(உ.வே.சா.வின் என் சரித்திரம் 114: அத்தியாயம் – 76: தல தரிசனம்- தொடர்ச்சி)
என் சரித்திரம்
அத்தியாயம் 77 சமயோசிதப் பாடல்கள்
திருவாவடுதுறையில் குமாரசாமித் தம்பிரான் சின்னக் காறுபாறாக இருந்து வந்தார். சுப்பிரமணிய தேசிகருடைய யாத்திரைக்காலத்தில் அவர் திருவாவடுதுறையில் சில சில சீர் திருத்தங்களைச் செய்தார். கோயில், மடம், நந்தவனங்கள் முதலியவற்றை மிகவும் நன்றாக விளங்கும்படி கவனித்து வந்தார்.
திருநெல்வேலியிலிருந்து நான் திருவாவடுதுறைக்கு வந்து சில வாரங்கள் தங்கியிருந்தேன். அக்காலத்தில் குமாரசாமித் தம்பிரானோடு தமிழ் விசயமாகப் பேசி இன்புற்றேன். யாத்திரைக் காலத்திற் சந்தித்த புலவர்களைப்பற்றியும் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைப் பற்றியும் அவரிடம் சொன்னேன்.
திருச்செந்தூரில் செய்து கொண்ட சங்கற்பத்தின்படியே தினந்தோறும் சிரீ கோமுத்தீசுவரர் விசயமாக ஒவ்வொரு செய்யுள் இயற்றி வந்தேன். அவற்றைக் குமாரசாமித் தம்பிரான் கேட்டு மகிழ்வார். மற்றத் தம்பிரான்களும் கேட்டு மகிழ்வார்கள். சனி ஞாயிறுகளில் கும்பகோணத்திலிருந்து தியாகராச செட்டியார் வருவார். அவர் தங்கியிருக்கும் இரண்டு தினங்களும் தமிழைப் பற்றிய பேச்சாகவே இருக்கும்.
வினாச்செய்யுள்
குமாரசாமித் தம்பிரான் தெற்கு வீதியிலுள்ள குளக்கரையில் ஒரு கட்டடம் கட்டுவிக்க எண்ணி வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தார். ஆழ்ந்த அத்திவாரம் போட்டு வேலைக்காரர்கள் வேலை செய்தார்கள். அதனைக் கவனிக்கும் பொருட்டு அங்கே தம்பிரான் சென்றபோது நானும் உடன் சென்றேன். அவ்விடத்தில் ஒரு கிழவன் நடைபெறும் வேலைகளை மேற்பார்வை யிட்டுக் கொண்டு நின்றான். அவன் எலும்புந்தோலுமாய், நிற்பதற்கே சக்தியில்லாமல் இருந்தான். அவனைப் பார்த்தால் அவன் உடம்பில் உயிர் உள்ளதோ இல்லையோ என்ற சந்தேகம் எழும். அவன் எப்படி அங்கே வேலை வாங்குவானென்று ஆச்சரியமடைந்தேன். திடீரென்று ஓர் அதட்டல் குரல் கேட்டது. அந்த உடம்பிலிருந்து அத்தொனி எழுந்ததென்பதை உணர்ந்தபோது எனக்குப் பிரமிப்பு உண்டாகி விட்டது. “இவனா அதட்டினான்!” என்ற சந்தேகத்தோடு மீட்டும் அவனைக் கவனித்தேன். முன் கேட்டதைவிட மிகவும் பலமான அதட்டல் தொனி அவனிடமிருந்து எழுந்தது. தம்பிரானைப் பார்த்தேன். ஆச்சரியக் குறிப்போடு, “இவ்வுடலினின்று மொலி இங்கெழுவதென்னே!” என்று சொன்னேன். என் உள்ளம் செய்யுள் இயற்றுவதில் ஈடுபட்டிருந்தமையால் அந்தக் கேள்வியை ஒரு செய்யுளடியைப் போலவே அமைத்துக் கேட்டேன். அவர் சிரித்துக் கொண்டே “உருவுகண் டெள்ளாமை வேண்டும்” என்று பதில் சொன்னார். பிறகு, “உங்கள் கேள்வியை நான்காவது அடியாக வைத்து முன்னே மூன்றடிகளை அமைத்து ஒரு செய்யுளாகப் பூர்த்தி செய்து விடுங்கள்” என்றார். அப்படியே இயற்றிச் சொல்ல அவர் கேட்டு மகிழ்ந்தார்.
