Wednesday, November 30, 2011


கற்றறிந்தார் போற்றும் வீ.கனகசபை பிள்ளை ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 30/11/2011


கற்றுணரும் நூல் படைத்த கற்றறிந்தார் போற்றும் வீ.கனகசபை பிள்ளை (1855-1906).

மாணவப் பருவத்திலேயே எழுத்தாற்றல் கொண்டிருந்த இப்பெருமகனார். “தமிழ் தமிழர்” என்னும் கருப்பொருள் கொண்டு, ஆங்கிலப் பத்திரிகைகளிலும், தமிழ் இதழ்களிலும் வாழ்நாள் முழுதும் தொடர்ந்து எழுதி வந்தார்.
தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

Tuesday, November 29, 2011


தமிழ்த்தாத்தா பேராசான் உ.வே.சா 

 அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 29/11/2011


புண்ணியத் தமிழாசுரர் தன்னிகரற்ற தமிழ்த்தாத்தா பேராசான் உ.வே.சா (1855-1906).

தமிழ் மக்களுக்குப் பெருமிதமும், தமிழ் மொழிக்குப் பெரும் புகழும் ஈட்டித் தந்த இப்பெருமான், ஏட்டுச் சுவடிகளில் இருந்த ஈடிணையற்ற தமிழ்ச் செல்வங்களைப் பீடுறப் பதிப்பித்தருளிய பெரும் பணி என்றென்றும் நினைக்கத்தக்கது.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

Friday, November 25, 2011


அறிஞர் நரசிம்மலு நாயுடு ~ அறிவோம் அறிஞர்களை!

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 25/11/2011


18. வரலாறு தந்த முதல்வர் வளர்தமிழ்த் தொண்டர் அறிஞர் நரசிம்மலு நாயுடு (1854-1922).

“தட்சிண இந்திய சரித்திரம்’ எனத் தாம் உருவாக்கிய மிகச் சிறந்த வரலாற்று நூலில் தென்னிந்திய வரலாற்றை விருப்பு, வெறுப்பின்றி எழுதிய இப்பெரியார். தொண்ணூற்று நான்கு தமிழ் நூல்களின் ஆசிரியராவார்.
0

Thursday, November 24, 2011


பூவை கலியாணசுந்தர முதலியார் ~ அறிவோம் அறிஞர்களை!

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 24/11/2011


17. சித்தாந்த சரபம் செந்தமிழ்த் தீபம் பூவை கலியாணசுந்தர முதலியார் (1854-1918).

“வாரும் ஞானப் பிள்ளாய்!” என வடலூர் வள்ளற் பெருமானால் அழைக்கப்பெற்ற இப்பெரும் புலவர் “கலியாண சுந்தர என் கண்மணியே!” என்று மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையால் போற்றப் பெற்றவர்.
0



மங்காத் தமிழ் வளர்க்கும்

மறைமலை இலக்குவனார்

மீண்டும் கவிக்கொண்டல்
பதிவு செய்த நாள் : 24/11/2011





0

Wednesday, November 23, 2011

தவச்சீலர் பாம்பன் சுவாமிகள் 

அறிவோம் அறிஞர்களை!

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 23/11/2011


16. தமிழ்த் தெய்வக் குகமணி தகைமையுறு அருள் நிதி தச்சீலர் பாம்பன் சுவாமிகள் (1851-1929).

முருகப் பெருமான் மீது ‘பரிபூசன பஞ்சாமிர்த வண்ணம்’ பாடி நிறைவு செய்தபோது சுவாமிகளின் அமிழ்தத் தமிழில் சொக்கிப்போய், முருகன் நேராகக் காட்சி தந்து சுவாமிகளை ஆட்கொண்டதாகச் சொல்லப்படுகிறது.
 




Monday, November 21, 2011


தண்டபாணி சுவாமிகள்

 அறிவோம் அறிஞர்களை!

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 21/11/2011



14. புண்ணிய அருட்கவி வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் (1839-1899)
.
இறைவனைப் போற்றுதல், தமிழைப் பேணிக் காத்தல், மனத்தை நெறிப்படுத்தல், இயற்கையில் எழிலுரைத்தல், புதுமைகள் படைத்தல் ஆகிய ஐவகை நோக்கங்களுக்காகப் பல்லாயிரம் பாடல்கள் படைத்த அருளாளர்
0









முகவை பொன்னுச்சாமித் தேவர்

 அறிவோம் அறிஞர்களை!

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 21/11/2011


13. நித்தம் தமிழ் வளர்த்த முத்தமிழ்க் காவலர்
முகவை பொன்னுச்சாமித் தேவர் (1837-1870).


தம்மைப் போலவே தமிழ்ப்பற்றுக் கொண்டு மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் உருவாக்கிய பாண்டித்துரைத் தேவரைத் தம் புதல்வராகப் பெற்று மகிழ்ந்த பெருந் தமிழ்த் தொண்டர்.
0



Sunday, November 20, 2011


மாம்பழக் கவிச்சிங்கநாவலர் 

அறிவோம் அறிஞர்களை!

