Saturday, August 19, 2017

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙெ) – இலக்குவனார் திருவள்ளுவன்


[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙூ) தொடர்ச்சி]

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙெ)

 உலகத் தமிழ் மாநாட்டில் பேராசிரியர் இலக்குவனாரை எதிர்பார்த்து ஏமாற்றமுற்ற பிற நாட்டுஅறிஞர்களும் தத்தம் நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்குப் பேராசிரியரை  அழைத்தனர். பேராசிரியரும் ஐரோப்பிய நாடுகள், ஆசிய நாடுகள் என ஒவ்வொரு பகுதியாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மொழிகளின் தாயாம் தமிழின் சிறப்பைப் பரப்பத் திட்டமிட்டார். முதலில் திசம்பர் 1970 இல் பயணம் மேற்கொள்வதாக இருந்தார். இதுகுறித்து  11.10.70 குறள்நெறியில் வந்த செய்தி வருமாறு:
 பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களுக்கு உலகச் சுற்றுப்பயணச் செலவுச் சீட்டுகிடைத்துள்ளது. உலகப் பெருநாடுகளின் பல்கலைக்கழகங்களின் மொழி ஆராய்ச்சித் துறையினரிடமிருந்து அழைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன.
 தொல்காப்பியம், திருக்குறள், சங்க இலக்கியம் முதலியனபற்றி விரிவுரையாற்றவும் இதுவரை வடமொழிப் பற்றாளரால் பரப்பப்பட்டுவந்துள்ள தவறான கருத்துகளைச் சான்றுகளுடன் மறுத்துரைக்கவும் இப்பயணத்தை மேற்கொள்கின்றார். இவருடன் இந்துக்கல்லூரி ஆட்சிக்குழுத்தலைவரும் புகழ்பெற்ற வழக்குரைஞருமான கிருட்டின பிள்ளையும் செல்லுகின்றார். இப்பயணம் திசம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்படலாம்.
 பணி நிறைவு தொடர்பாகத் துணைவேந்தர் சிக்கலை எழுப்பி நெருக்கடி அளித்தமையால் அப்பொழுது அயலகப் பயணம் மேற்கொள்ளவில்லை. நாகர்கோயிலில் இந்துக்கல்லூரி முதல்வராக 1971 மேத்திங்கள்வரை அதாவது 70-71 ஆம் கல்வி ஆண்டுமுழுமையும் பேராசிரியர் பணியாற்றுதற்கு உரியவர். ஆனால், துணைவேந்தர் தெ.பொ.மீ. நடைமுறை ஆண்டிலேயே ஓய்வு பெற வேண்டும் எனக் கட்டாயப்படுத்தி  25.12.1970 இல் ஓய்வு பெற வைத்தார். மாற்றான் தோட்டத்து மல்லிகையைப் போற்றத் தெரிந்தவர்களால் முற்றத்து முல்லையைக் காக்கத் தெரியாமையால் தமிழ், தமிழ், தமிழ் எனத் தமிழாக வாழ்ந்து வதைபடுபவருக்கு உரிய சிறப்புகளைச் செய்யத் தெரியவில்லை. எனவே, பணி விடுவிப்பு வழங்கப்பட்டகொடுமை நிகழ்ந்தது.
 தமிழ்நாடெங்கும் தம் சொந்தச்செலவில் பரப்புரை மேற்கொண்டு தமிழ்மொழி, இனப் பண்பாட்டுப்பற்றை விதைத்துத் தமிழ்உரிமை உணர்வைக் கிளர்ந்தெழச் செய்த பேராசிரியர் போதிய பொருள் வளம் பெற்றிருப்பின் தேமதுரத்தமிழோசை உலகெலாம் பரவும் வகை செய்திருப்பார். அவ்வப்போது அமைந்த பணி நீக்கங்களும் தம்வருவாயை இதழ்ப்பணிகளிலும் பிற வகையிலும் எனத் தமிழ்நாட்டிலேயே செலவிட்டதும் அயலகப் பரப்புரையை மேற்கொள்ள இடம்தரவில்லை. எனினும் கீழை ஆசிய நாடுகளுக்குத் தமிழ்த்தூதராகச்சென்று வந்தார். அதை முன்னிட்டு மதுரைத் தமிழ்ச்சங்கம் சார்பாக 10.9.71 இல் பாராட்டி வழியனுப்பும் விழா  நடைபெற்றது. அதில் நிறைவாகப்  பேராசிரியர் நன்றிஉரையாற்றினார். அவ்வுரையின் ஒரு பகுதிச் செந்தமிழ் இதழில்(செட்டம்பர் 1971: பக்கம் 63)வந்துள்ளது. அது வருமாறு:
 கீழை நாடுகளில் எனக்குத் தெரிந்த நண்பர்கள் பலர் இருக்கின்றார்கள். எனவே, அங்கு முதலில் செல்கிறேன். மேலும் வாய்ப்பு ஏற்படும்போது,மேற்கு நாடுகளுக்கும் செல்வேன். வெளி நாடுகளில் தமிழ்மொழியின் உண்மையான வரலாறு பரவவில்லை; தமிழின் மெய்ப்புகழ் தெரியவில்லை. அவற்றைத் தெளிவாகவும் விளக்கமாகவும் அங்கு எடுத்துச் சொல்வேன்.
 உலகில் பல மொழிகள் தோன்றுவதற்குமுன் இங்குத் தமிழ் பிறந்தது; வளர்ந்தது. மதுரை மாநகரில் தமிழ்ச்சங்கம் தோன்றியது. மாங்குடி மருதன் தலைமை தாங்க ஆயிரக்கணக்கான புலவர்கள் அங்குத் தங்கித் தமிழ் ஆராய்ந்தார்கள். அதற்குச் சான்றாக,
உலகமொடு நிலையஇய, பலர்புகழ்சிறப்பின்,
 மாங்குடி மருதன் தலைவனாக
 என்ற புறநானூற்றுப் பாடலையும் எடுத்துக் காட்டினார்கள்.
 மேலும்  அறிஞர் (டாக்டர் இலக்குவனார்) அவர்கள் பேசும்போது எனக்கு இறைநம்பிக்கை உண்டு. ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்ற கொள்கையில் நிற்பவன் நான். தெய்வ நம்பிக்கை வேறு. புராணக் கதைகள் வேறு. புராணக் கதைகளை நாம் ஒப்புக் கொள்ள வேண்டியதில்லை.
 நாம், இன்று நமக்குப் புரியாத வடமொழியில் அருச்சனைகள் செய்கின்றோம். இறைவனைப் போற்றுகின்றோம். வாழ்த்துகின்றோம். நல்ல தமிழால் நாளும் இறைவனை வணங்க வேண்டும். தமிழ்நாட்டுத் திருக்கோயில்களில் தமிழ்மொழியில் அருச்சனை நடைபெறவேண்டும்.
 தமிழ்மொழியில் அருச்சனைக்குரிய பாக்கள் நிறைய உள்ளன. மாணிக்கவாசகர் பாடிய, போற்றித் திரு அகவல் என்ற இலக்கியமே போதுமானதாகும். நான் வெளிநாடு சென்று வந்தபின் தமிழ் அருச்சனை தமிழ்நாட்டில் நடைபெறாவிடில், அதற்காகப் போராட்டம் ஒன்று தொடங்குவேன். அப் போராட்டத்தில் தமிழ் அன்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றேன்”- என்று அறிவித்தார்கள்.
 அதுபோன்று மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் 49 தமிழ் அறிஞர்களை மதிப்பியல் புலவர்களாகச் சேர்த்து ஒரு மன்றம் இச்சங்கத்தில் அமைக்க வேண்டும். அப்புலவர் மன்றம் தமிழ் நாட்டில்  வெளியாகும் நல்ல நல்ல நூல்களை நாடி அறிந்து அவற்றிற்குப் பரிசளித்துச் சிறப்பு செய்தல் வேண்டும். பயிற்சிமொழி என்ற தமிழ்நாடு அரசினரின் கொள்கையினைத் தமிழ்ச்சங்கம் பலவகையிலும் முயன்று பரப்புதல் வேண்டும். தனித் தமிழ் இயக்கத்தை இச்சங்கமே முன்னின்று நடாத்துதல் வேண்டும். இன்ன பிற நற்செயல்களை இத்தமிழ்ச்சங்கம் ஏற்று நடத்துமாயின் தமிழ்நாட்டின் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களின் உதவி இச்சங்கத்திற்கு உறுதியாகக் கிடைக்கும். பொதுமக்களின் ஆதரவும் இச்சங்கத்திற்குப் பெருகும்.
 வடநாட்டிலுள்ள சாந்திநிகேதன், விசுவபாரதி போன்று இத்தமிழ்ச் சங்கம் வளர்தல் வேண்டும்.
பேராசிரியர் இலக்குவனார் வழி நின்று மேற்குறித்த அவர்தம் கனவுகளை மதுரைத் தமிழ்ச்சங்கத்தார் நனவாக்க வேண்டும்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்

Thursday, August 17, 2017

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (15) – வல்லிக்கண்ணன்

 அகரமுதல 199,  ஆடி28, 2048  / ஆகத்து 13, 2017

       13 ஆகத்து 2017      கருத்திற்காக..

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன்

(15)

3.ஒருமைப்பாட்டு உணர்வு

  ‘இருபது கட்டளைகள்’ நாட்டை உயர்த்தக் கூடிய நல்ல திட்டங்களை உணர்ச்சிகரமான நடையில் சொல்லும் கவிதைகளைக் கொண்ட தொகுப்பாகும். நாடு வளமுறவும் முன்னேறவும் இளைஞர்களையே நம்பி இருக்கிறது. நாட்டின் இதயம் நல்இளைஞரேயாவர். அதனால்தான் பெருங்கவிக்கோ இளைஞரை நோக்கிப் பாடுகிறார்.
இதயங்கள் இந்த நாட்டின்
இளைஞரே நீங்கள் அன்றோ?
பதம்பெற வாழ்வுப் பாதை
பலப்பல மேன்மை கூட்ட
 நிதம்உழைப்பைத்தொ ழுங்கள்!
நிகரிலா எப்ப ணிக்கும்
இதம்பெறும் ஆற்றல்கொண்டே
ஏற்றங்கள் காண்பீர்
என்றும் சரிசம கோசலிச வாய்ப்பினை ஆக்கி வாய்மையின் துணையால் வெல்வோம் என்னும் கவிஞர் உறுதியாய்க் கூறுகிறார்.

“பணிகள்தான் இல்லை என்னும்
பாதகம் இல்லை என்போம்!
அணிபெரும் வகையில் ஓங்கும்
ஆய்பல பணிக ளுக்கும்
துணிவுடன் இளைஞர் செல்லும்
சுடர்புகழ்த் திட்டம் காப்போம்!
மணிமணியாக அன்னை
மாபூமி கொழிக்கச் செய்வோம்!”
மொழிகளினால் பேதங்கள் வளர்த்து நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு செய்வோரை வன்மையாய் கண்டிக்கிறார். கவிஞர்.
“மொழிகளிலே பேதங்கள் வளர்த்திட்டே ஒருமை தன்னை
பழிகளிலே வசை நஞ்சை வளர்க்கின்றாய் மனிதா ஏன் ஏன்?
உணவுகளில் பலவகைகள் உண்ணுவது .வயிறு ஒன்றே
மணங்களிலே பலவகைகள் நுகருவதோ மூக்குஒன்றே.
பணவகைகள் மணவகைகள் வேறெனினும் நோக்கம் ஒன்றே.
பிணமாகிப் போவதும் நமக்கொன்றே (மனிதா) பின் ஏன் கூச்சல்?
 குமரிமுதல் இமயம்வரை கொள்கைவழி சமமே செய்வோம்.
தமரினைப்போல் மதமொழி யால் வேறுபாடு வளர்ப்போர் தம்மைச்
சமம் எண்ணும் நிலை செய்வோம் அவரவரின் தாய்மொழிக்கே.
அமரநிலைதான் தருவோம் மனிதர் மதம் ஒன்றே என்போம்!”
சிந்தனையைச் செம்மைப் படுத்தி, உயர் அறிவால் ஒற்றுமை காணவேண்டியதன் முதன்மைத்துவத்தை அவர் வலியுறுத்துகிறார்.
“எல்லாருமே எல்லார்க்கும் ஒன்றென்போம் அதற்கே ஓங்கு.
வல்லமையாம் நமது மனச் சிந்தனைநன் நடைகள் காண்போம்:
பல்லாற்றும் பல்வழியும் பயனாகும் முயற்சி முற்றும்
கல்வி,உயர் அறிவாலே இந்திய்த்தாய் ஒருமை காண்போம்!”
(தொடரும்)
வல்லிக்கண்ணன்:
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (14) – வல்லிக்கண்ணன்


அகரமுதல 198,  ஆடி21, 2048 ஆகத்து 06, 2017

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன்

(14)

3.ஒருமைப்பாட்டு உணர்வு


“சுடர்முகம் காக்க வேண்டும்
சோர்வின்றி உழைக்க வேண்டும்
அடலேற்று வலிமை வேண்டும்
அஞ்சிடா வாழ்வு வேண்டும்
கடலைப்போல் உள்ளம் வேண்டும்
கறைபடாக் கரங்கள் வேண்டும்
நடமாடும் தொழிற்கூடம் வேண்டும்
நல்லுழைப்பாளர் வேண்டும்
 நாடு முன்னேறுவதற்கு இந்திய நாடு முழுவதும். ஒன்றே என்ற ஒருமைப்பாட்டு உணர்வு நாட்டு மக்களிடையே வேரூன்றி வளர வேண்டும். ஏற்றமும் தாழ்வும் ஒன்றே, எந்தையர் நாடிங்கேதான் எல்லாரின் வாழ்வும் ஒன்றே என்ற வண்ணம் பரவ வேண்டும். இந்த அடிப்படையில் மகாகவி பாரதியார் கவிதையில் கனவுகள் வளர்த்தார், அதே தன்மையில் தற்காலத்துக்கு. ஏற்றபடி தன் கவிக்கனவுகளை வளர்த்திருக்கிறார் பெருங்கவிக்கோ. நடைமுறை சாத்தியமான கனவுகள் தான்.
வங்கத்தில் விளைபொருள்கள்
மையத்து நாட்டில் சேர்ப்போம்!
பொங்கிடும் இயற்கை தாயாள்
பொலிவுடைக் கேரளத்தாய்
தங்கிடும் பொருளெடுத்துத்
தலைநகர் தில்லி சேர்ப்போம்!
அங்கிங்கெனாத வாறே
அரும்பொருள் சேர்க்கைசெய்வோம்!”
இவ்வாறு மேலே மேலே அடுக்கிச் செல்கிறார்.
 ‘எல்லை ஒன்றின்றிப் பொருள்கள் சேர்ப்போம் பயன் தரு நிலையையெல்லாம் ஒருமுகமாகச் செய்வோம், உரிமைகள் சமமே என்போம்’ என்று சொல்லும் கவிஞரின் கற்பனை இனிமைகளை அழகுகளைத் தொடுகிறது கவிதை ஒட்டத்தில்.
காசுமீர் ஆப்பிள் இன்பக்
கனிச்சுவை தன்னை நம்மின்
மாசிலாக் கன்னியாகுமரி
வயல்உழை உழவன் உண்டு
பாசங்கள் பெருகச் செய்வோம்!

பயன்தரு கன்னி முத்தைக்
காசுமீர் உழத்தி பூண்டு
கலைஞானம் விளங்கச் செய்வோம்!
மேம்படு இராசசு தானின்
மென்னகைப் பெண்கள் செய்யும்
தேம்படு நுண்கலைகள்
திகழொளி இழைகள் தம்மை
தாம்பூண்டு கேரளத்துச்
சந்தனக் குமரிப் பெண்கள்
ஆம்பல்வாய் பூக்கக் காண்போம்
அழகுக்கே அழகு காண்போம்!”
(தொடரும்)
வல்லிக்கண்ணன்:
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்

Saturday, August 12, 2017

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙூ) – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல 198,  ஆடி21, 2048 ஆகத்து 06, 2017

[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙு) தொடர்ச்சி]

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙூ)

பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்குப்பின், ஆட்சியாளரின் பதவியை நிலைப்படுத்திக் கொள்வதற்கான விட்டுக் கொடுத்தல்களும் ஒத்துப்போதல்களும் எதிர்பார்த்த தமிழ்ப் பயன்களைத் தரவில்லை. இதனால் பேராசிரியர் இலக்குவனார் வேதனை உற்றார். உசுமானியாப் பல்கலைக்கழகத்திலோ, தமிழில் இருந்து பிறந்தனவே தெலுங்கு முதலான தமிழ்க்குடும்ப மொழிகள் என்னும் உண்மையை ஏற்காத தெலுங்குத் துறையினர் தெலுங்கின் மகள் தமிழ் என்றும் தெலுங்கின் தங்கை தமிழ் என்றும் உண்மைக்கு மாறான கருத்துகளைப் பரப்பி வந்தனர். அவர்களிடம் தமிழின் தொன்மையையும் தாய்மையையும் விளக்கினார். உள்ளம் ஒருபுறம் தமிழ்த் தொண்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும் மறுபுறம் நாடுகடத்தப்பட்டதாக எண்ணி வருந்தியது. தமிழ்க்கனவுகளை நிறைவேற்றும் ஆட்சி வந்த பின்பு தாம் இருக்க வேண்டிய இடம் தமிழ்நாடுதானே. ஆனால், அயலவர் நாட்டில் வாழும் சூழல் வந்து விட்டதே என வேதனை உற்றார். தமிழன்பர்களும் தமிழ்த்துறையினரும் இதே போன்ற எண்ணம்கொண்டு எழுதியும் பேசியும் வந்தனர். பேராசிரியர் இலக்குவனாருக்குத் தாய்மண் நாட்டம் மிகுந்ததால், தாம்முன்பு பணியாற்றிய தெ.தி.இந்துக்கல்லூரியினர் அழைப்பை ஏற்று அங்கே 1.6.70 இல் முதல்வராகப் பணியில் சேர்ந்தார்.
 நாகர்கோயில் தெ.தி.இந்துக்கல்லூரியில் முதல்வராகப் பணியில் சேர்ந்ததும் பேராசிரியர் இலக்குவனாரால் கல்லூரி பொலிவு பெற்றது குறித்தும் அவரது பண்புநலன் குறித்தும் அங்குப் பணியாற்றிய முனைவர் ச.சுப்பிரமணியன் பின்வருமாறு தெரிவித்துள்ளார் (வீ.முத்துச்சாமி: இலக்குவனாரின் ஆய்வுப்பண்பு):
 “பேராசிரியர் இலக்குவனார். முன்னறிவிப்பில்லாதபடிப் பேசச் சொல்லினும் நன்கு பேசும் நல்லாற்றல் படைத்தவர்கள். பகுத்தறிவோடு எதிர்நீத்தம் செய்யவல்ல புலமையாளர்.
 வகுப்பில் சென்று ஓய்வெடுக்கும் பழக்கம் பேராசிரியர் இலக்குவனார் அவர்களிடம் யான் கண்டதில்லை. அஞ்சாது சென்று, எப்பாடத்தையும் கற்பிக்கும் இயல்பினர். பலவாண்டுப் பயிற்சியால் முன் தயாரிப்புக்கூட வேண்டாதபடிக் கற்பிப்பார். சிலபோது புதிய சிந்தனைகளையும் புகுத்துவார். நாநலம், பரந்த செய்தியினை அவர் வகுப்பில் காணலாம்.
 பேராசிரியர் இலக்குவனார் அவர்களைப் போல்  ஆசிரியர் குலத்தில் அஞ்சா நெஞ்சத் தலைவரை நான் பார்த்ததில்லை. பிற நிலையிலும் அவர்கள் அவ்வாறே. அன்புக்கு மிக்க அன்பாவார். பண்புக்குப் பண்பாவார். பகைக்குப் பகையாவதற்குத் தயங்கார். பொருளால் அவர்களுக்குச் செலவு மிகவுண்டு. வரவு அதற்குத் தக்கவாறில்லை. ஆயினும் கொடைக்கும், ஏழைக்கிரங்கிப் பொருளுதவி புரிவதற்கும் தயங்கார். தந்நிலை தெரிந்தும் செலவிற்கஞ்சிச் சிறியராகார். ஏழை என்று தெரிந்தால் எவ்வகையினும் உதவ முயல்வார்.  முற்போக்கு எண்ணமுடையவர். தவறு என்று கண்டால் யாரையும் எதிர்க்கத் தயங்கார். அவர் ஆற்றல் அளவிடற்கரியதாகும்.
 தமிழ் அவர்க்குயிர். திருக்குறள் அவர்க்குத் தேன். இவ்விரண்டையும் யாரும் குறைகூறக் கேட்டால் அவர் முகம் அவர் நாவிலிருந்து பின்வரும் சொல்லுக்கு முன்னோடியாகும்.
 …குடும்பப் பாரத்தால் பொருள்தேவை மிகவிருந்தும் தம் தரத்தில் குறையவில்லை பலநிலையில்.”

சிறப்பான கல்வியையும் தமிழுணர்வையும் ஊட்டி வழக்கம்போல் சிறப்பாகப் பேராசிரியர் இலக்குவனார் பணியாற்றுகையில் அடுத்த உலகத்தமிழ்மாநாடு பற்றிய அறிவிப்பு வந்தது. இதற்கிணங்கப் பிரான்சில் நடைபெற்ற (சூலை 15-18,1970) மூன்றாவது உலகத்தமிழ் மாநாட்டில் பேராசிரியர் இலக்குவனார் பங்கேற்பார் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். அந்த நம்பிக்கையை அப்போதைய முதல்வர் விதைத்திருந்தாலும் மாநாட்டுப் பேராளர்கள் அறிவிப்பில் பேராசிரியர் பெயர் இல்லை. உலகத் தமிழ் மாநாட்டில் ஏன் பங்கேற்கவில்லை எனப் பேராசிரியரிடம் செய்தியாளர்கள் கேட்ட பொழுது, தமிழறிஞர்களைப் பங்கேற்கச் செய்ய வேண்டும் என்னும் திட்டம் இருப்பின் என்னையும் அனுப்பியிருப்பர். ஆனால், கட்சிகளின் சார்பாளர்களாக அனுப்பப்பட்டிருப்பதால் எக்கட்சியையும் சாராத தான் அனுப்பிவைக்கப்படவில்லை என்றார். இது குறித்து அப்போதைய முதல்வரிடம் செய்தியாளர்கள் வினவிய பொழுது, அக்கால மன்னர்கள் புலவர்களாகவும் இருந்துள்ளனர். அதுபோல் இப்போதைய ஆட்சியாளர்கள் புலவர்களாகவும் திகழ்வதால் பங்கேற் கின்றனர் என மழுப்பினார்.  எனினும் (உலகத் தமிழ் மாநாடு முடிந்த பின்னர்) பேராசிரியர் வராமையால் வருந்திய அறிஞர்களால், பிரான்சு நாட்டிற்கு வருமாறு அழைப்பு வந்தது. அவர்களின் செலவேற்பாட்டில் அழைப்பதாகவும் ஆனால், பிரெஞ்சு அல்லது தமிழ் தவிர ஆங்கிலம் போன்ற வேறுமொழியில்பேசுவதாக இருப்பின் பேராசிரியர் தம் சொந்தச் செலவில் மொழிபெயர்ப்பாளரை அழைத்து வர வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தனர். பிரான்சு நாட்டினரின் மொழிப்பற்றைப் பேராசிரியர் வியந்து போற்றினார். எனினும் தாம் பின்னர் வருவதாகத் தெரிவித்தார். ஆனால், அத்தகைய வாய்ப்பு அமையவில்லை.
 பேராசிரியர் சி.இலக்குவனார் நிறுவிய குறள்நெறி இதழை அவர் இரண்டாம் மகன்  பேரா.மறைமலை(அப்பொழுது மாணாக்கராக இருந்தார்) நடத்தி வந்தார். எனினும் எதிர்பாரா நேர்ச்சிக்கு ஆளானமையால் 1969 இல் இதழை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. தமிழகம் திரும்பிய பேராசிரியர் தமிழால் அமைந்த அரசால் தமிழ்ப்பகைவர்கள் பயன்பெற்றுத் தமிழுக்கு எதிர்பார்த்த நன்மை விளையாதது கண்டு உள்ளம் வெதும்பினார்.
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்
என்பது தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருள் நெறி அல்லவா? எனவே, மீண்டும் இதழ்ப்பணியில் ஈடுபட விழைந்தார். தமிழ் முனை, தமிழ் உலகம்,  என்பனபோல் தமிழ் எனத் தொடங்கும் பெயர்களைக் கொடுத்து அவற்றில் ஒன்றிற்கு இதழ்இசைவு தர வேண்டினார். ஆனால் இசைவு கிடைக்கவில்லை. ஒருமைப்பாடு, ஒற்றுமை என்ற பெயர்களை அளித்தார். இவை யாவும் இந்திய ஒருமைப்பாடு அல்லது ஒற்றுமைக்கு எதிரான தமிழக ஒருமைப்பாடு அல்லது தமிழர் ஒற்றுமையைக் குறிப்பன என அதற்கும் மறுப்பே விடையாக வந்தது. தூய்மை என்ற பெயரை வேண்டியதற்குத் தனித்தமிழ் என்ற போர்வையில் தனித் தமிழ் நாடு கேட்பதற்கான இதழ் என மறுத்தனர்.
  மாநிலத் தன்னாட்சி என்றெல்லாம் பேசுகின்றோம். இன்றைக்கும் இதழ்களின் பெயரை முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது. ‘தமிழ்த்தென்றல்’ எனப் பதிவு வேண்டியவர்க்கு மாருதம் என்றால் யாவருக்கும் தெரியும்;  ‘தமிழ் மாருதம்’ என வையுங்கள் எனக் கூறி அதை ஒப்புக் கொண்ட பின்பே இசைவு தந்தனர்.  ‘செந்தமிழ்’ இதழிற்கான அஞ்சல் இசைவாணை விவரம் கிடைக்காததால் புதியதாகப் பதிவு முயற்சி மேற்கொண்ட  பொழுது ‘செந்தமிழ்’ என்னும் பெயரை மாற்றுமாறு தெரிவித்தனர். மாறி மாறி ஆட்சியில் இருப்பவர்களும் இருந்தவர்களும் ஏதேனும் ஒரு சமயம் மத்தியில் பங்கு வகிப்பதால் அதைப் பயன்படுத்தி மாநில உரிமைகளை மீட்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் வேறு நோக்கில் செயல்படுவதால் நம் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. இந்நிலை என்று மாறும் எனத் தெரியவில்லை.
 இறுதியில் முன்பு நடத்திய குறள்நெறிப் பெயரையே தருவதாகக் கூறினர். அதனையே ஏற்றுப் பேராசிரியர் இலக்குவனார் குறள்நெறி இதழைத் தொடங்கினார். அதன் தேவை குறித்துப் பின்வருமாறு ஆசிரியருரையில் தெரிவித்தார்:
 “இப்பொழுது தூய தமிழ்ப் பற்று மக்களிடையே குறைந்து வருகின்றது. வண்டமிழ்க் காப்புக்குரிய மாணவர் அணியும் திசைமாறிச் செல்லத் தொடங்கியுள்ளது. தமிழ்ப் பகைவர்கள் ஆங்காங்குத் தலை காட்டத் தொடங்கியுள்ளனர். தமிழ்ப் பற்றாளர் போல் நடித்து தமிழக அரசால் பயனும் பெறத் தொடங்கியுள்ளனர். இந்தி வல்லாண்மை இன்னும் ஒழிந்த பாடும் இல்லை. ஆகவே, குறள்நெறியின் தொண்டு மீண்டும் வேண்டப்படுகின்றது. இதழ் ஒன்றை வெளியிடுவதனால் ஏற்படும் இடர்ப்பாடுகளை நன்கறிவேன். பல முறை எண்ணி எண்ணி மீண்டும் வேண்டாம் இந்தத் தொல்லை என்று வாளாமை பூண்டதும் உண்டு. ஆயினும் தமிழ் நாட்டுச் சூழ்நிலை குறள்நெறியின் தொண்டை வேண்டி நிற்கின்றது என்ற உணர்வு என் உள்ளத்தில் மேலோங்கி எழுந்துள்ளது. ஆங்காங்குள்ள அன்பர்கள், குறள்நெறியை மீண்டும் தொடங்குங்கள் என்று அன்பாணை பிறப்பிக்கின்றனர். தமிழ்ப் பணி புரிவோர்க்கு ஒரு கருவியும் வேண்டப்படுகின்றது. ஆதலின் குறள்நெறியை மீண்டும் தொடங்குகின்றேன்.”

குறள்நெறி (மலர் 4 : இதழ் 1) : புரட்டாசி 25, 1995 : 11.10.70

(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்