Monday, February 08, 2016

மொழியாக்க அறிஞர் அ.தட்சிணாமூர்த்தி – ஈரநிலா

மொழியாக்க அறிஞர் அ.தட்சிணாமூர்த்தி – ஈரநிலா

தலைப்பு-மொழியாக்கஅறிஞர் தட்சிணாமூர்த்தி : thalaippu-mozhiaakkaarignar-thatchinaamurthi-eeranilaa
   
  புரட்டாசி 22, 1968 / 1937 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏழாம் நாள், மன்னார்குடி அருகில் இருக்கும், திருவாரூர் மாவட்டத்தைச்சேர்ந்த  நெடுவாக்கோட்டை எனும் ஊரில் வேளாண்பெருமக்கள் அய்யாசாமி–இராசம்மாள் இணையருக்கு, முனைவர். அ. தட்சிணாமூர்த்தி கடைசி மகனாய்ப் பிறந்தார். படிப்புவாசனையே இல்லாதவராயிருந்தும், தன் மகனின் அறிவுத்திறனை அடையாளம் கண்டுகொண்டதந்தை, கடும் இன்னல்களுக்கிடையிலும் தன் மகனைப் படிக்கவைப்பதில் உறுதியாயிருந்தார். பாதங்கள் பழுக்கப்பழுக்க நெடுந்தொலைவு பள்ளிக்கு நடந்துசென்று, மண்ணெண்ணெய் விளக்கின் ஒளியில் பயின்று, பள்ளிப்படிப்பை முடித்தவர், தமிழ்மொழியின்மேல் உண்டான அளவிலா அன்பினால் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவனானார். மூதறிஞர்கள் திரு. தெ. பொ. மீனாட்சி சுந்தரனார், திரு. தண்டபாணி தேசிகர் போன்றவர்களின் அன்பையும், அறிவையும் பெற்றுத் தமிழில் புலமை அடைந்தார். தன்னுடைய ஊரில் முதன்முதலில் முதுகலைப்பட்டம்பெற்றவர் என்கிற பெருமையையும் கொண்டார். 1988-இல், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முனைவர் பட்டம் பெற்றார். முப்பத்து மூன்று  ஆண்டுக்காலங்கள் தமிழாசிரியராகப் பல கல்வி நிறுவனங்களிலும் பணியாற்றி, மதுரை தமிழ்ச்சங்கத்தைச்சேர்ந்த செந்தமிழ்க் கலைக்கல்லூரியின் முதல்வராக 1996 ஆம் ஆண்டு ஓய்வுபெற்றார்.
  இவ்வளவு எளிமையான பின்னணியைக் கொண்ட ஒருவர் தமிழ்மொழியின்பால் இருக்கும் மிகுந்த காதலினாலும் பக்தியினாலும் செய்திருக்கும் தமிழ்ப்பணிகள் ஏராளம். தமிழ்நாட்டில் பரவலாக அவரை அறிமுகப்படுத்திப் பெருமை சேர்த்தது 1973 ஆம் ஆண்டு அவர் எழுதிய    ‘தமிழர் நாகரிகமும் பண்பாடும்’ என்கிற நூலாகும். இன்றும் பல்கலைக்கழங்களில் பாடநூலாகவும், அரசுத்தேர்வுகளுக்கு மாணவர்களால் விரும்பிப் படிக்கப்படும் நூலாகவும், ஆராய்ச்சியாளர்களுக்குப் பலவகையிலும் அரிய செய்திகளை வழங்கும் திரட்டு நூலாகவும் இந்நூல் விளங்குகிறது. இதைத்தொடர்ந்து ‘சங்கவிலக்கியங்கள் உணர்த்தும் மனித உறவுகள்’, ‘தமிழியற் சிந்தனைகள் ஆகிய நூல்களையும், சங்கவிலக்கியங்கலாகிய ஐங்குறுநூறு,  பரிபாடல் ஆகியவற்றின் உரைகளையும் எழுதியுள்ளார்.
