Saturday, June 29, 2024

உ.வே.சா.வின் என் சரித்திரம் 94 : அத்தியாயம்-59 : திருவிளையாடற் பிரசங்கம்

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 93 : அத்தியாயம்-58 : எனக்கு வந்த சுரம்-தொடர்ச்சி)

நானும் என் தந்தையாரும் நிச்சயித்தவாறே வைகாசி (1874
சூன் மாதம்) மாத இறுதியில் என் பெற்றோர்களுடன் நான் செங்கணத்தை
நோக்கிப் புறப்பட்டேன். முதலில் அரியிலூருக்குச் சென்றோம். அங்கே ஒரு
வேளை தங்கிச் சடகோபையங்காருடன் பேசினோம். பிள்ளையவர்களுடைய
விசயங்களைப் பற்றி அவர் ஆவலுடன் விசாரித்தார். அரியிலூரில் முன்பு
பழகினவர்களெல்லாம் எங்கள் வரவை அறிந்து வந்து பார்த்துச் சென்றனர்.

செங்கண நிகழ்ச்சிகள்

பிறகு நாங்கள் குன்னத்தின் வழியே செங்கணம் சென்றோம். அங்கே
விருத்தாசல ரெட்டியாரும் வேறு பழைய நண்பர்களும் எங்களைப் பார்த்து
மிக்க மகிழ்ச்சியை அடைந்தார்கள். விருத்தாசல ரெட்டியார் என்னைக் கண்டு
உள்ளம் பூரித்துப் போனார். “குன்னத்து ஐயரும் அவர் பிள்ளையும்
வந்திருக்கிறார்கள்” என்ற செய்தி எங்கும் பரவியது. எங்களை முன்னரே அறிந்தவர்கள்
ஒவ்வொருவராக வந்து வந்து பார்த்து அன்பு கனியப் பேசி மகிழ்ந்தார்கள்.

முன்பே அங்கே தங்கியிருந்த காலத்தில் காணாத ஒரு விசயத்தை
அப்பொழுது உணர்ந்தேன். நான் பிள்ளையவர்களிடம் பாடங்
கேட்டவனென்பது எனக்கு ஒரு தனி மதிப்பை உண்டாக்கியது.
பிள்ளையவர்களுடைய கல்விப் பெருமை, கவித்துவம் முதலியவற்றைப் பற்றி
யாவரும் கதை கதையாகப் பேசினார்கள். அவரிடத்தில் தங்களுக்குத் தெரிந்த
ஒருவர் மாணாக்கராக இருக்கிறாரென்பதில் அவர்கள் ஒரு திருப்தியையும்
பெருமையையும் அடைந்தார்கள். என்னுடைய கல்வியபிவிருத்தியில்
விருப்பமுடையவர்களில் அப்பிரதேசத்திலிருந்த அன்பர்களையும் சேர்த்துக்
கொள்ள வேண்டும்.

புக்ககம் போய் நல்ல பெயர் வாங்கிய ஒரு பெண் பிறந்த வீட்டுக்கு
வந்தால் அங்குள்ளவர்கள் எவ்வளவு அன்போடும் பெருமையோடும்
உபசரிப்பார்களோ அவ்வளவு உபசாரம் எனக்கு நடந்தது. நான்
பிள்ளையவர்களுடைய பெருமையை எடுத்துச் சொல்லும்போதெல்லாம்
திறந்தவாய் மூடாமல் அங்கேயுள்ளவர்கள் கேட்பார்கள். பிள்ளையவர்கள்
இயற்றிய நூல்களிலிருந்து அரிய பாடல்களைச் சொல்லிப் பொருள்
கூறும்போது என் ஆசிரியரது புலமையையும் நான் அவராற் பெற்ற பயனையும்
உணர்ந்து உணர்ந்து ஆனந்தமடைந்தார்கள்.

அதற்குமுன் நான் என் தந்தையாரைச் சார்ந்து நிற்பேன்.
வருபவர்களெல்லாம் அவருக்கு உபசாரம் செய்வதும் அவர் இசைப்
பாட்டுக்களைக் கேட்பதுமாக இருப்பார்கள். அப்பொழுதோ என் தந்தையார்
என்னைச் சார்ந்து நிற்கும் நிலையில் இருந்தார். என்னிடம் பேசுவதும் என்
மூலமாக விசயங்களை அறிந்துகொள்வதுமாகிய காரியங்களில் அன்பர்கள்
ஈடுபட்டனர்.

“எல்லாம் பெரிய ஐயர் செய்த பூசா பலன்” என்று என் தந்தையாரைப்
பாராட்டி முடிக்கும்போது, அவர்களுக்கு என் தந்தையாரிடம் இருந்த அன்பு
வெளிப்பட்டது.

என் ஆசிரியர் இயற்றிய வாட்போக்கிக் கலம்பகம் முதலிய நூற்
செய்யுட்களை விருத்தாசல ரெட்டியாரிடம் சொல்லிக் காட்டினேன். அவர்
பெரும் புதையலைக் கண்டவரைப்போன்ற ஆச்சரியத்துடன் அவற்றையெல்லாம்
ஏட்டில் எழுதிக்கொண்டார். அவரிடம் நான் காரிகை பாடம் கேட்டதையும்
அப்பாடம் என் மனத்தில் பதிந்து விட்டதையும் பிள்ளையவர்களிடம் தெரிவித்தேன் என்பதை அவரிடம் சொன்னேன்.

கல்லாடப் பரீட்சை

இவ்வாறு தமிழ்நூல் சம்பந்தமான பேச்சிலே எங்கள் பொழுது
போயிற்று. ஒரு நாள் ரெட்டியாரும் நானும் பேசி வருகையில் அயலூரிலிருந்து
சில வித்துவான்கள் அவரைப் பார்க்க வந்தனர். நாங்கள் பேசியபோது
என்னை வந்தவர்கள் பாராட்டினார்கள். என்ன காரணத்தாலோ
ரெட்டியாருக்குச் சிறிது மன வேறுபாடு அப்போது உண்டாயிற்று. என்னை
அவர்களுக்குமுன் தலைகுனியச் செய்ய வேண்டுமென்ற எண்ணம் கொண்டார்
போலும்! அவர் பேசிய பேச்சிலும் என்னை இடையிடையே கேட்ட
கேள்விகளிலும் அவ்வேறுபாட்டை நான் கண்டேன்.

அவர் திடீரென்று கல்லாடத்தை எடுத்துக்கொண்டு வந்து என்னிடம்
கொடுத்துச் சில பாடல்களைக் காட்டிப் பொருள் கூறச் சொன்னார். சங்கச்
செய்யுட்கள் வழங்காத அக்காலத்தில் கல்லாடமே தமிழ் வித்துவான்களின்
புலமைக்கு ஓர் அளவு கருவியாக இருந்தது.

கல்லாடம் கற்றவரோடு சொல்லாடாதே’ என்ற பழமொழியும் எழுந்தது.
தமிழ்நாட்டில் அங்கங்கே இருந்த சிலர் கல்லாடம் படித்திருந்தார்கள்.
ரெட்டியார் அதைப் படித்தவர்.

அவர் என்னிடம் அதைக் கொடுத்தவுடன் அவருக்கு என்னை ‘மட்டம்
தட்ட’ வேண்டுமென்ற எண்ணம் இருப்பதாக அறிந்தேன். நான் அவரைக்
காட்டிலும் கல்வியிற் சிறந்தவனாகக் காட்ட வேண்டும் என்று சிறிதேனும்
கருதவில்லை. கல்லாடத்தைப் பாடம் கேளாவிட்டாலும் சிறிது சிரமப்பட்டுக்
கவனித்து ஒருவாறு உரைகூறும் சக்தி எனக்கு இருந்தது. ரெட்டியார் நான்
உரை சொல்வதை விரும்பவில்லையே! உரைகூறாமல் இருப்பதைத்தானே
விரும்பினார்? அவ் விருப்பத்தை நான் யாதொரு சிரமும் இன்றி
நிறைவேற்றினேன்.

“எனக்குத் தெரியவில்லை” என்று அமைதியாகச் சொன்னேன்.
அப்படிக் கூறிய பிறகு, அதனால் என் ஆசிரியருக்கு ஏதேனும் குறை வருமோ
என்று அஞ்சி, “பிள்ளையவர்கள் கல்லாடத்தைப் பதிப்பித்திருக்கிறார்கள். நான்
இன்னும் பாடம் கேட்கவில்லை” என்று மறுபடியும் கூறினேன்.

இந் நிகழ்ச்சியால் ரெட்டியாருக்கும் அங்கிருந்தவர்களில் சிலருக்கும்
சந்தோசம் உண்டாயிற்று. ஆனால் சிலருக்கு மாத்திரம் ரெட்டியாரிடம் அதிருப்தி ஏற்பட்டதென்று பிறகு தெரிந்து கொண்டேன்.

நீலி இரட்டைமணிமாலை

ஆனாலும் ரெட்டியாருக்கு எங்கள்பால் இருந்த அன்பு குறையவில்லை.
அவர் அக்காலத்திற் கடுமையான நோய் ஒன்றால் மிகவும் கட்டப்பட்டார்.
அவருடைய மூத்த குமாரர் என்னை நோக்கி, “நீர் சிறந்த சாம்பவருடைய
குமாரர். எங்கள் குல தெய்வத்தின் விசயமாகப் புதிய தோத்திரச் செய்யுட்கள்
பாடினால் தகப்பனாருக்கு அனுகூலமாகலாம்” என்று கூறினார். அவர்
விரும்பியபடியே அவர்கள் குலதெய்வமும் அருளுறையென்றும் ஊரில்
எழுந்தருளியிருக்கும் துர்க்கையுமாகிய நீலி என்னும் தெய்வத்தின் விசயமாக
ஓர் இரட்டைமணி மாலை பாடினேன். அதில் ஒரு செய்யுள் வருமாறு:

கடல்வாய் வருமமு தாசனர் போற்றக் கவின்றிகழும்
மடல்வாய் சலசமடந்தையர் வாழ்ந்த மணித்தவிசின்
அடல்வா யருளுறை மேவிய நீலி யடி பணிந்தோர்
கெடல்வாய் பிணியினைப் போழ்ந்தே சதாவிதங் கிட்டு வரே.

[அமுதாசனர் – அமிருதத்தை உணவாகவுடைய தேவர்கள்.
சலசமடந்தையர் – தாமரையில் வாழும் தேவியாகிய கலைமகளும் திருமகளும்.
மணித்தவிசு – மாணிக்க ஆசனம். இதம் – நன்மை.]

நான் இயற்றிய இரட்டைமணிமாலையை விருத்தாசல ரெட்டியார்
தினந்தோறும் பாராயணம் செய்து வந்தார். நான் அவருடைய பிள்ளைகளுள்
இளையவர்களாகிய பெரியப்பு, சின்னப்பு என்னும் இருவருக்கும் அவர்
கேட்டுக்கொண்டபடி நைடதம் முதலிய பாடங்களைக் கற்பித்து வந்தேன். வேறு
சில பிள்ளைகளும் என்னிடம் பாடம் கேட்டார்கள்.

காரைக்குப் பிரயாணம்

விருத்தாசல ரெட்டியாருடைய மூத்த குமாரராகிய நல்லப்ப ரெட்டியார்
முன்பே எங்களிடம் விசுவாசம் வைத்துப் பழகியவர். அவரும் அக்காலத்தில்
மிக்க ஆதரவு செய்து வந்தார். எங்களுக்கு வேண்டிய பொருள்களைப் பெற்றுச்
சுகமாக இருந்தோம். ஆகாரம் முதலிய விசயங்களில் குறைவு இராவிடினும்
கடனைத் தீர்ப்பதற்கு வேண்டிய பொருளுதவி கிடைக்கவில்லை. அக்குறையை
நான் நல்லப்ப ரெட்டியாரிடம் தெரிவித்துக் கொண்டேன். அவர் அருகில்
உள்ள ஊராகிய காரையென்பதில் வாழ்ந்து வந்த செல்வரும் தமக்கு நண்பருமாகிய கிருட்டிணசாமி ரெட்டியாரென்பவரிடம் எங்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்று சொல்லி அவரது உடன்பாட்டைப் பெற்று எங்களைக் காரைக்கு அனுப்பினார்.

காரையில் அவர் சின்னப் பண்ணையைச் சார்ந்தவர். அவர் தெலுங்கிலும் தமிழிலும் வல்லவர்; சாந்தமான இயற்கையுள்ளவர்.

எங்களுடைய கட்டத்தைத் தீர்ப்பதற்கு வழியென்னவென்று அவர்
ஆராய்ந்தார். பிறகு நான் திருவிளையாடற் புராணம் வாசிப்பதென்று முடிவு
செய்யப்பட்டது. ஊரிலுள்ளவர்களிடம் தெரிவித்து அம்முயற்சியை எல்லாரும்
ஆதரிக்கும்படி செய்தார்.

புராணப் பிரசங்கம்

புராணம் ஒரு நல்ல நாளில் ஆரம்பிக்கப் பெற்றது. எனது முதல்
முயற்சியாதலால் நான் மிகவும் சாக்கிரதையாக உபந்நியாசம் செய்து வந்தேன்.
நாள்தோறும் உதயமாகும் போதே எங்களுக்கு வேண்டிய அரிசி முதலிய
உணவுப் பொருள்களும், காய்கறிகளும் வந்துவிடும். என் தாயார் அவற்றைக்
கண்டு உள்ளம் குளிர்ந்து போவார். அதே மாதிரியான உபசாரங்களை முன்பு
என் தந்தையார் பிரசங்கம் செய்த காலத்திலே கண்டிருந்தாலும், அவை நான்
சம்பாதித்தவை என்ற எண்ணமே அந்தச் சந்தோசத்திற்குக் காரணம்.
“குழந்தை கையால் சம்பாதித்தது” என்று ஒவ்வொரு பொருளையும் வாங்கி
வாங்கி வைத்துக் கொள்வார்.

என் தந்தையாரும் கவலையின்றி ஆனந்தமாகச் சிவ பூசையும் ஈசுவரத்
தியானமும் செய்து வந்தார். எனக்கும் “கடவுள் இந்த நிலையில் குடும்பத்துக்கு
உபயோகப்படும்படி நம்மை வைத்தாரே” என்ற எண்ணத்தால் திருப்தியும்
ஊக்கமும் உண்டாயின.

கவலையை நீக்கிய மழை

இவ்வளவு மகிழ்ச்சிக்கிடையே ஒரு கவலை எழுந்தது. நான் புராணப்
பிரசங்கம் செய்யத் தொடங்கிய காலத்தில் அப்பிரதேசங்களில் மழையே
இல்லை. அதனாற் குடிசனங்கள் ஊக்கம் இழந்திருந்தனர். கிருட்டிணசாமி
ரெட்டியாரும் வேறு சிலரும் கிராமத்தார்களிடம் பிரசங்க விசயத்தை எடுத்தச்
சொல்லி அவர்கள் அளிக்கும் பொருளைத் தொகுத்துப் புராணம் நிறைவேறும்
காலத்தில் எனக்குச் சம்மானம் செய்வதாக எண்ணியிருந்தனர். மழை
இல்லையென்ற குறையால் அம் முயற்சியிலே தலையிட அவர்களுக்கு ஊக்கம்
பிறக்கவில்லை. புராணம் முழுவதும் நடத்து வதற்குப் போதிய ஆதரவு கிடைக்குமோ என்ற சந்தேகங்கூட உண்டாயிற்று. மீனாட்சி கலியாணத்தோடு நிறுத்திக் கொள்ளலாமென்று எண்ணியிருந்தனர்.

புராணத்தில் நாட்டுப் படலம் நடந்தது. நான் என் இசைப் பயிற்சியையும் தமிழ் நூற் பயிற்சியையும் நன்றாகப் பயன் படுத்தினேன். நான் கற்ற நூல்களிலிருந்து மேற்கோள்களை எடுத்துச் சொல்லிப் பொருள் உரைப்பேன். கேட்பவர்கள், “எவ்வளவு புத்தகங்கள் வாசித்திருக்கிறார்!” என்று ஆச்சரிய மடைவார்கள்.

எனது நல்லதிருட்டவசமாக ஒருநாள் பிரசங்கம் நடக்கையிலே பெரு
மழை பெய்து பூமியையும் மனிதர் உள்ளங்களையும் குளிர்வித்தது. அதனால்
அங்குள்ளவர்கள் விளைக்கும் பயிரில் விளைவு இருந்ததோ இல்லையோ, நான்
செய்த ‘சொல்லுழ’வில் பெரிய இலாபம் உண்டாயிற்று. “திருவிளையாடற்
புராணம் ஆரம்பித்ததனாலேதான் மழை பெய்தது” என்ற பேச்சு
சனங்களிடையே பரவியது. எனக்கு எதிர்பாராதபடி மதிப்பு உயர்ந்தது.
அப்பாற் புராணப் பிரசங்கத்தை நிறுத்த வேண்டுமென்பதை அவர்கள் அறவே
மறந்தனர்.

புராணப் பிரசங்கம் ஊரின் இடையே உள்ள பிள்ளையார் கோயிலில்
நடைபெற்றது. தினந்தோறும் இரவில் ஏழு மணி முதல் பத்து மணி வரையில்
நிகழும். அயலூர்களிலிருந்து பலர் வருவார்கள். மழை பெய்த பிறகு வருபவர்
தொகை அதிகமாயிற்று. சனக் கூட்டம் அதிகமாக ஆக நாங்கள் பெற்ற
ஆதரவும் மிகுதியாயிற்று.

