Friday, April 29, 2016

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 22: ம. இராமச்சந்திரன்




தலைப்பு-இலக்குவனார்கவிதைகள் : ilakkuvanar kavithaikal_or_aayvu_thalaippu

22

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 22: ம. இராமச்சந்திரன்

அமெரிக்காவின் அழைப்பு
  இன்றைய உலகில் எங்கு நோக்கினும் போட்டியும் பூசலுமே நிலவுகின்றன. இவை நாட்டைத் துன்புறுத்தும் கேடான செய்திகளாம். அறிஞர் அண்ணா அவர்களின் ஆட்சித் திறத்தால் நம்முடைய இனிய தமிழ்நாட்டில் அமைதியும் ஒழுங்கும் குடிகொண்டு விளங்குகின்றது. இந்நிலவுலகத்தின் இதனை அறிந்த மக்கள் ஒவ்வொருவரும் தம்முடைய நாட்டில் தலைவர் அண்ணா அவர்கள் காட்சி தர வேண்டும். களிப்பினை நல்க வேண்டும் என்றே விரும்பினர். அனைவரும் அழைக்க எண்ணுகையில் எதிலும் முன்றிற்கும் செல்வச் சிறப்புடைய அமெரிக்கா இதிலும் முந்திக்கொண்டது. சீர்மிகுந்த பெருமை கொண்டதால் அண்ணாவை அழைத்துப் பெருமையும் பெற்றுக் கொண்டது.
அண்ணாவின் இசைவு
   உலகில் புகழ் படைத்த பல்கலைக்கழகங்களில் ஒன்று ஏல் பல்கலைக்கழகம். உலகத்தில் புகழ்ப்படைத்த அரசியல் தலைவர்களை அழைத்துச் சிறப்புச் செய்வது அப்பல்கலைக்கழத்தின் தலையாய நோக்கங்களுள் ஒன்றாகும். அரசியல் நெறியில் உயர் இடம் பெற்று விளங்கிய அண்ணா அவர்களை ஏல்பல்கலைக்கழகம் விருப்புடன் அழைத்தது. அழைப்பை அன்புடன் ஏற்று அமெரிக்கா சென்றார் அண்ணா.
தமிழ் உரு
  தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்கா சென்று வந்தவர் ஆயிரக்கணக்கில்  உள்ளனர். எனினும் தமிழ் உள்ளங்கொண்டு சென்று தமிழ்ப் புகழ் பரப்பி வந்தவர் எத்தனை பேர் உள்ளனர்?  விரல்விட்டு எண்ணக்கூடிய மிகச் சிலரே இருப்பர்.
  புகழ் பெற்று விளங்கும் அண்ணாவை அறிந்தோர், தமிழ் மொழியின் சிறப்பையும் அறிந்திட வேண்டும் என்னும் விருப்பம் கொள்வர். எனவே தளராத புகழுடைய தொல்காப்பியத்தையும், உலகமக்கள் அனைவர்க்கும் பொதுமறை எனப் போற்றத்தகும் சிறப்புடைய திருக்குறள் நூலையும், படிப்பவர் மனத்தைக் கொள்ளை கொள்ளும் நீண்ட பெரிய புகழுடைய சிலப்பதிகாரம் என்னும் நூலையும் அண்ணா அவர்கள் தம்முடன் கொண்டு சென்றார். தமிழ்த்தாயே உருவெடுத்துச் செல்வது போலவும் செந்தமிழ் நாட்டினர் பண்பெல்லாம் திரண்டு பருவுடல் கொண்டு செல்வது போலவும் அண்ணா அவர்கள் சென்றார்கள். பல்லாயிரக்கணக்கான தமிழ் அன்பர்கள் மீனம்பாக்கம் விண்வழித்துறையில் ஒருங்கு திரண்டு மகிழ்ச்சி பொங்க வாழ்த்துப் பல கூறி வணங்கிக் கைகூப்பி வழியனுப்பி வைத்தனர்.
  அண்ணா அவர்களுக்கு இனிய துணையாகத் தமிழக அரசின் செயலாளர் சொக்கலிங்கனாரும் உடன் சென்றார். புன்னகை தவழும் பொலிவு பெற்ற முகமும், அன்பும் ஆற்றலும் உடையவர். அடக்கமும் பண்பும் வாய்க்கப் பெற்று தமக்குரிய அணிகலனாய்த் தோற்றங் கொண்டவர் சொக்கலிங்கம்.  அண்ணா அவர்களின் மதிவழிச் செயல்படும் தனிச் செயலாளராக, தழுவும் நிழலாக உடன் சென்றார். ஏப்பிரல் திங்களில் உலகப் பயணம் மேற்கொண்டு தமிழ் நிலத்தைவிட்டுப் பிரிந்து சென்றார் அண்ணா. பரிதியைப் பிரியும் தாமரை மலர்போல வாடிய முகத்துடன் விடை கொடுத்தார் தமிழ் மக்கள். எனினும் உள்ளத்தில் மகிழ்ச்சி அடைந்தனர். இதனை,
ஞாயிறு பிரியும் நல்மரை மலரென
வாடிய முகத்துடன் மகிழ்ந்தே நின்றோம் 54
எனக் கூறுகிறார் பேரா.சி.இலக்குவனார்.
  சென்னையில் ஆளுநராக விளங்கியவர் ‘ஏல்’ என்னும் பெயர் பெற்ற துரைமகனார். அவர் வழங்கிய கொடையால் வளர்ந்து உருவானது. ‘ஏல்’ பல்கலைக்கழகம். ஏல் பல்கலைக்கழகத்தில் ‘எண்டர்சப்பு’ என்பவர் ஓர் அறக்கட்டளை அமைத்துள்ளர். அவ்வறக்கட்டமையின் மூலம் உலகிலுள்ள சிறந்த அரசியயல் அறிஞரை ஆண்டுதோறும் அழைத்துச் சிறப்பிப்பது வழக்கம். அதன்படி 1968 ஆம் ஆண்டு, நம் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் அண்ணா அவர்களை விருந்தினராக அழைத்துச் சிறப்பித்தது. ஏல் பல்கலைக்கழகம் சென்ற அண்ணா அவர்ள் அங்குப் பயிலும் மாணவர்குழுவுடன் மகிழ்ந்து குலாவினார்கள். மாணவர்கள் கேட்ட வினாக்களுக்குத் தக்க விடையளித்தார்கள். தாம் கொண்டு சென்ற திருக்குறள் நூலிலிருந்து சில குறட்பாக்களை எடுத்துச் சொல்லி விளக்கம் தந்தார்கள். சில நாட்கள் அங்கு தோழமையுடன் உண்டும் உறைந்தும் மகிழ்ந்தார்கள். இவ்வாறான தூய நல்ல திட்டத்தில் அமெரிக்காவின் அரசியல் அறிஞர்களே பங்கு பெற்றனர். அமெரிக்கர் அல்லாத அரசியல் தலைவர் வரிசையில் முதன்முதலா கப் பங்கு கொண்டு சிறப்புப் பெற்றவர் அண்ணா அவர்களே ஆவர். இதனை,
‘           உயர்பே ரறிஞரை உவந்த அழைத்து
            . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
            அமெரிக்க ரல்லா அரசியல் தலைவர்
            இதுவரை எவரும் எய்தினர் அல்லர்’ 55
என்னும் அடிகளில் விளக்கியுள்ளார்.
குறிப்புகள்:
  1. சி. இலக்குவனார், அறிஞர் அண்ணாவிற்குப் பாவியல் வாழ்த்து அ-ள் 103-104.
  2. சி. இலக்குவனார், அறிஞர் அண்ணாவிற்குப் பாவியல் வாழ்த்து அ-ள் 109-114.
தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum
ம. இராமச்சந்திரன்

Wednesday, April 20, 2016

புலமையின் இயக்கம் வ.சுப. மாணிக்கம் – மு.இளங்கோவன்




தலைப்பு-புலமையின் இயக்கம் வ.சுப.மா.-மு.இளங்கோவன் : thalaippu+pulaimaiyiniyakkam_va.supa.manikkam_mu.ela

புலமையின் இயக்கம்  வ.சுப. மாணிக்கம்

       எளிமையின் உருவம்; புலமையின் இயக்கம்; சங்கப் பனுவலில் திளைத்த அறிஞர்; தொல்காப்பியக்கடலில் மூழ்கி முத்தெடுத்த வல்லுநர்; தமிழ்க்காதலால் வள்ளுவத்தை வரைந்து பார்த்தவர்; திருவாசகத் தேனுண்ணும் தும்பி; ஏழிளந்தமிழில் வாழப் பழகியவர்; பல்லாயிரம்மாணவர்களின்நெஞ்சக் கோவிலில் நிலைபெற்ற தெய்வம்; கற்றோர் உள்ளத்தில் கலந்த மேதை; தினைத்துணை உதவி பெற்றாலும் பனைத்துணையாகக் கொள்ளும் பண்பாளர்; தமிழ்வழிக் கல்விக்குத் தெருவிலிறங்கித் தமிழ் முழக்கம் செய்தவர்; கொடை விளக்கு வழங்கிய மாமலர்; தில்லையம்பலத்தில் திருமுறை முழங்க வேட்கையுற்றவர்; கல்லாத இனத்தைக் கற்க வைத்தவருக்குப் பாடாண் திணை பாடிய பாவலர்; வீடும் கொடுத்த விழுச்செல்வரைப் பாட்டு மாளிகையில் படிமமாக்கிக் காட்டியவர். பண்டிதமணியாரின் புலமைப் பிறங்கடை இருவருள் ஒருவர்; தமிழ்ப்பகையை எதிர்த்து நின்ற அரிமா; பார் காத்தவரையும் பயிர் காத்தவரையும் போற்றும் உலகில் பைந்தமிழ் காத்தவரைப் போற்றிய நன்றியாளர்; இவ்வாறு எழுதிக்கொண்டே செல்லலாம் மூதறிஞர் வ.சுப. மாணிக்கனாரின் தமிழ் வாழ்க்கையை! ஆம். தமிழ் வாழ்க்கை வாழ்ந்தவர்களின் பெருமையை முழுவதும் எழுதும் ஆற்றல் யாருக்கு உண்டு?
  வரம்பிலாப் பெருமைகொண்ட தமிழ்த்தாயின் தலைமகன் மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்களின் நூற்றாண்டு விழா இன்று-17.4.2016 – தொடங்குகின்றது! அரசியல் ஆர்ப்பாட்டத்திலும் மட்டைப்பந்து மாயையிலும் திரைப்படக் கூத்தர்களின் வெட்டுருவக் கூத்துகளிலும் மூழ்கிக் கிடக்கும் இற்றைத் தமிழகத்தாருக்கு அறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்களின் தமிழ்ப்பணிகளையும் தமிழ் வாழ்க்கையையும் எடுத்தியம்புவது எம்மனோர் கடமையாகும்.
  வ. சுப. மாணிக்கம் அவர்கள் மேலைச்சிவபுரி என்னும் சிற்றூரில் வாழ்ந்த வ. சுப்பிரமணியன்(செட்டியார்) – தெய்வானை ஆச்சி ஆகியோருக்கு ஐந்தாவது மகனாக 17.04.1917 இல் பிறந்தவர். இளம் அகவையில் தம் பெற்றோரை இழந்தவர். பருமாவில் தம் முன்னையோரின் தொழிலைப்பழகியவர். பொய்சொல்லா மாணிக்கமாகப் பொலிந்தவர். பண்டிதமணி கதிரேசன்(செட்டியார்) அவர்களால் அடையாளம் காணப்பெற்று, தமிழறிவு தரப்பெற்றவர். அண்ணாமலை அரசரின் கல்விக்கோயிலில் தம் கல்விப்பணியைத் தொடங்கி, மாணவர்களுக்குத் தமிழ் இலக்கிய அறிவையும், தமிழுணர்வையும் ஊட்டியவர். வள்ளல் அழகப்பர் அவர்களின் கல்வி நிறுவனத்தில் தமிழ்ப்பணியைத் தொடர்ந்தவர். நேர்மை, எளிமை இவற்றுக்கு இலக்கணமாக வாழ்ந்தவர். தம் விருப்பத்திற்கு மாறாக நடந்துகொள்பவர்கள் குருதியுறவு உடையவர்கள் எனினும் பொறுத்துக்கொள்ளாத மாசில் மனத்தவராக வ. சுப. மாணிக்கம் விளங்கியவர். தம் குறிக்கோள் வாழ்க்கையை விருப்பமுறியாக(உயில்) எழுதிவைத்துப் பின்னாளில் தம் விருப்பம் தொடர வழிவகை செய்தவர். எந்த நிலையிலும் அறத்திற்குப் புறம்பாகச் செயல்படாத மாசில் மனத்தினர்; நெறியினர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தராக இருந்து, மூத்த அறிஞர் பெருமக்களைத் தமிழாராய்ச்சிக்குப் பணியமர்த்தித் தமிழாராய்ச்சியை நிலைநிறுத்தியவர்.
  தொல்காப்பியம், சங்க நூல்கள், திருக்குறள், திருவாசகம், கம்ப இராமாயணம், பாரதியத்தில் தனித்த ஈடுபாடு கொண்டவர். பழைமைப் பிடிப்பும் புதுமை வேட்கையும் நிறைந்தவர். தாய்மொழிவழிக் கல்வியை வலியுறுத்தி இயக்கம் கண்டவர். தமிழ் எழுத்துகளைத் திருத்தம்என்ற பெயரில் குலைக்க  அறிவியல், தொழில்நுட்பப் போர்வை போர்த்தி ஒரு குழு திரிந்தபொழுது அதனை வன்மையாகக் கண்டித்து எழுதியவர். ஆய்வு நூல்கள், படைப்பு நூல்கள், திறன் நூல்கள், புத்தாக்கச் சொற்கள் தந்து, தமிழ் வாழ்க்கை வாழ்ந்து தம் வாழ்நாளுக்குப் பிறகும் தமிழுக்குப் பெருமைசேர்க்கும் ஆக்கங்களைத் தந்த மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்களின் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடுவது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும்;ஒவ்வொரு தமிழமைப்புகளின் கடமையாகும்.
  அரசியல் செல்வாக்கோ, மற்ற பின்புலங்களோ இல்லாத மூதறிஞரின் கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது கற்றறிந்தார் கடமையாகும். அவர் படைப்புகளை மதிப்பிட்டுத் திறனாய்வு நூல்களை எழுதி, வெளியிடுவது எழுத்தாளர் கடமையாகும். மாணிக்கனாரின் வெளிவராத படைப்புகளைத் திரட்டித் தொகுத்து மாணிக்கப் புதையலை வெளிக்கொணர்வது உடன்பழகியோரின் பணியாகும்.  அவர் விரும்பிச் செய்த தமிழ்வழிக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த அரசுக்கு வேண்டுகோள் வைப்பது இயக்கம் நடத்துவோரின் தலையாயப் பணியாகும். கோயில்களில் நாள்தோறும் திருமுறைகளைத் தமிழில் ஓதி, வழிபாடு நிகழ்த்துவதற்குக் குரல்கொடுப்பது இறையீடுபாட்டளர் கடமையாகும். மூதறிஞருக்குத் திருவுருவச் சிலையமைத்து அவர் நினைவுகளைப் போற்றுவதும், அவர் நினைவு என்றும் நின்று நிலவப் பணிபுரிவதும் அரசினரின் கடமையாகும். பல்கலைக்கழகங்கள், தமிழாய்வு நிறுவனங்கள் வ.சுப. மா. குறித்த ஆய்வரங்குகளையும், அறக்கட்டளைப் பொழிவுகளையும் நடத்தி அவருக்குப் பெருமை சேர்ப்பதைத் தலையாயப் பணியாக்குதல் வேண்டும்.
செம்மல் வ.சுப. மாணிக்கம் பிறந்த நாளில் அவர் கொள்கைளை நெஞ்சில் ஏந்துவோம்!

மு.இளங்கோவன்
புதுச்சேரி

Monday, April 18, 2016

மாணிக்கனாரின் சொல் நேர்த்தி! – முனைவர் அ. அறிவுநம்பி




தலைப்பு-மாணிக்கனாரின் சொல் நேர்த்தி, அ.அறிவுநம்பி :thalaippu_maanikkanaarin_solknethi_arivunambi

மாணிக்கனாரின் சொல் நேர்த்தி!

  எழுத்து பேச்சு எதுவாக இருந்தாலும் ஒருவருடைய வெற்றிக்கு அவர் செதுக்குகின்ற சொற்களே அடிப்படைக் காரணமாக அமையும்.
சிலப்பதிகார இலக்கிய மேடை ஒன்றில் உதிர்க்கப்பெற்ற சில சொற்களை இங்கே அடுக்கிப் பார்க்கலாம். “கோவலன் இறந்தவுடனேயே கண்ணகியும் இறந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? கள்வன் ஒருவன் இறந்தான் என்பதற்கு நாணி கள்வி ஒருத்தியும் மறைந்தாள் எனப் பேசப்பெறுமே தவிர அவளைக் கற்பி என உலகு போற்றியிருக்குமா?” இப்பகுதியில் ‘கள்வன்’ என்ற ஆண்பாலுக்குரிய பெண்பாலாகக் ‘கள்வி’ என வருதலும் கற்புடை மங்கை என்ற பொருளை உணர்த்தக் ‘கற்பி’ என வருதலும் தமிழுக்கான புதுச்சொல் வரவுகள். கள்வி எனச் சில செய்யுள்களில் வருவதாகக் கூறப்பெறினும் தமிழ் உரைநடையில் செறிவும் செழுமையும் நிறைந்து அமைந்தவை இச்சொல்லாடல்கள். இவற்றை மொழிந்தவர் மூதறிஞர் முனைவர் வ.சுப.மாணிக்கனார்.
பண்டிதமணி கதிரேசனிடம் தமிழ் கற்றவரும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பங்காற்றியவருமான செம்மல் வ.சுப.மாணிக்கம் சின்னஞ்சிறு சொற்களுக்குள்ளே கூடச் செந்தமிழை நிறைத்தவர்; தான் கற்ற நூல்களில் தமிழ்ச் சொற்களின் நிமிர்ச்சியைக் கண்டவர்; தான் கண்டெடுத்த அருமைச் சொற்களை மொழிந்தவர்.
ஒரு பதச்சோறு வருமாறு: கம்பன் பாடல்களில் புகழ்பெற்ற ஒரு பாடலின் நிறைவு வரியாக “ஏழிரண்டாண்டின் வாவென்று இயம்பினன் அரசன் என்றாள்” என்ற வரி ஒளிரும். ஆணையிடுபவன் தந்தையும் அரசனுமான தயரதன்; இங்கே கதை மாந்தரின் நிலைப்படி ஏவினன் என்று வருவதுதான் முறையே தவிர இயம்பினன் என்ற சொல் பொருத்தமுடையதாக அமையவில்லை எனக் கருதுகிறார் மாணிக்கம். அவ்வாறு ஒரு சொல் மாற்றம் (பாடபேதம்) உள்ளதெனவும் கண்டறிந்த அவர், காப்பியப் பக்கங்களை மீண்டும் மீண்டும் அலசுகின்றார்.
மரபு, நடைமுறை, உளவியல் போன்ற கூறுகளின் அடிப்படையில் தந்தை ஒருவன் தன்மகனுக்குக் கட்டளையிடுவதே முறைமையாகும். ஒரே நிலையில் வாழும் இருவரிடம் இடம்பெறுவதே இயம்புதல் என்ற சொல். அச்சொல் இங்கே ஏற்புடையதில்லை என்ற தன் கருத்தை நிறுவ அவர் பட்ட தொல்லைகள் பற்பல. காப்பியத்தின் வேறிடங்களில் வரும் நிகழ்வுகளில் காப்பியப் புலவன் இழைத்தளித்த சொற்களைத் தரங்காண்கிறார் அவர்.
