Sunday, October 25, 2009

பன்மொழிப் புலவர் மு.கு.ஜகந்நாதராஜா



தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்க எத்தனையோ நல்லறிஞர்கள் பல்வேறு வகையிலும் தொண்டு செய்துள்ளனர். ராஜபாளையம் பன்மொழிப் புலவர் மு.கு.ஜகந்நாதராஜாவைப் பற்றி, ""ஜகந்நாதராஜா வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பது நமக்குப் பெருமை'' என்று காரைக்குடி கம்பன் அடிப்பொடி சா.கணேசன் கூறியுள்ளார். 1933-ஆம் ஆண்டு ஜூலை 26-ஆம் தேதி, ராஜபாளையத்தில், குருசாமிராஜா - அம்மணியம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். ஆறாம் வகுப்பு மட்டுமே படித்த அவர், மிக மிக எளிமையானவர்; அனைவரிடமும் குழந்தை மனத்துடன் பழகும் தன்மை கொண்டவர். சுயமாகவே தெலுங்கு, மலையாளம், கன்னடம், சம்ஸ்கிருதம், பாலி, பிராகிருதம், ஹிந்தி, ஆங்கிலம் முதலிய மொழிகளைக் கற்று அனைத்திலும் இலக்கிய, இலக்கணப் புலமை பெற்று கவி எழுதும் ஆற்றலை வளர்த்துக் கொண்டார். திருக்குறள், புறநானூறு, குறிஞ்சிப்பாட்டு முதலிய தமிழ் இலக்கியங்களைத் தெலுங்கில் மொழிபெயர்த்துள்ளார். இவர் மொழிபெயர்த்த திருக்குறளையும், புறநானூற்றையும் தெலுங்கு பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கிறது. மேலும், முத்தொள்ளாயிரம் நூலை தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஆக்கம் செய்து ஜகந்நாதராஜாவே வெளியிட்டுள்ளார். புவிப்பேரரசரும் கவிப்பேரரசருமான கிருஷ்ணதேவராயர், நமது ஆண்டாள் வரலாற்றை "ஆமுக்த மால்யதா' என்று தெலுங்கில் காவியம் செய்தார். அக்காவியத்தை தமிழாக்கம் செய்ததற்காக, சாகித்ய அகாதெமி முதன் முதலில் தனது மொழிபெயர்ப்புக்கான விருதை ஜகந்நாதராஜாவுக்கு அளித்துச் சிறப்பித்தது. தென்காசியில் பணிசெய்தபோது, ரசிகமணி டி.கே.சி.யுடன் பழகும் வாய்ப்பு அவருக்கு ஏற்பட்டது. அதன் காரணமாக இலக்கியங்களைப் படித்து, தன்னை மேன்மேலும் வளர்த்துக்கொண்டார். சாகித்ய அகாதெமிக்காக தெலுங்கு நாவல் "சேரி'யைத் தமிழாக்கம் செய்துள்ளார். "வடமொழி வளத்திற்கு தமிழரின் பங்கு' என்ற ஆய்வு நூல் செய்துள்ளார். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகப் பொறுப்பேற்று "தமிழக, ஆந்திர வைணவத் தொடர்புகள்' என்ற ஆய்வு நூலையும் எழுதினார். பிராகிருத மொழிப் பேரிலக்கியம் "காதாசப்தசதி'. இவ்விலக்கியத்தைக் குறுந்தொகை போலவே பாடல்களாக மொழியாக்கம் செய்துள்ளார் ஜகந்நாதராஜா. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்காக "தமிழும் பிராகிருதமும்' என்ற ஆய்வு நூல் எழுதினார். மேலும் வஜ்ஜாலக்கம், தீகநிகாயம், நாகானந்தம், கலாபூர்ணோதயம், வேமனா பாடல்கள், சுமதி சதகம், மகாயான மஞ்சரி, தேய்பிறை குந்தமாலா, காந்தியின் குருநாதர் ஆகிய நூல்களையும் மொழியாக்கம் செய்துள்ளார். தொ.மு.சி.ரகுநாதன் எழுதிய, "பாரதி காலமும் கருத்தும்' என்ற நூலை சாகித்ய அகாதெமிக்காக தெலுங்கில் மொழிபெயர்த்துள்ளார். தமிழில் தரிசனம், காவிய மஞ்சரி, கற்பனைப் பொய்கை ஆகிய நூல்களுடன் ஆபுத்திர காவியம் என்ற பெரிய காவியத்தையும் எழுதியுள்ளார். இவை தவிர அவர் எழுதிய பல நூல்கள் இன்றும் கையெழுத்துப் படிகளாவே உள்ளன. இவை வெளிவந்தால் தமிழ் இலக்கியம் மேலும் வளம் பெரும் என்பது உண்மை. இவரைப் போல ஒரு பன்மொழி ஆய்வாளர், இலக்கிய அறிஞர், தத்துவ மேதை, தென்னிந்தியாவிலேயே இல்லை என்று பலரும் ஒப்புக்கொண்டுள்ளனர். படைப்புலகப் பிதாமகன், பல எழுத்தாளர்களின் செவிலித்தாய், பலரையும் உருவாக்கிய பண்பாளர் என்றெல்லாம் பலவாறு பாராட்டப்பட்டவர் ஜகந்நாதராஜா. "ஆதர்ஸ் கில்ட் ஆப் இந்தியா' என்ற அமைப்பின் மாநாடுகள், புதுதில்லி, லக்னெü, ஹைதராபாத் போன்ற நகரங்களில் நடந்தபோது, அங்கிருந்த தமிழ்ச் சங்கங்களில் பங்கேற்று பல ஆய்வுரைகளை நிகழ்த்தினார். இதனால் பல்கலைக் கழகங்கள் ஜகந்நாதராஜாவை அழைத்துச் சிறப்பித்தன. 1958-ஆம் ஆண்டு, பூவம்மா என்பவரை வாழ்க்கைத் துணையாக ஏற்றார். அவர்களுக்கு மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மணிமேகலை இலக்கியத்தில் ஜகந்நாதராஜாவுக்கு இருந்த ஈடுபாடு காரணமாகப் பல ஆய்வுகளைச் செய்தது மட்டுமல்லாமல், 1958-இல் மணிமேகலை மன்றம் ஒன்றைத் தோற்றுவித்தார். அம்மன்றம், ஆக்கப்பூர்வமான பல இலக்கியப் பணிகளைச் செய்து, சென்ற ஆண்டு பொன்விழாவும் கொண்டாடியது என்பது குறிப்பிடத்தக்கது. இலக்கிய ஐயப்பாடுகளைத் தீர்த்துக்கொள்ள தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து பல அறிஞர்கள் ஜகந்நாதராஜாவைக் காண வருவார்கள். அவர்கள் அனைவரிடமும் அன்புடன் பழகி, அவர்களின் ஐயப்பாடுகளை நீக்கி அனுப்பிவைப்பார். தன்னிடம் இருந்த நூல்களை (பல்வேறு மொழி இலக்கிய ஆய்வு மற்றும் தத்துவ நூல்கள்) தனி நூலகமாக ஆக்கினார். "ஜகந்நாதராஜா இலக்கியத் தத்துவ ஆய்வு நூலகம்' என்ற பெயரில் இன்றும் அந்நூலகம் அவரது மருமகனார் டாக்டர் ராதாகிருஷ்ண ராஜாவால் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்நூலகத்தில் அனைத்து நூல்களும் இடம்பெற்றிருக்கும். ராமாயணம் எத்தனை மொழிகளில் வெளிவந்ததோ அவை அனைத்தையும் இந்நூலகத்தில் காணலாம். இந்நூலகத்தின் மூலம் தொடர்ந்து பல ஆய்வறிஞர்கள் பலன் பெற்றுச் செல்கின்றனர். 80-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி, குடியரசுத் தலைவர் பரிசு மற்றும் மலேசிய பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டம் போன்றவற்றைப் பெற்றுள்ளார் என்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. பன்மொழிப் புலவராகத் திகழ்ந்த ஜகந்நாதராஜா, 2008-ஆம் ஆண்டு டிசம்பர் 2-ஆம் தேதி இயற்கை எய்தினார். அவர் எழுதியுள்ள பல நூல்களை வெளிக்கொணர்வதே தமிழ் இலக்கிய உலகம் அவருக்குச் செய்யும் நன்றிக் கடனாகும்.