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 20/11/2011



12. செந்தமிழ்க் கவிவாணர் சேதுபதிப் பாவலர் மாம்பழக் கவிச்சிங்கநாவலர் (1836-1864).

கண்ணொளி இழந்தும், கல்வி பெற்றுக் ‘கவிச்சிங்க நாவலர்’ எனப் போற்றப் பெற்ற இப்பெருந்தகை, சேதுபதியின் அரசவையில் அரசரை மகிழ்விக்க அவ்வப்போது பாடிய பாடல்கள் பன்னூறாகும்.
0

செம்மல் சி.வை.தாமோதரம் 

அறிவோம் அறிஞர்களை!

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 19/11/2011



11. பைந்தமிழப் பதிப்பாளர் செந்தமிழ்ச் செம்மல் சி.வை.தாமோதரம் பிள்ளை (1832-1901).

பதிப்புத் துறையின் ‘முன்னோடி’ எனப் பாராட்டப் பெற்ற இப்பேரறிஞர் அரிய தமிழ்ச் செல்வங்களை எவரும் அறிந்திராத காலத்தில் தேடிப் பிடித்துத் திறமுடன் பதிப்பித்து,பெரும் புகழ் கைக் கொண்டார்.
0

Friday, November 18, 2011


அறிஞர் கிருட்டிண பிள்ளை ~ அறிவோம் அறிஞர்களை!

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 18/11/2011


10. காப்பியப் புலவர் கம்பரெனப் புகழுடையார் அறிஞர் கிருட்டிண பிள்ளை. (1827-1900).

“இரட்சணிய யாத்திரிகம்” என்னும் இப்பெருந்தகை வழங்கிய பெரு நூலைச் சுவைத்துத் திறம் உணர்ந்த அறிஞர் உலகம் ‘கிறித்தவக் கம்பர்’ என இப்பெருமகனாரைப் பாராட்டிப் போற்றியது.
0

Thursday, November 17, 2011


மாயூரம் வேதநாயகர் ~ அறிவோம் அறிஞர்களை!

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 17/11/2011



9. நெடுங்கதை மூலவர் நீதித்துறை முதல்வர் மாயவரம் வேதநாயகர் (1826-1889).

‘மாயூரம் முன்சீப்’ என்னும் மகத்தான புகழுடன் திகழ்ந்த இப்பேரறிவாளர், தமிழின் முதல் புதினம் ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ வழங்கி, தமிழ் மொழிக்குப் புதிய நலமருளிய புத்திலக்கியச் செம்மல்.
0



 

வான்புகழாளர்கள்

  1.பெரும்போராளி 

பேராசிரியர் சி.இலக்குவனார்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 17/11/2011



(தமிழ் வளர்த்து நினைவில் வாழும் புகழ்வாணர்கள் பற்றிய தொடர் இத்தலைப்பில் வெளிவரும். அருந்தொண்டாற்றி வரும் தமிழறிஞர்கள் பற்றிய தொடர் வண்டமிழ் வலவர்கள் என்னும் தலைப்பில் வரும். அறிஞர்கள் பற்றித் தெரிவிக்க விழையும் குறிப்புகள் இருப்பின் நட்பு இணைய இதழுக்கு அனுப்ப வேண்டுகின்றோம். – ஆசிரியர்)
1. பெரும்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்
வையம் உள்ளளவும் வாழும் வளர்தமிழுக்கு வாழ்வு தந்த வான்புகழாளர்கள் எண்ணற்றோர் உள்ளனர். கடந்த நூற்றாண்டில் தங்கள் எழுத்தால் தமிழை நிலைக்கச் செய்த சான்றோர்கள் மிகுதியாக உள்ளனர். எண்ணம், சொல், எழுத்தால் மட்டுமன்றித் தம்முடைய செயல்பாட்டால் தமிழுக்குக் கேடயமாக விளங்கிய பெரும் போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் எனல் பொருந்தும். உலகில் நாட்டு நலனுக்காக, மக்கள் நலனுக்காக எனப் போராடிச் சிறை சென்ற செம்மல்கள் பலர் உள்ளனர். ஆனால், மொழிக்காகச் சிறைவாழ்வை ஏற்ற ஒரே கல்வியாளராகப் பேராசிரியர் திகழ்கிறார். அயல் மொழிகளால் தமிழுக்கு ஏற்படும் சிதைவுகளை எழுத்தாலும் உரையாலும் களைந்த அறிஞர்களிடையே களம் பல கண்டு தமிழியக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய ஆன்றோர் பேராசிரியர் இலக்குவனார் அவர்கள்.
பள்ளிஇறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்ற பேராசிரியர் சுற்றத்தார் தெரிவித்தவாறு கலைஅறிவியல் கல்லூரியில் சேர்ந்திருக்கலாம். அல்லது பணியில் சேர்ந்திருக்கலாம். ஆனால், தம்முடைய தமிழாசிரியர் உயர்மிகு பொன்னண்ணாக்களத்தில்வென்றார் ஆற்றுப்படுத்தியவாறு புலவர் பட்டம் பெற விரும்பித் திருவையாற்றிலுள்ள அரசர் கல்லூரியில் சேர்ந்தார். அவ்வாறு அவர் வேறு வகையாக முடிவெடுத்திருப்பின் பல உயர்நிலைகளை அடைந்திருக்கலாம். ஆனால், தமிழ் உயர்நிலையடைய தமிழ்த்தாய் அவரைப் புலவர் மாணாக்கராக அழைத்துக் கொண்டாள். புலவர் படிப்பில் பேராசிரியர் காட்டிய ஆர்வமும் ஆழ்ந்த கல்வியும் அவரை மெருகேற்றியதுடன் தமிழன்னையின் மீது சிலர் பூசிவரும் கறைகளையும் போக்க உதவியது. கல்லூரி நூலகத்தில் உள்ள மொழியியல் தொடர்பான ஆங்கில நூல்கள் அனைத்தையும் படித்ததால், அந்த நூற்றாண்டில் மேனாட்டு அறிஞர்கள் கூறிய கருத்துகளை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்ப்புலவர்கள் தெரிவித்திருந்த சிறப்பை உணர்ந்தார். எனவே, அவற்றைப் புலப்படுத்த உறுதி கொண்டு பணியாற்றினார்.
தொல்காப்பியம் கற்றறிந்தவர்களிடையேயே அறிமுகமாகா அக்காலத்திலேயே தொல்காப்பியச் சிறப்புகளைப் பிறருக்கு உணர்த்தினார். தொல்காப்பிய உரை விளக்கங்கள் அளித்தார். தமிழ்நாட்டு வரலாற்றினை எழுத விரும்புவோர் தொல்காப்பியத்தைக் கற்றிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தித் தொல்காப்பியச் சிறப்புகளை உரை வாயிலாகவும் கட்டுரைகள் வாயிலாகவும் பரப்பினார். தொல்காப்பியத்தின் காலம் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுப் பின்னர் மேல்வரம்பு கி.மு.10 ஆம் நூற்றாண்டு எனவும் கீழ் வரம்பு கி.மு.7 ஆம் நூற்றாண்டு எனவும் வரையறுத்தார்.
அயல்நாட்டினர் அருந்தமிழ்ச் சிறப்பை உணர வேண்டும் என்பதற்காக ஆங்கில நூல்களையும் எழுதினார். தமிழின் தோற்றமும் வளர்ச்சியும் (Origin and Growth of Tamil) என்னும் நூல் மூலம் இயற்கை மொழியாய்த் தமிழ் தோன்றி வளர்ந்த வரலாற்றையும் அதன் செம்மொழிச் சிறப்பையும் விளக்கினார்.
சிறப்பு மிக்க தமிழ் இலக்கணத்தை எளிதில் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தமிழ் இலக்கண ஆக்கம் (The Making of Tamil Grammar) என்னும் நூலை வெளியிட்டார்.
தமிழ்ச்சொற்களின் சிறப்பையும் தொன்மையையும் புரிந்து கொள்ளும் வகையில் ‘தமிழ்ச்சொற்கள் பற்றிய ஆய்வுச் சுருக்கம்-இலக்கணப் புலவர்களின் காலமுறைமை’ (A Brief Study of Tamil Words-The Chronology of Tamil Grammarians) என்னும் ஆய்வேட்டை வெளியிட்டார். இவ்வாய்வேட்டின் மூலம், ஆரியச் சொற்கள் எனத் தவறாகக் கருதப்பட்டுவந்த சொற்கள் பலவற்றின் தமிழ் மூலத்தையும் தமிழ்ச் சொற்களின் மூலத்தைக் கொண்ட ஆரியச் சொற்களையும் உணர்த்தித் தமிழ்ச் சொல் வளத்தை வெளிப்படுத்தினார்.
19, 20ஆம் நூற்றாண்டு மேனாட்டு மொழியியலறிஞர்கள் கருத்துகளோடு ஒப்பிட்டுத் தமிழின் மொழியியல் சிறப்பை விளக்கும் வகையில் மொழியியல் நூல்களையும் வெளியிட்டார். தமிழ்மொழியின் முதல்நிலைச்சொற்களும் இடைநிலைச் சொற்களும் (Semantemes and Morphemes in Tamil Language), ஒலியனியல் (Phonetics), சொல்லியல் (Semantics), முதலான நூல்களை வெளியிட்டார். பின் இவற்றைத் தொகுத்தும் பகுத்தும் தமிழ் மொழி (Tamil Language)என்னும் நூலை வெளியிட்டார். இவற்றின் மூலம் தமிழின் தனித்தன்மையைப் பேராசிரியர் நன்கு எளிமையாயும் செறிவாயும் விளக்கியுள்ளார். ஓரளவு ஆங்கில அறிவு உடையவர்கள்கூடப் பெரிதும் பயனுறும் வகையில் இந்நூல்கள்அமைந்துள்ளன என அறிஞர்களால் பெரிதும் இவை போற்றப்பட்டன.
