ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன்

(2.)

2.தமிழ் முழக்கம்
என்றன் இனத்தை ஒன்று சேர்க்காமல்
இறுதி எனக்கு வாராது;
என்மொழி உலகாள வைக்காமல்
என்றன் உயிரோ போகாது’
என்ற வேகமும் தாகமும் கொண்டிருப்பவர் பெருங்கவிக்கோ சேதுராமன். தமிழ் மொழியிடம் அளவிலா அன்பும் பற்றும்(பக்தியும்) ஈடுபாடும் கொண்டுள்ள கவிஞர், தமிழை அன்னையாக உள்ளத்தில் நிலைநிறுத்திப் போற்றி வணங்குகிறார். தனக்கு ஆற்றலும் துணிவும் செயலூக்கமும் தந்து தன்னை வளர்க்கும் தாய், தமிழ்தான் என்று பாடித் துதிப்பதில் அவருக்கு அலுப்பு ஏற்படுவதேயில்லை. அப்படித் தமிழன்னை வாழ்த்துப் பாடுவதிலும் அவர் புதுமைகள் நயங்கள் பல சேர்த்துத் துதிப்பது படிப்பதற்கு இனிய விருந்தாக விளங்குகிறது.
அன்னையே தமிழே இன்ப
அமிழ்தத்தின் மறுபிறப்பே!
கன்னலே என்பேன் ஆயின்
கைக்குமே அதுவும் ஒர்நாள்!

பன்னலம் சூழ்ந்த அம்மா
பாட்டிலே நிலைத்து நிற்கும்
உன்னையே வணங்குகின்றேன்
 உளத்தினால் போற்றுகின்றேன்!
தமிழ் அன்னை தான் தனக்கு வீரமும் செயல் துணிவும் தந்து அருள் பாவிப்பதாக அவர் நம்பிக்கை யோடு போற்றி வணங்குகிறார்.
யான் வணங்கும் தெய்வ நன்மகளே! ஒப்பில்லா
 நற்றவத் தவமகளே! நம்பிக்கை நெஞ்சத்தால்
செற்றார் மருளுமுன் செயல் துணிவைத் தந்தவளே!
 என்றும்
வியப்பிற்கோர் எல்லையென நின்றாய் எங்கள்
வேல்வரிசை வாள் வரிசைக் கவிதை தந்தாய்
செயற்கரிய செய்கின்ற திறங்கள் ஈந்தாய்
செப்பரிய மேல்நிலையில் நிற்க வைத்தாய்
கயவர்கள் செய்செயலைக் காலின் தூசாய்க்
கருதுகின்ற ஆண்மையெனும் வீரம் காத்தாய்
புயவலிமை தந்தவளே! அறிவின் மாட்சிப்
புடம் போட்ட தமிழ் மகளே வணக்கம் அம்மா!
  இவ்வாறு வணக்கம் கூறியே அவர் ஒவ்வொரு கவி அரங்கத்திலும் பாட ஆரம்பிக்கிறார். ஆனால், ஒவ்வொரு முறையும் தனித்தனி விதத்தில் போற்றிக் கவிதை இயற்றிக் கூறும் அவரது கவிதையாற்றல் வியத்தலுக்கு உரியது. ஒருமுறை பாடிய வணக்கப் பாடலை மறுமுறை அவர் பாடுவதில்லை. அவருடைய தமிழ்ப் பற்று(பக்தி) நவநவ மான துதிப்பாடல்களை ஆக்கும் திறனை அவருக்கு அளிக்கிறது. அதில் அவருடைய தன்னம்பிக்கையும் ஒலி செய்வதைக் கேட்க முடிகிறது.
முன்னைத் தமிழே முதன் முதலில் உலகோர்நா
தன்னை அசைத்த தண்டமிழே இன்றுவரை
உன்னைப் புறம்போக்க உட்பகை மோதிடினும்
அன்னைவேலெறிந்தே அடர்வெற்றி கண்டவளே!
அம்மா என்னுள்ள ஆலயத்தின் உயிர்ச்சிலையே!
செம்மை மகனுன்றன் சேவடியை வணங்குகிறேன்!
கூலிக்குப் பாடிக் குளிர்காய்ந்து போகாமல்
தாலிக்குப் பொன்போலத் தமிழ்க் கவிதை பாடி வையம்
பாலிக்கும் பெருங்கவிக்கோ’ பாடுகிறேன் பாடுகிறேன்!
 இதை ஓர் எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம்.
மூச்சும் தமிழ், பேச்சும் தமிழ், வாழ்வதும் தமிழுக் காக என்று கருதிச் செயல் புரியும் கவிஞர் தனது இதய ஒலியை அழகாகப் பதிவு செய்துள்ளார் இப்படி:

இந்தப் பிறவி தமிழ்க்காக எடுத்துளேன்
ஈங்கெவர் மாற்றவல்லார்-வரும்
எந்தப் பிறவி எடுப்பினும் என்பணி
இனிய தமிழ்ப் பணியே!-இறை
தந்த செல்வம்தனில் சாகாத செல்வமாம்
தண்டமிழ்ச் செல்வமொன்றே-உயர்
சிந்தை உடல்பொருள் ஆவியெல்லாம் தமிழ்த்
தெய்வத் திருவடிக்கே!’
  தாய்மொழியிடம் அளவிலாப் பற்றுதல் கொண்டிருப் பதனால், அன்னைத் தமிழ்மொழி இன்றுள்ள நிலை கண்டு கவிஞர் மனம் புழுங்குவது தவிர்க்க இயலாததாகும். அவருடைய மனவேதனை கவிதைகளில் பொதிந்து கிடக்கிறது.
நேற்று தோன்றிய மொழிகள் எல்லாம்
நிலைத்து நிற்கையிலே-என்றோ
தோன்றிச் செழித்த மொழியென் தமிழ்த்தாய்,
தோற்றுப் போவதுவோ?

ஊமை கண்ட கனவாய்த்
தமிழர் உரிமை போவதுவோ?-எங்கள்
பானம் எழுத்துப் பதராய்க் காற்றில்
பறந்து சாவதுவோ?

கூவும் குரல்வளைக் கொள்கை முழக்கக்
குறிக்கோள் அஞ்சுவதோ?-இனிய
நாவுக் கன்னை நற்றமிழ் அரசி
நானிலம் துஞ்சுவதோ?

(தொடரும்)
வல்லிக்கண்ணன்:
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்