“என்று பின்னரும் மன்னன் ஏவியது”
 “ஏவிய குரிசல் யாவர் ஏகிலார்”
 “தெருளுடை மனத்து மன்னன் ஏவலிற்றிறம்ப”
போன்ற மணிவரிகளைத் தெளிவுற நிரல்படுத்துகிறார் வ.சுப.மா.
 “தாதை ஏவலின் மாதொடு போந்து”  கானகம் கண்ட காகுத்தன் கதையில் தயரதன் மொழிந்தது இயம்புதல் அன்று; ஏவல் மட்டுமே எனத் தெளிவுறுத்த அவர் மேற்கொண்ட கடுமையான உழைப்பே அடித்தளமானது. பொருத்தமான சொல்லும் நமக்குப் பரிமாறப்பெற்றது.
 மதுரையில் துணைவேந்தராகப் பணிபுரிந்தபோது உணவுச்சாலைக்கு (Canteen) ‘உண்டியகம்’ எனவும், ஆசிரியர் குடியிருப்புப் பகுதிக்கு (Quarters) ‘குடிமனை’ எனவும், விருந்தினருக்கான ஓய்விடத்திற்கு (Main Guest House) ‘முதன்மை விருந்தில்லம்’ எனவும் பெயர்சூட்டி, சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில் தங்கத்தமிழை வளர்த்தெடுத்ததையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
 “சொல்லுக சொல்லிற் பயனுடைய” என்ற வள்ளுவம் மாணிக்கனாரின் வாழ்க்கைப் பாடமானது. அமைதியாக உட்கார்ந்து எழுதும்போது மட்டுமல்லாமல் சட்டென்று மேடைக்கு வரும்போதும் அவர் நெய்துதரும் சொல்லாட்சிகள் கவனத்துக்குரியன ஆகும்.
  காரைக்குடி அழகப்பர் கல்லூரியில் நடந்த ஒரு நிகழ்வினை இங்கு பதிவு செய்வது தக்கது. மாணவர்கட்கான மேடைப் பொழிவுக் கலையை வளர்க்கக் ‘கலைக்கழகம்’ என்ற அமைப்பை உருவாக்கினார் அவர்.
  ஒருநாள் அரங்கில் மாணிக்கனாரும் ஏனைய பேராசிரியர்களும் அமர்ந்திருந்தனர். பேசிப் பழக மேடையேறிய மாணவருக்குப் பேச நா எழவில்லை. ஓரிரு மணித்துளிகள் கடந்தபின் தன் சட்டைப் பையில் வைத்திருந்த ஒருபக்கக் காகிதத்தை எடுத்து கிடுகிடு என அதில் எழுதியிருந்த கருத்துகளை உரத்து வாசித்துவிட்டு அமர்ந்துகொண்டார். பார்வையாளர்கள் பக்கம் அந்த மாணவர் திரும்பவேயில்லை.
நிறைவாக வ.சுப.மா. மேடையேறினார். செந்தமிழ், நாப்பழக்கம் ஆகவேண்டுமென உரைத்து, “முயற்சியும் பயிற்சியும் இருந்தால் உயர்ச்சி தானே இடம்பெறும்” என்றார். அவ்வுரையின் நிறைவில் அவர்கூறிய தொடர் குறிக்கத்தக்கது. மாணவர்கட்கு வழிகாட்டிய பிறகு நிறைவில் அவர் மொழிந்த சொல்வரிசை:
 “ஆள்முகம் பார்த்துப் பேச வேண்டுமே தவிரத்
 தாள்முகம் பார்த்துப் பேசக்கூடாது!”
 
 – முனைவர் அ. அறிவுநம்பி
 
  [17.4.2016 வ.சுப.மாணிக்கனாரின்
 நூற்றாண்டுத் தொடக்கம்.]
தினமணி
Dinamani-logo-main