  தமிழ்மொழியின் பெருமையைத் தமிழறிஞர்கள், தமிழர்களுக்கு மட்டுமே சொல்லிக்கொண்டிருந்தால் போதுமா? ‘தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும்’ எனும் பாரதியின் வரிகளை மெய்ப்பிப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? தமிழ்மொழியில் இருக்கும் பழந்தமிழ் இலக்கியச்செல்வங்களை மற்ற மொழியினரும் அறிந்து, சுவைத்து உணரும் வகையில் அவற்றைப் பிறமொழிகளில் மொழிபெயர்த்தல் தேவையல்லவா? அப்படிச்செய்யும்போது மூலத்தில் இருக்கும் பொருள் மொழிபெயர்ப்பில் பிழையின்றி வருதல் மிகமுதன்மை. அதற்குப் பழந்தமிழ்ப் பண்பாட்டுக்கூறுகளையும் சொல்பயன்பாடுகளையும் நன்கு அறிந்திருத்தல் அடிப்படைத் தேவைகளிலொன்று. இதை யாரால் செய்ய இயலும்? மூலமொழியிலும் பண்பாட்டிலும் ஆழ்ந்த அறிவும், மொழிபெயர்க்கப்படும் மொழியில் ஆளுமையும்கொண்ட ஒருவரால்தான் இப்பணியைச் செம்மையாகச் செய்யமுடியும். இதை நன்கு உணர்ந்தவராதலால், ஆங்கிலமொழியின்மேல் அவருக்கு இயற்கையாக உண்டான ஆர்வத்தை மேலும் பெருக்கிக்கொண்டார்.
 முப்பது ஆண்டுக்கால அயராத உழைப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டிற்குள், 19 பழந்தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்தில் முழுமையாக மொழிபெயர்த்து வெளியிட்டு இன்றுவரை எவரும் செய்திடாத மாபெரும் அருவினையை ஆற்றியுள்ளார். இவற்றுள் 13 சங்கவிலக்கிய நூல்களும் 6 பதினெண்கீழ்க்கணக்கு நூல்களும் அடங்கும். முதன்முதலில் 13 சங்க இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரும், அகநானூற்றின் முதல் முழு ஆங்கில மொழிபெயர்ப்பைத் தந்தவரும், மேற்கூறப்பட்டுள்ள ஆறு பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பைத் தந்தவரும் இவரே என்பது குறிப்பிடத் தக்கது. பெரும்  நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களும் பலரைக்கொண்டு ஆற்றக்கூடிய ஒன்றை, தனிமனிதராய்க் கடந்த 30 ஆண்டுகளாக இரவு பகல் என்று பாராது இடையறாது உழைத்து, தொடர்ந்து அருவினையாற்றி வருகிறார். தன் வாழ்கையின் பெரும்பகுதியை இம்மொழிபெயர்ப்புப் பணிகளுகாகவே ஒப்படைத்துள்ளார். இன்றைய நாளில் பழந்தமிழ் இலக்கியங்களில் பதினைந்தின் மொழிபெயர்ப்புகள் வெளியிட ஆயத்த நிலையில் உள்ளன. அவற்றுள் புறநானூறு, பதிற்றுப்பத்து, திருக்குறள், நாலடியார், ஐங்குறுநூறு போன்ற பெருநூல்களும் அடங்கும்.
  பெரிதாய்ப் பொருளாதார வசதிகள் இல்லாத மாதவருமானத்தை எதிர்நோக்கியிருக்கும் எளிய நடுத்தரப் பிரிவைச் சேர்ந்தது இவர் குடும்பம். இன்று கல்லூரி ஆசிரியர்கள் பெறும் ஊதியத்தில் மூன்றில் ஒரு பங்குகூட அன்று இவர் ஊதியமாகப் பெற்றதில்லை. அப்படியிருக்க, இம்மொழிபெயர்ப்புப்பணிகளின் மூலம் தனக்கு எவ்வித வருமானமும் கிடைக்கப்போவதில்லை என்பதை நன்கு அறிந்திருந்தும், தன் மாதவருமானத்தில் சிறுகச்சிறுகச் சேமித்த சேமிப்பையும்கூடத் தட்டச்சுப்பணிக்காகவும் இப்பணியோடு தொடர்புடைய பிற செலவுகளுக்காகவும் கணக்கின்றிச் செலவழித்தார்.
  அன்று கணினியில்லை. இணையம் இல்லை. நாமே தட்டச்சுச் செய்துவிட்டுத் தேவைப்படும்போது எளிதில் அழித்து மாற்றங்கள் செய்யும் வழியும் இல்லை. கைக்கொண்டு பலமுறை எழுதி எழுதி, திருத்தித் திருத்தி அவரைச்சுற்றி தாள்கள்  எப்போதும் குவிந்து கிடக்கும். ஒரு கட்டத்தில் தட்டச்சுப்பொறி’ ஒன்று வீட்டுக்கு வந்துசேர்ந்தது. இரவு நடுச்சாமம் கடந்தும், விடியும் வரையும் அயராது அதில் மொழிபெயர்ப்புகளைத் தட்டச்சுச் செய்துகொண்டிருப்பார். இப்படி உறக்கமும் ஓய்வுமின்றித் தொடர்ந்து உழைத்ததில்  உடல்நலம் வீணானது. மூச்சுத்தொந்தரவு தீவிரமடைந்து நாட்கணக்கில் வீட்டிலும் மருத்துவமனையிலும் மாறி மாறி அவதிப்பட்டார்.
  இக்கட்டத்தில் பலரும் அவருக்கு அறிவுரைகள் வழங்கினர். “நயாபைசாவுக்குப் புண்ணியப்படாத இம்மொழிபெயர்ப்புப் பணியை நிறுத்திவிட்டுச் சொந்த வேலையப் பாருங்கள் ஐயா.. உங்களுக்கு இருக்கும் தமிழறிவும் ஞானமும் எனக்கிருந்தால் இந்நேரம் ‘தமிழர் நாகரிகமும் பண்பாடும்’ போன்ற எண்ணிலடங்கா நூல்களை எழுதிப் பணம் பார்த்திருப்பேன். பிழைக்கத் தெரியாத மனிதராய் இருக்கிறீரே! தமிழின் பெருமை தானே பரவிக்கொள்ளும். விட்டுத்தள்ளுங்கள்!” என்று பலரும் சொல்ல நானே அடிக்கடிக் கேட்டுள்ளேன்.  ஆனால் இவை எதுவுமே அவரை மனம்தொய்யச் செய்ததில்லை.
  இப்படி விடாமல் கண்விழித்து உடலையும் மூளையையும் கசக்கிப்பிழிந்து உருவாக்கப்பட்டதே அகநானூற்றின் முதல் முழுமையான ஆங்கில மொழிபெயர்ப்பு. ஆம். அதுவரை எவரும் அந்நூலை முழுவதுமாக மொழிபெயர்த்திருக்கவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில பாடல்களையே உலக அறிஞர்கள் மொழிபெயர்த்திருந்தனர். 1989 ஆம் ஆண்டே முழுமையாக மொழிபெயர்க்கப்பட்ட அவ்விலக்கியம் வெளியிடுவதற்கு வழியின்றிப் பத்தாண்டுக்காலம் அங்கும் இங்கும் கிடந்து அல்லாடியது. இப்பணியின் முதன்மையை அறியாதவர்கள், இந்நூலின் வாயிலாகப் பொருளாதார வழியில் ஒன்றும் பெரிதாய்க் கிடைக்காது என்னும் காரணத்தினால் வெளியிட முன்வரவில்லை.  1999 ஆம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைக்கழகம் இந்நூலை மூன்று தொகுதிகளாக வெளியிட்டது. அதை நூலாகக் கொண்டுவரும்முன் செலவுசெய்த தொகையில் கால்பங்குப் பணம் கூட ஊதியமாகக் கிடைக்கவில்லை. இதனால் அவரொன்றும் துவண்டு விடவுமில்லை. தொடர்ந்து தன் மொழிபெயர்ப்புப்பணியைச் செய்துகொண்டே இருந்தார். ஒவ்வொரு நூலையும் அச்சில் கொண்டு வருவதற்கு அவர் பட்டிருக்கும் பாடுகளைச் சொல்லில் விளக்க முடியாது.