Saturday, October 10, 2009

அருள்நெறித் தமிழ் வளர்த்த அடிகளார்



அடிகளார் என்பது துறவியைக் குறிக்கும் ஒரு பழந்தமிழ்ச் சொல். எனினும் அப்பெயர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஒருவரையே குறிக்கும் சிறப்புப் பெயரானது தனிவரலாறு. தமிழகத்துத் தஞ்சைத் தரணியில் மயிலாடுதுறையை அடுத்துள்ள திருவாளப்புத்தூருக்கு அருகிலுள்ள நடுத்திட்டு என்னும் கிராமத்தில் சீனிவாசப்பிள்ளை - சொர்ணத்தம்மாள் தம்பதிக்கு, 1925-ஆம் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் அரங்கநாதன். அவருக்கு முந்திப் பிறந்த சகோதரர் இருவர்; சகோதரி ஒருவர். அப்போது அவன், நான்காம் வகுப்பு பயிலும் சிறுவன். வழக்கறிஞரும், தமிழ்ப்பேராசிரியருமான "சொல்லின் செல்வர்' ரா.பி.சேதுப்பிள்ளையின் வீட்டில், அவரது அறையின் ஜன்னல் முன்நின்று தினம் ஒரு திருக்குறள் ஒப்பித்துக் காலணா பெறுவது அரங்கநாதனின் வழக்கம். இவ்வாறு அரங்கநாதனின் வாழ்வை உயர்த்திய திருக்குறள், பின்னாளில் அடிகளாரான அவருக்குப் பொதுநெறி ஆகியது. இதேபோல, அரங்கநாதனின் பிஞ்சு உள்ளத்தில் தீண்டாமை விலக்கு உணர்வும் மனிதநேயப் பண்பும் குறிக்கோள்களாகப் பதியக் காரணமானவர் அருள்திரு விபுலானந்த அடிகள் ஆவார். பள்ளி இறுதி வகுப்புவரை படித்த அரங்கநாதன், தருமபுர ஆதீனத்தில் கணக்கர் வேலை இருப்பதை அறிந்து 1944-ஆம் ஆண்டு அப்பணியில் சேர்ந்தான். 1945-48 கால இடைவெளியில் முறைப்படி தமிழ் கற்று வித்துவான் ஆனதும் அங்கேதான். அத்திருமடத்தின் 25-ஆவது பட்டமாக வீற்றிருந்த தவத்திரு சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், அரங்கநாதனைத் துறவுக்கு ஆட்படுத்திக் கந்தசாமித் தம்பிரான் ஆக்கினார்கள். 1945-ஆம் ஆண்டு தருமபுர ஆதீனத்தின் கட்டளைத் தம்பிரானாக நியமனம் பெற்ற கந்தசாமித் தம்பிரான், சமயம் தொடர்பான பல பணிகளைத் திறம்பட ஆற்றினார். அவர் தருமையாதீனத்தின் சார்பில், குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீன குருபூஜை விழாவொன்றில் பங்கேற்றுச் சொற்பொழிவாற்ற நேர்ந்தது. கந்தசாமித் தம்பிரானின் நாவன்மையால் கவரப்பட்ட குன்றக்குடித் திருமட ஆதீனகர்த்தர் திருப்பெருந்திரு ஆறுமுக தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முறைப்படி தருமையாதீனத்திடம் இசைவுபெற்றுத் தமது திருமடத்துக்கு ஆதீன இளவரசராகக் கந்தசாமித் தம்பிரானை ஆக்கினார். அப்போது தெய்வசிகாமணி "அருணாசல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்' என்ற திருப்பெயரும் அவருக்குச் சூட்டப்பட்டது. 1949-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி ஆதீன இளவரசராகிய அவர், 1952 ஜூன் 16-ஆம் தேதி முதல் அத்திருமடத்தின் தலைமைப் பொறுப்பேற்று, 45-ஆவது குருமகா சந்நிதானமாக விளங்கினார். பின்னர் தம் பணிகளால், அடிகளார் ஆகி, ஊர்ப்பெயர் இணைய, குன்றக்குடி அடிகளார் என்று மக்களால் சிறப்புடன் அழைக்கப்பட்டார். தவத்திரு அடிகளார் ஆதீனப் பொறுப்பேற்ற காலம், இந்து மதத்திற்கு மிகவும் சோதனையான காலம். இறைமறுப்புப் பிரசாரங்களால் தாக்குதலுக்கும், கண்டனத்துக்கும் உரியதாக இந்துமதம் ஆயிற்று. இதன் எதிர்கால விபரீதங்களை மனதில் எண்ணிய அடிகளார், காலத்திற்கேற்ப, இந்துமதத்தின் உன்னத சீலங்களைப் புரியவைக்கும் முயற்சியில் இறங்கினார். இதன்பொருட்டு 1952 ஆகஸ்ட் 11-ஆம் தேதி சமயச் சான்றோர்களையும், பெருந் தமிழறிஞர்களையும் குன்றக்குடியில் ஒன்றுதிரட்டிப் பெரும் மாநாடு ஒன்றை நடத்தினார். அதன்விளைவாகத் தோன்றியதே "அருள்நெறித் திருக்கூட்டம்'. 1954 ஜூலை 10-ஆம் தேதி இதன் முதல் மாநாடு தேவகோட்டையில் மூதறிஞர் ராஜாஜி தலைமையில் நடைபெற்றது. பின்னர் முழு வீச்சோடு செயல்பட்ட இவ்வியக்கத்தின் கிளைகள் தமிழகம் மட்டுமல்லாது, இலங்கையிலும் கிளைத்தன. அதன் செயலாக்கப்பிரிவாக "அருள்நெறித் திருப்பணி மன்றம்' எனும் அமைப்பும் 1955 ஜூன் 10-ஆம் தேதி கிளைத்தது. அப்போதைய தமிழக அரசின் துணையோடு தமிழ்நாடு தெய்வீகப் பேரவை எனும் அமைப்பு, 1966-இல் முகிழ்த்தது. தருமை ஆதீன குருமகா சந்நிதானம் தலைமையேற்ற இப்பேரவையில் அவருக்குப்பின், 1969 முதல் 1976 வரை அடிகளார் தலைமையேற்று அரும்பணிகள் பல ஆற்றினார். பேச்சுக்கு நிகராக, எழுத்திலும் வல்லவரான அடிகளார், தம் வாழ்நாளில் ஏராளமான நூல்களை எழுதியதோடு, மணிமொழி, தமிழகம், அருளோசை முதலிய இதழ்களையும் நடத்தினார். அவர் தோற்றுவித்து, இன்றளவும் வந்துகொண்டிருக்கும் "மக்கள் சிந்தனை'யும், "அறிக அறிவியல்' இதழும் குறிப்பிடத்தக்கன. தமது சமய, சமுதாயப் பணிகள் மூலம் உலகை வலம்வந்த மகாசந்நிதானம், அடிகளார் ஒருவர்தாம். வெளிநாடுகள் பலவற்றுக்கும் சென்று வந்தார் அடிகளார். அவர் மேற்கொண்ட அந்த மேலைநாட்டுப் பயணங்கள், அவரைத் தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தூதுவராகவும், அங்குள்ள தமிழ்மக்களின் வளர்ச்சிக்குத் துணைபுரிபவராகவும் ஆக்கின. இவ்வாறு, அவர் 1972-இல் சோவியத்தில் மேற்கொண்ட பயணத்தின் விளைவாக தோன்றியது தான் "குன்றக்குடி கிராமத்திட்டம்'. திருக்குறளின் ஆழத்தையும், அழகையும், செறிவையும் உள்வாங்கிய அடிகளாரின் எழுத்துகள் தமிழ் இலக்கிய உலகில் தனித்தன்மை கொண்டமைவன. திருவள்ளுவர், திருவள்ளுவர் காட்டும் அரசியல், திருவள்ளுவர் காட்டும் அரசு, குறட்செல்வம், வாக்காளர்களுக்கு வள்ளுவர் தொடர்பான அறிவுரை, திருக்குறள் பேசுகிறது, குறள்நூறு ஆகியன அடிகளார் அருளிய திருக்குறள் தொடர்பான நூல்களாகும். பட்ண்ழ்ன்ந்ந்ன்ழ்ஹப் ரர்ழ்ப்க் கண்ற்ங்ழ்ஹற்ன்ழ்ங் என்பது குறள் குறித்த அடிகளாரின் ஆங்கில நூலாகும். சமய இலக்கியத்திற்கு அடிகளார் அளித்த கொடைகளாக அமைவன, அப்பர்விருந்து, அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர், திருவாசகத்தேன், தமிழமுது, சமய இலக்கியங்கள், நாயன்மார் அடிச்சுவட்டில் உள்ளிட்ட நூல்களாகும். ஆலய சமுதாய மையங்கள் என்னும் நூல், தமிழக அரசின் முதற்பரிசு பெற்ற நூல். அந்த வரிசையில் வைத்துப் போற்றத்தக்க நூல், "நமது நிலையில் சமயம் சமுதாயம்'. சமரச சமயநெறியாளர்களுக்கு உரிய ஆன்மிக இலக்கியமாக அடிகளார் அருளிய "திருவருட்சிந்தனை'. நாள் வழிபாட்டுக்குரிய "தினசரி தியான நூல்'. பெரியபுராணத்தோடு, சிலப்பதிகாரத்தையும், கம்பராமாயணத்தையும் ஆராய்ந்து அடிகளார் எழுதிய நூல்கள், "சிலம்பு நெறி', "கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்' ஆகியனவாகும். சங்க, சமய இலக்கியங்களோடு நின்றுவிடாமல் சமகால இலக்கியத்திலும் ஆழ்ந்த புலமையுடைய அடிகளார், "பாரதி யுக சந்தி', "பாரதிதாசனின் உலகம்' ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார். அவர்தம் சிறுகதைகள், அறிவொளி இயக்கத்தின் மூலமாக மக்களைச் சென்றெய்தியது. அதுபோல் அடிகளார் அரங்கத்தலைமையேற்றுப் பாடிய கவிதைகள், "கவியரங்கில் அடிகளார்' என்னும் நூலாகியிருக்கிறது. அவர்தம் சுயசரிதையென அமைவது, "மண்ணும் மனிதர்களும்' எனும் நூலாகும். சில நாடகங்களும் அடிகளாரால் எழுதப்பெற்று அரங்கேற்றம் ஆகியிருக்கின்றன. சிறுபொழுதும் ஓய்வின்றி, உலக நலனுக்காகத் துடித்த அடிகளாரின் இதயம் 1995-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி தமது துடிப்பை நிறுத்திக்கொண்டது. ஆயினும் அவர் ஆற்றிய அருட்பணிகள், தொடங்கிய தூய இயக்கங்கள் இன்னும் தொடர்ந்து விரிந்து வளர்கின்றன. அவர்தம் நிறைவுக் காலத்தில் "தினமணி'யில் தொடராக வெளிவந்த "எங்கே போகிறோம்?' என்ற கட்டுரைகள் இன்றைக்கும் வழி காட்டுவன!.

Saturday, September 05, 2009

ஒப்பாரும் மிக்காரும் இல்லா வையாபுரிப் பிள்ளை!