நின்றால் நடக்கும்
அப்போது மணி பதினொன்று ஆகிவிட்டது. நானும் அவரும் காவிரி சுநானத்திற்குப் புறப்பட்டோம். போகும்பொழுது, “குளத்திலேயே சுநானம் செய்திருக்கலாம். காவிரிக்குப் போனால் நேரமாகும். நான் நின்றுவிட்டால் வேலை நின்றுவிடுமே” என்று சொன்னார். “நீங்கள் நடந்தால் அது நின்றுவிடும்; அங்கே நின்றால் நடக்கும் போலிருக்கிறது” என்று சொல்லி, உடனே
“கன்றால்முன்விளவெறிந்தகண்ணன்மிகவஞ்சவரும்கடுவயின்று
மன்றாட லுவந்ததிருக் கோமுத்தி வாணர்பணி வழுவா தாற்றும்
குன்றாத புகழ்க்குமர சாமிமுனி வரன்மாடம் குயிற்ற வன்னான்
நின்றாலவ் வேலைநடந் திடுமனையா னடப்பினது நிற்குந் தானே”
என்ற செய்யுளையும் சொன்னேன். “இன்று என்ன கவி ஆவேசம் வந்து விட்டது போலிருக்கிறதே” என்று சொல்லித் தம்பிரான் அச் செய்யுளை மீட்டும் மீட்டும் சொல்லக் கேட்டு இன்புற்றார்.
ஊற்றுப் பாட்டு
அப்பால் காவிரிப் படித்துறையை அடைந்தோம். அங்கே தென்கரையில் மிக உயரமாக வளர்ந்து ஆற்றின் பக்கமாகச் சாய்ந்து நிழல் அளிக்கும் ஒரு மருத மரம் இருந்தது. அம்மரத்தடியில் மணற்பரப்பிலே அமர்ந்தோம் மத்தியான்ன வெயிலில் அம்மரத்து நிழல் இனிமையாக இருந்தது.
காவேரியில் நீரோட்டம் இல்லாமையால் சுநானம் செய்யும் பொருட்டுத் தனித் தனியே ஊற்றுகள் போடப்பட்டிருந்தன. ஆதீனத் தலைவர் அமிழ்ந்து சுநானம் செய்வதற்கு ஏற்றபடி ஓர் ஓடுகால் வெட்டப்பட்டு நாற்புறமும் வேலிகட்டி யிருந்தது. அதன் மேல்பால் தம்பிரான்களெல்லாம் சுநானம் செய்வதற்காக விசாலமான ஊற்றொன்று வெட்டி அதற்கும் வேலி கட்டப்பட்டிருந்தது. அதற்குக் கிழக்கே தவசிப் பிள்ளைகளும் சைவர்களும் பிறரும் நீராடுவதற்குப் பெரிய ஊற்று ஒன்று இருந்தது. அந்த ஊற்றுகளைப் பாதுகாத்து வரும் பொருட்டு ஒருவன் நியமிக்கப்பட்டிருந்தான். பொன்னுப்பிள்ளை யென்பது அவன் பெயர்.
ஊற்றுகளை நன்றாக இறைத்துச் சுத்தமாக வைத்திருப்பதும், யார் யார் எந்த எந்த ஊற்றில் சுநானம் செய்யலாமோ அவர்களையன்றி மற்றவர்கள் அவற்றை உபயோகிக்காமல் காவல் புரிவதும் ஆகிய வேலைகளை அவன் பார்த்து வந்தான். அவனுக்கு உதவியாகச் சிலர் இருந்தனர்.
