Saturday, August 31, 2024

உ.வே.சா.வின் என் சரித்திரம் 103 – தேசிகர் சொன்ன பாடங்கள்

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 102 – அபய வார்த்தை-தொடர்ச்சி)

மாசி மாதம் மகாசிவராத்திரி புண்ணிய காலம் வந்தது. என் தந்தையார் இராத்திரி நான்கு சாமத்திலும் அபிசேக அருச்சனைகள் செய்வார். அவருடைய பூசைக்கு வேண்டிய தேங்காய்களை மடத்திலிருந்து பெறுவதற்காக நான் தேசிகரிடம் சென்றேன். விசேட காலங்களில் அவ்வூரிலுள்ளவர்கள் தங்கள் தங்கள் வீட்டிற் செய்யும் பூசை முதலியவற்றிற்கு உபயோகித்துக் கொள்ளும்படி இளநீர் தேங்காய் பழம் வத்திரம் சந்தனக்கட்டை முதலியன மடத்திலிருந்து அவர்களுக்கு அளிக்கப்படும். கடையில்லாமையால் அவற்றை வேறு எங்கும் வாங்க இயலாது.

நான் தேசிகரிடம் சென்றபோது அங்கே தியாகராச சாத்திரிகள் இருந்தார். ஏதோ சம்பாசணை நடந்தது. எனக்கு வேண்டிய பொருளைக் கேட்கத் துணிவின்றி அங்கே நிற்கவே என் முகக் குறிப்பினால் நான் எதையோ பெறும் பொருட்டு வந்திருக்கிறேனென்பதை அறிந்த தேசிகர், “என்ன விசேடம்? ஏதாவது வேண்டுமா?” என்று கேட்டார். நான் என் தந்தையாரது பூசைக்கு இளநீர்களும் தேங்காய்களும் வேண்டுமென்பதை அறிவித்தேன்.

தேசிகர், “அப்படியா?” என்று சொல்லி விட்டு ஒடுக்கத் தம்பிரானை அழைத்து, முதல் நாள் இருவர் தனித்தனியே கொண்டு வந்து கொடுத்த ஒரு தேங்காயையும் விநாயகரையும் கொண்டு வரும்படி கட்டளையிட்டார். அப்படியே அவர் அவ்விரண்டையும் கொணர்ந்து வைத்தார். அவ்றைச் சுட்டிக் காட்டி, “இவற்றை உபயோகப்படுத்திக் கொள்ளும்” என்று தேசிகர் என்னை நோக்கிச் சொன்னார்.

அவற்றைக் கண்ட நான், “தேங்காய் நமக்குப் பல வேண்டுமே ஒன்றைக் கொடுக்கிறார்களே. நாம் விநாயகர் திருவுருவத்தைக் கேட்கவில்லையே! தகப்பனார் பூசையிலேயே விநாயக மூர்த்தி இருக்கிறாரே! இவ்வளவு பெரிய பிள்ளையாரை வைப்பதற்கு இடமில்லையே” என்று திகைத்தேன்.

தேசிகர், “என்ன யோசிக்கிறீர்? தேங்காயை அசைத்துப்பாரும். இளநீர் இருக்கிறதா, கொப்பரையா என்று தெரியும்” என்றார்.

அசைத்துப் பார்த்தேன். உள்ளே சலம் இருப்பதாகத் தோன்றியது. “கொப்பரை யன்று; இளநீர் இருக்கிறது” என்றேன்.

“நார் நன்றாக உரித்திருக்கிறார்களா?” என்று புன்சிரிப்புடன் கேட்டார்.

“செவ்வையாய் உரித்திருக்கிறது” என்றேன். உடனே அவர் அருகிலிருந்த தியாகராச சாத்திரிகளை நோக்கி, “உரூபா இருபது கொடுத்து இப்பிள்ளையாரையும், உரூபா பத்துக் கொடுத்து இத் தேங்காயையும் நேற்று வாங்கினோம்” என்றார்.

சாத்திரிகள்:— அவ்வளவு விலையா? பிள்ளையாருக்குக் கொடுத்தாலும் கொடுக்கலாம்; தேங்காய்க்குக் கொடுக்கலாமா? இப்போது அவ்வளவு தேங்காய்ப் பஞ்சம் வந்து விட்டதா?

தேசிகர்:— இதற்குக் கொடுக்கலாமென்று நமக்குத் தோற்றியது. இதைக் கொடுத்தவன் நம்மிடத்தில் அதிக விசுவாசமுள்ளவன்.

சாத்திரிகள்:— அப்படியானால் இந்தத் தேங்காய்க்கு விலையென்று சொல்வானேன்? அவனுக்கு இனாம் கொடுத்ததாக வைத்துக் கொள்ளலாமே.

தேசிகர்:— இல்லை; இல்லை; இத் தேங்காய்க்காகவே கொடுத்தோம்.

சாத்திரிகள்:— பிருதுவியில் இல்லாத தேங்காயா இது? இதற்குள்ளே மாணிக்கமா இருக்கிறது? எல்லாத் தேங்காயையும் போலவேதான் தேங்காயும் இளநீருந்தானே இருக்கின்றன!

தேசிகர் :— உடைத்துப் பார்த்தால் தெரியும்.

சாத்திரிகள் உடனே அத்தேங்காயை எடுத்து உடைக்க ஆரம்பித்தார். தேசிகர் சிரித்துக் கொண்டே, “வேண்டாம்; உடைக்க வேண்டாம். விடயத்தைச் சொல்லுகிறோம்” என்று தடுத்து விட்டுச் சொல்லத் தொடங்கினார்: “மடத்தைச் சேர்ந்த கிராமங்களில் உள்ள குடியானவர்களில் கரும்பு வைத்துப் பயிராக்குவோன் ஒருவன் வெல்லத்தால் தேங்காயைச் செய்வித்து இங்கே கொண்டு வந்து சேர்ப்பித்தான். வேறொருவன் வெல்லத்தைக் கொண்டு விநாயக மூர்த்தி செய்வித்துக் கொணர்ந்து சேர்ப்பித்தான். இந்த இரண்டினுடைய வேலைப்பாட்டையும் அறிந்து தேங்காய் கொணர்ந்தவனுக்கு உரூபா பத்தும், விநாயகரைக் கொணர்ந்தவனுக்கு இருபது உரூபாயும் கொடுத்து அனுப்பினோம்”

பிறகுதான் எங்களுக்கு உண்மை விளங்கியது. மிக்க ஆச்சரியத்தை அடைந்தோம். “இவற்றை உம்முடைய பிதா அவர்களிடம் கொடும். நீர் கேட்ட தேங்காய் முதலியவை பின்பு வரும்” என்று தேசிகர் என்னை அனுப்பினார்.

அவற்றை எடுத்துச் சென்று தந்தையாரிடம் கொடுத்து விடயத்தைச் சொல்லும்போதே இரண்டு கூடை நிறைய இளநீர்களும் தேங்காய்களும் கருப்பந்துண்டங்களும் வேறு பொருள்களும் வந்தன.

அன்று என் தந்தையார் அதற்குமுன் அடையாத திருப்தியை அடைந்தார்; தன் மனமாரச் சிவராத்திரி பூசை செய்து இன்புற்றார்.

திருவாவடுதுறை மடத்தில் படித்து வந்தவர்களுள் மேலகரம் சண்பகக் குற்றாலக் கவிராயரும் நானும் சகோதரர்களைப் போலவே பழகி வந்தோம். நாங்கள் இருவரும் பெரும்பாலும் சேர்ந்து படிப்பதும் சேர்ந்தே இருப்பதும் வழக்கம். ஒருநாள் எங்கள் இருவரையும் தேசிகர் அழைத்து, “நீங்கள் இரண்டு பேரும் நம்மிடத்திற் பகலிலும், இராத்திரி ஆகாரஞ் செய்த பின்பும் வந்து படிக்க வேண்டிய நூல்களைப் படித்து வாருங்கள். இதுவரை படியாத நூல்களை மற்றக்காலங்களில் இருவருமாகச் சேர்ந்து உழைத்துப் படியுங்கள். படிப்பதற்காக இங்கே வந்திருப்பவர்களுக்கு அவர்கள் எந்த எந்த நூலைப் பாடங் கேட்க விரும்புகிறார்களோ அவற்றை அறிந்து தகுதிக்கேற்றபடி பாடஞ் சொல்லி வாருங்கள். பாடஞ் சொல்லுவதால் உங்கள் கல்வி அபிவிருத்தி அடையும்” என்று சொல்லி அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தனர். என் சகபாடியாகிய குமாரசாமித் தம்பிரான் முதலியவர்களிடத்தும் இவ்வாறே கட்டளையிட்டார். அவ்வாறே செய்து வரலானோம்.