பேராசிரியரின் நூல்களுள் மகுடமாக அமைந்தது, அவரது தொல்காப்பிய ஆங்கில மொழி பெயர்ப்பும் ஆராய்ச்சி உரையும் (Tholkappiyam in English with Critical Studies) ஆகும். தமிழகத்தின் பண்பாட்டு வாயிலான தொல்காப்பியத்தை இன்றைக்கும் பன்னாட்டினரும் புரிந்து கொள்ளவும் அறிந்து கொள்ளவும் வாய்ப்பாக அமைந்துள்ள சிறப்பு மிக்க நூல் இதுவே ஆகும்.
இவ்வாறாக அன்னைத் தமிழின் சிறப்பை அனைத்து நாட்டினரும் தெரிந்து கொள்ளவும் உணர்ந்து கொள்ளவும் ஆங்கிலத்தில் சிறப்பான நூல்களை அளித்த மேதை இலக்குவனார் அவர்கள் தமிழ் மக்களுக்காகத் தமிழிலும் பல நூல்களைப்படைத்து அளித்துள்ளார்.
புலவர் மாணாக்கராக இருந்த பொழுதே சிறந்த படைப்பாளராகப் பேராசிரியர் திகழ்ந்துள்ளார். ‘எழிலரசி அல்லது காதலின் வெற்றி‘ என்னும் அவருடைய தனித்தமிழ்க் கதைப்பாவியம் அக்காலச் சீர்திருத்தப்படைப்புகளிலும் தனித்தமிழ்ப்படைப்புகளிலும் மொழிபெயர்ப்புப் படைப்புகளிலும் முதலிடத்தைப் பெற்றதென ஆராய்ச்சியாளர்களால் போற்றப்படுகிறது.
பேராசிரியரின் வாழ்க்கையின் ஒரு பகுதியை – கல்லூரிப்பணியினின்று நீக்கப்பட்ட அவலத்தை – மரபு நடையிலும் புதுக்கவிதைப் போக்கிலும் எழுதிய ‘துரத்தப்பட்டேன்’ என்னும் பாவியம் அக்காலத்தில் அனைத்துத் தரப்பினரின் மிகப்பெரிய வரவேற்பைப்பெற்றது. ‘என் வாழ்க்கைப்போர் (இளமைப்பருவம்)’ என்னும் தன்வரலாற்று நூல் பேராசிரியரின் தமிழ்ப்போர்க்களத்தைக் காட்சிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
சங்க இலக்கியத்தை மக்கள் இலக்கியமாக மாற்றிய பேராசிரியரின் ‘‘அம்மூவனார், மாமூலனார் காதல் காட்சிகள்(சங்க இலக்கியச் சொல்லோவியங்கள்), இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல்’’ ஆகியன சங்க இலக்கியச் சிறப்புகளை ஆழமாகவும் எளிமையாகவும் மக்களிடையே உணர்த்தின; பழந்தமிழர் உயர்வைப் பாரறியச் செய்து வருகின்றன.
குறட்பணியை வாழ்நாள் பணியாகக் கொண்டிருந்த பேராசிரியரின் ‘‘அமைச்சர்யார்?, எல்லோரும் இந்நாட்டுமன்னர், திருக்குறள் எளிய பொழிப்புரை, வள்ளுவர் வகுத்த அரசியல், வள்ளுவர் கண்ட இல்லறம்’’ முதலானவை பல்வேறு கண்ணோட்டங்கள் வாயிலாக வள்ளுவத்தை மக்களிடையே பரப்புவதில் வெற்றி கண்டன. பின் மூன்று நூல்கள் இன்றைக்கும் திருக்குறளை வழிகாட்டியாகக் கொள்வதற்கு வரவேற்பைப் பெற்று வருகின்றன.
‘‘தொல்காப்பிய ஆராய்ச்சி, பழந்தமிழ்,’’ ஆகிய நூல்கள் பழந்தமிழ் வளத்தையும் நலத்தையும் நன்கு அறிய உதவுகின்றன.
‘தமிழ் கற்பிக்கும் முறை’ தமிழைப் பிழையின்றியும் எளிமையாகவும் அயல் மொழியினரும் கற்கும் வகையிலும் தமிழ் கற்பிக்க தக்க வழிகாட்டிநூலாக அமைந்தது.
கருமவீரர் காமராசர் பற்றி அறியவும், அரசு தமிழுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை அறிவுறுத்தவும் அமைந்த நூலே பேராசிரியரின் ‘கருமவீரர் காமராசர்’ என்னும் நூலாகும்.
தமிழிசைப்பாடல்கள், ‘மாணவர் ஆற்றுப்படை’, வாழ்த்துப்பாக்கள், நினைவுப் பாக்கள் முதலான பல வகையிலும் அமைந்த பாடல்கள் ஆகியன பேராசிரியரின் பாடற்புலமைக்குத் தக்க சான்றுகளாகும்.
இதழ்களிலும் மலர்களிலும் வெளிவந்துள்ள பேராசிரியரின் கட்டுரைகளும் தமிழையே மூச்சாகக் கொண்ட அவரின் சீர்மையையும் நுண்மையையும் விளக்குவனவாக அமைந்துள்ளன.
படிப்போரை மட்டும் பாங்குற வழிநடத்தும் படைப்புப் பணியுடன் பேராசிரியர் நின்று விடவில்லை. ‘‘சங்க இலக்கியம், இலக்கியம், குறள்நெறி, திராவிடக் கூட்டரசு, Dravidian Federation, Kuralneri’’ முதலான பல இதழ்கள் நடத்தியும் பொதுமக்களிடம் தமிழ்ச்சிறப்பையும் தமிழுக்கு நேர்ந்து வரம் தீங்குகளையும் அவற்றைக் களைய வேண்டிய கடமைகளையும் விளக்கினார். அவரது மக்கட் பணியே ‘தமிழர் தளபதி’ எனத் தந்தை பெரியாரால் அவரைப் போற்றச் செய்தது.
தாம் பணியாற்றிய நகர்கள் யாவிலும் தமிழ் அமைப்புகள் நிறுவி இலவசத் தமிழ் வகுப்புகள் நடத்திப் பொதுமக்களிடம் தமிழ்க்கல்வி மீதான ஈடுபாட்டை உருவாக்கினார். தமிழ் வழிக்கல்விக்காகவும் அன்னைத் தமிழே அனைத்திலும் முதன்மை பெற வேண்டும் என்பதற்காகவும் முழக்க ஊர்வலங்கள் நடத்தியும் தமிழ்மறுமலர்ச்சி விழாக்களையும் புலவர்களைப் போற்றும் விழாக்களையும் நடத்தியும் தமிழ்க்காப்பினை மக்கள் இயக்கமாக மாற்றினார். பேராசிரியர் நிறுவித் தலைமை தாங்கிய தமிழ்க்காப்புக்கழகத்தின் செயற்பாடுகள் இந்தித்திணிப்பை எதிர்ப்பதில் மாணவர்களையும் இளைஞர்களையும் பொதுமக்களையும் ஈடுபடச் செய்தன. தமிழ் உரிமைப் பெருநடைப்பயணத்தால் பேராசிரியர் தளையிடப்பட்டுப் பதவியை இழந்தாலும் சிறை மீண்டபின்பும் வாழ்நாள் இறுதிவரையும் தமிழ்ப்பணியையே தொடர்ந்தார்.
கல்விப்பணியுடன் தமிழ்நலப்பணிகளையும் ஆற்றிய ஒரே பேராசிரியராக முத்தமிழ்ப் போர்வாள் முதுபெரும் புலவர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் திகழ்ந்ததால்தான் வான்புகழ் கொண்டு வையகமெங்கும் சிறப்பிக்கப்படுகிறார்.
பேராசிரியர் இலக்குவனார் கார்த்திகை முதல்நாள்(தி.பி.1940) நவம்பர் 17 ஆம் நாள்(கி.பி.1909) பிறந்தார். இவ்வாண்டும்(தி.பி.2042,கி.பி.2011) இரு நாள்களும் இணைந்து வந்துள்ளன. இந்நாளில் பேராசியரின் தமிழ் பரப்பிய தகைமையையும் போர்ப்பண்பையும் நாமும் கொண்டு தமிழ் சிறக்கவும் தமிழர் தன்னுரிமையுடன் திகழவும் உலகத் தமிழர் உயரவும் பாடுபட உறுதி கொள்வோம்.

