(உ.வே.சா.வின் என் சரித்திரம் 49 : அத்தியாயம் 27. பிள்ளையவர்கள் முன் முதல் நாள் 1/2)



பிள்ளையவர்கள் முன் முதல் நாள் 2/2

பரீட்சை

இவ்வாறு எங்கள் வரலாற்றை அறிந்துகொண்ட பின்பு அக்கவிஞர் பெருமான் என்னைப் பார்த்து, “நைடதத்தில் ஏதாவது ஒரு பாடலைச் சொல்லும்” என்றார். அந்த மகாவித்துவானுக்கு முன், காட்டுப்பிராந்தியங்களிலே தமிழறிவைச் சேகரித்துக்கொண்ட நான் எவ்வளவு சிறியவன்! எனக்குப் பாடல் சொல்லத் தைரியம் உண்டாகவில்லை. மனம் நடுங்கியது. உடல் பதறியது; வேர்வை உண்டாயிற்று. நாக்கு உள்ளே இழுத்தது. இரண்டு மூன்று நிமிடங்கள் இவ்வாறு நான் தடுமாறினேன். அப்பால் ஒருவாறு நைடதத்திலுள்ள, “தழைவிரி கடுக்கை மாலை” என்னும் காப்புச் செய்யுளைக் கல்யாணி இராகத்தில் மெல்லச் சொன்னேன்; முதலடியை, “தழைவிரி கடுக்கை மாலைத் தனிமுதற் சடையிற் சூடும்” என்று நான் சொன்னேன். பிள்ளையவர்கள் இடைமறித்து, “தனி முதல் சடையிற்சூடும்” என்று சொல்லித் திருத்தினார். பலகாலமாகப் பிழைபட்ட பாடத்தை உருவேற்றி இருந்த எனக்கு அந்தப் பாடமே முன்வந்தது. என் நடுக்கம் அதிகமாயிற்று. ஆனாலும் பாடல் முழுவதையும் சொல்லி முடித்தேன். நான் அதைச் சொல்லும்போதே அவர் முகத்தையும் கவனித்தேன். “நான் சொல்வதில் அவருக்கு வெறுப்பு உண்டாகுமோ” என்று பயந்தேன். நல்லவேளையாக அவர் முகத்தில் அத்தகைய குறிப்பு ஒன்றும் தோற்றவில்லை. எனக்கும் சிறிது ஊக்கம் உண்டாயிற்று.

“இன்னும் ஒரு பாடல் சொல்லும்” என்றார் அவர். நான் நைடதத்தின் சிறப்புப் பாயிரமாகிய, “நிலவு பொழி தனிக்கவிகை” என்னும் பாடலைச் சாவேரி இராகத்தில் சொன்னேன். அந்த இரண்டு செய்யுட்களையும் மீட்டும் சொல்லிப் பொருள் கூறும்படி கூறினார். நான் பாடல்களைச் சொல்லிப் பொருள் கூறத் தொடங்குகையில் நாக்குத் தழுதழுத்தது.

“தைரியமாகச் சொல்லும்” என்று அக்கவிஞர்பிரான் கூறினார். நான் இரண்டு செய்யுட்களுக்கும் பொருள் கூறி முடித்தேன்.

நிகண்டு பாடம் உண்டோ?” என்று அவர் கேட்டார். நான் “பன்னிரண்டு தொகுதியும் பாடம் உண்டு” என்று கூறவே சில சில பாடங்களைச் சொல்லச் சொல்லிக் கேட்டுவிட்டு, “நிகண்டை மனனம் செய்வது நல்லதே. இக்காலத்தில் அதை நெட்டுருப் பண்ணும் வழக்கமே போய்விட்டது. சொன்னால் யாரும் கேட்பதில்லை” என்றார்.

சந்தேகப் பேச்சு

அப்போது என் தந்தையார், “இவனைத் தங்களிடம் ஒப்பித்துவிட்டேன். எப்போது இவன் பாடம் கேட்க வரலாம்?” என்று கேட்டார்.

அப்புலவர் பெருமான் சிறிதுநேரம் மௌனமாக இருந்தார். அவர் எதையோ யோசிக்கிறார் என்று எண்ணினேன்; “ஒரு கால் நம்மை ஏற்றுக்கொள்ள மாட்டாரோ?” என்று அஞ்சினேன். அவர் மெல்லப் பேசத் தொடங்கினார்.

“இங்கே படிப்பதற்கு அடிக்கடி யாரேனும் வந்தவண்ணமாக இருக்கிறார்கள். வரும்போது பணிவாக நடந்துகொள்ளுகிறார்கள். சில காலம் படித்தும் வருகிறார்கள். படித்துத் தமிழில் நல்ல உணர்ச்சி உண்டாகும் சமயத்திலே போய்விடுகிறார்கள். சிலர் சொல்லாமலே பிரிந்துவிடுகிறார்கள். சிலர் ‘ஊர் போய்ச் சில தினங்களில் வருகிறோம்’ என்று சொல்லிப் போய்த் திரும்புவதே இல்லை. சில காலம் இருந்து படிப்பதாகப் பாவனை செய்துவிட்டுப் பிரிந்து சென்று என்னிடம் படித்ததாகச் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். இப்படி அரைகுறையாகப் படிப்பதால் அவர்களுக்கு ஒரு பயனும் உண்டாவதில்லை; நமக்கும் திருப்தி ஏற்படுவதில்லை. இத்தகையவர்கள் இயல்பைக் கண்டு கண்டு மனம் சலித்துவிட்டது. யாராவது பாடம் கேட்பதாக வந்தால் யோசனை செய்துதான் ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிருக்கிறது.”

அவர் பேச்சிலே அன்பும் மென்மையும் இருந்தன. ஆனால் அவர் கருத்து இன்னதென்று தெளிவாக விளங்கவில்லை. என் உள்ளத்திலே அப்பேச்சு மிகுந்த சந்தேகத்தை உண்டாக்கிவிட்டது. அவர் தம்மிடம் வந்து சில காலம் இருந்து பிரிந்து போன மாணாக்கர்கள் சிலர் வரலாற்றையும் சொன்னார். “இந்த விசயங்களை யெல்லாம் சொல்வதன் கருத்து என்ன? நம்மை ஏற்றுக்கொள்ள விருப்பமில்லை என்பதைக் குறிப்பாகத் தெரிவிக்கிறார்களோ? அப்படியிருந்தால் இவ்வளவு பிரியமாகப் பேசிக்கொண்டிருக்க மாட்டார்களே” என்று நான் மயங்கினேன்.

தவம் பலித்தது

என் தந்தையார் தைரியத்தை இழவாமல், “இவன் அவ்வாறெல்லாம் இருக்க மாட்டான். இவனுக்குப் படிப்பதைத் தவிர வேறு வேலை இல்லை. தங்களிடம் எவ்வளவு காலம் இருக்க வேண்டுமானாலும் இருப்பான். தங்களுடைய உத்தரவு இல்லாமல் இவன் எங்கும் செல்லமாட்டான். இதை நான் உறுதியாகச் சொல்லுகிறேன், இதற்கு முன் இவனுக்குப் பாடம் சொன்னவர்களெல்லாம் இவனைத் தங்களிடமே கொண்டுவந்து சேர்க்கும்படி வற்புறுத்தினார்கள். பல காலமாக யோசித்து அதிக ஆவலுடன் தங்களிடம் அடைக்கலம் புக இவன் வந்திருக்கிறான். இவனுடைய ஏக்கத்தைக் கண்டு நான் தாமதம் செய்யாமல் இங்கே அழைத்து வந்தேன். தங்களிடம் ஒப்பித்துவிட்டேன். இனிமேல் இவன் விசயத்தில் எனக்கு யாதோர் உரிமையும் இல்லை” என்று கூறினார். அப்படிக் கூறும்போது அவர் உணர்ச்சி மேலே பேசவொட்டாமல் தொண்டையை அடைத்தது. நானும் ஏதேதோ அப்போது சொன்னேன்; வேண்டிக்கொண்டேன்; என் வாய் குழறியது; கண் கலங்கியது; முகம் ஒளியிழந்தது.

அங்கிருந்தவர்கள் என் தந்தையார் வேண்டுகோளையும் எனது பரிவையும் உணர்ந்து இரங்கி, “இந்தப் பிள்ளை இருந்து நன்றாகப் படிப்பாரென்றே தெரிகிறது. தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்கள்.

அக்கவிஞர் பிரானது முகம் மலர்ந்தது. ஒருவிதமான உறுதிக்கு அவர் வந்துவிட்டாரென்பதையும், அத்தீர்மானம் எனக்கு அனுகூலமாகத்தான் இருக்குமென்பதையும் அந்த முகமலர்ச்சி விளக்கியது.

“இவ்வூரில் பந்துக்கள் யாரேனும் இருக்கிறார்களோ? இவருடைய ஆகாரத்துக்காக ஏற்பாடு ஏதேனும் செய்திருக்கிறீர்களா?” என்று பிள்ளையவர்கள் கேட்டனர்.

“இவ்வூரில் நண்பர்களும் பந்துக்களும் இருந்தாலும் அவர்கள் செல்வமுள்ளவர்களல்லர். அவர்களுக்குச் சிரமம் கொடுப்பது உசிதமாக இராது. தாங்களே ஏதாவது ஏற்பாடு செய்யவேண்டும்” என்றார் என் தந்தையார். பிள்ளையவர்கள் பல மாணாக்கர்களை வைத்துப் போசித்துப் பாடஞ்சொல்லி வருகிறார் என்ற செய்தியைப் பலர் கூறக் கேட்டிருந்தமையின் இவ்வாறு எந்தையார் சொன்னார்.

பிள்ளையவர்கள்: “திருவாவடுதுறையிலும் பட்டீச்சுரத்திலும் நான் தங்கும் காலங்களில் இவருடைய ஆகார விசயத்தில் ஒரு குறையும் நேராமல் பார்த்துக்கொள்ளலாம். சைவராக இருந்தால் ஒரு கவலையும் இராது; என் வீட்டிலே சாப்பிடலாம். இந்த ஊரில் இவர் ஆகார விசயத்தில் ஒன்றும் செய்ய இயலாத நிலையில் இருக்கிறேன்; அது பற்றி வருந்துகிறேன்.”

எந்தையார்: “அப்படியானால் இவ்வூரில் இருக்கும் வரையில் இவன் ஆகாரச் செலவிற்கு வேண்டிய பணத்தை எப்படியாவது முயன்று அனுப்பிவிடுகிறேன். இவனைத் தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.”

பிள்ளையவர்கள்: “சரி. ஒரு நல்ல தினம் பார்த்துப் பாடங்கேட்க ஆரம்பிக்கலாம்.”

என் தவம் பலித்ததென்று நான் குதூகலித்தேன். அசுத்தமன சமயமாகிவிட்டமையால் நாங்கள் மறுநாட் காலையில் வருவதாக விடைபெற்றுக்கொண்டு எங்கள் விடுதிக்கு மீண்டோம்.

நாங்கள் போகும்போது எங்கள் மனத்தை அமிழ்த்திக்கொண்டிருந்த ஒரு பெரிய பாரம் நீங்கியது போல இருந்தது. என் தந்தையார் அடிக்கடி, “சாக்கிரதையாக இருப்பாயா? தேக சௌக்கியத்தைக் கவனித்துக்கொள்வாயா? கடிதம் எழுதுவாயா? வருத்தப்படாமல் இருப்பாயா?” என்று பல கேள்விகளைக் கேட்டுக்கொண்டே வந்தார். என்னைத் தனியே விட்டுச்செல்வதற்கு அவர் உள்ளம் ஏவ்வளவு தத்தளித்ததென்பதை அவை விளக்கின.

(தொடரும்)

என் சரித்திரம், .வே.சா.