நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்

2

 முன்னுரை
ஒல்காப்பெருமைத் தொல்காப்பியனார், மரபியலில்,
‘மாவு மாக்களு மையறி வினவே.’
‘மக்கள் தாமே யாற்றி வுயிரே.’
என்பனவற்றால், மானிடரை மாக்கள், மக்கள் என இருதிறத்தினராகப் பகுத்தோதினார். மாக்கள் எனப்படுவார், ஐம்பொறியுணர்வுமட்டிற் பெற்று மனவுணர்ச்சி யிலராயினாரெனவும், மக்கள் எனப்படுவார், ஐம்பொறி யுணர்வேயன்றி மனமென்பதோ ரறிவும் உடையரயினர் எனவுங் கூறுவர். இது மானிடரை அறிவுவேற்றுமைபற்றிப் பகுத்த பகுப்பாகும்.
இனி, அவயவவெற்றுமைபற்றி, மானிடர், ஆண் பெண் என இருதிறத்தின ராவர். ஆணியல்பு மிக்க அலி ஆண்பால் எனவும், பெண்ணியல்பு மிக்க பேடி பெண்பால் எனவும் வழங்கப்படுமாதலின், அவயவம்பற்றிய பகுப்பும் இரண்டே என்னலாம். இவ்வாறே, ஒவ்வொரு குறையுடைய ஊமும் செவிடும் குருடும் பிறவும் இவ் விருபாலுள்ளே அடங்குதலுங் காண்க. அவயவ வெற்றுமையான் இருதிறத்தினராய மானிடரே அறிவுவேற்றுமையான் மாக்கள், மக்கள் எனப்பட்டனராதலின், ஆண்பாலினும் மாக்களும் மக்களும் உண்டென்பதும், அவ்வாறே பெண்பாலினும் மாக்களும் மக்களும் உன்டென்பதும அவர்க்கு உடன்பாடாம். இதனால் ஆசிரியர் எத்துணை அறிவுண்மையும் அறிவின்மையும் ஆண்பாற்கு உடன்பட்டாரோ அத்துணையும் பெண்பாற்கும் உடன்பட்டாராதல் தெளியப்படும். 
களவியலுள், ‘ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப’ என வுரைத்து, அத்தலைவற்கும் தலைவிக்கும் உள்ள ஒப்புமைவகையினை விரித்தோதுவாராய், மெய்ப்பாட்டியலில்,
‘பிறப்பே குடிமை யாண்மை யாண்டோ
டுருவு நிறுத்த காம வாயில்
நிறையே யருளே உணர்வொடு திருவென
முறையுறக் கிளந்த வொப்பினது வகையே’
என்றாராகலின், ஆண்பாற்கொத்த ஆண்மையும், உணர்வும் பிறவும் பெண்பாற்கும் ஒக்கும் என்பதும் உடன்பட்டனராவர். இதனால், ஆண்மையும் அறிவும் ஆண்பாலார்க்கே சிறந்தது என்பது ஆசிரியர்க்கு உடன்பாடன்மை யுணரப்படும். மற்றுக் களவியலுள், ‘பெருமையும் உரனும் ஆடூஉ மேன’ என்றாராலெனின், அவர் பொருளியலுள்,
‘செறிவும் நிறைவுஞ் செம்மையுஞ் செப்பும்
அறிவு மருமையும் பெண்பா லான’
எனக் கூறினாராதலின், ஆண்பாலினை உயர்த்துரைக்கு முகத்தாற் பெண்பாலினை இழித்தாரென்றால் பொருந்தாதாகும். 
செறிவாவது அடக்கம்; நிறைவாவது மறை புலப்படாமல் நிறுத்தும் உள்ளம்; செம்மையாவது மனக்கோட்ட மின்மை; செப்பாவது செய்யத் தகுவன கூறுதல்; அறிவாவது நன்மை பயப்பனவும் தீமைபயப்பனவும் அறிதல்; அருமையாவது உள்ளக்கருத்தறித லருமை என்பர். இவ்வறுபெருங் குணங்களும் ஆண்பார்க் கோதிய பெருமை உரன் என்னும் இரண்டற்குஞ் சிறிதுந் தாழ்ந்தனவாகாமை உய்த்துணர்க. மகளிர்க்கே சிறந்த சில இயற்கை வேற்றுமையினை நன்றாய்ந்து, ஆசிரியர், கிழவோள் பணிவும் கிழவோன் உயர்வும் உடன்பட்டனரல்லது வேறு எவ்வகை அறிவு வேற்றுமையும் உடன்படாமை கண்டுகொள்க. இதுவே தெய்வப்புலமை திருவள்ளுவனார்க்கும் கருத்தென்பது, அவர், ‘அறிவறிந்த மக்கட்பேறு’, ‘நன்மக்கட் பேறு’, ‘பேதையார் கேண்மை’, ‘பேதையார் சொன்னோன்றல்’, ‘மடவார்ப் பொறை’ என்னுமிடங்களில், ஆண் பெண் இருபாலார்க்கும் பொதுப்பட வழங்கிய பெயர்களானே ஆய்ந்தறியத் தக்கது. ‘வகைதெரிவான் கட்டே யுலகு’ என்பது முதலாக ஆண்பாலாற் கூரியனவெல்லாம் ‘நஞ்சுண்டான் சாம்’ என்புழிப்போல ஒருபாற் கிளவி எனைப்பாற்கண்ணுஞ் சேறற்குரிய என்பதுபற்றித் தலைமையாற் கூறினாராவர்.
இனி, வடநூலுள் ஒருசாராசிரியர் மதம் பற்றிப் பரிமேலழகர் பெண்பாலாரை ஆண்பாலாரோடு ஒத்த அறிவெய்தற்கு உரியரல்லராகக்கொண்டு,
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோ னெனக்கேட்ட தாய்’
என்புழி, ‘பெண்ணியல்பாற் றானாக அறியாமையிற் “கேட்ட தாய்” எனக் கூறினார்’ என்றார். அவர், ஆடவருடைய அறிவொழுக்கங்களின் அருமையறிதற்கும் உரியரல்லரெனக் கருதியமை காண்க. அந்நிலைய பெண்பாலார் பலருளரால் எனின், அந்நிலைய ஆண்பாலாரும் பலருளர் என்க. தன் மகனென்னுந் தொடர்புபற்றி யுளதாகும் அன்புமேலீட்டாற் குணமும் குற்றமும் நாடுமிடத்துக் குற்றந் தோன்றாது மறையினும் மறையும்; அவற்றை யுள்ளவாறாராய்ந்து குணமிகுதிகண்டு சான்றோரெனவல்லார் பிறரே யாதலானும், தானறிந்ததனோடொப்பத் தன்னையொத்தாரும் மிக்காரும் கூறியவழியே தனக்கு மகிழ்ச்சி யுளதாதலானும், ‘கேட்டதாய்’ என்றார் எனக்கூறல் ஆண்டைக் கியைபுடைத்தாம். பிறர் கூறியவழித் தன்னறிவு மாறுபடினும், தானறிந்த வழிப் பிறர்கூற்று மாறுபடினும் தனக்கு மகிழ்ச்சியின்றாதலுங் கண்டுகொள்க. ‘சான்றோ ரென்கை யீன்றோர்க் கின்பம்’ என்பதூஉம் இக்கருத்தேபற்றி வந்தது.
(தொடரும்)
இரா. இராகவையங்கார்