ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (6.)

2.தமிழ் முழக்கம் (தொடர்ச்சி)

தேயாத ஒருவான நிலவே அந்நாள்
செந்தமிழர் வாழ்வென்றால். வருங்காலத்தில்
ஒயாத புகழ்க்கதிரோன் வரவை நோக்கி
உழைப்போம் நாம் உறுதியுடன் வெற்றி காண்போம்
பேயாத விண்ணும் ஓர் நாளில் பெய்யும் பேரிருளும்
 பகல் வந்தால் பிணங்கி ஓடும்!
நாயாக நாமின்று தாழ்ந்த லைந்தால்
நமக்கும் ஓர் எதிர்காலம் உண்டோ? சொல்வீர்!’
எதிர்கால வளத்துக்காகச் செய்யப்பட வேண்டிய ஆக்கப்பணிகளை அறிவுறுத்துகிறார் கவிஞர்.
பல்கலை நற்கழகத்தில் தமிழ்முழக்கம்
பாய்ச்சும் நாள் அன்றோ நம் தமிழர் பொன்னாள்!
 எல்லாநல் லியல்களையும் தமிழ்ச் சான்றோர்கள்
எம் தமிழில் முழக்குகிறார் என்றே ஓங்கிச்
சொல் நாளே தமிழ்க்குலத்தார் உவந்துபோற்றும்
சுடர்ப்பொன்னாள்! இடர்நீங்கும் நன்னாள் என்பேன்!

 கல்விதரு கூடங்கள் மற்றும் உள்ள
 கல்லூரிப் படிப்பெல்லாம் தமிழர்நாட்டுள்
எல்லாமே இருக்கின்ற இயல்கள் முற்றும்
இணையில்லாத் தமிழ் மொழியில் இன்பம் பொங்கச்
சொல்லித் தரும் நாளென்றோ அந்நாள் எங்கள்
சோர்வகலும் வெற்றி நாள்! நன்னாள் அந் நாள்
இல்லாமல் போய்விடுமோ? தமிழா இன்றே
எழுந்தே நில்! தமிழ்முழக்கி எடுநீ வாளை!
 வெறும் உணர்ச்சி ஊட்டும் முழக்கமாக இல்லாது, பயனுள்ள யோசனைகளையும் கவிஞர் எடுத்துக் கூறுவது போற்றப்பட வேண்டியதாகும்.
அறிவியலை, அணுவியலை அண்டம் முற்றும்
ஆராயும் நல்லியலை வானம் தன்னின்
நெறியியல்கள் செறியியலை, அறிஞர்போற்றும்
நிலைக்கின்ற புதுமைதரு இயலை, நல்ல
பொறியியலை மற்றும் உள இயலை எல்லாம்
போற்றித்தேன் செந்தமிழில் சேர்க்க இன்றே
வெறிகொள்வோம்! இந்த வெறி ஒன்றே நம்மின்
விடிவெள்ளியாய்நின்று விளக்கம் நல்கும்!”

(தொடரும்)
வல்லிக்கண்ணன்:
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்