்துறை நடவடிக்கையையும் வலியுறுத்தி முதலில் குறிப்பிட்டவாறான தொல்லைகள் மூலம், மன உளைச்சலிலாவது தள்ளி அவரின் தமிழ்ப்பணிக்கு முற்றுப்புள்ளி இட வைக்க முயன்றனர். போராளிகளுக்கு எதிர்ப்புகள்தாமே ஊட்டமாக அமையும். எது கண்டும் அஞ்சாமல் பேராசிரியர் தம்  பணியை முன்னிலும் விரைவு படுத்தினார்; தமிழ் உரிமை உணர்வை மாணவர்களிடம் மட்டுமல்லாமல் பொது மக்களிடமும் உண்டாக்கிய போராளியாகத் திகழ்ந்தார்.
 தமிழில் பேசுவதாலும் பிறரைத் தமிழில் பேச ஆற்றுப்படுத்துவதாலும் தம் வருவாயைத் தமிழ்ப்பணிக்கென செலவிடுவதாலும் தமிழாசிரியர் கூட்டமே அவரைப் பிழைக்கத் தெரியாத அப்பாவி என்று கூறி வந்தது. இது குறித்துப் பேராசிரியரே பின்வருமாறு எழுதி உள்ளார்:
  “தமிழரை ஒழிந்த ஏனையோர் எல்லாரும் தம் மொழியாளரைக் காணுங்கால் தம் மொழியிலேயே உரையாடுகின்றனர்.  தமிழர் மட்டும்தான் தம் மொழியை மறந்து ஆங்கிலத்தில் உரையாடுகின்றனர் என்று கூறும் பழிச்சோல் நீங்கிலது. தமிழால் வாழுகின்ற-தமிழைக் காக்க வேண்டிய தமிழாசிரியர்களை  இன்னும் இந்நோய் விட்டபாடில்லை.  ஆங்கிலேயர் ஆட்சியகன்றும் ஆங்கில மொழிச் செல்வாக்கு தமிழாசிரியர்களையும் ஆட்டிப் படைப்பது விந்தையினும் விந்தை. ஆகவே, தமிழ்ப் பேராசிரியனாகிய யான் தமிழுரிமை நாடித் தொண்டாற்ற முற்படுகின்றபோது, அவர் ஓர் அப்பாவி!  பிழைக்கத் தெரியாதவர் என்று பிறர் கூறும் எள்ளல் உரைக்கு இலக்காக நேரிடுகின்றது.
  தமிழாசிரியர் நிலை குறித்துப் பேராசிரியர் தெரிவித்த கருத்தின் மூலம், எத்தகைய சூழலில் அவர் தமிழாசிரியர்களையும் எதிர்த்தே அவர்களின் நலனுக்காகவும் தமிழக நலனுக்காகவும் போராடி வந்துள்ளார் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்

Saturday, January 21, 2017

பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 7/7: இலக்குவனார் திருவள்ளுவன்

வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம்,
தமிழ்த்துறை, ம.தி.தா.இந்துக்கல்லூரி,
திருநெல்வேலி
பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – பன்னாட்டுக் கருத்தரங்கம்
கட்டுரைத் தொகுப்பு நூல்

தொகுப்புரை 7/7


  “தொல்காப்பிய ஆராய்ச்சியில் இலக்குவனாரின் உட்பொருள் விளக்கம்” குறித்து, முனைவர் உ.அலிபாவா உவகையுடன் உரைக்கிறார்; தமிழின்மீது, தமிழ்மக்கள்மீது, தமிழ் நாகரிகத்தின்மீது உயரிய மதிப்பினை ஏற்படுத்தும் வண்ணம் இலக்குவனாரின் ஆய்வுரைகள் அமைந்துள்ளன என்கிறார்; தொல்காப்பியத்தைத் தமிழ்மரபு நெறியில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்; தொல்காப்பியம் மூலம் அறியலாகும் பல்துறை அறிவைப் புலப்படுத்தியவர்; மனித வாழ்விற்கான இலக்கணம் தமிழில்மட்டும்தான் உள்ளது; கற்புநெறிப்படி ஆடவரும் வாழவேண்டும்; தமிழ்நெறியைத் தமிழருக்காக, தமிழ் முன்னோர்கள் மரபுவழிமட்டும் நின்று உரைப்பதே தொல்காப்பியம் என இலக்குவனார் விளக்கும் பல கருத்துகளையும் ஆய்வாளர் நமக்கு அளிக்கிறார்.
  திருக்குறளுக்குப் பரிமேலழகர் வடநூற் கருத்துகளை ஒட்டி உரை செய்தமையையும் இலக்குவனார் அதனை மறுத்துத் தமிழர் மரபுப்படி விளக்கி யுள்ளமையையும், “பரிமேலழகர் – சி.இலக்குவனார் உரை ஒப்பீடு” மூலம் ஆய்வாளர் இரா.உமாதேவி ஆராய்ந்தளிக்கிறார்; அதிகார வைப்புமுறையிலும் குறள் வரிசை முறையிலும் பரிமேலழகரிடமிருந்து இலக்குவனார் வேறுபட்டுள்ளதையும் விளக்கியுள்ளார்.
  தொல்காப்பியருக்குப் பிற்பட்டகாலத்தவர் திருவள்ளுவர் என  ஆராய்ந்து பேராசிரியர் சி.இலக்குவனார் நமக்குத்  தந்துள்ளனவற்றை      முனைவர் இரா.செகதீசன் “தொல்காப்பியரா? திருவள்ளுவரா?”   என வினா தொடுத்து விடையாக விளக்குகிறார்; தொல்காப்பியர் தொகுத்தளிக்காத  அற்று, அனைய உவம உருபுகளைத் திருவள்ளுவர் பயன்படுத்தியுள்ளார் என்பதுபோன்ற ஆதாரங்களை இலக்குவனார் தெரிவிப்பதை நமக்கு இவர் விளக்குகிறார்; காய்ப்பு உவப்பு இல்லாத ஆராய்ச்சிக்கும் சமய அரசியல் கலப்பு இல்லாத ஆராய்ச்சிக்கும் இன்றைய ஆய்வாளர்களுக்கு வழிகாட்டியாகப் பேராசிரியர் இலக்குவனார் விளங்குவதையும் ஆய்வாளர் எடுத்துரைக்கிறார்.
    “வணிகவியல் பார்வையில் இலக்குவனார் கூறும் வாணிகம்”  எனச்  சங்கக்கால வணிகவியலை  நமக்கு இலக்கியம் வாயிலாக வழங்குவதை முனைவர் கோ.வீ.பிரேமலதா வணிகவியல் துறை நோக்கில் வடித்துத் தருகிறார். உள்நாட்டு வணிகம், அயல்நாட்டு வணிகம், போக்குவரத்து முதலியவற்றைப் பேரா. இலக்குவனார் விளக்கியுள்ளார்; இதன் மூலம் வணிகம் குறித்த பின்னாளைய வரையறைகளைப் பழங்காலத்திலேயே தமிழர்கள் கொண்டிருந்தனர் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது; என வணிகவியல் அறிஞர்களின் கருத்துகளுடன் ஒப்பிட்டுக்கட்டுரை அளித்துள்ளார்.
 இலக்கிய வரலாற்றை ஆய்வுக்கண்கொண்டு அலசுகிறார்; புத்தம் புதுக் கருத்துகளை  வல்லமையுடன் எடுத்துரைக்கிறார்; இலக்கியம்பற்றியும் தமிழ்பற்றியும் மேலை நாட்டு அறிஞர்கள் கூறும் கருத்துகள்  வழி  ஆராய்கிறார்; இவ்வாறு  ‘பழந்தமிழ்’ நூல் படைத்துள்ளார்;  இவற்றைக் குறிப்பிட்டுச்,  “சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – ஓர் ஆய்வு” எனச் சிங்கப்பூர் பேராசிரியர் முனைவர்  வேல்முருகன் சிறப்பாக அளிக்கிறார்; சங்கப்புலவர்களின் படைப்புகளையும் மேனாட்டுஅறிஞர்களின் ஆய்வுகளையும்  நுணுகிக்கற்ற இலக்குவனார்,  ஆய்வுக்கண்கொண்டே எதையும் அலசுகிறார்; புதிய கருத்துகளையும் அளிக்கிறார்; யாவற்றையும் நெஞ்சம் கவரும் வண்ணம் எளிமையாக விளக்குகிறார் என்கிறார்.
  “இலக்குவனார் திருக்குறள் உரைத்திறம்” குறித்து ‘வள்ளுவர் வகுத்த அரசியல்’நூலை அடிப்படையாகக் கொண்டு முனைவர் க.தமிழமல்லன், விரிவாக ஆராய்ந்து அளித்துள்ளார்; பேராசிரியர் இலக்குவனார்  சில குறட்பாக்களை முறை மாற்றி அளித்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.  பேரா.சி.இலக்குவனார், ‘திருக்குறள் – எளிய பொழிப்புரை’ வழங்கும் பொழுது குறட்பாக்களை  நடைமுறை வைப்பின்படியே அளித்துள்ளார். எனினும் குறிப்பிட்ட தலைப்புகளின்கீழ்த் திருக்குறள் கருத்துகளை ஆராயும் பொழுது, அத்தலைப்பிற்கேற்ப முறை மாற்றி அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இலக்கணத்தின் துணைக்கொண்டு இலக்குவனார் திருக்குறளின் பல இடங்களை அழகாக விளக்குகிறார்; மறுக்க  வேண்டிய இடங்களில் பரிமேலழகரின் கருத்துகளை மறுக்கிறார்; ஆரியச் சார்பிலான கொடிய கருத்துகளைத் தெளிவாக மறுக்கிறார்; தனித்தமிழில் படைக்கிறார்;பல்துறைப் புலமை கொண்டு திருக்குறளுக்குச் சிறப்பான உரை யளித்துள்ளார் என்று பல்வகைக் கண்ணோட்டத்தில் ஆய்வாளர் அளிக்கிறார்.
  பேராசிரியர் சி.இலக்குவனார் பல்வேறுநிலைகளிலும் பல்வேறு துறைகளிலும் முன்னெடுத்துக்காட்டான அரும் பணிகளை ஆற்றியுள்ளார். அவற்றில், கல்விப்பணி, சொற்பொழிவுப்பணி, படைப்புப்பணி, தொல்காப்பியப் பரப்புரைப்பணி, காலஆய்வுப்பணி, சொல்லாய்வுப்பணி, சங்க இலக்கியப் பரப்புரைப்பணி,  குறள்நெறிப் பரப்புரைப்பணி, இதழ்ப்பணி,  ஆற்றுப்படுத்தும் பணி, தமிழ்க்காப்புப்பணி, ஆகிய  சிலவற்றைத் தொகுத்துக் கருத்தரங்கத்தின் மையத் தலைப்புரையாக “இலக்குவனாரின் முன்னோடித் தமிழ்ப்பணிகள்”  கட்டுரை அமைந்துள்ளது.
  கட்டுரையாளர்கள் பலரும் குறிப்பிட்டுள்ளவாறு,   பேராசிரியரின் படைப்புகள் மேலும் விரிந்த ஆய்விற்குரியனவே!  பேராசிரியரின் ‘வள்ளுவர் வகுத்த அரசியல்’, எக்காலத்திற்கும்  ஏற்ற திருக்குறளுக்கு எக்காலத்திற்கும் ஏற்ற அறிவியல் அணுகுமுறையான விளக்கங்கள் கொண்டது. இது குறித்த  கட்டுரையை முனைவர் க.தமிழமல்லன் மட்டும் விரிவாக அளித்துள்ளார். இந்நூற்சிறப்பை ஆய்வாளர்கள் உணர்ந்து மாணாக்கர்க்குத் தெரிவிக்க வேண்டும்.
  பேராசிரியரின் முதல் படைப்பாகிய தனித்தமிழ்க் குறும்பாவியமான ‘எழிலரசி அல்லது காதலின் வெற்றி’ ஆராய்ந்து போற்றுதற்குரியது.  தழுவல் ஆக்கத்திலும் தலை சிறந்தது.  இதில் இடம் பெற்ற கவிதைகள் குறிக்கப் பெற்றிருப்பினும் இப்பாவியம் குறித்த கட்டுரை இல்லை.  வாழ்க்கை நிகழ்வுப் பாவியமான  பேராசிரியரின் ‘துரத்தப்பட்டேன்’, ஆற்றுப்படை இலக்கணத்திற்கேற்ப எழுதப்பெற்ற பேராசிரியரின் ‘மாணவர் ஆற்றுப்படை’  முதலானவையும் விடுபட்டுள்ளன. இவை, சிறப்பான முறையில் ஆய்வு செய்திருக்க வேண்டிய நூல்களாகும். இதழியலறிஞர் பேராசிரியர் இலக்குவனார் எழுதிய தலையங்கங்கள் குறித்தும் கட்டுரைகள் இடம் பெற்றிருப்பின் மேலும் சிறப்பாக இருந்திருக்கும். பேராசிரியரின் ஆங்கில நூல்கள் குறித்த கட்டுரைகளும் இடம் பெறவில்லை. இவை போல்  இக்கருத்தரங்கத்தில் பார்க்கப்படாத நூல்கள் குறித்த ஆய்வுகள் இனி இடம் பெற வேண்டும். பேராசிரியர் நூல்களில் குறிப்பிட்ட சில பகுதிகளையே பலரும் ஆய்வுக்களன்களாக அமைத்துக் கொண்டது தற்செயல் நிகழ்வுதான். இனி, ஆய்வுத் தளங்களை வரையறுத்துக் கொண்டு  கருத்தரங்கங்கள் நடத்தப் பெற வேண்டும்.
   வாழ்க்கைக் குறிப்புகள் திரும்பத் திரும்ப வருவது தவிர்க்கப்பட்டு நீக்கலாம் எனப் பதிப்பாசிரியர் முதலில் கருதி,  அதன் பின்னர் அந்தந்தக் கட்டுரைஅளவில் முழுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக நீக்கவில்லை என அறிந்தேன். சில மேற்கோள்கள் திரும்பத் திரும்பக் கையாளப்பட்டிருப்பினும் பார்க்கும் கோணம் மாறுபடுவதால் கூறியது கூறலாக் கருத இயலவில்லை. நம் கருத்தில் ஆழப் பதிவதற்காக மீண்டும் மீண்டும்  இடம் பெற்றுள்ளன எனக் கருதலாம். எனவே, இவ்விரு இயல்பு நீங்கலாகப் பார்க்கும் பொழுது பேராசிரியரை அவரது படைப்புகள் வழியாகவும்  பணிகள் வாயிலாகவும்  நன்கு படம் பிடித்துக் காட்டியுள்ளனர் எனலாம். ஆய்வாளர்கள் சிலர் தொடக்க நிலையில் உள்ளதால் அதற்கேற்ற நிலையில் படைப்புகள் உள்ளன. என்றாலும் பேராசிரியரை அறியாதவர் அறியச் செய்ய அவை உதவுகின்றன. எனவே, இக்கருத்தரங்கக் கட்டுரைத் தொகுப்பு பாராட்டிற்குரியதாகவே உள்ளது. இதனைப் பாடமாக வைப்பதன் மூலம்  தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் வாழ்க்கையைப் பற்றி மட்டுமல்லாமல், கடந்த நூற்றாண்டின் தமிழ்ச்சூழல், தமிழ்காக்கும் போர்க்களம், தமிழின் செம்மொழித் தன்மை, தொன்மை முதலான சிறப்புகள் ஆகியவற்றையும் இக்காலத்தலைமுறையினர் அறிய இயலும். அதற்கு ம.தி.தா.இந்துக் கல்லூரித் தமிழ்த்துறையினர் முயல வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகளில் ஆன்றோர்கள் உரைகளையும் இடம் பெறச் செய்வது மேலும் சிறப்பாக இருக்கும்.
  பேராசிரியர் இலக்குவனாரைப்பற்றிய பார்வை பலவாக இருப்பினும் படைப்பிலும் களத்திலும் தமிழ்ப்பரப்புப் பணியிலும் தமிழ்க்காப்புப் பணியிலும் சிறந்து நின்ற செந்தமிழ் அரிமா அவர் என்பதே அனைவரும் கண்ட கவினுறு காட்சியாகும்.