Wednesday, November 16, 2011


பூவாளூர் தியாராசச் செட்டியார் ~

அறிவோம் அறிஞர்களை!

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 16/11/2011



8. புலமைக்கோர் இமயம் புகழுக்கொரு கங்கை பூவாளூர் தியாராசச் செட்டியார் (1826-1888).

மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மனத்திற்கினிய மாணவராய்த் திகழ்ந்த இப்பெருமகனார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழைப் பேணிக் காத்த பெரியார்களுள் என்றும் நினைத்தக்கத்தவர்.

 

Tuesday, November 15, 2011


அருளாளர் இராமலிங்கர் ~ அறிவோம் அறிஞர்களை!

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 15/11/2011



7. திருவருட் செல்வர் தெய்வத்தமிழ் வள்ளலார் அருளாளர் இராமலிங்கர் (1823-1874).

உருக்கமும், பக்திப் பெருக்கமும் மிளிர, உள்ளத்தைக் கனிவிக்கும் தித்திப்புத் தமிழில்… இப்பெருமான் உருவாக்கி அருளிய பாடல்கள் பக்தியுணர்வை மட்டுமின்றி பைந்தமிழுணர்வையும் செழிக்கச் செய்தன.
0

Monday, November 14, 2011


ஆறுமுக நாவலர் 

அறிவோம் அறிஞர்களை!

