செம்மொழி விருதாளர்கள் குறிப்புகள் (2013 -14, 2014-15, 2015 – 16) – ஙி

இளம் அறிஞர்கள் – 2014-2015


முனைவர் . சதீசு
  முனைவர் . சதீசு 1982 இல் விழுப்புரம் மாவட்டம் கண்ணியம் என்னும் ஊரில் பிறந்தவர். மயிலம், சிரீமத்து சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை அறிவியல் கல்லூரியில் இலக்கிய இளங்கலை (பி.லிட்.), சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை, முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளார். சுவடியியலிலும் பதிப்பியலிலும் பட்டயச் சான்றிதழ் பெற்றிருப்பது சிறப்பாகும். சங்க இலக்கியம், தொல்காப்பியம் ஆகிய பழந்தமிழ் இலக்கிய, இலக்கணங்களில் ஆழ்ந்த புலமை உடையவர். மொழியியல் மற்றும் சுவடியியலிலும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்.
  சென்னை, ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக நான்கு ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். தற்போது விழுப்புரம் சிரீமத்து சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை அறிவியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். ஐந்து நூல்களை எழுதியுள்ளார். இலக்கணம் குறித்த இவருடைய நூல்களும், கட்டுரைகளும் புதிய அணுகுமுறைகளைக் கையாள்பவை. தமிழ் யாப்பியல் மரபுகள்: புறநானூற்று யாப்பியல், யாப்பருங்கல விருத்தியுரைகாரரின் தொல்காப்பிய உரை, தொல்காப்பியம்சங்க இலக்கியம்: யாப்பியல் சிந்தனைகள் எனும் மூன்று நூல்களும் இவரது தமிழ் ஆய்விற்கும், இலக்கிய இலக்கணப் புலமைக்கும் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

 

முனைவர் செ. முத்துச்செல்வன்
  முனைவர் செ. முத்துச்செல்வன் 1977 இல் சேலம் மாவட்டம் நாவக்குறிச்சி என்னும் ஊரில் பிறந்தவர். ஆத்தூர், அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், திருச்சி, பாதிரியார் ஈபர் கல்லூரியில் முதுகலைப் பட்டமும், அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டமும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் முனைவர் பட்ட மேலாய்வும் புரிந்துள்ளார். சங்க இலக்கியம், ஓலைச்சுவடியியல், தமிழ்க் கணிணி, சொல்லடைவு, தொடரடைவு ஆகிய துறைகளில் புலமை பெற்றவர். சென்னையில் பல்வேறு கல்லூரிகளில் ஒன்பது ஆண்டுகள் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார். சென்னை, தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் திட்ட ஆய்வு வளமையராக ஓராண்டு பணிபுரிந்துள்ளார். தற்போது சென்னை மீனம்பாக்கம் அகர்சந்து மான்மல் சமணர் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
 அகநானூற்றுக்குச் சொல், பொருள், இலக்கணக் குறிப்புடனான தொடரடைவு, இக்காலத் தமிழ் ஆய்வாளர்களுக்குச் சுவடியியல் பதிப்பு வரலாற்றைப் புலப்படுத்துதல், செம்மொழித் தமிழ் தொடர்பான உலக அறிஞர்களின் நோக்கில் தமிழை ஆவணப்படுத்துதல் முதலிய பணிகளில் ஈடுபட்டுள்ளார். இருபதுக்கும் மேற்பட்ட தேசிய, பன்னாட்டுக் கருத்தரங்குகளில் கட்டுரைகள் வழங்கியுள்ளார். ஆறு நூல்கள் எழுதியுள்ளார். அகநானூறுதொடரடைவு (இரண்டு தொகுதிகள்), ஓலைச்சுவடிப் பதிப்பு வரலாறு, சுவடி வரலாற்றுச் சோலை ஆகிய இவரது மூன்று நூல்களும் சங்க இலக்கியம், சுவடியியல் சார்ந்த சிறப்பான பங்களிப்புகளாகும். அகநானூறு தொடரடைவு,  ஓலைச்சுவடிப் பதிப்பு வரலாறுஆத்தூர் வட்டார விடுகதைகள் ஆகிய நூல்கள் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் நிதி உதவியுடன் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 
 முனைவர் . திருஞானசம்பந்தம்
  முனைவர் . திருஞானசம்பந்தம் 1983இல் விழுப்புரம் மாவட்டம் இராயர்பாளையம் என்னும் ஊரில் பிறந்தவர். மயிலம் தமிழ்க் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்களையும் பெற்றுள்ளார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட மேலாய்வு புரிந்து வருகிறார். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதித் திருத்தப் பணித் திட்டத்தில் சொல் தொகுப்பாளராக ஓராண்டு பணிபுரிந்துள்ளார். சென்னை, வேல்சு பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக நான்கு ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். ஏழு நூல்களும், இருபத்தைந்துக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார்.  மொழியியல் ஆய்வு வரலாறு: பேரா. . அகத்தியலிங்கம் பங்களிப்புகள், பதினெண்கீழ்க்கணக்கின் யாப்பமைதி, பதினெண் கீழ்க்கணக்கு வடிவமும் வரலாறும், பதினெண் கீழ்க்கணக்குத் தொகுப்பும் வாசிப்பும்தமிழியல் ஆய்வு வரலாறு:    பேரா. (இ). மணிகண்டன்ஆசிரியம்ஆய்வுகள்உரைப்பதிவுகள் எனும் இவரின் ஐந்து நூல்களும் பாராட்டுக்குரியவை.
   செவ்விலக்கியப் பனுவல்கள் குறித்து இவரால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளும் தொல்காப்பியத்தில் காணப்படும் நுண்ணிய பகுதிகளான இழைபு, யாப்பு, நோக்கு, பயன் ஆகியவையும் புதிய அணுகுமுறையில் அமைந்துள்ள ஆய்வுகளுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.

 
  முனைவர் மா. வசந்தகுமாரி
முனைவர் மா. வசந்தகுமாரி 1976இல் சேலம் மாவட்டம் தாரமங்கலம் என்னும் ஊரில் பிறந்தவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளார். இலக்கணத்தில் புலமை உடையவர். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதித் திருத்தப் பணித் திட்டத்தில் ஓராண்டு சொல் தொகுப்பாளராகவும், சென்னை, வேல்சு பல்கலைக்கழகத்தில் மூன்றாண்டுகள் உதவிப் பேராசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். தற்போது திருச்செங்கோடு விவேகானந்தா கலை, அறிவியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். செவ்வியல் தமிழ்ப் பனுவல்களைப் புதுமை நோக்கில் விளக்கும் இரண்டு நூல்களையும், மூதறிஞர் பற்றிய ஒரு நூலும் எழுதியுள்ளார். இருபத்தைந்துக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். சங்க இலக்கியத்தில் கருத்தாடல், தொல்காப்பியக் கருத்தாடல் ஆகிய இரு நூல்களும் இவரது இலக்கிய, இலக்கணப் புலமையை வெளிப்படுத்தும் நூல்களாகும்.

முனைவர் கோ. சதீசு
  முனைவர் கோ. சதீசு 1976இல் சீர்காழி என்னும் ஊரில் பிறந்தவர். பூம்புகார் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டமும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை மொழியியல் பட்டமும் பெற்றிருப்பது சிறப்பாகும்.  இலக்கணத்திலும், மொழியியலிலும் புலமை பெற்றவர். மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரியில் நான்கு ஆண்டுகள் உதவிப் பேராசிரியராகவும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நான்கு ஆண்டுகள் ஆய்வு வளமையராகவும் பணிபுரிந்துள்ளார். தற்போது தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். பல்வேறு தேசியப் பயிலரங்குகளில் கலந்து கொண்டு ஆய்வு மாணவர்களுக்கு இலக்கணப் பயிற்சி அளித்துள்ளார். சங்கத் தமிழ்: மொழியியல் பார்வைகள், பண்டைத் தமிழ்ப் பனுவல்கள் ஆகிய நூல்கள் சங்க இலக்கிய ஆய்வுக்கு இவரது பங்களிப்புகள் ஆகும்.