நானும் சண்பகக் குற்றாலக் கவிராயரும் பிறரும் பிள்ளையவர்கள் தங்கியிருந்த வீட்டையே எங்கள் இடமாகக் கொண்டு படித்தும் பாடஞ் சொல்லியும் வந்தோம். பாரதம், பாகவதம், திருக்குற்றாலப் புராணம் முதலிய காவியங்களையும் பலவகையான பிரபந்தங்களையும் படித்து ஆராய்ந்தோம். கம்பராமாயணத்தில் அயோத்தியா காண்டத்தில் ஒரு பகுதி வரையில் முன்பு பிள்ளையவர்களிடம் பாடம் கேட்டிருந்தோம். மேலே அந்நூலை முற்றும் படித்து விடவேண்டும் என்ற ஆவல் எங்களுக்கு எழுந்தது. அதனால் பிள்ளையவர்களுடைய ஏட்டுப் பிரதியையும், மடத்தில் உள்ள ஏட்டுப் பிரதிகளையும் வைத்துக்கொண்டு இரண்டு தடவை முற்றும் படித்தோம். படித்த காலத்தில் கண்ட பாடபேதங்களைக் கைப்புத்தகத்திலும் வேறு கடிதத்திலும் தனித்தனியே குறித்து வைத்தோம்.

சுப்பிரமணிய தேசிகரிடம் நாங்கள் இலக்கண நூல்களையும் சைவ சித்தாந்த சாத்திரங்களையும் சில இலக்கியங்களையும் பாடம் கேட்டோம். நன்னூல் விருத்தியுரையைப் பாடம் கேட்க விரும்பியபோது சுப்பிரமணிய தேசிகர் அதன் சம்பந்தமாகச் சில விடயங்களைச் சொல்லலானார்; “நன்னூலுக்கு முதலில் சங்கர நமச்சிவாயர் உரை எழுதினார். பிறகு சிவஞான முனிவர் அதைத் திருத்தியும் புதுக்கியும் விருத்தியுரையை அமைத்தார். அவர் தாம் எழுதிய சிவஞானபோத திராவிட மகாபாசியத்தில் அமைத்துள்ள அரிய வடமொழி தென்மொழிப் பிரயோகங்களை எளிதிற் பிற்காலத்தவர்க்குப் புலப்படுத்த நினைந்து இலக்கணக் கொத்து, தொல்காப்பியச் சூத்திரவிருத்தி, இலக்கண விளக்கச் சூறாவளி என்னும் நூல்களிலும் பிறவற்றிலும் உள்ள முக்கியமான சிலவற்றை அவ்வுரையில் அங்கங்கே சேர்த்தார். சில இடங்களில் சிலவற்றைக் குறைத்தும் சிலவற்றை மாற்றியும் எழுதி நிறைவேற்றினார். இலக்கணக் கொத்து முதலிய மூன்றையும் பாடம் கேட்ட பிறகுதான் விருத்தியுரை தெளிவாக விளங்கும்” என்று சொல்லிச் சிவஞான முனிவர் தம் கரத்தாலேயே திருத்திய ஏட்டுப் பிரதி ஒன்றை எடுத்துக் காட்டினார். அப்பிரதியில் அங்கங்கே அடித்தும் கூட்டியும் மாற்றியும் அம்முனிவர் எழுதியவற்றைப் பார்த்து மகிழ்ந்தோம்.

தேசிகர் கட்டளைப்படியே இலக்கணக் கொத்து முதலிய மூன்று நூல்களையும் பாடம் கேட்டுப் பிறகு நன்னூல் விருத்தியுரையைக் கேட்கத் தொடங்கினோம். சங்கர நமச்சிவாயர் உரைமாத்திரம் இருந்த ஏடொன்று மடத்தில் இருந்தது. அதையும் வைத்துக் கொண்டு எங்கெங்கே சிவஞான முனிவர் விருத்தியுரையில் திருத்தம் செய்திருக்கிறாரோ அங்கெல்லாம் ‘சி’ என்ற அடையாள மிட்டுக் குறித்துப் படித்தோம்.

யாப்பருங்கலக் காரிகை பாடம் கேட்டபோது அந்நூலின் அவதாரிகையிலே உள்ள விடயங்களை விரிவாக எடுத்துச் சொல்லி விளக்கினார். அதுவரையில் யாரும் அவ்விடயங்களைத் தெளிவாகச் சொன்னதில்லை. தண்டியலங்காரம் கேட்டோம். காவியாதர்சமென்ற வடமொழி நூலின் மொழி பெயர்ப்பாகிய அதனைப் பாடம் சொல்லும்போது வடமொழி நூலிலுள்ள சுலோகங்களை எடுத்துச் சொல்லி விளக்குவார். விசாகப் பெருமாளையர் எழுதிய அணியிலக்கணத்தைப் பாடங் கேட்டோம். அது வடமொழியிலுள்ள குவலயானந்தத்தைத் தழுவியது. அதன் அமைப்பையும் உதாரணச் செய்யுட்களையும் தேசிகர் பாராட்டுவார்.

அணியிலக்கணங்களைப் படித்து வருகையில் அவற்றிற் கூறப் பெற்ற அணிகளை நான் அமைத்துத் தேசிகர் விடயமாகப் புதிய செய்யுட்களை எழுதி அவரிடம் காட்டுவேன். அவர் கேட்டு மகிழ்ந்து பிழையிருப்பின் எடுத்துரைத்துத் திருத்துவார்.

தொல்காப்பியம் எழுத்ததிகாரம் இளம்பூரணர் உரை, சொல்லதிகாரம் சேனாவரையர் உரை, இலக்கண விளக்கம் என்பவற்றை நாங்களாகப் படித்து, சில சந்தேகங்களை நீக்கிக் கொண்டோம். சேனாவரையர் உரையில் உள்ள சந்தேகங்களை விளக்கும்போது தேசிகருக்கு அளவிறந்த உற்சாகம் உண்டாகும். “இவர் உரை எழுதுவதைப் போல் இலக்கண நூலுக்கு யாரும் எழுதமுடியாது. சம்சுகிருத ஞானம் நன்றாக இருப்பதால் பல அருமையான விடயங்களைக் காரண காரியத்தோடு நியாயங் காட்டி எழுதுகிறார்” என்று அவ்வுரையைப் பாராட்டுவார்.

எழுந்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் இலக்கண நூல்களைத்தான் பாடம் கேட்போம். அகப்பொருள் இலக்கணத்தைக் கேட்கவில்லை. திருச்சிற்றம்பலக் கோவையாரை உரையுடன் கேட்டபோது அவ்விலக்கியத்திலிருந்தே இலக்கணத்தை அறிந்துகொண்டோமே யன்றித் தனியே அகப்பொருள் இலக்கண நூலைப் பாடம் கேட்கவில்லை. அக்காலத்தில் அவ்விலக்கணத்தைத் தனியே படிப்பார் மிகக் குறைவு. பொருளிலக்கணத்தின் மற்றொரு பிரிவாகிய புறப்பொருளைப்பற்றிய ஆராய்ச்சியே இல்லை. அகப்பொருளிலக்கணத்தை ஒருவரும் படியாவிடினும் அகப் பொருளிலக்கியங்களைப் படித்தார்கள். புறப்பொருள் விடயத்திலோ இலக்கியமும் வழக்கில் இல்லை; இலக்கணத்தைத் தேடுவாரும் இல்லை.

யாப்பருங்கலக்காரிகை கேட்டபோது செய்யுள் வகைகளுக்கு உதாரணமாக அந்நூலில் அமைந்திருக்கும் சில பாடல்களுக்குத் தக்கவாறு பொருள் விளங்கவில்லை. சைன சமய சம்பந்தமான செய்திகள் அவற்றில் வருகின்றன. நான் முன்பு விருத்தாசல ரெட்டியாரிடம் அதனைக் கேட்ட கால முதலே அச்சந்தேகங்கள் விளங்காமலிருந்தன. தேசிகர், “காரிகையிலுள்ள இலக்கணங்களுக்கு இலக்கியமாக சிரீ குமரகுருபரர் சிதம்பரச் செய்யுட்கோவை என்ற பிரபந்தம் ஒன்றை இயற்றியிருக்கிறார். சைவ சம்பந்தமான நூலாதலின் நன்றாக விளங்கும். செய்யுளிலக்கணத்தைத் தெரிந்து கொள்ள அந்த நூல் மிக்க உபகாரமாக இருக்கும்” என்று சொல்லி எங்களுக்கு அதைப் பாடஞ் சொன்னார்.

திருக்குறளைப் பரிமேலழகருரையுடன் பிறகு பாடம் கேட்டேன். இலக்கண நூல்களுக்கு உரை செய்வதில் சேனாவரையர் எப்படி இணையற்றவரோ அப்படியே இலக்கிய நூல்களுக்கு உரை எழுதுவதில் பரிமேலழகர் இணையற்றவரென்பது தேசிகர் கருத்து. “இந்த இடத்தில் ஒரு விசேடமும் இராதென்று நாம் ஒரு குறளைப் பார்த்து நினைப்போம். அங்கே பரிமேலழகர் ஏதேனும் ஒரு விசேடத்தை எடுத்துக் காட்டுவார். பதசாரங்களை எழுதுவதிலும் சுருக்கமாக விடயங்களைத் தெரிவித்தலிலும் அவருக்கு மிஞ்சியவர்கள் இல்லை” என்று அடிக்கடி பாராட்டுவார். பல நுணுக்கமான விடயங்களைக் குறட்பாடம் நடந்தபோது தெரிந்துகொண்டேன்.

சைவசித்தாந்த சாத்திரங்களைக் கேட்க விரும்பிய என்னை முதலில் சிவப்பிரகாசக் கட்டளையையும் திருவாலவாய்க் கட்டளையையும் படிக்கச் சொன்னார். பிறகு சிவஞான போதச் சிற்றுரையையும் அப்பால் சிவஞான சித்தியாருரை முதலியவற்றையும் பாடம் சொன்னார்.

(தொடரும்)

Saturday, August 24, 2024

உ.வே.சா.வின் என் சரித்திரம் 102 – அபய வார்த்தை

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 101 – ‘சிவலோகம் திறந்தது’ – தொடர்ச்சி)

ஆசிரியர் வியோகமடைந்த பிறகு உலகத்தில் எல்லாம் எனக்கு ஒரே மயக்கமாக இருந்தது. வீட்டிற்கு வந்து ஓரிடத்தில் உட்கார்ந்துகொண்டேன். ஒரு வேலையும் செய்யத் தோன்றவில்லை. யாரிடமாவது ஏதேனும் பேசவும் விருப்பம் உண்டாகவில்லை. ஆசிரியர் இளமையில் இயற்றிய தியாகராசலீலை என்னும் நூலைக் கையில் வைத்துப் படித்தபடி இருந்தேன். ஆனால் என் உள்ளம் முழுவதும் அதில் ஈடுபடவில்லை. அடிக்கடி பிள்ளையவர்களது நினைவு எழுந்து துன்புறுத்தியது. அவருடைய கற்பனை மிகவும் பாராட்டத்தக்க நிலையில் அந்நூலில் அமைந்திருந்தது. அதனைப் படிக்கப் படிக்க ஆசிரியரது பிரிவினால் உண்டான துன்பத்தின் வேகம் அதிகமாயிற்று. கண்ணீர் வீழ்த்தியபடியே படித்தேன். ஆகாரத்திலும் மனம் சொல்லவில்லை.

ஒரு மணிக்குப் பிறகு மடத்திற்குப் புறப்பட்டேன். அங்கே ஓரிடத்தில் குமாரசாமித் தம்பிரான் சிலருடன் பேசிக்கொண்டிருந்தார். பேச்சு, பிள்ளையவர்களைப் பற்றியதுதான். நான் அங்கே போனவுடன் அவர் என்னைப் பார்த்து, “எல்லாரைக்காட்டிலும் உங்களுக்குத்தான் அதிகமான வருத்தம் இருக்கும்” என்றார். நான் மௌனமாக இருந்தேன். “பிள்ளையவர்கள் மடத்தில் இருந்ததனால் வெளியூர்களிலிருந்து எவ்வளவோ பேர்கள் வந்து அவர்களிடம் பாடங் கேட்டார்கள். மடத்தில் எப்போதும் மாணாக்கர்கள் கூட்டம் இருந்தது. இனிமேல் அப்படியிருக்க இடமில்லை. அவரவர் அவரவர் ஊருக்குப்போய் இருக்க வேண்டியதுதான். விசேடகாலங்களில் இங்கே வந்து போகலாம்” என்று பின்னும் வருத்தத்தோடு அவர் சொன்னார்.

அவர் பேச்சிலிருந்து எனக்கு ஒரு புதிய கவலை தோன்றியது. ‘பிள்ளையவர்களோடு எப்போதும் இருந்து பாடம் கேட்டுக்கொண்டும் எழுதிக்கொண்டும் சுகமாகக் காலத்தைக் கழித்தோம். இனிமேல் நாம் என்ன செய்வது? இம்மடத்திற்கும் நமக்கும் என்ன உறவு இருக்கப் போகிறது? நம் நிலை இனி என்ன ஆகும்?” என்ற ஏக்கம் தலைப்பட்டது. “ஒரு பெருந்துணையாக விளங்கிய பிள்ளையவர்கள் மறைந்ததால் வேறு பற்றுக்கோடில்லாமல் அலைந்துதிரியும் நிலை நமக்கு வந்துவிடுமோ” என்று அஞ்சினேன்.

இக்குழப்பத்தில் அங்கே நிற்பதைவிட சிரீ சுப்பிரமணிய தேசிகரைப் பார்த்து வருவது நலமென்றெண்ணி மடத்தினுள்ளே சென்றேன்.

அங்கே ஒடுக்கத்தில் அவர் அமர்ந்திருந்தார். அவரைக் கண்டவுடன் அதுகாறும் என்னுள் அடங்கியிருந்த துக்கம் பொங்கவே கோவென்று கதறிவிட்டேன். என்ன முயன்றும் விம்மல் அடங்கவில்லை. அடக்க முடியாமல் எழுந்த என் வருத்தத்தைக் கண்ட தேசிகர், “வருத்தப்பட்டு என்ன செய்வது! மாற்ற முடியாத நட்டம் நேர்ந்துவிட்டது! நமக்கும் வருத்தம் அதிகமாக இருக்கிறது; வெளிப்படுத்தாமல் இருக்கிறோம். உமக்குத் தாங்க முடியவில்லை. உம்மிடத்தில் அவருக்கு இருந்த அன்பை வேறு எங்கே பார்க்க முடியும்?” என்றார்.

அந்த வார்த்தைகள் என் துக்கத்தை அதிகமாகத் தூண்டிவிட்டன; பின்னும் விம்மினேன்.

“நடந்த காரியத்தை நினைத்து வருந்துவதனால் இலாபம் ஒன்றும் இல்லை. பிள்ளையவர்கள் இல்லை யென்ற குறையைத் தவிர இங்கே ஒரு குறைவும் இராது. நீர் இனிமேல் கேட்க வேண்டிய பாடங்களை நம்மிடமே கேட்கலாம். புதிய மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லிக்கொண்டு எப்போதும் நம்முடைய பக்கத்திலே இருந்து வரலாம். உமக்கு யாதொரு குறையுமின்றி நாம் பார்த்துக் கொள்வோம். இந்த ஊரையே உம்முடைய ஊராக நினைத்துக் கொள்ளும். நீரும் தம்பிரான்களைப்போல மடத்துப் பிள்ளையாகவே இருந்து வரலாம். உமக்கு எந்த விதத்திலும் குறை நேராது” என்று அவர் எனக்கு ஆறுதல் கூறினார்.

அந்த அபய வார்த்தைகள் ‘உபசாரத்தின்பொருட்டுச் சொன்னவையல்லவென்பது எனக்குத் தெரியும்.

மெல்ல விடைபெற்றுத் திரும்பினேன். சுப்பிரமணிய தேசிகர் என்னிடம் பேரன்புடையவரென்பதை நான் நன்றாக உணர்ந்திருந்தும் குமாரசாமித் தம்பிரான் கூறிய வார்த்தைகளாலேயே கலங்கிப் போனேன். பிள்ளையவர்களுடைய அன்பில் வளர்ந்த எனக்கு மற்றவர்களது அன்பின் நிலையை அறிந்துகொள்ளச் சந்தர்ப்பமும் நேரவில்லை. பிள்ளையவர்கள் பிரிந்த பிறகு தேசிகருடைய அன்பின் சிறப்பானது தெளிவாக விளங்கத் தொடங்கியது.

மடத்திற்கு வந்தவர்களெல்லாம் சுப்பிரமணிய தேசிகரிடம் பிள்ளையவர்களுடைய வியோகத்தைப் பற்றி விசாரித்தார்கள். அவர்களோடு பேசும்போது தேசிகர் பிள்ளையவர்கள்பால் வைத்திருந்த மதிப்பு நன்றாகப் புலப்பட்டது, என்னிடமும் பலர் வந்து விசாரித்தனர்.

சுப்பிரமணிய தேசிகருடைய கட்டளையின்படி, பிள்ளையவர்கள் காலஞ்சென்ற செய்தி தமிழ்நாடு முழுவதும் உள்ள அன்பர்களுக்குக் கடித மூலம் தெரிவிக்கப்பட்டது. குமாரசாமித் தம்பிரான் சிலருக்குக் கடிதம் எழுதினார். சிதம்பரம் பிள்ளை பலருக்கு எழுதினார். நானும் பலருக்குக் கடிதம் எழுதினேன்.

அன்பர்கள் பலர் தங்கள் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்துப் பதிற் கடிதங்கள் எழுதினர். மாயூரம் வேதநாயகம் பிள்ளை முதலிய பலர் இரங்கற் பாடல்கள் எழுதினர். சிரீ மகா வைத்திய நாதையரும் அவர் தமையனாராகிய இராமசுவாமி ஐயரும் கடிதமும் பாடல்களும் எழுதினார்கள்.

இவ்வாறு பலர் சரமகவிகள் பாடியபோது நாமும் பாடவேண்டுமென்ற உணர்ச்சி எனக்கு உண்டாகவில்லை. அத்துக்கத்தை வெளிப்படுத்த வார்த்தைகளுக்குச் சக்தி ஏது? பாட்டுக்காகத் துக்கத்திற்கு ஓர் உருவம் கொடுக்க முயற்சி செய்யவில்லை.

சுப்பிரமணிய தேசிகர், பிள்ளை யவர்களுக் கிருந்த கடனைத்தீர்த்து அவர் குடும்பத்திற்கு வேண்டிய சௌகரியங்களை உசிதமாகச் செய்வித்து அனுப்பினார். சிதம்பரம் பிள்ளை தம் அன்னையார் முதலியோருடன் மாயூரத்திற்குப் போய் அங்கே இருந்து வரலானார்.

அவர்கள் போகும் பொழுது நானும் உடன் சென்று மாயூரத்தில் இரண்டு தினங்கள் தங்கியிருந்து திருவாவடுதுறைக்கு மீண்டும் வந்தேன்.

மாயூரத்தில் வேதநாயகம் பிள்ளையைப் பார்த்தேன். பிள்ளை யவர்களுடைய பிரிவைக் குறித்து மிகவும் வருத்தமுற்று அவர்களுடைய கல்வியாற்றலை மிகவும் பாராட்டினார்.

பிள்ளையவர்கள் இறந்துபோன தினத்திற்கு முதல்நாள் தியாகராச செட்டியாருடைய தாயார் காலஞ் சென்றனர். அதனால் அவர் திருவாவடுதுறைக்கு வரவில்லை; கடிதம் மட்டும் எழுதினார். தம் அன்னையாருக்குரிய அபரக் கிரியைகளை எல்லாம் முடித்துவிட்டு அவர் திருவாவடுதுறைக்கு வந்தார். உடனே தேசிகரைக் கண்டு பிள்ளையவர்களைக் குறித்துப் பேசி வருத்தமுற்றார். என் மன இயல்பு தெரிந்த அவர் எனக்குப் பல படியாக ஆறுதல் கூறினார்.

என் வாழ்க்கையில் ஒரு புதிய நிலைமை ஆரம்பமாயிற்று. பிள்ளையவர்களைப் பிரியாமல் மாணாக்கனாக இருந்த நிலை மாறிச் சுப்பிரமணிய தேசிகரிடம் மாணாக்கனாகவும் வேறு சில மாணவர்களுக்கு பாடம் சொல்லும் ஆசிரியனாகவும் அப்போது ஆனேன்.

என் தாய் தந்தையார் என்னுடன் என் சிறிய தாயார் வீட்டில் இருந்து வந்தனர். அவர்கள் அவ்வாறு இருந்து வருவது சுப்பிரமணிய தேசிகருக்குத் தெரியாது. ஒருமுறை புதுக்கோட்டையிலிருந்து வந்த தியாகராச சாத்திரிகள் என் தந்தையாரைக் கண்டு சங்கீத விடயமாகச் சம்பாசித்து மகிழ்ச்சி அடைந்தார். அவருக்கும் என் தந்தையாருக்கும் முன்பே பழக்கமுண்டு. கனம் கிருட்டிணையருடைய கீர்த்தனங்களை என் தந்தையார்பாற் கேட்ட சாத்திரிகள் அவற்றின் அமைப்பை மிகவும் பாராட்டினர்.

அப்பால் தியாகராச சாத்திரிகள் மடத்திற்குச் சென்று தேசிகரிடம் பேசி வருகையில் என் தந்தையாருடைய சிவ பக்தியையும், சிவ பூசா விசேடத்தையும், சங்கீத ஞானத்தையும் சிறப்பித்துச் சொன்னார், அதுகாறும் என் தந்தையாரைப்பற்றி அறிந்து கொள்ளாத தேசிகர், “அப்படியா! நமக்கு இதுவரையில் விசயம் தெரியாதே! சாமிநாதையரும் சொல்லவில்லையே” என்று சொல்லி அங்கே நின்றிருந்த என்னைப் பார்த்தார்.

“உமக்குச் சங்கீதத்தில் பழக்கம் இருப்பதற்கு உம்முடைய தந்தையாரே காரணமாயிருக்க வேண்டும்” என்று தேசிகர் சொன்னார்.

“ஆம்”

“இவ்வளவு நாளாக உம்முடைய தகப்பனாரை இங்கே அழைத்து வரவில்லையே. அவர்கள் இதற்கு முன் இந்த ஊருக்கு வந்ததில்லையோ?”

“சிலமுறை வந்திருக்கிறார்கள். சந்நிதானத்திற்கு அனாவசியமான தொந்தரவை உண்டாக்கக் கூடாதென்று எண்ணினேன்”

“தொந்தரவா? இப்படிப்பட்டவர்களைப் பார்ப்பதில் நமக்கு எவ்வளவோ திருப்தியுண்டென்று உமக்குத் தெரியாதா?”

அன்று பிற்பகலில் என் தந்தையார் மடத்திற்கு வந்து சுப்பிரமணிய தேசிகரைக் கண்டு நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தார். அது முதல் அடிக்கடி என் தந்தையார் தேசிகரிடம் போய்க் கண்டு சல்லாபம் செய்துவரத் தொடங்கினர். இவ்வழக்கத்தால் என் தந்தையாருக்குச் சுப்பிரமணிய தேசிகருடைய பெருந்தன்மையும், அறிவுத் திறமையும், உதார குணமும், வித்துவான்களிடத்தில் அவர் வைத்திருந்த பேரன்பும் விளங்கலாயின. மடத்தில் யாரேனும் சங்கீத வித்துவான் வந்து பாடினால் தேசிகர் என் தகப்பனாரை அழைத்து வரச்செய்து கேட்கச் செய்வார்.

தேசிகர் விடியற் காலத்தில் காவேரிக்குச் சென்று குளித்துவிட்டு ஆலயம் வந்து சுவாமி தரிசனம் செய்த பிறகு மடத்திற்குப் போவார். என் தந்தையாரும் விடியற்காலையில் குளியல் செய்பவராதலால் அவரும் எழுந்து காவேரிக்குச் சென்று குளித்து சபதபாதிகளை முடித்துக்கொண்டு புறப்படுவார். அவர் புறப்படும் சமயம் தேசிகரும் புறப்படும் சமயமாக இருக்கும். தேசிகருடன் என் தந்தையாரும் புறப்பட்டு ஆலயம் வரையில் வந்து விடைபெற்று வீட்டுக்கு வருவார். தேசிகர் நாள்தோறும் இராத்திரி இரண்டாம் கால தரிசனத்திற்குக் கோயிலுக்கு வருவதுண்டு. அக்காலத்தும் என் தந்தையார் மடத்திற்குச் சென்று, கூடவே கோயிலுக்கு வந்து தரிசித்து விட்டுத் தேசிகரை மடத்தில் கொண்டுபோய் விட்டுவிட்டு வீட்டிற்கு வருவார். இவற்றால் தேசிகருக்கும் என் தந்தையாருக்கும் பழக்கம் அதிகமாயிற்று.

சிவபூசைக்கு வேண்டிய பத்திர புட்பங்கள் மிகுதியாகக் கிடைத்தமையாலும், மற்றச் சௌகரியங்களும் குறைவின்றி இருந்தமையாலும் திருவாவடுதுறை வாசம் என் தந்தையார் மனத்துக்கு மிக்க உவப்பைத் தந்தது. தேசிகருடைய அரிய குணங்களை அறிந்து, “இம்மாதிரி இடத்தையும் மனுசர்களையும் நான் எங்கும் பார்த்ததே இல்லை” என்று விம்மிதம் அடைந்தார்.

(தொடரும்)

Saturday, August 17, 2024

உ.வே.சா.வின் என் சரித்திரம் 101 – ‘சிவலோகம் திறந்தது’

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 100- சங்கீத ஒளடதம் – தொடர்ச்சி)

என் சரித்திரம்

யுவ வருடம் கார்த்திகை மாத ஆரம்பத்தில் (நவம்பர் 1875) என் ஆசிரியர் திருவாவடுதுறைக்கு வந்து சேர்ந்தார். கம்பராமாயணத்தில் அயோத்தியா காண்டம் பாடம் நடைபெற்றது. அவருடைய அசௌக்கியத்தால் ஒரு நாளைக்கு முப்பது பாடல்களே பாடங் கேட்க இயன்றது. தக்க வைத்தியர்கள் கவனித்து வந்தனர். சுப்பிரமணிய தேசிகர் அடிக்கடி ஆசிரியருக்கு வேண்டிய சௌகரியங்களை அமைக்கும்படி சொல்லி வந்தார். வைத்தியர்கள் செய்த பரிகாரம் தேசிகர் முதலியோருடைய அன்பை வெளிப்படுத்தியதேயன்றி நோயைப் போக்குவதற்கு உபயோகப்படவில்லை. காலபலம் கை கூடவில்லை. குமாரசாமித் தம்பிரான் அவர் செய்யும் பூசையைத் தாமே செய்து பிரசாதம் அளித்து வந்தார்.

ஆசிரியரது உடல் தளர்ந்தாலும் அவருடைய குணச்சிறப்பு வேறுபடவில்லை. அத்தளர்ச்சியில் அவரது அறிவும் அன்பும் மரியாதையும் பெருந்தன்மையும் சிறப்பாகப் புலப்பட்டன.

அப்பாழும் நோய் ஆசிரியர் உடம்பில் உள்ள பலத்தை வரவரக் குறைத்துவந்தது; தளர்ச்சியையும் அதிகப்படுத்தியது. பாடஞ் சொல்வது நின்றது. படுத்த படுக்கையாகவே இருக்கத் தொடங்கினார். அவருக்கு வேண்டிய பணிவிடைகளை இடைவிடாது உடனிருந்து சவேரிநாத பிள்ளை செய்துவந்தார். நானும் என்னால் இயன்றவற்றைச் செய்துவந்தேன்.

என் சிறியதாயார் மிக நன்றாகச் சமையல் செய்வார். அவர் செய்தளிக்கும் உணவுவகைகளின் சுவைகண்ட நான் ஆசிரியருக்கு விருப்பமான வியஞ்சனங்களைச் செய்வித்துக்கொண்டு சென்று அவருக்கு அளிப்பேன். அவரோடு பழகியதனால் அவருக்கு இன்ன இன்ன வியஞ்சனங்களில் பிரியம் உள்ளதென்பதை நான் அறிந்திருந்தேன். என் வேண்டுகோளுக்கிணங்கி என் சிறியதாயார் நான் வேண்டியவற்றை அன்புடன் செய்துதருவார். ஆசிரியர் அவற்றை உண்டு மிக்க திருப்தியை அடைவார். அவர் உண்டு மகிழ்வதை அறிந்து நானும் ஆறுதல் பெறுவேன்.

ஆசிரியர் பெரிய பிரயாணத்திற்கு சித்தமாகிறாரென்ற குறிப்பு யாவருக்கும் தெரிந்துவிட்டது. அவருடைய குமாரரும் மனைவியாரும் மாயூரத்திலிருந்து திருவாவடுதுறைக்கு வந்தனர்.

அக்காலத்தில் என் தாய், தந்தையார் கொள்ளிடத்திற்கு வடகரையிலுள்ள வேப்பூரில் இருந்து வந்தனர். உடையார்பாளையம் சமீன்தாரின் மைத்துனரும் கல்லையென்னும் ஊரில் இருந்தவருமான முத்துசாமி நயினார் என்பவர் என் தகப்பனாரை ஆதரித்து வந்தார். பிள்ளையவர்களின் தேக அசௌக்கியத்தை நான் என் தந்தையாருக்கு ஒரு கடிதமூலம் தெரிவித்தேன். அதைக் கண்டவுடன் அவர் என் அன்னையாரையும் அழைத்துக்கொணடு திருவாவடுதுறை வந்து என் சிறியதாயார் வீட்டில் சாகை வைத்துக்கொண்டு தங்கியிருந்தனர்.

சுப்பிரமணிய தேசிகர் என்பால் வைத்துள்ள அன்பினால் நான் எந்தப் பொருளை எந்தச் சமயம் கேட்டாலும் மடத்து அதிகாரிகள் வழங்கி வந்தனர். அதனால் என் தாய் தந்தையருக்கு வேண்டியவை யாதொரு சிரமுமில்லாமல் கிடைத்தன.

ஆசிரியர் பாடஞ் சொல்வதை நிறுத்திவிட்டாலும் நாங்கள் ஏதேனும் சந்தேகம் கேட்கும்போது அதை விளக்குவார். அவருக்குப் பிரியமான நூல்களைப் படிக்கச்சொல்லிக் கேட்டுவந்தார். நானே படித்து வந்தேன்.

ஆசிரியர் படுக்கையிற் படுத்துக்கொண்டிருப்பார். அவரருகில் அமர்ந்து சவேரிநாத பிள்ளை கால் கைகளைத் தடவிக்கொடுத்துக்கொண்டே இருப்பார். நான் அருகில் உட்கார்ந்து தேவாரத்தையோ திருவாசகத்தையோ ஆசிரியர் காதில்படும்படி படிப்பேன். வேறு மாணாக்கர்களும் ஆசிரியரைப் பார்க்க வரும் அன்பர்களும் சுற்றிலும் இருப்பார்கள். எல்லோருடைய கண்களும் ஆழ்ந்த பயத்தை வெளிப்படுத்தும்.

தேவாரம் படித்து வரும்போதே இடையே எனக்கு ஒரு சந்தேகம் உண்டாகும்; அதை ஆசிரியரிடம் கேட்பேன். அவர் சில வார்த்தைகளால் விளக்குவார். இடையிடையே நிறுத்தி நிறுத்திச் சொல்லி விளக்குவார். தேவாரத்திலும் திருவாசகத்திலும் நெடுங்காலமாக ஆராய்ச்சி செய்தவராதலின் நான் சந்தேகம் கேட்கும்போது அவர் கூறும் விடை பெரிய புதையலைப் போலத் தோற்றும். விசயத்தின் பெருமை மாத்திரம் அதற்குக் காரணமன்று. எல்லாம் ஒடுங்கிய நிலையிலும் தமிழுணர்வு ஒடுங்காமல் ஆசிரியர் சொல்வனவாதலின் அவை அதிக மதிப்புடையனவாயின. “ஆசிரியர் கடைசிக்காலத்தில் சொல்லும் வார்த்தைகள் இவை” என்ற ஞாபகம் உள்ளே இருந்தமையால் அவர் சொல்லும் ஒவ்வொன்றையும் கருத்தூன்றிக் கவனித்துக் கேட்டேன். அப்படிக் கேட்கும் ஒவ்வொரு சமயத்திலும் எதிர்கால ஞாபகம் வந்து துன்புறுத்தும். “இத்தகைய பொன்மொழிகளைக் கேட்க முடியாமற் போகும் காலம் சமீபித்துவிட்டதே.” என்ற எண்ணத்தை எவ்வளவு முயன்றும் மாற்ற முடியவில்லை.

மார்கழி பிறந்தது; அது போய்த் தையும் பிறந்தது; ஒரு வழியும் பிறக்கவில்லை. ஆசிரியர் நிலை வரவர அதிகமான பயத்திற்குக் காரணமாயிற்று. தேவாரத்தில் அவர் அப்போது விளக்கிய விசயங்கள் சில.

ஒருநாள் திருவாசகம் வாசித்து வந்தேன். இலக்கியச் சுவையோடு, சிவபெருமான் திருவருட் பெருமையை எடுத்துரைத்துக் கேட்போரை உருகச்செய்யும் பத்திச்சுவையும் நிரம்பியுள்ள அதனை ஆசிரியர் கேட்டுவரும்போது இடையே கண்ணீர்விடுவார். அந்தத் தெய்விகநூற் செய்யுட்கள் அவர் உள்ளத்தை உருக்கினவென்பதை நாங்கள் அறிந்துகொண்டோம். சிவபெருமான் திருவடியை எப்பொழுதும் மறவாத உள்ளத்தினராக இருந்தாலும் அந்நினைவு மற்றச் சமயங்களில் மற்ற நினைவுகளுக்கிடையே தலைமைபெற்று நின்றது. அப்பொழுதோ அந்நினைவையன்றி வேறொன்றும் அவர் உள்ளத்தில் இடம்பெறவில்லை.

திருவாசகத்தில் திருக்கோத்தும்பியென்னும் பகுதியைப் படித்தேன்.

நோயுற்று மூத்துநா னுந்துகன்றா யிங்கிருந்து

நாயுற்ற செல்வ நயந்தறியா வண்ணமெல்லாம்

தாயுற்று வந்தென்னை யாண்டுகொண்ட தன்கருணைத்

தேயுற்ற செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ”

என்ற செய்யுளை வாசித்தேன், ‘நுந்து கன்றாய்’ என்பதற்குப் பொருள் விளங்கவில்லை. சந்தேகம் கேட்கும் பொருட்டுத் தலை நிமிர்ந்து ஆசிரியரைப் பார்த்தேன். அவர் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. “நுந்து கன்றாய் என்பதற்கு அர்த்தம் என்ன?” என்று கேட்டேன். அவரால் பேச முடியவில்லை. நாக்குக் குழறியது; தொண்டை அடைத்தது. “வெறுத்துச் செலுத்தப்பட்ட கன்றைப்போல” என்று அந்தக் குழறலோடே சொன்னார். அந்த நிலையில் அவரைப் பார்க்கும்போது எனக்கும் கண்ணீர் பெருகியது. தளர்ச்சியால் பேச முடியாமல் இருந்த ஆசிரியர் அந்தப் பாட்டில் உருகிப்போய் அவசமுற்றிருந்தார்.

“நோயுற்று மூத்துநா னுந்துகன்றா யிங்கிருந்து”

என்ற அடி அவர் உள்ளத்தைப் பிணித்து அன்புணர்ச்சியை எழுப்பிவிட்டது. மாணிக்கவாசகரது அவ்வாக்கு என் ஆசிரியருடைய நிலைக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. நோயுற்று மூத்துநின்ற அவருடைய உள்ளக்கருத்தை அந்தச்செய்யுள் தெரிவித்தமையால் அவர் உருகிப் போனார்.

தாயுற்று வந்தென்னை யாண்டுகொண்ட தன்கருணைத்

தேயுற்ற செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ”

என்ற அடிகளில் மாணிக்கவாசகர் சிவபெருமான் தமக்கு அருளிய பெருங்கருணைத் திறத்தைப் பாராட்டுகிறார். அவரை ஆண்டுகொண்டவண்ணம் தம்மையும் ஆண்டுகொள்வாரோ என்ற ஏக்கமும் ஆசிரியர் உள்ளத்தே எழுந்ததுபோலும்! அவர் அப்பொழுது இவ்வுலகில் இருந்தாலும் இந்நினைவுகள் எல்லாம் சேர்ந்து அதனை மறக்கச் செய்துவிட்டன. “இவர் இப்போது நம்மோடு பேசவில்லை. ஆண்டவனோடு பேசுகிறார். இவர் தம் உள்ளமாகிய கோத்தும்பியை மாணிக்கவாசகரைப் போலச் சிவபெருமான் திருவடி மலரில் ஊதும்படி விட்டிருக்கிறார்” என்ற உண்மையை அப்போது தெளிவாக நான் அறிந்துகொள்ளவில்லை. சிலநேரம் மௌனம் நிலவியது. அவர் திருவாசகத்தில் ஒன்றி உருகினார்: நான் அவர் நிலைகண்டு உருகினேன். பின்பு மீண்டும் தொடர்ந்து படிக்கலானேன்.

திருவாவடுதுறை ஆதீன தாபகராகிய சிரீ நமசிவாய மூர்த்தியின் குருபூசை தை மாதத்தில் வந்தது. ஆலயத்தில் உற்சவமும் ஆரம்பமாயிற்று. மடத்திலும் ஆலயத்திலும் சேர்ந்தாற்போல் ஒரே காலத்தில் உற்சவங்கள் நடந்தன. வழக்கம்போல வெளியூர்களிலிருந்து பலர் வந்திருந்தார்கள். தம்பிரான்களும் வித்துவான்களும் பிரபுக்களும் கூடியிருந்தனர். வந்தவர்களிற் பெரும்பாலோர் பிள்ளையவர்கள் நிலையை அறிந்து சிந்தைகலங்கித் தியங்கினர். எல்லாரும் அவருடைய குணநலங்களை நினைந்து உருகினர். “இனி இவருக்குப் பின் இவரைப்போல் யாரைப் பார்க்கப் போகிறோம்?” என்ற கருத்தே எல்லாருக்கும் உண்டாயிற்று.

சுப்பிரமணிய தேசிகர் குருபூசை நிகழ்ச்சிகளில் ஈடுபட்டிருந்தாலும் அவருக்கு அமைதி இல்லை. அடிக்கடி பிள்ளையவர்களது தேக நிலையை விசாரித்துக்கொண்டே இருந்தார். “இப்பொழுது எப்படி இருக்கிறது? ஏதாவது ஆகாரம் சென்றதா? ஞாபகம் இருக்கிறதா? பேசுகிறார்களா? பேசினால் தெரிந்துகொள்ளுகிறார்களா?” என்பன போன்ற கேள்விகளைக் கேட்டுத் தெரிந்து கொண்டார். தை மாதம் 20-ஆம் தேதி (31-1-1876) அன்று ஆசிரியருக்குத் தேகத்தளர்ச்சி அதிகமாயிற்று. நானும் சவேரிநாத பிள்ளையும் ஒன்றும் தோன்றாமல் சிறிதுசிறிதாகப் பால் கொடுத்துவந்தோம். இரவில் கோயிலிலிருந்து சிரீ கோமுத்தீசுவரர் எழுந்தருளினார். நான் சுவாமி தரிசனம் செய்யப் போனபோது கோபுரவாயிலில் சுவாமியுடன் வந்த சுப்பிரமணிய தேசிகர் பிள்ளையவர்கள் நிலையைப் பற்றி விசாரித்தார்; எனக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. துக்கம் பொங்கிவந்தது. “இப்போது அவர்களால் பேச முடியவில்லை; நாம் ஏதாவது சொன்னால் தெரிந்துகொள்ளுகிறார்கள். சிறிது சிறிதாகப் பாலைக் கொடுத்துவருகிறோம்” என்று தடுமாறிக்கொண்டே சொன்னேன். அவர் கேட்டுச் சிறிது மயங்கி நின்றார். “இந்த நிலையிலாவது பிள்ளையவர்கள் சீவித்திருக்கிறார்களென்றால் ஆதீனத்திற்கு மிகவும் கௌரவமாக இருக்கும் சிரீ கோமுத்தீசர் திருவருள் என்ன செய்கின்றதோ!” என்று வருந்திவிட்டு, “போய்க் கவனித்துக்கொள்ளும்” என்று விடைகொடுத்தனுப்பினார். நான் பிள்ளையவர்களிடம் சென்றேன்.

அடிக்கடி ஆசிரியருக்கு ஞாபகம் தவறியது. நள்ளிரவுக்குமேல் நெடுநேரம் பிரக்ஞை இழந்திருந்தார். பிறகு விழித்துப் பார்த்து ஏதோ சொல்ல வாயெடுத்தார். அக்குறிப்பு, திருவாசகமென்று சொன்னதாகப் புலப்படுத்தியது. நான் திருவாசகத்தை எடுத்து அடைக்கலப்பத்தை வாசித்து வந்தேன். சிவபெருமான் திருவடியில் அடைக்கலம் புகுவதற்கு என் ஆசிரியர் தகுதியுடையவரே. அவர் கண்ணை மூடிக்கொண்டே இருந்தார். திருவாசகச் செய்யுள் அவர் காதின்வழியே உள்ளத்துள் புகுந்து இன்பத்தை விளைவித்திருக்க வேண்டும். அந்த இன்பம் அவர் முகத்தில் ஒரு மலர்ச்சியை உண்டாக்கியது.

அவர் நெற்றியில் விபூதியை நிறைய ஒருவர் இட்டனர். சவேரிநாத பிள்ளை அவரைத் தமது மார்பில் சார்த்திக்கொண்டார். அடைக்கலப்பத்தை வாசித்துக்கொண்டிருந்தேன். திடீரென்று அவரது தேகத்தில் உள்ளங்கால் முதல் உச்சி வரையில் ஒரு துடிப்பு உண்டாயிற்று. மூடியிருந்த கண்களில் வலக்கண் திறந்தது. அவ்வளவுதான். சிவலோகத்தில் அதே சமயத்தில் அந்த நல்லுயிர் புகுவதற்கு வாயிலும் திறந்ததுபோலும்! அவர் மூச்சு நின்றபோதுதான் அவருடைய தமிழ் உணர்ச்சி நின்றது. திருவாசகம் என் கையிலிருந்து நழுவியது. கண்ணிலிருந்து நீரருவி புறப்பட்டது.

அங்கிருந்தவர்களில் சிலர் அரற்றினார்கள். சிலர் துக்கம் தாங்கமாட்டாமல் வாயைப் பொத்திக்கொண்டனர். நான் ஒன்றும் தோன்றாமல் என் ஆசிரியரின் புனித உடலையும் அமைதி தவழ்ந்த முகத்தையும் எனக்கு ஆதரவோடு பாடஞ் சொல்லிய திருவாயையும் அன்புப் பார்வையில் என்னைத் தழுவிய கண்களையும் பார்த்துப் பார்த்து விம்மினேன். “இப்போது நிகழ்ந்த நிகழ்ச்சி பொய்யாக இருக்கக் கூடாதா? பிள்ளையவர்கள் மீண்டும் வாய்திறந்து பேசக்கூடாதா!” என்ற எண்ணத்தோடு பார்க்கையில் அவர் கண்கள் இமைப்பதுபோலவே தோற்றும்; வாய் அசைவதுபோலத் தெரியும்; மூச்சுவிடுவதுபோலக் கண்ணிற்படும். அடுத்த நிமிஷமே எல்லாம் வெறும் தோற்றமாகிவிடும்; பிரமையினால் விளையும் காட்சிகளாக முடியும்.

ஆசிரியருடைய குமாரரும் மனைவியாரும் அங்கே இருந்தனர். வேறு பல அன்பர்களும் கூடியிருந்தனர். ஆசிரியர் மறைந்த செய்தி உடனே எங்கும் பரவிவிட்டது. சுப்பிரமணிய தேசிகர் விசயத்தை அறிந்து வருந்தினார். அவருக்கு ஒரு காரியமும் ஓடவில்லை.

விடிந்தது; இருண்டிருந்த எங்கள் மனத்திற்கு விடிவு இல்லை. பலர் வந்துவந்து ஆசிரியர் திருமேனியைப் பார்த்துப் பார்த்துப் புலம்பிவிட்டுச் சென்றனர். ஆதீன ஞானாசிரியர் சமாதியுற்ற திருநாட்கொண்டாட்டத்திற் கலந்துகொண்டு இன்பம் அனுபவிக்க வந்தவர்களிற் பலர் ஆதீனத் தமிழாசிரியர் மறைந்தசெய்தி கேட்டுத் துன்பக்கடலில் ஆழ்ந்தனர்.

சுப்பிரமணிய தேசிகர் மேலே நடக்க வேண்டிய காரியங்களுக்குரிய ஏற்பாடுகளைச் செவ்வனே செய்யலானார். பல ஊர்களிலிருந்து அபிசேகத்தர்கள் வந்தனர்.

அந்நல்லுடலை (உ)ருத்திரபூமிக்கு எடுத்துச் சென்றபோது நான் கண்ட காட்சியும் கேட்ட வார்த்தைகளும் இன்று நினைத்தாலும் உள்ளத்தைக் கலக்குகின்றன. எல்லாரும் வாய்விட்டுக் கதறிவிட்டார்கள். அவரது புலமைத்திறத்தைச் சொல்லி வருந்துவாரும் அவரது கவித்துவத்தைப் பாராட்டி உருகுவாரும் மாணாக்கர்கள்பால் அவர் வைத்திருந்த அன்பை எடுத்துரைத்துத் துயருறுவாரும் அவர் குண விசேடங்களை விரித்துப் புலம்புவாருமாக எங்கே பார்த்தாலும் சனங்கள் நிரம்பிவிட்டனர்.

அபிசேகத்தர்கள் அப்போது திருவாசகம் சொல்லிக்கொண்டு போனார்கள். அதைக் கேட்ட என் தந்தையார், “இனிமேல் திருவாசகத்துக்கு உரை சொல்பவர்கள் இவர்களைப்போல் யார் பிறக்கப் போகிறார்கள்?” என்று சொல்லி வருந்தினார். ஆசிரியர் தம் கடைசி நாட்களில் கடைசி நிமிடம் வரையில் திருவாசகத்தில் ஒன்றியிருந்ததை அறிந்தவனாதலின் அவ்வார்த்தைகளைக் கேட்டபோது என் உள்ளமும் உயிரும் நடுங்கின.

பல பேருடைய அறிவுக்கும் கண்ணுக்கும் காதுக்கும் இன்பந் தந்து வாழ்ந்திருந்த ஆசிரியர் திருவுடலம் அக்கினிபகவானால் அங்கீகரிக்கப் பெற்றது. சிதம்பரம் பிள்ளை தம் தந்தையாரது உத்தரக்கிரியைகளைச் செய்தார். எல்லாம் முடியப் பன்னிரண்டு மணி வரையில் ஆயிற்று. பின்பு யாவரும் நீராடித் திரும்பினர். நானும் என் ஆசிரியரை அப்பால் பாராத நிலையிலே விட்டுவிட்டு குளித்து வந்தேன்.

ஊர் முழுவதும் ஒளி இழந்திருந்தது.

(தொடரும்)

Tuesday, August 13, 2024

தமிழுக்கு வளம் சேர்த்த அயல்நாட்டுத் தமிழறிஞர்கள். இ. சீகன்பால்கு, ஈ. இரேனியசு, உ. காலுடுவெல் – பா.வளன் அரசு

 

தமிழுக்கு வளம் சேர்த்த அயல்நாட்டுத் தமிழறிஞர்கள். இ. சீகன்பால்கு, ஈ. இரேனியசு, உ. காலுடுவெல் – பா.வளன் அரசு



(தமிழுக்கு வளம் சேர்த்த அயல்நாட்டுத் தமிழறிஞர்கள். அ. ஆந்திரிக்கசு அடிகளார்‌, ஆ. வீரமாமுனிவர்‌-தொடர்ச்சி)

கடற்கரை மணலில் கைவிரலால் எழுதிப் பழகி, அழகப்பன் உதவியுடன் எட்டே மாதங்களில் தமிழ் கற்ற சீகன்பால்கு(Bartholomäus Ziegenbalg), அலைபாடிக் கலை வளர்க்கும் தரங்கம்பாடியில் பதின்மூன்று ஆண்டுகள் மாண்புமிகு தமிழ்ப் பணி புரிந்துள்ளார். நேர்மையாளருக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும் என்று கிறித்தவம் என்னும் நூல் வழியாக நவின்ற சீகன்பால்கு, தாய்மொழி வாயிலாகப் பிறமொழியைக் கற்று புலமைபெற வழிகாட்டியுள்ளார். 1707ஆம் ஆண்டு புதிய எருசலேம் திருக்கோவிலை உருவாக்கிய சீகன்பால்கு, விவிலியத் திருநூலைத் தமிழாக்கிய முதல்வர் ஆவார். சிறைச்சாலையிலும் கப்பல் பயணத்திலும் விவிலியத் தமிழாக்கத் தொண்டில் ஈடுபட்ட சீகன்பால்கு, உரூத்து ஆகமம் வரை தமிழில் தந்துள்ளார். 1712 ஆம் ஆண்டு பதினேழாயிரம் சொற்களுடன் செய்யுள் அகராதி ஒன்றையும் தொகுத்துள்ளார்; உரைநடை அகராதியினையும் இருபதாயிரம் சொற்களுடன் நல்கியுள்ளார். தாய்மொழி வாயிலாகவே சிந்திக்கத் தூண்டிய சீகன்பால்கு, வீரமாமுனிவரின் வேதியர் ஒழுக்கம் அச்சாகவும் கிறித்தவரிடையே ஒன்றிப்பு உணர்வை உருவாக்கவும் அயராது செயலாற்றியுள்ளார். செருமானிய நாட்டு நூலகத்திற்கு நூற்று அறுபத்தைந்து தமிழ் நூல்களை வழங்கியுள்ளார்; மலிவு விலையில் பள்ளிப் பாட நூல்களை மாணவருக்கு நல்கிய முன்னோடியாகவும் ஒளியுடன் மிளிர்கிறார்.

4. செருமானியத் தமிழ்ச் செம்மல் இரேனியசு (1790-1838) :

ஏட்டுத் தமிழாகிய செந்தமிழையும் நாட்டுத் தமிழாகிய பேச்சுத் தமிழையும் பேணிப் போற்றிய எவாலுடு இரேனியசு (Charles Tleoplilus Ewald Rhenius)திருநெல்வேலித் திருத்தூதர் என்று போற்றப்பட்ட பெருமைக்கு உரியவர். எழுநூற்று இருபத்தெட்டுப் பக்கங்களுடன் இவர் வழங்கிய பூமி சாத்திரம் என்னும் தமிழ் அறிவியல் ஏடு உலக வரலாற்றுப் புவியியல் நூலாகத் திகழ்கிறது. இராமாநுசக் கவிராயர் வாயிலாகத் தமிழ் பயின்ற இரேனியசு, தாம் வாழ்ந்த வாடகை வீட்டையே பள்ளிக் கூடமாகவும் வழிபாட்டுத் தலமாகவும் விளங்கச் செய்தார். நெல்லை முருகன்குறிச்சியில் ஆடவர்க்கும் மகளிர்க்கும் தனித்தனியே குருத்துவக் கல்லூரிகளை உருவாக்கியுள்ளார். 1826ஆம் ஆண்டு இரேனியசு உருவாக்கிய சிற்றாலயமே மூவொரு கடவுள் பேராலயமாக விளங்குகிறது. தெய்வீக சாராம்சம், ஏசாயா ஆகிய நூல்களை நல்கியுள்ள இரேனியசு, மொழிபெயர்ப்புக் கோட்பாடுகளை விளம்பும் அறிவியல் அறிஞராகவும் திகழ்கிறார். சென்னை, காஞ்சிபுரம், நெல்லை ஆகிய இடங்களில் கல்விப் பணி  தழைத்தோங்கப் பள்ளிக்கூடங்களை நிறுவியுள்ளார். சாதி ஒழிப்பும் தமிழ் வளர்ச்சியும் சேர்ந்தே அமைய வேண்டும் என்னும் குறிக்கோளுடன் விழைந்து உழைத்துள்ளார். தமிழ் இலக்கணத்தை எழுத்தியல், சொல்லியல், சொற்றொடரியல் என மூவகையாகப் பகுத்து வழங்கியுள்ளார்.

5. அயர்லாந்து அறிஞர் இராபர்ட்டு காலுடுவெல் (1814-1891) :

ஐம்பத்து மூன்று ஆண்டுகள் தமிழகத்தில் திருமறைக்கும் தீந்தமிழுக்கும் தொண்டாற்றிய இராபர்ட்டு காலுடுவெல்Robert Caldwell)(, இடையன்குடியிலும் (1880), கொடைக்கானலிலும் (1886), திருக்கோவில்களை உருவாக்கிய பெருமை பொருந்தியவர்; திருநெல்வேலித் திருத்தொண்டர் வரலாற்றையும் திருநெல்வேலி மாவட்ட வரலாற்றையும் எழுதி வழங்கிய ஏந்தல். கொற்கைத் துறைமுகம் ஆகிய கபாடபுரத்தின் பழம்பெருமையினை அகழாய்வு வாயிலாக உணர்ந்த கால்டுவெல், தொல்பொருள் ஆய்வுத் துறையின் முன்னோடியாக மிளிர்கிறார். இயேசு பெருமான் சிலுவையில் தொங்கியபோது  கூறிய ஏழு திருமொழிகளை எல்லாரும் படித்து மகிழும் வண்ணம்  வழங்கியுள்ளார்; இருநூற்று நாற்பத்து மூன்று வினாக்களுக்கு விளக்கம் வழங்கும் சிற்றறிஞர் குறிப்பிடம் என்ற நூலையும் தந்துள்ளார். பதினைந்து ஆண்டு உழைப்பால் உருவாகிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (1856) திருந்திய மொழிகள் ஆறு, திருந்தாத மொழிகள் ஆறு என்று பன்னிரு மொழிகளின் இலக்கணச் சீர்மையைச் செப்புகிறது. கிளாசுகோ பல்கலைக் கழகம் இந்நூலுக்காக அறிஞர்பட்டம் வழங்கிப் பெருமை செய்துள்ளது. “தனித்தியங்கும் தன்மை தமிழ் மொழிக்கு உண்டு, தமிழே ஞாலத்தில் முதுமொழி பண்டு” என்று பாவேந்தர் போற்றிப் புகழும் வகையில் தகுதி மிகுதி வாய்ந்தவர் காலுடுவெல். இலக்கண அமைப்பில் திராவிட மொழிகளுக்கும் சமற்கிருதத்துக்கும் உள்ள வேறுபாடுகள் பதின்மூன்றை விளம்பிய வித்தகர் கால்டுவெல்.

(தொடரும்)