Sunday, August 09, 2009

கல்வெட்டறிஞர் கா.ம.வேங்கடராமையா



தஞ்சாவூர் அரண்மனையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் 1981-இல் தொடங்கப்பட்டு, செயல்பட்டுக் கொண்டிருந்தது. அருங்காட்சியகம், ஓலைச்சுவடித்துறை, அரிய கையெழுத்துச் சுவடித்துறை, கல்வெட்டியல்துறை ஆகிய துறைகள் செயல்பட்டுக் கொண்டிருந்தன. ஒருநாள் தமிழ்ப் பேராசிரியரும், கல்லூரி முதல்வரும், கவிஞருமான சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்தார். அவர் தம் காலணியை அறைக்கு வெளியில் விட்டுவிட்டு அரிய கையெழுத்துச் சுவடித்துறை அறைக்குள் நுழைந்தார். அந்த அறையில் இருந்த பேராசிரியரை நெடுஞ்சாண் கிடையாக நிலந்தோய்ந்து விழுந்து வணங்கினார். அதன் பின்னர் சுமார் 1 மணி நேரம் வரை அங்கிருந்த இருக்கையில் அமராமல் பணிவுடன் கைகட்டி, வாய் புதைத்து அப்பேராசிரியர் சொன்னதைக் கேட்டுச் சரி, ஆம் என்ற பதில்களைச் சொல்லி வந்தார். பேராசிரியர் சொன்ன எதற்கும் எவ்வித மறுப்பும் சொல்லவில்லை. இந்நிகழ்வுகளைக் கண்ட எனக்கு உடம்பு சிலிர்த்தது. அந்தக் கல்லூரி முதல்வர் வேறு யாருமில்லை. அவர் பேராசிரியர் ம.வே.பசுபதி. அவர் காண வந்த பேராசிரியர் அவரது தந்தையாரான கா.ம.வேங்கடராமையா ஆவார்.சென்னை-பூவிருந்தவல்லியை அடுத்த காரம்பாக்கம் என்னும் சிற்றூரில் 1912-ஆம் ஆண்டு ஏப்ரல் 4-ஆம் தேதி, கா.கிருஷ்ணையர்-வேங்கடசுப்பம்மாள் தம்பதிக்கு மகவாகப் பிறந்தார் வேங்கடராமையா. இவர் தாய்மொழி தெலுங்கு.சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் படித்தார். செங்கல்பட்டிலுள்ள தூய கொலம்பா உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். தமிழ் ஆர்வம் காரணமாக பி.ஓ.எல். தேர்ச்சி பெற்றார். ஆங்கிலத்தில் முதுகலைத் தேர்விலும் வென்றார்.1947 முதல் 1972 வரை 25 ஆண்டுகள் திருப்பனந்தாள் காசி மடத்துச் செந்தமிழ்க் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றினார். அந்நாளைய தமிழக ஆளுநர் கே.கே.ஷா தொடங்கிய தமிழ், சம்ஸ்கிருதம் மற்றும் இந்திய மொழிகள் ஆய்வு நிறுவனத்தில் ஏறத்தாழ மூன்றரை ஆண்டுகள் ஆராய்ச்சியாளராக இருந்தார். அங்கிருந்த காலத்தில், பன்மொழி இலக்கண ஒப்பீட்டு ஆய்வுகளைச் செய்து வந்தார். அதன் பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் திருக்குறள் இருக்கையில் மூன்றரை ஆண்டுகள் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினார்.1981-இல் தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டபோது அரிய கையெழுத்துச் சுவடித்துறையின் முதல் தலைவராகப் பொறுப்பேற்று, ஏறத்தாழ 5 ஆண்டுகள் வரை பணியாற்றினார். நிறைவாகத் திருவனந்தபுரத்தில் உள்ள பன்னாட்டுத் திராவிட மொழியியல் கழகத்தில் பணி புரிந்தார்.சிறந்த வைதிக வைணவக் குடும்பத்தில் பிறந்த இவர், சைவ சமயத்தில் ஆழ்ந்த ஈடுபாடும், ஆழங்காற்பட்ட அறிவும் உடையவராகத் திகழ்ந்தார். அத்துடன் சைவ சமயச் சொற்பொழிவாளராய், திருமுறைகளில் புலமையும் கொண்டிருந்தார். திருமுறைகளை ஒட்டியே இவரது பெரும்பாலான ஆய்வுகள் அமைந்தன.வேங்கடராமையா, தமிழுக்கும் சமயத்திற்கும் ஆற்றிய பணிகள் ஏராளம். ஆய்வுப் பேழை, கல்வெட்டில் தேவார மூவர், இலக்கியக் கேணி, கல்லெழுத்துக்களில், சோழர் கால அரசியல் தலைவர்கள், திருக்குறள் உரைக்கொத்து, திருமுருகாற்றுப்படை உரைக்கொத்து, திருக்குறள் குறிப்புரை, பன்னிரு திருமுறைப் பதிப்பு, கந்தபுராணப் பதிப்பு, திருவிளையாடற்புராணப் பதிப்பு, தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும், தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு, சிவனருள் திரட்டு (500-பாடல்களுக்கு உரை, ஆங்கில மொழிபெயர்ப்பு), நீத்தார் வழிபாடு, தஞ்சை மராட்டிய மன்னர் கால மோடி ஆவணமும் தமிழாக்கமும், திருக்குறள் பரிப்பெருமாள் உரையும் ஆய்வுரையும், திருக்குறளும் - நாலாயிர திவ்வியப் பிரபந்தமும், மும்மொழி வெண்பாக்களில் நாயன்மார் வரலாறு, பெரியபுராணமும் - திருக்குறளும், திருக்குறள் சமணர் உரை போன்ற பல நூல்களை எழுதியும் பதிப்பித்தும் உள்ளார்.""திருமுறைகளுக்கு உரை எழுதினால் இறந்து விடுவார்கள்'' என்று மக்கள் நம்பிக்கை கொண்டிருந்த காலத்தில், 1949-இல் காரைக்கால் அம்மையார் எழுதிய அற்புதத் திருவந்தாதிக்குக் குறிப்புரை எழுதிப் பதிப்பித்தார். இந்நூல்தான் இவர் பதிப்பித்த முதல் நூல். காசித் திருமடத்தின் வெளியீடாக வந்தது. இவர் பதிப்பித்த அனைத்து நூல்களிலும் நூலாசிரியர் வரலாறு, நூல் பற்றிய செய்திகள், கல்வெட்டில் ஏதேனும் குறிப்புகள் கிடைப்பின் அவற்றையும் குறிப்பிடுவது வழக்கமாகும்.காசி மடத்தின் வெளியீடுகளுள் திருக்குறள் உரைக் கொத்துப் பதிப்புகள் பதிப்பு வரலாற்றில் குறிப்பிடத்தக்கன. திருக்குறள் உரைக்கொத்தைப் பதிப்பிக்கும்போது, எம்.எஸ்.பூர்ணலிங்கம் பிள்ளை, வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர், எம்.ஆர்.இராசகோபால ஐயங்கார், வ.வெ.சு.ஐயர், ரெவரண்ட் லாசரஸ் ஆகியோரின் ஆங்கில மொழிபெயர்ப்புகளை ஒப்பிட்டுத் தகுந்த மொழிபெயர்ப்பைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு குறளுக்கும் கீழே வெளியிட்டார்.தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தின் மூலமாகத் திருக்குறளுக்குச் சைனர் எழுதிய உரையைப் பதிப்பித்தார். இதற்காக இவர் சைன சமயத்தைச் சார்ந்த பலரிடமும் சென்று அச்சமயம் சார்ந்த பல செய்திகளைக் கேட்டு நன்கறிந்தார். பல்வேறு பதிப்புகளையும் ஒப்பு நோக்குதல், மூல ஓலையுடன் கையெழுத்துப் படியை ஒப்பு நோக்குதல் முதலான பலவற்றைத் தேவையான வகையில் செப்பனிட்டு விரிவான முறையில் ஆய்வு முன்னுரை எழுதி, திருத்தமான முறையில் அந்நூலைப் பதிப்பித்தார். பெரும்பாலும் இவர் எழுதிய நூல்களிலும், கட்டுரைகளிலும் முன்பு எவரும் எழுதாத செய்திகளையே தருவதைக் காணலாம். "தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்' என்ற நூலில், தஞ்சாவூர் மராட்டியர்தம் ஆட்சிக்குட்பட்ட சமுதாயத்துக்கு மராட்டிய மன்னர்கள் செய்த நன்மைகள், கலைச் சிறப்புகள், அக்காலத்திய பழக்க வழக்கங்கள், அரசியல் நிலைமைகள் போன்ற பலவற்றை மோடி ஆவணங்கள், கல்வெட்டுச் சான்றுகள், இலக்கியச் சான்றுகள் போன்றவற்றின் துணையுடன் ஆராய்ந்து எழுதியுள்ளார். மெக்கன்சி சுவடி, போனஸ்லே வம்ச சரித்திரம் போன்றவற்றின் துணைகொண்டு இந்நூல் பதிப்பிக்கப்பட்டுள்ளது.இலக்கணம், இலக்கியம், கல்வெட்டு, வரலாற்றுப் புலமை, ஆங்கிலம், வடமொழி, தெலுங்கு மொழிப் புலமையும் அறிவும் கொண்டவர் கா.ம.வேங்கடராமையா. இவர் கல்வெட்டாராய்ச்சிப் புலவர், செந்தமிழ்க் கலாநிதி, தமிழ் மாமணி முதலான பல்வேறு பட்டங்களைப் பெற்றுள்ளார். காலம் தவறாமை, நேரத்தை வீணாக்காமல் பலதுறை அறிவு நூல்களைக் கற்றல், ஐயம் என்று தன்னை நாடி வந்தவர்க்கு, தாம் அறியாத செய்தியாக இருந்தாலும் அரிதின் முயன்று அறிந்து விடை கூறுதல், கடமை உணர்வு, கண்ணியத்துடன் நடந்து கொள்ளுதல் ஆகிய பண்பு நலன்கள் இவரிடம் இருந்தன.காலத்தை உயிரெனக் கருதினார். உயிர் போனால் திரும்ப வராது என்பதை அடிக்கடி கூறுவார். "காலம் பொன் போன்றது' என்று கூறக்கூடாது; "காலம் உயிர் போன்றது' என்பார். எந்த ஒரு செயலைச் செய்தாலும் அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும் தன்மை மிக்கவர் வேங்கடராமையா.வேங்கடராமையா, 1995-ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி இறைநிழல் அடைந்தார். இன்றைக்கு கா.ம.வேங்கடராமையா இல்லாவிட்டாலும் அவர் ஆற்றிய பணிகள், பதிப்பித்த நூல்கள், எழுதிய நூல்கள் முதலானவை தமிழ் உள்ளவரை என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

No comments: