(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 41/69  இன் தொடர்ச்சி)



தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

  42/69

வடமொழி ஒரு செம்மொழியா?(2020) (தொடர்ச்சி)

மந்திரங்களின் பல்வேறு அறிஞர்கள் மொழிபெயர்ப்புகளையும் அரவிந்தர், சருமா முதலான பலரின் ஆய்வுரைகளையும் எடுத்துக் கூறி வேதங்களில் உள்ள முரண்பாடுகளையும் தெளிவின்மையையும் மனிதநேயமற்ற கூறுகளையும் பேரா.ப.ம.நா.விளக்கியுள்ளார். மனிதநேயமற்றதை எவ்வாறு இலக்கியமாகக் கருத இயலும்? இலக்கிய வகைப்பாட்டிற்கே வராத ஒன்றை எவ்வாறு செவ்வியல் இலக்கியமாகக் கூற முடியும்?

பகுதி இரண்டின் இரண்டாம் கட்டுரை, இலக்கிய நோக்கில் வேத உபநிடதங்களை ஆராய்கிறது.

சமற்கிருத இலக்கிய வரலாற்றை  1899இல் எழுதியவர் ஆர்தர் மக்குடானல்(Arthur A. Macdonell)என்னும் ஆங்கிலேய அறிஞர். அவர் நூலின் முன்னுரையில் வடஇந்தியர்களுக்கு வரலாற்று உணர்வு இன்மையால் அம்மொழி இலக்கியங்களின் காலத்தைச்சரியாக அறியமுடியவில்லை எனக் குறிப்பிட்டிருப்பார். ஆனால், உண்மையில் அவர்கள் சமற்கிருத இலக்கிய்ங்களைப் பிற மொழி இலக்கியக் காலங்களுக்கு மூத்ததாகவும் முதன்மையானதாகவும் காட்ட முயன்ற மோசடிகளால்தான் காலக் குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனினும் ஆய்வறிஞர்கள் பலரும் சமற்கிருத வாணர்களின் திருட்டுத்தனத்தையும் பொய்யாகக் கற்பிக்கப்படும் போலிச்சிறப்புகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இவற்றால் சமற்கிருத இலக்கியங்கள் அவற்றிற்குக் கொடுக்கப்பட்ட உயர்நிலையை இழந்துவருகின்றன. இதனை இக்கட்டுரை மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.

இருக்குவேதம் குறிப்பிடும் தெய்வங்களுள் சில அறவுணர்வு அற்றவை. வெள்ளை யசுர் வேதம், பிராமணர்கள் தெய்வங்களைத் தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவர் என்கிறது. பிராமணங்கள், “மாந்தர்களில் பிராமணர்களே தெய்வங்கள் என்று வணங்கப்படவேண்டியவர்கள்” என்கிறது. பெண் தெய்வங்கள் யாவும் ஆண்தெய்வங்களுக்குக் கீழான நிலையிலேயே வைக்கப்படுகின்றன. இருக்கு வேதத்தின் பத்தாம் பகுதியில் யமி தன் உடன்பிறந்தவனான யமனை  உடலுறவுக்கு அழைக்கிறாள் என்று குறிக்கப்பெற்றுள்ளது. தரக்குறைவான உயர்வு நவிற்சிப்பாடல்கள் பல இருக்கு வேதத்தில் முதல் பகுதியிலும் எட்டாம் பகுதி இறுதியிலும் பத்தாம் பகுதியிலும் புகுத்தப்பட்டுள்ளன.

பெண்களை இழிவுபடுத்தும் பாடல்கள் பல இருக்கு வேதத்தில் உள்ளன. ஒரு பாடலில் இந்திரன் சொன்னதாகப் பெண்களுக்கு அறிவு குறைவு எனக் கூறப்பட்டுள்ளது. ஒரு பாடலில், “பெண்களோடு நட்பு என்பதே கூடாது. அவர்களுடைய இதயங்கள் ஓநாய்களின் இதயங்களை ஒத்தவை” எனக் கூறப்பட்டுள்ளது.

இருக்குவேதப் பாடல்கள் உலகத்தோற்றம் குறித்து முரண்பாடான குழப்பமான கருத்துகளையே தெரிவிக்கின்றன. அதில் நான்கு வருணங்களைக் குறிப்பிடும் பாடல் உள்ளது. தெய்வங்களைத் தமது கட்டுக்குள் வைத்திருப்பதாக ஏமாற்றிப் பிற வருணத்தாரை அச்சுறுத்தித், தங்கள் வாழ்க்கையைப் பிராமணர்கள் வளப்படுத்திக் கொண்டனர் என்பது நான்கு வேதங்கள் மூலம் தெளிவாகத் தெரிகிறது. வேதங்களைப் பிற வருணத்தார் படிக்கக்கூடாது எனச் சங்கரரும் இராமானுசரும்கூடத் தெரிவித்துள்ளனர்.  அவர்கள் வேதங்களைப் படிக்க வேண்டுமானால், மகாபாரதத்தைப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றனர்.

இருக்கு வேதம் திருமண விருந்துகளில் பசுக்கள் கொல்லப்பட்டு அவற்றின் ஊன் பிராமணர்களால் உண்ணப்பட்டதைப் பாடுகிறது. இந்திரனுக்கு வேள்விகளில் காளைகள் கொல்லப்பட்டு விருந்தளிக்கப்பட்டதும் சொல்லப்படுகிறது. ஆனால், பிற வருணத்தார் பசுக்கொலை புரிந்தால்  மரணத்தண்டனை விதிக்கப்படும் என வெள்ளை யசுர் வேதம் கூறுகிறது.

பெண்குழந்தைகளுக்கு எதிராகவே வேதங்கள் பேசுகின்றன. பெண்குழந்தை பிறப்பை அதருவவேதம் இழிவாகக் கூறுகிறது. பெண்குழந்தைகள் பிறந்தால் அக்குழந்தைகளை இறக்கும்படிச்செய்வதாக யசுர் வேதம் கூறுகிறது. அயித்தரேய பிராமணம், பெண்குழந்தை பெறுவது பெருந்துன்பத்திற்கு ஆளாவது என அறிவிக்கிறது. (ஐங்குறுநூற்றுப்பாடலில் தெய்வத்திடம் பெண் குழந்தை வேண்டும் பெற்றோரைக்காணலாம்.)

கொடிய எண்ணங்களைச் சொல்லும் அதருவ வேதம், பிராமணர்கள் தங்கள் பகைவர்களுக்கு எதிராகப் பயன்படுத்த வேண்டிய ஆயுதம் என்று மனுநூல் கூறுகிறது. சாமவிதானபிரமாணம் பலவிதமான மூடநம்பிக்கைகளைப் போற்றுகிறது. மைத்திராயணி உபநிடதம், பிராமணிய விதிகளைக் கடைப்பிடித்து, வருணாசிரம தருமத்தையும்  சாதிக்கட்டுப்பாடுகளையும் ஏற்றுக் கொண்டவர்களே, -பிராமணப் புரோகிதர்களே, முத்தி நிலையடைய முடியும் என்கிறது.

தரும சூத்திரங்கள் பலவிதமான சடங்குகள் எவ்வாறு செய்யப்பட வேண்டுமென்று விளக்குகின்றன. இவைகுறித்து மக்குடனால், சூத்திரங்கள் கூறும் எண்ணற்ற சடங்குகளை எண்ணிப் பார்க்கும்போது சோம்பேறிகளான புரோகிதப் பிராமணர்கள் இந்துக்களின் அறிவை முடக்கி அவர்களை என்றென்றும் தங்களுக்கு ஆன்மிக அடிமைகளாக வைத்துக்கொள்வதற்காகக் கடைப்பிடித்தவையே அவையென்று முடிவுகட்ட நேரும் என்கிறார்.

பகுதி இரண்டின் மூன்றாம் கட்டுரை வேதகாலப் பண்பாடு குறித்துக் கூறுகிறது. தருமானந்த கோசம்பியின் ‘பகவான் புத்தர்’ முதலான நூல்களில் நேர்மையான ஆய்வு முடிவுகளைக் காணலாம். நாடோடிகளாக வாழ்ந்த ஓரினம் மூடநம்பிக்கைகள் நிறைந்த தொன்மங்கள் மூலமும் குதிரைகள், மனிதர்கள், பசுக்கள் ஆகியவற்றை யெல்லாம் பலியிடும் அசுவமேதம், நரமேதம்,வாசபேயம், கோமேதயாகம் போன்றவற்றைக் கொண்டு மன்னர்களை அடிமையாக்கியதன் மூலமும் அறவுணர்வற்ற ஒரு பண்பாட்டை உருவாக்கி அதை நாடு முழுவதும் பரப்பியிருக்கிறார்கள் என்னும் வரலாற்று உண்மையை இவ்வாய்வு உணர்த்துகிறது.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 43/69  )