  அடுத்ததாக நற்றிணையின் முழு மொழிபெயர்ப்பு 2001 ஆம் ஆண்டில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வாயிலாக வெளிவந்தது.
 குறுந்தொகை மொழிபெயர்ப்பு, சொந்த வெளியீடாக 2007 இல் வெளிவந்தது. குறுந்தொகையின் முதல் மொழிபெயர்ப்பு வெளிவந்து 31 வருடங்கள் கழிந்தபின்னர் வெளிவந்த இரண்டாவது முழுமொழிபெயர்ப்பு  இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.
  பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில், கார் நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை ஆகிய ஆறு நூல்களின் மொழிபெயர்ப்பை  2010 ஆம் ஆண்டில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் வெளியிட்டது. மேற்கூறிய ஆறு நூல்களையும் முதல்முறையாக முழுமையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரும் இவரேயாவார்.
  பத்துப்பாட்டு மொழிபெயர்ப்பை 2012 ஆம் ஆண்டில் தி.இரா.நி.(SRM) பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேராயம் வெளியிட்டது. இது முதல் முழுமொழிபெயர்ப்பு வெளிவந்து 66 ஆண்டுகள் இடைவெளிக்குப்பின்னர் வெளிவந்த  இரண்டாவது முழு மொழிபெயர்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
 செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், இவரது சங்கவிலக்கிய மொழிபெயர்ப்புகளின் பெரும் பகுதியைத் தன் வெளியீடுகளில் சேர்த்துள்ளது. செம்மொழி நிறுவனம் வெளியிட்டுள்ள பத்துப்பாட்டு மொழிபெயர்ப்புத் தொகுதியின் பதிப்பாசிரியராகவும் பணி யாற்றியுள்ளார்.
 சங்க இலக்கியங்கள் மட்டுமா தமிழ்மொழியின் சிறப்பு?  இடைக்கால இலக்கியங்கள், தற்கால இலக்கியங்கள் என்று எல்லாமே குறிப்பிடத்தகுந்தனவல்லவா? பாவேந்தர் பாரதிதாசனின் சஞ்சீவிப் பருவத்தின் சாரல், புரட்சிக்கவி,காதலா கடமையா, இருண்ட வீடு, தமிழச்சியின் கத்தி, நல்ல தீர்பபு, கடல்மேல்குமிழிகள் ஆகிய ஏழு நூல்களை முதல் முறையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகிற்குத் தந்த பெருமையும் இவரையே சாரும்.
 பாரதியின் தன்வரலாறாகிய பாரதி அறுபத்தாறும் இவரால் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. மேலும் இடைக்கால இலக்கியங் களாகிய அபிராமி அந்தாதி, நீதிவெண்பா, பெருமாள் திருமொழி ஆகியவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். 2013–இல் சாகித்ய அகாடெமியின்வாயிலாக அ. ச. ஞானசம்பந்தம் அவர்களின்   ‘கம்பன் – புதியபார்வைஎன்னும் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் வெளியிட்டுள்ளார்.
  தமிழ்நாடு அரசு, 1991-இல் பாரதிதாசன் நூலாசிரியர் விருதும், 2003 ஆம் ஆண்டிற்கான பாரதிதாசன் விருதும் வழங்கி இருமுறை கௌரவித்துள்ளது. நல்லி- திசை யெட்டும் அமைப்பினர் மொழி பெயர்ப்புக்கான விருதும் (குறுந்தொகை), தெ.இ.பு.வி.ப.ச. (BAPASI) அமைப்பினர் கலைஞர் பொற்கிழி விருதும்,  தமிழிசை அமைப்பினர் திரு.வி. க விருதும் வழங்கினர். இராமநாதபுரம் தமிழ்ச்சங்கமும், கொல்கத்தா பாரதி தமிழ்ச்சங்கமும்,  இன்னும் சில அமைப்புகளும் விருதுகள் வழங்கிச் சிறப்பித்துள்ளன.
  இந்த 77 ஆம் அகவையிலும், பார்வை மங்கிய நிலையிலும், உடல்நிலை குறைபாடுகளுக்கிடையிலும் அயராது முழுமூச்சாகத் தமிழுக்காக உழைக்கிறார். பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள் எதுவாய் இருப்பினும் அழைக்கும் இடங்களுக்கு முடிந்தவரை தவறாமல் சென்று மொழிபெயர்ப்புப் பயிற்சிப்பட்டறைகள் நடத்துவதும், பாடங்கள் எடுப்பதும், சொற்பொழிவாற்றுவதும் எனத் தன் தொண்டினைத் தொடர்ந்து  செய்துவருகிறார். இன்றும், “சங்கவிலக்கியம் என்றால் ஐயாவிடம் போ!’’  என்று தன் மாணவர்களை இவரிடம் பலரும் அனுப்பிவைகின்றனர். நூல் எழுதுவோரும் முனைவர் பட்டத்திற்காக ஆராய்ச்சி செய்வோரும் அவரிடம் பாடம் கேட்கக் காலம் காலமாக வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அப்படி வருவோருக்கு, கேட்கும் ஐயத்தையும் தாண்டிப் பலவற்றை மெய்மறந்து விளக்கிக்கொடுப்பார். பாடம் கேட்ட சிலர், இவர் கருத்துகளைத் தம் சொந்தக்கருத்துகளாக எழுதிவிடுவார்கள். இதை அறியும்போது குடும்பத்தினருக்கு வரும் கோபத்தில் ஒரு பங்கு கூட இவருக்கு வந்ததில்லை. சிரித்துக்கொள்வார். எப்படியோ செய்தி சென்றடைந்தால் சரி என்பதே அவருடைய நிலைப்பாடு. “இனி யாரும் ஐயம் கேட்டு வந்தால் அதிகம் விளக்காதீர்கள்” என்று சொன்னால், அதற்கு அவர், “‘ஞானம்’ கேட்டு வருவோரிடமும் உணவு கேட்டு வருவோரிடமும் இல்லை என்று சொல்லல் ஆகாது!’” என்பார்.
  இன்றும் எங்காவது பேச வேண்டுமென்று யாராவது அழைத்தால், தேர்வுக்குப் படிக்கும் மாணவனைப்போன்று கருத்துடன் படித்துக் குறிப்புகள் எடுப்பார். அப்படி எடுத்துச்சென்றாலும் பேசும்போது ஒருமுறைகூட அவற்றைப் புரட்டிப்பார்த்ததாக நான் அறிந்ததில்லை. பிறகு ஏன் இப்படிக்கடினப்பட்டுச் படித்துக் குறிப்பெடுக்கிறீர்கள் என்று கேட்டால், “பாடம் எடுக்கத் தயார் செய்யாமல் போகக்கூடாது. தெரிந்தவையே என்றாலும் மீண்டும் படிக்கும்போது ஏதாவதொரு புதிய செய்தி கிடைக்கும் வாய்ப்புண்டு.” என்பார்.
