Saturday, July 27, 2024

உ.வே.சா.வின் என் சரித்திரம் 98 : பிரிவில் வருத்தம்

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 97 : பிரசங்க சம்மானம்-தொடர்ச்சி)

நான் பிள்ளையவர்களிடம் போக எண்ணி இருப்பதை அக்கூட்டத்தினருக்குத் தெரிவிக்க வேண்டுமென்பது என் கருத்து. பிரசங்கம் செய்யும்போதே பிள்ளையவர்களைப் பற்றிச் சொல்லுவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்ள எண்ணினேன். இப்பாட்டு அச்சந்தர்ப்பத்தை அளித்தது. இப்பாடலுக்குப் பொருள் சொல்லிவிட்டு விசேட உரை சொல்லத் தொடங்கினேன். “வசிட்டாதி முனிவர்கள் என்று சொன்ன மாத்திரத்தில் எல்லா முனிவர்களும் அடங்கிவிடுவார்கள். அப்படி இருக்க, குறுமுனியை என்று அகத்திய முனிவரைத் தனியே ஆசிரியர் எடுத்துச் சொல்லியிருக்கிறார். வசிட்டருக்கு எவ்வளவு சிறப்பு உண்டோ அவ்வளவு சிறப்பு அகத்தியருக்கும் உண்டு. அகத்தியர் பரம சிவபக்தர். சிவபெருமானுக்குச் சமமானவர். இவ்வளவு பெருமையையும்விடத் தமிழை வடமொழியோடு ஒத்த சிறப்புடையதாக்கிய பெருமை அவருக்கு இருக்கிறது. தமிழ் நூல் செய்த பரஞ்சோதி முனிவர் அவரைத் தனியே சொல்லாவிட்டால் அபசாரமென்று நினைத்து அவ்வாறு சொன்னார். தமிழ் ஆசிரியராகிய அகத்தியரைத் தமிழ்க் கவிஞர் இவ்வாறே பாராட்டுவார்கள். தமிழாசிரியர்களுக்கு உள்ள பெருமை அளவு கடந்தது. இப்போது பிரத்தியட்ச அகத்தியராக விளங்குபவரும் என்னுடைய ஆசிரியருமாகிய பிள்ளையவர்களை எல்லாரும் தெய்வம்போலக் கொண்டாடி வருகிறார்கள். இவர்களுக்கே இவ்வளவு பெருமை இருக்கும்போது அகத்தியருக்கு எவ்வளவு பெருமை இருக்க வேண்டும்! பரஞ்சோதி முனிவரைப் போல நாமும் தமிழாசிரியர்களைப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம். அகத்தியரைப் போன்ற சிவபக்தியும் தமிழ்த் தலைமையும் உடைய பிள்ளையவர்களிடத்தில் நான் மீண்டும் செல்வதாக எண்ணியிருக்கிறேன். எல்லோரும் விடைதர வேண்டும்” என்று சொல்லி முடித்தேன்.

முனிவர்கள் கூறிய தோத்திர இன்பத்தில் ஆழ்ந்திருந்த யாவரும் திடீரென்று வருத்தத்தை அடைந்தனர். நான் காரையைவிட்டுப் புறப்பட்டுப் போவேனென்பது பல பேருக்குத் தெரியும். ஆனாலும் நானே அச்செய்தியை நேரே சொன்னபோது அவர்களுக்கு அடக்க முடியாத துயரம் பொங்கியது. சிலர் கண்ணீர் விட்டார்கள் அந்த அன்பை இன்று நினைத்தாலும் என் உள்ளம் உருகுகிறது.

பிரசங்கம் வாழ்த்தோடு நிறைவேறியது. பிறகு சம்மானங்கள் பலவாறாக வந்தன. ஆடைகள், பணம் எல்லாம் கிடைத்தன. இருநூறுரூபாய் வரையில் பணம் கிடைத்தது. செலவுக்காக வாங்கியிருந்த சிறு கடன்களுக்குக் கொடுத்ததுபோக நூற்றைம்பது உரூபாய் மிஞ்சியது. அதைக்கொண்டு கல்யாணத்துக்கு வாங்கிய கடனில் எஞ்சியிருந்ததைத் தீர்த்துவிட்டோம்.

எல்லாரிடமும் விடைபெற்றுக்கொண்டேன். முக்கியமானவர்களில் ஒவ்வொருவரும் தனித்தனியே வந்து, “ஐயா எங்களை மறக்க வேண்டா. உங்கள் குறையைத் தீர்த்துக்கொண்டு இங்கேயே வந்திருந்து எங்கள் குறையையும் தீர்க்க வேண்டும்” என்று வேண்டினார்கள். அவர்கள் பேச்சிலேதான் எத்தனை அன்பு! எத்தனை மென்மை! எத்தனை உருக்கம்! கடவுள், அன்பு என்ற ஒரு குணத்தை மக்களுடைய மனக்குகையில் வைத்திருக்கிறார். அப்பெருந்தனம் இல்லாவிட்டால் உலகம் நரகத்துக்குச் சமானமாகிவிடும்.

செங்கணத்தில் நிகழ்ந்தவை

கிருட்டிணசாமி ரெட்டியார் தாமாக விடை அளிக்கவில்லை. நாங்கள் வலிந்து அவரிடம் விடைபெற்றோம். விடைபெறும்போது அவர், “நீங்கள் பாகவதத்தைப் பரிசோதித்து அச்சிட்டால் சகாயம் செய்கிறேன்” என்று என்னிடம் சொன்னார். “பார்க்கலாம்” என்று சொல்லி என் தாய் தந்தையருடன் புறப்பட்டுச் செங்கணத்துக்கு வந்து சேர்ந்தேன்.

அங்கே விருத்தாசல ரெட்டியாரும் அவர் குமாரராகிய நல்லப்ப ரெட்டியாரும் காரையில் நிகழ்ந்தவற்றைக் கேட்டு மகிழ்ந்தார்கள். நான் பிள்ளையவர்களிடம் செல்வதில் வேகமுள்ளவனாக இருத்தலை உணர்ந்த நல்லப்ப ரெட்டியார், “நீங்கள் மட்டும் போய் வாருங்கள். தங்கள் ஐயாவும் அம்மாவும் இங்கேயே இருக்கட்டும்” என்று கூறவே நான் அங்ஙனமே செய்ய உடன்பட்டேன். என் தாயாருக்கு என்னைப் பிரிவதில் சிறிதும் விருப்பமில்லை. அன்றியும் அக்காலத்தில் கும்பகோணத்திலும் அதைச் சார்ந்த இடங்களிலும் விசபேதி நோய் பரவியிருந்தது. அச்செய்தி எங்கள் காதுக்கு எட்டியது. இயல்பாகவே என்னை அனுப்புவதற்கு மனம் இல்லாத என் பெற்றோர்களுக்கு இச் சமாசாரம் துணைசெய்தது. “நீ இப்போது போக வேண்டா. இங்கேயே தங்கி அந்த நோய் அடங்கியவுடன் போகலாம்” என்று தடுத்தார்கள். எனக்கு மாத்திரம் எவ்வாறு இருந்தாலும் அப்பால் ஒருநாளாவது அங்கே தாமதிக்கக் கூடாது என்ற உறுதி ஏற்பட்டது.

என்ன சொல்லியும் கேளாமல், “இவ்வளவு காலம் திருவிளையாடல் படித்தேன். சிரீ மீனாட்சி சுந்தரேசர் திருவருள் என்னைக் காப்பாற்றும் என்ற தைரியம் இருக்கிறது” என்று சொல்லிப் புறப்பட்டேன். சிரீ மீனாட்சி சுந்தரேசர் திருவருள் என்று வெளிப்படச் சொன்னாலும், அந்த அருளோடு அம்மூர்த்தியின் திருநாமத்தைக்கொண்ட என் ஆசிரியரது உண்மையன்பு என்னைப் பாதுகாக்குமென்ற தைரியமும் என் அந்தரங்கத்தில் இருந்தது.

செங்கணத்திலிருந்து புறப்பட்டபோது என் அன்னையார் ஒரு கல் தூரம் உடன்வந்து பிரிவதற்கு மனம் இல்லாமல் கண்ணீர் வழிய, “தெய்வந்தான் காப்பாற்ற வேண்டும்” என்று சொல்லி விடையளித்தார். நான் நேரே திருவாவடுதுறைக்கு வந்துசேர்ந்தேன். ஆசிரியர் அம்பரில் புராணம் அரங்கேற்றிய பின் திருவாவடுதுறைக்கு வந்து விட்டார். நான் அவரைக் கண்டவுடன், “மறுபடியும் போவதாக உத்தேசம் இல்லையே? இங்கேயே இருக்கலாமல்லவா?” என்று கேட்டார்.