கர்னாடக இசையின் மும்மூர்த்திகளைப் போலத் தமிழ் இலக்கிய ஆய்வாளர்கள் மூவரை வரிசைப்படுத்திச் சொன்னால் அவர்கள், எஸ்.வி.பி. என்று அழைக்கப்பட்ட எஸ்.வையாபுரிப் பிள்ளை, ஆர்.பி.எஸ். என்று பரவலாகக் அறியப்படும் ரா.பி.சேதுப்பிள்ளை மற்றும் தெ.பொ.மீ. என்று மரியாதையுடன் கூப்பிடப்படும் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் ஆகிய மூவராகத்தான் இருக்கும்.
மொழியியலில் தெ.பொ.மீ.யும், இலக்கிய ஆய்வில் ஆர்.பி.எஸ்.சும் தனித்துவம் காட்டினார்கள் என்றால் எஸ்.வி.பி.யின் பங்களிப்பு கால ஆராய்ச்சி மற்றும் தமிழில் பேரகராதித் தொகுப்பு என்று பன்முகப்பட்டதாக இருந்தது.
வையாபுரிப்பிள்ளை தமிழ் ஆராய்ச்சியில் விஞ்ஞான பூர்வமான பார்வை கொண்டு ஆய்வு செய்தவர். ஓர் இலக்கியம் பற்றி நன்கு அறிந்துகொள்ள வேண்டுமானால், அந்த இலக்கியம் தோன்றிய காலம் பற்றிய அறிவு முக்கியமானது என்று கருதி, இலக்கியம் தோன்றிய கால ஆராய்ச்சியில் தனி கவனம் செலுத்தியவர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள சிக்கநரசய்யன் பேட்டை என்ற ஊரில் 1891-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி சரவணப்பெருமாள்-பாப்பம்மாள் தம்பதிக்கு மகனாய்ப் பிறந்த வையாபுரிப்பிள்ளை, பாளையங்கோட்டை புனித சவேரியர் பள்ளியிலும், திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியிலும் பிறகு சென்னை கிறிஸ்துவக் கல்லூரியிலும் படித்துப் பட்டம் பெற்றவர். அந்த ஆண்டு சென்னை மாகாணத்திலேயே தமிழில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்று "சேதுபதி தங்க மெடல்' பெற்ற பெருமைக்குரியவரும் அவரே.
தமிழில் ஆர்வம் அதிகமிருந்தும் திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் சேர்ந்து படித்து வழக்கறிஞரானது மட்டுமல்ல, ஏழு ஆண்டுகள் வழக்கறிஞராகவும் பணிபுரிந்தார் அவர். பிறகு மூன்று ஆண்டுகள் வையாபுரிப் பிள்ளை திருநெல்வேலியிலும் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
வையாபுரிப் பிள்ளையின் நெல்லை வாழ்க்கையில் அவருக்கு நெருங்கிய நண்பர்களாக "ரசிகமணி' டி.கே. சிதம்பரநாத முதலியார், நீலகண்ட சாஸ்திரியார், பேராசிரியர் சாரநாதன், பெ. அப்புசாமி போன்றோர் இருந்திருக்கிறார்கள் என்பதும், "ரசிகமணி'யின் "வட்டத் தொட்டி' ஏற்பட இவர்களது ஆரம்பகால இலக்கியச் சர்ச்சைகள்தான் பிள்ளையார் சுழி இட்டது என்பதும் பரவலாகத் தெரியாத விஷயம்.
வழக்கறிஞராகப் பணியாற்றி வந்த காலத்தில், வையாபுரிப் பிள்ளை எழுதிப் பிரசுரமான பல கட்டுரைகளும், இலக்கிய ஆய்வுகளும் அவரை அறிஞர்கள் மத்தியில் பேசப்பட வைத்தன. உ.வே. சாமிநாதய்யருக்குப் பிறகு பழந்தமிழ் இலக்கியங்களைத் தொகுத்து, ஆய்வு செய்து வெளியிட்ட பெருமை எஸ். வையாபுரிப் பிள்ளையைத்தான் சாரும். ஓலைச் சுவடிகளைப் பதிப்பித்ததுடன் நிற்காமல் அந்த இலக்கியங்களுக்குக் கால நிர்ணயம் செய்ததிலும் வையாபுரிப் பிள்ளைக்குப் பெரும் பங்கு உண்டு.
1926-ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் உருவாக்கி வந்த தமிழ் அகராதியில் (ஏழு தொகுதிகள்) பதிப்பாசிரியர் பொறுப்பேற்றார் வையாபுரிப்பிள்ளை. 1936-ஆம் ஆண்டு முதல் சென்னைப் பல்கலைக்கழக தமிழ் ஆராய்ச்சித்துறைத் தலைவராக விளங்கினார். 1946-ஆம் ஆண்டு வரை அப்பணியில் சிறப்பாகச் செயல்பட்டு, பல ஆராய்ச்சியாளர்களை உருவாக்கினார்.
வையாபுரிப் பிள்ளை திருவிதாங்கூர் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராக இருந்த காலத்தைப் பொற்காலம் என்றுதான் கூற வேண்டும். "வள்ளல்' அழகப்பச் செட்டியாரின் இல்லத் திருமண விழாவுக்கு அன்றைய திருவிதாங்கூர் திவான் சி.பி.ராமசாமி அய்யர் போனபோது, தமிழுக்கெனத் திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வுக் கட்டில் நிறுவ ஒரு லட்சம் ரூபாய் அறக்கட்டளையாகக் கொடுத்தார். அப்படி தொடங்கப்பட்ட தமிழ்த் துறையின் முதல் தலைவராக மு. ராகவையங்கார் நியமிக்கப்பட்டார். ஆறு ஆண்டுகள் பணிபுரிந்து அவர் ஓய்வு பெறும்போது தனக்குப் பிறகு அந்தப் பதவிக்குத் தகுதியானவர் எஸ். வையாபுரிப் பிள்ளை மட்டுமே என்பது ராகவையங்காரின் தேர்ந்த முடிவு.
மு. ராகவையங்காரின் அழைப்பை வையாபுரிப் பிள்ளை ஏற்றார் எனினும், ஒரு நிபந்தனை விதித்தார். "நான் விண்ணப்பிக்க முடியாது. அழைத்தால் ஏற்பேன்' என்பது எஸ்.வி.பியின் பதில். அந்தக் கடிதத்தின் அடிப்படையில் மு. ராகவையங்கார் செய்த பரிந்துரையின் பேரில், திருவிதாங்கூர் பல்கலைக்கழக ஆளுநர் குழு விண்ணப்பமே இல்லாமல் எஸ். வையாபுரிப் பிள்ளையை தமிழ்த் துறைத் தலைவராக நியமித்து ஆணை அனுப்பியது.
சுமார் நான்கு ஆண்டுகள் திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவராக வையாபுரிப் பிள்ளை இருந்த காலகட்டத்தில்தான் மலையாள மொழி லெக்சிகன் பதிப்பிக்கப்பட்டது. அதன் உறுப்பினாரகவும் பணியாற்றிய பெருமை வையாபுரிப் பிள்ளைக்கு உண்டு. இந்தக் காலகட்டத்தில்தான், பின்னாளில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முதல் துணைவேந்தராக விளங்கிய வ.அய். சுப்பிரமணியம், ஆய்வு மாணவராக வையாபுரிப் பிள்ளையிடம் பணியாற்றி அவரது வாரிசு என்கிற பெயரையும் பெற்றார்.
வையாபுரிப் பிள்ளையிடம் ஆய்வு மாணவராக வ.அய். சுப்பிரமணியம் சேர்ந்தபோது, அவருக்குத் தரப்பட்ட முதல் பணி, பிரிட்டிஷ் கலைக் களஞ்சியத்திலிருந்து காந்தத்தைப் பற்றிய செய்திகளைத் திரட்டித் தருவது. காந்தத்தைப் பற்றிய செய்திகளை எஸ்.வி.பி. கேட்டதற்குக் காரணம் இருந்தது. காந்தம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில்தான் கண்டுபிடிக்கப்பட்டது என்று கலைக்களஞ்சியத்தில் கூறப்பட்டிருந்தது. காந்தத்தைப் பற்றிக் கூறும் கலித்தொகை, அதனால் 2ஆம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் தோன்றியிருக்க வேண்டும் என்று மு. ராகவையங்காரிடம் எஸ்.வி.பி. விளக்கியதாக சுப்பிரமணியம் குறிப்பிடுகிறார்.
சங்க கால மக்கள் அறிந்த மற்றும் பயன்படுத்திய உலோகங்களின் அடிப்படையில் எஸ்.வி.பி. காலநிர்ணயம் செய்வது சரிதானா? கலைக் களஞ்சியத்தின் செய்தி தவறாக இருந்தால் கால நிர்ணயம் தவறாகுமே? என்ற கேள்விக்கு, எஸ்.வி.பியின் பதில், ""அந்த செய்தி தவறு என்று நிரூபணம் ஆகும்வரை அந்தச் செய்தியை ஏற்றுக் கொள்வதுதானே நியாயம்?''
தேவநேயப் பாவாணர் போன்றவர்கள், வையாபுரிப் பிள்ளை தமிழ் இலக்கியங்களின் காலத்தை சரியாக கணிக்கவில்லை என்றும், கிறிஸ்துவுக்கு முற்பட்ட தமிழ் இலக்கியத்தைப் பிற்பட்ட காலத்தது என்று கூறுவதாகவும் கண்டித்தனர். விமர்சனங்கள் எஸ்.வி.பியை சற்றும் பாதிக்கவில்லை. தமிழ் நூல்களைப் பிற்காலமாக வையாபுரிப் பிள்ளை கூறியதற்குக் காரணம் தெளிவுகளும், அவற்றிற்குரிய காலநிலையும்தான். தமது ஆய்வை அவர் முற்ற முடிந்த ஆய்வாகக் கருதவில்லை.
வையாபுரிப் பிள்ளையின் மேஜையில் எப்போதும் மானியர் வில்லியம்சின் சம்ஸ்கிருத-ஆங்கில அகராதி இருக்கும். ""எந்தச் சான்றையும் கூடிய மட்டிலும் மூல நூலிலிருந்து அறிந்திட வேண்டும். ஆய்வில் பிறர் சொல்லை நம்புவது தகாது. சம்ஸ்கிருதச் சான்றுகளை நாமே படித்துப் பொருள் அறிதல் நல்லது. அதனால் தமிழ் ஆராய்ச்சியாளர்கள் நிச்சயம் சம்ஸ்கிருதம் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்'' என்பது எஸ்.வி.பியின் கருத்து.
பாராமல் படிக்கும் பழக்கம் எஸ்.வி.பிக்கு இல்லை. தான் கண்ட சான்றுகளையும், உதவும் செய்திகளையும் 300 பக்க அளவிலான ஒரு தடித்த நோட்டில் தனது கையெழுத்தில் குறித்துக் கொள்வார். கட்டுரையோ, நூலோ எழுதும்போது, அந்த நோட்டைப் புரட்டி, அதில் காணும் சான்றுகளைப் பயன்படுத்திக் கொள்வார். அவர் காலமான பின் அந்த நோட்டு எங்கே போனது என்று யாருக்கும் தெரியாது.
ஒவ்வொரு கட்டுரையையும் தனது கைப்படத்தான் எழுதுவார். ஆங்கிலக் கட்டுரைகளைத் தட்டச்சு செய்து, பலமுறை சரிசெய்து பிழையின்றி வெளியிட முயல்வார். பல அறிஞர்கள் ஆங்கிலக் கட்டுரைகளைப் படிப்பதால் மிகக் கவனமாக வாதங்களை உருவாக்க வேண்டும் என்பார்.
தமிழின் பழம் பெருமைக்கு எதிரானவர் எஸ்.வி.பி. என்று அவரை திராவிடக் கட்சிகள் கடுமையாக விமர்சித்தபோது, அதை அவர் சற்றும் சட்டை செய்யவில்லை. ரா.பி. சேதுப்பிள்ளையைப் போலவே கம்பனின் கவிநயத்தில் தன்னைப் பறிகொடுத்த வையாபுரிப் பிள்ளை, "ரசிகமணி' டி.கே.சியுடன் இணைந்து திருநெல்வேலியில் கம்பன் கழகத்தை உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்தார். கம்பனை ஆதரித்தார் என்பதால் இருட்டடிப்பு செய்யப்பட்ட பல தமிழறிஞர்களில் வையாபுரிப் பிள்ளையும் ஒருவர்.
மகாகவி சுப்பிரமணிய பாரதி மற்றும், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. ஆகிய இருவரிடமும் வையாபுரிப் பிள்ளைக்கு நெருங்கிய அறிமுகம் இருந்தது. தனது சிறைவாசத்துக்குப் பிறகு, அரசியல் வாழ்வில் வெறுப்புற்றிருந்த வ.உ. சிதம்பரனார், ஏட்டிலிருந்த இளம்பூரணரின் தொல்காப்பிய உரையைப் பதிப்பிக்கும் நோக்கத்தோடு படியெடுத்தார். அதனை எஸ்.வி.பி.யிடம் காட்டி செப்பம் செய்தார். எஸ்.வி.பியையும் அதன் பதிப்பாசிரியராகத் தன்னுடன் இருக்குமாறு கேட்டதையும், ஆனால் எஸ்.வி.பியோ நீங்களே பதிப்பாசிரியராக இருந்தால் போதும் என்று மறுத்து விட்டதாகவும் அந்த உரைப் பதிப்பின் முன்னுரையில் வ.உ.சி. நன்றியுடன் குறிப்பிட்டிருக்கிறார்.
சற்று குள்ளமான உருவம்; நீண்ட நேரப் படிப்பால் வீங்கிய இமைகளையுடைய கண்கள்; மாநிறம்; நல்ல விஷயங்களைக் கேட்டால் கடகடவென்று உரக்கச் சிரிக்கும் சுபாவம்; மனம் திறந்து பேசும் நெருக்கம்; ஆய்வுக்கென்றே தன்னை அர்ப்பணித்த அந்த மாமேதை தெளிவின் அடிப்படையில் மட்டுமே ஆய்வுகள் அமைந்திட வேண்டுமென்று வற்புறுத்தியவர். நல்ல ஆய்வாளன் பாராட்டையோ, மவுசையோ தேடிப் போக வேண்டிய அவசியமில்லை; அவை தாமாக வரும் என்று அழுத்தமாக நம்பியவர்.
தனது வாழ்நாளில் அவர் படித்து முடித்த புத்தகங்கள் கணக்கில் அடங்கா. தனது வீட்டில் இருந்த நூலகத்தில் மட்டும் 2943 புத்தகங்கள் இருந்தன. அதுமட்டுமல்லாமல் ஆங்கிலம், தமிழ், பிரெஞ்சு, ஜெர்மனி, மலையாளம் போன்ற மொழிகளிலான குறிப்புகளும், ஓலைச்சுவடிகளும் நூற்றுக்கணக்கில். அவை அனைத்தையும் கல்கத்தாவில் இருந்த தேசிய நூலகத்துக்கு நன்கொடையாக அளித்துவிட்டார் வையாபுரிப் பிள்ளை.
சங்கத் தமிழ் வார்த்தைகளுக்கு விளக்கங்கள் நல்கும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதியுடன் வையாபுரிப் பிள்ளையின் பங்களிப்பு முடிந்துவிடவில்லை. நாற்பதுக்கும் அதிகமான நூல்களையும் நூற்றுக்கணக்கான ஆய்வுகளையும் கட்டுரைகளையும் எழுதிக் குவித்தவர் அவர். "மனோன்மணியம்' உரையுடன் தொடங்கிய அவர் 1955-ல் திவ்யப் பிரபந்தத்தை உரையுடன் பதிப்பித்துத் தமிழுக்குப் பெரும் தொண்டு ஆற்றினார். கம்பராமாயணத்துக்கு உரை எழுதிப் பதிப்பிக்க வேண்டும் என்கிற அவரது அவா மட்டும் நிறைவேறாமலே போய்விட்டது.
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ்மொழி ஆய்வில் ஒப்பாரும் மிக்காரும் அற்ற மிகப்பெரிய ஆய்வாளரான வையாபுரிப் பிள்ளை 1956 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 ஆம் தேதி தனது 65வது வயதில் இயற்கை எய்தியபோது, தமிழ் அழுதது... தமிழ்த்தாய் அழுதாள்...
வையாபுரிப்பிள்ளையின் மறைவு குறித்து, ""ஸ்ரீவையாபுரிப்பிள்ளை காலமானது தமிழ் உலகிற்கு ஈடு செய்ய முடியாத நஷ்டம். நிறைகுடம்; நற்பண்புகள் அனைத்தின் உறைவிடம். விஞ்ஞானியைப் போல உண்மையைக் கண்டறிவதையே லட்சியமாகக் கொண்டு இலக்கியப் பணியாற்றிய ஆராய்சியாளர். தமக்குப் பிடித்தமான ஒரு நிலைக்கு ஏற்ப ஆராய்ச்சியை இழுத்துப் பொருத்தும் தன்மைக்கு நேர் எதிரிடையானவர். வாழ்க்கையைப் போலவே இலக்கிய சேவையிலும் அறநெறி நின்று அரும்பணியாற்றியவர்'' என்று "தினமணி' (18.2.1956) நாளிதழ் தலையங்கமே எழுதித் தனது இரங்கலைத் தெரிவித்தது என்றால், அந்த மாமேதை எத்தகையவர் என்பதை அறிந்து கொள்ளலாம்.