  சிறப்பான முறையில் கட்டுரை அளித்துள்ள கட்டுரையாளர்களுக்கும் இதற்குக்காரணமான கல்லூரி ஆட்சிக்குழுவினர், முதல்வர், தமிழ்த்துறைத்தலைவர், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர், தமிழ்த்துறையினர், மணிவாசகர் பதிப்பகத்தார் என அனைவருக்கும் பாராட்டுகள்!
இலக்குவனார் புகழ் பாடி  இனிய தமிழ் வளர்ப்போம்!
நற்றமிழை நானிலமெங்கும் பரப்புவோம்!

இலக்குவனார்திருவள்ளுவன்

Monday, January 16, 2017

மறக்க முடியுமா? – மயிலை சீனி. வேங்கடசாமி : எழில்.இளங்கோவன்

அகரமுதல 169, தை 02, 2048 / சனவரி15, 2017

மறக்க முடியுமா? –

மயிலை சீனி. வேங்கடசாமி

 சில நாள்களுக்கு முன்னர், மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களைப்பற்றித் தோழர் சுப.வீரபாண்டியன் அவர்கள் தன் ஒரு நிமிடச் செய்தியில் நினைவு கூர்ந்தார். தமிழுலகம் மறக்கக் கூடாத அறிஞர்களுள் மயிலையாரும் ஒருவர்.
 மயிலை சீனிவேங்கடசாமி மார்கழி 02, 1931 / 1900ஆவது ஆண்டு  திசம்பர் 16ஆம் நாள் சென்னை மயிலாப்பூரில் பிறந்தார்.
  இவரின் கல்வி 10ஆம் வகுப்பு வரைதான். பின்னர் இடைநிலை ஆசிரியராகவே பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை.
  படித்தது பத்தாம் வகுப்பு என்றாலும், பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கு இணையாக இவர் ஆய்வுப் பேரறிஞராகத் திகழ்ந்தார்.
  இவர் நீதிக்கட்சிக் காலத்தில் வெளிவந்த ‘திராவிடன்’, பெரியாரின் ‘குடிஅரசு’ ஆகிய இதழ்களில் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றும், கட்டுரைகள் எழுதியும் வந்தார்.
“வேதம், புராணம், கடவுள், கோயில், விதி, வினை என்று சொல்லிக்கொண்டு நாளுக்கு நாள் முட்டாள்களாகிக் கொண்டிருக்கும் வழக்கத்தை விட்டுவிட்டு எந்தச் செய்தியையும் பகுத்தறிவு- கொண்டு ஆராயும்படிக் கேட்டுக்கொள்கிறேன்” என்று குடிஅரசு இதழில் எழுதிய பகுத்தறிவாளர் இவர்.
 கல்வெட்டு, நாணயவியல், பிராமி, கிரந்தம், தமிழ், கன்னடம், மலையாளம் என்று இவரின் ஆய்வுகளின் விளைவாக,
 பௌத்தமும் தமிழும்,
சமணமும் தமிழும்,
 கிருத்துவமும் தமிழும்,
பௌத்தக் கதைகள்,
 புத்த  சாதகக் கதைகள்,
மகாபலிபுரத்து  சைன சிற்பங்கள்,
  நரசிம்மவர்மன், மூன்றாம் நரசிம்மன்,
 மகேந்திரவர்மனின் ‘மத்தவிலாசம்’ (தமிழ் மொழிபெயர்ப்பு),
களப்பிரர் ஆட்சியில்   தமிழகம்,
கொங்கு நாட்டு வரலாறு,
துளுவநாட்டு வரலாறு,
சங்கக்கால வரலாற்றில் சில செய்திகள்,
 சங்கக்கால சேர, சோழ, பாண்டியர் ,
சேரன் செங்குட்டுவன்,
கல்வெட்டெழுத்துகள்,
இறையனார் களவியலுரை ஆராய்ச்சி
 போன்ற முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.
தொல்காப்பியர் காலத்தால் பிற்பட்டவர் என்று வாதிட்டார் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை.
அவரின் வாதத்தை முற்றிலும் நிராகரித்தார் மயிலையார். பிராமி எழுத்து வருவதற்கு முன்பே தமிழ் எழுத்து வழக்கில் இருந்ததைச் சான்றுகளுடன் நிறுவி காலத்தால் முற்பட்டவர் தொல்காப்பியர் என்றார்.
 களப்பிரர்கள் காலத்தை இருண்ட காலம் எனப் பலர் கூறுகிறார்கள். இதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மயிலையார்,
தமிழ் பிராமி (தமிழி) எழுத்திலிருந்து தமிழ் வட்டெழுத்து வடிவம் பெற்றது களப்பிரர் காலத்தில்.
இதுவே சோழ, பல்லவர் காலத்துக்குப் பின்னர் இன்றைய நவீன வடிவத் தமிழ் எழுத்துக்கு அடிப்படை என்றார்.
  திருக்குறள், கார்நாற்பது, களவழி நாற்பது, திரிகடுகம், ஏலாதி, இனியவை நாற்பது, சீவக சிந்தாமணி, முதுமொழிக்காஞ்சி, விளக்கத்தார் கூத்து, நரிவிருத்தம், எலிவிருத்தம், முத்தொள்ளாயிரம் போன்ற இலக்கியங்களும்,
  அபிநயம், நத்தத்தம், பல்காயம், பல்காப்பியம், காக்கைப் பாடினியம் போன்ற இலக்கண நூல்களும் களப்பிரர் காலத்தவை என்றார்.
முன்னர் இருந்த வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய பா வகைகள் தாழிசை, விருத்தம், துறை என்று விரிவுபெற்றதும் களப்பிரர் காலத்தில் என்று விளக்கினார்.
பார்பனர்களிடமிருந்து இறையிலி நிலங்கள் பிடுங்கப்பட்ட சமணர்களின் காலமே களப்பிரர்களின் ஒளிமிக்க காலம் என்று உறுதிபடக் கூறினார்.
  நரசிம்மவர்மன் காலத்தில் உருவாக்கப்பட்ட மாமல்லபுரப் பாறைச் சிற்பங்களில் ஒன்றைப் பாரதக் கதையின் அருச்சுனன் தபசு என்றும், இராமாயணத்தின் பகீரதன் தபசு என்றும் இருவேறு கதைகளைக் சொல்வார்கள்.
  அந்த கதைகளைத் தவறானவை என்று தன் ஆய்வின் மூலம் மறுத்துரைக்கும் மயிலையார், உரிய சான்றுகளுடன் அச்சிற்பங்கள் இரண்டாம் சமணத் தீர்த்தங்கரர் அசிதநாதரின் புராணத்தில் வரும் சகர சக்கரவர்த்தியின் சமண கதைச்சிற்பங்கள் என்பதை உறுதி செய்கிறார்.
  இன்றைய காஞ்சிபுரம், கி.பி. 2ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில் பௌத்தர்களின் காஞ்சி மாநகராக இருந்தது. சீத்தலைச்சாத்தனாரின் பௌத்த காப்பியமான ‘மணிமேகலை’யின் காப்பியத் தலைவி மணிமேகலை இறந்தது காஞ்சியில்.
  அதனால் அன்று காஞ்சியில் இருந்த பௌத்த ஆலயமான தாராதேவி ஆலயத்தில் மணிமேகலையின் உருவச்சிலை வைக்கப்பட்டது.
 அன்றைய பௌத்த தாராதேவி ஆலயம் இன்று காஞ்சி காமாட்சியம்மன் கோயிலாக ஆக்கப்பட்டு விட்டது. அதனுள் இருந்த மணிமேகலை சிலை இன்று அன்னபூரணி இன்று இந்து தெய்வமாக மாற்றப்பட்டு விட்டது.
  அன்று மணிமேகலை, சம்பாபதி, தாராதேவி ஆகிய பௌத்த சிறு தெய்வங்களை, இன்று காளி, பிடாரி, திரௌபதி அம்மன் ஆகிய பெயர்களில் இந்து தெய்வங்களாக மாற்றிவிட்டார்கள் என்ற வரலாற்று உண்மைகளைத் தன் ஆய்வின் மூலம் பதிவு செய்கிறார் மயிலை சீனி.வேங்கடசாமி.
  சோழர்கள் காலத்தில் நிலவிய தேவரடியார் என்ற கொடுமையான பெண்ணடிமைத் தனத்தை, அதனை ஊக்கப்படுத்தி வளர்த்த பார்ப்பனர்கள், சோழர்கள் குறித்து நாம் அறிவோம்.
முதலாம் குலோத்துங்கன்: இவன், செயங்கொண்டார் எழுதிய ‘கலிங்கத்துப்பரணி’யின் தலைவன்.
  இவனின் 29ஆம் ஆட்சியாண்டின் சாசனங்களில் சோழர் கோயில்களில் தேவரடியார் பெண்கள் விலைக்கு விற்கப்பட்டுள்ளார்கள் என்ற செய்தி பதிவாகி இருக்கிறது.
  இதனைச் சுட்டிக்காட்டும் மயிலை சீனி.வேங்கடசாமி, 1926இல் இவர் எழுதிய கட்டுரைகளில் பெண் கல்வி, கைம்பெண் மறுமணம், குழந்தைத் திருமண ஒழிப்பு ஆகியவை பற்றி விரிவாக எழுதினாலும், தேவரடியார் குறித்த அவரின் பதிவு விரிவாக இல்லை என்பது வியப்பாக இருக்கிறது.
  1950 காலக்கட்டங்களில் இவரின் தீவிர  ஆய்வுகளைத் தொடர்ந்து ஏறத்தாழ முப்பது நூல்களும் திராவிடன், குடிஅரசு, செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப்பொழில், ஆராய்ச்சி, ஊழியன், இலட்சுமி போன்ற இதழ்களில் ஏராளமான ஆய்வுக்கட்டுரைகளும் எழுதியிருக்கிறார்.
  இவரின் நூல்கள் அனைத்தும் இன்று  நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.
1963-64 இவ்விரு ஆண்டுகளில், சென்னை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகப்  பொறுப்பேற்றுள்ளார்.
  “கோயில்களில் நடைபெறும் திருப்பாவாடை நிகழ்வை ஆய்ந்து, அது ஓர் இனிப்புப் பண்டம் என்று விளக்குகிறார் மயிலை சீனி.வேங்கடசாமி. அத்தரி என்னும் கோவேறு கழுதையைப்பற்றி சொல்லாய்வு செய்துமிருக்கிறார். கந்தி, கவுந்தி என்பன அருகக் கடவுளைத் தொழும் சமணப்பெண் துறவிகள் என்றார். ஔவை என்ற சொல் வயது முதிர்ந்த பெண்ணைக் குறிப்பதாகச் சொல்லும் இவர், ஔவை ஏன் இளமையில் கிழவியானாள் என்பதை விளக்க முற்படவில்லை” இப்படிப் பகுத்தறிவு ஆய்வாளராக மு.சிவகுருநாதனால் புகழப்படும் மயிலை சீனி.வேங்கடசாமியை,
தமிழையே வணிக மாக்கித்
     தன்வீடும் மக்கள் சுற்றம்
தமிழிலே பிழைப்ப தற்குத்
     தலைமுறை தலைமு றைக்கும்
தமிழ்முத லாக்கிக் கொண்ட
     பல்கலைத் தலைவன் எல்லாம்
தமிழ்சீ னிவேங்க டத்தின்
     கால்தூ சும்பெறா றென்பேன்!
 என்று போற்றிப் பாடுகிறார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள். ஆய்வுப் பேரறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் சித்திரை 25, 2012 / 1981ஆம் ஆண்டு மேத் திங்கள் 8ஆம் நாள் தன் ஆய்வை நிறுத்தி, மரணத்தின் மூலம் ஓய்வு எடுத்துக் கொண்டார்.
இவரை நாம்    
மறக்கமுடியுமா
-எழில்.இளங்கோவன்
– கருஞ்சட்டைத்தமிழர்
சனவரி 16-31