நான், “இங்கிருந்து பாடம் கேட்பதையன்றி எனக்கு வேறு வேலை இல்லை” என்று சொன்னேன். தாய்தந்தையர் சேமம் முதலியவற்றை அவர் விசாரித்தார்.

அப்பால், “சந்நிதானத்தைப் போய்ப் பார்த்து வாரும். பல மாதங்களாக நீர் பார்க்கவில்லையே” என்று ஆசிரியர் கூறவே நான் மடத்திற்குச் சென்று சிரீ சுப்பிரமணிய தேசிகரைப் பார்த்தேன்.

“பல மாதங்களாக உம்மைக் காணவில்லையே! பிள்ளையவர்கள் அடிக்கடி உம்மைப் பற்றிக கூறினார்கள். சௌக்கியந்தானே?” என்று தேசிகர் கேட்டார்.

நான் உசிதமாக விடை கூறினேன். பிறகு, “பிள்ளையவர்களுக்கு உம்மைப்போல ஒருவர் எப்போதும் அருகில் இருக்க வேண்டும். அவர்களுக்கு முன்புபோலத் தேகசௌக்கியம் இல்லை. பாடஞ் சொல்லும் விசயத்தில் அவர்களுக்கு அதிகச் சிரமம் கொடுக்கக் கூடாது. அவர்களிடம் கேட்க வேண்டிய பாடங்களை நீரும் பிறரும் கேட்டு வாருங்கள். நூதனமாக வந்தவர்களுக்கு உம்மைப் போன்ற பழைய மாணாக்கர்கள் பாடம் சொல்லலாம். பிள்ளையவர்களுக்கும் சிரமபரிகாரமாக இருக்கும். மடத்தில் மாணாக்கர்களுடைய கூட்டம் அதிகமாக இருப்பதைக் காண்பது நமக்கு எவ்வளவோ சந்தோசமாக இருக்கிறது” என்று தேசிகர் அன்போடு மொழிந்தார்.

நான் பணிவாக விடைபெற்றுப் பிள்ளையவர்களைச் சார்ந்தேன். கம்பராமாயணம் பாடம் கேட்க வேண்டுமென்று எனக்கிருந்த விருப்பத்தை ஆசிரியரிடம் புலப்படுத்தினேன். குமாரசாமித் தம்பிரானும் சவேரிநாத பிள்ளையும் வேறு சிலரும் என்னோடு சேர்ந்து கேட்டுக்கொண்டனர். ஆசிரியர் எங்கள் விருப்பத்திற்கு இணங்கி அப்பெரிய காவியத்தை முதலிலிருந்தே பாடம் சொல்லத் தொடங்கினார்.

(தொடரும்)

தமிழுக்குவளம் சேர்த்த அயல்நாட்டுத் தமிழறிஞர்கள். அ. ஆந்திரிக்கசு அடிகளார்‌, ஆ. வீரமாமுனிவர்‌

 




தமிழுக்குவளம் சேர்த்த அயல்நாட்டுத் தமிழறிஞர்கள்.

1. அச்சுக்கலைத்‌ தந்த ஆந்திரிக்கசு அடிகளார்‌

உலக மொழிகள்‌ மூவாயிரத்துக்கு மேற்பட்டவை. உலகின்‌ முதன்‌ மொழியாக ஒளியுடன்‌ மிளிர்வது தமிழ்‌. இரண்டாயிரத்துப்‌ பத்து மொழிகளில்‌ இடம்‌ பெற்றுள்ள விவிலியத்‌ திருநூல்‌, பாபேல்‌ கோபுரம்‌ கட்டப்பட்டபோது ஒரே மொழியாகத்‌ தமிழ்‌ திகழ்ந்ததைத்‌ தெளிவுறுத்துகிறது. தொடக்கநூலில்‌ (1:1-2)இரண்டு தொடர்கள்‌ இச்செய்தியை எடுத்துரைக்கின்றன. உலகம்‌ முழுவதும்‌ ஒரே மொழியும்‌ ஒரே வார்த்தையும்‌ இருந்தன. பாபேல்‌ கோபுரத்தை கட்டிய பெருமைக்குரியவர்‌ தமிழர்‌. கிழக்கே இருந்து சென்ற தமிழர்‌ சிநேயார்ச்சு‌ சமவெளியில்‌ தங்கி அக்கோபுரப்‌ பணிகளில்‌ ஈடுபட்டிருந்தனர்‌. தமிழ்‌ இலக்கிய வரலாறு பன்னீராயிரம்‌ ஆண்டுகளாக நிலவி வருவதை இறையனார்‌ களவியல்‌ உரை விளம்புகிறது. அச்சுக்கலை முதல்‌ ஆராய்ச்சித்துறை வரை பல்வேறு நீலைகளில்‌ அயல்நாட்டுத்‌ தமிழறிஞர்‌ வியத்தகு பணியாற்றியுள்ளனர்‌.

போர்த்துக்கல்‌ நாட்டு வில்லா விசோவாவில்‌ தோன்றிய என்றி என்றிக்கசு, தமிழகத்தின்‌ புனைனக்காயலில்‌ திருமறைத்‌ தொண்டு ஆற்ற வருகை தந்தார்‌. சேசுசபைத்‌ துறவியான இவர்‌, கடற்கரைச்‌ சிற்றூர்களில்‌ செயலாற்றினார்‌; பனை ஓலைச்‌ சுவடிகளில்‌ எழுதிப்‌ பழகிய மக்களுக்கு அச்சுப்பொறி வாயிலாக நூல்களை உருவாக்கி வழங்கிய பெருமை பொருந்தியவர்‌, தமிழை முறையாகக்‌ கற்று மொழிபெயர்ப்பாளராகவும்‌ பதிப்பாசிரியராகவும்‌ இலக்கண ஏந்தலாகவும்‌ அகராதி அறிஞராகவும்‌ வரலாற்று மேதையாகவும்‌ மடல்கள்‌ பல தீட்டிய சான்றோராகவும்‌ விழுமிய சமயத்‌ தீருத்தொண்டராகவும்‌ விளங்கினார்‌. தமிழில்‌ ௮ச்சேறிய முதல்‌ மூன்று நூல்களையும்‌ போர்த்துக்கீசிய மொழியிலிருந்து தமிழாக்கம்‌ செய்து வழங்கியுள்ளார்‌. தம்பிரான்‌ வணக்கம்‌ என்னும்‌ பதினாறு பக்க ஏடு கொல்லத்தில்‌ 20.10.1576 அன்று அச்சிடப்பட்டது; அமரிக்க நாட்டு ஆர்வருடு பல்கலைக்‌ கழகத்தில்‌ உள்ளது. கிரிசித்தியானி வணக்கம்‌ என்னும்‌ நூற்று இருபத்திரண்டு பக்க நூல்‌ 14.11.1579 அன்று கொச்சியில்‌ அச்சாயிற்று; பாரீசு தேசிய நூலகத்தில்‌ இடம்‌ பெற்றுள்ளது. அருளாளர்‌ கொன்சால்வசு அவர்கள்‌ உறுதுணையோடு புன்னைக்காயலில்‌ நிறுவப்பட்ட அச்சகத்தில்‌, அறுநூற்று அறுபத்‌தெட்டுப்‌ பக்கங்கள்‌ கொண்ட அடியார்‌ வரலாறு 1586ஆம்‌ ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. வத்திக்கான்‌ நூலகத்தில்‌ பாதுகாக்கப்படுகிறது. ஆந்தீரிக்கசு அடிகளார்‌ நல்கிய கொம்பேசியோனாயிரு (1580) விரிவாக அமைந்துள்ளது. அடிகளார்‌ போர்த்துக்கீசிய மொழியில்‌ தமிழ்‌ இலக்கணம்‌, தமிழ்‌-போர்த்துக்கீசிய அகராதி ஆகியவற்றையும்‌ அருளியுள்ளார்‌. அயல்‌ நாட்டவருக்குத்‌ தமிழ்‌ நாடு, ‌ தமிழ்மொழி பற்றி அறுபது கடிதங்களையும்‌ எழுதியுள்ளார்‌. இறைவனையே தம்பிரான்‌ என்று குறிக்கும்‌ அடிகளார்‌அவருக்குச்‌ செலுத்தும்‌ வழிபாட்டையே வணக்கம்‌ ௭ன்று விளம்பியுள்ளார்‌. பரதவர்‌ பயன்படுத்திய படகுகளின்‌ வகைகளையும்‌ குறிப்பிட்டுள்ளார்‌. உரு என்பது நீளமுகக்‌ கப்பல்‌ ; தோணி என்பது வட்டமுகக்‌ கப்பல்‌; கட்டுமரம்‌, கப்பல்‌, சம்பான்‌, பரிசல்‌, மரக்கலம்‌, வள்ளம்‌ என்று பலவகைப்‌ படகுகளையும்‌ பட்டியலிட்டுள்ளார்‌; போர்த்துக்கீசிய – தமிழ்‌ உறவுப்‌ பாலத்தை உருவாக்கியவர்‌ இவரே.

பதினெட்டாம்‌ நூற்றாண்டில்‌ இயேசுபெருமானின்‌ திருத்தொண்டராகத்‌ தமிழ்நாட்டுக்கு வருகை தந்த வீரமாமுனிவர்‌ 1711 முதல்‌ 1747 வரை முப்பத்தாறு ஆண்டுகள்‌ திருமறைக்கும்‌ தீந்தமிழுக்கும்‌ விழைந்து உழைத்துள்ளார்‌. தம்‌ வாழ்நாளில்‌ முப்பத்தைந்து நூல்கள்‌ நல்கிய பெருமிதம்‌ பொருந்தியவர்‌.

அகராதி ஆக்கம்‌, இலக்கணப்‌ படைப்பு, எழுத்து வரிவடிவச்‌ சீர்திருத்தம்‌, உரைநடை மறுமலர்ச்சி, கடிதஇலக்கிய வளர்ச்சி, காப்பியப்‌ புனைவு. சித்த மருத்துவ நூலாக்கம்‌, சிறுகதைத்‌ தோற்றம்‌, சிற்றிலக்கியஎழுச்சி, தமிழ்‌ – இலத்தீன்‌ உறவுப்‌ பாலம்‌, மொழியில்‌ முனைப்பு, வள்ளுவத்தை வையக நூலாக்கும்‌ முயற்சி, சமய நல்லிணக்கச்‌ சால்பு என்று பல்வேறு துறைகளில்‌ முறையாகவும்‌நிறைவாகவும்‌ தொண்டாற்றியுள்ளார்‌. வீரமாமுனிவருக்குத்‌ தமிழிலக்கியச்‌ சோலையில்‌ அழிவில்லா உருவச்‌ சிலை ஒன்று அமைந்திருக்கிறது; கண்‌ உள்ளவர்கள்‌ கண்டு கொள்ளலாம்‌ என்று பி.சிறீ ஆச்சார்யா “நான்‌ அறிந்த தமிழ்‌ மணிகள்‌” என்னும்‌ நூலில்‌ (289) கூறியுள்ளார்‌.

கோனான்குப்பத்தில்‌ அன்னை மரியாளுக்குத்‌ திருக்கோவில்‌ எழுப்பி, அவளுக்குப்‌ பெரிய நாயகி என்று பெயரிட்டு, அவ்வூரை ஆரியனூர்‌ என்று போற்றியுள்ளார்‌; அங்கிருந்தே இயேசுவின்‌ தந்தை யோசேப்புக்கு வாடாத மாலை என்று பொருள்‌ தரும்‌ தேம்பாவணிக்‌ காப்பியத்தை இயற்றியுள்ளார்‌;

கொள்ளிடத்தின்‌ வடகரையில்‌ அமைந்த ஏலாக்குறிச்சியைத்‌ திருக்காவலூர்‌ என்று வழங்கச்‌ செய்தார்‌; ௮ன்னை மரியாளை அடைக்கல நாயகி என்று பாடிப்‌ பரவியுள்ளார்‌. முப்பது வேதியர்க்குத்‌ தமிழ்‌ கற்பித்த வீரமாமுனிவர்‌ ஒரே பெண்பாற்‌ கலம்பகம்‌ ஆகிய திருக்காவலூர்க்‌ கலம்பகம்‌ தந்துள்ளார்‌. திருச்சிராப்‌பள்ளி அருகே அமைந்துள்ள ஆவூரில்‌ பணியாற்றியபோது, தேம்பாவணிக்‌ காப்பியத்துக்கு உரை வரந்துள்ளார்‌ (1726-1729). ஐந்திலக்கண நூலாகத்‌ தாம்‌ இயற்றிய தொன்னூல்‌ விளக்கம்‌ எளிதாகவும்‌தெளிவாகவும்‌ பயன்பட வேண்டும்‌ என்று எண்ணித்‌ தாமே அதற்கு உரையும்‌ எழுதி, திருமறைச்‌ செந்‌தமிழ்த்‌ தேசிகர்‌ என்று புகழ்‌ பெற்றுள்ளார்‌. மறைமொழி வாயினன்‌, மலிதவத்து இறைவன்‌, நிறை மொழிக்‌ குரவன்‌, நிகரில்‌ கேள்வியன்‌ என்று எல்லோரும்‌ ஏற்றுப்‌ போற்றும்‌ வீரமாமுனிவரின்‌ வித்தகத்‌ தமி்ப்‌ பணிகள்‌ வியந்து பாராட்டத்‌ தக்கவை.

1730 ஆம்‌ ௮ண்டு வீரமாமுனிவர்‌ திருக்குறளின்‌ அறத்துப்பாலையும்‌ பொருட்பாலையும்‌ இலத்‌தீன்‌ மொழியில்‌ ஆக்கியுள்ளார்‌நூற்று நாற்பது மொழிகளில்‌ திருக்குறள்‌ வெளிவரவும்‌ ஒளிதரவும்‌ வீரமாமுனிவர்‌ முன்னோடியாக விளங்குகிறார்‌.

1732ஆம்‌ ஆண்டு பெயர்‌, பொருள்‌, தொகை, தொடை என்னும்‌ நான்கு நிலைகளில்‌ அருஞ்‌ சொற்களுக்குப்‌ பொருள்‌ காணும்‌ வகையில்‌ சதுரகராதி வழங்கியுள்ளார்‌. பதினையாயிரம்‌ தமிழ்ச்‌ சொற்களுக்கு விளக்கம்‌ நல்கும்‌ சதுரகராதி மொழிக்‌ களஞ்சியமாகத்‌ திகழ்கிறது.

1743ஆம்‌ ஆண்டு தமிழ்‌-இலத்தீன்‌ பேச்சுமொழி அகராதியை ஒன்பதாயிரம்‌ சொற்களுக்கு விஎக்கம்‌ தரும்‌ வகையில்‌ ஈந்துள்ளார்‌. 1744ஆம்‌ ஆண்டு போர்த்துக்கீசு-தமிழ்‌ இலத்தீன்‌ அகராதியை இயற்றியுள்ளார்‌; நாலாயிரத்து முந்நூற்று ஐம்பத்து மூன்று போர்த்துக்கீசியச்‌ சொற்களுக்குத்‌ தமிழிலும்‌ இலத்தீனிலும்‌ பொருள்‌ கூறப்பட்டுள்ளது. 1744ஆம்‌ ஆண்டு வீரமாமுனிவர்‌ பிரெஞ்சு – தமிழ்‌ அகராதியை வழங்கியுள்ளார்‌. வீரமாமுனிவரின்‌ தமிழ்‌-ஆங்கில அகராதி பற்றி எலிசாகூல்‌ வீரமாமுனிவரின்‌ வேதியர்‌ ஒழுக்கம்‌ என்னும்‌ நூலின்‌ பதிப்புரையில்‌ குறிப்பிட்டுள்ளார்‌.

