ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன்

(11)

3.ஒருமைப்பாட்டு உணர்வுதொடர்ச்சி


மேலும் அவர் தெரிவிக்கும் விருப்பங்கள் நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கக்கூடிய நல்ல எண்ணங்களே. ஆகும்.

வேற்றுமைகள் ஒய்ந்திட வேண்டும்-ஈன
            வேண்டா மதச் சாதி சாய்ந்திட வேண்டும்
போற்றும் சமநிலை வந்திட வேண்டும்-கல்விப்
            புத்தம் புதுமைகள் பூத்திட வேண்டும்!
அறியாமைப் பேய்களை அகற்றிட வேண்டும் நம்மின்
                அன்னை பாரதத்தின் உண்மைக் கிராமங்கள்
நெறிமுறைகளைப் பேணிட வேண்டும்-என்றும்
                நேர்மைவழி வாழ்க்கை நடத்திட வேண்டும்!

 துன்பம், துயரம், வறுமை இவற்றையே  உடன் பிறப்புகளாகக் கொண்டு ஏழ்மையில் வாடும் சிற்றூர் மக்களோடு இணைந்து வாழ்ந்தவர் கவிஞர் சேதுராமன் எனவே சிற்றூர் மக்களின் வாழ்க்கை நிலையை நன்கு அறிந்தவர். இந்தப் பட்டறிவின் பயனாக அவர் உணர்ச்சிச் செறிவோடு மக்களின் அவலநிலையைப் பாடல்களாக்கியிருக்கிறார்.

 புண்ணியன் சென்று பாவப்
                   புதர்முன்னே நிற்றல் போலும்
கண்ணியன் சென்று ஈனக்
                   கயவர்முன் இளித்தல் போலும்
பண்ணிசை கோட்டான் ஆர்த்தல்
                  பயன்இசை என்றல் போலும்
திண்ணிய உழைப்புச் செம்மல்
                   சிறுமைமுன் தேய்ந்தே ஓய்வான்!’

எவ்வளவு தான் உழைத்தாலும், உழைக்கும் மக்களின் விளை வெல்லாம் – உழைப்பின் பயன் எல்லாம் – உழையாமல் உண்ணுகிற தருக்கருக்குச் சேர நேரிடுகிறது. உழைப்பவர் தவிக்கின்றார் பணமில்லாமல்!
“பிணந்தின்னும் கூட்டத்தார்கள்
                 பெருகுதல் போல இன்று
 பணந்தின்னும் கூட்டத்தார்கள்
                 பாரதம் பெருகி விட்டார்!

மணம்தரும் உழைப்போர் இந்த
                மமதையர் பின்னே கெஞ்சிக்
குணம் விற்றுக் கடனை வாங்கிக்
                கும்பியை நிறைக்கின்றார்கள்!

மலையுச்சிப் பணக்கொழுப்பர்
                மடுப்போலும் எளிய மக்கள்
விலைபேசிச் செழிக்கின்றார்கள்
                விற்பனை ஏலத்தைப் போல்
கலைஞரும் தொழிலாளர்நல்
                கடும்உழைப்பாள ரெல்லாம்
 தலைதாழ்ந்து பணிந்துநின்று
                தவிக்கிறார் வெட்கக்கேடு!”

இவ்வாறு துறைதோறும் நிலவுகின்ற சிறுமைகளை எடுத்துக்கூறி, அவை மாற வேண்டியதன் இன்றியமையாமையையும் மாற்றுவதற்கான சிந்தனைகளையும் வலியுறுத்துகிறார் கவிஞர் ‘இருபது கட்டளைகள்‘ தொகுப்பில். எத்துறைதனிலும் நம் இந்திய நாட்டில் வீணாய் அடிமைத்தனங்கள் மண்டி வளர்வதை வேதனையுடன் சுாட்டுகிறார் அவர்.
 “பண்ணையில் அடிமை; கீழ்மேல்
                 பான்மையில் அடிமை; உற்ற
மண்ணகப் பணிகள் எல்லாம்
                 மாறாத அடிமை மோகம்!
எண்ணிய முடிக்க லாற்றா
                எத்தர்கள் காலம் எல்லாம்
 கண்ணியம் இல்லா இந்தக்
              கடைநிலை வளர்க்கின்றார்கள்!
விற்பனைப் பொருளைப் போலும்
                  விரிஇருள் தன்மை போலும்
அற்பர்கள் வாழ்வைப் போலும்
                  அடிமையாய் மக்கள் ஆக்கிக்
கற்பனைப் பொருளாய் அன்னார்
                  காண்வளம் கெடுத்துத் தங்கள்
வெற்றிகள் குவிக்கின்றார்கள்
                   வேடிக்கை மனிதரிங்கே!’
(தொடரும்)
வல்லிக்கண்ணன்:
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்