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 14/11/2011



6. சிவநெறிச் செல்வர் 
   செழுந்தமிழ்ப் புலவர் அறிஞர் ஆறுமுக நாவலர் (1822).


தமிழில் என்ன இருக்கிறது?’ எனக் கேட்டு அறியாமையில் ஆழ்ந்து கிடந்த தமிழரை, நாவலர் பெருமானின் சொல்லாற்றல், எழுச்சி பெறச்செய்தது எங்கள் தமிழ்! எங்கள் தமிழ் எனப் பெருமிதம கொள்ள வைத்தது.

»

Sunday, November 13, 2011


அறிஞர். சி.யு.போப் ~ அறிவோம் அறிஞர்களை!

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 13/11/2011


5. சீரியதமிழ்க் காதலர் செந்தமிழ்ச் செம்மல் 
முனைவர். சி.யு.போப் (1820-1908).

அற நூல்களான திருக்குறளை நாலடியாரை, சமய நூலான திருவாசகத்தை ஐரோப்பியர் கற்றுணர வேண்டுமென்னும் தாகத்தால் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தருளிய பேரறிவாளர்.










Saturday, November 12, 2011

மகாவித்துவான் 

மீனாட்சிசுந்தரம் பிள்ளை ~ 

அறிவோம் அறிஞர்களை!

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 12/11/2011


4. கருவிலே தமிழுடையார் கவிப்பெருங்கடல் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை (1815-1876)

“தமிழ் இலக்கிய வரலாற்றில் கம்பருக்குப் பின்னர், ஓராயிரம் ஆண்டு ஓய்ந்து கிடந்த பின், வாராது வந்துதித்த, புலமைக் கதிரவன்” எனத் தமிழறிஞர்கள் போற்றிய தெய்வப் புலமை பெற்ற தென்மொழிப் பெரும் புலவர்.


Friday, November 11, 2011


முனைவர் இராபர்ட் கால்டுவெல் ~ 

அறிவோம் அறிஞர்களை!

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 11/11/2011


3. ஆற்றல்மிகு மொழிவல்லார் அயர்லாந்துத் தமிழறிஞர்
 
முனைவர் இராபர்ட் கால்டுவெல் (1814-1891). 

பெயர்களை ‘உயர்திணை’ என்றும், ‘அஃறிணை’ என்றும் தமிழ் இலக்கண நூலோர் வகுத்த முறை. உலகத்தில் வேறெந்த மொழியிலும் இல்லாத பகுப்பு. இது தமிழின் தனிச் சிறப்பு என்றார் இப்பேரறிஞர்.

 

Know our Scholars 2

 

 

கவிஞர் வேதநாயக சாசுதிரியார் ~ அறிவோம் அறிஞர்களை!

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 10/11/2011



.
கிறித்தவ வேதாகமங்களின் பிழிவை. மிக எளிமையாகவும் இனிமையாகவும் ஆயிரக்கணக்கான பாடல்களாக மலர்வித்த இப்பெருந்தகையைச் ‘சாசுதிரியார்’ எனக் கிறித்தவ உலகம் போற்றியது.

அறிவோம் அறிஞர்களை!


பதிவு செய்த நாள் : 08/11/2011




1.எண்ணங்களைப் பாடலாக்கிய அடுத்த விநாடியே. அவை எதிரே நடந்துவிடும் அற்புதத்தைக் கண்களில் காணவைத்த நிறைமொழிப் புலவர் அறம் பாடிய அருட்புலவர்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்


Tuesday, November 01, 2011

பாதியில் முடிந்த பயணம் - கிருட்டிணன் நம்பி!

