Wednesday, February 01, 2017

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙி] – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல 171, தை 16, 2048 / சனவரி 29, 2017

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்  (ஙாஙி]

3. தமிழ்நலப் போராளி  தொடர்ச்சி
 தமிழ்ப்பகைவர் என்போர் தமிழ்த்துறையுடன் தொடர்பற்றவர்கள் எனக் கருதினால் அதுவும் தவறாகும். எடுத்துக்காட்டிற்கு ஒன்று. திருநெல்வேலி ம.தி.தா.இந்துக் கல்லூரியில் பேராசிரியர் சேரும் முன்பு தமிழ் வகுப்பிலும் ஆங்கிலம்தான் தவழ்ந்தது. ஆங்கிலம் மூலம் தமிழை விளக்குவதில் பெருமை கண்டனர் தமிழ்த்துறையினர். ஆங்கிலத்தில் பேசுவதே தம் உயிர் மூச்சு எனக் கொண்டனர் அவர்கள். ஆனால் பேராசிரியர் அங்குத் தமிழ்த்துறைத் தலைவராகச் சென்ற பின்பு தமிழ்த்துறை மட்டுமல்ல கல்லூரியே தமிழ்மணத்தில் மணந்தது. “இந்துக் கல்லூரியின் கருங்கல்லும் செங்கல்லும்கூட இலக்குவனாரால் கன்னித்தமிழ் பாடுகிறது” என அவர் மாணவர் வேலுச்சாமி (பக்கம் மு8 : செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார்) கூறியது நெல்லை மக்களின் ஒருமித்த கருத்தாகும். அக்காலத் தமிழாசிரியர் நிலை குறித்தும் பேராசிரியர் தொண்டினால் பரவிய தமிழ் உணர்வு குறித்தும் ஆரியக் காதலர்கள் எதிர்ப்பு குறித்தும் பேராசிரியரே ‘என் வாழ்க்கைப் போர்’ நூலில்(கையெழுத்துப்படி) பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
 அங்குத் தமிழ்த் துறையாசிரியர்கள் தூய தமிழைப் போற்றும் கொள்கையை வெறுத்துள்ளனர். வேற்றுமொழிச் சோற்களைக் கலந்து பேசுதலே தமிழில் புதுமலர்ச்சி என்று முழங்கி வந்தனர். ஏன் தமிழ்ப் பாடங்களை – பாட்டுகளை – ஆங்கிலத்தில் விளக்குவதைப் பெருமையாகக் கருதினர். தமிழ் வகுப்பில் ஆங்கிலம் கலவாது உரையாடுதலே அவர்கட்கு இழுக்கெனக் கருதி வந்தனர். ஆங்கில ஆசிரியர்களுடன் போட்டியிடுவது போன்று ஆங்கிலத்தை அளாவிப் பேசி வந்தனர். ஆங்கிலம் அறியாத புலவர்கள் ஒன்றும் அறியாத கட்டுப் பெட்டிகள் என மாணவர்களை நம்ப வைத்தனர்.
 ஆங்கிலம் ஒன்றையே கற்று, அதற்கே ஆக்கையும் ஆவியும் விட்டு, தாங்களும் அயலவராகித் தமிழின் தொடர்பற்றுப் போகும் இழிநிலைக்கு மாணவர்களை இட்டுச் சென்றனர்.
 தேசியப் பெரும்புலவர் பாரதியார் பயின்றது இக்கல்லூரியின் தொடர்பாயுள்ள உயர்நிலைக் கல்விக் கூடத்தில்தான் என்பது அறியத்தக்கது. ஆங்கிலக் கல்வியால் வரும் தீமையை அவர் அழகுறக் கூறியிருப்பதை அறிந்திருந்தும் அறியாதவர் போன்று நடந்து கொண்டு வந்தனர்.
 யான் ஆங்கிலத்தை வெறுத்தவனல்லன். ஆங்கிலத்தால் அடைய இருக்கும் நன்மைகள் அளப்பில. அதனை இரண்டாவது கட்டாயமொழியாகப் பயில வேண்டியது தமிழர்களின் தவிர்க்கலாகாக் கடனே என்று அன்றும் கூறினேன்; இன்றும் கூறுவேன். ஆனால் அதற்கு அடிமையாகித் தமிழைப் புறக்கணிக்காலாகாது என்பது தான் எனது கொள்கை.
 அன்று தமிழ் தவிர்த்து அனைத்துப் பாடங்களும் ஆங்கிலத்தில்தான் கற்பிக்கப்பட்டன. தமிழையும் ஆங்கிலத்தில் கற்பித்தால் தமிழ்ச் சொற்களைச் செவி குளிர மாணவர்கள் எங்குச் சென்று கேட்பர். ‘சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே’என்பதனை மாணவர்கள் எப்படி அறிவர்?
 தமிழ் ஆசிரியர்கள் தங்கள் ஆங்கிலப் புலமையை வெளிப்படுத்தி மாணவர்களின் பாராட்டுதலைப் பெறவிரும்பினர். ஆனால் மாணவர்களில் பலர் இதனை உள்ளூர வெறுத்துக் கொண்டிருந்தனர். “ஆங்கிலத்தைக் கேட்பதற்கு ஆங்கில வகுப்புகள் உள்ளனவே. தமிழ் வகுப்புகளில் ஆங்கிலம் எற்றுக்கு? அன்றியும் ஆங்கில ஆசிரியர்களைவிடத் தமிழாசிரியர்கள் ஆங்கிலத்தை அழகுறு நடையில் பொழிய இயலுமா?” எனத் தமக்குள்ளே கூறிப் புழுங்கினர். ‘தமிழ்நாட்டில் எல்லாம் தமிழில்; எங்கும் தமிழ்’ என்ற நிலை ஏற்பட வேண்டும் என்ற கொள்கையை யான் வெளிப்படுத்தியவுடன் மாணவர்கட்கு ஊக்கம்   உண்டாகி விட்டது. தமிழைப் போற்றத் தொடங்கி விட்டனர். வகுப்பில் வருகைப் பதிவுக்குத் தமிழில் விடையளித்தனர். ‘உளேன் ஐயா’ என உள்ளன்புடன் உரைத்தனர். விளையாடுமிடங்களில் வியன் தமிழ் புகுந்தது. ‘Love all’ என்பதனை விடுத்து ‘அன்பே கடவுள்’ என ஆர்வமுடன் மொழிந்தனர். மாணவரிடையே தமிழ்ப் புரட்சி மலர்ந்து விட்டது.
விளையாட்டுத்துறை ஆசிரியர் “உங்கள் தமிழைத் தமிழ் வகுப்புகளில் மட்டும் வைத்துக் கொள்ளச் சொல்லுங்கள்; வேறு வகுப்புகளில் புகுத்தவேண்டா” என்று வேண்டினார். தமிழ்த் துறை ஆசிரியர் ஒருவர் தம் வகுப்பில் மாணவர்கள் நோக்கி ஆங்கிலத்தை வெறுத்தல் கூடாது; ‘Touch me not; See me not’ என்ற கொள்கை இக்காலத்துக்கு ஏலாது. ஆங்கிலம்தான் வாழ்வளிக்கும் என்று கூறியதாக அறிந்தேன்.
  யான் அவ்வகுப்புச் சென்றபோது “ஆங்கிலத்தை வெறுத்தல் வேண்டா. ஆனால் தமிழைப் புறக்கணித்தல் தவறு (‘Drive me not; Kill me not’) என்று தமிழன்னை கூறுகின்றார். தமிழ்ச் சொல் இருக்கும் போது ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்துவது தமிழைக் கொல்லுவதற்கு ஒப்பாகும்” என்று கூறத் தொடங்கினேன். மாணவர்களிடையே தமிழ்க்கனல் கொழுந்து விட்டெரியத் தொடங்கி விட்டது. ஆங்கிலத்துக்கு அடிமையாய் இருந்த தமிழ் ஆசிரியர் தம் அழுகைக் கண்ணீரால் தமிழ்க் கனலை அகற்ற முயன்றார். வருகைப் பதிவின் போது மாணவர்கள் தமிழில் கூறத் தொடங்கியவுடன், கண்ணீர் வடித்த வண்ணம் “நான் இன்னும் சில நாட்கள் தான் இங்குப் பணிபுரிவேன்; ஆகவே தமிழில் கூறும் மாறுதலை நிறுத்துங்கள். என்பால் அன்பே காட்டுங்கள்” என்று வேண்டினராம். மாணவர்கள் இரக்கம் காட்டவில்லை. பின்னர் முதல்வரிடம் சென்று முறையிட்டனராம். முதல்வர், “மாணவர்கள் விருப்பப்படிச் செல்லுதலே மேல்” என்று கூறிவிட்டனராம்.
  தூய தமிழ்ப் பற்று வளரத் தொடங்கியதும் பிராமண மாணவர்கள் – வடமொழி பயின்றவர்கள் – என்னை வடமொழி வெறுப்பாளன் என்று கருதி விட்டனர்.
 யான் அங்குப் பணியேற்ற செய்தி பரவியவுடன் அவ்வூர் வழக்கறிஞர்கள் கூட்டத்தில் பிராமணர்கள் என் பெயரை அறிந்தவுடன் “இவர் ஒரு வடமொழி வெறுப்பாளர்; பெயரே அறிவிக்கின்றது” என்றனராம். யாம் மாலையில் நெல்லைப் பெரு வழியில் தனியாக உலாவச் செல்வதுண்டு. பெருவழியை ஒட்டி, கைப்பந்து மட்டைப் பந்து விளையாடுமிடங்கள் இருந்தன. அவை, பிராமணர்கள் மிகுதியாய் உறைந்த தெருக்களை ஒட்டியிருந்தன. பிராமண மாணவர்களே தாமே அமைத்துக் கொண்ட விளையாடுமிடங்கள். அங்கு விளையாடுகின்ற அவர்கள் என்னைக் கண்டதும் ‘Sanskrit Zindabad’ என்று முழங்கத் தொடங்கினர். சில நாட்கள் பொறுத்தேன். ஒருநாள் அவர்கள் முழங்கத் தொடங்கியதும், அவர்களை நோக்கி நடந்தேன். மட்டைகளைப் போட்டு விட்டு ஓடிவிட்டார்கள். பிறகு அம் மாணவர்களில் சிலரையழைத்து அவ்வாறு முழங்குவது நன்றன்று என்று அறிவுரை கூறியவுடன் அதனை நிறுத்திக் கொண்டு விட்டனர்.
 பேராசிரியர் இலக்குவனார், கல்லூரி நிலத்தில் தமிழ் உணர்வு விதையைத் தூவினாலும், பயன் தமிழ் மண் எங்கும் விளைந்தது. மன்பதை நிலையைப் புரட்டிப் போடுபவன்தானே போராளியாக இருக்க முடியும். தாம் வாழ்ந்த காலத்தில் தமிழுக்கு எதிராக இருந்த மன்பதைச் சூழலைத் தம் நெறியுரையால், வாதுரையால், தொண்டினால், புரட்டிப் போட்ட போராளி பேராசிரியர் இலக்குவனார்போல் வேறு ஒருவரைக் கூற இயலுமோ?
 தருமையருள் பெறு நெல்லை அருணகிரி இசைக்கழகம் ஒன்று நெல்லையில் அமைக்கப்பட்டது; ஞாயிறுதோறும் சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன. இதன் வாயிலாகப் பேராசிரியர் ஆற்றிய தமிழ்ப்பணி நெல்லைக்குப் புகழ் சேர்த்தது. இவ்வமைப்புடன் இணைந்து பேராசிரியர் ஆற்றிய பணிகளை அவரே பின்வருமாறு குறித்துள்ளார்:
  என் ஆய்வுரையை-அறிவுரையைக் கேட்டு நிகழ்ச்சிகளை அமைப்பது வழக்கம். யானும் அவ்வப் போது பல தலைப்புகளில் சொற்பொழி வாற்றுவதுண்டு. சிறப்பு நிகழ்ச்சிகளின் போது முன்னுரையும் நன்றியுரையும் கூறுவதுண்டு. தூயத் தமிழ்க் கொள்கையைப் பரப்புவதற்கு இக் கழக மேடை நன்கு பயன்பட்டது. எனது தொடர்பு இக்கழகத்திற்கு இருந்ததனால் இதனைக் கருஞ்சட்டைக் கழகம் என அழைத்தனர் தமிழ்ப் பகைவர்கள். அவ்வாறே கருதித் தருமபுர மடாதிபதிக்கும் கடிதம் எழுதினர். கழக நிகழ்ச்சி நடை பெற்ற இடம் தருமபுர மடத்துக்கு உரிமையான இடம். மடாதிபதி அவர்களும் தமக்குரியோர் மூலம் உண்மையறிய முயன்றனர். வறிதே மூடப்பட்டிருந்த மடம், இவ்வாறு தமிழும் சைவமும் வளரப் பயன்படுவது கண்டு பேருவகை கொண்டனர். தமிழ்ப் பகைவர் தம் எண்ணம் ஈடேறாது வருந்தினர்.
    இவ்விசைக் கழகச் சார்பாகத் தமிழ்த் திருநாள் பொங்கல் விழா  நடாத்தினோம். ஒரு நாழிகைச் சொற்பொழிவும், சிவப்பு விளக்கால் சொற்பொழிவைக் கட்டுப்படுத்தும் முறையும் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டன. தெருவெல்லாம் செந்தமிழ் முழக்கம்   செழிக்கச் செயப்பட்டது. தனித் தமிழ் வெற்றி கொண்டு விட்டது. தமிழ் அன்னை வீறுடன் வீற்றிருந்தாள்.
  எதிலும் புதுமை காணும் பேராசிரியர், மேடைப்பேச்சில் காலவரையறையை நடைமுறைப்படுத்திய புதுப்பாங்கு, இன்றைய பட்டிமன்ற உரைகளில் மணி அடித்து உரையை முடிக்கச் செய்யும் பழக்கத்திற்கு அடிகோலியது.
 (தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்

No comments: