(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 39/ 69  இன் தொடர்ச்சி)



தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

40/ 69

 வடமொழி ஒரு செம்மொழியா?(2020)

ஏறத்தாழ 650 பக்கங்கள் கொண்ட மிகப்பெரும் ஆராய்ச்சி நூல். எவ்வகைக் காழ்ப்புணர்ச்சியுமின்றி பன்னாட்டு அறிஞர்களின் ஆய்வுரைகள் அடிப்படையில் நடுநிலையுடன் ஆரா்ய்ந்து சமற்கிருதம் செம்மொழியல்ல என்பதை மெய்ப்பித்துள்ளார். “தொன்மை, தாய்மை, தூய்மை பற்றிய தவறான கற்பிதங்கள் அடிப்படையில்தான் சமற்கிருதத்தைச் செம்மொழியாகக் காட்டுகின்றனர். உண்மையில் இது செம்மொழியே அல்ல” என எழுதி வரும் எனக்கு இக்கட்டுரை பெரிதும் போற்றுதலுக்குரிய வழிகாட்டி நூலாகத் திகழ்கிறது.

இந்நூலின் பதிப்புரையில் குறிப்பிட்டுள்ளதுபோல் சமற்கிருதம் என்றைக்கும் மக்கள் மொழியாகப் பேச்சு நிலையில் இருந்ததில்லை. இன்றைய நிலையில் வளர்ச்சியுற்றுள்ள அறிவியல் வளர்ச்சியினை ஈடுகட்டும் நிலையிலும் இருக்கவில்லை. ஆனால், அதனை அறிவியல் மொழிபோல் பொய்யுரையாகப் புகழ்ந்து அதை மேற்கோளாகக் காட்டிப் பரப்பி வருகின்றனர்.

இந்நூல் சமற்கிருத இலக்கிய வரலாற்று நூலாக அமைந்துள்ளதே நடுவுநிலையுடன் ஆராய்ந்து ஆசிரியர் முடிபு எடுத்துள்ளார் என்பதைத் தெள்ளிதாக விளக்குகிறது.

இந்நூல் மூன்று பகுதிகளையும் (2+20+18)40 கட்டுரைகளையும் முடிவுரை, பிற்சேர்க்கையும் உடையது.

சமற்கிருதத்தின் செம்மொழிப் பண்பின் உண்மைநிலை குறித்து முதல் பாகம் விளக்குகிறது  

  1. உலகப் பெருமொழிகளும் செவ்வியல் தகுதியும், 2. செவ்விலக்கியங்கள்: வடமொழிப்பேராசிரியையின் பார்வையில் என இரு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

 தொல்காப்பியப் பொருளதிகாரத்தை ஒத்த ஓர் அறிவு சார்ந்த ஆவணத்தை மேலை அறிஞர்கள் படைக்கவில்லை யென்பதே வரலாற்று உண்மை.

மேலை உலகின் கவிதையியல் முற்றுப் பெறாததாகவே இன்றுவரை உள்ளது.

கி.மு.ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டைச்சேர்ந்த பிண்டார்(Pindar), சாஃபோ(Sappho) ஆகிய இருவரும் செவ்வியல் கிரேக்கத்தின் தலைசிறந்த தன்னுணர்ச்சிக் கவிஞர்கள். சிறந்த பாடல்களாகப் போற்றப்படும் பிண்டாரின் கவிதைகளில் குமுகாய உணர்வு(Social Consciousness) சிறிதும் இல்லையென்றும் இவர் மேட்டுக்குடி மக்களிடமே ஈடுபாடு கொண்டவர் என்றும் கிரேக்கக்கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுவதைக் குறிப்பிடுகிறார். இதுபோல் சாஃபோவின் கவிதைகளில் மிகச் சிலவே கிடைத்துள்ளன.பழம் கிரேக்கக் கவிதைகளில் குறிப்பால் பொருள் உணர்த்தல் அறவே இல்லை(“Suggestion is unknown to Greek Poetry”) என்னும் உண்மையையும் எடுத்துரைக்கிறார். செம்மொழி என்பது தனக்கே உரிய பேரிலக்கியப்பரப்பைப் பெற்றிருக்க வேண்டு்ம் என்னும் விதிக்கிணங்கப் பார்த்தால் இலத்தீன் இலக்கியம் குறைபாடுடையது என அறிஞர்கள் கூறுவதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