First Published : 30 Oct 2011 03:08:23 AM 


தமிழில் குழந்தைகளுக்காகக் கவிதை, கதை எழுதியவர்கள் மிகக் குறைவு. இதில் குழந்தைகள் விரும்பியபடி எழுதிய எழுத்தாளர்கள் மிக மிகக் குறைவு. அந்த மிகக் குறைவானவர்களுள் குறிப்பிடத்தக்கவர் நாஞ்சில் நாட்டு எழுத்தாளர் கிருஷ்ணன் நம்பி.கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை அடுத்துள்ள அழகிய பாண்டியபுரத்தில் 1932-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24-ஆம் தேதி பிறந்தார். கிருஷ்ணன் நம்பியின் இயற்பெயர் அழகிய நம்பி. இது இவருடைய தந்தைவழிப் பாட்டனார் பெயர். இவருடைய தந்தை கிருஷ்ண அய்யர் - தாயார் கமலாக்ஷி அம்மாள். முதல் குழந்தையான கிருஷ்ணன் நம்பியுடன் பிறந்தவர்கள் மூன்று பேர். ஒரு சகோதரர் இரண்டு சகோதரிகள். அழகியபாண்டியபுரத்தில் விவசாயம் செய்துவந்த கிருஷ்ண அய்யர்தான் நாகர்கோவில் பகுதியில் முதன்முதலாக உரக்கடையைத் தொடங்கியவர். உர வியாபாரம் நன்றாக நடைபெறவே 1941-ஆம் ஆண்டு நம்பியின் தந்தை அழகிய பாண்டியபுரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு குடும்பத்தை மாற்றினார். நாகர்கோவிலில் உள்ள எஸ்.எம்.ஆர்.வி உயர்நிலைப் பள்ளியிலும் சேது லெட்சுமிபாய் உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிப்படிப்பை முடித்தார். படிப்பில் ஆர்வமற்றவராகவே கிருஷ்ணன் நம்பி இருந்தார். பள்ளி இறுதி வகுப்பில் இரண்டாவது முறையாகத்தான் அவரால் தேர்ச்சி பெறமுடிந்தது. பின்பு, நாகர்கோவில் இந்துக் கல்லூரியில் சேர்ந்து இண்டர்மீடியட் படித்தார். அதில் இறுதித் தேர்வில் அவரால் தேர்ச்சிபெற முடியவில்லை. அத்துடன் அவரது படிப்பு ஒரு முடிவுக்கு வந்தது.சிறு வயதிலேயே நூலகம் சென்று படிக்கும் பழக்கம் கிருஷ்ணன் நம்பிக்கு இருந்தது. அக்காலத்தில் ஆனந்தவிகடனில் வந்த குழந்தைப் பக்கங்கள் நம்பிக்கு இலக்கியத்தின் வாசலைத் திறந்துவிட்டன. பள்ளியில் இவருடைய வகுப்புத் தோழராக இருந்தவர் எழுத்தாளர் மா.அரங்கநாதன். இருவரும் சேர்ந்து அக்கால கட்டத்தில் வந்த துப்பறியும் கதைகளைப் போலவே எழுதிப் பார்த்தனர். கிருஷ்ணன் நம்பி எழுதி முதலில் பிரசுரமானது ஒரு கட்டுரைதான். நாட்டுப்பாடல்கள் குறித்த அந்தக் கட்டுரை வை.கோவிந்தன் நடத்திய "சக்தி' இதழில் பிரசுரமானது. கி.வா.ஜ. ஆசிரியராக இருந்த "கலைமகள்' இதழின் குழுவைச் சார்ந்தவர்கள் "கண்ணன்' என்ற குழந்தைகள் இதழினையும் நடத்தினர். எழுத்தாளர் ஆர்.வி.தான் அதன் ஆசிரியர். நம்பியின் பல குழந்தைக் கவிதைகள் இந்த இதழில்தான் பிரசுரமாயின. கிருஷ்ணன் நம்பி மிகச்சிறந்த குழந்தை எழுத்தாளராக ஆர்.வி.யால் அடையாளம் காணப்பட்டார். கிருஷ்ணன் நம்பி குழந்தைக் கவிதைகளை "சசிதேவன்' என்ற புனைபெயரில் எழுதினார். "கிளிப்பண்டிதர்' என்ற பெயரில் குறிப்புகளையும் "சாது சாஸ்திரி' என்ற பெயரில் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார்.படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்த நம்பியை, நம்பியின் தந்தை தன்னுடைய வியாபாரத்தை கவனிக்க வேண்டி கட்டாயப்படுத்தினார். ஆனால், நம்பியால் வியாபாரத்தில் நாட்டம் கொள்ள முடியவில்லை. தொடர்ந்து இலக்கியத்தின் வழியே இவரின் மனம் செல்லத் தொடங்கியது. கண்ணன் இதழில் வெளிவந்த இவரின் கவிதைகள் இவருக்குப் புது உற்சாகத்தைக் கொடுத்தன. கண்ணன் இதழைத் தொடர்ந்து தொ.மு.சி.ரகுநாதன் ஆசிரியராக இருந்த சாந்தி, வ.விஜயபாஸ்கரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவந்த சரஸ்வதி, ப.