நாங்கள் மருத மரத்து நிழலில் உட்கார்ந்திருப்பதைக் கண்டு அவன் வந்து குமாரசாமித் தம்பிரானை வந்தனம் செய்து நின்றான். “எல்லாம் சரியாக இருக்கிறதா?” என்று தம்பிரான் விசாரித்தார். “சரியாக இருக்கிறது ஊற்றில் சலம் நிறைய ஊறியிருக்கிறது. சுநானம் செய்ய எழுந்தருளலாம்” என்று அவன் சொன்னான்.
அந்தக் காவலாளன் மிகவும் கடுமையானவன். உரியவர்களல்லாத வேறு யாரேனும் ஊற்றுக்கருகில் வந்தால் அவர் காலில் அடிப்பான். பித்தளைப் பாத்திரங்களைக் கொண்டு வந்து ஊற்றை அணுகினால் அவற்றைப் பிடுங்கித் தூர எறிவான். மண் பாத்திரங்களாயிருந்தால் உடைத்தெறிவான். பெண்களுக்கு அவனிடம் அதிக பயம். அவன் முகம் எப்போதும் கோபக் குறிப்போடே இருக்கும். வார்த்தையும் கடுமையானது. அப்படியிருந்தால்தான் தன் வேலை ஒழுங்காக நடைபெறும் என்பது அவனது திடமான அபிப்பிராயம். நிழலும் ஊற்றும் இனிய காட்சிகளை அளித்த அந்த இடத்தில் அவனுடைய முகம் வெயிலின் கடுமைக்குத் துணையாக விளங்கியது.
தம்பிரான் என்னைப் பார்த்து, “இவனைத் தெரியுமா?” என்று கேட்டார். “நன்றாகத் தெரியுமே” என்று நான் சொன்னேன். அவன் தன் வேலையைக் கவனிக்கப் போய்விட்டான். “இவன் எப்பொழுதும் கடுமையாகவே இருக்கிறானே. இவன் முகத்தில் சந்தோச அறிகுறியை ஒருநாளேனும் பார்த்ததில்லை. இவனைச் சிரிக்கும்படி செய்யமுடியுமோ?” என்று தம்பிரான் என்னைக் கேட்டார். “பார்க்கலாம்” என்று சொல்லி நான் அந்தப் பேர் வழியின் விசயமாக ஒரு பாடல் செய்ய யோசித்தேன். அவனது கடுமையான தோற்றத்தின் சார்பினாலோ, எதனாலோ, என் செய்யுளிலும் சிறித கடுமை புகுந்து கொண்டது. நான் இயற்றிய செய்யுள் திரிபாக அமைந்தது. நான் அதை முடித்துத் தம்பிரானிடம் சொல்லிக் காட்டினேன்.
“மருத மரத்து நிழலூடு வெள்ளை மணலிருப்பும்
பொருத மரப்பொன்னுப் பிள்ளைவெங் காவல் புரிந்துஞற்றும்
விருதம ரற்புத வூற்று டலும்நிதம் மேவப்பெற்றால்
கருத மரக்க னரமாத ரோடிருக் கையினையே.”
மருதமரத்தின் நிழலுக்கிடையில் உள்ள வெள்ளை மணலாகிய இடமும் யாருடனும் போராடி முழங்கும் முழக்கத்தையுடைய பொன்னுப் பிள்ளை வலியக் காவல் புரிந்து அமைக்கும் சிறப்புப் பொருந்திய அற்புதமான ஊற்றில் நீராடுதலும் தினந்தோறும் பெறுவதாயிருந்தால் அரம் போன்ற கண்ணையுடைய தேவ மகளிரோடு வாழ்வதையும் பெரிதாக நினைக்க மாட்டோம்.
[பொரு தமரம் – போர் செய்யும் முழக்கம். விருது – சிறப்பு. கருதம் – கருதோம். அரமாதர் – தேவ மகளிர்.]
“பாட்டுடைத் தலைவனது இயல்பில் கொஞ்சம் பாட்டுக்கும் வந்துவிட்டது போலும்!” என்று சொல்லிக் கொண்டே தம்பிரான் சிரித்தார். பிறகு, பொன்னுப் பிள்ளையை அழைத்து, “உன்னுடைய வேலையையும் உன்னையும் புகழ்ந்து இவர்கள் பாடியிருக்கிறார்களே? கேட்டாயா?” என்றார். நான் அந்தப் பாட்டைச் சொன்னேன். ‘பொன்னுப் பிள்ளை’ என்பதை மாத்திரம் அழுத்தமாகச் சொன்னேன். அவனுக்கு அந்தப் பாட்டில் வேறு என்ன தெரியப் போகிறது? அந்தப் பெயர் காதில் விழுந்த போது அவனை அறியாமலே ஒரு புன்னகை அவன் முகத்தில் உண்டாயிற்று. “பேஃசு; அருமையாக இருக்கிறது” என்று தம்பிரான் சொல்லிச் சிரித்தார். “என் பாட்டு அருமையா? அவன் சிரிப்பு அருமையா?” என்ற விசயத்தில் எனக்குச் சிறிதும் சந்தேகமே இல்லை.
“ஐயா அந்த ஊற்றில் சுநானம் செய்யலாம்; சுத்தமாக இருக்கிறது” என்று என்னைச்சுட்டி அந்தக் காவற்காரன் சொன்னான்.
“பாட்டுடைத் தலைவன் அளிக்கும் பரிசு அது தான்” என்றார் தம்பிரான்.
இரெயில் பாட்டு
குமாரசாமித் தம்பிரான் தெற்குக் குளப்புரையின் நாற்புறத்துமுள்ள பூந்தோட்டத்தில் பலவகையான பூச் செடிகள் வைத்துப் பாத்திகட்டி மரு, மருக்கொழுந்து முதலியவற்றை மிகுதியாகப் பயிர்செய்து அருகிலுள்ள தலங்களுக்கும் அனுப்புவார்; என் தந்தையாரது பூசைக்கும் நாள்தோறும் அனுப்புவார்.
சிதம்பரம் சிரீ நடராசமூர்த்திக்கு அவற்றை எடுத்துச் சென்று சாத்தச் செய்ய வேண்டுமென்று தம்பிரான் எண்ணினார். ஒரு நாள் பெரிய குடலை கட்டி மருவையும் மருக்கொழுந்தையும் எடுக்கச் செய்து அதில் வைத்துச் சில தம்பிரான்களையும் என்னையும் உடனழைத்துக் கொண்டு சிதம்பரத்தை நோக்கிப் புறப்பட்டார். பகல் பன்னிரண்டு மணிக்கு இரெயில் வண்டியிலேறிச் சென்றோம். இரெயில் வண்டி புதிதாக வந்த காலமாதலின் அதில் ஏறிச்செல்வது விநோதமாக இருந்தது. அதிகக் கூட்டமே இராது. வண்டிக்கு இரண்டு பேர்களுக்குமேல் இருப்பது அருமை. நாங்கள் சிறிதுநேரம் எங்கள் விருப்பம்போல் தனித்தனி வண்டிகளில் ஏறிச் சிரமபரிகாரம் செய்து கொண்டோம். பிறகு ஒன்றாகக் கூடி ஓரிடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். யாவரும் ஒன்றாகப் படித்தவர்களாதலால் வேடிக்கையாகப் பல விசயங்களைப் பற்றிப் பேசினோம். இரெயில் வண்டியில் பிரயாணம் செய்வதைப் பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாடல் செய்ய வேண்டுமென்று செய்யத் தொடங்கினோம். எல்லாரும் செய்யுள் இயற்றத் தெரிந்தவர்கள். ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் அபிப்பிராயத்தை வைத்துப் பாடல் இயற்றிச் சொன்னார்கள் ஒரே பொருளைப் பற்றிய பல வகையான கருத்துகளமைந்த பாடல்களாதலின் அவை சுவையாக இருந்தன. நான் இரண்டு மூன்று செய்யுட்களை இயற்றிச் சொன்னேன். அவற்றில் ஒரு வெண்பாவின் முற்பகுதி மாத்திரம் இப்போது ஞாபகத்தில் இருக்கிறது.
“உண்ணலாம் தூசும் உடுக்கலாம் நித்திரையும்
பண்ணலாம் நூல்கள் படிக்கலாம்…”
ஒரு கற்பனை
பிற்பகலில் சிதம்பரத்தை அடைந்து மாலைக் காலத்தில் ஆலயத்துக்குச் சென்று சிரீ நடராச மூர்த்தியைத் தரிசித்தோம். குமார சாமித் தம்பிரான் தாம் கொண்டு வந்திருந்த மருவையும், மருக் கொழுந்தையும் ஒரு தீட்சிதரிடம் அளித்து அலங்காரம் செய்யச் சொன்னார். அவர் நடராசமூர்த்தியின் திருமேனி முழுவதும் அவற்றைக் கொண்டு அலங்கரித்துத் தீபாராதனை செய்தார். “இறைவன் திருமேனி முழுவதும் உமா தேவியார் கொண்டதுபோல் பச்சையாக இருக்கிறது” என்று சொல்லிக் குமாரசாமித் தம்பிரான் மகிழ்ந்தார். நான் அது சம்பந்தமாக ஒரு செய்யுளை இயற்றிக் கூறினேன். அலங்காரம் செய்த பத்திரத்தின் பெயராகிய மருவென்பதற்கு வாசனை என்றும் ஒரு பொருள் உண்டு. அந்தச் சொல்லுக்குரிய இரு பொருளை வைத்து ஒரு கற்பனை செய்தேன். “சிதம்பரத் தலத்தில் எழுந்தருளிய இறைவன் ஆகாசமே திருமேனியாகவுடையவன். ஆகாசத்திற்கு ஒலி உரியதே ஒழிய மரு (மணம்) இல்லையென்று ஆன்றோர் கூறுவர். அவர்கள் நாணமுற சிரீ குமார சாமித் தம்பிரான் ஆகாச வடிவினராகிய சிவபெருமானுக்கு மருவை அளித்தார்” என்ற கருத்தை உடைய அச்செய்யுள் வருமாறு:
“திருவென்றும் நின்றொளிரும் துறைசையிற்சுப்
பிரமணிய தேவற் கன்பிற்
பொருவென்று மின்றியொளி ருங்குமர
சாமிமுனி புங்க வன்றான்
மருவென்றும் வெளிக்கிலையென் பார்நாணத்
தில்லைவெளி மன்றில் மேனி
அருவென்று முருவென்றுஞ் சொலநடிப்பார்க்
கின்றுமரு அளித்தான் மன்னோ”
[ பொரு – ஒப்பு. மரு – மணம். வெளிக்கு – ஆகாசத்திற்கு. இலை என்பார் – இல்லை என்கிற பூமியானது.]
இச்செய்யுளைக் கேட்ட தம்பிரான்களும் பிறரும், “கற்பனை நன்றாயிருக்கிறது” என்று சொன்னார்கள்.
“நீங்கள் நினையாமலே வேறு நயம் ஒன்று இந்தப் பாட்டில் அமைந்திருக்கிறது” என்று குமாரசாமித் தம்பிரான் சொல்லவே, “என்ன அது?” என்றேன்.
“மரு என்றும் வெளிக்கிலை என்பார் நாண என்பதற்கு, வாசனை எப்பொழுதும் ஆகாசத்துக்கு இல்லை என்று சொல்லுபவர்கள் நாணும்படி என்பதுதானே நீங்கள் நினைத்து அமைத்த பொருள்?”
“ஆம்.”
“வாசனை ஆகாயத்திற்கு இல்லை, எனக்கே உண்டு என்று சொல்லிச் செருக்கடையும் பூமி நாணும்படி என்று வேறு பொருள் ஒன்றும் கொள்ளும்படி உங்கள் வாக்கு அமைந்திருக்கிறது. பிருதிவியின் குணம் கந்தமென்பது சாத்திரக் கருத்தல்லவா?” என்றார் அவர். அவர் கூறியதைக் கேட்டு யாவரும் மகிழ்ந்தோம்.
(தொடரும்)
என் சரித்திரம், உ.வே.சா.