 பழஞ்சீன இலக்கியத்தில் இயற்கைக்கவிதைகள் இருப்பினு்ம் தமிழுக்கே உரிய மாந்தர் வாழ்வையும் இயற்கையையும் இறுகப்பிணைத்த ஐந்திணைக் கவிதை இயல்போல் அவை இல்லை என அறிஞர்கள் கூறுவதையும் நமக்குத் தெரிவிக்கிறார்.

இலத்தீன், சமற்கிருதம், சீனம்,அரேபியம், எபிரேயம் ஆகியவற்றிற்கு ஒரு பெருங்குறை உண்டு. ஏதேனும் ஓரினத்திற்கு நீ்ண்ட நெடுங்காலம் தாய்மொழியாக இருந்து பேச்சு வழக்கினாலே தொடர் வளர்ச்சிபெற்றவை அல்ல. இதனால் உயிருள்ள கவிதைக்கு வேண்டிய உயிரோட்டம் கொண்ட சொல்வளம் அவற்றிற்கு இல்லை. இம்மொழிகளில் ஆழ்ந்த பயிற்சி பெற்ற ஓங்கு அடிகளார்(Fr. Walter Ong) இது குறித்துக் கூறுவதை நம் கருத்தில் பதிய வைக்கிறார். நீண்ட நெடுங்காலம் தாய்மொழியாக விளங்கிவரும் ஒரே செம்மொழி தமிழ் மட்டுமே!.

 ஏ.கே.இராமானுசன் தேனியேல் இங்கால்சின் கூற்று ஒன்றினை எடுத்தாண்டுள்ளார். சியார்சு ஆருட்டிற்குச் சமற்கிருதம் கற்றுத்தந்த சமற்கிருதப் பேராசிரியர்தான் இங்கால்சு. அவர், சமற்கிருதம் குடும்பமொழியாக இருந்ததில்லை என்பதுடன் அதன் செயற்கைத்தன்மை, உயிருள்ள கவிதை மொழிக்குப் பயன்படாத நிலை முதலியவற்றைக் குறிப்பிட்டுள்ளார். அஃது என்றுமுளமொழி என்றும் அகில இந்திய அளவினலானது என்றும் கூறுவதன் பொய்மையையும் அறிஞர்கள் கூறியுள்ளனர். இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் சமற்கிருதத்திற்குத் தொடரந்து எதிர்ப்பு இருந்துள்ளது என்பதையும் சமற்கிருத இலக்கியங்களிலெல்லாம் பிராகிருதமே பெருமளவு கையாளப்பட்டுள்ளது என்பதையும் பிராகிருத மொழியினர் சமற்கிருதத்தை எள்ளி நகையாடி வந்துள்ளனர் என்பதையும் ஆய்வறிஞர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர்.

பிராகிருதத்தைப் பாராட்டியும் சமற்கிருதத்தைக் கடுமையாகத் தாக்கியும் பிராகிருத மொழியினர் கவிதைகள் பல எழுதியுள்ளனர். அவற்றிற்குச் சான்றாக இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள கவிதைகளில் ஒன்று வருமாறு:

பிராகிருத காவியத்தை வணங்குவோம்; அம்மொழியில்

கவிதை யாத்தவர்களையும் வணங்குவோம்.

சமற்கிருதக் காவியத்தைக் கொளுத்துவோம்;  யார்

அம்மொழியில் காவியம் படைத்தார்களோ

அவர்களையும் கொளுத்துவோம்.

(அ.கார்த்திகேயன், பிராகிருத மொழியில் மொழி உணர்ச்சி)

இவ்வாறு முதல் கட்டுரையிலேயே சமற்கிருதத்தின் செம்மையில்லாத் தன்மையை நன்கு விளக்கியுள்ளார் பேரா.ப.ம.நா.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 41/ 69  )