Saturday, June 06, 2009

பக்கத்தில் இருந்தும் படிக்கப்படாத கவிதை!
தினமணி


முதலில் தலையை வெட்டினர்
தொடர்ந்து
விரல்களை,
கைகளைத் துண்டித்தனர்
மார்பைப் பிளந்தனர்
தொடைகளை, கால்களை
வெட்டி அடுக்கினர்
வரிசையாக
ஒரு சிறு முனகல்கூட இல்லை
ஒரு துளி ரத்தமும் இல்லை
வெட்டிய முகங்களிலும்
கோபமும் இல்லை
இரக்கமும் இல்லை
பறவைகள் கரைந்தன
சோகத்துடன்...
ஒரு மரம் வெட்டிச் சாய்க்கப்பட்டதற்கு இவ்வாறாக வருந்திய அ. ராஜமார்த்தாண்டன், அடையாளம் காணப்படாத ஒரு வாகனத்தால் சாய்க்கப்பட்டுவிட்டார் நாகர்கோவிலில், ஜூன் 6-ம் தேதி. பெயர் சொன்ன அளவில் அவரை அறிந்துகொள்ள இயலாத இலக்கிய வாசகர்களில் பலர், "ராஜமார்த்தாண்டன் யார்?' என்று கேட்கக் கூடும். ஆனாலும், இந்த இலக்கிய வாசகர்கள் மெச்சிக்கொள்ளுகிற, பெயரும் புகழும் பெற்றிருக்கிற, ஆளுமைமிக்க எழுத்தாளர்கள் அனைவருக்கும் ராஜமார்த்தாண்டனைத் தெரியும். அவரது எழுத்தும் அவரது மதிப்பும் அறிவார்கள். "தினமணி'யில் உதவி ஆசிரியராக, கவிஞராக, கட்டுரையாளராக, விமர்சகராக, அனைவருக்கும் நல்ல நண்பராக இருந்ததுடன், பரந்துபட்ட வாசிப்பு உள்ளவராகவும் இருந்தார். திருவல்லிக்கேணியில் அவர் தங்கியிருந்த மேன்ஷன் அறையில் அவரது கட்டிலை புத்தகங்கள் மட்டுமே ஆக்கிரமிப்பு செய்திருந்தன. இலக்கியத்தில் பன்முக ஆளுமை இருந்தும்கூட அவர் தனக்கான இடம் என்று கவிதையை மட்டுமே தேர்வு செய்துகொண்டார். தமிழ்க் கவிதை யார் எழுதினாலும் விருப்புவெறுப்பு இல்லாமல் அவர் படித்தார், சிறந்த கவிதைகளை அடையாளம் காட்டினார், விமர்சித்தார். புதுக் கவிதையில் ஆர்வம் காட்டியபோதிலும் அவர் சங்க இலக்கியத்தை முழுமையாக அறிந்தவர். தமிழ் எம்.ஏ. படித்தவர். புதுமைப்பித்தன் பற்றி முனைவர் பட்ட ஆய்வுக்கட்டுரை எழுதி, ஆனால் அதில் சில இடங்களை மாற்றி எழுதும்படி வழிகாட்டுநர் சொன்னபோது, அதை மறுத்து பட்டம் பெறாமலேயே வெளியேறிவர். சமரசம் செய்துகொண்டால், தமிழ்ப் பேராசிரியராக வாழ்க்கை நடத்த முடியும் என்பது தெரிந்திருந்தும், அவர் தன் மனம் ஏற்காததை செய்யத் துணிந்ததில்லை. இந்த நேர்மை அவரது விமர்சனங்களிலும் தொடர்ந்தது -கடைசிவரை. புதுமைப்பித்தன் மீது அவருக்கு மாறாக் காதல் உண்டு. புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த மாபஸôன் கதைகள் சில, அவரது கதைத் திரட்டில் கலந்துபோனதை அடையாளப்படுத்தியவர். புதுமைப்பித்தனின் வாழ்க்கை மற்றும் இலக்கியம் பொருத்தவரை ஒரு நடமாடும் தகவல் பேழையாக இருந்தார். தன் சொந்தப் பணத்தில் "கொல்லிப்பாவை' இலக்கிய சிற்றிதழை பல ஆண்டுகள் நடத்தி வந்தார். பொருளாதார நெருக்கடியால் அதை நிறுத்திவிட்டு, வேலை தேடியபோது, அவ்வேளையில் அவரால் பிழை திருத்துநராகத்தான் "தினமணி' மதுரைப் பதிப்பில் சேர முடிந்தது. நாகர்கோயிலில் சுந்தர ராமசாமி நடத்திய "காகங்கள்' அமைப்பு போல, மதுரையில் "சந்திப்பு' என்ற இலக்கிய அமைப்பை ராஜமார்த்தண்டன் நண்பர்களுடன் சேர்ந்து நடத்தினார். இந்த அமைப்பில் மிக நல்ல நிகழ்வுகளும், இலக்கியவாதிகளின் உரைகளும், புத்தக அறிமுகங்களும் இடம்பெற்றன. அவரது தமிழ் அறிவையும் எழுத்தாற்றலையும் பரந்துபட்ட வாசிப்பையும் அங்கீகரித்து, அன்றைய தமிழ்மணியை (4 பக்க தனி இணைப்பு) தயாரிக்கும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. தமிழ்மணி பின்னர் நிறுத்தப்பட்டபோது, ராஜமார்த்தாண்டன் தினமணி கதிரில் உதவி-ஆசிரியராக சென்னையிலேயே இருந்தார். அவரது கவிதைகளை வெளியிட சிற்றிதழ்களும், வெகுஜன இதழ்களும் தயாராக இருந்தாலும், அதற்காக அவர் கவிதைகள் எழுதியதில்லை. அவரது படைப்புகள் மிகமிகக் குறைவு. எது கவிதை என்பதில் அவருக்கு மிகவும் கறாரான வரையறை உண்டு. அதற்காக கவித்துவம் இல்லையென வசை பாடியதில்லை. தன் கருத்தை வலுவாகவும் ஆனால் மென்மையாகவும் மட்டுமே முன்வைத்தவர். தகுதி இருந்தால் மட்டுமே அதைப் பாராட்டினார் என்பதால்தான் இன்று பாராட்டுக்கு தகுதியுடையவராக இருக்கிறார். ஆளுமை மிக்க மனிதர்கள் பலரிடமும் அவர் நெருக்கமாக பழகியபோதிலும், உரிமை எடுத்துக்கொண்டதுமில்லை, அவர்களுக்காக எதற்காகவும் சமரசம் செய்துகொண்டதுமில்லை. அவர்கள் யாராக இருந்தாலும் இலக்கியத்தை விமர்சிப்பதில் அவர் விலைபோனதில்லை. அந்த நேர்மைதான் அவரை, இரு எதிர் துருவங்களாக நின்ற சுந்தர ராமசாமி, கவிஞர் பிரமிள் ஆகிய இருவரிடமும் நட்பாக இருக்க வைத்தது. இருவருக்கும் ஏற்பட்ட கருத்து மோதலின் வேர்கள் கிளைத்த இடம் தெரிந்திருந்தாலும் அதைப்பற்றி அவர் யாரிடமும் பேசியதே கிடையாது. இதே நேர்மையைத்தான் தான் பழகிய சாதாரண மனிதர்களிடமும் காட்டினார். அவரால் பாதிக்கப்பட்டவர் யாரும் கிடையாது. அவரால் மனம் நொந்தவர், பதவி உயர்வை இழந்தவர் என யாருமே கிடையாது. சுயநலமில்லாத மனிதர். அவருடன் பழகியும் அவரை நல்ல கவிஞனாக அறியாதவர்களும் அவரை நல்ல மனிதராக அறிந்திருந்தனர். டாம் மோரே தன்னைப் பற்றித் தானே குறிப்பிடுகையில், I drank like a fish and wrote like a devil என்பார். ஆனால், ராஜமார்த்தாண்டன் ஒரு "ஏஞ்சல்' போல எழுதினார். குறைவாக, ஆனால் நிறைவாக! அவரைப் பொருத்தவரை........அண்ணாந்து வான்நோக்குஅதிசயங்களில் மெய்மறகுனிந்து பூமியைத் தரிசி ஏதேனும் பிடிபட்டால்எடுத்துச்சொல்இல்லையேல்உண்டுறங்கி ஓய்வுகொள். நண்பா, நீ பக்கத்தில் இருந்தும் படிக்கப்படாத கவிதை. தொலைதூரம் சென்றுவிட்ட பின்னும் நினைவில் நிலைத்திருக்கும் நிஜம்!- இரா. சோமசுந்தரம்தினமணி முன்னாள் முதுநிலை உதவி ஆசிரியர் ராஜமார்த்தாண்டன் விபத்தில் மரணம்நாகர்கோவில், ஜூன் 6: "தினமணி' முன்னாள் முதுநிலை உதவி ஆசிரியர் ராஜமார்த்தாண்டன் (61) நாகர்கோவிலில் சனிக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் இறந்தார். அவருக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். கன்னியாகுமரியை அடுத்துள்ள சந்தையடியைச் சேர்ந்த இவர் சனிக்கிழமை நாகர்கோவில் செட்டிக்குளம் கே.பி. சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை பொதுமக்கள் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். மோட்டார் சைக்கிளில் வந்தவர் நிற்காமல் சென்றுவிட்டதால் அவர் யார் என்ற விவரம் தெரியவில்லை எனப் போலீஸôர் தெரிவித்தனர். இதுகுறித்து நாகர்கோவிலைச் சேர்ந்த சுந்தரம் (43) கொடுத்த புகாரின்பேரில், கோட்டார் காவல் நிலைய ஆய்வாளர் சென்னகேசவன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.
கருத்துகள்

ஒரு நல்ல படைப்பாளி தனக்குரிய சிறப்புகளைப் பெறாமலேயே மறைந்து விட்டார். தினமணியின் அஞ்சலி்ச் செய்தி அவரை நல்லமுறையில் நினைவு கூர்வதாக உள்ளது. அவரது 'விமர்சனம்' குறித்து அவருடன் சில முறை முன்பு தொலைபேசி வாயிலாகப் பேசியுள்ளேன். அமைதியாகக் கேட்டுவிட்டு அல்லது மகிழ்ச்சியைத் தெரிவித்து விட்டு நிறைகுறைகளால் மேலும் மெருகேற்றப்படுவதாகக் கூறுவார். தினமணியின் வாசகர்கள் சார்பாக என் அஞ்சலி!

துயரத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/7/2009 4:46:00 AM
Post a Comment