Saturday, August 22, 2009

தமிழ் இமயம் வ.சுப.மாணிக்கம்!



""எளிய வாழ்வு, அளவான பேச்சு, எந்நிலையிலும் எதிர்கால நம்பிக்கை, பதவிகளைத் தொண்டாக மதித்தல், தன்னைப் பற்றிய திருத்தமான சிந்தனைகள், வாழ்க்கைத் திட்டங்கள், பெரியவர்களின் வரலாறுகளைப் படித்தல், சோர்வுக்கு இடங்கொடாத ஊக்கங்கள், பகட்டின்றித் தூய எண்ணத்தால் இறைவனை வழிபடுதல் இவையெல்லாம் நான் கண்ட முன்னேற்ற நெறிகள். தமிழுக்குத் "தொல்காப்பியமும்', வாழ்வின் உயர்வுக்குத் "திருக்குறளும்', உயிர்த் தூய்மைக்குத் "திருவாசகமும்' எனக்கு வழிகாட்டிய தமிழ் மறைகள்'' என்று கூறி, வாழ்ந்த மூதறிஞர், தமிழ் இமயம் எனப் போற்றப்பட்ட வ.சுப.மாணிக்கனார். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மேலைச்சிவபுரியில் 1917-ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி நாட்டுக்கோட்டை நகரத்தார் வகுப்பில் வ.சுப்பிரமணியன் செட்டியாருக்கும் - தெய்வானை ஆச்சிக்கும் ஐந்தாவது மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் அண்ணாமலை. பிற்காலத்தில் மாணிக்கம் என்ற பெயரே இவருக்கு நிலைத்து விட்டது. வ.சுப.மாணிக்கத்திற்கு ஆறு வயது ஆனபோது அவரது தாய் இறந்தார். அடுத்த பத்தாவது மாதம் தந்தையும் இறந்ததால், சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து துன்புற்றார். இச்சூழ்நிலையில், தாய்வழிப் பாட்டி மீனாட்சியும் தாத்தா அண்ணாமலை செட்டியாருமே அவரை மகனாகப் பாவித்து வளர்த்தனர். ஏழு வயதுவரை புதுக்கோட்டையில் உள்ள பள்ளி ஒன்றில் இரண்டாண்டுகள் ஆரம்பக்கல்வி பயின்றார். பதினொன்றாம் வயதில் தொழில் கற்றுக்கொள்வதற்காக பர்மாவுக்கு அனுப்பப்பட்டார். பர்மாவின் தலைநகரான ரங்கூனில், ஒரு வட்டிக் கடையில் வேலைபார்த்து வந்தார். கடை முதலாளி அவரிடம், ""குறிப்பிட்ட நபர் வந்து கேட்டால் முதலாளி இல்லை என்று சொல்லி விடு!'' என்று கட்டளை இட, ""முதலாளி வெளியில் சென்றிருந்தால் இல்லை என்பேன்; இருக்கும்போது எவ்வாறு இல்லை என்று கூறுவது? அப்படியெல்லாம் நான் பொய் சொல்ல மாட்டேன்'' என்று முதலாளியிடம் பதில் கூறியதால், அன்றே பணியிலிருந்து நீக்கப்பட்டார் வ.சுப.மா. இந்நிகழ்ச்சியினாலேயே "பொய் சொல்லா மாணிக்கம்' என்று பின்னாளில் அவர் அழைக்கப்பட்டார் என்றுகூட சொல்வர் அறிஞர் பெருமக்கள். பர்மாவில் இருந்து திரும்பிய வ.சுப.மா.வை, தமிழ் மொழியின் மீது மிகுந்த நாட்டம் கொள்ளச் செய்தவர் பண்டிதமணி மு.கதிரேசச்செட்டியார். அவரது பெரும் உதவியால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் வகுப்பில் சேர்ந்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார் வ.சுப.மா. பின்னர் 1945-இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பி.ஓ.எல், எம்.ஏ.,(1951) ஆகிய பட்டங்களைப் பெற்றார். பின்னர் "தமிழில் வினைச்சொற்கள்' என்ற பொருளில் ஆராய்ந்து எம்.ஓ.எல். பட்டமும், "தமிழில் அகத்திணைக் கொள்கை' என்னும் பொருளில் ஆராய்ந்து பிஎச்.டி. (முனைவர்) பட்டமும் பெற்றார். 1945-இல் நெற்குப்பையைச் சேர்ந்த ஏகம்மை ஆச்சியைத் தம் வாழ்க்கைத் துணைவியாக ஏற்றார். 1941 - 1948 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பின் அங்கிருந்து விடைபெற்று, காரைக்குடி அழகப்பா கல்லூரியில் முதுகலைப் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றார். ஆறு ஆண்டுகள் அக்கல்லூரியில் முதல்வராகவும் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றார். மீண்டும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1970 முதல் 1977 வரை ஏழாண்டுகள் தமிழ்த்துறைத் தலைவராகவும், இந்திய மொழிப்புல முதல்வராகவும் பணிபுரிந்தார் வ.சுப.மா. வள்ளுவம், தமிழ்க்காதல், கம்பர் போன்ற அவரது ஆய்வு நூல்கள் தமிழக அரசின் பரிசு பெற்றவை. தொல்காப்பியப் புதுமை, எந்தச் சிலம்பு, இலக்கிய விளக்கம், சிந்தனைக் களங்கள், ஒப்பியல் நோக்கு, தொல்காப்பியத் திறன் போன்றவை பல்பொருள் குறித்த ஆய்வு நூல்கள். மனைவியின் உரிமை, நெல்லிக்கனி, உப்பங்கழி, ஒரு நொடியில், ஆகிய நான்கும் நாடக நூல்கள். கொடை விளக்கு, மாமலர்கள், மாணிக்கக் குறள் என்பன அவரது கவிதை நூல்கள். இரட்டைக் காப்பியங்கள், நகரத்தார் அறப் பட்டயங்கள் இரண்டும் வ.சுப.மா. பதிப்பித்த நூல்கள். "தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் நூன்மரபும் மொழிமரபும் மாணிக்கவுரை', திருக்குறள் தெளிவுரை, நீதிநூல்கள் உரை என்பன அவர் வெளியிட்டுள்ள உரை நூல்கள். பட்ங் பஹம்ண்ப் இர்ய்ஸ்ரீங்ல்ற் ர்ச் ப்ர்ஸ்ங், அ நற்ன்க்ஹ் ர்ச் பஹம்ண்ப் யங்ழ்க்ஷள், இர்ப்ப்ங்ஸ்ரீற்ங்க் டஹல்ங்ழ்ள், பஹம்ண்ப்ர்ப்ர்ஞ்ஹ் என்பன வ.சுப.மா. எழுதியுள்ள ஆங்கில நூல்கள். இவைதவிர "தலைவர்களுக்கு' என்பது வ.சுப.மா. கடித வடிவைக் கையாண்டு எழுதியுள்ள குறிப்பிடத்தக்க நூல். ""பெண்ணுக்குக் கற்பினைப் போன்றது கவிஞருக்குக் கற்பனை. கற்பனை இல்லாமல் கவிஞர் இருக்க முடியாது; கவிதை பிறக்க முடியாது. கவிதை என்றால் அதில் கற்பனை கட்டாயம் கலந்திருக்கும்; புலவர்கள் குறிக்கோள் உடையவர்கள். அக்குறிக்கோளைப் பதியவைப்பதற்கு அன்னவர்கள் கையாளும் இலக்கியக் கருவியே கற்பனை யென்பது'' என தமிழ்க்காதல் என்ற நூலில் கற்பனைக்கு விளக்கம் தந்துள்ளார் வ.சுப.மா. உரையாசிரியர், கவிஞர், நாடக ஆசிரியர், ஆய்வாளர், உரைநடை ஆசிரியர் போன்ற பன்முகங்கொண்ட வ.சுப.மா. மிகச்சிறந்த சிந்தனையாளராகவும் திகழ்ந்தார். அவரது சிந்தனைச் செழுமையை அவரது நூல்கள் அனைத்திலும் காணமுடிகிறது. வ.சுப.மா. பழமையைப் போற்றியது மட்டுமல்லாமல் புதுமையை இருகரம் கொண்டு மனமார வரவேற்கும் சிறந்த பண்பாளராகவும் விளங்கினார். உயர்ந்த குறிக்கோள் உடைய வாழ்வே வாழ்வு; குறிக்கோள் இல்லையென்றால் அதற்குப் பெயர் வீழ்வு! என்று கூறும் வ.சுப.மா., குறிக்கோள் இல்லாத வாழ்வு எத்தகையது என்பதை ஒரு கவிதை மூலம் அழகாக; தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார். ""குறிக்கோள் இலாத வாழ்வு கோடுகள் இலாத ஆட்டம்; நெறிக்கோள் இலாத நெஞ்சு நிறைநீர் இலாத யாறு; மறிக்கோள் இலாத கல்வி வரப்புகள் இலாத நன்செய்; செறிக்கோள் இலாத மேனி திறவுகோல் இலாத பூட்டாம்''(மாமலர்கள்-ப.60) தமிழின் வளர்ச்சிக்குப் புதிய சொல்லாக்கங்களை உருவாக்குவது மிகவும் இன்றியமையாதது என்பது வ.சுப.மா.வின் அசைக்கமுடியாத கருத்து. இத்தகைய சொல்லாக்கங்களைப் படைப்பது அவருக்குக் கைவந்த கலை. "தமிழ் வழி கல்வி இயக்கம்' என்ற அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்று, தமிழகம் முழுவதும் தமிழ் பரப்ப, தமிழ் யாத்திரை மேற்கொண்டார். தன் சொத்தில் ஆறில் ஒரு பங்கை அற நிலையத்திற்கு வழங்கவேண்டும்; தாம் பிறந்த ஊரான மேலைச்சிவபுரியில் கல்வி, மருத்துவம், நலவாழ்வு, குழந்தைநலம், சாதி சமய வேறுபாடின்றி இலவசமாகச் செலவு செய்ய வேண்டும் என்றும், தம் நூலகத்தில் தாம் தொகுத்து வைத்துள்ள நூல்களை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு அன்பளிப்பாக வழங்க வேண்டும் என்றும் இவ்வாறு தமது விருப்பத்தை உயிலில் குறித்துவைத்திருந்தார். எங்கும் தமிழ்; எதிலும் தமிழ் என்று முழங்கிய அந்தத் தமிழ் மாமலை, 1989-ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ஆம் தேதி புதுச்சேரியில் சரிந்தது. என்றாலும் இன்று வரை அவரது ஆன்மா, தமிழ் உள்ள இடங்களில் எல்லாம் நூல் வடிவில் வாழ்ந்துகொண்டிருக்கிறது!

Sunday, August 09, 2009

கல்வெட்டறிஞர் கா.ம.வேங்கடராமையா



தஞ்சாவூர் அரண்மனையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் 1981-இல் தொடங்கப்பட்டு, செயல்பட்டுக் கொண்டிருந்தது. அருங்காட்சியகம், ஓலைச்சுவடித்துறை, அரிய கையெழுத்துச் சுவடித்துறை, கல்வெட்டியல்துறை ஆகிய துறைகள் செயல்பட்டுக் கொண்டிருந்தன. ஒருநாள் தமிழ்ப் பேராசிரியரும், கல்லூரி முதல்வரும், கவிஞருமான சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்தார். அவர் தம் காலணியை அறைக்கு வெளியில் விட்டுவிட்டு அரிய கையெழுத்துச் சுவடித்துறை அறைக்குள் நுழைந்தார். அந்த அறையில் இருந்த பேராசிரியரை நெடுஞ்சாண் கிடையாக நிலந்தோய்ந்து விழுந்து வணங்கினார். அதன் பின்னர் சுமார் 1 மணி நேரம் வரை அங்கிருந்த இருக்கையில் அமராமல் பணிவுடன் கைகட்டி, வாய் புதைத்து அப்பேராசிரியர் சொன்னதைக் கேட்டுச் சரி, ஆம் என்ற பதில்களைச் சொல்லி வந்தார். பேராசிரியர் சொன்ன எதற்கும் எவ்வித மறுப்பும் சொல்லவில்லை. இந்நிகழ்வுகளைக் கண்ட எனக்கு உடம்பு சிலிர்த்தது. அந்தக் கல்லூரி முதல்வர் வேறு யாருமில்லை. அவர் பேராசிரியர் ம.வே.பசுபதி. அவர் காண வந்த பேராசிரியர் அவரது தந்தையாரான கா.ம.வேங்கடராமையா ஆவார்.சென்னை-பூவிருந்தவல்லியை அடுத்த காரம்பாக்கம் என்னும் சிற்றூரில் 1912-ஆம் ஆண்டு ஏப்ரல் 4-ஆம் தேதி, கா.கிருஷ்ணையர்-வேங்கடசுப்பம்மாள் தம்பதிக்கு மகவாகப் பிறந்தார் வேங்கடராமையா. இவர் தாய்மொழி தெலுங்கு.சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் படித்தார். செங்கல்பட்டிலுள்ள தூய கொலம்பா உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். தமிழ் ஆர்வம் காரணமாக பி.ஓ.எல். தேர்ச்சி பெற்றார். ஆங்கிலத்தில் முதுகலைத் தேர்விலும் வென்றார்.1947 முதல் 1972 வரை 25 ஆண்டுகள் திருப்பனந்தாள் காசி மடத்துச் செந்தமிழ்க் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றினார். அந்நாளைய தமிழக ஆளுநர் கே.கே.ஷா தொடங்கிய தமிழ், சம்ஸ்கிருதம் மற்றும் இந்திய மொழிகள் ஆய்வு நிறுவனத்தில் ஏறத்தாழ மூன்றரை ஆண்டுகள் ஆராய்ச்சியாளராக இருந்தார். அங்கிருந்த காலத்தில், பன்மொழி இலக்கண ஒப்பீட்டு ஆய்வுகளைச் செய்து வந்தார். அதன் பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் திருக்குறள் இருக்கையில் மூன்றரை ஆண்டுகள் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினார்.1981-இல் தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டபோது அரிய கையெழுத்துச் சுவடித்துறையின் முதல் தலைவராகப் பொறுப்பேற்று, ஏறத்தாழ 5 ஆண்டுகள் வரை பணியாற்றினார். நிறைவாகத் திருவனந்தபுரத்தில் உள்ள பன்னாட்டுத் திராவிட மொழியியல் கழகத்தில் பணி புரிந்தார்.சிறந்த வைதிக வைணவக் குடும்பத்தில் பிறந்த இவர், சைவ சமயத்தில் ஆழ்ந்த ஈடுபாடும், ஆழங்காற்பட்ட அறிவும் உடையவராகத் திகழ்ந்தார். அத்துடன் சைவ சமயச் சொற்பொழிவாளராய், திருமுறைகளில் புலமையும் கொண்டிருந்தார். திருமுறைகளை ஒட்டியே இவரது பெரும்பாலான ஆய்வுகள் அமைந்தன.வேங்கடராமையா, தமிழுக்கும் சமயத்திற்கும் ஆற்றிய பணிகள் ஏராளம். ஆய்வுப் பேழை, கல்வெட்டில் தேவார மூவர், இலக்கியக் கேணி, கல்லெழுத்துக்களில், சோழர் கால அரசியல் தலைவர்கள், திருக்குறள் உரைக்கொத்து, திருமுருகாற்றுப்படை உரைக்கொத்து, திருக்குறள் குறிப்புரை, பன்னிரு திருமுறைப் பதிப்பு, கந்தபுராணப் பதிப்பு, திருவிளையாடற்புராணப் பதிப்பு, தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும், தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு, சிவனருள் திரட்டு (500-பாடல்களுக்கு உரை, ஆங்கில மொழிபெயர்ப்பு), நீத்தார் வழிபாடு, தஞ்சை மராட்டிய மன்னர் கால மோடி ஆவணமும் தமிழாக்கமும், திருக்குறள் பரிப்பெருமாள் உரையும் ஆய்வுரையும், திருக்குறளும் - நாலாயிர திவ்வியப் பிரபந்தமும், மும்மொழி வெண்பாக்களில் நாயன்மார் வரலாறு, பெரியபுராணமும் - திருக்குறளும், திருக்குறள் சமணர் உரை போன்ற பல நூல்களை எழுதியும் பதிப்பித்தும் உள்ளார்.""திருமுறைகளுக்கு உரை எழுதினால் இறந்து விடுவார்கள்'' என்று மக்கள் நம்பிக்கை கொண்டிருந்த காலத்தில், 1949-இல் காரைக்கால் அம்மையார் எழுதிய அற்புதத் திருவந்தாதிக்குக் குறிப்புரை எழுதிப் பதிப்பித்தார். இந்நூல்தான் இவர் பதிப்பித்த முதல் நூல். காசித் திருமடத்தின் வெளியீடாக வந்தது. இவர் பதிப்பித்த அனைத்து நூல்களிலும் நூலாசிரியர் வரலாறு, நூல் பற்றிய செய்திகள், கல்வெட்டில் ஏதேனும் குறிப்புகள் கிடைப்பின் அவற்றையும் குறிப்பிடுவது வழக்கமாகும்.காசி மடத்தின் வெளியீடுகளுள் திருக்குறள் உரைக் கொத்துப் பதிப்புகள் பதிப்பு வரலாற்றில் குறிப்பிடத்தக்கன. திருக்குறள் உரைக்கொத்தைப் பதிப்பிக்கும்போது, எம்.எஸ்.பூர்ணலிங்கம் பிள்ளை, வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர், எம்.ஆர்.இராசகோபால ஐயங்கார், வ.வெ.சு.ஐயர், ரெவரண்ட் லாசரஸ் ஆகியோரின் ஆங்கில மொழிபெயர்ப்புகளை ஒப்பிட்டுத் தகுந்த மொழிபெயர்ப்பைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு குறளுக்கும் கீழே வெளியிட்டார்.தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தின் மூலமாகத் திருக்குறளுக்குச் சைனர் எழுதிய உரையைப் பதிப்பித்தார். இதற்காக இவர் சைன சமயத்தைச் சார்ந்த பலரிடமும் சென்று அச்சமயம் சார்ந்த பல செய்திகளைக் கேட்டு நன்கறிந்தார். பல்வேறு பதிப்புகளையும் ஒப்பு நோக்குதல், மூல ஓலையுடன் கையெழுத்துப் படியை ஒப்பு நோக்குதல் முதலான பலவற்றைத் தேவையான வகையில் செப்பனிட்டு விரிவான முறையில் ஆய்வு முன்னுரை எழுதி, திருத்தமான முறையில் அந்நூலைப் பதிப்பித்தார். பெரும்பாலும் இவர் எழுதிய நூல்களிலும், கட்டுரைகளிலும் முன்பு எவரும் எழுதாத செய்திகளையே தருவதைக் காணலாம். "தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்' என்ற நூலில், தஞ்சாவூர் மராட்டியர்தம் ஆட்சிக்குட்பட்ட சமுதாயத்துக்கு மராட்டிய மன்னர்கள் செய்த நன்மைகள், கலைச் சிறப்புகள், அக்காலத்திய பழக்க வழக்கங்கள், அரசியல் நிலைமைகள் போன்ற பலவற்றை மோடி ஆவணங்கள், கல்வெட்டுச் சான்றுகள், இலக்கியச் சான்றுகள் போன்றவற்றின் துணையுடன் ஆராய்ந்து எழுதியுள்ளார். மெக்கன்சி சுவடி, போனஸ்லே வம்ச சரித்திரம் போன்றவற்றின் துணைகொண்டு இந்நூல் பதிப்பிக்கப்பட்டுள்ளது.இலக்கணம், இலக்கியம், கல்வெட்டு, வரலாற்றுப் புலமை, ஆங்கிலம், வடமொழி, தெலுங்கு மொழிப் புலமையும் அறிவும் கொண்டவர் கா.ம.வேங்கடராமையா. இவர் கல்வெட்டாராய்ச்சிப் புலவர், செந்தமிழ்க் கலாநிதி, தமிழ் மாமணி முதலான பல்வேறு பட்டங்களைப் பெற்றுள்ளார். காலம் தவறாமை, நேரத்தை வீணாக்காமல் பலதுறை அறிவு நூல்களைக் கற்றல், ஐயம் என்று தன்னை நாடி வந்தவர்க்கு, தாம் அறியாத செய்தியாக இருந்தாலும் அரிதின் முயன்று அறிந்து விடை கூறுதல், கடமை உணர்வு, கண்ணியத்துடன் நடந்து கொள்ளுதல் ஆகிய பண்பு நலன்கள் இவரிடம் இருந்தன.காலத்தை உயிரெனக் கருதினார். உயிர் போனால் திரும்ப வராது என்பதை அடிக்கடி கூறுவார். "காலம் பொன் போன்றது' என்று கூறக்கூடாது; "காலம் உயிர் போன்றது' என்பார். எந்த ஒரு செயலைச் செய்தாலும் அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும் தன்மை மிக்கவர் வேங்கடராமையா.வேங்கடராமையா, 1995-ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி இறைநிழல் அடைந்தார். இன்றைக்கு கா.ம.வேங்கடராமையா இல்லாவிட்டாலும் அவர் ஆற்றிய பணிகள், பதிப்பித்த நூல்கள், எழுதிய நூல்கள் முதலானவை தமிழ் உள்ளவரை என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

Saturday, July 18, 2009

தமிழுக்கு நெல்லை தந்த கொடை!



அரசுப் பணியில் இருந்தவண்ணம் அருந்தமிழ்ப் பணியும் ஆற்றிய அறிஞர் பெருமக்களின் வரிசையில் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமானுக்குச் சிறப்பிடம் உண்டு. இப்போதெல்லாம் தினசரிகளும் சரி, வார சஞ்சிகைகளும் சரி போட்டிப் போட்டுக் கொண்டு பல்வேறு ஆலயங்களைப் பற்றியும், சரித்திரப் பிரசித்தி பெற்ற தலங்களைப் பற்றியும் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றன. இதற்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்தவர் "கலைமணி' தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்தான்.நெல்லை மாவட்டம் தமிழுக்கு அளித்திருக்கும் கொடைகள் ஏராளம் ஏராளம். பல தமிழறிஞர்கள் நெல்லைத் தரணியில் தோன்றி மொழிப் பணியாற்றி இருக்கின்றனர். அந்த வரிசையில் 1904-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22-ஆம் தேதி நெல்லையில், தொண்டைமான் முத்தையா - முத்தம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்.இவரது தந்தை வழிப் பாட்டனார் சிதம்பரத் தொண்டைமான் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளிடம் முறையாகத் தமிழ் பயின்றவர் என்றால், தகப்பனார் முத்தையாவோ தமிழ்ப் புலமையும், ஆங்கிலப் புலமையும் ஒருங்கே அமையப் பெற்ற அறிஞர். இப்படிப்பட்ட மொழி ஆளுமைமிக்க குடும்பத்தில் பிறந்த பாஸ்கரத் தொண்டைமானுக்கு இயற்கையிலேயே தமிழில் நாட்டமும், கலைகளில் ஈடுபாடும் ஏற்பட்டதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?அன்றைய வழக்கப்படி, கல்லூரியில் படிக்கும்போதே திருமணம் செய்து கொண்டுவிட்ட பாஸ்கரத் தொண்டமானின் மாணவர் பருவம் திருநெல்வேலியில் கழிந்தது. கல்லூரி நாள்களில் பாஸ்கரத் தொண்டைமானிடம் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் இருவர். ஒருவர் தொண்டைமான் படித்த இந்துக் கல்லூரியில் தமிழாசிரியராக இருந்த மேலகரம் சுப்பிரமணியக் கவிராயர். இன்னொருவர், "சொல்லின் செல்வர்' ரா.பி.சேதுப்பிள்ளை.ரா.பி.சேதுப்பிள்ளையின் தூண்டுதலின் பேரில்தான் பாஸ்கரத் தொண்டைமான் தனது கல்லூரி நாள்களிலேயே "ஆனந்தபோதினி' பத்திரிகையில் கம்பராமாயணக் கட்டுரைகளை எழுதினார். கம்பனின் கவிதையில் காதல் வசப்பட்டவர்கள் ரசிகமணியின் ரசனை வட்டத்திற்குள் இழுக்கப்படுவது என்பது எதிர்பார்க்கக் கூடிய ஒன்றுதானே? "ரசிகமணி' டி.கே. சிதம்பரநாத முதலியாரின் பரிச்சயமும், அவருடன் அமர்ந்து கம்பனை வரிவரியாக ரசித்துப் படிக்கும் அனுபவமும் பாஸ்கரத் தொண்டைமானின் தமிழ்ப் பித்துக்கு மெருகும் உரமும் ஊட்டின.திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்ற கையோடு, அரசு உத்தியோகம் அவரைத் தேடி வந்தது. இன்றைய வனவளத் துறைக்கு அப்போது காட்டிலாகா என்று பெயர். காட்டிலாகாவில் வேலைக்குச் சேர்ந்த சில மாதங்களிலேயே, பாஸ்கரத் தொண்டைமான் வருவாய்த் துறை ஆய்வாளரானார். அதிலிருந்து படிப்படியாக முன்னேறி தாசில்தார், முதல் வகுப்பு நடுவர், மாவட்ட உதவி ஆட்சியாளர் என்று பல்வேறு பதவிகளை வகித்தார் அவர். இவரது சேவையைக் கருதி, அரசு இவரை இந்திய அரசுப் பணி (ஐ.ஏ.எஸ்.) தகுதியை அளித்து வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவராக நியமித்தது.1959-ஆம் ஆண்டு பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின் பாஸ்கரத் தொண்டைமான் மீண்டும் திருநெல்வேலிக்கே திரும்பிவிட்டார். தமது பாரம்பரியமான வீட்டில் தங்கி தமது இலக்கியப் பணியைக் கடைசிக் காலம்வரை தொடர்ந்தார் என்பது மட்டுமல்ல, அவர் எழுதிக் குவித்ததும் ஏராளம் ஏராளம்.பாஸ்கரத் தொண்டைமான் எங்கெல்லாம் பணியாற்றினாரோ அங்கெல்லாம் அரசுப் பணியுடன் தமிழ்ப் பணியும் ஆற்றினார் என்பதுதான் அவரது தனிச் சிறப்பு. தஞ்சையில் அவர் பணி புரிந்தபோது அங்கே கிடைத்தற்கரிய கலைச் செல்வங்களும், சிற்பப் படிவங்களும், சரித்திரத்தின் அடிச்சுவடுகளும் கேள்வி கேட்பாரற்று வீணாகிப் போவதைப் பார்த்துத் திடுக்கிட்டார். அவைகளை எல்லாம் முறையாக சேமித்து, தஞ்சையில் அற்புதமான ஒரு கலைக்கூடமே அமைத்துத் தமிழரின் சரித்திரத்துக்கு வலு சேர்த்த பெருமை தொ.மு.பாஸ்கரத் தொண்டைமானுடையது!நெல்லை வண்ணாரப்பேட்டையில் அப்போதெல்லாம் தமிழகமெங்கும் உள்ள தேர்ந்தெடுத்த இலக்கிய ஆர்வலர்கள் ஒன்றுகூடுவார்கள். அவர்கள் ஒன்றுகூடும் இடம் "ரசிகமணி' டி.கே.சிதம்பரநாத முதலியாரின் வீடு. சாரல் பருவம் வந்துவிட்டால், இவர்கள் குற்றாலத்தில் இருக்கும் ரசிகமணியின் வீட்டிற்குச் சென்று விடுவார்கள்.சிதம்பரநாத முதலியாரின் வீட்டில் நடு முற்றமாக வட்டவடிவில் அமைந்த தொட்டிக்கட்டு அமைப்பில்தான் மாலை வேளையிலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் ரசிகமணியின் நண்பர் வட்டம் கூடும். அவர்கள் கம்பன், இளங்கோ, வள்ளுவர், சங்க இலக்கியம் என்று இலக்கிய சர்ச்சையில் ஈடுபடுவார்கள். இங்கிலாந்தில் டாக்டர் சாமுவேல் ஜான்சன் தனது நண்பர் வட்டத்தைக் கூட்டி இலக்கியக் கழகம் (கண்ற்ங்ழ்ஹழ்ஹ் இப்ன்க்ஷ) என்ற பெயரில் இலக்கிய ஆய்வுகள் நடத்துவாராம். அதேபோல, இலக்கிய ஆய்வு நடத்தும் திருநெல்வேலியிலுள்ள ரசிகமணியின் நண்பர் வட்டம், "வட்டத் தொட்டி' என்று வழங்கலாயிற்று.வட்டத் தொட்டியின் தலைவர் ரசிகமணி டி.கே.சி. என்றால் அதன் தூண்களில் ஒருவராகச் செயல்பட்டவர் தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான். "கம்பர் அடிப்பொடி' சா.கணேசன், மு.அருணாசலப் பிள்ளை, நீதிபதி மகாராஜன், மீ.ப.சோமு, நாமக்கல் கவிஞர், "கவிமணி' தேசிக விநாயகம் பிள்ளை, தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி முதல்வரும், ஆங்கிலப் பேராசிரியருமான ஆ.சீனிவாச ராகவன், ஏ.சி. பால் நாடார் மற்றும் வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார் போன்ற பல தமிழறிஞர்கள் "வட்டத் தொட்டி'யில் அடிக்கடி பங்கு பெறும் தமிழார்வலர்கள்.மூதறிஞர் ராஜாஜி மற்றும் எழுத்தாளர் கல்கி ஆகிய இருவரும் சற்று ஓய்வு கிடைத்தாலும் நெல்லையிலுள்ள ரசிகமணியின் வீட்டுக்கு விருந்தாளியாக வந்து விடுவார்கள். அவர்களும் சேர்ந்து கொண்டால், வட்டத் தொட்டியின் கலகலப்புக்கும், இலக்கிய சர்ச்சைக்கும் கேட்கவே வேண்டாம். இந்த இலக்கிய சர்ச்சைகளில் தொ.மு. பாஸ்கரத் தொண்டைமானின் பங்களிப்பு மிகவும் அதிகம்.வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியாரின் எண்பதாவது பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று நெல்லையிலுள்ள நண்பர்கள் முடிவெடுத்து ஒரு விழா எடுப்பது என்று தீர்மானித்தனர். "வெள்ளைக்காலை வாழ்த்த உத்தமதானபுரத்திற்குத்தான் தகுதியுண்டு' என்பது ரசிகமணியின் கருத்து. அவரே "தமிழ்த் தாத்தா' உ.வே. சாமிநாத அய்யரவர்களுக்குக் கடிதம் எழுதி அவரது இசைவையும் பெற்று விட்டார்.இந்துக் கல்லூரி மாடியில் நடந்த விழாவுக்கு அறிஞர்களும், தமிழன்பர்களும் திரண்டு வந்திருந்தனர். விழாத் தலைவரான மகா மகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாத அய்யருக்கு முதிர்ந்த பருவம். அவரை அழைத்துக் கொண்டு, வழிநடத்திச் சென்று தலைமைப் பீடத்தில் அமரவைத்த இளைஞர் தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான். விழாத் தலைவர் உ.வே.சா. பேசும்போது அவர் குறிப்பிட்டதை அப்படியே தருகிறோம்:""என்னைப் பலகாலும் வற்புறுத்தி நீ மேலேற வேண்டும். எனவே, படி, படி என்று தூண்டி உற்சாகப்படுத்தி வந்தவர் எனது ஆசிரியர் பெருமானாகிய திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள். இப்பொழுது என்னை அப்படி ஊக்குவிப்பார் ஒருவரையும் காணேன். நான் நிரம்பக் கற்றவன் என்று நீங்களெல்லாம் என்னை மதித்து மரியாதை செய்யத் தொடங்கிவிட்டீர்கள்.நெல்லைக்கு வந்தபின் நான் கற்க வேண்டியவை பல உள்ளன என்பதையும், அவற்றை எல்லாம் கற்றுத்தான் மேனிலை எய்த வேண்டும் என்பதையும் உணர்ந்தேன். மேலும் படி, படி என்று சொல்ல ஆசிரியப் பெருமானாகிய பிள்ளை அவர்கள் இல்லாத குறையும் இன்று தீர்ந்தது.என்னை அழைத்து வந்தானே ஒரு பிள்ளையாண்டான். அவன் வயதிலும் உருவத்திலும் சிறியவன்தான். ஆனால், அவன்தான் என் ஆசிரியப் பெருமானின் ஸ்தானத்தை இன்று வகித்தவன். ரெயிலடியில் இறங்கியது முதல் இங்கு வந்து அமரும் வரை என் கூடவே வந்து, படி, படி என்று கூறி வழியும் காட்டி, மேலேற வேண்டும் என்று சொன்னதுடன் அமையாது, மேனிலைக்கே கொண்டு வந்து தலைமைப் பீடத்திலும் அமர்த்திச் சென்றுவிட்டான்.பிள்ளையவர்கள் ஸ்தானத்தை வகித்து என்னை ஆண்டான் என்ற பொருள்பட இந்தத் தம்பியைப் பிள்ளையாண்டான் என்று குறிப்பிட்டேன். இந்தத் தம்பி பல்லாண்டு நல்வாழ்வு வாழ்க!''இதைக் கேட்ட வெள்ளக்கால் எண்பதாண்டு விழாக் குழுவில் செயலாளராக இருந்த தொ.மு.பாஸ்கரத் தொண்டைமானுக்கு நோபல் பரிசு கிடைத்த மகிழ்ச்சி. "தமிழ்த் தாத்தா' தன்னைத் தம்பி என்று அழைத்ததால் பிற்காலத்தில் "தம்பி' என்ற புனைப்பெயரில் பல கவிதைகளையும், கட்டுரைகளையும் தொ.மு.பா. எழுதினார். "தமிழ்த் தாயின் தவப் புதல்வர் திருவாயால் வாழ்த்துப் பெறவும், "தம்பி' என்று அவர் அமுதூர அழைக்கவும் என்ன பாக்கியம் செய்தேன்!' என்று பாஸ்கரத் தொண்டைமான் அடிக்கடி நினைவு கூர்ந்து நெகிழ்வாராம்.அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின், நெல்லைக்குத் திரும்பினாலும், தமிழகமெங்கும் சுற்றி அங்குள்ள கோயில்களைக் கண்டு, அவற்றில் வரலாற்றுச் சிறப்பு, கலைநயம் ஆகியவற்றை ஒன்றுவிடாமல் நுணுகி ஆராய்ந்து கட்டுரைகளாக வடித்தார் பாஸ்கரத் தொண்டைமான். இந்தக் கட்டுரைகள் "வேங்கடம் முதல் குமரி வரை' என்ற தலைப்பில் "கல்கி' வார இதழில் தொடராக வந்தது."வேங்கடத்துக்கு அப்பால்', பிள்ளைவாள், தமிழறிஞர் முதலியார், ரசிகமணி டி.கே.சி., கலைஞன் கண்ட கடவுள், கல்லும் சொல்லாதோ கவி, அமர காதலர், தென்றல் தந்த கவிதை, தமிழர் கோயில்களும் பண்பாடும், கம்பன் கண்ட இராமன், அன்றும் இன்றும் என்று தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் எழுதிக் குவித்தவை ஏராளம் ஏராளம். இவரது நூல்கள் சமீபத்தில் நாட்டுடைமையாக்கப் பட்டிருக்கிறது.முற்போக்கு எழுத்தாளர் தொ.மு.சி. ரகுநாதன் இவருடைய இளைய சகோதரர். நீதிபதி மகாராஜன் தொகுத்தது போல, பாஸ்கரத் தொண்டைமானுக்கு ரசிகமணி எழுதிய கடிதங்களும் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. காரைக்குடி கம்பன் விழா என்றால், தவறாமல் ஆஜராகி விடுவார்கள் தொண்டைமான், மகாராஜன், ஆ.சி.ரா. போன்ற வட்டத்தொட்டி நண்பர்கள். இவர்களது உரையைக் கேட்பதற்காகவே இலக்கிய ஆர்வமுள்ள இளைஞர் கூட்டம் காரைக்குடி நோக்கிப் படையெடுக்கும். அது ஒரு காலம்!தமிழும், கலையும் தனது இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்த தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் 1965-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31-ஆம் தேதி இறைவனடி சேர்ந்தார். ஆனால், வேங்கடம் முதல் குமரி வரை உள்ள பகுதி வாழும் வரை, இவரது நூலும் வாழும். இவரது புகழும் வாழும்!

Saturday, July 11, 2009

ஒப்பிலக்கியச் செம்மல்!



பேச்சாளராக, எழுத்தாளராக, உரையாசிரியராக, பதிப்பாசிரியராக, விமர்சகராக, வரலாற்று ஆசிரியராக, பத்திரிகை ஆசிரியராக, சமயாச்சாரியராக, திறனாய்வாளராக இப்படி பன்முக வித்தகராக விளங்கியவர் பி.ஸ்ரீ.. என்று இலக்கிய நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் பி.ஸ்ரீ.ஆச்சார்யா.நூற்றியெட்டு வைணவத் திருப்பதிகளில் ஒன்றானதும், நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டதுமான தென்திருப்பேரை என்னும் கிராமத்தில், 1886-ஆம் ஆண்டு ஏப்ரல் 16-ஆம் தேதி, திருவாதிரை நட்சத்திர நன்நாளில், பிச்சு ஐயங்கார்-பிச்சு அம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். பெற்றோர் இவருக்கு பி.ஸ்ரீநிவாச்சாரி எனப் பெயரிட்டனர். நாளடைவில் அவரது பெயர் சுருங்கி, பி.ஸ்ரீ. என ஆகிவிட்டது.நெல்லையில் உள்ள, தற்போது "மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி' என்று அழைக்கப்படும் இந்துக் கலாசாலையில் கல்வி பயின்றார். புரட்சி கவி பாரதியும், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரும், சிறுகதை மன்னன் என்றழைக்கப்படும் புதுமைப்பித்தனும் படித்த சிறப்பு மிக்கது இக்கல்லூரி. பள்ளிப் பருவத்திலேயே ஆங்கிலத்தில் பேசுவதிலும் எழுதுவதிலும் நல்ல அறிவும் திறமையும் படைத்த பி.ஸ்ரீ., எப்போதும் புத்தகமும் கையுமாக இருப்பாராம். அதிகம் விரும்பிப் படித்து, திளைத்து, மயங்குவது கம்பராமாயணம் மற்றும் பாரதியின் பாடல்களில்தான்.பி.ஸ்ரீ.க்கு, நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் வளரக் காரணமாய் இருந்தவர் மகாகவி பாரதியார்தான். பலமுறை பாரதியாரைச் சந்தித்து, பழகி மிகுந்த தோழமை பூண்டு, அவரைப் பாடச் சொல்லி, கேட்டு, மகிழ்ந்து பாராட்டிய பி.ஸ்ரீ., ரவீந்திரநாத் தாகூருக்குக் கிடைத்ததுபோல பாரதியாருக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லையே என தனது ஆதங்கத்தையும் பதிவு செய்துள்ளார்.பாரதியின் தாக்கத்தால் அந்நாளைய "இன்ட்ர்மீடியட்' வகுப்புக்குப் பிறகு படிப்பைப் பாதியில் நிறுத்தி விட்டு சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்றார் பி.ஸ்ரீ. விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடுவதைக் கண்ட அவரது பெற்றோர், அவருக்குத் திருமணம் செய்து வைத்து அவரது கவனத்தைத் திசைதிருப்ப நினைத்தனர். அதன்படி தங்கம்மாள் என்ற பெண்ணைத் திருமணம் செய்வித்தனர். இவருக்கு ஒரு மகனும், இரு மகளும் உண்டு.தமிழ் இலக்கியத்தை அவ்வளவாக அறிந்திராத காலத்தில் ராஜாஜிதான் பி.ஸ்ரீ.யின் கவனத்தை தமிழின் பால் ஈர்த்துக்கொண்டுவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.""தமிழில் படிக்க என்ன இருக்கிறது என்கிறாய், அது தாய்மொழியின் குறையோ குற்றமோ அன்று; உன் ஆசிரியர் கூறியபடி புல்லையும் தவிட்டையும் காளை மாட்டுக்குப் போட்டுவிட்டு, வீட்டுப்பசு பால் கறக்கவில்லை என்றால் அது பசுவின் குற்றமா?'' என்று ராஜாஜி இடித்துரைத்ததைக் கேட்டு, தமிழ் இலக்கியங்களைப் படிக்கத் தொடங்கினார். அதுவே பிற்காலத்தில் திறனாய்வாகவும் ஆராய்ச்சியாகவும் உருப்பெற்றது. அதனால் தன்னைத் தமிழின் "ஆயுள் மாணாக்கன்' என்று கூறிக்கொள்வதில் பெருமிதம் கொண்டவர் பி.ஸ்ரீ.இவரது ஆங்கில இலக்கியப் படிப்பு இவரது தமிழ்ப்பணிக்கு மெருகூட்டியது. பாமரரும் படித்துப் புரிந்து கொள்ளும் விதமாக பண்டித நடையில் இருந்தவற்றை பழகு தமிழுக்குக் கொண்டுவந்து 20-ஆம் நூற்றாண்டு தமிழ் உரைநடை மறுமலர்ச்சிக்கும் திறனாய்வுத்துறைக்கும் வழிகாட்டியவர்களுள் குறிப்பிடத்தக்கவர் இவர்.பக்தி இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டிருந்த பி.ஸ்ரீ., திருக்கோயில்களிலும் தலபுராணங்களிலும் தம்மையறியாது ஓர் ஆழ்ந்த பற்றுக் கொண்டிருந்தார். செப்பேடுகள், கல்வெட்டுகள், சிற்பக்கலை போன்றவற்றிலும் மிகுந்த புலமை பெற்றிருந்தார். சரித்திரத்தை விஞ்ஞான மனப்பான்மையுடன் இலக்கியச் சுவை குன்றாது ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பது பி.ஸ்ரீ.யின் விருப்பம். எனவே, "ஆனந்த விகடன்' பத்திரிகையில் "கிளைவ் முதல் இராஜாஜி வரை' என்ற தலைப்பில் கட்டுரை எழுதி பின் அதை நூலாக்கினார்.உ.வே.சா.வைச் சந்தித்துப் பழகும் வாய்ப்புதான் தமிழ் மீது பற்று அதிகரிக்கும் அளவுக்கு பி.ஸ்ரீ.யை உயர்த்தியது. இவரது எழுத்தார்வம் "கிராம பரிபாலனம்' என்கிற வார இதழைத் தொடங்கி வைத்து நஷ்டமடையவும் வைத்தது. விளைவு? வேலையில் சேர்வதுதான். செட்டிநாட்டில் மூன்றரை ஆண்டுகள் தங்கி, "குமரன்' பத்திரிகையின் ஆசிரியராக, எண்ணிலடங்காத கட்டுரைகளையும் கதைகளையும் தொடர்களையும் எழுதிக்குவித்தார்.""ஆனந்தவிகடன் ஓர் இன்பப் படகு; அதை ஆனந்தமாய்ச் செலுத்துவதற்குத் துடுப்பு போடலாம் வாருங்கள்!'' என்று கல்கி அடிக்கடி பி.ஸ்ரீ.யை உற்சாகமூட்டி எழுதத் தூண்டினார். அதனால் ஆனந்தவிகடனில் தொடர்ந்து எழுதிவந்தார் பி.ஸ்ரீ. கம்பனை ஆராய்ச்சிக் கண்கொண்டு நோக்குவதற்கு வழிகாட்டியாகவும் குருவாகவும் இருந்தவர் பி.ஸ்ரீ.யின் கலாசாலை நண்பரான வையாபுரிப்பிள்ளையாவார்.உ.வே.சா., கா.சு.பிள்ளை, வையாபுரிப்பிள்ளை, சேதுப்பிள்ளை, மறைமலையடிகள், பாரதியார், வ.உ.சிதம்பரனார், வ.வே.சு ஐயர், ராஜாஜி, கல்கி, சோமசுந்தர பாரதி, ரசிகமணி டி.கே.சி., மற்றும் பல இலக்கிய அன்பர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றவர் பி.ஸ்ரீ.இவர் எழுதிய "ஸ்ரீஇராமானுஜர்' என்னும் வாழ்க்கை வரலாற்று நூலுக்கு 1964-ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி பரிசு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டில் பாராட்டும், பொன் முடிப்பும் வழங்கப்பட்டது.தினமணி, தினமலர், சுடர், சுதேசமித்திரன் போன்ற நாளிதழ்களுக்கும், கல்கி, ஆனந்தவிகடன் போன்ற வார இதழ்களுக்கும் கலைமகள், அமுதசுரபி போன்ற மாத இதழ்களுக்கும் கட்டுரைகளை எழுதிக் குவித்தார். "தினமணி' நாளிதழில் பதிப்பாசிரியராகப் பணியாற்றியபோது எண்ணற்ற நல்ல நூல்களைத் "தினமணி மலிவு வெளியீடாக' வெளியிட்ட பெருமை பி.ஸ்ரீ.க்கு உண்டு.தமிழ்ப் பத்திரிகை உலகில் பி.ஸ்ரீ.யின் பங்களிப்பு என்பது "தினமணி'யில் வேலை பார்த்தபோது அவர் வெளியிட்ட பல மலிவு விலைப் பதிப்புகள் என்பதுதான். தொடர்ந்து எழுதிவந்த கட்டுரைகளும், இலக்கிய ஆய்வுகளும், புத்தக மதிப்புரைகளும் எனலாம். பி.ஸ்ரீ.யின் பத்திரிகைப் பணியில் முழுப் பரிமாணமும் அவர் "தினமணி'யில் இருந்து ஓய்வுபெற்று, ஆனந்தவிகடனில் பகுதிநேர எழுத்தாளராக மாறியபோதுதான் வெளிப்பட்டது.இன்றளவும் பி.ஸ்ரீ.யின் சித்திர ராமாயணத்துக்கு நிகராக ஒரு எளிய படைப்பு வெளிவந்ததில்லை என்பதுதான் ஆய்வாளர்களின் கருத்து. தமிழில் ஒப்பிலக்கியம் என்பதற்கு அடித்தளம் இட்ட பெருமையும் பி.ஸ்ரீ.க்கு உண்டு. கம்பனும் - ஷெல்லியும், பாரதியும் - ஷெல்லியும் என்று தொடங்கி, இலக்கிய ஒப்புமைகள் பல பி.ஸ்ரீ.யால் வெளிவந்தன. கம்பன் கவிதையை இலக்கியத் திறனாய்வு செய்து கம்பனின் புகழை உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டிய பெருமைக்குரியவர் பி.ஸ்ரீ. உடல்நிலை குன்றி படுக்கையில் இருந்தபோதும் கூட, "நான் இரசித்த கம்பன்' என்ற இறுதி நூலை எழுதி முடித்தார் என்றால் அவருக்கிருந்த கம்ப தாகம் எப்படிப்பட்டது என்று உணரமுடிகிறது!பி.ஸ்ரீ.யின் கட்டுரைகள் இல்லாமல் எந்தவொரு தீபாவளி மலரும் வெளிவராது என்கிற நிலைமை கடந்த நூற்றாண்டில் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் இருந்தது.பி.ஸ்ரீ., தமது 96-வது வயதில், 1981-ஆம் ஆண்டு அக்டோபர் 28-ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார்.

Monday, July 06, 2009

சீர்காழி தமிழிசை மூவர் விழா



இசை உலகின் ஆதிமும்மூர்த்திகள் என்றுஅனைவராலும்போற்றப்படும் சீர்காழி தமிழிசை
மூவர்களாகிய அருள்மிகு முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை, அருணாசலக்கவிராயர் ஆகியோர் காலத்தால் திருவாரூர் மூவர்களுக்கு முற்பட்டவர்களாவர்.
கீர்த்தனை என்ற இசை வடிவத்திற்கு இவர்கள் மூவரும் கொள்ளிட நதிக்கு தென் கரையிலும், வடகரையிலும் சற்றுத் தொலைவில் உள்ள சீர்காழி, சிதம்பரம் ஆகிய எல்லைக்குள் வாழ்ந்து சிறப்பித்தவர்கள். சீர்காழி சட்டைநாதர் திருத்தலத்திலேயே தேவாரப் பாடல்களை அருளினர். இத்தகைய புகழ் பெற்ற சீர்காழி சட்டைநாதர் திருத்தலத்திலேயே தேவார மூவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் அவதரித்து, ஞானப்பாலுண்டு, அரிய பொக்கிஷமான தேவாரப் பாடல்களை அருளினார். இத்தகைய புகழ் பெற்ற சீர்காழி தலத்தில் தமிழிசை மூவர்கள் சிறப்பு வாய்ந்த பல தமிழிசைப் பாடல்களைப் பாடி மக்களிடையே பரவச் செய்தார்கள். இவர்களுடைய இசைப் பாடல்கள் வாயிலாக இசைத் தமிழ் எவ்வகையில் வளம் பெற்றது என்பதை நாம் அறிய முடியும். அருள்மிகு முத்துத்தாண்டவர் (வாழ்ந்த காலம் சுமார் கி.பி. 1522-1625): முத்துத்தாண்டவர் சிறு வயதிலேயே மிகுந்த இறை பக்தியுடனும், இசை, நடனம், சிவநாம சங்கீர்த்தனத்தில் ஈடுபாட்டுடனும் வாழ்ந்தார். இவர் இசை வேளாளர் மரபில் பிறந்தவர். ஆதலால், நாகசுர இசையில் இயற்கையாக ஈடுபாடு இருந்தது. இசை ஞானமும் இயல்பாக அமைந்தது. இவருக்கு இளமையிலேயே கொடிய குன்ம வியாதி பிடித்ததால் குலத் தொழிலாகிய நாகசுரம் இசைக்க இயலாமல் போனது. இவருடைய இயற்பெயர் தாண்டவன். இவர் கடவுள் பக்தி அதிகமுடையவர். ஆதலால், சீர்காழியில் வசித்த ஓர் உருத்திர கணிகையின் வீட்டிற்குப் போய் அதிக நேரம் செலவிட்டு ஆடலிலும், பாடலிலும், சிவநாம சங்கீர்த்தனத்திலும் பொழுதைக் கழித்ததால், அவர் வீட்டில் உள்ள அனைவரும் அவரை வெறுத்து ஒதுக்கினர். எனவே, அவர் வீட்டுக்குச் செல்வதைத் தவிர்த்து, கோயிலில் உறங்கியபோது குருக்களின் பத்து வயதுப் பெண் உருவில் அம்பிகை வந்து, அவருடைய பசியைப் போக்கியதோடு, சிதம்பரம் நடராஜர் கோயில் சென்று பக்தர்களின் கூட்டத்தில் வரும் முதல் வார்த்தையை வைத்துப் பாடினால் கொடிய குன்ம வியாதி தீரும் என்று தாண்டவனுக்கு அருளினார். அதன்படி, சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர் ஒருவர் மூலம் "பூலோக கைலாச கிரி சிதம்பரம்' என்ற சொல் வர, முதல் பாடலாக பவப்ரியா ராகத்தில் ஜம்பை தாளத்தில் கீர்த்தனை வடிவில் பாடினார். நிறைவாக, சிவபெருமான் பஞ்சாட்சரப் படியின் மேல் ஐந்து பொற்காசுகள் தோன்றச் செய்து தினமும் பாடி காசுகள் பெற்றுக் கொள்ளும்படி கட்டளையிட்டு அருளினார். அவ்வாறு சிறப்புகளைப் பெற்று பல அற்புதங்களை நிகழ்த்தி, முத்துத்தாண்டவர் இயற்றிய பாடல்கள் 60 நமக்குக் கிடைத்துள்ளது. இதில் 25 பதங்களும் அடங்கும். இது அகப்பொருளை உணர்த்தும் காதலைப் பற்றி அமைந்துள்ளது. பரதநாட்டியத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆடிக்கொண்டார், சேவிக்க வேண்டுமய்யா, மாயவித்தையைச் செய்கிறானே போன்ற கீர்த்தனைகள் மிகவும் புகழ் பெற்றவையாகும். இவர் கீர்த்தனையின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். அருள்மிகு மாரிமுத்தாப்பிள்ளை (வாழ்ந்த காலம் சுமார் 1712- 1787): முத்துத்தாண்டவர் போலவே தில்லை நடராஜர் மேல் பல கீர்த்தனைகளையும், பதங்களையும் பாடியவராக விளங்கியவர் இயலிசைப் புலவர் மாரிமுத்தாப்பிள்ளை. இவர் தில்லைவிடங்கன் என்ற சிற்றூரில் பிறந்தவர். இவர் சிவகங்க நாதர் என்பவரிடம் தமிழ்க் கல்வி, சமயக் கல்வி பெற்று தக்க குருவிடம் சமய தீட்சை பெற்றார். இவருடைய மூத்த பிள்ளை உடல்நலக் குறைவால் வருந்திய போது, இறைவன் இவரது கனவில் தோன்றி "நம் மீது நீ பாட்டுப் பாடினால் உன் கவலை நீங்கும்' என்றார். பிறகு, அன்று முதல் இறைவன் மேல் பாடுவதே தொண்டாகக் கொண்டு இவர் புலியூர் வெண்பா, சிதம்பரேசர், விறலிவிடு தூது, தில்லைப் பள்ளு, வண்ணம் மற்றும் பல பதிகங்களை இயற்றினார். இவர் இயற்றிய புலியூர் வெண்பா சென்னை பல்கலைக்கழகப் பாடத் திட்டத்தில் பல காலம் தமிழ்ப் பாடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இவர் சிறந்த இசை நூல் ஆசிரியர் மட்டுமன்றி சிறந்த இலக்கியகர்த்தாவும் ஆவார். இவர் இயற்றியது தில்லைவிடங்கன் அய்யனார், நொண்டி நாடகம், விடங்கேசர் பதிகம், தனிப் பாடல்கள், அநீதி நாடகம். கிடைத்தது 25 கீர்த்தனங்கள். புலியூர் வெண்பா, தில்வைவிடங்கன் பற்றி இரு தனித் தோத்திரப் பாக்களும் உள்ளன. ஏனையவை பற்றித் தெரியவில்லை. அருள்மிகு அருணாசலக் கவிராயர் (வாழ்ந்த காலம் சுமார் கி.பி. 1711-1778): இவர் இசைத் தமிழில் விசித்திரமான அமைப்புகளை எல்லாம் நிரூபித்துக் காட்டியவர். தேவார மூவரில் திருஞானசம்பந்தர் அவதரித்த சீர்காழிப் பதியே அருணாசலக் கவிராயரையும் உலகிற்குக் காட்டியது. தமிழிசையில் சீர்காழி மூவரில் நடு நாயகமாய் விளங்கிய அருணாசலக் கவிராயர் ராமபிரானைப் பற்றி பல கீர்த்தனைகள் இயற்றியுள்ளார். மற்ற இருவரும் சிதம்பரம் நடராஜர் பற்றியே பாடியுள்ளனர். இவர் திருக்கடையூர் அருகிலுள்ள தில்லையாடி என்ற சிற்றூரில் பிறந்தவர். இவருக்கு 12 வயதான போது பெற்றோரை இழந்து, இவருடைய தமயனாரின் அரவணைப்பில் வளர்ந்து, தருமபுர ஆதீனத்திலும், அம்பலவாணக் கவிராயரிடமும் சமயக் கல்வியும் பிறவும் கற்றதோடு, வடமொழி ஆகமங்களையும் கற்றுத் தேறினார். இவர் 12 ஆண்டுகள் தில்லையாடியிலும், 25 ஆண்டுகள் சீர்காழியிலும் வாழ்ந்தார். தனது 60-வது வயதில் ராம நாடக கீர்த்தனைகளைப் பாடி முடித்தார். சீர்காழிப் பள்ளு, சீர்காழிப் புராணம், சீர்காழிபக் கோவை, சீர்காழிக் கலம்பகம், சீர்காழி அந்தாதி, தியாகேசர் வண்ணம், சம்பந்தர் பிள்ளைத் தமிழ், அனுமார் பிள்ளைத் தமிழ் முதலிய நூல்கள் பலவற்றை இயற்றினார். இவற்றுள் சிலவே இன்று கிடைத்துள்ளன. பாமர மக்கள் பார்த்தும், கேட்டும் அனுபவிப்பதற்கு என்றே எழுதப்பட்ட நூல் ராம நாடக கீர்த்தனையாகும். இதில் இசைப் பகுதிகள் 258, தரு என்ற வகை கீர்த்தனை 197, திபதை 60 (திபதை என்பது 2 அடி கண்ணிகளால் ஆன இசைப் பாட்டு), தோடையம் 1 (தோடையம் என்பது 4 அடி கொண்ட ஒருவகை விருத்தப் பாட்டு). தோடையம் என்பது கடவுள் வணக்கமாகப் சொல்லப்படும் பாட்டு ஆகும். ஏன் பள்ளி கொண்டீர் அய்யா, காண வேண்டும் இலட்சம் கண்கள், யாரோ இவர் யாரோ போன்ற கீர்த்தனைகள் இன்றும் பிரபலமாகத் திகழ்கின்றன. 40 ராகங்களை தனது பாடல்களில் பயன்படுத்தியுள்ளார். இவர் துவஜாவந்தி, மங்கல கௌசிகம், சைந்தவி போன்ற அபூர்வ ராகங்களையும் பயன்படுத்தியுள்ளார். பல சிறப்புகளைப் பெற்ற சீர்காழி இசைத் தமிழ் மூவர்களுக்கு திருவையாறில் நடைபெறும் தியாகராஜர் ஆராதனை விழாவைப் போலவே, கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசால் மிகவும் முக்கியமான இசை விழாவாக "சீர்காழி தமிழிசை மூவர் ஆராதனை விழா' நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் மூன்று நாள்கள் சீர்காழி சட்டைநாதர் ஆலயத்தில் இந்த ஆராதனை விழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு ஜூலை 6,7,8 ஆகிய நாள்களில் சீர்காழி தமிழிசை மூவர் ஆராதனை விழா நடைபெறுகிறது. தமிழக அரசின் சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை, தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையம், சீர்காழி தமிழிசை மூவர் பேரவை, சீர்காழி பொதுமக்கள் ஆகியோர் இணைந்து இப் பெரு விழாவை நடத்துகின்றனர்.

கருத்து
சீர்காழித் தமிழிசைவாணர்கள் மூவரையும் தமிழிசையின் முன்னோடி என்று பலரும் தவறாகவே குறிப்பிடுகின்றனர். அவ்வாறு இல்லாமல் ' கீர்த்தனை' என்னும் இசை வடிவைச்சிறப்பித்தவர்கள் என உண்மையை உரைத்துள்ள திரு மணிகண்டனுக்குப் பாராட்டுகள்! ஆனால்,இவர் தொடக்கத்தில் குறிப்பிட்டவாறு ஆதி மும்மூர்த்திகள் எனப் பலரும் குறிப்பிடுவது தொல்காப்பிய காலத்திற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிறந்திருந்த தமிழிசையை இழித்துக் கூறுவதாகும் என்பதை உணர வேண்டும். இவர்களுக்கும பிந்தைய கருநாடக இசை மூவரை இசை மும்மூர்த்திகள் என்றதால் ஒப்பீட்டு முறையில் அவர்களுக்கும் மூத்தவரகள் எனக் கூற வந்து தவறான சொல்லாட்சி இடம் பெற்று விட்டது. இன்றைய தெலுங்கு இசை வடிவங்களுக்கு முன்னோடியான தமிழிசை வடிவங்களைப் பரப்பிய மூவர் புகழ் ஓங்குக!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/7/2009 4:18:00 AM