ஜீவானந்தம் ஆசிரியராக இருந்த தாமரை ஆகிய இதழ்களில் இவருடைய கதைகள் பிரசுரமாயின. இவர் எழுதிய முதல் கதை "நீலக்கடல்' என்றாலும், "சுதந்திர தினம்' என்ற கதைதான் சரஸ்வதி இதழில் முதலில் பிரசுரமானது. கிருஷ்ணன் நம்பி இக்கால கட்டத்தில்தான் தன்னை ஓர் எழுத்தாளராக நிலை நிறுத்திக்கொண்டார். சாந்தி, சரஸ்வதி, தாமரை தவிர, கணையாழி, கலைமகள், சதங்கை, கல்கி, ஆனந்தவிகடன் முதலிய இதழ்களிலும் இவருடைய படைப்புகள் பிரசுரமாயின. கதை, கவிதை எழுதுவதைத் தவிர இசையிலும் ஆர்வம் மிக்கவராக இருந்தார். புதுமைப்பித்தன் நினைவு மலர் ஒன்றை எழுத்தாளர் சுந்தர ராமசாமி கொண்டுவந்தபோதுதான் கிருஷ்ணன் நம்பிக்கும் சுந்தர ராமசாமிக்கும் நட்பு ஏற்பட்டது. சுந்தர ராமசாமியுடனான நட்பு கிருஷ்ணன் நம்பிக்கு எல்லாவகையிலும் பலம்வாய்ந்த ஒன்றாக இருந்தது. இலக்கியத்தின் ஆழத்தையும் விரிவையும் கிருஷ்ணன் நம்பி, சுந்தர ராமசாமியின் மூலமாகக் கண்டிருக்கிறார். நம்பிக்கு இயல்பாகவே இருந்த இசையார்வமும் இலக்கிய தாகமும் இருவரும் சுமார் 25 வருடங்கள் நண்பர்களாகத் தொடர காரணமாக இருந்திருக்கின்றன. கிருஷ்ணன் நம்பி, 1958-ஆம் ஆண்டு ஜெயலட்சுமி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். பெற்றோர் பார்த்து முடித்தத் திருமணம். அப்பாவின் உர வியாபாரத்தில் விருப்பமில்லாததால் "நவசக்தி' இதழில் மாதம் எண்பது ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்குச் சேர்ந்தார். இக்கால கட்டத்தில்தான் கிருஷ்ணன் நம்பிக்கு சென்னையிலிருந்த ஜீவாவின் நட்பு கிடைத்தது. உள்ளூர்க்காரர் என்பதால் ஜீவாவுக்கும் நம்பியிடம் அன்பு அதிகம். நம்பியின் கதைகளை ஜீவா கேட்டு வாங்கி தாமரை இதழில் பிரசுரம் செய்தார். ஒரு கட்டத்தில் வேலையை விட்டு நாகர்கோவில் திரும்பினார். ஊருக்குத் திரும்பி சிறிது காலம் அழகிய பாண்டியபுரத்தில் விவசாயம் செய்தார். பின்னாளில் அவரது தந்தையின் உடல்நிலை மோசமானதால் மொத்த நிர்வாகத்தையும் நம்பியே கவனிக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.இதற்கிடையில், சார்கோமா என்னும் எலும்பு மஜ்ஜையைத் தாக்கும் நோயால் கிருஷ்ணன் நம்பி பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறினர். கவனிக்கப்படாத இப்புற்றுநோயின் காரணமாக 1974-ஆம் ஆண்டு கிருஷ்ணன் நம்பியின் இடது காலை அறுவை சிகிச்சை செய்து எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. காலை எடுத்தபிறகு சுமார் ஒன்றரை ஆண்டுகள் நம்பி உயிருடன் இருந்தார். பின்னர், 1976-ஆம் ஆண்டு ஜூன் 16-ஆம் தேதி கிருஷ்ணன் நம்பியின் உயிர் பிரிந்தது. கிருஷ்ணன் நம்பிக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள்.கிருஷ்ணன் நம்பியின் 39 குழந்தைப் பாடல்களையும் தொகுத்து, 1965-ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தகாலயம் "யானை என்ன யானை' என்ற பெயரில் புத்தகமாகக் கொண்டு வந்தது. "நீலக்கடல்' என்ற கதைத்தொகுப்பை 1965-ஆம் ஆண்டு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்டது. "காலை முதல்' என்ற கதைத் தொகுப்பை 1966-ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி புத்தக நிலையம் கொண்டு வந்தது. இந்த இரு தொகுப்புகளையும் சேர்த்து ஸ்நேகா பதிப்பகம், "கிருஷ்ணன் நம்பி கதைகள்' (1995) என்ற பெயரில் ஒரே தொகுப்பாகப் பதிப்பித்தது.இவை தவிர, கிருஷ்ணன் நம்பி படைப்புலகம் என்கிற நூல் அவரது தம்பி கே.வெங்கடாசலத்தால் 2001-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இறுதியாக, கிருஷ்ணன் நம்பியின் அனைத்துப் படைப்புகளையும் ராஜமார்த்தாண்டன் தொகுத்து "கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள்' என்ற பெயரில் காலச்சுவடு பதிப்பகம் மூலமாக வெளியிட்டுள்ளார்.குழந்தைகள் உலகத்தை தம் படைப்புகளின் மூலமாக மீட்டெடுக்க முயன்ற கிருஷ்ணன் நம்பியின் எண்ணம் முழுமையடையும் முன்பே புற்றுநோய்க்கு தன் உடலைத் தின்னக் கொடுத்தார். "யானை என்ன யானை' என்ற ஒற்றைக் கவிதைத் தொகுப்பின் மூலமாக குழந்தைகளின் மனங்களை வசீகரித்த கிருஷ்ணன் நம்பியின் பயணம், இலக்கை அடையாமல் பாதியிலேயே முடிந்துபோனது.