வீரமாமுனிவர்‌ கொடுந்தமிழ்‌ என்னும்‌ பேச்சு வழக்கு இலக்கணம்‌, செந்தமிழ்‌ என்னும்‌ எழுத்‌து வழக்கு இலக்கணம்‌, திறவுகோல்‌ என்னும்‌ பாட்டு எழுதும்‌ இலக்கணம்‌ ஆகிய மூன்று நூல்களை இலத்தீன்‌ மொழியில்‌ இயற்றியுள்ளார்‌. தொன்னூல்‌ விளக்கம்‌ இலக்கிய வகைகள்‌ முப்பத்தைந்தினை நூற்பாவாலும்‌ ஐம்பத்தாறினை உரைநடையாலும்‌ விளக்குகிறது. சவலை வெண்பாமணிமாலை, எண்‌ வகைப்‌ புத்தணிகள்‌ ஆகியவை வீரமாமுனிவர்‌ தொன்னூல்‌ விளக்கம்‌ வாயிலாக வழங்கியுள்ள புதுக்‌ கொடைகள்‌ ஆகும்‌. வீரமாமுனிவரே தமிழில்‌ எகர ஏகாரங்களையும்‌ ஒகர ஓகாரங்களையும்‌ ஒற்றைக்‌ கொம்பு – இரட்டைக்‌ கொம்பு வேறுபாடுகளையும்‌ தெளிவாக எழுத உதவியவர்‌ ஆவார்‌. தமிழ்‌ வரிவடிவ மாற்றத்‌தைத்‌ தாம்‌ கொண்டு வந்த செய்தியைக்‌ கொடுந்தமிழ்‌ இலக்கண நூலில்‌ பெருமிதத்தோடு பேசியுள்ளார்‌.

வேதியர்‌ ஒழுக்கம்‌, வேத விளக்கம்‌, ஞானக்கண்ணாடி, பேதக மறுத்தல்‌, உலுத்தேரினத்தியல்‌பு, வாமன்‌ சரித்திரம்‌, பரமார்த்த குருவின்‌ கதை, ஞான விளக்கம்‌, தீருச்சபைக்‌ கணிதம்‌ ஆகிய ஒன்பது உரைநடை நூல்களையும்‌ வீரமாமுனிவர்‌ வழங்கியுள்ளார்‌. பதினெட்டு இயல்களுடன்‌ நூற்று நாற்பது உட்பிரிவுகள்‌ கொண்ட வேதவிளக்கம்‌ தமிழில்‌ பொருள்‌ அட்டவணை தந்த முதல்‌ நூலாகும்‌.

தூய பவுலடியாரைப்‌ போன்று, வீரமாமுனிவர்‌ இறை மக்களிடையே உறவையும்‌ தொடர்‌பையும்‌ பேணி வளர்க்கும்‌ குறிக்கோளுடன்‌ திருக்கடையூர்‌ நாட்டுத்‌ திருச்சபைக்கு எழுதின நிருபம்‌, பொது நிருபம்‌ என்று இரண்டு கடித இலக்கியங்களை நல்கியுள்ளார்‌. வீரமாமுனிவரின்‌ தேம்பாவணிக்‌ காப்பியம்‌ யோசேப்பின்‌ அறுபது ஆண்டு வாழ்வியலை முப்பத்தாறு படலங்களாகவும்‌ மூவாயிரத்து அறுநூற்றுப்‌ பதினைந்து பாடல்களாகவும்‌ வழங்குகிறது. புண்ணியங்களால்‌ வளர்ந்தவன்‌ என்னும்‌ பொருள்தரும்‌ வளன்‌ என்னும்‌ காப்பியத்‌ தலைவன்‌, வையகத்தார்‌ வானகத்தார்‌ வணங்குகின்ற வரம்‌ பெற்ற மதிவல்லோன்‌ (8:3) என்று பாராட்டப்‌ படுகிறான்‌. கம்பர்‌ இராமகாதையுள்‌ பன்னீராயிரத்துப்‌ பதினாறு பாக்களில்‌ எண்பத்தேழு சந்த வேறுபாடுகளைப்‌ பயன்படுத்தியுள்ளார்‌; வீரமாமுனிவர்‌ தேம்பாவணியில்‌ மூவாயிரத்து அறுநூற்றுப்‌ பதினைந்து பாக்களில்‌ தொண்ணூறு சந்த வேறுபாடுகளை எந்த இடர்‌ பாடும்‌ இன்றி அமைத்துள்ளார்‌ (செந்தமிழ்‌ இலக்கணம்‌, ப.110. இலத்தீன்‌ தாக்கம்‌ கொண்டதாகத்‌ தேம்பாவணி திகழ்வதால்‌, வீரமாமுனிவர்‌ தமிழ்‌ இலக்கியத்தின்‌ தாந்தே (Dante della lingua Tamil)என்று போற்றப்படுகிறார்‌ (தனிநாயகம்‌ அடிகளார்‌, தமிழ்த்தூது,ப. 23)

வீரமாமுனிவர்‌ திருக்காவலூர்க்‌ கலம்பகம்‌, கித்தேரியம்மாள்‌ அம்மானை, அன்னை அழுங்கல்‌ அந்தாதி, அடைக்கல மாலை, அடைக்கல நாயகி வெண்‌ கலிப்பா, தேவாரம்‌, வண்ணக்கலைகள்‌ ஆகிய சிற்றிலக்கிய ஏடுகள்‌ ஏழினை ஈந்துள்ளார்‌. இறையின்பம்‌ பெருக்கும்‌ திருக்காவலூர்க்‌ கலம்பகம்‌ உலா என்னும்‌ துறைக்கு மாற்றாக சமூக உல்லாசம்‌ என்னும்‌ துறையை நல்கியுள்ளது. மணிமேகலைக் காப்பியத்தை நினைவூட்டும்‌ கித்தேரியம்மாள்‌ அம்மானை திருமறையில்‌ இறைமக்கள்‌ பற்றுறுதியு டன்‌ விளங்கத்‌ தூண்டும்‌ நாட்டுப்‌ புறவியல்‌ இலக்கியம்‌ ஆகும்‌. வீரமாமுனிவரின்‌ பரமார்த்த குருவின்‌ கதை எட்டுச்‌ சிறுகதைகளின்‌ தொகுப்பாகும்‌. பேச்சுத்‌ தமிழ்‌ நடைக்குச்‌ சான்றாகத்‌ திகழும்‌ இந்நூல்‌ ஐம்‌பத்து நான்கு மொழிகளில்‌ வெளிவந்து ஒளிதந்துள்ளது. வீரமாமுனிவர்‌ சமய நல்லிணக்கச்‌ சான்றோனாகவும்‌ புகழுடன்‌ திகழ்கிறார்‌. அரியலூர்ப்‌ பெருநிலக்‌ கிழாரை அரங்கப்ப மழவராயரை இராசபிளவை என்னும் நோயிலிருந்து மீட்டுக்‌ காத்தார்‌; மழவ ராயர்‌ மகிழ்ந்து நூற்று எழுபத்தைந்து ஏக்கர்‌ நிலத்தை 5.8.1735 அன்று வழங்கியுள்ளார்‌. ஆர்க்காட்டு நவாபின்‌ மருமகன்‌ சந்தா சாகிபைச்‌ சந்தித்து அளவளாவி, விழுமிய துறவி என்னும்‌ பொருள்‌ தரும்‌ இசுமாத்து சந்நியாசி (தூய முனிவர்) என்று பாராட்டப்பட்டார்‌. சந்தாசாகிபு தம்‌ தாத்தா சததுல்லாகான்‌ பயன்படுத்திய தந்தப்‌பல்லக்கை வீரமாமுனிவருக்கு வழங்கியுள்ளார்‌. ஆண்டுதோறும்‌ பன்னீராயிரம்‌ வெள்ளி வருவாய்‌ தரும்‌ காவிரிக்‌ கரை ஊர்களாகிய போகளம்‌, மால்வாய்‌, அரசூர்‌, நல்லூர்‌ ஆகியவற்றை மானியமாக நல்கியுள்ளார்‌.

வீரமாமுனிவர்‌ மாசற்ற சேசுநாதர்‌ காட்டிய நெறியைத்‌ தமிழகம்‌ எங்கும்‌ பரப்பி வெற்றி கண்டவர்‌; பல்வேறு துறைகளில்‌ நூல்கள்‌ இயற்றித்‌ தமிழ்‌ மொழிக்குச்‌ செயற்கரும்‌ பணிசெய்து சிறப்புற்றவர்‌ என்று பெரும்புலவர்‌ பண்டாரம்‌ நம்பியார்‌ தமிழ்‌ வளர்த்த தைரியநாதர்‌ என்னும்‌ நூலில்‌ போற்றிப்‌ புகழ்ந்துள்ளார்‌ (157)

Saturday, July 20, 2024

உ.வே.சா.வின் என் சரித்திரம் 97 : பிரசங்க சம்மானம்

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 96 : அங்கே இல்லை- தொடர்ச்சி)

காரைக்கு வந்தவுடன் திருவிளையாடற்புராணப் பிரசங்கத்தைப் பூர்த்தி செய்யும் விசயத்தில் எனக்கு வேகம் உண்டாயிற்று. “இன்னும் கொஞ்சநாள் பொறுத்தால் அதிகத் தொகை சேரும்” என்று சிலர் கூறினர். “கிடைத்தமட்டும் போதுமானது” என்று கிருட்ணசாமி ரெட்டியாரிடம் சொன்னேன்.

பிள்ளையவர்கள் தமக்கு எழுதிய கடிதத்தைக் கண்டு அவர் அளவற்ற ஆனந்தமடைந்தார். அவர் விசயமாக அப்புலவர் பிரான் எழுதியிருந்த பாட்டைப் படித்துப் படித்துப்பெறாத பேறு பெற்றவரைப் போலானார். “உங்களுடைய சம்பந்தத்தால் அம்மகா கவியினுடைய திருவாக்கால் பாடப் பெற்ற பாக்கியத்தை அடைந்தேன். நான் எங்கே! அவர்கள் எங்கே! முன்பு தெரியாதவர்களாக இருந்தும் என்னை ஒரு பொருளாக எண்ணி இதை எழுதியிருக்கிறார்களே! அம் மகானை நேரில் தரிசித்து மகிழ்வுறும் சமயமும் கிடைக்குமா?” என்று கூறிப் பாராட்டினார்.

கிருட்டிணசாமி ரெட்டியார் அன்பு

அதுதான் சமயமென்று எண்ணிய நான், “அவர்கள் என்னை விரைவில் வந்துவிடும்படி கட்டளை யிட்டிருக்கிறார்கள். உங்களுக்கு எழுதிய கடிதத்திலும் அதைத்தான் வற்புறுத்தியிருக்கிறார்கள்” என்றேன். பிள்ளையவர்கள் தம்மேல்ஒரு பாடல் எழுதியிருப்பதையும் தமக்குக் கடிதம் எழுதியிருப்பதையும் எண்ணி எண்ணி விம்மிதம் அடைவதிலேயே அவர் கவனம் சென்றது; அக்கடிதம் எதன் பொருட்டு எழுதப் பெற்றதென்பதை அவர் யோசிக்கவில்லை. நான் எடுத்துச் சொன்னபோது ரெட்டியார் தருமசங்கடத்தில் அகப்பட்டார்.

“நீங்கள் அவசியம் அங்கே போகவேண்டுமா? இங்கேயே இருந்து இராமாயணம், பாகவதம் முதலியவற்றையும் பிரசங்கம் செய்துவந்தால் எங்களால் இயன்ற உபகாரங்களைச் செய்வோமே. ஒரு கவலையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் பிள்ளையவர்களிடம் அடிக்கடி போய்ச் சில நாட்கள் இருந்து வரலாம். நாங்களும் வந்து அவர்களைக் கண்டு கேட்டுக் கொள்கிறோம். அவர்களையே இங்கே அழைத்து வந்து சில காலம் இருக்கச் சொல்லி உபசாரங்கள் செய்து அனுப்ப எண்ணியிருக்கிறோம். நீங்களோ இனிமேற் கிரமமாக இல்லறத்தை நடத்தவேண்டிய நிலையில் இருக்கிறீர்கள். இங்கே நீங்கள் எல்லாவிதமான சௌகரியங்களையும் அடையலாம். உங்கள் தகப்பனாருக்கும் மிகவும் திருப்தியாக இருக்கும். இது நான் மாத்திரம் சொல்லுவதன்று. பிரசங்கம் கேட்க வருபவர்கள் எல்லாருக்கும் உங்களை இங்கே இருக்கும்படி செய்யவேண்டுமென்ற கருத்து இருக்கிறது. அடுத்தபடி என்ன படிக்கப் போகிறாரென்று எல்லாரும் என்னை ஆவலாகக் கேட்கிறார்கள்” என்று அவர் ஒரு சிறு பிரசங்கம் செய்தார்.

“நம்முடைய தந்தையார் எதை விரும்புகிறாரோ அதற்கு அனுகுணமாக அல்லவோ இருக்கிறது இந்தப் பேச்சு? இவர்களுடைய அன்பு நமக்கு ஒரு தடையாக நிற்கிறதே!” என்று எண்ணிச் சிறிது தடுமாறினேன். பிறகு, “உங்களுடைய அன்பை நான் மறக்க மாட்டேன். இன்னும் சில காலம் பிள்ளையவர்களிடம் போய் இருந்து பாடம் கேட்டுப் பின்பு இங்கேயே வந்துவிடுகிறேன். நான் இன்னும் பால்யன்தானே? நான் கற்றுக்கொள்ள வேண்டியவற்றை இப்போது கற்றுக்கொள்ளாவிட்டால் பிறகு வருந்தும்படி நேரும். பிள்ளையவர்களுடைய பெருமை உங்களுக்குத் தெரியாததன்று. அவர்களிடம் பாடம் கேட்கும் பாக்கியம் கிடைத்திருக்கும்போது அதை இடையே நழுவவிடுவது தருமமா? என்னுடைய நன்மையை விரும்புபவர்களில் நீங்கள் மிகவும் முக்கியமானவர்கள். உங்களுடைய விருப்பத்தை நான் புறக்கணிப்பதாக எண்ணக் கூடாது. உங்கள் விருப்பத்தை நிறைவேற்றும் சந்தர்ப்பம் எப்படியும் கிடைக்கும், ஆனால் என் விருப்பம் நிறைவேறுவதற்கு இதுதான் சமயம்” என்று அவரிடம் சொன்னேன்.

ரெட்டியாருக்கு விடை சொல்ல ஒன்றும் தோன்றவில்லை. “அப்பால் உங்கள் இஷ்டம். நீங்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது” என்று ஒப்புக்கொண்டார்.

திருவிளையாடற் புராணம் பூர்த்திசெய்யும் பொருட்டு ஒரு நல்லநாள் குறிப்பிடப்பட்டது. அப்புராணத்தில் இறுதிப் படலமாகிய அருச்சனைப் படலத்தில் ஒரு பகுதி முன்பே நடைபெற்றது. பிற்பகுதியைச் சொல்லிப் பிரசங்கத்தை நிறைவேற்ற வேண்டும்.

குறிப்பிட்ட தினத்தில் ஊர் முழுவதும் பெருங்கூட்டமாக இருந்தது. பிரசங்கம் செய்து வந்த பிள்ளையார்கோவிலுக்கு முன் இருந்த பந்தலைப் பிரித்து ஒரு பெரிய பந்தல் போட்டார்கள். வாழை, கமுகு, கூந்தற் பனை, இளநீர்க்குலை, மாவிலைத் தோரணங்கள், தேர்ச் சீலைகள் முதலியவற்றைக் கட்டிப் பந்தலை அலங்கரித்தார்கள். ஒரு பெரிய திருவிழாநாளைப் போல எல்லாரும் உற்சாகத்தோடு இருந்தார்கள். மாலையில் முன்நேரத்திலே பிரசங்கம் தொடங்கப் பெற்றது. இப்புராணத்தைக் கேட்டுவந்த வசிட்டர் முதலிய இரிடிகள் பலர் பல சிவத்தலங்களைத் தரிசித்துக்கொண்டு மதுரையை அடைந்து சிரீ சோமசுந்தரக் கடவுளை வழிபட்டுப் பூசித்தனரென்ற செய்தி அருச்சனைப் படலத்தில் உள்ளது. அம்முனிவர்கள் பூசை செய்த பிறகு சொக்கநாதப் பெருமானைத் துதிப்பதாக அப்படலத்தின் இறுதியில் ஒருபகுதி இருக்கிறது. அப்பகுதியில் அக்கடவுளின் அறுபத்து நான்கு திருவிளையாடல்களுள் முக்கியமானவை ஓசைச் சிறப்புடைய செய்யுட்களில் தொகுத்துச் சொல்லப் பெற்றிருக்கின்றன.

