தமிழுக்கு ஒளி தந்த தமிழொளி 3/4
எழுத்துப் பணி
தமிழ்ஒளி எப்போதும் எவருக்கும்
கட்டுப்பட்டு எழுதியதில்லை. அவருக்கு எப்போது எழுத வேண்டும் என்று
தோன்றுகிறதோ அப்போது எழுதினார். மற்ற நேரங்களில் நிகழ்வுகளை மனத்தில்
அசைபோட்டுக் கொண்டிருந்தார். எழுத்துத் துறையில் அவர் எவருக்கும்
கட்டுப்பட்டு வாழவில்லை என்பதை,
“நான் எந்த
நேரத்தில் எதை எழுதுவேன் என்பது எனக்கே தெரியாது. ஏனெனில் எதையும் நான்
திட்டமிட்டுச் செய்வதில்லை… அவ்வாறு செய்வது ஒரு கலைஞனின் பணியுமன்று. அஃது
எந்திரத்தின் போக்கு. நான் எந்த நேரத்தில் எதைப் படிக்கிறானோ, எதைப்
பார்க்கிறேனோ அதுவே என்னுள் கிளர்ந்தெழுந்து கவிதை, கதை, கட்டுரை என்று
பரிணமிக்கின்றன. அதனால்தான் இந்த நேரத்தில் இதை எழுது என்று எவர்
பணித்தாலும் எனக்கு எரிச்சலாக இருக்கிறது; அப்படி எழுதுவது இலக்கியமாக
இருக்காது என்றும் தோன்றுகிறது”
என்ற கவிஞரின் கூற்றுத் தெளிவுறுத்துவதாக அமைந்துள்ளது. இது “கவிஞர்கள் விடுதலைப் பறவைகள்” என்ற எமர்சன் கருத்தை அடியொற்றியதாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இணை ஆசிரியர் பணி
1948-ஆம் ஆண்டில் இந்தியப் பொதுவுடைமைக்கட்சி
தடை செய்யப்பட்டது. “சனசக்தி” பத்திரிகை அலுவலகமும் மூடி
முத்திரையிடப்பட்டது. கட்சித் தலைவர்கள் ‘தலைமறைவு வாழ்க்கை’ நடத்தினர்.
அந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் ‘முன்னணி’ என்னும் இதழ்தான் தலைமறைவாளர்களுக்குத் தொடர்பு சாதனமாக விளங்கியது. இவ்விதழைக் ‘கவிஞர் குயிலன்’ தொடங்கினார். அவருடன் இணை ஆசிரியராகப் பொறுப்பேற்று கவிஞர் தமிழ்ஒளி கடுமையாக உழைத்தார்.
தமிழ்ஒளி வாரந்தோறும் கவிதை, கதை, ஓரங்க
நாடகம், திறனாய்வு. என்று பலவாறு எழுதி, வாசகர்களை எழுச்சிபெறச் செய்தார்.
அந்த நாட்களில் பொதுவுடைமைக் கருத்துகளை மொழிபெயர்ப்பு இலக்கியங்கள்
வாயிலாக மட்டுமே மக்கள் அறிந்து வந்தனர். ஆனால் தமிழ்ஒளி அந்த நிலையை
மாற்றியமைத்தார். தமது படைப்பிலக்கியத்தின் மூலம் பொதுவுடைமைக் கருத்துகளைப் பரப்பினார்.
‘முன்னணி’ பத்திரிக்கையில் தமிழ்ஒளியின் பணி குறித்து,
“அந்நாளில் தலைமறைவாய் இருந்த என்
போன்றோர்க்குக் கிடைக்கப்பெற்ற பத்திரிகைகளில் முன்னணிதான் முதலிடம்
பெற்றது. இந்தப் பத்திரிகையில் கவிஞர் தமிழ்ஒளி எழுதிய கவிதைகள் மகா சக்தி
வாய்ந்தவை; மறக்க முடியாதவை. அந்த அளவிற்குப் பாரதி போன்று உலகு தழுவிய
பார்வையும்-உரத்த சிந்தனையும் உடையவை தமிழ்ஒளியின் கவிதைகள்” என்று
விடுதலைப் போராட்ட வீரர் திரு.சு.மு.கண்ணன் கூறியுள்ளது
தமிழ்ஒளியின் ஒப்பற்ற உழைப்பினை படம்பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
‘முன்னணி’ பத்திரிகையில் மட்டுமன்றி எழுத்தாளர் ‘விந்தன்’ நடத்திய ‘மனிதன்’ பத்திரிகையிலும் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.
பத்திரிக்கை தொடங்குதல்
தாமே ஒரு பத்திரிகையைத் தொடங்கி நடத்த வேண்டும் என்ற எண்ணம் கவிஞருக்கு உதயமானது. அதனால் அவர், ‘சனயுகம்’
என்னும் பத்திரிகையை 1950-ஆம் ஆண்டில் தொடங்கினார். இவ்விதழின் இரு
வெளியீடுகளை மட்டுமே தமிழ்ஒளியால் வெளியிட முடிந்தது. இரு இதழ்களை
வெளிகொணர்வதற்குள் அவரிடமிருந்த பணம் கரைந்து போனது. ‘சனயுகம்’
பத்திரிகையைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற வெறி தமிழ்ஒளிக்குள்
ஏற்பட்டது. எனவே அவர் தமது ஊருக்குச் சென்று பெற்றோரின் உதவியை நாடினார்.
அவர்கள் உதவ மறுத்ததால் குடும்பச் சொத்தாக இருந்த தென்னந்தோப்பை விற்க
முயன்றார். அதிலும் அவரது முயற்சி பலிக்கவில்லை. அதனால் மனம் உடைந்த அவர்
பெற்றோரிடம் சொல்லிக்கொள்ளாமலேயே சென்னை திரும்பினார்.
அன்று சென்னைக்கு வந்த தமிழ்ஒளி அதன்
பின்னர் 1962-ஆம் ஆண்டு வரை பன்னிரெண்டு ஆண்டு காலம், தமது பெற்றோர்களை
மறந்து, “போகும் வழி நீளமென்று புத்தி உணர்ந்தாலும் போகும்வழி எனது
போக்குக்கு இயைந்த வழி” என்று அவர் போக்கில் போய்க்கொண்டிருந்தார்.
1951-ஆம் ஆண்டில் ‘விசயன்’ என்னும்
புனைபெயரில் தமிழ்ஒளி, “மாமாவின் சாகசம்” என்ற சிறுபுதினத்தை எழுதினார்.
இதனைச் சக்தி வை.கோவிந்தன் வெளியிட்டார். தமிழ் ஒளியின் இந்த புதினம்
அன்றைய மலிவுவிலைப் பதிப்பாக வெளிவந்து விற்பனையில் பெரிய சாதனையைப்
படைத்தது எனலாம்.
பொதுவுடைமை இயக்கப் பாவலர்
சோவியத்து நாட்டில் நடைபெற்ற எழுத்தாளர் மாநாட்டின் தாக்கத்தால் தமிழகத்திலும், ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்’
முதலிய அமைப்புகள் உருவாயின. இச்சங்கத்தின் செயலாளர்களில் ஒருவராகத்
தமிழ்ஒளி செயல்பட்டுள்ளார். இந்த ஈடுபாட்டின் காரணமாகத், தேசியக்கவி பாரதியைப் போல, மக்கள் கவியாகிய, தமிழ்ஒளியும் 1952-ஆம் ஆண்டில் ‘மே நாளை’க் ,
“கோழிக்கு முன்னெழுந்து
கொத்தடிமைப் போலுழைத்துக்
கண்ணீர் துடைக்க வந்த காலமே நீ வருக!”
“மண்ணை இரும்பை மரத்தைப் பொருளாக்கி
விண்ணில் மழையிறக்கி
மேதினிக்கு நீர்ப்பாய்ச்சி
வாழ்க்கைப் பயிரிட்டு
வாழ்ந்த தொழிலாளிகையில்
விலங்கிட்டுக் காலமெலாம்
கொள்ளையிட்ட பொய்யர் குலம் நடுங்க
பொங்கிவந்த மே தினமே!”
என்று முதன்முதலில் வரவேற்றுக் குரல் கொடுத்தார்.
முனைவர் சி.சேதுராமன்,
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,
மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
மின்வரி: Malar.sethu@gmail.com
No comments:
Post a Comment