(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 02. என் கடன் பணி செய்து கிடப்பதே! – தொடர்ச்சி)

தலைமையுரையில், ஞானியார் அவர்கள் “கோவிந்தன் பேசிய நேரம் சிறிய நேரம் என்றாலும், என் சிந்தனைக்கு மட்டுமல்லாமல் அனைவர் சிந்தனைக்கும் அரிய வேலை கொடுத்துவிட்டான்” எனக் கூறிப் பாராட்டினார்.
மற்றுமொரு நிகழ்ச்சி : நான் வித்துவான் பட்டம் பெறாத நேரம். ஆசிரியர்பால் பின்னர் தமிழ் கற்க வந்த கோமான் ம. வீ. இராகவன் அவர்கள் அந்த ஆண்டு. வித்துவான் தேர்வு எழுதியிருந்தார், அந்நிலையில் திருவத்திபுரத்திற்கு வருகை தந்த, எங்கள் ஆசிரியரின் ஆசிரியர் கரந்தைக்கவியரசு ஆர் வெங்கடாசலம் பிள்ளை அவர்கள், இராகவன் தேர்வில் நன்றாக எழுதியுள்ளார் எனக் கூறினார். அது கேட்ட ஒளவை அவர்கள் என்னைச் சுட்டிக் காட்டி, “இவன் அவனைவிடத் தெளிவாகப் படித்தவன்?” என்று கூறிச் சென்று விட்டார்.
கவியரசு அவர்கள் என்னை அருகில் அழைத்து அணைத்துக் கொண்டு, இலக்கியத்திலும், இலக்கணத்திலுமாகச் சில கேள்விகளைக் கேட்டார். கூடுமானவரை நல்ல விடையே கூறினேன். என் அறிவு எனக்குத் தானே தெரியும். மேலும் அவர் கேட்டால் விழிக்க வேண்டி நேரும். ஆசிரியர் நற்சான்றிற்கு மாசு நேரக் கூடும் என்பதால் கவியரசை விட்டு ஓடி விடத் திட்டமிட்டு அவரிடம் ஓர் ஐயம் எழுப்பினேன். “தொல்காப்பியர் எழுவாய் வேற்றுமைக்கு இலக்கணம் கூறும்போது எழுவாய் வேற்றுமை பெயர் தோன்று நிலையே” என்றார். அதாவது சொல் எவ்விதத் திரிபும் இல்லாமல் இருப்பது. அவ்வாறு கூறிய அவரே ‘நீயீர்’ என்ற எழுவாய்ச் சொல்லுக்கு இலக்கணம் கூறும்போது “நும்மின் திரிபெயர்” என்று கூறியுள்ளார். இது முன் கூறிய இலக்கணத்திற்கு முரண் ஆகாதா? நும்மின் திரி, பெயராகிய நீயீர் என்பது பிற வேற்றுமைகளை ஏற்கும்போது மீண்டும் நும், எனத் திரிந்து, “தும்மை நும்மால்” என ஆவானேன் என்ற இரு ஐயங்களை எழுப்பினேன். அவர் சிந்திக்கத் தொடங்கி விட்டார். விட்டால் போதும் என ஓடி விட்டேன்.

பள்ளியில் மற்றொரு தமிழாசிரியர் திரு. பாலசுந்தர நாயகர் அவர்கள் வித்துவான் தேர்வில் வெற்றி பெற்றார். அதற்கு ஒரு பாராட்டு விழா நடத்த தலைமை ஆசிரியரின் அனுமதி கேட்டோம். அவர் மறுத்து விட்டார். பானுகவி மாணவர் கழகமும் விழா நடத்த முன் வரவில்லை. அதனால் ஒளவைத் தமிழ் மாணவர் கழகம் என்ற புதிய கழகத்தைத் தொடங்கி அவருக்கு மிகப் பெரிய பாராட்டு விழாவினை நடத்தினோம்.

ஓராண்டு கழிந்தது; 1936இல் முதலாண்டு விழா நடத்த முடிவு செய்தோம். விழாத் தலைமைக்கு மறைமலை அடிகளாரை அழைக்க முடிவு செய்தோம். ஆசிரியர் ஒளவை அவர்கள் அவருக்கு கடிதம் எழுத, அடிகளார் ஒரு நாளைக்கு 100 வெண் பொற்காசுகள் (அதாவது ரூபாய்) தர வேண்டும் என்றும் உணவு இவ்வகையில் இருக்க வேண்டும் என்றும் பதில் எழுதி விட்டார்.
எங்களிடம் அவ்வளவு தொகை இல்லை; ஆனாலும் மறைமலையாரை அழைக்கும் ஆசையும் குறையவில்லை. ஒருநாள் ஆசிரியர் அவர்களிடமும் சொல்லாமல் பல்லாவரம் சென்று, அரைக்கிலோ கற்கண்டு, 2 சீப்பு வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, மலர்மாலை இவற்றை வாங்கிக் கொண்டு அடிகளார் மாளிகை சென்று ஒரு தட்டு வாங்கி, அதில் இவற்றை வைத்து எடுத்துக் கொண்டு அவரிடம் சென்று அவர் கையில் தட்டைக் கொடுத்துவிட்டுக் காலில் வீழ்ந்து வணங்கினேன். (நான் வணங்கிய முதல்வர் அவர் தான்.)
வாழ்த்தி எழுந்திருக்கப் பணித்துவிட்டு, யார்? வந்தது ஏன் என வினவினார்: அழைக்க வந்தேன் என்றேன். ஒளவைக்குக் கடிதம் எழுதி விட்டேனே என்றார். கையில் இருப்பது 200 வெள்ளிக் காசுகள்தாம் என்றாலும் தாங்கள் வந்து விழாத் தலைமை தாங்க வேண்டும் என வேண்டிக் கொண்டேன், ஒப்புக் கொண்டார்.
1936 மே 24, 25, 26 ஆகிய நாட்களில், திருவத்திபுரம் எங்கள் தெருவில், கோயிலை அடுத்து தெருவை அடைத்துப் பெரிய பந்தல் போட்டு விழா நடத்தினோம்.
வித்துவான் பட்டம் பெற்ற பின்னர் பி.ஓ.எல். பட்டம், பெற வேண்டும் என்ற ஆசை எழுந்தது. கல்லூரி சென்று படிக்காமல் வீட்டிலிருந்தே தேர்வு எழுதுவதானால் 3ஆண்டு
ஆசிரியராகப் பணி புரிந்திருக்க வேண்டும்; தேர்வுக்கு மனுச் செய்யும்போது ஆசிரியராக இருக்க வேண்டும் என்பது பல்கலைக் கழக விதி. அதனாலும், இரண்டாம் உலகப் போர் காரணத்தால் அறிஞர் அண்ணா உள்ளிட்ட கழகத்தவர். அனைவரும் போரில் அமெரிக்கா, இங்கிலாந்து, இரசியா அணிக்கு ஆதரவான பிரசாரம் செய்ய முனைந்து விட்டனர், அதனாலும், வேலூரில் என் பழைய தமிழாசிரியர் சென்ற அதே பள்ளியில் ஆசிரியராக 1942-இல் சேர்ந்தேன். 1944 வரை பணி புரிந்தேன். அங்கும் தமிழ்ப்பணி தொடர்ந்தது.

பி.ஓ.எல். தேர்வில் முதல் பகுதி பி.எசு. வகுப்பிற்குரிய ஆங்கில இலக்கியம். இரண்டாம் பகுதி தமிழ் வித்துவான் தேர்வு, மூன்றாம் பகுதி திராவிட மொழி ஒப்பிலக்கணமும், தென்னிந்திய வரலாறும் (ஆங்கிலத்தில்). இரண்டாம் பகுதியை முன்னரே முடித்து விட்டேன். முதல் பகுதியையும் முடித்து விட்டேன். மூன்றாம் பகுதியில் தென்னிந்திய வரலாற்றுக்குரிய நூல்களாகிய திருநீலகண்ட சாத்திரியாரின் சோழர் வரலாறு, பாண்டியர் வரலாறு, திரு. கோபாலன் அவர்களின் பல்லவ வரலாறு, திரு. பி.டி. சீனிவாச ஐயங்கார் அவர்களின் தமிழர் வரலாறு ஆகிய ஆங்கில நூல்களை வாங்கிக் கொண்டேன். காலுடுவெல் ஒப்பிலக்கணத்தை இலண்டனில் உள்ள தம் நண்பர் மூல்ம் வாங்கித் தந்தார் ஆசிரியர்.
அவற்றைப் படிக்கும்போது காலுடுவெல் ஒப்பிலக்கணத்தையும், பி.டி.எசு. அவர்களின் தமிழர் வரலாற்றையும் தமிழில் மொழி பெயர்த்தால் பி.ஓ.எல். படிக்கும் மாணவர்களுக்குப் பயன்படும் என எண்ணினேன்.
வேலூரில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத் தலைவர், தாமரைச் செல்வர், அமரர். சுப்பையா பிள்ளை அவர்கள்,
சென்னையில், பேராசிரியர் தெ. பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் தலைமையில், 22-2-42-இல் நடைபெறும் நற்றிணை மாநாட்டில் ‘பாலை’ என்ற தலைப்பில் சொற் பொழிவு ஆற்றுமாறும், ஆற்றும் சொற்பொழிவை அப்படியே எழுதித் தருமாறும் வேண்டினார். நானும் அது செய்தேன்.
அம்மாநாட்டினைத் தொடர்ந்து திரு. சுப்பையா அவர்களின் நட்பு தொடர்ந்தது. இலக்கியம் தொடர்பான நூல்களை எழுதித் தருமாறு அன்புக் கட்டளை இட்டார்.
“திருமாவளவன்” என்ற முதல் நூல் 1951இல் வெளிவந்தது. (என் முதல் மகனின் பெயரும் திருமாவளவன் என்பது குறிப்படல் நலம்.) அதைத் தொடர்ந்து சங்க காலப் புலவர் என்ற வரிசையில் 16 நூல்களையும், அரசர் என்ற வரிசையில் ஆறு நூல்களையும் வெளியிட்டார் புலவர் வரிசையில் முதல் நூல் 1952இலும், அரசர் வரிசையில் கடைசி நூல் 1955லும் வெளிவந்தன.
தமிழ் எழுத்தாளர் உலகிற்கு அறிமுகமாகாத என் நூல்கள் இருபத்தைந்தை மூன்றாண்டு கால அளவில் வெளியிட்டு எனக்குப் பெருமை சேர்த்த திருவாளர் பிள்ளை அவர்களுக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.
எழுத்துப் பணி தொடர, மலர் நிலையம், வள்ளுவர் பண்ணை, அருணா பதிப்பகம் என்ற வெளியீட்டார் மூலம் பல நூல்கள் வெளி வந்தன. அரசியல் பணிகளுக்கிடையே காலுடுவெல் அவர்களின் ஒப்பிலக்கண மொழி பெயர்ப்பு 1959இல் வள்ளுவர் பண்ணை மூலம் வெளிவந்தது.
1990 ஏப்பிரல் 15ஆம் நாளன்று, என் ஐம்பதாவது நூலாக, திரு. பி. டி. சீனிவாச அய்யங்கார் அவர்களின் தமிழர் வரலாறு மொழிபெயர்க்கப் பெற்று, திரு. பிள்ளை.
அவர்களின் மருகர் திரு. இரா. முத்துக்குமாரசாமி அவர்கள் முயற்சியால் கழக வெளியீடாக வெளியிடப் பெற்றது. அவருக்கு நன்றி.
இப்போது (1991) அவர் பணிக்க, திருவாளர் வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர் அவர்களின் Origin and Spread of Tamils, (‘தமிழரின் தோற்றமும் பரவலும்’) என்ற நூல் மொழி பெயர்க்கப்பட்டு அச்சிட்டு முடிக்கப்பட்டுள்ளது. திருவாளர் பி. டி. சீனிவாச அய்யங்கார் அவர்களின் Pre Aryan Tamil Culture (ஆரியர்க்கு முந்திய தமிழர் பண்பாடு) என்ற நூலை மொழி பெயர்த்து முடித்துவிட்டு, அவரின் மற்றொரு நூலாகிய Stone Age in India (இந்தியாவில் கற்காலம்) என்ற நூலை மொழி பெயர்க்க எடுத்துக் கொண்டுள்ளேன்- என் எழுத்துப்பணி தொடரும். குறள் பற்றி, சங்க இலக்கியங்கள் பற்றி, பல தலைப்புகளில் நூல் எழுதக் குறிப்பு எடுத்து வைத்துள்ளேன். “கல்வி கரையில் கற்பவர் நாள்சில” காலம் இடம் தந்தால் என் எழுத்துப் பணி ஓரளவேனும் முற்றுப் பெறும்.

(தொடரும்)