(உ.வே.சா.வின் என் சரித்திரம் 94 : அத்தியாயம்-59 : திருவிளையாடற் பிரசங்கம்-தொடர்ச்சி)

அம்பரில் தீர்ந்த பசி

செங்கணத்திலிருந்து காரைக்குப் புறப்படுகையில் விருத்தாசல
ரெட்டியாரிடம் பாகவதம், கம்பராமாயணம், திருக்கோவையார். திருக்குறள்
ஆகிய புத்தகங்களை
 இரவலாக வாங்கிப் போயிருந்தேன். பாகவதம் மாத்திரம்
ஏட்டுப் பிரதியாக இருந்தது. காரையில் பகல் வேளைகளில் அவற்றையும்
என்னிடமிருந்த வேறு நூல்களையும் படித்து இன்புற்றேன். பாகவதம்
படித்தபோது முதல் கந்தமும் தசம கந்தமும் என் மனத்தைக் கவர்ந்தன. .
கிருட்டிணசாமி ரெட்டியார் தெலுங்கு பாகவதத்தைப் படித்து அதிலுள்ள
விசயங்களைச் சொல்வார். தமிழ்ப் பாகவதத்திலுள்ள சில சந்தேகங்களை
அவர் கூறிய செய்திகளால் நீக்கிக் கொண்டேன். கம்பராமாயணத்தைப் படிக்கப் படிக்க அதில் என் மனம் பதிந்தது. திருவிளையாடற் புராணப் பிரசங்கம் செய்யும்போது இடையிடையே மேற் கோளாகக் கம்ப
ராமாயணத் திலிருந்து பாடல்களைச் சொல்லிப் பொருள் உரைப்பேன்.
இப்பழக்கத்தால் இராமாயணத்தில் எனக்கு ஊற்றம் உண்டாயிற்று. என்
ஆசிரியரிடம் மீண்டும் போய்ச் சேர்ந்தவுடன் எப்படியேனும் இராமாயண
முழுவதையும் பாடம் கேட்டுவிட வேண்டும் என்று உறுதி கொண்டேன்.

களத்தூர் முகம்மதியர்

சில நாட்களில் அருகில் உள்ள ஊர்களுக்குச் சென்று முன்பே
பழக்கமானவர்களைப் பார்த்து வருவேன். ஒரு நாள் களத்தூருக்குச் சென்றேன்.
அங்கே தமிழ் படித்த முகம்மதிய வயோதிகர் சிலர் இருந்தனர். அவர்களோடு
பேசுகையில் அவர்களுக்கிருந்த தமிழபிமானத்தின் மிகுதியை உணர்ந்து
வியந்தேன். கம்பராமாயணம், அரிச்சந்திர புராணம் முதலிய நூல்களிற் பல
அரிய பாடல்களை அவர்கள் தங்கு தடையின்றிச் சொல்லி மகிழ்ந்தார்கள்.
பாடல்களை அவர்கள் சொல்லும்போதே அவர்களுக்கு அப்பாடல்களில்
எவ்வளவு ஈடுபாடு உண்டென்பது புலப்படும். நான் பிள்ளையவர்களிடத்தில்
இருந்ததை அறிந்தவர்களாதலின் என்பால் வந்து அவர்கள் மொய்த்துக்
கொண்டார்கள்; ஆசிரியர் புகழையும் கவித்துவ சக்தியையும் கேட்டுக் கேட்டு
மகிழ்ந்தனர். சாதி, மதம் முதலிய வேறுபாடுகள் அவர்களுடைய
தமிழனுபவத்துக்கு இடையூறாக நிற்கவில்லை. தமிழ்ச்சுவையை நுகர்வதில்
அவர்கள் உள்ளம் என் உள்ளத்தைக் காட்டிலும் அதிக முதிர்ச்சியைப்
பெற்றிருந்தது.

புராணப் பிரசங்கம் நடந்தது. நாளுக்கு நாள் ஜனங்களுடைய
உத்ஸாகமும் ஆதரவும் அதிகமாயின. எனக்குப் பிரசங்கம் செய்யும் பழக்கம்
வன்மை பெற்றது. இந்நிலையில் என் மனம் மாத்திரம் இடையிடையே
வருத்தமடைந்தது; ஆசிரியரைப் பிரிந்திருந்ததுதான் அதற்குக் காரணம்.

ஆசிரியருக்கு எழுதிய கடிதம்

சூரிய மூலையிலிருந்து புறப்பட்டபோதே பிள்ளையவர்களுக்கு ஒரு
கடிதம் எழுதினேன். செங்கணத்துக்குப் புறப்படும் செய்தியை அதில்
தெரிவித்திருந்தேன், காரைக்கு வந்த பிறகும் ஒரு கடிதம் எழுதினேன்.
அக்கடிதத்தின் தலைப்பில் ஒரு செய்யுள் எழுதியிருந்தேன். திருவிளையாடற்
புராணத்தின் நினைவு என்னுள்ளத்தே பதிந்திருந்தது. அதனால், சொல்வடிவாக
ஸ்ரீ மீனாட்சியும் பொருள் வடிவாக ஸ்ரீ சுந்தரேசக் கடவுளும் எழுந்தருளியிருப்பதாகச்
சொல்லப்பட்டிருக்கிறது. சொல்லும் பொருளும் ஒருங்கே தோற்றியது போன்ற
வடிவத்தோடும் அவ்விருவர் திருநாமங்களும் இயைந்த மீனாட்சி சுந்தரம் என்ற
பெயரோடும் விளங்குபவர் ஆசிரியர் என்ற கருத்து நான் எழுதிய செய்யுளில்
அமைந்திருந்தது.

பிரிவுத் துன்பம்

என் கடிதத்தில் நான் திருவிளையாடற் புராணம் வாசித்து
வருவதாகவும், விரைவில் முடித்துவிட்டுப் பாடம் கேட்க வர எண்ணி
இருப்பதாகவும் எழுதியிருந்தேன். ஆசிரியர் விடைக் கடிதம் எழுதுவாரென்று
நம்பியிருந்தேன். அவரிடமிருந்து ஒரு கடிதமும் வரவில்லை. நான் பல
மாதங்கள் பிரிந்திருப்பதனால் என் மேல் கோபம் கொண்டாரோ, அல்லது
நான் வருவதாக எழுதியிருந்ததை அவர் நம்பவில்லையோ என்று
எண்ணலானேன். நான் ஆசிரியரைக் கண்ட முதல் நாளில், “எவ்வளவோ
பேர்கள் வந்து படிக்கிறார்கள். சில காலம் இருந்துவிட்டுப் போய்
விடுகிறார்கள்” என்று அவர் சொன்னது என் நினைவுக்கு வந்தது. “அவ்வாறு
போனவர்களில் என்னையும் ஒருவனாகக் கருதி விட்டார்களோ!” என்று
நினைத்தபோது எனக்கு இன்னதென்று சொல்ல முடியாத துக்கம் எழுந்தது.
“நாம் இங்கே வந்தது பிழை. அவர்களைப் பிரிந்து இவ்வளவு மாதங்கள்
தங்கியிருப்பது உண்மை அன்புக்கு அழகன்று” என்று எண்ணினேன்.
இவ்வெண்ணம் என் மனத்தில் உண்டாகவே காரையில் நிகழ்ந்த பிரசங்கம்,
அங்குள்ளவர்களது அன்பு, இயற்கைக் காட்சிகள் எல்லாவற்றையும் மறந்தேன்.
என்ன இருந்து என்ன! ஆசிரியர் அன்பு இல்லாத இடம் சொர்க்கலோகமாக
இருந்தால்தான் என்ன? ஆசிரியர் பிரிவாகிய வெப்பம் அந்த இடத்தைப்
பாலைவனமாக்கி விட்டது. நூற்றுக்கணக்கானவர்கள் அன்பு, வைத்துப்
பழகினாலும் அந்த ஒருவர் இல்லாத குறையே பெரிதாக இருந்தது.
எல்லோருக்கும் முன்னே உயர்ந்த ஸ்தானத்தில் இருந்து பிரசங்கம் செய்த
போதிலும் என் ஆசிரியருக்குப் பின்னே ஏடும் எழுத்தாணியுமாக நின்று அவர்
ஏவல் கேட்டு ஒழுகுவதில் இருந்த இன்பத்தைக் காட்டிலும் அது பெரிதாகத்
தோற்றவில்லை.

“விரைவில் புராணத்தை முடித்துக்கொண்டு பிள்ளையவர்களிடம்
போகவேண்டும்” என்று என் தந்தையாரிடம் சொல்லத் தொடங்கினேன்.

அவர் இன்னும் சில மாதங்கள் அங்கே தங்கியிருக்க வேண்டுமென்று
விரும்பினார். எனது கல்வி அந்த அளவிலே என் ஜீவனத் திற்குப் போதுமானதென்று கூட அவர் எண்ணியிருக்கலாம், என்
கருத்தை அவர் மறுக்கவும் இல்லை; அங்கீகரிக்கவும் இல்லை.

பிரசங்க நிறுத்தம்

திருவிளையாடல் ஒருவாறு நிறைவேறியது. ஒரு புராணம் முடிவு
பெற்றால் கடைசி நாளன்று பெரிய உத்ஸவம் போலக் கொண்டாடிப்
புராணிகருக்கு எல்லோரும் சம்மானம் செய்வது வழக்கம். காரையிலும்
அயலூர்களிலும் உள்ளவர்கள் தங்கள் தங்களால் எவ்வளவு உதவி செய்ய
முடியுமோ அவ்வளவையும் செய்யச் சித்தமாக இருந்தார்கள். கிருஷ்ணசாமி
ரெட்டியார் எல்லோரிடமிருந்தும் பொருள் தொகுத்து வந்தார். முற்றும்
தொகுப்பதற்குச் சில தினங்கள் சென்றன. அதனால் புராணத்தில் கடைசிப்
படலத்தை மட்டும் சொல்லாமல் அதற்கு முன்புள்ள படலம் வரையில் நான்
சொல்லி முடிந்தபிறகு சில நாள் பிரசங்கம் நின்றிருந்தது.

பிரயாணம்

பிள்ளையவர்கள் கடிதம் எழுதவில்லையே என்ற கவலை என் மனத்தை
உறுத்திக்கொண்டே இருந்தது. பிரசங்கத்தைச் சில நாட்கள் நிறுத்தும் சமயம்
நேர்ந்தவுடன், ஆசிரியரைப் போய்ப் பார்த்து வர அதுதான்
சமயமென்றெண்ணி என் தாய் தந்தையரைக் காரையிலே விட்டுவிட்டு நான்
திருவாவடுதுறைக்குப் புறப்பட்டேன். என் வேகத்தைக் கண்ட என் தந்தையார்
என்னைத் தடுக்கவில்லை. “போய்ச் சீக்கிரம் வந்து விடு; புராணப் பூர்த்தியை
அதிக நாள் நிறுத்தி வைக்கக்கூடாது” என்று மட்டும் சொல்லி அனுப்பினார்.

(தொடரும்)