கேட்போர்

அந்த ஊரில் மீனம்மாள் என்ற ரெட்டியார் குலத்துப் பெண்மணி
ஒருவர் இருந்தார். அவர் வேதாந்த சாத்திரங்களில் தேர்ந்த அடக்கமும்
தெய்வ பக்தியும் உபகாரச் சிந்தையும் உடையவராக விளங்கினார். அவர்
ஒவ்வொரு நாளும் தம் வீட்டுத் திண்ணையில் இருந்தபடியே என்
பிரசங்கத்தைக் கேட்டு மகிழ்ந்து வந்தார். அவருடன் என் தாயாரும் அங்கே
இருந்து கேட்டு இன்புறுவார். மீனம்மாள் எங்களுக்குப் பல வகையில் உதவி
செய்து வந்தார்.

அக்காலத்தில் கும்பகோணம் மடத்து சிரீ சங்கராசாரிய சுவாமிகள்
பெரும்புலியூருக்கு எழுந்தருளினார். அவருடன் வந்திருந்த சாத்திரிகள்
இருவர் காரைக்கு வந்திருந்தனர். அவர்களும் புராணப் பிரசங்கத்தைக் கேட்டு, “பதத்துக்குப் பதம் அர்த்தம் சொல்லி உபந்நியாசம் செய்கிறாரே!” என்று பாராட்டினார்கள் என் இளமை முயற்சியில் உற்சாகம் உண்டாக்க இந்நிகழ்ச்சிகளெல்லாம் காரணமாயின.

பொழுதுபோக்கு

பகல் வேளைகளில் தமிழ் நூல்களைப் படித்துக் கொண்டும்
அன்பர்களோடு பேசிக்கொண்டும் பொழுது போக்கினேன். கிருட்டிணசாமி
ரெட்டியாருக்குத் திருவானைக்காப் புராணத்தைப் படித்து உரை சொல்லி
வந்தேன். அவர் தெலுங்கில் வல்லவராதலின், அம்மொழியிலுள்ள வசூ
சரித்திரம், மனு சரித்திரம் முதலியவற்றிலிருந்து சில பத்தியங்களைச் சொல்லிப்
பொருள் கூறுவார். அவற்றில் சிலவற்றை அவர் விருப்பத்தின்படியே தமிழ்ச்
செய்யுளாக மொழி பெயர்த்து அவருக்குக் காட்டுவேன். அவர் மிக்க
சந்தோசமடைவார்.

அவ்வூரில் இருந்த பரிகாரி ஒருவன் வேதாந்த சாத்திரத்தில் நல்ல
பழக்கம் உடையவனாக இருந்தான். அவன் அடிக்கடி வந்து நெடுநேரம் இருந்து
பேசிவிட்டுச் செல்வான். வேறு ஊர்களிலிருந்து வரும் கனவான்களும் பகலில்
வந்து அன்போடு பேசித் தங்கள் தங்கள் ஊருக்கு வந்துபோக வேண்டுமென்று
விரும்புவார்கள்.

வெங்கனூர்

வெங்கனூர் என்னும் ஊரிலிருந்து தம்புரெட்டியாரென்பவர் ஒரு நாள்
வந்திருந்தார். கவிதா சார்வ பௌமராகிய துறைமங்கலம் சிவப்பிரகாச
சுவாமிகளை ஆதரித்த அண்ணாமலை ரெட்டியாரது
 பரம்பரையிற் பிறந்தவர்
அவர். சிவப்பிராகாச சுவாமிகள் திருவெங்கையுலா முதலிய பிரபந்தங்களில்
அவ்வுபகாரியினது சிறப்பை எடுத்துச் சொல்லியிருக்கிறார். என்
இளமையிலேயே சிவப்பிரகாச சுவாமிகளிடத்தில் மதிப்பு இருந்தாலும்
பிள்ளையவர்களிடம் பழகிய பிறகு அது வரம்பு கடந்ததாயிற்று. வெங்கைக்
கோவை முதலிய நூல்களைப் பாடம் கேட்டபோது என் ஆசிரியர் அவருடைய
புலமைத் திறத்தை வியந்து பாராட்டுவதைக் கேட்டுக் கேட்டு அத்துறவியர்
பெருமானைத் தெய்வம் போலப் பாவிக்க ஆரம்பித்தேன்.

தம்பு ரெட்டியார் வெங்கனூர்க் கோயிலில் அமைந்துள்ள சிற்ப
விசேசங்களை எடுத்துரைத்தார். அண்ணாமலை ரெட்டியார் பல சிற்பிகளைக் கொண்டு அக்கோயிலை நிருமித்தாரென்றும், ஒருநாள்
சிற்பியர் தலைவன் வேலை செய்திருந்தபோது அவனை அறியாமல் அவனுக்கு
வெற்றிலை மடித்துக் கொடுத்தாரென்றும், அவருடைய உயர்ந்த குணத்தை
அறிந்த அவன் அதுவரைக்கும் கட்டியவற்றைப் பிரித்து மீட்டும் சிறந்த
வேலைப்பாடுகளுடன் அமைத்தானென்றும் சொன்னார்; 
என்னை
வெங்கனூருக்கு வந்து செல்ல வேண்டுமென்று கூறினார். நான் அங்ஙனம்
செய்வதில் மிக்க ஆவலுள்ளவனாக இருந்தும் போவதற்கு ஒய்வே
கிடைக்கவில்லை.

வேதாந்த மடத்துத் தலைவர்

ஒரு நாள் துறையூர் வேதாந்த மடத்துத் தலைவர் காரைக்கு வந்து
மீனம்மாள் வீட்டில் தங்கியிருந்தார். நான் அவரைப் பார்க்கச் சென்றேன்.
அப்பொழுது அவர் தம் மாணாக்கர்களுக்கு வேதாந்த பாடம் சொல்லி
வந்தனர். என்னைக் கண்டவுடன் தம் மாணாக்கர்களால் என்னை அறிந்து
கொண்டு பாடம் சொல்வதை நிறுத்திவிட்டுச் சிறிது நேரம் அன்போடு பேசினர்.
அம்மடாதிபதி மிக்க மதிப்பும் தகுதியும் உடையவர். அவர் எனக்காகப் பாடம்
சொல்லியதை நிறுத்தியதும் என்னோடு பேசியதும் உடன் இருந்தவர்களுக்கு
ஆச்சரியத்தை விளைவித்தன. அவரும் புராணம் நடை பெறும்போது வந்து
கேட்டுச் சென்றார்,

இவ்வாறு ஒவ்வொரு நாளும் சந்தோசமாகச் சென்றது.

(தொடரும்)

Saturday, June 22, 2024

உ.வே.சா.வின் என் சரித்திரம் 93 : அத்தியாயம்-58 : எனக்கு வந்த சுரம்

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 92 : அத்தியாயம்-57 : திருப்பெருந்துறை – தொடர்ச்சி)

திருப்பெருந்துறையில் புராண அரங்கேற்றம் ஒரு நல்ல நாளில்
ஆரம்பிக்கப்பெற்றது. சுப்பிரமணியத் தம்பிரான் அதன் பொருட்டு மிக
விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். அயலூர்களிலிருந்து கனவான்களும்
வித்துவான்களும் சிவநேசச் செல்வர்களும் திரள் திரளாக வந்திருந்தனர்.

குதிரை சுவாமி மண்டபத்தில் அரங்கேற்றம் நடைபெறலாயிற்று.
அப்போது நானே பாடல்களை இசையுடன் படித்து வந்தேன். பாடம்
சொல்லும்போதும் மற்றச் சமயங்களிலும் தமிழ்ப்பாடல்களைப் படிக்கும்
வழக்கம் எனக்கு இருப்பினும் அவ்வளவு பெருங்கூட்டத்தில் முதன்முறையாக
அன்றுதான் படிக்கத் தொடங்கினேன். கூட்டத்தைக் கண்டு எனக்கு அச்சம்
உண்டாகவில்லை; ஊக்கமே உண்டாயிற்று.

அரங்கேற்றம்

ஒவ்வொரு நாளும் பிற்பகலில் அரங்கேற்றம் நடைபெறும்;
பெரும்பாலும் ஐந்து மணி வரையில் நிகழும். சில நாட்களில் சிறிது நேரம்
அதிகமாவதும் உண்டு. அங்கே வந்திருந்தவர்கள் அடிக்கடி வந்து வந்து பேசி
வந்தமையால் மற்ற வேலைகளிலும் என் ஆசிரியருக்கு ஓய்வே இல்லை.