  விருதுகளின் பின்னால் சென்றவரில்லை. பேருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு  மற்றவர்களுக்கு முகத்துதி பாடியதில்லை. புகழ்ச்சியில் மயங்கியதில்லை. மாறாகத், ‘தன்னைப்புகழ வேண்டாம்; தன் படைப்புகளைப் படித்துவிட்டு, இங்கே இன்னும் கொஞ்சம் சிறப்பாகச்செய்திருக்கலாம், இது நன்றாயிருக்கிறது என்று கருத்துகள் கூறுங்கள் போதும்!’ என்று வெளிப்படையாக மேடையில் பேசுவார். அறிவுலகில் சிலர் அவருடையப் பணிகளை இருட்டடிப்புச் செய்தாலும் அதையும் சிறு புன்னகையுடன் கடந்துசெல்கிறார். இதுவரை எவரையும் கெட்ட சொற்கள் சொல்லித் திட்டிக்கேட்டதில்லை. வீட்டுக்கு வருபவர்கள் பெரியவரோ சிறியவரோ யாராயிருந்தாலும் எழுந்து சென்று  கைகூப்பி வணங்கி வரவேற்று அழைத்து இருக்கச் சொல்வது அவரது வழக்கம். தனக்கு யாரவது வஞ்சகம் செய்தாலும், “அவனுக்கு என்ன சந்தர்ப்பச் சூழ்நிலையோ!!!!!….பாவம் இப்படிச் செய்துவிட்டான்..விடு” என்று சொல்லி அதை எளிதில் மன்னித்து மறந்துவிடும் அரிய பண்பைக்கொண்டவர். அவருடன் மிகவும் நெருங்கிப்பழகிய சில நண்பர்கள், இப்பண்பை அன்பாகக் கேலி செய்வார்கள்: “அவனுக்கு மூட்டில் என்ன வலியோ, பாவம்! கையைத்தூக்கி ஓங்கிக்குத்திவிட்டான்.. இல்லையா?” என்பார்கள். அதற்கு, ‘போயா கிடக்கு’, என்று கூச்சப்படுவார்.  இனிமையான குரலில் பாடக்கூடியவர். மிகுந்த நகைச்சுவை உணர்வுகொண்டவர். சொற்களை வைத்து விளையாடி வியக்கவைப்பதில் வல்லவர். மேடையில் சுவையாகப் பேசக்கூடியவர். இப்படியே நான் இனியும் எழுதிக்கொண்டே செல்லலாம். செய்திகள் தீராது.
  இங்ஙனம் எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி, வெளியில் அலட்டிக்கொள்ளாமல், ‘தன் கடன் பணிசெய்து கிடப்பதே’ யென அடக்கத்தோடு தொடர்ந்து தமிழ்ப்பணி செய்துவரும் மூதறிஞர் தஞ்சையில் வாழும் முனைவர். அ. தட்சிணாமுர்த்தி அவர்கள். அவரது மகள் என்பதில் கட்டுரையாளராகிய எனக்குப் பெருமையுண்டு.
  அவரது ஒரே மகளாகப்பிறந்ததன் பயனாக நான் இப்பிறவியில் பெறும் இன்பங்கள் மிகப்பெரிது. வளரும்காலம்தொட்டு இன்றுவரை எல்லாப் பருவத்திலும் அவரைப் பலவகையாக நான் படுத்தியிருந்தாலும், இந்நிமிடம்வரை என்னிடம் அதிர்ந்துகூட ஒரு சொல் பேசியதில்லை. குரலை உயர்த்தியதில்லை. அடிப்பதற்குக் கையை ஓங்கியதுமில்லை. ஒருமுறை கூடப் பெயர்சொல்லி என்னை அழைத்ததுமில்லை. ‘ஏன்டா கண்ணு, அப்பாடி’ என்று தான் பேசுவார்.
  தன் வாழ்நாளுக்குள் எப்படியும் முடிந்தவரை மேல்கணக்கு கீழ்க்கணக்கு நூல்கள் முழுவதையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துவிடவேண்டும் என்று மனதில் உறுதியாக இருக்கிறார். இதற்கெல்லாம் அவருடைய உடல்நலம் ஒத்துழைக்க வேண்டும்.
ஈரநிலா தட்சிணாமூர்த்தி - eeranila
.  ஈரநிலா தட்சிணாமூர்த்தி





No comments: