தலைப்பு-இலக்குவனார்கவிதைகள் : ilakkuvanar kavithaikal_or_aayvu_thalaippu

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 31

1.5 அன்பர் வாழ்த்து
கி.ஆ.பெ. விசுவநாதம், கருமுத்து தியாகராசச் செட்டியார், அறிவியல் அறிஞர் கோ.து.நாயுடு, அ.கி. பரந்தாமனார், ஆதிமூலப் பெருமாள் ஆகிய ஐவர் மீதும் வாழ்த்திப் பாடிய வாழ்த்துக் கவிதைகள் இதில் அடங்கும்.
கி.ஆ.பெ. விசுவநாதம்
  ‘வாழ்க பல்லாண்டே’ என்னும் கவிதை இவர் மீது பாடப்பெற்றதாகும். இவருடைய என்பதாவது பிறந்தாளின் போது பாடப்பட்டது. ஒன்பது அடிகளால் அமைந்துள்ளது. இக்கவிதை நிலை மண்டில ஆசிரியப்பா வகையைச் சார்ந்தது.
  ‘தமிழ்மொழியைக் காக்க உடல் பொருள் உயிர் அனைத்தையும் அளிக்கும் பெற்றியர். சொல்வன்மை படைத்தவர். புலமை நிறைந்தவர். இனிய நண்பர். தமிழ் மறையாகிய திருக்குறளுக்கு இலக்கியமெனக் கூறத்தகும் சிறப்புடையவர். வளர் தமிழ் உயிராய் வாழ்க பல்லாண்டே’ என வாழ்த்துகிறார்.
விசுவ நாதர் னெலற்கரும் வீரர்
இனிய நண்பர் இன்சொற் செல்வர்
நானிலம் மகிழ நயவுரை புகழ்வோர்
தமிழ்மறைக் இலக்கிய மெனத்தகும் தலைவர்
வாழ்க பல்லாண்டே, வளர்தமிழ் உயிராய்
சூழ்கடல் உலகின் சுடர்மணி யெனவே! 79
கருமுத்து தியாகராசச் செட்டியார்
இவர் மீது பதின்மூன்று அடிகளையுடைய நேரிசை ஆசிரியப்பா பாடியுள்ளார் கவிஞர்.
 மதுரையில் பெருந்தொழிலதிபராய் விளங்கியவர். கல்லூரி பல நடத்தியவர். கலைத் தந்தை எனச் சிறப்பிக்கப்பட்டவர். இலக்குவனாரைத் தம் கல்லூரிக்கு அழைத்துப் பணி கொடுத்தவர். தமிழ் நலம் நாடுபவர். இந்தி மொழித் திணிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர். அயராது உழைப்பவர்.
குறள்நெறி போற்றிய செல்வர். அருங்கலை மகிழ்நர். தமிழில் கட்டுரைகள் இயற்றுவார். புலவர்க்கு உதவும் பண்பினர். எதிலும் செம்மையைக் காண்பவர். எளிய வாழ்வினர். இவர் வழிச் செல்வோர் எவரும் புகழ்நிலை அடைவர்.’80 என்கிறார்.
கோ.து. நாயுடு
இவர் மீது நாயுடு அடிகளையுடைய நேரிசை ஆசிரியப்பா பாடியுள்ளார் கவிஞர்.
‘கோவை நகரத்தின் தொழிலதிபர்’ புதியன படைக்கும் அறிவியல் அறிஞர். உழைப்பால் உயர்ந்தவர். அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பிறந்திருப்பாரேல் பண்டாரகர் பட்டம் நிறையப் பெற்றிருப்பர். நோபல் பரிசும் பெற்றிருப்பார். மூடப் பழக்கங்களை நீக்குவதற்காக இளமை முதல் தொண்டாற்றியவர். தன்னிடம் வருவோர்க்கு வாரி வழங்குபவர் அல்லர். ஆயினும் தகுதியுடையார் எவர் எனத் தெரிந்து அன்புடன் அழைத்து எவரும் அறியாமல் கோடி கோடியாய் கொடுப்பவர். வியத்தகு செயல்கள் ஆற்றும் திறனுடையார். இந்திய நாட்டில் தோன்றியதால் காட்டில் பூத்த மலரென வீணே இருக்கின்றார். அறிவுடையவரைப் போற்றாத அவலம் நீங்கும் நாளே நாம் வாழும் நாளாம். அறிஞரைப் போற்றி நன்மைகள் பல அடைவோம். துன்பம் மிகுந்த இந்த நாட்டிலே கோவை அறிஞர் நாயுடு நலமுடன் பல்லாண்டு வாழ்க! என வாழ்த்துகிறார் கவிஞர்.
 ‘அறிவுடை யோரை விரும்பா அவலம்
 ஒழியும் நாளே உய்வுறும் நாளாம்.
 அறிஞரைப் போற்றுவோம் அடைவோம் நன்மைகள்
 கோவைகள் அறிஞர் குன்றா நலத்துடன்
 வாழ்க பல்லாண்டு வாழ்க
 சூழ்க நல்லின்பம் துயர்மிகு நாட்டிலே’ 81
அ.கி. பரந்தாமனார்
‘தமிழ்ப் பணிபுரியும் தக்கோர்’ என்னும் கவிதை அ.கி. பரந்தாமனாரின் மணிவிழாவின் போது பாடப்பட்டதாகும். இது பதினான்கு அடிகளையுடைய நேரிசை ஆசிரியப்பா.
  அ.கி. பரந்தாமனார், மதுரைக் தியாகராசர் கல்லூரியில் கவிஞருடன் பணியாற்றியவர். மதுரையில் உள்ள திருவள்ளுவர் கழகம் பரந்தாமனாரின் தமிழ்ப் பணியைப் பாராட்டி விழா எடுத்தது. தமிழ்ப் பணிபுரிந்த சான்றோர் அ.கி. பரந்தாமனார் பிறரிடம் அன்பும் பற்றும் கொண்டும் விளங்கினார். இன்மொழி பேசும் குணமுடையவர். இனிய நண்பர். பொன்னும் புகழும் நிரம்பப் பெற்று வாழ்க. தமிழ் மொழிக்கு உண்டாகும் இடையூறுகளைத் தகர்க்கும் வலிமையுடன் வாழ்க. வையையாற்றின் மணலினும் பலவாண்டு வாழ்க என வாழ்த்துகிறார்.
 புகழ்மிகுப் பெருகி பொன்மிகு நிறைந்து
 தமிழ்க்குறும் இடரைத் தடுக்கும் உரனுடன்
 வாழ்க வாழ்க வாழ்க
 ஆழ்கடல் உலகில் அளப்பில் ஆண்டே. 82
ஆதிமூலப் பெருமாள்.
  ‘செந்தமிழ்ச் சோலை’ என்னும் கவிதை நூலைப் படைத்தவர் ஆதிமூலப் பெருமாள். இவர் எழுதிய கவிதை நூலுக்கு கவிதை வடிவில் வாழ்த்து வழங்கியுள்ளார் இலக்குவனார். பதினான்கு அடிகளையுடைய நேரிசை ஆசிரியப்பா இது. ஆதிமூலப் பெருமாள். தமிழ்மொழிப் பற்றும், தமிழ்ப் புலமையும் நிறைந்தவர். ஓவியக் கலையில் வல்லவர். உயர்குணம் கொண்ட அன்பர். திருவள்ளுவர் முதலாக – கவிமணி தேசிக விநாயாகம் பிள்ளை வரை கவிதைகள் இயற்றியுள்ளார். கவிதை நூலைக் கண்டு மகிழ்ந்து,
 இலக்கியத் தேனில் இன்பொருள் மாவைக்
 குழைத்தெடுத் தளித்த கூறுபல் அமுதை
 உண்டேன்; உளமிக மகிழ்ந்தேன்; உலகில்
 செந்தமிழ்ச் சோலை திக்கெலாம் நறுநிழல்
 பரப்புக; பலரும் இன்புற
 நிரப்புக நன்மணம் நெடிதுவா ழீயரோ.83
என்று வாழ்த்தியுள்ளார்.
குறிப்புகள்:
  1. சி. இலக்குவனார், கி.ஆ.பெ. முத்துவிழா மலர் ‘வாழ்க பல்லாண்டு’ ப-11, அ-ள் 4-9.
  2. சி. இலக்குவனார், குறள்நெறி, 15-1-1964.
  3. சி. இலக்குவனார், குறள்நெறி, அறிவியல் பேரறிஞர் கோ.து. நாயுடு அ-ள் 25-30.
  4. சி. இலக்குவனார், அ.கி.ப. மணிமலர், ப.128,அ-ள் 11-14.
  5. சி. இலக்குவனார், செந்தமிழ்ச் சோலை, ப.9, அ-ள் 9-14.
தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum

பெயர்-ம.இராமச்சந்திரன் _peyar_ma.ramachnathiran