(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 37 தொடர்ச்சி)
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 38
இசைப்பாடல்
இசைப்பாடல் என்ற பிரிவில் திருவள்ளுவர் இயற்றிய கல்வி அதிகாரத்தின் சிறப்பை விளக்கும் வகையில் ‘கல்வியைப் போல் செல்வம் காணக்கிடையாது’ என்னும் பாடலை கவிஞர் யாத்துள்ளார்.
இப்பாடலுக்கு ‘இசைமணி சங்கரனார்’ என்பவர் இசையமைத்துள்ளார். இவர் திருநெல்வேலியைச் சேர்ந்த இசைவாணர் ஆவர்.
வித்துவான் ந. சேதுரகுநாதன் அவர்கள், வீ. முத்துச்சாமியின் ‘இலக்குவனார் ஆய்வுப் பண்பு’ என்னும் ஆய்வேட்டிற்கு அளித்த பே ட்டியில்,
‘இசைப்பாடல் யாக்கும் திறமும்
கைவரப்பெற்றவர்கள். இலக்குவனாரின் ‘அந்த நாள் என்று வருமோ’ என்னும்
பாடலும், ‘கல்வியைப் போல் செல்வம் காணக் கிடையாது’ என்னும் பாடலும், யான்
இயற்றிய கிளிக்கண்ணிகளும் இன்னும் நெல்லையில் பாடப்பட்டு வருகின்றது’117
என்று கூறியுள்ளார்.
1945 ஆம் ஆண்டில் மேற்படி இசைப்பாடல்கள்
இயற்றப்பட்டதாக வித்துவான் ந. சேதுரகுநாதன் குறிப்பிட்டுள்ளார்கள். எனினும்
‘அந்தநாள் என்று வருமோ’ என்னும் இசைப்பாடல் ஆய்வாளர் கைக்குக்
கிடைக்கவில்லை. ‘கல்வியைப் போல் செல்வமும் காணக்கிடையாது’ என்ற கவிதை
மட்டும் மதுரையிலுள்ள இலக்குவனார் இல்லத்தில் கிடைத்தது.
கவிஞர் இயற்றியுள்ள, ‘கல்வியைப் போல்
செல்வம் காணக்கிடையாது’ என்ற குறள் கீர்த்தனைப் பாடலை, இசைமணி சங்கரனார்,
சண்முகப் பிரியா பண்ணில், ஆதி தாளத்தில் இசையமைத்து திருநெல்வேலிப்
பகுதிகளில் பாடியுள்ளார்.
கல்வியின் சிறப்பை இசைப்பாடலாக கவிஞர் பாடியுள்ளார் என்று கூறலாம்.
மக்களுக்குப் பலவகையிலும் மிகுந்த பயனைக் கொடுப்பதால், கல்வியைப் போல் பிறிதொரு செல்வம் இவ்வுலகில் இல்லை என்கிறார்.
கல்வி பெறாதவர் கண் பெற்றும் குருடரே. இவ்வுலகில் நல்வாழ்வை அமைத்திட கல்வி இன்றியமையாதது என்கிறார்.
கற்கத் தகுந்த நூல்களை ஐயந்திரிபறக்கற்க
வேண்டும். கற்றபின் அந்நூல்கள் குறிப்பிட்டுள்ளபடி நடக்க வேண்டும்.
எந்தச்திசையில் போனாலும், எந்தநாட்டுக்குச் சென்றாலும் இனிய வாழ்வைப் பெற
அது உதவுகின்றபடியல் கல்வியைப் போல் பிற செல்வம் காண்பது அரிது என்று
கூறுகிறார்.
கதைப்பாடல்கள்
கதைப்பாடல்கள் வரிசையில் ‘எழிலரசி’ எனும் குறுங்காவியமும், ‘உழைப்பால் உயர்ந்தோர்’ எனும் கதைப்பாடலும் கவிஞர் இயற்றியுள்ளார். இருகதைப் பாடல்ளும் ஆய்வாளர்க்குக் கிடைக்கவில்லை.
;எழிரலசி; என்னும் கதைப்பாடல் 1933 ஆம்
ஆண்டு இயற்றப்பட்டு 1934 இல் பதிவு செய்யப் பெற்றதாக ‘தமிழ்நூல் விவர
அட்டவணை’118 தெரிவிக்கிறது.
சிலம்பொலி சு. செல்லப்பன் அவர்கள்
‘தமிழ்வளர்ச்சி இயக்குநராக’ இருந்த போது வெளியிடப்பட்ட மேற்படி அட்டவணை,
‘எழிலரசி’ பற்றிய தகவலை முழுமையாகத் தெரிவித்துள்ளது.
‘உழைப்பால் உயர்ந்தோர்’ எனும் கதைப்பாடல்பற்றி வாய்மொழிச் செய்தியன்றி விபரங்கள் ஏதும் முழுமையாகக் கிடைக்கவில்லை.
‘தமிழன்னை’ எனும் காப்பியம் எழுத முயன்று
கொண்டிருந்தார். முதல் இருபது வரிகள் கையெழுத்துப படியாக உள்ளது என்று வீ.
முத்துச்சாமி அவர்கள் தம் ஆய்வேட்டில் குறிப்பிட்டுள்ளார். 119
குறிப்புகள்:
- வீ. முத்துச்சாமி, இலக்குவனார் ஆய்வுப் பண்பு, ‘பின்னிணைப்பு’ நேர்முகம்-3, மதுரை 1979, ப-9,
வ-ள் 3-6.
- சு. செல்லப்பன் (பொ.ப.ஆ) தமிழ்நூல் விவர அட்டவணை தமிழ் வளர்ச்சிக் கழக வெளியீடு, சென்னை 1983, ப-573.
- வீ. முத்துச்சாமி, இலக்குவனார் ஆய்வுப் பண்பு பின்னிணைப்பு, ப-38.
No comments:
Post a Comment