பழியொடு பாச மாறுகெட வாச வன்செய்பணி

     கொண்ட வண்டசரணம்

வழிபடு தொண்டர் கொண்டநிலை கண்டு வெள்ளிமணி

     மன்று ளாடிசரணம்

செழியன்பி ளிந்தி டாதபடி மாறி யாடல்தெளி

     வித்த சோதிசரணம்

எழுகடல் கூவி மாமியுடன் மாம னாடவிசை

     வித்ச வாதிசரணம்”

என்பது அப் பகுதியில் முதற் பாட்டு. இவ்வாறு ஆறுபாடல்கள் வருகின்றன. அச்செய்யுட்களை வெவ்வேறு இராகத்திற் பாடிப் பொருள் சொல்லும்போது முன்பு விரிவாகச் சொன்ன திருவிளையாடல்களின் ஞாபகத்தினாலும் பாடல்களின் இன்னோசையாலும் யாவரும் மனங்கசிந்து உருகினர்.

பிரத்தியட்ச அகத்தியர்

இவ்வாறு முனிவர் துதிசெய்யச் சோமசுந்தரக் கடவுள் பிரசன்னமாகி அவர்களை நோக்கி, “உங்களுடைய தோத்திரம் நமக்கு ஆனந்தத்தை அளித்தது” என்று திருவாய் மலர்ந்தருளினார். இந்த விஷயத்தைக் கூறும் பாடல் வருமாறு:

எனத்துதித்த வசிட்டாதி யிருடிகளைக் குறுமுனியை

     எறிதே னீப

வனத்துறையுஞ் சிவபெருமா னிலிங்கத்தின் மூர்த்தியாய்

     வந்து நோக்கிச்

சினத்தினைவென் றகந்தெளிந்தீர் நீர் செய்த பூசைதுதி

     தெய்வத் தானம்

அனைத்தினுக்கு மனைத்துயர்க்கு நிறைந்துநமக் கானந்தம்

     ஆயிற் றன்றே.”

[குறுமுனி—அகத்திய முனிவர். நீபவனம்—கடம்ப வனம்; மதுரைக்கு ஒரு பெயர். மூர்த்தியாய்—திருவுருவமுடையவராகி. தெய்வத்தானம்—க்ஷேத்திரங்கள்.]

(தொடரும்)

Saturday, July 13, 2024

உ.வே.சா.வின் என் சரித்திரம் 96 : அங்கே இல்லை

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 95 : அத்தியாயம்-60 : அம்பரில் தீர்ந்த பசி-தொடர்ச்சி)

என்றைக்குப் புறப்பட்டேன், எப்படி நடந்தேன் முதலியவற்றில் எதுவும் ஞாபகத்தில் இல்லை. ஆவேசம் வந்தவனைப் போலக் காரையில் புறப்பட்டவன் திருவாவடுதுறைக்குச் சென்று நின்றேன். திருவாவடுதுறை எல்லையை மிதித்தபோது தான் என் இயல்பான உணர்வு எனக்கு வந்தது. நேரே மடத்துக்குச் சென்றேன். முதலில் ஓர் அன்பர் என்னைக் கண்டதும் என் சேம சமாசாரத்தை விசாரித்தார். நான் அவருக்குப் பதில் சொல்லவில்லை. “பிள்ளையவர்கள் எங்கே இருக்கிறார்கள்?” என்று அவரை விசாரித்தேன்.

“அவர்கள் இங்கே இல்லை” என்று பதில் வந்தது. எனக்குத் திடுக்கிட்டது. அடுத்தபடி ஒரு தம்பிரானைக் கண்டேன். அவர் என்னோடு பேசுவதற்கு முன்பே அவரை, “பிள்ளையவர்கள் எங்கே?” என்று கேட்டேன். “அவர்கள் அம்பருக்குப் போயிருக்கிறார்கள்” என்று அவர் சொன்னார்.

பத்து மாதங்களுக்கு மேலாக நான் பிரிந்திருந்தமையால் என்னைக் கண்டவர் களெல்லாம் என் சேம சமாசாரத்தைப் பற்றி விசாரித்தார்கள். குமாரசாமித் தம்பிரானைக் கண்டேன். அவர் பிள்ளையவர்கள் திருப்பெருந்துறையில் இருந்தபோது இயற்றிய சேக்கிழார் பிள்ளைத் தமிழைப் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். திருப்பெருந்துறையில் அரங்கேற்றம் நிறைவேறியவுடன் ஆசிரியர் புதுக்கோட்டை முதலிய பல ஊர்களுக்குச் சென்றனரென்றும், அப்பால் திருவாவடுதுறைக்கு வந்தாரென்றும், பவ வருடம் பங்குனி மாதம் அவருக்கு சசுட்டியப்தபூர்த்தி மிகச் சிறப்பாக நடைபெற்ற தென்றும் சொன்னார். ஒரு வாரத்திற்கு முன்புதான் அம்பர்ப் புராணத்தை அரங்கேற்றும் பொருட்டு ஆசிரியர் அத்தலத்திற்குச் சென்றனரென்றும் அறிந்தேன். அறிந்தது முதல் எனக்குத் திருவாவடுதுறையில் இருப்புக் கொள்ளவில்லை. அம்பரை நோக்கிப் புறப்பட்டேன்.

அம்பரை அடைந்தது

காலையிற் புறப்பட்டுப் பிற்பகல் ஒரு மணி அளவுக்கு அம்பரை அடைந்தேன். வழியில் வேலுப்பிள்ளை என்ற கனவான் எதிர்ப்பட்டார். அம்பர்ப் புராணம் செய்வித்தவர் அவரே. அவரிடம் பிள்ளையவர்களைப் பற்றி விசாரித்தேன். பிள்ளையவர்கள் சொர்க்கபுர மடத்தில் தங்கி இருப்பதாக அவர் சொல்லவே, நான் அவ்விடம் போனேன். அங்கே என் ஆசிரியர் மத்தியான்ன போசனம் செய்த பிறகு வழக்கம் போல் நித்திரை செய்திருந்தார். காலை முதல் ஆகாரம் இல்லாமையாலும் நெடுந்தூரம் நடந்து வந்தமையாலும் எனக்கு மிக்க பசியும் சோர்வும் இருந்தன. ஆனால் ஆசிரியரைக் கண்டு பேச வேண்டுமென்ற பசி அவற்றை மீறி நின்றது. என்னை வழியில் சந்தித்த வேலுப்பிள்ளை என் தோற்றத்திலிருந்து நான் ஆகாரம் செய்யவில்லை என்று அறிந்து உடனே தம் காரியத்தர் ஒருவரிடம் சொல்லி நான் ஆகாரம் செய்வதற்குரிய ஏற்பாட்டைச் செய்துவிட்டார். அக்காரியத்தர் என்னிடம் வந்து, போசனம் செய்து கொண்டு பிறகு பிள்ளையவர்களோடு பேசலாமென்று சொன்னார். எனக்கு ஆகாரத்தில் புத்தி செல்லவில்லை. பிள்ளையவர்களோடு ஒரு வார்த்தையாவது பேசிவிட்டுத்தான் சாப்பிட வேண்டுமென்ற உறுதியுடன் இருந்தேன்.

‘பிரிந்தவர் கூடினால்’

ஆசிரியர் விழித்துக் கொண்டார். அவருடைய குளிர்ந்த அன்புப் பார்வை என் மேல் விழுந்தது. “சாமிநாதையரா?”

“ஆம்.”

அப்பால் சில நிமி்ங்கள் இருவரும் ஒன்றும் பேசவில்லை; பேச முடியவில்லை. கண்கள் பேசிக் கொண்டன. என் கண்களில் நீர்த்துளிகள் மிதந்து பார்வையை மறைத்தன.

“சௌக்கியமா?” என்று ஆசிரியர் கேட்டார்.

“சௌக்கியம்” என்றேன். நான் ஒரு குற்றவாளியைப் போலத் தீனமான குரலில் பதில் சொன்னேன்.

“போய் அதிக நாள் இருந்து விட்டீரே!” என்று ஆசிரியர் சொன்னார்.

அதற்கு நான் என்ன பதில் சொல்வேன்! குடும்ப இன்னலால் அவ்வாறு செய்ய நேர்ந்ததென்றும், ஒவ்வொரு நாளும் அவரை நினைந்து நினைந்து வருந்தினேனென்றும் சொன்னேன்.

“இவர் இன்னும் சாப்பிடவில்லை” என்று காரியத்தர் இடையே தெரிவித்தார். நான் சாப்பிடவில்லையென்பது அப்போதுதான் எனக்கு ஞாபகம் வந்தது.

“சாப்பிடவில்லையா! முன்பே சொல்லக் கூடாதா? முதலிலே போய்ச் சாப்பிட்டு வாரும்” என்று ஆசிரியர் கட்டளையிட்டார். போய் விரைவில் போசனத்தை முடித்துக் கொண்டு வந்தேன்.

பிறகு இருவரும் பேசிக் கொண்டே இருந்தோம். பத்து மாதங்களாக அடக்கி வைத்திருந்த அன்பு கரை புரண்டு பொங்கி வழிந்தது. என் உள்ளத்தே இருந்த பசி ஒருவாறு அடங்கியது. ஆசிரியர் கடன் தொல்லையிலிருந்து நீங்கவில்லை என்று நான் தெரிந்து கொண்டேன். அம்பர்ப் புராணம் அரங்கேற்ற வந்ததற்கு அங்கே பொருளுதவி பெறலாமென்ற எண்ணமே காரணம் என்று ஊகித்து உணர்ந்தேன்.

அவரது கசுட்டம்

காரையிலும் அயலூர்களிலும் உள்ள அன்பர்களுடைய உத்தம குணங்களை நான் எடுத்துச் சொன்னேன். ஆசிரியர் கவனத்துடன் கேட்டார். அவருக்கு என்ன தோன்றிற்றோ தெரியவில்லை. திடீரென்று, “நான் அங்கே வரலாமா?” என்று கேட்டார். அதைக் கேட்டதும் எனக்குத் துணுக்கென்றது. அவருக்கு இருந்த இன்னல், “எங்காவது உபகாரம் செய்பவர்கள் இருக்கிறார்களா?” என்று எண்ணச் செய்தது போலும்.

“ஐயா அவர்கள் அங்கே வருவதாக இருந்தால் எல்லாரும் தலைமேல் வைத்துத் தாங்குவார்கள். அங்கே உள்ளவர்களில் பெரும்பாலோர் ஏழைகளாக இருந்தாலும் அவர்களுடைய அன்புக்கு இணையாக எந்தப் பொருளும் இல்லை. விருத்தாசல ரெட்டியார் முதலிய செல்வர்கள் ஐயா அவர்களைப் பாராமல் இருந்தாலும் ஐயா அவர்களிடம் பக்தியும் பாடம் கேட்க வேண்டுமென்னும் ஆவலும் உடையவர்களாக இருக்கிறார்கள். ஐயா அவர்களின் பெயரைச் சொல்லித்தான் நாங்கள் பிழைத்து வருகிறோம்” என்றேன் நான்.

தலச் சிறப்புகள்

அன்று மாலை பிள்ளையவர்கள் என்னை அத்தலத்திலுள்ள சிவாலயத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே உள்ள மூர்த்திகளையும் தீர்த்தங்களையும் பற்றிய செய்திகளை எடுத்துரைத்தார். சிவபெருமான் எழுந்தருளியுள்ள ஆலயம் கோச்செங்கட் சோழராற் கட்டப்பெற்றதென்றும், தேவாரத்தில் அதனைப் புலப்படுத்தும் குறிப்பு இருக்கிறதென்றும் கூறினார். திவாகரத்திற் பாராட்டப் பெறுபவனும் ஒளவையாராற் புகழப்படுபவனுமாகிய சேந்தன் என்னும் உபகாரி வாழ்ந்து வந்தது அவ்வூரே என்று தெரிந்து கொண்டேன்.

பாடம் கேட்டலும் சொல்லுதலும்

அம்பரில் சில தினங்கள் ஆசிரியரிடம் சில நூல்களைப் பாடம் கேட்டேன். அம்பர்ப் புராண அரங்கேற்றம் அப்போது ஆரம்பமாகவில்லை. ஆதனால் இடையே ஆசிரியருடன் கொங்குராயநல்லூர், சொர்க்கபுரம் என்னும் ஊர்களுக்குப் போய் வந்தேன். பிள்ளையவர்களிடம் பாடம் கேட்டதோடு வேலுப்பிள்ளையின் தம்பியாகிய குழந்தைவேலுப் பிள்ளைக்குச் சேக்கிழார் பிள்ளைத் தமிழும், திருவிடைமருதூருலாவும் சொன்னேன்.

நான் பாடம் சொல்லுகையில் கவனித்த ஆசிரியர், “சாமி நாதையர் புராணப் பிரசங்கம் செய்த பழக்கத்தால் நன்றாக விசயங்களை விளக்குகிறார்” என்று அருகிலிருந்தவர்களிடம் கூறினார்.

விடைபெற்று மீண்டது

அம்பரில் பத்து நாட்கள் தங்கியிருந்தேன். அப்பால், “நான் காரைக்குப்போய்ப் புராணத்தைப் பூர்த்தி செய்து கொண்டு வந்து விடுகிறேன்” என்று ஆசிரியரிடம் சொன்னேன். அவருக்கு விடை கொடுக்க மனம் வரவில்லை; என் பிரயாணத்தைத் தடுக்கவும் மனமில்லை. “சரி, போய்வாரும், சீக்கிரம் வந்துவிடும்” என்றார். அன்றியும், “வழிச் செலவுக்கு வைத்துக்கொள்ளும்” என்று என் கையில் ஒரு உரூபாயை அளித்தார். பிறகு காரைக் கிருட்டிணசாமி ரெட்டியாருக்கு, “சாமிநாதையரைக் கொண்டு புராணத்தை விரைவில் நிறைவேற்றித் தாமதிக்காமல் அனுப்பி விடுக” என்று ஒரு கடிதம் எழுதிக் கொடுத்தார். வழக்கம் போல் அதன் தலைப்பில் அவர் விசயமாக ஒரு பாடலை இயற்றி எழுதுவித்தார்.

நான் அவரைப் பிரிதற்கு மனமில்லாமலே விடைபெற்றுக் காரை வந்து சேர்ந்தேன்.

(தொடரும்)

Saturday, July 06, 2024

உ.வே.சா.வின் என் சரித்திரம் 95 : அத்தியாயம்-60 : அம்பரில் தீர்ந்த பசி

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 94 : அத்தியாயம்-59 : திருவிளையாடற் பிரசங்கம்-தொடர்ச்சி)

அம்பரில் தீர்ந்த பசி

செங்கணத்திலிருந்து காரைக்குப் புறப்படுகையில் விருத்தாசல
ரெட்டியாரிடம் பாகவதம், கம்பராமாயணம், திருக்கோவையார். திருக்குறள்
ஆகிய புத்தகங்களை
 இரவலாக வாங்கிப் போயிருந்தேன். பாகவதம் மாத்திரம்
ஏட்டுப் பிரதியாக இருந்தது. காரையில் பகல் வேளைகளில் அவற்றையும்
என்னிடமிருந்த வேறு நூல்களையும் படித்து இன்புற்றேன். பாகவதம்
படித்தபோது முதல் கந்தமும் தசம கந்தமும் என் மனத்தைக் கவர்ந்தன. .
கிருட்டிணசாமி ரெட்டியார் தெலுங்கு பாகவதத்தைப் படித்து அதிலுள்ள
விசயங்களைச் சொல்வார். தமிழ்ப் பாகவதத்திலுள்ள சில சந்தேகங்களை
அவர் கூறிய செய்திகளால் நீக்கிக் கொண்டேன். கம்பராமாயணத்தைப் படிக்கப் படிக்க அதில் என் மனம் பதிந்தது. திருவிளையாடற் புராணப் பிரசங்கம் செய்யும்போது இடையிடையே மேற் கோளாகக் கம்ப
ராமாயணத் திலிருந்து பாடல்களைச் சொல்லிப் பொருள் உரைப்பேன்.
இப்பழக்கத்தால் இராமாயணத்தில் எனக்கு ஊற்றம் உண்டாயிற்று. என்
ஆசிரியரிடம் மீண்டும் போய்ச் சேர்ந்தவுடன் எப்படியேனும் இராமாயண
முழுவதையும் பாடம் கேட்டுவிட வேண்டும் என்று உறுதி கொண்டேன்.

களத்தூர் முகம்மதியர்

சில நாட்களில் அருகில் உள்ள ஊர்களுக்குச் சென்று முன்பே
பழக்கமானவர்களைப் பார்த்து வருவேன். ஒரு நாள் களத்தூருக்குச் சென்றேன்.
அங்கே தமிழ் படித்த முகம்மதிய வயோதிகர் சிலர் இருந்தனர். அவர்களோடு
பேசுகையில் அவர்களுக்கிருந்த தமிழபிமானத்தின் மிகுதியை உணர்ந்து
வியந்தேன். கம்பராமாயணம், அரிச்சந்திர புராணம் முதலிய நூல்களிற் பல
அரிய பாடல்களை அவர்கள் தங்கு தடையின்றிச் சொல்லி மகிழ்ந்தார்கள்.
பாடல்களை அவர்கள் சொல்லும்போதே அவர்களுக்கு அப்பாடல்களில்
எவ்வளவு ஈடுபாடு உண்டென்பது புலப்படும். நான் பிள்ளையவர்களிடத்தில்
இருந்ததை அறிந்தவர்களாதலின் என்பால் வந்து அவர்கள் மொய்த்துக்
கொண்டார்கள்; ஆசிரியர் புகழையும் கவித்துவ சக்தியையும் கேட்டுக் கேட்டு
மகிழ்ந்தனர். சாதி, மதம் முதலிய வேறுபாடுகள் அவர்களுடைய
தமிழனுபவத்துக்கு இடையூறாக நிற்கவில்லை. தமிழ்ச்சுவையை நுகர்வதில்
அவர்கள் உள்ளம் என் உள்ளத்தைக் காட்டிலும் அதிக முதிர்ச்சியைப்
பெற்றிருந்தது.

புராணப் பிரசங்கம் நடந்தது. நாளுக்கு நாள் ஜனங்களுடைய
உத்ஸாகமும் ஆதரவும் அதிகமாயின. எனக்குப் பிரசங்கம் செய்யும் பழக்கம்
வன்மை பெற்றது. இந்நிலையில் என் மனம் மாத்திரம் இடையிடையே
வருத்தமடைந்தது; ஆசிரியரைப் பிரிந்திருந்ததுதான் அதற்குக் காரணம்.

ஆசிரியருக்கு எழுதிய கடிதம்

சூரிய மூலையிலிருந்து புறப்பட்டபோதே பிள்ளையவர்களுக்கு ஒரு
கடிதம் எழுதினேன். செங்கணத்துக்குப் புறப்படும் செய்தியை அதில்
தெரிவித்திருந்தேன், காரைக்கு வந்த பிறகும் ஒரு கடிதம் எழுதினேன்.
அக்கடிதத்தின் தலைப்பில் ஒரு செய்யுள் எழுதியிருந்தேன். திருவிளையாடற்
புராணத்தின் நினைவு என்னுள்ளத்தே பதிந்திருந்தது. அதனால், சொல்வடிவாக
ஸ்ரீ மீனாட்சியும் பொருள் வடிவாக ஸ்ரீ சுந்தரேசக் கடவுளும் எழுந்தருளியிருப்பதாகச்
சொல்லப்பட்டிருக்கிறது. சொல்லும் பொருளும் ஒருங்கே தோற்றியது போன்ற
வடிவத்தோடும் அவ்விருவர் திருநாமங்களும் இயைந்த மீனாட்சி சுந்தரம் என்ற
பெயரோடும் விளங்குபவர் ஆசிரியர் என்ற கருத்து நான் எழுதிய செய்யுளில்
அமைந்திருந்தது.

பிரிவுத் துன்பம்

என் கடிதத்தில் நான் திருவிளையாடற் புராணம் வாசித்து
வருவதாகவும், விரைவில் முடித்துவிட்டுப் பாடம் கேட்க வர எண்ணி
இருப்பதாகவும் எழுதியிருந்தேன். ஆசிரியர் விடைக் கடிதம் எழுதுவாரென்று
நம்பியிருந்தேன். அவரிடமிருந்து ஒரு கடிதமும் வரவில்லை. நான் பல
மாதங்கள் பிரிந்திருப்பதனால் என் மேல் கோபம் கொண்டாரோ, அல்லது
நான் வருவதாக எழுதியிருந்ததை அவர் நம்பவில்லையோ என்று
எண்ணலானேன். நான் ஆசிரியரைக் கண்ட முதல் நாளில், “எவ்வளவோ
பேர்கள் வந்து படிக்கிறார்கள். சில காலம் இருந்துவிட்டுப் போய்
விடுகிறார்கள்” என்று அவர் சொன்னது என் நினைவுக்கு வந்தது. “அவ்வாறு
போனவர்களில் என்னையும் ஒருவனாகக் கருதி விட்டார்களோ!” என்று
நினைத்தபோது எனக்கு இன்னதென்று சொல்ல முடியாத துக்கம் எழுந்தது.
“நாம் இங்கே வந்தது பிழை. அவர்களைப் பிரிந்து இவ்வளவு மாதங்கள்
தங்கியிருப்பது உண்மை அன்புக்கு அழகன்று” என்று எண்ணினேன்.
இவ்வெண்ணம் என் மனத்தில் உண்டாகவே காரையில் நிகழ்ந்த பிரசங்கம்,
அங்குள்ளவர்களது அன்பு, இயற்கைக் காட்சிகள் எல்லாவற்றையும் மறந்தேன்.
என்ன இருந்து என்ன! ஆசிரியர் அன்பு இல்லாத இடம் சொர்க்கலோகமாக
இருந்தால்தான் என்ன? ஆசிரியர் பிரிவாகிய வெப்பம் அந்த இடத்தைப்
பாலைவனமாக்கி விட்டது. நூற்றுக்கணக்கானவர்கள் அன்பு, வைத்துப்
பழகினாலும் அந்த ஒருவர் இல்லாத குறையே பெரிதாக இருந்தது.
எல்லோருக்கும் முன்னே உயர்ந்த ஸ்தானத்தில் இருந்து பிரசங்கம் செய்த
போதிலும் என் ஆசிரியருக்குப் பின்னே ஏடும் எழுத்தாணியுமாக நின்று அவர்
ஏவல் கேட்டு ஒழுகுவதில் இருந்த இன்பத்தைக் காட்டிலும் அது பெரிதாகத்
தோற்றவில்லை.

“விரைவில் புராணத்தை முடித்துக்கொண்டு பிள்ளையவர்களிடம்
போகவேண்டும்” என்று என் தந்தையாரிடம் சொல்லத் தொடங்கினேன்.

அவர் இன்னும் சில மாதங்கள் அங்கே தங்கியிருக்க வேண்டுமென்று
விரும்பினார். எனது கல்வி அந்த அளவிலே என் ஜீவனத் திற்குப் போதுமானதென்று கூட அவர் எண்ணியிருக்கலாம், என்
கருத்தை அவர் மறுக்கவும் இல்லை; அங்கீகரிக்கவும் இல்லை.

பிரசங்க நிறுத்தம்

திருவிளையாடல் ஒருவாறு நிறைவேறியது. ஒரு புராணம் முடிவு
பெற்றால் கடைசி நாளன்று பெரிய உத்ஸவம் போலக் கொண்டாடிப்
புராணிகருக்கு எல்லோரும் சம்மானம் செய்வது வழக்கம். காரையிலும்
அயலூர்களிலும் உள்ளவர்கள் தங்கள் தங்களால் எவ்வளவு உதவி செய்ய
முடியுமோ அவ்வளவையும் செய்யச் சித்தமாக இருந்தார்கள். கிருஷ்ணசாமி
ரெட்டியார் எல்லோரிடமிருந்தும் பொருள் தொகுத்து வந்தார். முற்றும்
தொகுப்பதற்குச் சில தினங்கள் சென்றன. அதனால் புராணத்தில் கடைசிப்
படலத்தை மட்டும் சொல்லாமல் அதற்கு முன்புள்ள படலம் வரையில் நான்
சொல்லி முடிந்தபிறகு சில நாள் பிரசங்கம் நின்றிருந்தது.

பிரயாணம்

பிள்ளையவர்கள் கடிதம் எழுதவில்லையே என்ற கவலை என் மனத்தை
உறுத்திக்கொண்டே இருந்தது. பிரசங்கத்தைச் சில நாட்கள் நிறுத்தும் சமயம்
நேர்ந்தவுடன், ஆசிரியரைப் போய்ப் பார்த்து வர அதுதான்
சமயமென்றெண்ணி என் தாய் தந்தையரைக் காரையிலே விட்டுவிட்டு நான்
திருவாவடுதுறைக்குப் புறப்பட்டேன். என் வேகத்தைக் கண்ட என் தந்தையார்
என்னைத் தடுக்கவில்லை. “போய்ச் சீக்கிரம் வந்து விடு; புராணப் பூர்த்தியை
அதிக நாள் நிறுத்தி வைக்கக்கூடாது” என்று மட்டும் சொல்லி அனுப்பினார்.

(தொடரும்)