[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙீ) தொடர்ச்சி]

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙு)

இன்னா செய்தாரை இனிமைச் செயல்களால்
 ஒறுத்தல் நன்றென உரைத்த பொருளுரை
 படித்து மேடையில் பாங்காய்ப் பொழிந்தும்
 தமிழ்நலம் நாடிய தகைசால் உரையைப்
 பொறுக்கலா ற்றாது வெறுக்கும் இயல்பால்
 அரசின் சார்பில் அளிக்க இருந்த
 பரிசைத் தடுத்த பரிசை  என்னென
 நற்றமிழ்நாடே நவில்க! நற்றமிழ்த்
 தொண்டு புரிதல் துயர்க்கே  கூட்டும்
 தமிழ்ப் பகைத்தோர் தள்ளினர் சிறையில்
 தமிழின் பேரால் தகுநிலை அடைந்தோர்
 தமிழ்ப் புகழ்பாடினும் தமிழை அடக்கி
 வாழவே முனையும் வன்கண்மையால்
 இழக்கச் செய்தனர் எய்துறு பரிசை.
 நன்றே! நன்றே! நற்றமிழ்த் தொண்டு!
 யாரே பகைவர்! யாவரே நண்பர்!
 எவர்வரின் இன்றமிழ் செழிக்கும் என்று
 உடல்பொருள் உயிர் இழப்பையும் எள்ளி
 தொண்டு செய்தோ மோதுயர் நலிந்திட
 அவரே மாறுறின் அன்னைத் தமிழ்தான்
 வாழ்தல் எங்ஙனம்? வையக மதனில்
 ஆகுல நீரரே அடைவர் பதவிகள்!
உண்மையாளர்கள் ஒடுங்கி மாள்வரே!

பிறருக்கு முறைப்படி கிடைக்க வேண்டிய உதவி மறுக்கப்பட்டாலோ காலத்தாழ்ச்சி செய்தாலோ சண்டையிட்டு வாங்கிக் கொடுக்கும் பேராசிரியர் தமக்கான உதவி என்றதும் வேறு முயற்சியில் ஈடுபடவில்லை; முதல்வரின் கவனத்திற்கும் கொண்டு செல்லவில்லை. தமிழ்ப்பகைவர்கள் உயர் பதவிகள் பெறுவது விரைவில் பெருகி இன்றைக்கு அவர்கள் மட்டுமே பதவிகளும் பரிசுகளும் பெறும் தீங்கான நிலை உள்ளது. தமிழ் நாட்டில் தமிழர் தலைமையும் முதன்மையும் பெறுவது என்றோ?
 இச்சூழலில் ஐதராபாத்திலுள்ள உசுமானியப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் பதவிக்குத் தகுதியானவர் யாரும் தமிழ்நாட்டில் இல்லை என்று அரசு தெரிவித்தது. “யாருமில்லை என்று ஏன் சொல்கிறிர்கள்? நான் செல்ல ஆயத்தமாக உள்ளேன்” எனப் பேராசிரியர் அப்பணியிடத்திற்கான இசைவைத் தெரிவித்தார். தமிழ்நலப் போராளியின் உழைப்பால் பயன்பெற்றவர்கள், அவரது வழிகாட்டுதல் தேவை எனக் கருதி இங்கேயே வைத்துக் கொள்ளாமல் அப்பணியில் அமர்த்த வகை செய்தனர். இது குறித்த பேராசிரியரின் வேதனை வரிகள் பின்வருமாறு:

 அமைச்சகம் அன்பாய் என்னை அழைத்து,
 “நம்முடை அரசில் நற்பணி யாற்றிப்
 பல்புகழ் பெற்றிடும் பாங்குகள் இலையோ?
 இன்தமி ழரசின் இனிய துணையாய்
 இருத்த லின்றி ஏகுதல் ஏனோ?
 விருப்பம் தவிர்க; மேவுக இங்கென”
 அடுத்து மொழிந்து தடுத்து விடாமல்
கொடுத்தது இசைவு உவகை கொண்டே!
 மாணவர்களும் தமிழன்பர்களும் தமிழ்ப்பகைவர்கள் உங்களைச் சிறையில் தள்ளினர்; தமிழ்ப்பற்றாளர்கள் நாடு கடத்துகின்றனர். நீங்கள் செல்ல வேண்டா” என அன்புடன் வேண்டினர். பேராசிரியர் அவர்களை எல்லாம், “அயலகம் செல்வது  தமிழ்ப்பணிக்காகத்தான்” என அமைதிப்படுத்தி விட்டு உசுமானியப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராக (சூன்20, 1968 இல்) பணிப்பொறுப்பை ஏற்றார்.
 ஆந்திர மாநிலத்திலும் பேராசிரியரின் தமிழ்ப்பணி தொடர்ந்தது. தமிழ் மக்கள் மிகவும் எளிய நிலையில் இருப்பதை அறிந்து அவர்களுக்கேற்ப கல்வி நேரத்தை மாற்றியமைத்துத் தமிழ் படிக்கச் செய்தார்.
 இடையில் பேரறிஞர் அண்ணாவின் மறைவு (பிப்.2,1969) அவரைப் பெரிதும் பாதித்தது. இருவருக்குமே ஒருவர்மீது மற்றொருவருக்குப் பெருமதிப்பும் பேரன்பும் இருந்தன. பேரறிஞர் அண்ணா அவர்களின் வெளிநாட்டுப்பயணங்களை,

 ஆயிரக் கணக்கில் அமெரிக்கா சென்றுள்ளனர்
 தமிழராய்ச் சென்று தமிழ்ப்புகழ் அறிந்திட
 ஒல்காப் புகழுடைத் தொல்காப்பியத்தையும்
 உலகப் பொதுமறை உயர்திருக்குறளையும்
 நெஞ்சையள்ளும் நீள் புகழ்ச் சிலம்பையும்
 தம்முடன் கொண்டே தமிழ்உரு வெடுத்துச்

சென்றதாகப் பாராட்டினார். தொல்காப்பியம் எனக் குறிப்பிடுவது பேராசிரியர் இலக்குவனாரின் ஆங்கில மொழிபெயர்ப்பையே ஆகும். வெளிநாடுகளுக்குச் செல்லும்பொழுது அங்குள்ள பல்கலைக்கழகங்களுக்கு இந்நூலை அளித்தார். குறிப்பாக ஏல் பல்கலைக்கழகத்தில் அளித்து அங்குள்ள மாணாக்கர்களுக்கு இதன் அடிப்படையில் வகுப்பும் எடுத்தார். போப் ஆண்டவரைச் சந்திக்கும் பொழுதும் தமிழ் நாகரிகத்தின் பெட்டகமாகத்  திகழும் இந்நூலை அளிப்பதாக எழுதி அளித்தார். தம் மீதும் தமிழின் மீதும் பற்று கொண்டிருந்த பேரறிஞர் அண்ணாவின் மறைவு குறித்துக் கையறுநிலைப்பாடலும் பாடினார்.
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்