(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 40/69  இன் தொடர்ச்சி)



தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

41 / 69

வடமொழி ஒரு செம்மொழியா?(2020) (தொடர்ச்சி)

இரண்டாவது கட்டுரை 95 பக்கங்கள் கொண்டது. சமற்கிருதப் பேராசிரியர் சுகுமாரி(பாட்டார்சார்)எழுதிய சமற்கிருதச் செவ்விலக்கிய வரலாறு(History of Classical Sanskrit Literature. 1993) என்னும் நூற் கருத்தை விளக்குவது.

அந்நூல் முன்னுரை, முடிவுரை நீங்கலாக ஐந்து பகுதிகளை உடையது. சமற்கிருத இலக்கிய வரலாறு கி.பி.மூன்றாம் நூற்றாண்டில் தொடங்கிக் கி.பி.பதினாறாம் நூற்றாண்டில முடிவிற்கு வந்ததைக் கூறுகிறது. அஃதாவது இக்காலத்திற்கு முன்னும் பின்னும் உள்ள நூல்களைச் சமற்கிருத இலக்கியங்களாகக் கருத முடியாது;சமற்கிருத நாடகங்களின் தோற்றமும் மூலமும் கிரேக்க நாடகங்களே என்கிறார்.

பேராசிரியை சுகுமாரி, நூற்றாண்டுதோறும் உள்ள சமற்கிருத இலக்கியங்களின் மூலங்களைக் குறிப்பிடுவதன் மூலம் நாம் உணர்வன என்ன? சமற்கிருத இலக்கியங்கள் பேரளவினவை என்பதைக் காட்டுவதற்காகப் பாலிமொழி நூல்களையும் பிராகிருத மொழி நூல்களையும் மொழிபெயர்த்துக் கொண்டு அல்லது அவற்றின் அப்பட்டமான தழுவல்களை எழுதிவைத்துக் கொண்டு மூலங்களை அழித்துவிட்டு அவையெல்லாம் சமற்கிருத நூல்கள் என்று பொய்யான வரலாற்றை உருவாக்கியுள்ளனர் என நாம் அறிகிறோம். நாம் இதுவரை தமிழ் இலக்கியங்களைச் சமற்கிருதத்தில் மொழிபெயர்த்துக்கொண்டு மூலநூல்களாக அவற்றைப் புனைந்துரைத்தனர் என எண்ணி வந்துள்ளோம். பேரா.ப.ம.நா. இவற்றை நன்கு புரியவைத்துள்ளார்.  

மயூர சதகத்தில் கவர்ச்சியை வெளிப்படுத்தும் அளவிற்குக் கவிதையைக்காண இயலவில்லை.

நூறு நீதிகளைச் சொல்லும் நீதி சதகத்தில் கவிதைக்கு வழியில்லை. திருக்குறள், நாலடியார் போன்ற தமிழ் அற இலக்கிய்ங்கள் அளவிற்கு நல்லறம் சொல்லவில்லை.

வைராக்கிய சதகத்தில் இல்லறத்தை வெறுப்பவன் குரலையே கேட்கிறோம்.

சிருங்கார சதகம் காதலைப்பற்றிப்பேசுவதாகக் கூறிவிட்டுப், பல பாடல்களில் காதலுக்கு எதிராகவே எச்சரிக்கிறது.

“ஆண்களைப் பெண்கள் மயக்குகின்றனர்; அவர்களின் அன்பு நிலையற்றது.”

பெண்களைப் பழிக்கும் சிறுபிள்ளைத்தனமான கருத்துகள் பல சொல்லப்படுகின்றன.

இவையெல்லாம் பெண்களைப் போகப்பொருள்களாகவே கா்ட்டுகின்றன.

இத்தகைய குறைபாடுகள் உடைய நூல்களை யெல்லாம் சிறந்த இலக்கியமாகவே காட்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, பொய்யான அடித்தளங்கள் அடிப்படையில் செவ்வியல் கட்டுமானத்தைக் காட்டுகின்றனர். சமற்கிருத நூல்களை ஆபாசக் குப்பைகள் எனக் கூறும் சமற்கிருதப்பேராசிரியை காதல் நிலைகளை முருகியல் இன்பம் தருமாறு படைத்த சமற்கிருதக் கவிஞர்கள் யாருமிலர் என்கிறார். தமிழ் அக இலக்கியங்களுடன் ஒப்பிட்டுப்பேசுவதற்குச் சமற்கிருத நூல்களுக்குத் தகுதியே இல்லை என்பதை இந்நூல் மூலம் புரிந்து கொள்ளலாம்.

நான்காம் கட்டுரை முதல் பதினாறாம் கட்டுரை வரை சிறப்பான நூல்கள் என்று சொல்லப்படும் சமற்கிருத நூல்களின் நிறைகுறைகளைப் பேராசிரியர் சுகுமாரி நடுநிலையுடன் எடுத்துக் காட்டுகின்றார். இவை நமக்குச் சமற்கிருத நூல்கள் செவ்வியல் தன்மையற்றவை என்பதையே உணர்த்துகின்றன.

 வேதந் தொடங்கிக் காளிதாசன் வரையில் காலந்தோறும் தோன்றி வழக்கத்தில் உள்ள இலக்கியங்களின் பொருண்மை விளக்கங்களையும் தமிழ் முதலான பிற மொழி இலக்கியங்களில் இருந்து எடுததாளப்பட்ட கருத்துகளையும் இரண்டாம் பாகம் விளக்குகிறது.

இரண்டாம் பகுதியின் முதல் கட்டுரையில் வேத உபநிடதங்கள் வரலாற்று நோக்கில் பார்க்கப்படுகின்றன.

சமற்கிருத அறிஞர்கள் பார்வையிலேயே வேதங்களைப்பற்றி இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது. இருக்குவேதத்தையும் மனுநீதியையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த வெண்டி தோனிகர்(Wendy Doniger) பிராமணர்கள், தங்களை மேம்படுத்திக் கொள்ளவும் தங்கள் செல்வாக்கை வளர்த்துக் கொள்ளவும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ளவும் சமயச்சடங்குகளில் மட்டுமல்லாமல் வாழ்க்கையின் எல்லாக் கூறுகளிலும் தங்கள் பங்கை உறுதிப்படுத்திக் கொள்ளவும் சற்றும் அடக்கவுணர்வோ கூச்சமோ தயக்கமோ மனச்சான்றின் உறுத்தலோ இல்லாமல் பேசுவதை வேதங்களில் காணலாம் என்பார். வேதங்களில் வன்முறையும் அதிகார வெறியும் போற்றப்படுவதோடல்லாமல் அவையே உலகநெறி யென்றும் உலக நோக்கமென்றும் காட்டப்படுகின்றன என்பார்.

சில்வியன் இலவி (Sylvian Levi)என்பார் வேதங்களின் அடிப்படை இலட்சியம் மிருகத்தனமானது(Brutal)என்று தமது பிராமணர்களின் ஈகைக் கோட்பாடு (La Doctrine du Sacrifice Dans Les Brahmanas) நூலில் விளக்குவதைத் தேனியல் சரி என்கிறார். சில்வியன் பிரெஞ்சு மொழியில் எழுதி 1898இல் வெளியிட்ட நூல் இது.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 42/69 )