வ.உ .சி. - va.u.si.
தலைப்பு-வ.உ.சி.பன்முக ஆளுமை : thalaippu_vu.si._panmugaaalumai
  வ.உ.சி என்று அழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரப்பிள்ளை பிரித்தானிய இந்திய நீராவிக் கப்பற்பயண நிறுவனத்திற்கு (British India Steam Navigation Company) எதிராக 16.10.1906 இல் உள்நாட்டு(சுதேசிய) நாவாய்ச் சங்கம் என்ற கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியதால் கப்பலோட்டிய தமிழன் என்றும் ஆங்கிலேய அரசுக்கு எதிராகச் செயற்பட்டமைக்காகச் சிறைத்தண்டனை துய்க்கையில் செக்கிழுக்க வைக்கப்பட்டமையால் செக்கிழுத்த செம்மல் என்றும் அழைக்கப்படும் விடுதலைப் போராட்ட வீரர் ஆவார்.
  இவர் விடுதலைப் போராட்ட வீரர் மட்டுமல்ல ஒரு சிறந்த வழக்கறிஞர், கவிநயம்மிக்க எழுத்தாளர், பதிப்பாசிரியர் எனப் பன்முக ஆளுமைகொண்டவர்.
  மெய்யறம், மெய்யறிவு, பாடல் திரட்டு, சுயசரிதை ஆகிய நான்கு நூல்களை இயற்றிய நூலாசிரியராகவும், இன்னிலை, சிவஞான போதம், திருக்குறள் ஆகிய நூல்களுக்கு உரை எழுதியவராகவும் திருக்குறளுக்கும் தொல்காப்பியத்துக்கும் பதிப்பாளாராகவும் இருந்திருக்கிறார்.
  அத்துடன் கடவுளும் பக்தியும், கடவுள் ஒருவரே, மனிதனும் அறிவும், மனமும் உடம்பும், வினையும் விதியும், விதி அல்லது ஊழ் போன்ற பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
  இது மட்டுமன்றி சிறந்த மேடைப்பேச்சாளராகவும் பத்திரிகை ஆசிரியராவும் விளங்கியிருக்கிறார்.
  அத்துடன் இயேம்சு ஆலென்(James Allen) என்கின்ற பிரித்தானியத் தத்துவ எழுத்தாளர் எழுதிய “As a man Thinketh, Out from the heart, The part of prosperity, The way to peace” ஆகிய நூல்களைத் தமிழில் எண்ணமே வாழ்வு /மனம் போல வாழ்வு, அகமே புறம், ஆற்றலுக்கு வழி / வலிமைக்கு மார்க்கம், அமைதிக்கு வழி / சாந்திக்கு மார்க்கம் என மொழி பெயர்த்திருக்கிறார்.
  19 ஆம் நூற்றாண்டில் தமிழகத் தலைவர்கள் பொதுக்கூட்டங்களில் ஆங்கிலத்தில்தான் பேசினார்கள். “நமது தலைவர்கள் இங்கிலீசில் பேசுவதையும் யோசிப்பதையும் நிறுத்தினால் ஒழிய நமது மொழி மேன்மைப்பட இடமில்லை” என்ற  கருத்தை பாராதியார் மேற்கோள்காட்டியதைக் கருத்தில் எடுத்த வ.உ.சி “மொழிப்பற்று வழி நாட்டுப்பற்று உருவாகும் அதனால் தலைவர்கள் தமிழில் பேசவேண்டும்” எனத் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
  பல பதின்மங்கள் கடந்த இன்றையக் கால கட்டத்திலும் ஆங்கிலத்தில் பேசுவதும் ஆங்கிலத்தில் சிந்திப்பதும் தமிழ்த்தலைவர்களைப் பற்றியிருக்கும்  ஒரு தீராத் தொற்றுநோய் போலவே தெரிகிறது. வ.உ.சி என்ற எளிய தமிழ் ஆளுமையின் வரலாற்றில் இருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ள இருக்கின்றது. வ.உ.சி போன்ற எளிய தலைவர்கள் மறைந்தும் வாழ்ந்துகொண்டும் வழிகாட்டிக்கொண்டும்தான் இருக்கிறார்கள்; இருப்பார்கள்.
இரவி இந்திரன்