கர்னாடக இசையின் மும்மூர்த்திகளைப் போலத் தமிழ் இலக்கிய ஆய்வாளர்கள் மூவரை வரிசைப்படுத்திச் சொன்னால் அவர்கள், எஸ்.வி.பி. என்று அழைக்கப்பட்ட எஸ்.வையாபுரிப் பிள்ளை, ஆர்.பி.எஸ். என்று பரவலாகக் அறியப்படும் ரா.பி.சேதுப்பிள்ளை மற்றும் தெ.பொ.மீ. என்று மரியாதையுடன் கூப்பிடப்படும் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் ஆகிய மூவராகத்தான் இருக்கும்.
மொழியியலில் தெ.பொ.மீ.யும், இலக்கிய ஆய்வில் ஆர்.பி.எஸ்.சும் தனித்துவம் காட்டினார்கள் என்றால் எஸ்.வி.பி.யின் பங்களிப்பு கால ஆராய்ச்சி மற்றும் தமிழில் பேரகராதித் தொகுப்பு என்று பன்முகப்பட்டதாக இருந்தது.
வையாபுரிப்பிள்ளை தமிழ் ஆராய்ச்சியில் விஞ்ஞான பூர்வமான பார்வை கொண்டு ஆய்வு செய்தவர். ஓர் இலக்கியம் பற்றி நன்கு அறிந்துகொள்ள வேண்டுமானால், அந்த இலக்கியம் தோன்றிய காலம் பற்றிய அறிவு முக்கியமானது என்று கருதி, இலக்கியம் தோன்றிய கால ஆராய்ச்சியில் தனி கவனம் செலுத்தியவர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள சிக்கநரசய்யன் பேட்டை என்ற ஊரில் 1891-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி சரவணப்பெருமாள்-பாப்பம்மாள் தம்பதிக்கு மகனாய்ப் பிறந்த வையாபுரிப்பிள்ளை, பாளையங்கோட்டை புனித சவேரியர் பள்ளியிலும், திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியிலும் பிறகு சென்னை கிறிஸ்துவக் கல்லூரியிலும் படித்துப் பட்டம் பெற்றவர். அந்த ஆண்டு சென்னை மாகாணத்திலேயே தமிழில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்று "சேதுபதி தங்க மெடல்' பெற்ற பெருமைக்குரியவரும் அவரே.
தமிழில் ஆர்வம் அதிகமிருந்தும் திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் சேர்ந்து படித்து வழக்கறிஞரானது மட்டுமல்ல, ஏழு ஆண்டுகள் வழக்கறிஞராகவும் பணிபுரிந்தார் அவர். பிறகு மூன்று ஆண்டுகள் வையாபுரிப் பிள்ளை திருநெல்வேலியிலும் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
வையாபுரிப் பிள்ளையின் நெல்லை வாழ்க்கையில் அவருக்கு நெருங்கிய நண்பர்களாக "ரசிகமணி' டி.கே. சிதம்பரநாத முதலியார், நீலகண்ட சாஸ்திரியார், பேராசிரியர் சாரநாதன், பெ. அப்புசாமி போன்றோர் இருந்திருக்கிறார்கள் என்பதும், "ரசிகமணி'யின் "வட்டத் தொட்டி' ஏற்பட இவர்களது ஆரம்பகால இலக்கியச் சர்ச்சைகள்தான் பிள்ளையார் சுழி இட்டது என்பதும் பரவலாகத் தெரியாத விஷயம்.
வழக்கறிஞராகப் பணியாற்றி வந்த காலத்தில், வையாபுரிப் பிள்ளை எழுதிப் பிரசுரமான பல கட்டுரைகளும், இலக்கிய ஆய்வுகளும் அவரை அறிஞர்கள் மத்தியில் பேசப்பட வைத்தன. உ.வே. சாமிநாதய்யருக்குப் பிறகு பழந்தமிழ் இலக்கியங்களைத் தொகுத்து, ஆய்வு செய்து வெளியிட்ட பெருமை எஸ். வையாபுரிப் பிள்ளையைத்தான் சாரும். ஓலைச் சுவடிகளைப் பதிப்பித்ததுடன் நிற்காமல் அந்த இலக்கியங்களுக்குக் கால நிர்ணயம் செய்ததிலும் வையாபுரிப் பிள்ளைக்குப் பெரும் பங்கு உண்டு.