புராணத்திலே சில படலங்களே இயற்றப் பெற்றிருந்தன. நாள்தோறும்
அரங்கேற்றம் நடந்தமையால் மேலும் மேலும் செய்யுட்களை இயற்றவேண்டியது
அவசியமாக இருந்தது. ஆனாலும் ஆசிரியர் அவ்விசயத்தைப் பற்றிக் கவலை
அடைந்தவராகத் தோற்றவில்லை. வந்தவர்களோடு சம்பாசணை செய்வதிற்
பெரும் பான்மையான நேரம் போயிற்று.

முன்பே இயற்றப் பெற்றிருந்த பாடல்கள் எல்லாம் அரங்கேற்ம் ஆயின.
மறுநாள் அரங்கேற்றுவதற்குப் பாடல்கள் இல்லை. நான் இந்த விசயத்தை
இரண்டு நாட்களுக்கு முன்பே தெரிவித்தேன். ஆசிரியர், “பார்த்துக்
கொள்ளலாம்” என்று சொல்லி அதைப் பற்றிய முயற்சியில் ஈடுபடாமல்
இருந்தார்.

“காலையில் பாடி மாலையில் அரங்கேற்றுவது இவர்களுக்குச் சுலபமாக
இருக்கலாம். ஆனால் காலையில் ஓய்வு எங்கே இருக்கிறது? எப்பொழுதும் யாரேனும் வந்து பேசி வருகிறார்கள்? இவர்கள் பாடல்களை இயற்றுவதற்கு ஓய்வு எவ்வாறு கிடைக்கும்? அரங்கேற்றத்தை இரண்டு தினங்கள் நிறுத்தி வைக்கத்தான் வேண்டும்?” என்று நான் எண்ணியிருந்தேன்.

ஆச்சரிய நிகழ்ச்சி

மறுநாள் பொழுது விடிந்தது. வழக்கம் போல் காலையிற் சிலர் வந்து
பேசத் தொடங்கினர். “சரி; இன்றைக்கு அரங்கேற்றம் நிற்க வேண்டியது தான்”
என்று நான் நிச்சயமாக எண்ணினேன். வந்து பேசியவர்களிடம் எனக்குக்
கோபங்கூட உண்டாயிற்று.

சிறிது நேரத்துக்குப்பின் ஆசிரியர் என்னை அழைத்து ஏட்டையும்
எழுத்தாணியையும் எடுத்து வரச் சொன்னார். நான் அவற்றை எடுத்துச்
சென்றேன். அவரருகில் உட்கார்ந்தேன். “நல்ல வேளை; இப்பொழுதாவது
இவர்களுக்கு நினைவு வந்ததே!” என்ற சந்தோசம் எனக்கு உண்டாயிற்று.
அங்கிருந்தவர்களை எல்லாம் விடை கொடுத்தனுப்பி விட்டுச் செய்யுள் இயற்றத்
தொடங்குவாரென்று எதிர்பார்த்தேன்.

நான் எதிர்பார்த்தபடி நடக்கவே இல்லை. அவர்கள் இருக்கும்
பொழுதே பாடல் செய்யத் தொடங்கிவிட்டார் அக்கவிஞர்பிரான்.
வந்தவர்களும் அவர் செய்யுளைத் தடையின்றி இயற்றிவரும் ஆச்சரியத்தைக்
கவனித்து வந்தார்கள். இடையிடையே அவர்களோடு பேசியபடியே
செய்யுட்களை ஒவ்வொன்றாகச் சொல்லி வந்தார். அவ்வளவு காலம் அவரோடு
பழகியும் அத்தகைய அதிசய நிகழ்ச்சியை அதுவரையில் நான் பார்க்கவே
இல்லை. பிறரோடு சம்பாசித்தும் அதே சமயத்தில் கற்பனை செறிந்த
செய்யுட்கள் பலவற்றை ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து இயற்றிக் கொண்டும்
இருந்த அவருடைய பேராற்றலை நான் மனத்துள் வியந்து கொண்டே
எழுதிவந்தேன்
. அட்டாவதானம் செய்பவர்கள் கூடச் சில செய்யுட்களையே
செய்வார்கள். ஆசிரியரோ ஒரு புராண காப்பியத்தை இயற்றி வந்தார். அக்
கூட்டத்தின் நடுவே அவர்களுடன் பேசும் போதே அவர் மனத்தில்
கற்பனைகள் எவ்வாறு தோற்றினவென்பது ஒரு பெரிய அதிசயமாகவே
இருந்தது.

அக்கவிஞரது மன இயல்பை நாளடைவில் தெரிந்து கொண்டேன். அவர்
உள்ளம் கவிதை விளைபுலம்; அதில் எப்பொழுதெல்லாம் உற்சாகம்
நிறைந்திருக்கின்றதோ அப்பொழுதெல்லாம் தடையின்றிச் செய்யுட்கள் எழும்.

பல அன்பர்களுடன் பேசி யிருந்தபொழுது அவர் மனத்தில் அந்த உற்சாகம் இருந்தது. அதைத் தடைப்படுத்துவனவாகிய கடன் முதலியவற்றின் ஞாபகம் அப்போது
எழுவதில்லை. அத்தகைய ஞாபகம் மறைந்திருந்த அச்சந்தர்ப்பங்களில்
சோர்வின்றிக் கற்பனைகள் உதயமாகும்.

அன்று அரங்கேற்றுவதற்கு வேண்டிய செய்யுட்களை இயற்றி விட்டுப்
பூசை முதலியவற்றைக் கவனிக்கச் சென்றார் ஆசிரியர். மற்றவர்களும் விடை
பெற்றுச் சென்றனர். அன்றுமுதல் ஒவ்வொரு நாளும் காலையிற் செய்யுட்களை
இயற்றி மாலையில் அரங்கேற்றுவதே வழக்கமாகிவிட்டது
.

புராண ஆராய்ச்சி

திருப்பெருந்துறைப் புராணத்தில் மாணிக்கவாசகர் சரித்திரத்தை
விரிவாக அமைக்க எண்ணிய ஆசிரியர் அவர் வரலாற்றைப் புலப்படுத்தும்
வடமொழி தென்மொழி நூல்களை ஆராய்ந்து அவற்றிலிருந்து பல செய்திகளை
எடுத்துக் கொண்டனர். வடமொழியிலுள்ள ஆதி கைலாச மாகாத்துமியம்,
மணிவசன மாகாத்துமியம் என்னும் இரண்டு நூல்களை அங்கிருந்த
சாத்திரிகளைப் படித்துப் பொருள் சொல்லச் செய்து கேட்டார்.
ஆதிகைலாசமென்பது திருப்பெருந்துறைக்கு ஒரு பெயர்.
திருப்பெருந்துறைக்குரிய பழைய தமிழ்ப்புராணங்களையும். திருவாதவூரடிகள்
புராணம், திருவிளையாடற்புராணம் என்பவற்றையும் என்னைப் படிக்கச் செய்து

மாணிக்கவாசகப் பெருமான் வரலாற்றை இன்னவாறு பாட வேண்டும் என்று
வரையறை செய்து கொண்டார்.

சில காலமாக ஆசிரியர் சொல்லும் பாடல்களை எழுதுவதும்,
அரங்கேற்றுகையில் படிப்பதுமாகிய வேலைகளையே நான் செய்து வந்தேன்,
‘கற்றுச் சொல்லி’ உத்தியோகம் வகித்து வந்த எனக்குத் தனியே பாடம் கேட்க
இயலவில்லை. ஆயினும் முன்னே குறித்தவாறு மாணிக்கவாசகர் வரலாற்றின்
பொருட்டு நடைபெற்ற ஆராய்ச்சியினால் நான் மிக்க பயனையடைந்தேன்.
தமிழ்ப் புராண நூல்கள் சிலவற்றைப் படித்தபோது அவற்றைப் பாடம்
கேட்பதனால் உண்டாவதை விட அதிகமான பயனே கிடைத்தது.

சுரமும் கட்டியும்

நான் ‘கற்றுச் சொல்லி’யாக நெடு நாட்கள் இருக்கவில்லை. என்னுடைய
துரதிருட்டம் இடையே புகுந்தது. எனக்குச் சுர நோய் வந்தது. அதனோடு
வயிற்றிலே கட்டி உண்டாகி வருத்தத் தொடங்கியது. வயிற்றுப் போக்கும்
உண்டாயிற்று.முதலில் சாதாரணமான சுரமாக இருக்குமென்று எண்ணினேன். எனது
பொல்லாத காலம் பலமாக இருந்தமையால் அது கடுமையாகத்தானிருந்தது.
பாடல்களை எழுதுவதையும் அரங்கேற்றுகையில் படிப்பதையும் நான்
நிறுத்திக்கொள்ள வேண்டியதாயிற்று. படுத்த படுக்கையாக இருந்தேன்.

ஆசிரியர் வருத்தம்

என் ஆசிரியர் திருப்பெருந்துறைக்கு வந்தது முதல் உற்சாகத்தோடு
இருந்தார். பல அன்பர்களுடைய சல்லாபமும் அங்கே நடைபெற்று வந்த
உபசாரங்களுமே அதற்குக் காரணம். தினந்தோறும் காலை முதல் இரவு
நெடுநேரம் வரையில் தம்மைப் பாராட்டி ஆதரவு செய்வோருடைய
கோசுட்டியினிடையே இருந்து பழகியதனால் துன்பத்தை உண்டாக்கும் வேறு
ஞாபகம் எழுவதற்கு நேரமில்லை.

இடையே எனக்கு உண்டான நோய் அவருடைய அமைதியான
மனநிலையைக் கலக்கி விட்டது. நான், “என் துரதிருட்டம் இப்படி நேர்ந்தது”
என்று நினைத்தேன். அவரோ, “அரச மரத்தைப் பிடித்த பேய்,
பிள்ளையாரையும் பிடித்ததுபோல என்னைப் பிடித்த சனியன் என்னைச்
சேர்ந்தவர்களையும் துன்புறுத்துகிறதே” என்று சொல்லி வருத்தமுற்றார்.

புராண அரங்கேற்றம் நடைபெறாத காலங்களில் என் அருகிலேயே
இருந்து கவனித்து வந்தார். தக்க வைத்தியர்களைக் கொண்டு பரிகாரம் செய்யச்
சொன்னார். அவர்பால் அன்பு வைத்துப் பழகியவரும் அங்கே காவல் ஆய்வாளர்
உத்தியோகத்தில் இருந்தவருமாகிய சிரீ சட்டைநாத
பிள்ளையென்பவர் சில நல்ல மருந்துகளை வருவித்து 
அளித்தார். சுரம்
நீங்கினபாடில்லை.

நான் நோய்வாய்ப் பட்டமையால் என் ஆசிரியர் சொல்லும்
பாடல்களைப் பெரியண்ணம்பிள்ளை என்பவர் ஏட்டில் எழுதி வந்தார்.
அரங்கேற்றம் நடைபெறுகையில் பாடல்களை வாசிக்கும் பணியைச் சிவகுருநாத
பிள்ளையாக மாறிய சவேரிநாதபிள்ளை ஏற்றுக்கொண்டார்.

பிள்ளையவர்களுக்கு என் அசௌக்கியத்தால் உண்டான மன வருத்தம்
யாவருக்கும் புலப்பட்டது. ஒவ்வொரு நாளும் அரங்கேற்றம் நிகழ்ந்த
செய்தியைச் சவேரிநாதபிள்ளை எனக்கு வந்து சொல்வார். பிள்ளையவர்களும்
சொல்வதுண்டு.

ஒருநாள் சிரீ சுப்பிரமணிய தேசிகரிடமிருந்து சுப்பிரமணியமணியத்
தம்பிரானுக்கு அரங்கேற்றத்தைப்பற்றி விசாரித்துத் திருமுகம் ஒன்று வந்தது. அன்று ஆசிரியர் என்னிடம் வந்து, “சந்நிதானம் கட்டளைச் சாமிக்குத் திருமுகம் அனுப்பியிருக்கிறது. அரங்கேற்றத்தைப்பற்றி விசாரித்திருக்கிறது. ‘சாமிநாதையர் படிப்பது உமக்குத் திருப்தியாக இருக்குமே’ என்று எழுதியிருக்கிறது. உமக்குச் சுரமென்று தெரிந்தால் சந்நிதானம் மிக்க வருத்தத்தை அடையும்” என்று சொல்லி
இரங்கினார்.

பிள்ளையவர்களிடம் வந்த பிறகு இது மூன்றாவது முறையாக நேர்ந்த
அசௌக்கியம். முன்பு அசௌக்கியம் நேர்ந்த காலங்களைக் காட்டிலும்
இப்பொழுது நேர்ந்த காலம் மிகவும் முக்கியமானது. அரங்கேற்றத் திருவிழாவிற்
கலந்துகொண்டு இன்புறும் பாக்கியத்தை அது தடை செய்தது. வர வர அந்த
அசௌக்கியம் அதிகமாயிற்று. சுர மிகுதியினால் சில சமயங்களில் நான்
ஞாபகமிழந்து மயக்கமுற்றுக் கிடந்தேன். ஆசிரியருக்கும் பிறருக்கும் கவலை
அதிகமாயிற்று. இனி அங்கே இருந்தால் எல்லோருக்கும் அசௌகரிய
மாயிருக்குமென்பதை உணர்ந்த நான் ஆசிரியரிடம், “என் ஊருக்குப் போய்
மருந்து சாப்பிட்டுக் குணமானவுடன் திரும்பி வருகிறேன்” என்று சொன்னேன்.

அதைக் கேட்டவுடன் அவருக்குத் துக்கம் பொங்கியது. “பரமசிவம்
நம்மை மிகவும் சோதனை செய்கிறார் நீர் சௌக்கியமாக இருக்கும்போது
இங்கே இருந்து உதவி செய்கிறீர். இப்போது அசௌக்கியம் வந்ததென்று
ஊருக்கு அனுப்புகிறோம். அசௌக்கியத்தை மாற்றுவதற்கு நம்மால்
முடியவில்லை. உம்முடைய தாய் தந்தையர் என்ன நினைப்பார்களோ!”
என்றார்.

“அவர்கள் ஒன்றும் நினைக்க மாட்டார்கள். ஐயா அவர்களின்
பேரன்பை அவர்கள் நன்றாக அறிந்தவர்கள்” என்று சொன்னேன். ஆசிரியர்
என் யோசனையை அங்கீகரித்தனர்.

உத்தமதானபுரத்திற்குச் சென்றது

தக்க ஏற்பாடுகள் செய்து என்னை உத்தமதானபுரத்திற்கு அனுப்பினார்.
என்னுடன் துணையாக வெண்பாப்புலி வேலுசாமிப் பிள்ளை என்னும்
மாணாக்கரை வரச்செய்தார். சுப்பிரமணியத் தம்பிரானிடம் தெரிவித்து
வழிச்செலவுக்காக எனக்குப் பத்து உரூபாய் அளிக்கச் செய்தார். நான்
பிரிவதற்கு மனமில்லாமலே ஆவுடையார் கோயிலைவிட்டு உத்தமதானபுரம்
வந்து சேர்ந்தேன்.

என் தாய் தந்தையார் உத்தமதானபுரத்தில்தான் இருந்தனர்.
கோபுராசபுரத்திலிருந்த காத்தான் என்ற சிறந்த வைத்தியன் என் தேக நிலையைப் பார்த்தான். சுரக்கட்டியிருப்பதாகச் சொல்லி மருந்து
கொடுக்கலானான். சங்கத் திராவகமென்னும் ஒளசதத்தைக் கொடுத்தான். கட்டி
வரவரக் கரைந்து வந்தது. சுரமும் தணிந்தது; “காத்தான் என்னை
நோயினின்றும் காத்தான்
” என்று சொல்லி அவனை நான் பாராட்டினேன்.

குடும்ப நிலை

சிரீமுக வருசம் மாசி மாதம் முதலில் (1874 பிப்பிரவரி) நான்
உத்தமதானபுரத்திற்குச் சென்றேன். அங்கே ஒரு மாதகாலம் பரிகாரம்
பெற்றேன். பிள்ளையவர்களிடம் பாடம் கேட்ட நூல்களைப் படித்துக்
கொண்டே பொழுது போக்கினேன்.

அயலூர்களிலுள்ள மிராசுதார்கள் என்பாலும் என் தந்தையார்பாலும்
அன்பு வைத்து அடிக்கடி நெல் அனுப்பி வந்தார்கள். ஆயினும் குடும்ப
காலட்சேபம் சிரமந் தருவதாகவே இருந்தது. அதனோடு என் கலியாணத்தின்
பொருட்டு வாங்கிய கடனில் 150 உரூபாய் கொடுபடாமல் நின்றது. அத்தொல்லை
வேறு துன்பத்தை உண்டாக்கியது. உடலில் இருந்த நோய் வரவரக் குறைந்து
வந்தாலும் உள்ளத்தே ஏற்பட்ட நோய் வளர்ந்து வந்தது
. அதுகாறும் குடும்பப்
பொறுப்பை ஏற்றுக்கொள்ளாமல் நான் இருந்து வந்தேன். என் தந்தையாரும்
வர வர விரக்தி உடையவராயினர். சிறிய தகப்பனாரோ குடும்பப் பாரத்தைச்
சுமக்க இயலாமல் தத்தளித்தார்.

“இந்நிலையில் நாம் ஒன்றும் செய்யாமல் இருப்பது தருமமன்று” என்று
கருதினேன். “இனி, குடும்பக் கடனைப் போக்குவதில் நம்மால் இயன்றதைச்
செய்ய வேண்டும்” என்ற எண்ணம் வலியுற்று வந்தது. “பிள்ளையவர்களை
விட்டு வந்தோமே, மீண்டும் அங்கே போக வேண்டாமோ! குடும்பப் பாரத்தைச்
சுமப்பது எப்பொழுதும் உள்ளது பிள்ளையவர்களிடமிருந்து கல்வி அபிவிருத்தி
பெறுவதற்குரிய இச்சந்தர்ப்பத்தை நாம் விடக்கூடாது” என்று வேறொரு
யோசனை தோற்றியது. “நாம் கடனாளி என்றால் அவர்களும் கடனாளியாகத்
தானே இருக்கிறார்கள்? எப்படியாவது கடனை நீக்கிக் கொண்டால் பிறகு
பழையபடியே அவர்களிடம் போய்ச் சேர்ந்து கொள்ளலாம். கடனை வளர
விடக்கூடாது” என்ற எண்ணமே விஞ்சி நின்றது.

நான் அடைந்த ஏமாற்றம்

ஒருநாள் உத்தமதானபுரத்திலிருந்து கும்பகோணம் சென்று தியாகராச
செட்டியாரைப் பார்த்தேன். மீட்டும் எனக்கு ஏதேனும் உத்தியோகம் தேடித் தர வேண்டும் என்று சொன்னேன். அப்போது அவர், “நான் ஒரு மாசம் ஓய்வெடுத்துக்கொள்வதாக
எண்ணியிருக்கிறேன். அப்போது என் தானத்தில் இருந்து வேலை
பார்ப்பீரா?” என்று கேட்டார். நான் தைரியமாகப், “பார்ப்பேன்” என்றேன்.

“சரி; கோபாலராவு அவர்களிடம் சொல்லுகிறேன்” என்று அவர்
சொன்னார். நான் அதுகேட்டுச் சந்தோசமடைந்தேன். ஆனால் அந்த
யோசனை நிறைவேறவில்லை. கோபாலராவு, “இவர் பால்யராக இருக்கிறார்;
பிறகு பார்த்துக்கொள்ளலாம்” என்று சொல்லிவிட்டார். நான் ஏமாற்றமடைந்து
ஊருக்குத் திரும்பி வந்தேன்.

உத்தமதானபுரத்தில் இருப்பதைவிடச் சூரியமூலையிற்போய் இருந்தால்
ஆகார விசயத்திலாவது குறைவில்லாமல் இருக்கு மென்று கருதி நானும் என்
தாய்தந்தையரும் பங்குனி மாதம் அங்கே போய்ச் சேர்ந்தோம். என் தேக
சௌக்கியம் இயல்பான நிலைக்கு வாராமையால் எங்கேனும் செல்வதற்கோ
பொருள் தேட முயல்வதற்கோ இயலவில்லை. “எப்படிக் கடனைத் தீர்ப்பது?”
என்ற யோசனை என்னைப் பலமாகப் பற்றிக் கொண்டது.

தந்தையார் கூறிய உபாயம்

என் தந்தையார் ஓர் உபாயம் சொன்னார். “செங்கணம் முதலிய
இடங்களுக்குச் சென்று ஏதேனும் புராணப் பிரசங்கம் செய்தால் பணம்
கிடைக்கும்; அதனைக் கொண்டு கடனைத் தீர்த்து வரலாம்” என்று அவர்
கூறினார். அவர் தம் அனுபவத்தால் அறிந்த விசயம் அது. தாம்
அப்பக்கங்களில் சஞ்சாரம் செய்து கதாப் பிரசங்கங்கள் செய்ததுபோல் நானும்
செய்தால் நன்மை உண்டாகுமென்று அவர் நினைத்தார்; தாம் செய்த
காரியத்தை நானும் ‘வாழையடி வாழை’யாகச் செய்ய வேண்டுமென்று அவர்
முன்பு எண்ணிய எண்ணம் அப்போது நிறைவேறக் கூடுமென்பது அவர்
நம்பிக்கை.

எனக்கு அவர் கூறியது உசிதமாகவே தோற்றியது. புதிய உத்தியோகம்
ஒன்றை வகித்துப் புதிய மனிதர்களுடன் பழகுவதைக் காட்டிலும் பழகிய
இடத்திற் பரம்பரையாக வந்த முயற்சியில் ஈடுபடுவது சுலபமன்றோ?
 செங்கணம்
முதலிய இடங்களில் உள்ளவர்களின் இயல்பை நானும் உணர்ந்திருந்தேன்.
தமிழ் நூல்களைப் பிரசங்கம் செய்தால் மிக்க மதிப்பும் பொருளுதவியும்
கிடைக்குமென்பதையும் அறிவேன். ஆயுள் முழுவதும் புராணப் பிரசங்கம் செய்து புண்ணியத்தையும் புகழையும் பொருளையும் ஒருங்கே பெறலாம்.

எல்லாம் உண்மைதான். ஆனால், என் தமிழ்க் கல்வி அதனோடு
நின்றுவிட வேண்டியதுதானா? கிடைத்தற்கரிய பாக்கியமாகப்
பிள்ளையவர்களுடைய அன்பையும் அவர் மூலமாகத் திருவாவடுதுறை யாதீனப்
பழக்கத்தையும் பெற்ற பின் அவற்றை மறந்து ஊர் ஊராய் அலைந்து வாழ்வது
நன்றா? இறைவன் இந்த நிலையிலே விட்டு விடுவானா?

என் மனம் இப்படியெல்லாம் பலவாறு பரந்து விரிந்துசென்று
எண்ணமிட்டது. “இப்போது கழுத்தைப் பிடித்து இறுக்கித் துன்புறுத்தும் கடன்
தொல்லையைத் தீர்ப்பது முக்கியமான காரியம்” என்ற நினைவினால்,
செங்கணத்திற்குப் போகலாமென்று தந்தையாரிடம் சொன்னேன். அவருக்கு
உண்டான திருப்திக்கு எல்லையில்லை. கடன் தீர்வதற்கு வழி ஏற்பட்டதென்பது
மாத்திரம் அத்திருப்திக்குக் காரணம் அன்று; தாம் பழகிய இடங்களை மீட்டும்
பார்க்கலாமென்ற ஆவலே முக்கியமான காரணம்.

(தொடரும்)

Sunday, June 16, 2024

உ.வே.சா.வின் என் சரித்திரம் 92 : அத்தியாயம்-57 : திருப்பெருந்துறை

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 91 : அத்தியாயம்-56 : நான் இயற்றிய பாடல்கள்-தொடர்ச்சி)

மார்கழி மாதம் திருவாதிரைத் திருநாள் நெருங்கியது. திருவாதிரைத்
தரிசனத்துக்குத் திருப்பெருந்துறைக்குச் சென்று புராண அரங்கேற்றத்தை
முடித்துக்கொண்டு திரும்பலாமென்று என் ஆசிரியர் நிச்சயம் செய்தார்.
எல்லாரிடமும் விடை பெற்று அவர் (1873 திசம்பர்) புறப்பட்டார்.
மாயூரத்திலிருந்து சவேரிநாத பிள்ளை எங்களுடன் வந்தார். வேறு சில
மாணாக்கர்களும் வந்தார்கள். சுப்பிரமணிய தேசிகர் மடத்துப் பிரதிநிதியாகப்
பழநிக் குமாரத் தம்பிரானென்பவரை அனுப்பினர்.

புறப்பாடு

எல்லாரும் சேர்ந்து புறப்பட்டோம். திருவிடைமருதூர் சென்று அங்கே
தங்கி அப்பால் கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக் கோட்டை வழியாகத்
திருப்பெருந்துறையை அடைந்தோம்.

நாங்கள் போய்ச் சேர்ந்தபோது ஆருத்திரா தரிசனத்தின் பொருட்டு
எங்களுக்கு முன்னரே பல வித்துவான்களும் சிவபக்திச் செல்வர்களும் அங்கே
வந்து தங்கியிருப்பதைப் பார்த்தோம்.

பிள்ளையவர்களுடைய வரவு எல்லாருக்கும் மகிழ்ச்சியை
உண்டாக்கியது. கோயிலார் மேளதாளத்துடன் வந்து அக்கவிஞர் பெருமானைக்
கண்டு பிரசாதமளித்துத் தரிசனத்துக்கு அழைத்துச் சென்றனர். ஆலயத்தில்
சுப்பிரமணியத் தம்பிரான் அவரை வரவேற்றார். அன்று மாணிக்கவாசகர்
மந்திரிக் கோலங்கொண்டு எழுந்தருளியிருந்தார்.

அருவ மூர்த்திகள்

மற்ற தலங்களில் இல்லாத ஒரு புதுமையைத் திருப்பெருந்துறையிலே
கண்டேன். சிவாலயங்களில் சிவலிங்கப் பெருமானும் அம்பிகையின்
திருவுருவமும் மூலத்தானங்களில் இருக்கும். அந்தத்தலத்தில்
சிவபெருமானுக்கும் அம்பிகைக்கும் எந்த விதமான உருவமும் இல்லை. வெறும்
பீடங்கள் மாத்திரம் இருக்கின்றன. சுவாமியும் அம்பிகையும் அரூபமாக
எழுந்தருளியிருப்பதாக ஐதியம். பூசை முதலியன அப்பீடங்களுக்கே நடைபெற்று வருகின்றன.
சுவாமியின் திருநாமம் ஆத்மநாதரென்பது; அம்பிகைக்குச்
சிவயோகாம்பிகை என்பது திருநாமம். இவ்விருவரும் அரூபமாக அங்கே
கோயில் கொண்டிருத்தலை என் ஆசிரியர்,

“தூயநா மத்தருவ முருவமெவை யெனினுமொரு
தோன்றல் போன்றே
பாயநா னிலவரைப்பின் கணுமமர்வா ளெனல்தெரித்த
படியே போல
ஆயநா தங்கடந்த வான்மநா தக்கடவுள்
அமர்தற் கேற்ப
மேயநா யகிசிவயோ காம்பிகைதன் விரைமலர்த்தாள்
மேவி வாழ்வாம்”

என்று திருப்பெருந்துறைப் புராணத்திற் புலப்படுத்தியிருக்கிறார்.
‘அருவம் உருவம் என்னும் கோலங்களில் எந்தக் கோலத்தில் சிவபெருமான்
எழுந்தருளியிருக்கிறாரோ அக்கோலத்தில் இப்பூமியிலும் அம்பிகை
எழுந்தருளியிருப்பதை வெளிப்படுவதைப் போல, நாத தத்துவங் கடந்து நின்ற
ஆத்துமநாத சுவாமி அரூபமாக எழுந்தருளியிருத்தற்கு ஏற்றபடி தானும்
அரூபத்திருமேனி கொண்டு எழுந்தருளியிருக்கும் சிவயோகாம்பிகையின்
திருவடிகளை விரும்பி வாழ்வோமாக’ என்பது இதன் பொருள்.

மாணிக்க வாசகர்

அங்கே மாணிக்க வாசகர் உபதேசம் பெற்றமையாலும் அவர்
பொருட்டுச் சிவபெருமான் சில திருவிளையாடல்களைச் செய்தமையாலும் அந்தத்
தலத்தில் அவருக்கு விசேசமான பூசை, உற்சவம் முதலியன நடைபெறும்.
உற்சவங்களில் மாணிக்க வாசகருக்கே முக்கியத் தானம் அளிக்கப்பெறும்.

மாணிக்கவாசகர் அத்தல விருட்சமாகிய குருந்த மரத்தின் அடியில்
உபதேசம் பெற்றார். அவ்விடத்தில் சிவபெருமான் எழுந்தருளியிருக்கிறார்;
குருமூர்த்தியென்று அப்பெருமானை வழங்குவர். அவர் பொருட்டுச்
சிவபெருமான் குதிரைச் சேவகராயினர். அதற்கு அடையாளமாக
அத்திருக்கோயிலின் மூன்றாம் பிராகாரத்தில் உள்ள கனகசபையென்றும்
மண்டபத்தில் இறைவர் அசுவாரூடராக எழுந்தருளியிருக்கிறார். அதற்குக்
குதிரை சுவாமி மண்டபம் என்ற பெயர் பிரசித்தமாக வழங்குகிறது.
அக்கோயிலில் பல இடங்களில் மாணிக்கவாசகர் திருவுருவங்கள்
அமைந்துள்ளன. அம்பிகையின் சந்நிதிக்கு நேரே மாணிக்கவாசகர் சந்நிதிஇருக்கிறது. ஆறு காலங்களிலும் இரண்டு சந்நிதிகளிலும் அபிசேக ஆராதனைகள் ஒரே சமயத்தில் நடைபெறும்.

அக்கோயிலில் வேறு கோயில்களிற் காணப்படாத மற்றொரு விசேசம்
உண்டு. சிவாலயங்களில் சிவதரிசனத்துக்கு முன் நந்தி தேவரைத் தரிசித்து
அவர் அனுமதி பெற்று ஆலயத்துள்ளே புகுதலும் தரிசனம் செய்து
திரும்புகையில் சண்டேசுவரரைத் தரிசித்து விடை பெற்று வருதலும்
சம்பிரதாயங்களாகும். அக் கோயிலில் அந்த இரண்டு மூர்த்திகளும் இல்லை.
ஆதலால் தரிசனம் செய்பவர்கள் உள்ளே செல்லும்போதும், தரிசித்துவிட்டு
மீளும்போதும் மாணிக்க வாசரைத் தரிசித்து முறையே அனுமதியையும்
விடையையும் பெறுதல் வழக்கமாக இருக்கிறது.

புதுக்கோட்டை, இராமநாதபுரம் போன்ற சமத்தானங்களாலும்
பச்சையப்ப முதலியார் முதலிய பிரபுக்களாலும் இத்தலத்திற் பலவகைக்
கட்டளைகள் ஏற்படுத்தப் பெற்றிருக்கின்றன.

நிவேதனம் முதலிய விசேசங்கள்

மற்றச் சிவாலயங்களில் செய்யப் பெறும் நிவேதனங்களோடு
புழுங்கலரிசி அன்னம், பாகற்காய்ப் புளிங்கறி, அரைக்கீரைச்
சுண்டலென்பவையும் அங்கே நிவேதனம் செய்யப் பெறும்.

அங்கே தீபாலங்காரம் மிகவும் சிறப்பாக இருக்கும். தினந்தோறும் இரா
முழுவதும் அத்தீபாலங்காரத்தைக் காணலாம்.

சிதம்பரத்தில் சிரீ நடராசப் பெருமானைப் பூசித்து வழிபடுபவர்கள்
மூவாயிரவரென்றும் அவர்கள் தில்லை மூவாயிரவரென்னும்
பெயருடையவரென்றும் அவர்களுள் சிவபிரானே ஒருவரென்றும் கூறுவர்.
திருப்பெருந்துறையிலும் அதைப் போன்ற முறையொன்று உண்டு. இக்கோயில்
பூசகர்கள் முந்நூற்றுவரென்னும் மரபினர். ஆதியில் முந்நூறு பேர்கள்
இருந்தனரென்றும் அவர்களுள் ஆத்மநாத சுவாமி ஒருவர் என்றும் புராணம்
கூறும்.

இப்போது சுவாமிக்கும் அம்பிகைக்கும் பூசை முதலியன செய்து
வருபவர்களை நம்பியாரென்று அழைக்கின்றனர். அவர்கள் செய்வது வைதிக
பூசை. மாணிக்க வாசகருக்கு மாத்திரம் ஆதிசைவர்கள் ஆகமப்படி பூசை
செய்து வருகின்றனர்.

வீரபத்திரர்

அம்பிகையின் சந்நிதியில் வீரபத்திரர் கோயில் கொண்டிருக்கிறார்.
தட்சனுடைய யாகத்தை அழித்த அக்கடவுள் அத்திருக்கோலத்துடன் அம்பிகையின் யோகத்தைப் பாதுகாப்பவராகச் சிவாஞ்ஞையால் அங்கே ழுந்தருளி யிருக்கிறாரென்பது புராண வரலாறு. அம் மூர்த்தியை வழிபட்டுப் பேய்பிடித்தவர்களும் வேறு விதமான துன்பங்களை அடைந்தவர்களும் சௌக்கியம் பெறுவார்கள்

சிற்பம்

கோயிலில் உள்ள சிற்பங்கள் மிக அருமையானவை. சிற்பவேலை
செய்பவர்கள் இன்ன இன்ன இடத்திலுள்ள இன்ன இன்ன அமைப்புகள் மிகச்
சிறந்தவையென்றும், அவற்றைப் போல அமைப்பது அரிதென்றும் கூறுவார்கள்.
அங்ஙனம் கூறப்படும் அரிய பொருள்களுள் ‘திருப்பெருந்துறைக்
கொடுங்கை’யும் ஒன்று. கல்லாலே அமைந்த சங்கிலி முதலிய விசித்திர
வேலைப்பாடுகள் பல அங்கே உள்ளன.

வந்த வித்துவான்கள்

இவற்றைப் போன்ற பல சிறப்புகளை உடைமையால் அந்தத் தலம்
சிவபக்தர்களால் அதிகமாகப் போற்றப்பட்டு வருகிறது. நாங்கள்
சென்றிருந்தபோது திருவாதிரைத் தரிசனத்துக்காக வந்திருந்தவர்களில் பலர்
என் ஆசிரியரிடம் பேரன்பு பூண்டவர்கள்.

தேவகோட்டையிலிருந்து வன்றொண்டச் செட்டியாரும், வேம்பத்தூரிலி
ருந்து சிலேடைப்புலி பிச்சுவையரும், சிங்கவனத்திலிருந்து சுப்பு
பாரதியாரென்பவரும், மணல் மேற்குடியிலிருந்து கிருட்டிணையரென்பவரும்
வந்திருந்தார்கள். 
இவர்கள் யாவரும் பிள்ளையவர்களைக் கண்டு அளவற்ற
சந்தோசத்தை அடைந்தார்கள்.

சுவாமி தரிசனம் செய்துவிட்டு நாங்கள் எங்களுக்காக ஏற்பாடு
செய்யப்பெற்றிருந்த விடுதிக்குச் சென்று தங்கினோம். வன்றொண்டர்
முதலியோர் வந்து ஆசிரியரோடு சல்லாபம் செய்தார்கள்.

வன்றொண்டரென்பவர் தனவைசிய வகுப்பினர். கண்பார்வை யில்லாதவர். தீவிரமான சிவபக்தியும் கடினமான நியமானுட்டனங்களும் உடையவர். தமிழ்வித்துவான். சிறந்த ஞாபக சக்தியுள்ளவர். பிள்ளையவர்களிடத்திலும் ஆறுமுக நாவலரிடத்திலும் பாடம்
கேட்டவர். எதையும் ஆழ்ந்து படித்துத் தெளிவாகத் தெரிந்து கொள்ளும்
இயல்புடையவர். பிள்ளையவர்களிடத்தில் அவருக்குப் பெருமதிப்பு இருந்தது. பிச்சுவையரென்பவர் வேம்பத்தூர்ச் சோழியர்; ஆசு கவி. எந்தச்
சமயத்திலும் எந்த விசயத்தைப் பற்றியும் கேட்போர் பிரமிக்கும்படி செய்யுள்
இயற்றும் ஆற்றலுடையவர். திருப்பெருந்துறையில் அவரை நான் முதலிற்
பார்த்தபோதே விரைவாக அவர் செய்யுள் இயற்றுவதைக் கண்டு
ஆச்சரியமடைந்தேன்.

சிங்கவனம் சுப்புபாரதியாரென்பவர் பரம்பரையாகத் தமிழ்
வித்துவான்களாக இருந்த பிராமண குடும்பத்தில் உதித்தவர். பிள்ளை
யவர்களிடம் பல வருசங்கள் பாடம் கேட்டவர். இலக்கண இலக்கியங்களில்
தேர்ந்த புலமையுள்ளவர். ஒரு பாடலை இசையுடன் எடுத்துச் சொல்லிக்
கேட்பவர்களுக்கு மகிழ்ச்சியுண்டாகும்படி பிரசங்கம் செய்யவல்லவர்.
அவருடைய பேச்சிலிருந்தே திறமையை, அவருடைய சாமர்த்தியத்தை நான்
அறிந்து கொண்டேன். அவர் பாடல் சொல்லும் முறை என் மனத்தைக்
கவர்ந்தது.

மணல்மேற்குடி கிருட்டிணையரென்பவர் சிறந்த தமிழ் வித்துவான்.
செய்யுள் செய்வதிலும் பல நூல் ஆராய்ச்சியிலும் நல்ல ஆற்றலுடையவர். பல
பிரபந்தங்கள் செய்தவர்.

பிச்சுவையரும் சுப்பு பாரதியாரும் தாம் இயற்றிய சில பிரபந்தங்களை
ஆசிரியரிடம் படித்துக் காட்டி அவர் கூறிய திருத்தங்களை ஏற்றுக்கொண்டு
சிறப்புப் பாயிரமும் பெற்றார்கள்.

ஆருத்திரா தரிசனம்

திருவாதிரையன்று குரு மூர்த்தியின் தரிசனம் கண்கொள்ளாக்
காட்சியாக இருந்தது. சுப்பிரமணியத் தம்பிரானுடைய நிருவாகத் திறமையை
அன்று கண்டு வியந்தோம். ‘திருவாவடுதுறை ஆதீனத்தால் அந்தத் தலத்துக்கு
மதிப்போ, அன்றி அந்தத் தலத்தால் ஆதீனத்துக்கு மதிப்போ’ என்று
சந்தேகம் ஏற்படும்படியான அமைப்புகள் அங்கே காணப்பட்டன. அங்கே
அக்காலத்திற் சென்றவர்கள் சில தினங்களேனும் தங்கித் தரிசனம் செய்துதான்
செல்வார்கள். அவ்வாறு தரிசனத்தின் பொருட்டு வேற்றூர்களிலிருந்து
வருவோர்களுக்கு வேண்டிய சௌகரியங்களெல்லாம் அத்தலத்தில்
அமைந்திருந்தன.

திருப்பெருந்துறைப் புராண அரங்கேற்றம் ஆரம்பித்தற்கு நல்ல நாள்
ஒன்று பார்த்து வைக்கப்பெற்றது. இடையே ஆசிரியர் அப்புராணத்தின்
பகுதிகளை இயற்றி வந்தார். நான் அவற்றை எழுதும் பணியைச் செய்து
வந்தேன்.

சிவகுருநாத பிள்ளை

எங்களுடன் இருந்த சவேரிநாத பிள்ளை கிறித்தவராக இருந்தாலும்
விபூதி அணிந்து கொள்வார். திருப்பெருந்துறையில் யாவரும் அவரைக்
கிறித்தவரென்று அறிந்து கொள்ளவில்லை. சிவ பக்தர்கள் கூடியிருந்த
அவ்விடத்தில் அவரும் ஒரு சிவ பக்தராகவே விளங்கினார். சைவர்களோடு
பந்தி போசனம் செய்வதில்லை; தோற்றம். பேச்சு, நடை உடை பாவனைகள்
எல்லா விசயங்களிலும் அவருக்கும் சைவர்களுக்கும் வேறுபாடே தோற்றாது.
ஆயினும் ‘சவேரிநாதர்’ என்ற பெயர் மாத்திரம் அவர் கிறித்தவரென்பவதைப்
புலப்படுத்தியது. பெயரிலும் சைவராக இருக்க வேண்டுமென்று அவர்
விரும்பினார்.

திருப்பெருந்துறைக்குச் சென்ற சில தினங்களுக்குப் பிறகு தம்
விருப்பத்தை அவர் ஆசிரியரிடம் தெரிவித்துக் கொள்ளலானார். “இங்கே
எல்லாம் சைவ மயமாக இருக்கின்றன நானும் மற்றவர்களைப் போலவே
இருந்து வருகிறேன். என் பெயர்தான் என்னை வெளிப்படுத்தி விடுகிறது.
அதை மாற்றிச் சைவப் பெயராக வைத்துக்கொள்ளலாமென்று எண்ணுகிறேன்.
புராணம் அரங்கேற்றும்பொழுது ஐயா அவர்கள் எதையேனும் கவனிப்பதற்காக
என்னை அழைக்க நேரும். சிவநேசச் செல்வர்கள் நிறைந்துள்ள கூட்டத்தில்
கிறித்தவப் பெயரால் என்னை ஐயா அழைக்கும்போது கூட்டத்தினர் ஏதேனும்
நினைக்கக்கூடும்” என்றார். “உண்மைதான்” என்று சொல்லிய ஆசிரியர்,
“இனிமேல் சிவகுருநாதபிள்ளையென்ற பெயரால் உன்னை அழைக்கலாமென்று
தோன்றுகிறது. உன் பழைய பெயரைப் போலவே அது தொனிக்கிறது” என்று
நாம கரணம் செய்தார். சவேரிநாத பிள்ளைக்கு உண்டான சந்தோசம்
இன்னவாறு இருந்ததென்று சொல்ல இயலாது.

சவேரிநாதபிள்ளை குதித்துக் கொண்டே என்னிடம் ஓடி வந்தார்.
“இங்கே பாருங்கள்; இன்று முதல் நான் முழுச்சைவன். என் பழைய பெயரை
மறந்து விடுங்கள். நான் இப்போது சிவகுருநாதன். உங்களுடைய வைணவப்
பெயரை மாற்றிச் சாமிநாதனென்று ஐயா வைத்தார்களல்லவா? அந்தப்
பாக்கியம் எனக்கும் கிடைத்தது. என் கிறித்தவப் பெயரை மாற்றிச்
சிவகுருநாதனென்ற பெயரை வைத்திருக்கிறார்கள். ஆசிரியர் நம் இருவரையும்
ஒரே நிலையில்வைத்து அன்பு பாராட்டுவதற்கு அடையாளம் இது. இரண்டு
பேர்களுக்கும் அருத்தம் ஒன்றுதானே? சாமிநாதனென்றாலென்ன?
சிவகுருநாதனென்றாலென்ன? இரண்டும் ஒன்றே” என்றார்.

ஆசிரியர் செய்த காரியத்தால் உண்டான வியப்போடு அவர் பேச்சால்
விளைந்த இன்பமும் சேர்ந்து என் உள்ளத்தைக் கவர்ந்தது

(தொடரும்)