Saturday, June 27, 2009

திறனாய்வுச் செம்மல் மு.சி.பூரணலிங்கம் பிள்ளை

First Published : 14 Jun 2009 01:32:00 AM IST


தமிழ் மொழியின் தொன்மையையும் உயர்வையும் பிற மொழியினரும் அறியும் வண்ணம் செய்தவர் பூரணலிங்கம் பிள்ளை. இவர் நம் மண்ணின் மரபுகளையும் மக்களின் அறிவியல் சிந்தனைகளையும், இயற்கையோடு இணைந்த வழிபாட்டு நெறிமுறைகளையும் உயர்த்திப் பிடித்தார். பிற்காலத்தில் திராவிட இயக்கம் கையிலெடுத்த பல கொள்கைகளுக்கு இவர்தான் முன்னோடியாகத் திகழ்ந்தார் எனலாம்.திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வளமான நன்செய் வயல்கள் சூழ்ந்த முந்நீர்ப்பள்ளம் என்னும் கிராமத்தில் 1866-ஆம் ஆண்டு மே 25-ஆம் தேதி பிறந்தார். இவ்வூரில் எழுந்தருளியுள்ள சிவனது திருப்பெயராகிய பூரணலிங்கம் என்னும் பெயரே இவருக்குச் சூட்டப்பட்டது. இவருடைய பாட்டனார் பெயரும் பூரணலிங்கம் தான். முந்நீர்ப்பள்ளத்தைச் சேர்ந்த சைவர்கள் பூரணம் என்று பெயர் வைத்துக் கொள்வது இயல்பு.பள்ளிப் படிப்பை முடித்தவுடன் பரமக்குடி நீதிமன்றத்தில் எழுத்தராகப் பணியாற்றினார். பின் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் மேற்படிப்பை முடித்தார். கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் பாளையங்கோட்டை இந்துக் கல்லூரி, சென்னை கிறிஸ்தவக் கல்லூரி, கோயம்புத்தூர் புனித மைக்கேல் கல்லூரி, மதுரை அமெரிக்கன் கல்லூரி, திருச்சி எஸ்.பி.ஜி. கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றினார்.ஆங்கிலப் பேராசிரியராக இருந்த பூரணலிங்கம் பிள்ளை, தமிழ்ப் பற்றும், தமிழ் இன உணர்வும் கொண்டு வாழ்ந்ததுடன் தமிழுக்குப் பெரும் பணியும் ஆற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 1902-ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்ப் பாடத்தை நீக்க முயன்றபோது பூரணலிங்கம் பிள்ளை அதனைக் கடுமையாக எதிர்த்துத் தடுத்தார்.1885-ஆம் ஆண்டு பூரணலிங்கனார் பரிதிமாற்கலைஞரையும் அழைத்துக் கொண்டு ஹர்சன் பிரபுவைச் சந்தித்து செம்மொழியாகும் தகுதி தமிழுக்கே முழுமையாக உள்ளது என வாதிட்டார். தமிழ்மொழியின் தொன்மையையும், உலக மனித இனத்தை ஒன்றென அன்பு கொள்ளும் நாகரிகத்தையும், இயற்கையோடு இணைந்து சிந்திக்கும் வாழ்வியல் பண்பாட்டுச் சிந்தனைகளையும், பல்வேறு மொழிகளுக்குத் தாயாகிய போதும் தன் தனித்தன்மை குன்றாத இலக்கிய, இலக்கண வளங்களைக் கொண்டு விளங்குவதையும் தொகுத்து அரசுக்கு அவர் மனு அளித்தார். தமிழைச் செம்மொழியாக்க வேண்டிய தேவையை ஊர் ஊராகச் சென்று அவர் முழங்கினார். பூரணலிங்கம் பிள்ளை எப்போதும் படித்துக் கொண்டே இருப்பார். கருணாமிர்தசாகரம் போன்ற அதிகப் பக்கங்களைக் கொண்ட நூல்களைக் கூட முழு மூச்சில் வாசித்து முடிப்பார். இவர் எழுதுவதிலும் வல்லவர். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பணியாற்றியபோது "ஞான போதினி' என்ற மாதப் பத்திரிகையை நடத்தினார். பின்னர், நீதிக் கட்சியினரின் "நீதி' என்ற ஆங்கிலப் பத்திரிகையில் துணை ஆசிரியராகப் பணியாற்றி சமூக நீதிக்காகக் குரல் கொடுத்தார்.தமிழ் நாட்டில் தமிழரின் பண்பாட்டையும், அறிவியல் சிந்தனைகளையும், தொழில் நுட்பங்களையும், மரபுகளையும், பண்பாட்டையும் கற்றுக் கொடுக்கும் வகையில், தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்றைத் தொடங்க வலியுறுத்தி எழுதியும், பேசியும் வந்தார். இவற்றின் பயனாக பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு ராமநாதபுரம் மன்னர் தலைமையில் ஒரு குழுவை அரசு அமைத்தது. அந்தக் குழுவில் இவரும் இடம் பெற்றிருந்தார். அம்முயற்சியின் விளைவே இன்றைய அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.பூரணலிங்கனாரின் படைப்புகளில் சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், குழந்தை இலக்கியம், ஆய்வுக் கட்டுரைகள், மொழி மாற்றம், சொற்பொழிவு எனப் பல வீச்சுகளைக் காண முடிகிறது. இளமையில் கற்ற தமிழ்க் கல்வியும், தமிழறிஞர்களின் நட்பும்தான், இவரைத் தமிழ்ப் பற்றாளராக மாற்றின. மேலப்பாளையம் பள்ளியில் பயிலும்போது சுந்தரம் பிள்ளையிடம் இலக்கணமும், முத்துசாமிப் பிள்ளையிடம் திருக்குறளும் பயின்றார். பிற்காலத்தில் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை, பரிதிமாற்கலைஞர், கோவை சிவக்கவிமணி சுப்பிரமணிய முதலியார் ஆகியோரின் நட்பைப் பெற்றார்.தமிழ் மொழியின் உயர் சிந்தனைகளைப் பிற மொழியாளரும் அறிந்து கொள்ளும் வகையில் பல நூல்களை ஆங்கிலத்தில் எழுதினார். திருக்குறள் முழுவதையும் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்து பன்னிரண்டு பக்கங்களில் ஆராய்ச்சி முன்னுரையும் எழுதினார். திருக்குறள் குறித்துத் திறனாய்வு நூல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். தமிழ் இந்தியா என்ற ஆங்கில நூலில் தமிழ் மொழியின் தொன்மையையும், தமிழரின் உயர்ந்த அறிவியல் சிந்தனைகளையும், பண்பாட்டையும், வரலாற்று ஆதாரங்களோடு சுட்டிக் காட்டியுள்ளார்.திராவிட நாகரிகமே இந்தியா முழுவதும் பரந்து விளங்கியது என்பதை இந்நூல் தெளிவுபடுத்துகிறது. முதுகலைத் தமிழ் பயிலும் மாணவர்களுக்காக "தமிழ் இலக்கிய வரலாறு' என்ற ஆங்கில நூலை எழுதினார். "பத்துத் தமிழ் முனிவர்கள்' என்ற நூலில் மாணிக்கவாசகர் முதல் பட்டினத்தடிகள் வரை உள்ள சமயச் சான்றோர் பதின்மர் வரலாற்றையும், அவர்களுடைய தத்துவங்களையும் விளக்கியுள்ளார். இவர் எழுதிய "இராவணப் பெரியோன்' "சூரபதுமன் வரலாறு' ஆகியன இலக்கியத் திறனாய்வு நூல்களுள் புதிய நோக்கில் அமைந்தவை. பூரணலிங்கம் பிள்ளை தமிழில் 18 நூல்களையும், ஆங்கிலத்தில் 32 நூல்களையும் மற்றும் சட்ட நூல்களையும் எழுதியுள்ளார்.ஒரு நூலின் அணிந்துரை எத்தகைய கூறுகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதற்கு இவர் முந்நீர்ப்பள்ளம் ஈஸ்வரமூர்த்தியா பிள்ளை நூலுக்கு அளித்துள்ள அணிந்துரை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.ஆசிரியர் பணியிலிருந்து 1926-இல் ஓய்வு பெற்று முந்நீர்ப்பள்ளத்திற்குத் திரும்பி வந்த பின் பல்வேறு கட்டங்களில் இலக்கியச் சொற்பொழிவாற்றி வந்தார். திருநெல்வேலியில் இயங்கி வந்த சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தின் பன்னிரண்டாவது மாநாட்டிற்குத் தலைமை தாங்கி (1940) வழி நடத்தினார். உயர் ஜாதி அல்லாத மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக அவர் உழைத்ததை பிஷப் ஹீபர் கல்லூரி முதல்வர் எழுதிய கடிதத்தின் மூலம் அறிய முடிகிறது.மனித குலத்தார் அனைவருக்கும் தன்னலத்திற்கு அப்பால் சமூக நீதிக்கான ஒரு லட்சிய வாழ்க்கை இருக்கிறது என்பதை வாழ்ந்து காட்டியவர் பேராசிரியர் மு.சி.பூரணலிங்கம் பிள்ளை. அவ்வாறு வாழ்ந்த பூரணலிங்கம் பிள்ளை, தமது 81-வது வயதில், 1947-ஆம் ஆண்டு ஜூன் 6-ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார். அவருடைய நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது அவரது தமிழ்ப் பணிக்கும் தமிழ் உணர்வுக்கும் அளிக்கப்பட்ட உயரிய மரியாதையாகும்.
திறனாய்வுத் துறையும் "கலாநிதி' க. கைலாசபதியும்



தமிழிலக்கியத்தை மார்க்சிய அணுகுமுறையில் திட்ப நுட்பத்துடன் ஆராய்ந்து பல முடிவுகளை முன்வைத்தவர்; ஒப்பியல் நோக்கையும், சமூகவியல் பார்வையையும் தமது ஆய்வின் அடிப்படையாகக் கொண்டவர்; "கலை கலைக்காக' என்னும் கோட்பாட்டை வன்மையாக மறுத்தவர்; இலக்கியத்துக்கு சமூகப்பணி உண்டென்று திடமாக நம்பிச் செயல்பட்டவர்; சமூகப் பொருளாதார ஏற்றதாழ்வுகளுக்கு எதிரான முற்போக்கு இலக்கிய வளர்ச்சிக்கு முனைப்புடன் பாடுபட்டவர்; தமிழர்களின் சமூக, பண்பாட்டு வரலாற்று நெறியை அறிவு நிலைக்குப் பொருந்தும் வகையில் இனங்கண்டு காட்டியவர்; ஈழத் தமிழ் இலக்கியமும், கலையும் சர்வதேசத் தரத்திற்கு வளர்க்கப்பட அயராது உழைத்தவர். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைமை நாயகராகவும், சிறந்த கல்வியாளராகவும் விளங்கியவர்; யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தைக் கட்டியெழுப்பியவர்; இலக்கியமே தமது உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர்; இத்தனை பெருமைக்கும் உரியவர் "ஈழம் தந்த கொடை' கலாநிதி க.கைலாசபதி.மலேசியாவிலுள்ள கோலாலம்பூரில் இளைய தம்பி கனகசபாபதி-தில்லைநாயகி நாகமுத்து தம்பதிக்கு 1933-ஆம் ஆண்டு ஏப்ரல் 5-ஆம் தேதி பிறந்தார். தொடக்கக் கல்வியைக் கோலாலம்பூரில் பயின்றார். தந்தை புலம் பெயர்ந்து குடும்பத்துடன் இலங்கைக்கு வந்ததால், உயர்தரக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும், கொழும்பு ராயல் கல்லூரியிலும் பயின்றார். பின்னர் இலங்கைப் பல்கலைக் கழகத்தில் பி.ஏ. (ஆனர்ஸ்) பட்டப்படிப்பில் சிறப்பிடம் பெற்றுத் தேர்ச்சி பெற்றார்.பல்கலைக்கழகக் கல்வி முடிந்தபின், தமிழ் நாளிதழ் ஒன்றில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர், இலங்கைப் பல்கலைக்கழகத்தில் துணை விரிவுரையாளராகவும், கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்களில் தமிழ் இந்து நாகரிகத்துறைத் தலைவராகவும் பணி புரிந்தார்.பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, உயர் கல்விக்கான விடுப்பில் இங்கிலாந்து சென்று, பெர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில், பேராசிரியர் ஜார்ஜ் தாம்ஸனிடம் ஆய்வு மாணவராகச் சேர்ந்தார். "தமிழில் வீரயுகப் பாடல்கள்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து "கலாநிதி' (முனைவர்) பட்டம் பெற்றார். கைலாசபதி தமது ஆய்வுத் தரவாக அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, பத்துப்பாட்டு முதலிய தமிழிலக்கியங்களை எடுத்துக் கொண்டார். சங்க இலக்கியத்தைக் கிரேக்க, ஐரிஷ் முதலிய இலக்கியங்களோடு ஒப்பிட்டு அதை வீரயுகப் பாடல்கள் என அழுத்தமுறக் கூறினார். வீரயுகம், வீரயுகச் சமூகம், வீரயுகப் பாடல்களின் இயல்பு, பாடுவோர், கேட்போர் ஆகிய தன்மைகள் குறித்தும் ஆராய்ந்தார்."தமிழில் வீரயுகப் பாடல்கள்' என்ற இவரது ஆராய்ச்சி நூலை 1968-ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுச் சிறப்பித்தது. கோட்பாட்டு நெறிகளில் பிரிட்டன் நெறிமரபினைத் தழுவிச் செல்லும் இந்த நூல், தமிழ்க் கல்வியுலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.தமது ஆராய்ச்சிப் படிப்பின்போது சர்வமங்களம் என்பவரைத் தமது வாழ்க்கைத் துணையாக ஏற்றார்.ஆராய்ச்சிப் படிப்பு முடிந்தபின், மீண்டும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்தார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் யாழ்-வளாகத் தலைவராக இருந்து பல்கலைக்கழக வளர்ச்சிக்குப் பாடுபட்டார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக மூன்று ஆண்டுகள் செயல்பட்டார்.அமெரிக்காவிலுள்ள "அயோவோ பல்கலைக்கழகத்திலும், கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் சிறப்புப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். இறுதியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைத்துறைத் தலைவராகச் செயல்பட்டார். அமெரிக்க அயோவோப் பல்கலைக்கழகம் "புதியதைப் படைக்கும் எழுத்துகளுக்குரியர்' என இவரைப் பாராட்டிச் சிறப்பித்தது.யுனெஸ்கோவுக்கான தேசிய துணைக்குழு, இலங்கை, பாடநூல் ஆலோசனைக்குழு, இலங்கைப் பல்கலைக்கழக மக்கள் தொடர்பு ஆய்வுக்கழகம், இலங்கை வானொலி தமிழ் நிகழ்ச்சி ஆய்வுக்குழு, இலங்கைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியக் குழு, நாட்டியக் குழு முதலிய பல்வேறு அமைப்புகளில் உறுப்பினராகவும், தலைவராகவும் செயல்பட்டு அரும்பணி ஆற்றினார்.""இலக்கியம் காலத்துக்குக் காலம் சமூக அரசியல் பொருளாதாரச் சூழலுக்கேற்ப மாறக்கூடியது; இதை மனதில் கொண்டே ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்; அந்த ஆய்வும் பல்துறைசார் ஆய்வாக இருத்தல் வேண்டும்'' என்பதை கைலாசபதி வலியுறுத்தினார்.""கலை, இலக்கியம் முதலியற்றை அவற்றுக்குரிய வரலாற்றுப் பின்னணியிலும், சமுதாயச் சூழலிலும் வைத்தே ஆய்வு மேற்கொள்ள வேண்டும்; சமூகவியலை பற்றுக்கோடாகக் கொள்ளவேண்டும்; ஒப்பியல் ஆய்வு அறிவியல் அடிப்படையில் இருக்க வேண்டும்'' என்பதை, இலக்கிய ஆய்வுக்கான அடிப்படைக் கொள்கையாகக் கொண்டிருந்தார். ""உண்மை நிலைக்குப் புறம் போகாமல் வாழ்க்கை நிகழ்ச்சிகளைத் தனது கதையில் அமைப்பவனே சிறந்த எழுத்தாளன்'' என எழுத்தாளனுக்குரிய இலக்கணத்தை வரையறை செய்துள்ளார்.""உணர்ச்சி வழி நின்று செயல்படுவதை விட அறிவு வழி நின்று செயல்படுவது மொழி வளர்ச்சிக்கு உதவும், திராவிட இயக்கங்கள் உணர்ச்சி வழி மொழியைப் பார்த்ததால், சில பின்னடைவுகள் அதனால் ஏற்பட்டன; இன்றும் சில அமைப்புகள் ஆங்கில, இந்தி எதிர்ப்பில் கவனம் செலுத்துகின்றன. ஒரு மொழி உரிய முறையில் வளர்த்தெடுக்கப்பட்டால் பிறமொழி எதிர்ப்புத் தேவையில்லை'' என மொழி வளர்ச்சி பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும், தமிழ் நாவல் இலக்கியம், ஒப்பியல் இலக்கியம், அடியும் முடியும், இலக்கியமும் திறனாய்வும், கவிதை நயம், சமூகவியலும் இலக்கியமும், நவீன இலக்கியத்தின் அடிப்படைகள், திறனாய்வுப் பிரச்சினைகள், பாரதி நூல்களும் பாடபேத ஆராய்ச்சியும், இலக்கியச் சிந்தனைகள், பாரதி ஆய்வுகள், ஈழத்து இலக்கிய முன்னோடிகள், இரு மகாகவிகள், சர்வதேச அரசியல் நிகழ்வுகள் முதலிய நூல்களைத் திறனாய்வுத் துறைக்கு அளித்துள்ளார்.இலங்கையில் இருந்து வெளிவந்த, தொழிலாளி, தேசாபிமானி, செம்பதாகை, ரெட்பானர் முதலிய பொதுவுடைமை இயக்க இதழ்களில் கட்டுரைகள் வடித்துள்ளார். பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தின் இளங்கதிர் இதழிலும், இலக்கிய இதழான மல்லிகையிலும் இவரது அரிய படைப்புகள் தொடர்ந்து இடம்பெற்று வந்தன. தமிழ்நாட்டு இதழ்களான தாமரை, சாந்தி, சரஸ்வதி, செம்மலர், தீக்கதிர், ஜனசக்தி, ஆராய்ச்சி முதலியவற்றிலும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.இலக்கியத்துக்கும் சமுதாயத்துக்கும் இடையே உள்ள உறவு பற்றிய மிக முக்கியமான, தத்துவார்த்த நூல், கைலாசபதியின் "தமிழ்நாவல் இலக்கியம்'. தமிழில் வெளிவந்த இலக்கியம் பற்றிய நூல்களுள் இது சிறப்பிடம் பெறுகிறது.கல்வித்துறை நிபுணர், இதழாளர், எழுத்தாளர், ஆய்வாளர், கட்டுரையாளர், விமர்சகர், பேச்சாளர் எனப் பன்முகத் தன்மையுடன் விளங்கினார் கைலாசபதி.முப்பது ஆண்டுகளுக்கு மேலாகவும் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை உயிர்மூச்சாகக் கொண்டு இயங்கிய கலாநிதி கைலாசபதி 49 வயதில் 1982-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி இயற்கை எய்தினார்.தமிழ்கூறு நல்லுலகம் அறியுமாறு ஈழ நாட்டிலிருந்து எழுதிய அவர், பல ஈழ எழுத்தாளர்களையும், கவிஞர்களையும், திறனாய்வாளர்களையும் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர். தமிழகத்து அறிஞர்கள் பலரைத் தமிழ் இலக்கிய உலகுக்கு எடுத்துக்காட்டிய பெருமையும் அவருக்கு உண்டு. தமிழ் இலக்கியத் திறனாய்வுத் துறையில் கலாநிதி கைலாசபதி, மங்காத ஒளிவிளக்காக என்றென்றும் விளங்குவார்!

Saturday, June 20, 2009

வேதம் தமிழ் செய்த நாதன்



இந்தியத் திருநாட்டின் தொன்மைக்கும் பெருமைக்கும் உறுதுணையானவற்றுள் வேதங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. நான்மறை என்று சொல்லப்படும் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய வேதங்கள் வடமொழியில் அமைந்தவை. வேத ஆராய்ச்சியிலும் வேத மொழிபெயர்ப்பிலும் ஈடுபட்ட அறிஞர்கள் பற்பலராவர். அவர்களுள் செங்காவிச் சிங்கமாகிய சுவாமி விவேகானந்தர் வேதம் குறித்துப் பல்வேறு இடங்களில் குறிப்பிடுகிறார்.""முழுமை நிறைந்த பண்பட்ட இலக்கியம் தொன்மைமிக்க வேதங்களாகும்'' என்பது அவர்தம் கருத்து. "கலைமகளுக்கு வேதம் திருவிழி', "இந்தியத் தாயோ அதனைத் தம் நாவினில் தாங்கியுள்ளாள்' என்று பாரதியார் கருதுகிறார். அதனால்தான், ""வேதத்திருவிழியாள்'' என்று கலைமகளையும், ""நாவினில் வேதமுடையவள்'' என்று இந்தியத் தாயையும் பாடிப்பரவுகிறது அவரது கவியுள்ளம்.உலகியல் வெளிப்பாடுகளை ஆன்மிகத் தேட்டத்தோடு கவித்துவமாகச் சொல்லிச்செல்லும் வேத இலக்கியத்தின் நுட்பமறிந்த பாரதியார், அவற்றுள் சிலவற்றைத் தேர்ந்து "வேதரிஷிகளின் கவிதைகள்' என்று தமிழில் தந்திருக்கிறார் என்பது பலரும் அறிந்த செய்தி. அதேசமயம் கிட்டத்தட்ட, அதே காலகட்டத்தில், நான்கு வேதங்களையும் தமிழில் மொழிபெயர்த்துத் தந்த அறிஞர், மணக்கால் ராமசாமி ஜம்புநாதன் என்னும் எம்.ஆர்.ஜம்புநாதன் என்பவராவார் என்பது நாம் பலரும் அறிய வேண்டிய செய்தி.திருச்சிராப்பள்ளியை அடுத்துள்ள மணக்கால் என்னும் ஊரில் மணக்கால் இராமசுவாமி அவதானிகள்-இலட்சுமி அம்மாள் தம்பதியருக்கு 1896-ஆம் ஆண்டு ஆகஸ்டு 23-ஆம் தேதி பிறந்தார்.வட இந்தியாவில், மும்பையில் வசித்துவந்த ஜம்புநாதன், தயானந்த சுவாமிகள் மும்பையில் நிறுவிய ஆரிய சமாஜத்தால் ஈர்க்கப்பட்டார். ஜாதி கடந்த சமுதாயத்தைக் காணவும், வேதத்தை விரிவான நோக்கில் விளங்கிக் கொண்டு, உலகினர்க்குச் சிறப்பாக, தமிழர்களுக்கு விளக்கவும் விரும்பிய ஜம்புநாதனுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும், முன்னோடியாகவும் திகழ்ந்தவர் சுவாமி தயானந்தர்.அந்த ஈர்ப்பில்தான் சுவாமிகள் இந்தியில் எழுதிய ஆர்ய சமாஜம் தொடர்பான விளக்கங்கள் நல்கும் "சத்யார்த்த பிரகாசம்' என்னும் நூலைத் தமிழில் மொழிபெயர்த்தார். இவ்வாறு தமிழ், ஆங்கிலம், வடமொழி மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வல்லுநராகத் திகழ்ந்த ஜம்புநாதன் தம் தாய்மொழியான தமிழைப் பெரிதும் நேசித்தார். அதன் அடையாளங்களுள் ஒன்றுதான் அவர் மும்பையில் வாழும் தாழ்த்தப்பட்ட தமிழர்களுக்காக முதல் முனிசிபல் தமிழ் தொடக்கப்பள்ளியை நிறுவியது.இந்தியநாட்டு ஆன்மிகச் செல்வங்களான வேதங்கள் சாதி பேதமின்றி எல்லாத் தமிழர்களையும் சென்று சேர வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு நான்கு வேதங்களையும் தமிழில் தந்திருக்கிறார். அவற்றுள் ரிக் வேத மொழிபெயர்ப்புக்காக மட்டும் முப்பது ஆண்டுகள் உழைத்திருக்கிறார். ரிக் வேதத்தின் முதல் பாகம் அவரது மறைவுக்குப் பின் மனைவி சாந்தி ஜம்புநாதனால் வெளியிட்டப்பட்டிருக்கிறது. வேதத்தைத் தமிழ் செய்ததோடு உபநிஷதக் கதைகளையும் தமிழாக்கியிருக்கிறார்.""அவர் மொழிபெயர்ப்புக்கு உரைநடையைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் சமூக அடித்தளத்தில் உள்ளவர்களான தாழ்த்தப்பட்டோர் வேதங்களை அறிய வேண்டும் என்பதுதான். மற்றொன்றையும் நினைவு கூர்வது அவசியமாகும். அவர், மொழிபெயர்ப்பாளர் என்ற முறையில் மூலத்தை சிதைக்காது எக்கருத்தையும் தம் விருப்பம் போல் சேர்க்காது, குறைக்காது வேதம் கூறுவதை அப்படியே தருகின்றார்'' என்று வேத ஆய்வாளர் அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் குறிப்பிட்டுள்ளார்.வேதங்களோடு கடோபநிஷத்தையும், உபநிடதக் கதைகளையும் தமிழில் தந்திருக்கிறார். சென்னையில் "ஜம்புநாத புஸ்தக சாலை' என்னும் பதிப்பகம் அமைத்து அதன்வழி தமது மொழியாக்கங்களை வெளியிட்டிருக்கிறார். வேதம் அனைவருக்கும் பொதுவானது என்று கருதும் சான்றோர்கள் அதனை அனைவரும் அறியும்படி தம்மாலான பணிகளைச் சிறப்புறச் செய்துவந்த அக்காலத்தில், அது அனைத்து மக்களுக்கும் குறிப்பாக, தாழ்த்தப்பட்ட மக்களைச் சென்று சேரவேண்டும் என்று கருதியவர் ஜம்புநாதன். தமது "சதபதபிராமணம்' என்னும் யஜுர்வேத சதபத கதைகள் அடங்கிய மொழிபெயர்ப்பு நூலை, ஹரிஜனப் பெருமக்களின் பாதகமலங்களில் அர்ப்பணம் செய்திருக்கிறார் ஜம்புநாதன். மிகுந்த உணர்வோட்டத்தோடு அவர் எழுதிய கீழ்க்காணும் அர்ப்பண உரை காத்திரமானது; முற்போக்கானது.""ஹரிஜனங்களே, உங்களுக்கு நமஸ்காரம். நாங்கள் தலைமுறை தலைமுறையாகச் செய்த பாவங்களுக்குப் பச்சாதாபப்பட்டு பிராயஸ்சித்தம் செய்துகொள்ள விரும்புகிறோம் என வாக்குறுதி செய்து இவ்வேத நூலை உங்கள் பாதகமலங்களில் சமர்ப்பிக்கிறேன். நீங்கள்தான் இவ்வேதங்களைப் படித்து பாரதநாடு மாத்திரமில்லை, பூலோகமுழுவதும் பிரச்சாரம் செய்து மறுபடியும் தர்மஸ்தாபனம் செய்ய வேண்டும்......... இந்நாடு, பூலோகமுழுவதும் புனிதவேதம் விரிந்து தலையோங்க நீங்களே அதற்கேற்ற கங்கையைக் கொண்டுவர முடியுமென இதை நான் உங்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன்''1974-ஆம் ஆண்டுவரை வாழ்ந்த ஜம்புநாதன், தமிழில் 16 நூல்களையும், ஆங்கிலத்தில் மூன்று நூல்களையும் படைத்தளித்திருக்கிறார். எனினும் இவர் பாரதியார்தம் வேத மொழிபெயர்ப்பான "வேதரிஷிகளின் கவிதைகள்' பற்றி அறிந்தவராகத் தெரியவில்லை என்று குறிப்பிடும் பாரதி ஆய்வாளர் பெ.சு.மணி, இந்த வரலாற்றைச் சிறப்பாகவும் செறிவாகவும் தமது "பாரதி இலக்கியத்தில் வேத இலக்கியத்தின் தாக்கம்' என்ற நூலில் பதிவு செய்திருக்கிறார்.சுமார் எழுபத்தி எட்டு ஆண்டுகள் வேதம் தமிழ் செய்யும் வேள்வியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஜம்புநாதன் 1974-ஆம் ஆண்டு உலக வாழ்வை நீத்தார். அவரது தமிழ்த்தொண்டு வரலாற்றுச் சிறப்புக்குரியது. மும்பையில் இருந்துகொண்டு தம் தமிழ் மொழிக்கு அவர் ஆற்றிய தொண்டும், தீண்டாமையை எதிர்த்து ஜாதிக்கும் அப்பால் வேதங்களைக் கொண்டுசெல்ல அவர் மேற்கொண்ட முயற்சியும் சாதாரண விஷயமா என்ன?""ஒரு நிறுவனம் செய்ய வேண்டிய பணியைத் தனியொருவராகச் செய்து சாதனையைப் புரிந்துள்ளார் ஜம்புநாதன் என்பது உளந்திறந்து பாராட்டுதலுக்குரியது. அவர் முதன் முயற்சியைத் தொடர்ந்து, வேறு எந்த வேத நெறி பரப்பும் நிறுவனமோ, தனிநபரோ வேத மொழிபெயர்ப்புக்குத் துணியவில்லை என்பதும் ஜம்புநாதனின் அரிய பணிக்குச் சான்றாகும்'' என்று குறிப்பிடும் அறிஞர் பெ.சு.மணியின் பாராட்டுரை முற்றிலும் மெய். வெறும் புகழ்ச்சி இல்லை என உறுதியாகச் சொல்லலாம்.
கருத்துக்கள்

பாரதியார் ஆரிய நாடு என்றும் வேதம் பற்றியும் கூறியவை தவறான கருத்துகள் என்றும் சிறு பருவத்தில் தம் தந்தையைத் தேடி வந்த சிறு கூட்டத்தார் இவை பற்றியே பேசியதால் தாமும் அறியாமையில் சிக்கியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். வேதங்களுக்கு மாறான கருத்துகளை உண்மைத் துறவி விவேகானந்தரும் பல்வேறு இடங்களில் பதிந்துள்ளார். எனவே, தொடக்கத்தில் கூறிய கருத்துகளின் அடிப்படையில் மதிப்பிடக் கூடாது. எனினும் சம்புநாதன அவர்கள் செய்துள்ள படைப்புப் பணிகளும் மொழி பெயர்ப்புப் பணிகளும் மக்களில் ஒரு பிரிவினரைத் தாழ்த்தியே வைத்துள்ளமைக்காக வருந்திய உள்ளமும் பாராட்டிற்குரியவை. அயல் மாநிலத்தில் வாழ்ந்து மறைந்த தமிழரின் சிறப்பை வெளிச்சத்திற்குக் கொணர்ந்துள்ள முனைவர் சேதுபதிக்கும் தினமணிக்கும் பாராட்டுகள்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/21/2009 4:14:00 AM

Monday, June 08, 2009

தொல்காப்பிய ஆசான் யாழ்ப்பாணம் சி.கணேசையர்
தினமணி


தமிழின் தலைசிறந்த நூல் என்று நாம் கொண்டாடும் தொல்காப்பியம் 19-ஆம் நூற்றாண்டில் தமிழ்த்தாத்தா உ.வே.சா. போன்றவர்களே அறியாத நூலாக இருந்தது. அந்தக் காலத்தில் தமிழ்நாடு முழுமையிலும் தொல்காப்பியத்தைப் பாடம் சொல்கிற ஆசிரியர் "வரதப்ப முதலியார்' என்ற ஒருவர் மட்டும் இருந்ததாக சி.வை.தாமோதரம்பிள்ளை போன்றோர் எழுதியுள்ளனர். 1847-இல் மழவை மகாலிங்கையரால் தொடக்கம் பெற்ற தொல்காப்பியப் பதிப்புப் பணி 1935-இல் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம்பிள்ளையால் தொல்காப்பியம் - இளம்பூரணர் உரை-மெய்ப்பாட்டியல், உவமையியல், செய்யுளியல், மரபியல் போன்றவை வெளியிடப்பட்டவுடன் நிறைவடைந்தது. 1930-களின் பின்னர் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் தொல்காப்பியம் பாடமாக வைக்கப்பட்டது. அந்தக் காலத்தில் இதனைப் பாடம் சொல்வதற்கு ஆசிரியர்கள் பெருமளவில் இடர்ப்பட்டனர். இதற்கு தொல்காப்பியச் சூத்திரங்களை முறைப்படுத்த வேண்டும். உரையாசிரியர்கள் குறிப்பிடும் கருத்துகளைத் தெளிவுபடுத்தும் விளக்கங்கள் வேண்டும். தமிழ்நாட்டில் பி.சா.சுப்பிரமணிய சாஸ்திரி எழுத்ததிகாரத்துக்கும் சொல்லதிகாரத்துக்கும் விளக்கக் குறிப்புகளை எழுதினார். வையாபுரிப்பிள்ளை போன்றவர்கள் மூல பாடத்தில் பல நல்ல திருத்தங்களைச் செய்துள்ளனர். அதே நேரத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து சி.கணேசையர் என்பவர் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை, சொல்லதிகாரம் சேனாவரையர் உரை, பொருளதிகாரம் நச்சினார்க்கினியர்-பேராசிரியர் உரைகளுக்கு விளக்கக் குறிப்புகளை விரிவாக எழுதினார். அதே நேரத்தில் சுவடிகளுக்கு இடையேயான பாட வேறுபாடுகளையும் நுட்பமாக ஆராய்ந்து சரியானவற்றைக் குறிப்பிட்டு அதற்கான விளக்கங்களையும் கொடுத்தார். இன்றுவரை இந்த விளக்கங்களை விஞ்சக்கூடிய எதனையும் யாரும் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணத்துக்கு அருகேயுள்ள புன்னாலைக்கட்டுவன் என்ற கிராமத்தில் 1878-ஆம் ஆண்டு மார்ச் 26-ஆம் தேதி பிறந்தார் கணேசையர். இவருடைய தந்தை சின்னையர்-தாய் சின்னம்மாள். இவரது பெரிய தந்தை கதிர்காம ஐயர், புன்னாலைக்கட்டுவனில் நடத்தி வந்த பள்ளியில் 8-ஆம் வகுப்பு வரை தமிழும் வடமொழியும் படித்தார். அத்துடன் ஆறுமுகநாவலரின் சகோதரி மகனாகிய பெரும்புலவர் பொன்னம்பலம்பிள்ளை, சுன்னாகம் குமாரசாமிப் புலவர், கணேசையர் உறவினரும் சைவ சித்தாந்தத்தில் பெரும் புலமையாளருமாகிய காசிவாசி செந்தில்நாத ஐயர், வடமொழி அறிஞர் பிச்சுவையர் போன்றவர்களிடம் கல்வி பயின்றார். தமது 21-வது வயதில் இருந்து விவேகானந்த வித்தியாசாலை, நாவலரின் சைவப் பிரகாச வித்தியாசாலை போன்றவற்றில் ஆசிரியராகப் பணி செய்தார். இவருடைய 32-வது வயதில் அன்னலட்சுமி எனும் அம்மையாரை மணந்தார். திருமணத்துக்குப் பின்னர் மணிமேகலை நூல் குறிப்பிடும் மணிபல்லவத்தீவு என்று கருதப்படுகின்ற நைனார் தீவில் ஆசிரியப் பணி புரிந்தார். 15-ஆம் நூற்றாண்டில், இலங்கை அரச வம்சத்தைச் சேர்ந்த "அரசகேசரி' என்பவர் காளிதாசனுடைய ரகுவம்சம் நூலை 2444 பாடல்களில் மொழிபெயர்த்தார். இந்த நூலின் 1506 பாடல்களுக்கு கணேசையர் உரை எழுதியுள்ளார். ஈழ நாட்டுத் தமிழ்ப் புலவர்கள் சரித்திரம் போன்ற பல நூல்களை எழுதி இருப்பினும் கி.பி.1868, 1885, 1891-ஆம் ஆண்டுகளில் சி.வை.தாமோதரம்பிள்ளையால் முதன் முதலாக வெளியிடப்பட்ட தொல்காப்பியம் மூன்று அதிகாரங்களுக்கும் கணேசையர் செய்த திருத்தங்களும் விளக்கக் குறிப்புகளும் மிகவும் சிறப்பான பணியாகும். இவர் மதுரைத் தமிழ்ச் சங்கத்துச் "செந்தமிழ்' பத்திரிகையில் 1905-ஆம் ஆண்டிலிருந்து இவர் எழுதிய "கம்பராமாயணத்தில் பாட வேறுபாடுகள்' என்ற கட்டுரைத் தொடராக வெளிவந்தது. இது இன்றும் பழந்தமிழ் நூல்களுக்கான செம்மையான பாடங்களை ஆய்வு செய்யும் அறிஞர்களுக்கு வழிகாட்டியாகக் கருதத்தக்க சிறப்புடையதாகும். 1937-இல் கணேசையர் தொல்காப்பியக் குறிப்பை வெளியிடுவதற்கு முன்பே சி.வை.தாமோதரம்பிள்ளை, ரா.ராகவையங்கார், கா.நமச்சிவாய முதலியார், வ.உ.சி.யுடன் இணைந்து வையாபுரிப்பிள்ளை, திரிசிரபுரம் கனகசபைப் பிள்ளையுடன் இணைந்து மன்னார்குடி சோமசுந்தரம்பிள்ளை முதலிய பல்வேறு அறிஞர்கள் தொல்காப்பியம் மூலபாடத்தையும் சிறுசிறு குறிப்புகளுடனும் பதிப்பித்து வெளியிட்டிருந்தனர். இத்தகைய அறிஞர்களின் உழைப்பிற்குப் பின்பும் தொல்காப்பியமும் அதன் உரைகளும் மேலும் திருத்தப்பட வேண்டும் என்ற நிலையிலேயே இருந்தன. இந்நிலையில் ஈழகேசரி பத்திரிகையின் அதிபரான நா.பொன்னையாபிள்ளை, சி.வை.தாமோதரம்பிள்ளை நினைவைப் போற்றும்படியான ஒரு செயலைச் செய்ய வேண்டுமென்று விரும்பினார். அதற்கு சி.வை.தாமோதரம்பிள்ளை வெளியிட்ட தொல்காப்பியத்தைத் தற்காலத்துக்கு ஏற்ற வகையில் செம்மையான பதிப்பாகவும் தேவையான விளக்கங்களுடனும் வெளியிடுவது சிறந்ததாகும் எனக் கருதினார். இந்தப் பணியை சிறப்பாகச் செய்யக்கூடிய அறிஞர் கணேசையரே என்று கருதி, இப்பணியைச் செய்து தருமாறு அவரிடம் வேண்டினார். தனக்கு அளிக்கப்பட்ட பணியை வெகு சிறப்புடன் செய்து முடித்தார் கணேசையர். தொல்காப்பியப் பொருளதிகாரம், பேராசிரியர் உரையை ஆராய்ச்சி செய்யும்போது இன்னும் பல திருத்தங்களைச் செய்ய வேண்டிய நிலையில், இலங்கை முழுவதிலும் இதற்கான திருத்தமான பிரதிகள் கிடைக்கவில்லை. எனவே, கணேசையர் தமிழ்நாட்டுக்கு வந்து, மதுரையில் டி.கே.இராமானுஜ ஐயங்கார் உதவியுடன் மதுரைத் தமிழ்ச் சங்கப் பிரதிகளைப் பார்த்துத் தம்முடைய குறிப்புகளைத் திருத்தம் செய்துகொண்டார். கடும் உழைப்புடன் தன் நுண்மையான அறிவைப் பயன்படுத்தி தொல்காப்பிய மூலத்திலும் உரையிலும் கணேசையர் பல திருத்தங்களைச் செய்தார். எடுத்துக்காட்டாக, பேராசிரியர் உரை எழுதிய தொல்காப்பியப் பொருளதிகார நூற்பாக்கள் 300,302,307,313,369,419,448,490,491 போன்றவற்றில் அறிவியல் பூர்வமான பல திருத்தங்களை கணேசையர் செய்துள்ளார். வாழ்நாள் முழுவதும் அயராது உழைத்த கணேசையர், உடல்நலக் குறைவு காரணமாக 1958-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார். என்றாலும், தொல்காப்பியத்தின் மூன்று அதிகாரங்களுக்கு அவர் எழுதிய விளக்கக் குறிப்புகளும் திருத்தங்களும் இன்றளவும் தமிழறிஞர்களால் போற்றப்படுகிறது. தொல்காப்பியம் உள்ளவரை கணேசையரின் சீரிய தமிழ்த்தொண்டும் நிலைத்து நிற்கும் என்பது உறுதி.
கருத்துகள்

Poonal pottavan Tamilanaa? He must be a singalan likewise Bharati too.

By kuppa
6/7/2009 1:08:00 PM

கழுத்தில் பூணூல் இருக்கிறது, இவரை தமிழறிஞர் என் ஒப்பு கொள்ள உண்மை தமிழன் என்ன பைத்தியமா

By Tamilarasan
6/7/2009 7:47:00 AM

Saturday, June 06, 2009

பக்கத்தில் இருந்தும் படிக்கப்படாத கவிதை!
தினமணி


முதலில் தலையை வெட்டினர்
தொடர்ந்து
விரல்களை,
கைகளைத் துண்டித்தனர்
மார்பைப் பிளந்தனர்
தொடைகளை, கால்களை
வெட்டி அடுக்கினர்
வரிசையாக
ஒரு சிறு முனகல்கூட இல்லை
ஒரு துளி ரத்தமும் இல்லை
வெட்டிய முகங்களிலும்
கோபமும் இல்லை
இரக்கமும் இல்லை
பறவைகள் கரைந்தன
சோகத்துடன்...
ஒரு மரம் வெட்டிச் சாய்க்கப்பட்டதற்கு இவ்வாறாக வருந்திய அ. ராஜமார்த்தாண்டன், அடையாளம் காணப்படாத ஒரு வாகனத்தால் சாய்க்கப்பட்டுவிட்டார் நாகர்கோவிலில், ஜூன் 6-ம் தேதி. பெயர் சொன்ன அளவில் அவரை அறிந்துகொள்ள இயலாத இலக்கிய வாசகர்களில் பலர், "ராஜமார்த்தாண்டன் யார்?' என்று கேட்கக் கூடும். ஆனாலும், இந்த இலக்கிய வாசகர்கள் மெச்சிக்கொள்ளுகிற, பெயரும் புகழும் பெற்றிருக்கிற, ஆளுமைமிக்க எழுத்தாளர்கள் அனைவருக்கும் ராஜமார்த்தாண்டனைத் தெரியும். அவரது எழுத்தும் அவரது மதிப்பும் அறிவார்கள். "தினமணி'யில் உதவி ஆசிரியராக, கவிஞராக, கட்டுரையாளராக, விமர்சகராக, அனைவருக்கும் நல்ல நண்பராக இருந்ததுடன், பரந்துபட்ட வாசிப்பு உள்ளவராகவும் இருந்தார். திருவல்லிக்கேணியில் அவர் தங்கியிருந்த மேன்ஷன் அறையில் அவரது கட்டிலை புத்தகங்கள் மட்டுமே ஆக்கிரமிப்பு செய்திருந்தன. இலக்கியத்தில் பன்முக ஆளுமை இருந்தும்கூட அவர் தனக்கான இடம் என்று கவிதையை மட்டுமே தேர்வு செய்துகொண்டார். தமிழ்க் கவிதை யார் எழுதினாலும் விருப்புவெறுப்பு இல்லாமல் அவர் படித்தார், சிறந்த கவிதைகளை அடையாளம் காட்டினார், விமர்சித்தார். புதுக் கவிதையில் ஆர்வம் காட்டியபோதிலும் அவர் சங்க இலக்கியத்தை முழுமையாக அறிந்தவர். தமிழ் எம்.ஏ. படித்தவர். புதுமைப்பித்தன் பற்றி முனைவர் பட்ட ஆய்வுக்கட்டுரை எழுதி, ஆனால் அதில் சில இடங்களை மாற்றி எழுதும்படி வழிகாட்டுநர் சொன்னபோது, அதை மறுத்து பட்டம் பெறாமலேயே வெளியேறிவர். சமரசம் செய்துகொண்டால், தமிழ்ப் பேராசிரியராக வாழ்க்கை நடத்த முடியும் என்பது தெரிந்திருந்தும், அவர் தன் மனம் ஏற்காததை செய்யத் துணிந்ததில்லை. இந்த நேர்மை அவரது விமர்சனங்களிலும் தொடர்ந்தது -கடைசிவரை. புதுமைப்பித்தன் மீது அவருக்கு மாறாக் காதல் உண்டு. புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த மாபஸôன் கதைகள் சில, அவரது கதைத் திரட்டில் கலந்துபோனதை அடையாளப்படுத்தியவர். புதுமைப்பித்தனின் வாழ்க்கை மற்றும் இலக்கியம் பொருத்தவரை ஒரு நடமாடும் தகவல் பேழையாக இருந்தார். தன் சொந்தப் பணத்தில் "கொல்லிப்பாவை' இலக்கிய சிற்றிதழை பல ஆண்டுகள் நடத்தி வந்தார். பொருளாதார நெருக்கடியால் அதை நிறுத்திவிட்டு, வேலை தேடியபோது, அவ்வேளையில் அவரால் பிழை திருத்துநராகத்தான் "தினமணி' மதுரைப் பதிப்பில் சேர முடிந்தது. நாகர்கோயிலில் சுந்தர ராமசாமி நடத்திய "காகங்கள்' அமைப்பு போல, மதுரையில் "சந்திப்பு' என்ற இலக்கிய அமைப்பை ராஜமார்த்தண்டன் நண்பர்களுடன் சேர்ந்து நடத்தினார். இந்த அமைப்பில் மிக நல்ல நிகழ்வுகளும், இலக்கியவாதிகளின் உரைகளும், புத்தக அறிமுகங்களும் இடம்பெற்றன. அவரது தமிழ் அறிவையும் எழுத்தாற்றலையும் பரந்துபட்ட வாசிப்பையும் அங்கீகரித்து, அன்றைய தமிழ்மணியை (4 பக்க தனி இணைப்பு) தயாரிக்கும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. தமிழ்மணி பின்னர் நிறுத்தப்பட்டபோது, ராஜமார்த்தாண்டன் தினமணி கதிரில் உதவி-ஆசிரியராக சென்னையிலேயே இருந்தார். அவரது கவிதைகளை வெளியிட சிற்றிதழ்களும், வெகுஜன இதழ்களும் தயாராக இருந்தாலும், அதற்காக அவர் கவிதைகள் எழுதியதில்லை. அவரது படைப்புகள் மிகமிகக் குறைவு. எது கவிதை என்பதில் அவருக்கு மிகவும் கறாரான வரையறை உண்டு. அதற்காக கவித்துவம் இல்லையென வசை பாடியதில்லை. தன் கருத்தை வலுவாகவும் ஆனால் மென்மையாகவும் மட்டுமே முன்வைத்தவர். தகுதி இருந்தால் மட்டுமே அதைப் பாராட்டினார் என்பதால்தான் இன்று பாராட்டுக்கு தகுதியுடையவராக இருக்கிறார். ஆளுமை மிக்க மனிதர்கள் பலரிடமும் அவர் நெருக்கமாக பழகியபோதிலும், உரிமை எடுத்துக்கொண்டதுமில்லை, அவர்களுக்காக எதற்காகவும் சமரசம் செய்துகொண்டதுமில்லை. அவர்கள் யாராக இருந்தாலும் இலக்கியத்தை விமர்சிப்பதில் அவர் விலைபோனதில்லை. அந்த நேர்மைதான் அவரை, இரு எதிர் துருவங்களாக நின்ற சுந்தர ராமசாமி, கவிஞர் பிரமிள் ஆகிய இருவரிடமும் நட்பாக இருக்க வைத்தது. இருவருக்கும் ஏற்பட்ட கருத்து மோதலின் வேர்கள் கிளைத்த இடம் தெரிந்திருந்தாலும் அதைப்பற்றி அவர் யாரிடமும் பேசியதே கிடையாது. இதே நேர்மையைத்தான் தான் பழகிய சாதாரண மனிதர்களிடமும் காட்டினார். அவரால் பாதிக்கப்பட்டவர் யாரும் கிடையாது. அவரால் மனம் நொந்தவர், பதவி உயர்வை இழந்தவர் என யாருமே கிடையாது. சுயநலமில்லாத மனிதர். அவருடன் பழகியும் அவரை நல்ல கவிஞனாக அறியாதவர்களும் அவரை நல்ல மனிதராக அறிந்திருந்தனர். டாம் மோரே தன்னைப் பற்றித் தானே குறிப்பிடுகையில், I drank like a fish and wrote like a devil என்பார். ஆனால், ராஜமார்த்தாண்டன் ஒரு "ஏஞ்சல்' போல எழுதினார். குறைவாக, ஆனால் நிறைவாக! அவரைப் பொருத்தவரை........அண்ணாந்து வான்நோக்குஅதிசயங்களில் மெய்மறகுனிந்து பூமியைத் தரிசி ஏதேனும் பிடிபட்டால்எடுத்துச்சொல்இல்லையேல்உண்டுறங்கி ஓய்வுகொள். நண்பா, நீ பக்கத்தில் இருந்தும் படிக்கப்படாத கவிதை. தொலைதூரம் சென்றுவிட்ட பின்னும் நினைவில் நிலைத்திருக்கும் நிஜம்!- இரா. சோமசுந்தரம்தினமணி முன்னாள் முதுநிலை உதவி ஆசிரியர் ராஜமார்த்தாண்டன் விபத்தில் மரணம்நாகர்கோவில், ஜூன் 6: "தினமணி' முன்னாள் முதுநிலை உதவி ஆசிரியர் ராஜமார்த்தாண்டன் (61) நாகர்கோவிலில் சனிக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் இறந்தார். அவருக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். கன்னியாகுமரியை அடுத்துள்ள சந்தையடியைச் சேர்ந்த இவர் சனிக்கிழமை நாகர்கோவில் செட்டிக்குளம் கே.பி. சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை பொதுமக்கள் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். மோட்டார் சைக்கிளில் வந்தவர் நிற்காமல் சென்றுவிட்டதால் அவர் யார் என்ற விவரம் தெரியவில்லை எனப் போலீஸôர் தெரிவித்தனர். இதுகுறித்து நாகர்கோவிலைச் சேர்ந்த சுந்தரம் (43) கொடுத்த புகாரின்பேரில், கோட்டார் காவல் நிலைய ஆய்வாளர் சென்னகேசவன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.
கருத்துகள்

ஒரு நல்ல படைப்பாளி தனக்குரிய சிறப்புகளைப் பெறாமலேயே மறைந்து விட்டார். தினமணியின் அஞ்சலி்ச் செய்தி அவரை நல்லமுறையில் நினைவு கூர்வதாக உள்ளது. அவரது 'விமர்சனம்' குறித்து அவருடன் சில முறை முன்பு தொலைபேசி வாயிலாகப் பேசியுள்ளேன். அமைதியாகக் கேட்டுவிட்டு அல்லது மகிழ்ச்சியைத் தெரிவித்து விட்டு நிறைகுறைகளால் மேலும் மெருகேற்றப்படுவதாகக் கூறுவார். தினமணியின் வாசகர்கள் சார்பாக என் அஞ்சலி!

துயரத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/7/2009 4:46:00 AM