1926-ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் உருவாக்கி வந்த தமிழ் அகராதியில் (ஏழு தொகுதிகள்) பதிப்பாசிரியர் பொறுப்பேற்றார் வையாபுரிப்பிள்ளை. 1936-ஆம் ஆண்டு முதல் சென்னைப் பல்கலைக்கழக தமிழ் ஆராய்ச்சித்துறைத் தலைவராக விளங்கினார். 1946-ஆம் ஆண்டு வரை அப்பணியில் சிறப்பாகச் செயல்பட்டு, பல ஆராய்ச்சியாளர்களை உருவாக்கினார்.
வையாபுரிப் பிள்ளை திருவிதாங்கூர் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராக இருந்த காலத்தைப் பொற்காலம் என்றுதான் கூற வேண்டும். "வள்ளல்' அழகப்பச் செட்டியாரின் இல்லத் திருமண விழாவுக்கு அன்றைய திருவிதாங்கூர் திவான் சி.பி.ராமசாமி அய்யர் போனபோது, தமிழுக்கெனத் திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வுக் கட்டில் நிறுவ ஒரு லட்சம் ரூபாய் அறக்கட்டளையாகக் கொடுத்தார். அப்படி தொடங்கப்பட்ட தமிழ்த் துறையின் முதல் தலைவராக மு. ராகவையங்கார் நியமிக்கப்பட்டார். ஆறு ஆண்டுகள் பணிபுரிந்து அவர் ஓய்வு பெறும்போது தனக்குப் பிறகு அந்தப் பதவிக்குத் தகுதியானவர் எஸ். வையாபுரிப் பிள்ளை மட்டுமே என்பது ராகவையங்காரின் தேர்ந்த முடிவு.
மு. ராகவையங்காரின் அழைப்பை வையாபுரிப் பிள்ளை ஏற்றார் எனினும், ஒரு நிபந்தனை விதித்தார். "நான் விண்ணப்பிக்க முடியாது. அழைத்தால் ஏற்பேன்' என்பது எஸ்.வி.பியின் பதில். அந்தக் கடிதத்தின் அடிப்படையில் மு. ராகவையங்கார் செய்த பரிந்துரையின் பேரில், திருவிதாங்கூர் பல்கலைக்கழக ஆளுநர் குழு விண்ணப்பமே இல்லாமல் எஸ். வையாபுரிப் பிள்ளையை தமிழ்த் துறைத் தலைவராக நியமித்து ஆணை அனுப்பியது.
சுமார் நான்கு ஆண்டுகள் திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவராக வையாபுரிப் பிள்ளை இருந்த காலகட்டத்தில்தான் மலையாள மொழி லெக்சிகன் பதிப்பிக்கப்பட்டது. அதன் உறுப்பினாரகவும் பணியாற்றிய பெருமை வையாபுரிப் பிள்ளைக்கு உண்டு. இந்தக் காலகட்டத்தில்தான், பின்னாளில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முதல் துணைவேந்தராக விளங்கிய வ.அய். சுப்பிரமணியம், ஆய்வு மாணவராக வையாபுரிப் பிள்ளையிடம் பணியாற்றி அவரது வாரிசு என்கிற பெயரையும் பெற்றார்.
வையாபுரிப் பிள்ளையிடம் ஆய்வு மாணவராக வ.அய். சுப்பிரமணியம் சேர்ந்தபோது, அவருக்குத் தரப்பட்ட முதல் பணி, பிரிட்டிஷ் கலைக் களஞ்சியத்திலிருந்து காந்தத்தைப் பற்றிய செய்திகளைத் திரட்டித் தருவது. காந்தத்தைப் பற்றிய செய்திகளை எஸ்.வி.பி. கேட்டதற்குக் காரணம் இருந்தது. காந்தம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில்தான் கண்டுபிடிக்கப்பட்டது என்று கலைக்களஞ்சியத்தில் கூறப்பட்டிருந்தது. காந்தத்தைப் பற்றிக் கூறும் கலித்தொகை, அதனால் 2ஆம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் தோன்றியிருக்க வேண்டும் என்று மு. ராகவையங்காரிடம் எஸ்.வி.பி. விளக்கியதாக சுப்பிரமணியம் குறிப்பிடுகிறார்.
சங்க கால மக்கள் அறிந்த மற்றும் பயன்படுத்திய உலோகங்களின் அடிப்படையில் எஸ்.வி.பி. காலநிர்ணயம் செய்வது சரிதானா? கலைக் களஞ்சியத்தின் செய்தி தவறாக இருந்தால் கால நிர்ணயம் தவறாகுமே? என்ற கேள்விக்கு, எஸ்.வி.பியின் பதில், ""அந்த செய்தி தவறு என்று நிரூபணம் ஆகும்வரை அந்தச் செய்தியை ஏற்றுக் கொள்வதுதானே நியாயம்?''
தேவநேயப் பாவாணர் போன்றவர்கள், வையாபுரிப் பிள்ளை தமிழ் இலக்கியங்களின் காலத்தை சரியாக கணிக்கவில்லை என்றும், கிறிஸ்துவுக்கு முற்பட்ட தமிழ் இலக்கியத்தைப் பிற்பட்ட காலத்தது என்று கூறுவதாகவும் கண்டித்தனர். விமர்சனங்கள் எஸ்.வி.பியை சற்றும் பாதிக்கவில்லை. தமிழ் நூல்களைப் பிற்காலமாக வையாபுரிப் பிள்ளை கூறியதற்குக் காரணம் தெளிவுகளும், அவற்றிற்குரிய காலநிலையும்தான். தமது ஆய்வை அவர் முற்ற முடிந்த ஆய்வாகக் கருதவில்லை.
வையாபுரிப் பிள்ளையின் மேஜையில் எப்போதும் மானியர் வில்லியம்சின் சம்ஸ்கிருத-ஆங்கில அகராதி இருக்கும். ""எந்தச் சான்றையும் கூடிய மட்டிலும் மூல நூலிலிருந்து அறிந்திட வேண்டும். ஆய்வில் பிறர் சொல்லை நம்புவது தகாது. சம்ஸ்கிருதச் சான்றுகளை நாமே படித்துப் பொருள் அறிதல் நல்லது. அதனால் தமிழ் ஆராய்ச்சியாளர்கள் நிச்சயம் சம்ஸ்கிருதம் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்'' என்பது எஸ்.வி.பியின் கருத்து.
பாராமல் படிக்கும் பழக்கம் எஸ்.வி.பிக்கு இல்லை. தான் கண்ட சான்றுகளையும், உதவும் செய்திகளையும் 300 பக்க அளவிலான ஒரு தடித்த நோட்டில் தனது கையெழுத்தில் குறித்துக் கொள்வார். கட்டுரையோ, நூலோ எழுதும்போது, அந்த நோட்டைப் புரட்டி, அதில் காணும் சான்றுகளைப் பயன்படுத்திக் கொள்வார். அவர் காலமான பின் அந்த நோட்டு எங்கே போனது என்று யாருக்கும் தெரியாது.
ஒவ்வொரு கட்டுரையையும் தனது கைப்படத்தான் எழுதுவார். ஆங்கிலக் கட்டுரைகளைத் தட்டச்சு செய்து, பலமுறை சரிசெய்து பிழையின்றி வெளியிட முயல்வார். பல அறிஞர்கள் ஆங்கிலக் கட்டுரைகளைப் படிப்பதால் மிகக் கவனமாக வாதங்களை உருவாக்க வேண்டும் என்பார்.
தமிழின் பழம் பெருமைக்கு எதிரானவர் எஸ்.வி.பி. என்று அவரை திராவிடக் கட்சிகள் கடுமையாக விமர்சித்தபோது, அதை அவர் சற்றும் சட்டை செய்யவில்லை. ரா.பி. சேதுப்பிள்ளையைப் போலவே கம்பனின் கவிநயத்தில் தன்னைப் பறிகொடுத்த வையாபுரிப் பிள்ளை, "ரசிகமணி' டி.கே.சியுடன் இணைந்து திருநெல்வேலியில் கம்பன் கழகத்தை உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்தார். கம்பனை ஆதரித்தார் என்பதால் இருட்டடிப்பு செய்யப்பட்ட பல தமிழறிஞர்களில் வையாபுரிப் பிள்ளையும் ஒருவர்.
மகாகவி சுப்பிரமணிய பாரதி மற்றும், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. ஆகிய இருவரிடமும் வையாபுரிப் பிள்ளைக்கு நெருங்கிய அறிமுகம் இருந்தது. தனது சிறைவாசத்துக்குப் பிறகு, அரசியல் வாழ்வில் வெறுப்புற்றிருந்த வ.உ. சிதம்பரனார், ஏட்டிலிருந்த இளம்பூரணரின் தொல்காப்பிய உரையைப் பதிப்பிக்கும் நோக்கத்தோடு படியெடுத்தார். அதனை எஸ்.வி.பி.யிடம் காட்டி செப்பம் செய்தார். எஸ்.வி.பியையும் அதன் பதிப்பாசிரியராகத் தன்னுடன் இருக்குமாறு கேட்டதையும், ஆனால் எஸ்.வி.பியோ நீங்களே பதிப்பாசிரியராக இருந்தால் போதும் என்று மறுத்து விட்டதாகவும் அந்த உரைப் பதிப்பின் முன்னுரையில் வ.உ.சி. நன்றியுடன் குறிப்பிட்டிருக்கிறார்.
சற்று குள்ளமான உருவம்; நீண்ட நேரப் படிப்பால் வீங்கிய இமைகளையுடைய கண்கள்; மாநிறம்; நல்ல விஷயங்களைக் கேட்டால் கடகடவென்று உரக்கச் சிரிக்கும் சுபாவம்; மனம் திறந்து பேசும் நெருக்கம்; ஆய்வுக்கென்றே தன்னை அர்ப்பணித்த அந்த மாமேதை தெளிவின் அடிப்படையில் மட்டுமே ஆய்வுகள் அமைந்திட வேண்டுமென்று வற்புறுத்தியவர். நல்ல ஆய்வாளன் பாராட்டையோ, மவுசையோ தேடிப் போக வேண்டிய அவசியமில்லை; அவை தாமாக வரும் என்று அழுத்தமாக நம்பியவர்.
தனது வாழ்நாளில் அவர் படித்து முடித்த புத்தகங்கள் கணக்கில் அடங்கா. தனது வீட்டில் இருந்த நூலகத்தில் மட்டும் 2943 புத்தகங்கள் இருந்தன. அதுமட்டுமல்லாமல் ஆங்கிலம், தமிழ், பிரெஞ்சு, ஜெர்மனி, மலையாளம் போன்ற மொழிகளிலான குறிப்புகளும், ஓலைச்சுவடிகளும் நூற்றுக்கணக்கில். அவை அனைத்தையும் கல்கத்தாவில் இருந்த தேசிய நூலகத்துக்கு நன்கொடையாக அளித்துவிட்டார் வையாபுரிப் பிள்ளை.
சங்கத் தமிழ் வார்த்தைகளுக்கு விளக்கங்கள் நல்கும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதியுடன் வையாபுரிப் பிள்ளையின் பங்களிப்பு முடிந்துவிடவில்லை. நாற்பதுக்கும் அதிகமான நூல்களையும் நூற்றுக்கணக்கான ஆய்வுகளையும் கட்டுரைகளையும் எழுதிக் குவித்தவர் அவர். "மனோன்மணியம்' உரையுடன் தொடங்கிய அவர் 1955-ல் திவ்யப் பிரபந்தத்தை உரையுடன் பதிப்பித்துத் தமிழுக்குப் பெரும் தொண்டு ஆற்றினார். கம்பராமாயணத்துக்கு உரை எழுதிப் பதிப்பிக்க வேண்டும் என்கிற அவரது அவா மட்டும் நிறைவேறாமலே போய்விட்டது.
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ்மொழி ஆய்வில் ஒப்பாரும் மிக்காரும் அற்ற மிகப்பெரிய ஆய்வாளரான வையாபுரிப் பிள்ளை 1956 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 ஆம் தேதி தனது 65வது வயதில் இயற்கை எய்தியபோது, தமிழ் அழுதது... தமிழ்த்தாய் அழுதாள்...
வையாபுரிப்பிள்ளையின் மறைவு குறித்து, ""ஸ்ரீவையாபுரிப்பிள்ளை காலமானது தமிழ் உலகிற்கு ஈடு செய்ய முடியாத நஷ்டம். நிறைகுடம்; நற்பண்புகள் அனைத்தின் உறைவிடம். விஞ்ஞானியைப் போல உண்மையைக் கண்டறிவதையே லட்சியமாகக் கொண்டு இலக்கியப் பணியாற்றிய ஆராய்சியாளர். தமக்குப் பிடித்தமான ஒரு நிலைக்கு ஏற்ப ஆராய்ச்சியை இழுத்துப் பொருத்தும் தன்மைக்கு நேர் எதிரிடையானவர். வாழ்க்கையைப் போலவே இலக்கிய சேவையிலும் அறநெறி நின்று அரும்பணியாற்றியவர்'' என்று "தினமணி' (18.2.1956) நாளிதழ் தலையங்கமே எழுதித் தனது இரங்கலைத் தெரிவித்தது என்றால், அந்த மாமேதை எத்தகையவர் என்பதை அறிந்து கொள்ளலாம்.
Saturday, September 05, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment