Saturday, September 14, 2024

உ.வே.சா.வின் என் சரித்திரம் 105 – சந்திரசேகர கவிராச பண்டிதர்

 



(உ.வே.சா.வின் என் சரித்திரம் 104 – மடத்திற்கு வருவோர்-தொடர்ச்சி)

சுப்பிரமணிய தேசிகரது அன்பு வர வர விருத்தியானதை நான் பல வகையிலும் உணர்ந்தேன். கும்பகோணம் முதலிய இடங்களிலுள்ள கனவான்களை ஏதேனும் முக்கியமான விஷயமாகப் பார்த்துப் பேசி வர வேண்டுமானால் தேசிகர் என்னை அனுப்புவார்.

அக்காலத்திற் கும்பகோணத்துக்கு இருப்புப்பாதை ஏற்படாமையால் திருவாவடுதுறையிலிருந்து நான் பெரும்பாலும் கும்பகோணத்துக்கு அடிக்கடி நடந்தே செல்வேன். கிட்டத்தட்ட 12 கல் தூரம் இருக்கும். அங்கே பார்க்க வேண்டியவர்களைப் பார்த்துப் பேசவேண்டியவற்றைப் பேசி விசயங்களை அறிந்து வருவேன். இரவு கும்பகோணத்தில் தங்கும்படி நேரிட்டால் எனக்கு ஆகாரம் கிடைப்பது கடினமாகி விடும், தெரிந்தவர் யாரும் இல்லாமையால் எந்த வீட்டுக்கும் போவதில்லை. சாப்பாட்டு விடுதியில் போய்ச் சாப்பிடக் கையில் பணம் இராது. இந்நிலையில் எங்கேனும் தருமத்துக்குச் சாப்பாடு கிடைக்குமாவென்று விசாரிப்பேன்.

கும்பகோணம் மகாமகதீர்த்தத்தின் கீழ்பாலுள்ள அபிமுகேசுவர ஸ்வாமி கோவிலில் தேசாந்தரிகளுக்கு உணவு அளிப்பதற்கு ஒரு தருமசாலை இருந்தது. அங்கே சென்று என் பசியைத் தீர்த்துக் கொண்டு தரும சாலையை ஏற்படுத்திய மகா புருசனை மனமார வாழ்த்துவேன். சில சமயங்களில் நான் யாரைப் பார்க்கப் போவேனோ அவர் என்னோடு நெடுநேரம் பேசியிருந்துவிட்டால் தரும சாலையில் அகாலமாய்விடும். ஆகாரம் கிடைக்காது.

நான் போகும் இடங்களில் அங்கேயுள்ளவர்கள் எனக்கு வேண்டிய சௌகரியங்களைச் செய்து கொடுப்பார்களென்று சுப்பிரமணிய தேசிகர் எண்ணியிருப்பார். நான் மடத்தில் வேண்டிய பொருள்களை எளிதிற் பெற்றுக் கொள்பவனாதலால் இத்தைய சந்தர்ப்பங்களில் எனக்கு வேண்டிய சௌகரியங்களை நானே செய்து கொள்வேனென்று நினைத்திருக்கலாம். அக்கனவான்களோ, மடத்திலிருந்து வரும் எனக்கு மடத்தாராலேயே எல்லாவித சௌகரியங்களும் அமைந்திருக்குமென்று நினைப்பார்கள். இவ்விருசாராரும் இவ்வாறு நினைப்பதில் தவறு ஒன்றுமில்லை. ஆனால் ஒன்றையும் வெளிக்காட்டாமல் நான் துன்பத்துக்கு உள்ளானேன். உண்மை தெரிந்தால் இருசாராரும் மிகவும் வருத்தமுறுவார். “அவர்களே தெரிந்து கவனித்தாலன்றி நாம் தெரிவிப்பது சரியன்று” என்று எண்ணி வந்த காரியத்தைக் கவனிப்பதையே கடமையாக நான் கொண்டிருந்தேன்.

கும்பகோணம் கல்லூரியில் இருந்த தியாகராச செட்டியார் 1-8-1876 முதல் ஆறு மாதங்கள் இரசா எடுத்துக் கொண்டார். அவருடைய தானத்தில் சித்தூர் உய்நிலைப்பள்ளியில் தமிழ்ப் பண்டிதராக இருந்த தில்லையம்பூர் சந்திரசேகர கவிராச பண்டிதரென்பவரை நியமித்தார்கள். அவர் சென்னையில் மிக்க புகழ் பெற்ற வித்துவானாக விளங்கிய சிரீ விசாகப் பெருமாளையரிடம் பாடம் கேட்டவர்; அவர் எழுதிய பஞ்ச இலட்சண வினாவிடை, பால போதவிலக்கணம் என்பவற்றையும், நன்னூல் விருத்தியுரை, யாப்பருங்கலக் காரிகையுரை, தண்டி யலங்கார வுரை, வச்சணந்தி மாலை முதலிய நூல்களையும் அச்சிட்டவர்; தமிழ் நாட்டில் அங்கங்கே வழங்கும் தனிப் பாடல்களையெல்லாம் திரட்டித் தனிப் பாடற்றிரட்டு என்ற பெயரோடு முதல் முதல் வெளியிட்டவர் அவரே.

சென்னையில் பலகாலமிருந்து தாண்டவராய முதலியார் முதலிய வித்துவான்களோடு பழகிய அவரைப் பார்த்துப் பேச வேண்டுமென்ற விருப்பம் சுப்பிரமணிய தேசிகருக்கு இருந்தது. அவர் வேலையிலமர்ந்து ஒரு மாத காலமாயிற்று. சுப்பிரமணிய தேசிகருடைய புலமையையும் சிறந்த குணங்களையும் அவரும் கேள்வியுற்றவராதலின் அப் பெரியாரைத் தரிசிக்க வேண்டுமென்ற ஆவலோடிருந்தார். ஆனாலும், “பெரிய இடமாயிற்றே; நாம் போனால் அவர்களைச் சுலபமாகப் பார்க்க முடியுமோ முடியாதோ! அவர்கள் விசயமாக ஏதேனும் ஒரு பிரபந்தம் இயற்றிக் கொண்டு போய்ப் பார்க்கலாம்” என்று எண்ணிச் சுப்பிரமணிய தேசிகர் விசயமாக ஒரு நான்மணிமாலையை இயற்றினார்.

சுப்பிரமணிய தேசிகருக்குப் பண்டிதரைப் பார்த்துப் பேச வேண்டுமென்ற ஆவல் அதிகமாயிற்று. ஆதீன வித்துவானும் தேசிகருக்குத் தமிழ்ப் பாடம் சொன்னவருமான தாண்டவராயத் தம்பிரானென்னும் புலவர் சிகாமணி சென்னையில் சில காலம் இருந்தவர். அங்குள்ள வித்துவான்களோடு பழகினவர். சுப்பிரமணிய தேசிகர் அத்தம்பிரான் மூலமாகச் சென்னைப் புலவர்களுடைய பெருமையை அறிந்திருந்தார். சந்திரசேகர கவிராச பண்டிதர் மூலமாகப் பின்னும் விரிவாகத் தெரிந்து கொள்ள அப்போது எண்ணினார்.

ஒரு நாள் தேசிகர் என்னை அழைத்து, “இன்று கும்பகோணம் வரையில் போய் வர வேண்டும்” என்று சொன்னார்.

வழக்கப்படி மடத்துக் காரியமாக யாரிடமேனும் அனுப்புவார் என்று எண்ணினேன். “சந்திரசேகர கவிராச பண்டிதரிடம் நாம் பார்த்துப் பேச விரும்புகிறோமென்று தெரிவித்து அவரை அழைத்து வர வேண்டும்” என்று அவர் சொன்னபோது ஒரு வித்துவானுடைய பழக்கத்தைத் தாமே வலிந்து செய்து கொள்வதை அவர் ஒரு குறையாக எண்ணவில்லையே யென்பதை உணர்ந்து நான் விம்மிதம் அடைந்தேன்.

சந்திரசேகர கவிராச பண்டிதரைப் பார்த்துப் பழக வேண்டுமென்ற விருப்பம் எனக்கும் மற்ற மாணாக்கர்களுக்கும் இருந்தது. என் இளமையில் தமிழில் சுவை உண்டாக்கிய தனிப்பாடற்றிரட்டு அவராற் பதிப்பிக்கப் பெற்றதென்ற நினைவு அவரிடம் எனக்கு அதிக மதிப்பை உண்டாக்கியது. நான் உடனே கும்பகோணத்தை நோக்கிப் புறப்பட்டேன்.

கும்பகோணத்தில் அவரைக் கண்டு விசயத்தைத் தெரிவித்த போது அவர், “நான் பெரிய அபசாரம் செய்துவிட்டேன். சந்நிதானத்தின் பெருமையை நான் நன்றாக கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த ஊருக்கு நான் வந்தவுடனே அங்கே வந்து சந்நிதானத்தைத் தரிசித்திருக்க வேண்டுமென்ற எண்ணம் இருந்தது. ஒரு பிரபந்தமும் இயற்றியிருக்கிறேன்” என்று சொன்னார். திருவாவடுதுறை மடத்தைப் பற்றியும் சுப்பிரமணிய தேசிகரைப் பற்றியும் பிள்ளையவர்களைப் பற்றியும் விசாரித்தார். நான் சொல்லச் சொல்ல அவர் கேட்டு மிக்க மகிழ்ச்சியை அடைந்தார். அப்பால், “இன்று கல்லூரிக்குப் போக வேண்டியிருக்கிறது. இந்தச் சனிக்கிழமை காலையில் அங்கே வந்து சந்நிதானத்தை அவசியம் தரிசிக்கிறேன். அப்படியே சொல்ல வேண்டும்” என்றார்.

திரும்பி நான் திருவாவடுதுறைக்குப் பிற்பகல் மூன்று மணிக்கு வந்து தேசிகரிடம் நடந்த விசயத்தைத் தெரிவித்தேன். தாம் சொன்னபடியே சந்திரசேகர கவிராச பண்டிதர் சனிக்கிழமை காலையில் தம் குமாரராகிய சிவகுருநாத பிள்ளை என்பவரை அழைத்துக் கொண்டு திருவாவடுதுறைக்கு வந்தார். தேசிகர் அவரோடு மிக்க சந்தோசமாகச் சம்பாசணை செய்தார். விசாகப் பெருமாளையர், சரவணப் பெருமாளையர். மகாலிங்கையர், தாண்டவராய முதலியார், இராமானுச கவிராயர் முதலிய வித்துவான்களைப் பற்றி விசாரித்தார். அவர்களுடைய குணவிசேடங்களையும், அவர்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த சுவையுள்ள வரலாறுகளையும் பண்டிதர் எடுத்துச் சொன்னார்.

தாம் தேசிகர் மீது இயற்றி அச்சிட்டுக் கொணர்ந்த நான்மணி மாலையை அன்று பிற்பகலில் பண்டிதர் மடத்திற் படித்துப் பிரசங்கம் செய்தார். அப்போது தம்பிரான்களும், வேறு மாணாக்கர்களும், மதுரை இராமசாமி பிள்ளையும், சில வித்துவான்களும் இருந்தார்கள். அப்பிரபந்தத்தில் செய்யுள்தோறும் சுப்பிரமணிய தேசிகருடைய பெயர் வரவில்லை. அது முறையன்றென்று தம்பிரான்கள் ஆட்சேபம் செய்தார்கள். அப்போது அங்கே வந்திருந்த கும்பகோணம் நகர் உணர்நிலைப்பள்ளி சம்சுகிருதப் பண்டிதர் சடகோபாசாரியரென்பவர் அவரை நோக்கி, “என்ன, பதில் சொல்லாமலிருக்கிறீர்களே? இந்த நூலை எடுத்துக் கொண்டு போய் மற்றோர் ஆதீனத்தில் இதே பாட்டைப் படித்துக் காட்டலாமே. இந்த ஆதீனகர்த்தரைப் பற்றியதுதானென்பதற்கு ஒவ்வொரு பாட்டிலும் அடையாளம் இருக்க வேண்டாமோ?” என்று கேட்டார். அப்படி அவர் வெட்டெனப் பேசியதைக் கேட்டபோது எனக்கே மிக்க வருத்தமுண்டாயிற்று. கவிராச பண்டிதரோ பொறுமையோடு பேசாமலிருந்து விட்டார். அந்தத் தடைக்கு விடை சொல்லும் ஆற்றல் அவருக்கு இருந்தாலும் அனாவசியமாக விவாதத்தைக் கிளப்ப அவர் விரும்பவில்லை.

நான்மணிமாலை முற்றும் பிரசங்கம் செய்து நிறைவேறியது. மறுநாள் பண்டிதர் தேசிகர் மீது பல புதிய பாடல்களை இயற்றிச் சொல்லிக் காட்டினார். அவரைப் பாராட்டி அப்போது பின்வரும் பாடலை நான் சொன்னேன்:-

வற்றா வருட்சுப் பிரமணி யப்பெயர் வள்ளல் மலர்ப்

பொற்றாட் புகழைப்பல் பாமாலையாகப் புனைந்தழகாச்

சொற்றா னியற்சந் திரசே கரபண்டித சுகுணன்

சற்றாய் பவர்களும் முற்றா மகிழ்வு தலைக்கொளவே.

சுப்பரிமணிய தேசிகர் தம் சந்தோசத்தைக் குறிப்பாகப் புலப்படுத்தினர். பண்டிதர் மகிழ்ந்து என்னைப் பாராட்டி,

நேமிநா தன்வழுத்தும் நித்தன் கைலையுறை

வாமிநா தன்புகழை வாழ்த்து மென்மேல்-தோமினற்சீர்

சாமிநா தக்கவிஞன் சாற்றும் பனுவலைப் போல்

பாமினா ளும்பகர் வளோ

என்ற செய்யுளைச் சொன்னார்.

[நேமிநாதன் – திருமால். வாமிநாதன் – சிவபெருமான்; வாமி – உமை. பாமினாள் – கலைமகள்.]

தம்பிரான்களும் சடகோபாசாரியரும் கேட்ட கேள்விகளால் மன அமைதியை இழந்திருந்த பண்டிதர் என்னுடைய பாட்டினால் மிக்க மகிழ்ச்சியுற்றார். அதன் விளைவாக எழுந்ததே இச்செய்யுள்.

மடத்திலிருந்து எல்லோரும் வெளியே வந்தவுடன் அவர்கள் பண்டிதரைப் பற்றி என்னிடம் குறைகூறத் தொடங்கினார்கள். “என்னையா பண்டிதர் அவர்? தூரத்துப் பச்சை கண்ணுக்கு அழகு. அவரிடத்தில் சந்நிதானத்துக்கும் உங்களுக்கும் அவ்வளவு மோகம் ஏற்பட்டது ஏன்? அவர் பாட்டு ஒன்றாவது இரசமாயில்லையே. அவர் சொன்ன பாட்டு உங்களைப் பாராட்டுவதற்காக உத்தேசித்ததன்று. நீங்கள் பாடியது போல விரைவில் பாடத் தமக்கும் முடியு மென்பதைச் சந்நிதானத்துக்குத் தெரிவிக்க வேண்டுமென்பதுதான் அவர் நோக்கம். பாடினாரே அந்தப் பாட்டுத்தான் எவ்வளவு இலட்சணம்! ‘வாமிநாதன் புகழை வாழ்த்து மென்மேல்’ என்று தம்மைத் தாமே புகழ்ந்து கொள்கிறாரே. கடைசியடியில் சரியான படி மோனையையே காணோமே.”

நான் அவர்களைக் கையமர்த்தி, “வித்துவான்களை இப்படி அவமதிப்பது பிழை. அவர் இந்த ஆதீனத்தைப் பற்றி என்ன நினைத்துக் கொள்வார்? உங்களுக்குப் பதில் சொல்லத் தெரியாமலா அவர் பேசாமலிருந்தார். சில பழைய நூல்களில் இத்தகைய அமைப்பு உண்டு. அவர் பெருமை உங்களுக்குத் தெரியாது. பெரிய வித்துவானிடம் பாடங் கேட்டவர்” என்று சமாதானம் சொன்னேன்.

பண்டிதர் சில நாள் திருவாவடுதுறையிலேயே தங்கினார். அப்போது நான் அவருடனிருந்து பல அரிய விசயங்களைத் தெரிந்து கொண்டேன். சுப்பிரமணிய தேசிகரிடம் அவர் சாத்திர விசயமான சந்தேகங்களைத் தெரிந்து கொண்டார். தனிப் பாடற்றிரட்டை இரண்டாமுறை பதிப்பிக்க உத்தேசித்திருப்ப தாகவும் எனக்குத் தெரிந்த தனிப் பாடல்களையும் திரட்டி அனுப்பினால் சேர்த்துக் கொள்வதாகவும் சொன்னார். தேசிகர் அவருக்குத் தக்க மரியாதை செய்து விடை கொடுத்தனுப்பினார்.

கும்பகோணத்தில் இருந்த காலத்தில் கவிராச பண்டிதர் சில முறை திருவாவடுதுறைக்கு வந்துபோனதுண்டு. பிற்காலத்தில் எனக்கும் அவருக்கும் அடிக்கடி கடிதப்போக்கு வரவு நடை பெற்றது. அவர் விரும்பியபடியே தனிப்பாடற்றிரட்டு இரண்டாம் பதிப்பில் உபயோகித்துக் கொள்ளும்படி நான் பல பாடல்களை எழுதியனுப்பினேன். அவற்றுள் என் பாடல்களும் சில உண்டு. அவர் எல்லாவற்றையும் சேர்த்துப் பதிப்பித்தார். அவர் என் பாடல்களை, “திருவாவடுதுறைச் சாமிநாத கவிராயர் பாடியவை” என்று தலையிட்டு அச்சிட்டிருந்தார். பார்த்த சுப்பிரமணிய தேசிகர் “சம்பிரதாயம் தெரியாமல் இப்படிப் போட்டிருக்கிறாரே!” என்று புன்முறுவல் பூத்தார்: நாங்களும் சிரித்தோம்: “கவிராயர் வாள்” என்று நண்பர் சிலர் என்னை அழைத்து நகைக்கலாயினர்.

(தொடரும்)

காலுடுவெல்லும் உலகளாவிய தமிழாய்வும் ¼ – முனைவர் சான் சாமுவேல்



ஐரோப்பிய நாட்டு அருட்தொண்டர்களுள் காலுடுவெல்லின்(Caldwell) அளவிற்குத் தமிழாய்வில் மிகப்பெரும் பங்களிப்பு நல்கியோராக எவரையும் குறிப்பிட முடியவில்லைதமிழரின் விழுமிய அறக்கோட்பாடுகள் ஐரோப்பிய நாட்டு அறிஞர் உலகில் பரவ அடியெடுத்துக் கொடுத்தார் வீரமாமுனிவர் எனப்பெயரிய பெசுக்கி எனும் இத்தாலிய நாட்டு இறைத்தொண்டர். அச்சுப்பொறியினைத் தரங்கை மண்ணில் நிறுவி நவீன இந்தியாவின் உருவாக்கத்திற்கு அடித்தளம் அமைத்து அச்சுக்கலையினைத் தமிழர் கையில் வழங்கினர் சீர்திருத்தச் சபையினைத் தமிழ் மண்ணில் நிறுவிய செருமன் நாட்டு இறையடியார் சீகன்பால்கு(Bartholomäus Ziegenbalg) அவர்கள்.

தமது முன்னோடிகளான இவர்களது சாதனைகளையும் பல படிகள் கடந்து சென்று 1856-இல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் நூலை வெளியிட்டு இந்தியவியல் என்ற பெயரில் உலக அளவில் கருத்து நிலையில் மாபெரும் ஏகாதிபத்தியம் செலுத்திவந்த சமற்கிருத வியலின் ஆதிக்கத்திற்கு ஒரு முடிவு கட்டி, திராவிடவியல் எனும் பெயரில் தென்னிந்தியவியல் குறித்த ஆய்வுகள் உருக்கொண்டு உரிமைபெற்று உலகளாவிய நிலையில் உயர்ந்தோங்கி வளர உதவினார் கால்டுவெல். இந்திய மொழிகள் தொடர்பான ஆய்வுகளில் ஏற்பட்ட மாபெரும் ஆய்வுப்புரட்சி இஃது என்பதில் மாற்றுக்கருத்து எவருக்கும் இருக்கவியலாது.

தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு குறித்த ஆய்வில் 19-ஆம் நூற்றாண்டு மிகவும் குறிப்பிடத்தக்கது. வணிகம் புரிய இந்திய நாட்டுக்கு வருகை தந்து விற்பனைப் பொருட்களோடும், விற்பனையாளர்களோடும் மட்டும் தொடர்பு வைத்திருந்த ஐரோப்பிய நாடுகள் கிழக்கிந்திய நிறுவனத்தைத் (கம்பெனியைத்) தொடங்கி படிப்படியாகத் தம் குடியேற்ற ஆதிக்கத்தை இந்திய நாட்டில் நிலைநாட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததோடு பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த கிறித்தவ அருட் தொண்டர்களையும் அனுப்பி வைத்து சமுதாய, சமய மாற்றங்களையும் இந்திய மண்ணில் விரைவுபடுத்திக் கொண்டிருந்த காலம் அது.

கிறித்தவ அருட்தொண்டர்கள் கொண்டுவந்த அச்சுப்பொறியும் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் அறிமுகப்படுத்திய மேலைநாட்டு முறையில் அமைந்த கல்வி முறையும் பிற இந்திய நாட்டுப் பகுதிகளில் மட்டுமன்றித் தமிழ்ச் சமுதாயத்திலும் மாபெரும் மாற்றங்களைக் கொண்டுவரத் தொடங்கியிருந்தன. இவற்றின் விளைவாக, மொழி, கலை, பண்பாடு, இலக்கியம் ஆகிய ஆய்வுகளில் பன்முகப் பார்வையும் உலகளாவிய நோக்கும் அரும்பத் தொடங்கின. இதற்கு முன்னர் தமிழ்மொழி, தமிழ்ப்பண்பாடு ஆகியன பற்றிய ஆய்வுகளும் அணுகுமுறைகளும் முழுக்க முழுக்க ‘தமிழ்கூறும் நல்லுலகு’ என்னும் ஒரு குறிப்பிட்ட பகுதியை மையமாகக் கொண்டே சுழன்றன. இதற்குக் காரணம் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் அனைத்தும் தேவைபாசையான சமற்கிருதத்திலிருந்து தோன்றியவையே என்ற தவறான நம்பிக்கை இம்மண்ணில் ஆழமாக வேர்விட்டிருந்ததே எனலாம்.

தமிழ்மொழியும், தமிழ்ப்பண்பாடும் வடவர் மொழிகளிலிருந்தும் பண்பாட்டுக் கூறுகளிலிருந்தும் வேறுபட்டவையே என்பதைத் தொல்காப்பியர் காலம் முதல் 19-ஆம் நூற்றாண்டுவரை மிகத் தெளிவாகத் தமிழ்ப்புலவர்கள் வேறுபடுத்திக் காட்டிய போதிலும் பொது நிலையில் இவை பரவலாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. இதற்குக் காரணம் உலகளாவிய நிலையில் தமிழின் சிறப்பினை நடுநிலையில் ஆய்ந்து அதன் தனித்தன்மையினைத் தக்க சான்றுகளுடன் நிறுவும் முயற்சி கி.பி.19-ஆம் நூற்றாண்டு வரை எங்கும் தோன்றவில்லையென்பதுவேயாகும்.

கல்கத்தாவில் வயவர் வில்லியம் சோன்சு(Sir William Jones) தோற்றுவித்த ஆசியக் கல்விச்சங்கம் இந்திய மொழிகளுக்கெல்லாம் சமற்கிருதமே தாயாகும் என்ற நிலைப் பாட்டினை ஏற்றுக் கொண்டதோடு இந்தியவியல் என்றால் சமற்கிருதவியலே என்ற தவறான மாயத் தோற்றத்தினை உலக அறிஞர்கள் முன் மிகுந்த ஆற்றலுடன் வைத்தது. சமற்கிருத இலக்கியங்களை ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்த்து உலகச் செம்மொழிகளுள் ஒன்றாக சமற்கிருதம் எந்த மாற்றுக் கருத்துமின்றி அங்கீகாரம் பெற இந்த நிறுவனம் முழுநிலையில் உதவியது.

உயர்நிலைப் பதவிகள் வகித்த ஐரோப்பிய அதிகாரிகளும் அறிஞர்களும் சமற்கிருத அறிஞர்களோடு கைகோர்த்து சமற்கிருதத்தை உலகளாவிய நிலையில் தூக்கிப்பிடித்த நிலையில் தமிழை முன்னிறுத்தி தென்னிந்தியவியல் தொடர்பான ஆய்வுகளை தூக்கி நிறுத்தும் முயற்சிகளை எல்லீசன் என்ற எல்லிசு(Francis Whyte Ellis) போன்ற ஒருசில உயர்நிலை அதிகாரிகள் கிறித்தவ இறைத்தொண்டர்களோடு இணைந்து ஓரளவு மேற்கொள்ளத் தொடங்கினர். சென்னை மாகாணக் கல்விச் சங்கத்தைத் தோற்றுவித்துத் தென்னிந்திய மொழிகள் குறித்த ஆய்வுப்பணிகளை, குறிப்பாகத் தமிழியல் பற்றிய ஆய்வுப் பணிகளை, ஒருங்கிணைத்து நிறுவன முறையிலாக  (Madras School of Orientalism) ஓரளவிற்கு கல்கத்தாவில் செயல்பட்ட ஆசியக்கல்விச் சங்கத்துக்கு நிகராக வளர்க்கத் திட்ட மிட்டிருந்த சென்னை மாகாண ஆட்சியர்(Collector) எல்லீசன் என்ற எல்லிசு அவர்களின் அரிய ஆய்வுக்கனவுகள் அவரது அகால மறைவால் வெடித்துச் சிதறித் தகர்ந்தன. நிறுவனமாக ஒருங்கிணைத்து தமிழியலை வளர்க்க முயன்ற அவரது முயற்சி முழுமை பெறமுடியாது போனபோதிலும் 1856-ஆம் ஆண்டில் காலுடுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலின் வாயிலாக அது ஓரளவு நிறைவு பெற்றுள்ளது எனலாம்.

சமற்கிருதத்தை இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் உட்கிளையான இந்தோ-ஆரியக் குடும்பத்தின் தலைமை மொழி என நிறுவ முயன்ற சர் வில்லியம் சோன்சு அவர்களது முயற்சியினைக் காலுடுவெல்லின் முயற்சி பல நிலைகளில் விஞ்சி நின்றது. ஆரியர் வருகைக்கு முன் இந்திய நாடெங்கும் வழக்கிலிருந்த மொழிகள் திராவிட மொழிகள் என்பதையும் திராவிட மொழிக்குடும்பத்தின் தலைமை மொழி தமிழ் என்பதையும் கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்பற்றிய நூலின் இரண்டாம் பதிப்பு அழுத்தம் திருத்தமாக அறை கூவியது.

தஞ்சை மாவட்ட ஆட்சியராகவிருந்த கேம்பல் (Campell) என்பவர் எழுதிய தெலுங்கு மொழியின் இலக்கணம் (A Grammar of Telugoo Language) என்ற நூலுக்கு தாம் வழங்கிய அணிந்துரையில் தென்னகத்தில் வழங்கப்படும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளும் வட மொழிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை என்றும், அவை தனித்த பிரிவினைச் சார்ந்தன என்றும் எல்லிசு கால்டுவெல்லுக்கு முன்னரே பிரகடனம் செய்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க எல்லிசின் இந்தப் பிரகடனமே கால்டுவெல்லுக்கு திராவிட மொழிக் குடும்பம் பற்றிய ஆய்வுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது.

Tuesday, September 10, 2024

அயல்நாட்டுத் தமிழறிஞர்கள் ஊ.போப்பு, எ.எல்லீசர், ஏ.ஞானப்பிரகாசர், ஐ.தனிநாயகம்- பா.வளன் அரசு

 




(தமிழுக்கு வளம் சேர்த்த அயல்நாட்டுத் தமிழறிஞர்கள். இ. சீகன்பால்கு, ஈ. இரேனியசு, உ. காலுடுவெல் – பா.வளன் அரசு – தொடர்ச்சி

அருளாலயம்‌ உருவாக்குதல்‌, அறிவாலயம்‌ எழுப்புதல்‌, திருக்குறள்‌ முதலான இலக்கியங்களை ஆங்கிலத்தில்‌ மொழிபெயர்த்தல்‌, அயல்‌ நாட்டவர்க்குத்‌ தமிழை அறிமுகப்படுத்துதல்‌, தமிழ்‌ உணர்வையும்‌ பண்பாட்டையும்‌ நிலைநாட்டுதல்‌ ஆகிய பல்வேறு நிலைகளில்‌ தமிழ்‌ வளர்ச்சிக்காகத்‌ தொண்டுள்ளத்தோடு சேவை செய்த செம்மல்‌ போப்பு. எட்டு ஆண்டுகள்‌ சாயர்புரத்தில்‌ திருத்தொண்டாற்றிய போப்பையர்‌ 1844ஆம்‌ ஆண்டு அழகிய திருக்கோவிலை உருவாக்கினார்‌. இராமாநுசக்‌ கவிராயர்‌ வாயிலகத்‌ தமிழைப்‌ பயின்று, மாணவர்க்குப்‌ பயன்தரும்‌ வகையில்‌ வினாவிடை வடிவில்‌ தமிழ்‌ இலக்கண நூலும்‌ பெரியோர்‌ தெளிவுபெறும்‌ வண்ணம்‌ தமிழ்‌ இலக்கண ஆங்கில நூலும்‌ எழுதியுள்ளார்‌. தமிழ்ச்‌செய்யுட்‌ கலம்பகம்‌ என்னும்‌ பெயரால்‌ தொகை நூல்‌ ஒன்றும்‌ தந்துள்ளார்‌.

தஞ்சாவூரில்‌ பணியாற்றிய பிறகு உதகை சென்று, தோடர்‌ மொழியை ஆராய்ந்து இலக்கணம்‌ நல்கியுள்ளார்‌. பெங்களூரில்‌ பேராயர்‌ காட்டன்‌ பள்ளித்‌ தலைவராகத்‌ திகழ்ந்த போப்பையர்‌, 1885 முதல்‌ ஆக்குசுபோர்டு பல்கலைக்‌ கழகத்தில்‌ தமிழும்‌ தெலுங்கும்‌ கற்பிக்கும்‌ பேராசிரியராக விளங்கினார்‌. திருக்குறள்‌ (1886), நாலடியார்‌ (893). திருவாசகம்‌ (1900) சிவஞானபோதம்‌ ஆகியவற்றை ஆங்கிலத்தில்‌ மொழ்ீபெயர்த்து வழங்கியுள்ளார்‌. இருபத்து மூன்று ஆண்டுகள்‌ ஆக்குசுபோர்டு பல்கலைக்‌ கழகப்‌ பேராசிரியராகத்‌ திகழ்ந்த போப்பு, பழங்காலத்துத்‌ தூய தமிழுக்குத்‌ திருக்குறள்‌ சிறந்த எடுத்துக்‌ காட்டாகும்‌

அழுக்கில்லாத தூய நீருற்றாகத்‌ திருக்குறள்‌ ஒளியுடன்‌ மிளிர்கிறது என்று தெளிவுறுத்தியுள்ளார்‌திருவஈசகம்‌ எலும்பையும்‌ உருக்கும்‌ அருட்பா என்று பாராட்டியுள்ளார்‌; தம்‌ கல்லறையில்‌ ஒரு தமிழ்‌ மாணவர்‌ என்று பொறித்திடச்‌ செய்தார்‌.

இங்கிலாந்து நாட்டில்‌ தோன்றிய பிரான்சிசு ஒயிற்று எல்லீசு சென்னை மாவட்ட ஆட்சியாளராகத்‌ திகழ்ந்தார்‌. திருக்குறளுக்கு ஆங்கிலத்தில்‌ விளக்கவுரை எழுதியுள்ளார்‌. திருவள்ளுவருக்குத்‌ தங்கக்‌ காசுகள்‌ வெளியிட்டுப்‌ பெருமிதம்‌ பெற்றார்‌. சென்னைக்‌ கல்விச்‌ சங்கத்தை நிறுவியவரும்‌ இவரே. திராவிட மொழிக்‌ குடும்பம்‌ பற்றித்‌ தெலுங்கு இலக்கண நூலின்‌ முன்னுரையில்‌ மொழிந்துள்ளார்‌. இராமச்‌ சந்திரக்‌ கவிராயர்‌ வாயிலாகத்‌ தமிழ்‌ கற்ற எல்லீசர்‌, தமிழில்‌ பாட்டியற்றும்‌ வல்லமையும்‌ பெற்றிருந்தார்‌. சென்னையில்‌ குடிநீர்த்‌ தட்டுப்பாட்டைப்‌ போக்கும்‌ வகையில்‌ கிணறுகள்‌ வெடடுவித்துக்‌ கல்வெட்டுகளையும்‌ பதிப்பித்துள்ளார்‌. திருக்குறள்‌, தேம்பாவணி ஆகியவற்றை அச்சிட வழிவகுத்தவர்‌ எல்லீசர்‌. தமிழே திராவிட மொழிகளின்‌ பெற்றோர்‌ என்று புலப்படுத்தியுள்ளார்‌. இவர்‌ பெயரால்‌ மதுரையிலும்‌ சென்னையிலும்‌ சாலைகள்‌ அமைந்துள்ளன.

உலகமொழிகள்‌ எழுபது கற்று, செந்தமிழ்ச்‌ சொற்பிறப்பு ஒப்பியல்‌ அகராதி தந்து. உலகின்‌ உயர்தனிச்‌ செம்மொழி தமிழ்‌ என்று பதினட்டுச்‌ சான்றுகளுடன்‌ நிறுவியவர்‌ நல்லூர்‌ ஞானப்பிரகாசர்‌. சிந்துவெளி நாகரிகம்‌ தமிழர்‌ நாகரிகம்‌ என்று ஈராசு அடிகளாருடன்‌ இணைந்து எடுத்தோதியவர்‌ இவரே.

தமிழரின்‌ தொன்மை வரலாறு, யாழ்ப்பாண வரலாற்று ஆய்வு ஆகியவற்றை அருளியுள்ளார்‌. சுப்பிரமணியர்‌ ஆராய்ச்சி (1916), பிள்ளையார்‌ ஆராய்ச்சி (1921) ஆகியவற்றுடன்‌ செகராசசேகரன்‌ புதினம்‌ என்‌னும்‌ நூலையும்‌ நல்கிய பெருமைக்கு உரியவர்‌ ஞானப்பிரகாசர்‌.

உலகநாடுகள்‌ பலவற்றுக்குத்‌ தமிழ்த்‌ தூதராகச்‌ சென்று தமிழ்ப்‌ பண்பாட்டைப்‌ புலப்படுத்தியும்‌ வளப்படுத்தியும்‌ அரும்பெரும்‌ தொண்டாற்றியவர்‌ தனிநாயகம்‌ அடிகளார்‌. இலங்கையில்‌ பிறந்து, உரோமாபுரியில்‌ இறையியல்‌ அறிஞராகி, வடக்கன்குளம்‌ தெரசாள்‌ பள்ளியில்‌ மூன்றாண்டுகள்‌ ஆசிரியப்பணி புரிந்துள்ளார்‌; கோலாலம்பூர்‌, சென்னை, பாரீசு, யாழ்ப்பாணம்‌ ஆகிய நான்கு இடங்களில்‌ உலகத்‌தமிழ்‌ மாநாடு நடத்திய பெருமை பொருந்தியவர்‌; மலேசியப்‌ பல்கலைக்‌ கழகத்‌ தமிழ்ப்‌ பேராசிரியராகப்‌ பொறுப்பேற்றவர்‌. ஐம்பது நாடுகளுக்குச்‌ சென்று தமிழின்‌ புகழைப்‌ பறைசாற்றியுள்ளார்‌. “என்னை நன்றாய்‌ இறைவன்‌ படைத்தான்‌, தன்னை நன்றாய்த்‌ தமிழ்‌ செய்யுமாறே” என்னும்‌ திருமூலரின்‌ அருள் வாக்கைக்‌ குறிக்கோளாகக்‌ கொண்டு செயலாற்றினார்‌. சங்க இலக்கியத்தில்‌ இயற்கை, ஒன்றே உலகம்‌, தமிழ்த்தூது ஆகிய ஏடுகளை எழுதிய ஏந்தல்‌ தனிநாயகம்‌, தமிழ்ப்‌ பண்பாடு என்னும்‌ ஆங்கில முத்திங்கள்‌ ஏட்டின்‌ வாயிலாகப்‌ பழந்தமிழர்‌ பெருமையினைப்‌ பறைசாற்றியுள்ளார்‌.

அழகு மிகுந்தது, வளமை வாய்ந்தது, மிகவும்‌ பண்பட்டு விளங்குவது தமிழ்‌ என்று தம்‌ நண்பர்‌ பல்லார்மினுக்கு மடல்‌ எழுதி, நானூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழை அறிமுகம்‌ செய்தவர்‌ இத்தாலிய நாட்டுத்‌ துறவி இராபர்ட்டு நொபிலி. தத்துவ போதகர்‌ என்னும்‌ பெயருடன்‌ (5727-1656) ஐம்பத்திரண்டு நூல்கள்‌ நல்கியவர்‌: தமிழ்‌ உரைநடைத்‌ தந்தையாகப்‌ போற்றப்படுகிறார்‌. இங்கிலாந்து நாட்டு ஆசர்‌, செக்கோசுலோ நாட்டைச்‌ சார்ந்த கமில்‌ சுவலபில்‌, சோவியத்து நாட்டு அலெக்குசாண்டர்‌ தூபியான்சுசி போன்ற சான்றோர்‌ பலர்‌ தமிழின்‌ பெருமையினையும்‌ இலக்கியச்‌ சிறப்பினையும்‌ உலகுக்கு ௮றிமுகம்‌ செய்த பெரியோர்‌ ஆவர்‌.

Saturday, September 07, 2024

உ.வே.சா.வின் என் சரித்திரம் 104 – மடத்திற்கு வருவோர்

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 103 – தேசிகர் சொன்ன பாடங்கள்-தொடர்ச்சி

)

மாணாக்க நிலையிலிருந்து நாங்கள் கற்று வந்த அக்காலத்தில் தேசிகர் கட்டளைப்படி ஆசிரிய நிலையில் இருந்து மடத்தில் உள்ள குட்டித் தம்பிரான்களுக்கும் மற்றவர்களுக்கும் தமிழ் நூல்களைக் கற்பித்தும் வந்தோம்.

என்னிடம் அக்காலத்திற் படித்த தம்பிரான்கள் சுந்தரலிங்கத் தம்பிரான். விசுவலிங்கத் தம்பிரான். சொக்கலிங்கத் தம்பிரான். பொன்னம்பலத் தம்பிரான். மகாலிங்கத் தம்பிரான், வானம்பாடி சுப்பிரமணியத் தம்பிரான். சிவக்கொழுந்துத் தம்பிரான் முதலியோர்.

வெள்ளை வேட்டிக்காரர்களுள் பேரளம் இராம கிருட்டிண பிள்ளை, சிவகிரிச்சண்முகத் தேவர். ஏம்பல் அருணாசலப் புலவர், சந்திரசேகரம் பிள்ளை, ஏழாயிரம் பண்ணை தாமோதரம் பிள்ளை, கோயிலூர்ப் பரதேசி ஒருவர், நெளிவண்ணம் சாமுப் பிள்ளை, திருவாவடுதுறைப் பொன்னுசாமி செட்டியார், திருவாவடுதுறைச் சண்முகம்பிள்ளை என்போர் முக்கியமானவர்கள். இவர்களில் இரண்டிரண்டு பேர்களாகப் பிரித்து ஒவ்வொரு வகைக்கும் அரை மணிமுதல் ஒருமணி வரையில் பாடம் சொல்வேன். அக்காலத்தில் என்னிடம் படித்தவர்களில் இப்போது இருப்பவர் திருவாவடுதுறையில் முக்கிய காரியத்தராக இருந்து ஓய்வு பெற்று அவ்வூரில் தெற்கு வீதியில் இருக்கும் சிரஞ்சீவி சண்முகம் பிள்ளை என்பவர் ஒருவரே. இவர்களைத் தவிர இடையிடையே மடத்துக்கு வந்து பாடம் கேட்டோர் சிலர்.

என்னிடம் பாடம் கேட்டவர்களிற் சிலர் என்னைக் காட்டிலும் பிராயத்தில் முதிர்ந்தவர்கள். ஆனாலும் அவர்கள் என்னிடத்தில் மிக்க மரியாதையோடும் அன்போடும் பழகி வந்தார்கள்; யாவரும் எனக்கு எவ்விதமான குறையும் வாராமல் பாதுகாக்கும் இயல்புடையவராகவே இருந்தார்கள்.

காவடிச்சிந்தை இயற்றியவராகிய சின்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் அக்காலத்தில் திருவாவடுதுறை மடத்தில் தமிழ் படிக்கலாமென்று வந்தார். சேற்றூர் மீனாட்சி சுந்தரக் கவிராயர் என்பவர் அவரை அழைத்து வந்தார். சுப்பிரமணிய தேசிகர் அவரை என்பால் ஒப்பித்தார். நான் அவருக்கு நன்னூலும், மாயூரப் புராணமும் பாடம் சொல்லி வந்தேன். அப்பொழுதே அவரிடத்தில் செய்யுள் இயற்றும் ஆற்றல் நன்கு அமைந்திருந்தது. யமகம், மடக்கு, திரிபு, சந்தம் முதலிய அமைப்புக்களோடு செய்யுட்களை வெகு விரைவில் இயற்றுவார். அவர் பாடம் கேட்டு வந்த போது இலக்கணத்தில் அவருக்கு மனம் செல்லவில்லை; சில காலம் இருந்துவிட்டு விடைபெற்றுத் தம் ஊருக்குப் போய்விட்டார்.

என்னுடன் இருந்த தந்தையார் மீண்டும் உடையார் பாளையம் பக்கம் போக எண்ணினார். ஒரு வேலையுமில்லாமல் திருவாவடுதுறையில் சும்மா இருக்க அவர் விருப்பவில்லை. என்னையும் உடனழைத்துச் செல்ல வேண்டுமென்ற விருப்பம் அவருக்கு இருந்தது. புராணப் பிரசங்கங்கள் செய்துகொண்டு நான் குடும்ப வாழ்க்கையை நடத்தி வரவேண்டுமென்ற அபிப்பிராயம் அவருக்கு மாறவில்லை. “இந்த ஊரில் நீ இப்படியே இருந்தால், நாங்கள் எங்கே இருப்போம்? உனக்கோ கலியாணமாகிவிட்டது. நீ குடும்பம் நடத்த வேண்டாமா? இது நல்ல இடந்தான். மனிதனுக்குச் சாப்பாடு மட்டும் போதுமா? எவ்வளவு நாள் நாங்கள் உன்னைப் பிரிந்து ஊர் ஊராகத் திரிந்த வாழ்வோம்? பண்டார சந்நிதிகளிடம் விடைபெற்று உன்னையும் அழைத்துப் போகலாமென்று எண்ணியிருக்கிறேன்” என்று அவர்சொன்னார். அவ்விதம் செய்யலாமென்றோ வேண்டா மென்றோ நான் சொல்லவில்லை. திருவாவடுதுறையை விட்டுப் பிரிய எனக்கு மனமில்லை. தாய்தந்தையரைப் பிரிந்திருப்பதும் வருத்தமாக இருந்தது. எதையும் துணிய மாட்டாமல் இருந்தேன்.

இப்படி இருக்கையில் ஒரு நாள் சுப்பிரமணிய தேசிகரிடம் என் தந்தையார் சென்று தாம் ஊருக்குச் செல்ல எண்ணியிருப்பதாகவும் என்னையும் தம்முடன் அழைத்துப் போக வேண்டுமென்றும் தெரிவித்தார். உடனே தேசிகர், “உங்கள் குமாரர் இனி நம்மிடத்திலே இருக்கவேண்டியவர். அவர் இன்னும் படிக்கவேண்டிய நூல்கள் இருக்கின்றன. அவற்றை நாமே பாடஞ் சொல்வோம். இங்கே படிக்க வரும் பிள்ளைகளுக்குப் பாடஞ் சொல்வதற்கு அவர் மிகவும் உபயோகப்படுகிறார். பிள்ளையவர்களிடம் கற்றகல்வி இனிமேல்தான் அதிகமாகப் பயன் தரப்போகிறது. நீங்கள் மாத்திரம் இப்போது ஊர் சென்று உங்கள் பாத்திரம் பண்டங்களை எடுத்துக்கொண்டு இங்கேயே ஸ்திரமாக வந்துவிடுங்கள். உங்களுக்கு வேண்டிய சௌகரியங்களெல்லாம் இங்கே கிடைக்கும்படி செய்வோம். வீடு கட்டிக் கொடுக்கிறோம். யாதொரு கவலையும் இல்லாமல் காவேரிக் குளியலும் சிவ பூசையும் செய்துகொண்டு சுகமாக இருக்கலாம்” என்று சொன்னார்.

தேசிகர் இவ்வாறு சொல்லி வரும்போது என் தந்தையாருக்கு வரவர சந்தோசம் அதிகமாயிற்று. அவர் தம்மையே மறந்தார். தேசிகர் பேசி நிறுத்தியவுடன் அருகில் ஒரு குத்துவிளக்கிலிருந்து இரண்ட புட்பங்கள் (பொறிகள்) கீழே விழுந்தன. “ஐயா, நல்ல சகுனமாகிறது. இவர் சௌக்கியமாக இருப்பார். நீங்கள் போய்ச் சீக்கிரம் வந்துவிடுங்கள்” என்று மீண்டும் தேசிகர் சொல்லி வத்திர மரியாதை செய்து செலவுக்குப் பத்து உரூபாயும் அளித்தார். இவற்றையெல்லாம் அருகில் இருந்து கவனித்து வந்த எனக்கு உள்ளந்தாங்கா மகிழ்ச்சி உண்டாயிற்று.

குடும்ப நிலையைப் பற்றியே சிந்தித்துச் சிந்தித்துக் கவலைக் கடலில் ஊறிப் போயிருந்த என் தந்தையாருக்கு எதிர்பாராதபடி அக்கவலை நீக்குதற்குரிய மார்க்கம் கிடைக்கவே அவர் பேரானந்தம் அடைந்தார். தேசிகரைப் பாராட்டிவிட்டு நேரே சாகைக்கு வந்தார். வரும்போதே, “என்ன பிரபு! என்ன பிரபு! இம்மாதிரி இடம் எங்குமில்லை. நாம் செய்த பூர்வ சன்ம புண்ணிய பலன் தான் இது” என்று சொல்லிக் கொண்டே வந்தார்.

“இப்போது நான் சாமாவை அழைத்துக்கொண்டு போகவில்லை. பரமேசுவரனுடைய கிருபை நம்மைக் காப்பாற்றுவதற்குச் சித்தமாக இருக்கிறது” என்று குதூகலத்தோடு தாயார் முதலியவர்களிடம் கூறித் தேசிகர் சொன்னவற்றையும் சொன்னார்.

அப்பால் ஒரு நல்ல நாளில் தந்தையார் எல்லாரிடமும் விடை பெற்று என் தாயாரையும் தம்பியையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டு உடையார் பாளையம் சென்றார்.

சுப்பிரமணிய தேசிகருடைய பூரணமான அன்பை வெளிப்படையாக உணர்ந்த நான் என் தந்தையார் பிரிந்து செல்வதனால் அப்போது வருத்தமடையவில்லை. அவர் போய் விட்டு மீட்டும் திரும்பி வந்து என்னோடு இருந்து வாசஞ் செய்வாரென்ற நம்பிக்கை என் மனத்தில் உறுதியாயிற்று. நாள்தோறும் மடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளே அதற்குக் காரணம். சுப்பிரமணிய தேசிகர் என்னிடம் அன்புடையவராயிருந்ததோடு நான் அவருடைய அன்புக்குப் பாத்திரமானவனென்பதை மடத்தில் உள்ளவர்களும், மடத்திற்கு வரும் பிரபுக்களும், வித்துவான்களும் தெரிந்து கொள்ளும்படியும் செய்தார்.

யாரேனும் பெரிய மனிதர்கள் வந்தால் அவ்வப்போது புதிய புதிய பாடல்களை இயற்றிச் சொல்லும்படி எங்களுக்குத் தேசிகர் கட்டளையிடுவார். நாங்கள் கற்றறிந்த நூல்களிலுள்ள பாடல்களைச் சொல்லிப் பொருளும் சொல்லச் செய்வார். தொல்காப்பியப் பாயிர விருத்தி, இலக்கண விளக்கச் சூறாவளி, சிவஞான பாசியம் முதலியவற்றில் சிறந்த பாகங்களை என்னைக் கொண்டு படிப்பித்து அவற்றை வந்தவர்களுக்குத் தாமே விளக்குவார். அவர் சொல்லுவது சுவையுடையதாக இருக்கும். நல்ல பாடல்களிலுள்ள பகுதிகளுக்குப் பதசாரம் சொல்வார். வந்தவர்கள் கேட்டு அவர் சொல்லும் முறையை வியந்து பாராட்டுவார்கள். அத்தகைய சமயங்களில் எங்களுக்குப் புதிய புதிய விசயங்கள் தெரியவரும். இவ்வாறு நிகழும் காலங்களில் பெரும்பாலும் படிக்கும் வேலையை நானே செய்து வருவேன். சில சமயங்களில் குமாரசாமித் தம்பிரானும் படிப்பார்.

மடத்திற்கு வரும் வித்துவான்கள் சுப்பிரமணிய தேசிகரைப் பாராட்டிப் பாடல்களும், கீர்த்தனங்களும், சுலோகங்களும் இயற்றிக்கொண்டு வருவார்கள். அவற்றைத் தேசிகர்பால் சொல்லிப் பொருளும் விரிவாகக் கூறுவார்கள். அவ்வாறு உள்ளவற்றில் தமிழ்ப் பாடல்களையும், தமிழ்க் கீர்த்தனங்களையும் நான் மீட்டும் படித்துக் காட்டுவேன். வேறு கனவான்கள் வருங்காலங்களில் அப்பாட்டுக்களைச் சொல்வேன். இப்பழக்கத்தால் அப்பாட்டுக்களிற் பெரும்பாலன எனக்குப் பாடமாயின. வடமொழி சுலோகங்களையும் தெலுங்குப் பத்தியங்களையும் தெரிந்து கொண்டு சொல்பவர் சிலர் இருந்தனர்.

கனவான்கள் தேசிகரைப் பார்க்க வந்து சம்பாசிக்கும் போதெல்லாம் பெரும்பாலும் கல்விசம்பந்தமான பேச்சே நடை பெறும். இடையிடையே பாடல்கள் சொல்வதும், பொருள் கூறுவதுமாகிய செயல்கள் நிகழும்போது, வந்தவர்களில் யாருக்கேனும் தமிழ்ப் பழக்கமே இல்லாவிடினும் அப்பால் அவருக்குத் தமிழன்பு ஏற்பட்டு விடும். “இந்த இடத்திற்குத் தமிழறிவு இல்லாமல் வருவது பெருங்குறை. அடுத்த முறை வரும்போது தமிழில் எதையாவது தெரிந்து கொண்டு வரவேண்டும்” என்று உறுதி செய்து கொள்வார்.

மடத்துக்கு முதல் முறையாக வரும் வித்துவான்கள் அங்கே பெறும் ஆதரவால் இரண்டா முறை வரும்போது கல்வி அறிவில் ஒரு படி உயர்வு பெற்று அதற்கு ஏற்ற பரிசைப் பெற வேண்டுமென்ற ஊக்கத்தைக் காட்டுவார்கள். வரும் கனவான்களோ அடுத்த முறை வரும்போது தாமும் தமிழ் நூல்களைப் பற்றி ஏதேனும் பேசுவதற்கு ஏற்ற பயிற்சியைச் செய்து கொண்டு வருவார்கள். இருவகையினரும் மடத்துப் பழக்கத்தால் இலாபத்தையே பெற்றனர்.

மாயூரத்தில் முன்சீபாக இருந்த வேதநாயகம் பிள்ளை சில முறை திருவாவடுதுறை மடத்துக்கு வருவதுண்டு. அப்பொழுதெல்லாம் அவர் சுப்பிரமணிய தேசிகர் விசயமாகப் பாடல்களை இயற்றி வருவார். அவற்றை நான் படித்துக் காட்டுவேன். எளிய நடையில், கேட்பவர்கள் விரைவிற் பொருளை உணர்ந்து இன்புறும் படி அப்பாடல்கள் இருக்கும். ஒரு கிறித்தவ கனவான் சைவ மடாதிபதியைப் புகழ்வதென்றால் அது மிகவும் அரிய செய்தி யன்றோ? அன்றியும் பொறுப்புள்ள அரசாங்க உத்தியோகம் ஒன்றை வகித்து வந்தவரும், பிறரை அதிகமாக இலட்சியம் செய்யாதவருமான வேதநாயகம் பிள்ளை பாடினாரென்பது யாவருக்கும் வியப்பை உண்டாக்கியது.

பிள்ளையவர்களுடைய மாணாக்கராகிய வேதநாயகம் பிள்ளை அப்புலவர் மூலமாகத் திருவாவடுதுறை மடத்தின் பெருமையையும், அதன் தலைவருடைய கல்வியறிவு ஒழுக்கச் சிறப்புக்களையும் உணர்ந்திருந்தார். தாமே நேரில் பார்த்தபோது அம்மடம் தமிழ் வளர்க்கும் நிலயமாக இருப்பதை அறிந்தார். இவற்றால் சுப்பிரமணிய தேசிகரிடம் அவருக்கு நல்ல மதிப்பு உண்டாயிற்று.

தேசிகரை அவர் பாராட்டி, “இங்கிலீசு பாசை தலையெடுத்து வரும் இக்காலத்தில் தமிழைப் பாதுகாத்து விருத்தி செய்ய நானென்று கங்கணங்கட்டிக்கொண்டாய்” என்ற கருத்தமைய ஒரு செய்யுள் பாடியிருக்கிறார். அது வருமாறு:-

வானென் றுதவ வருஞ்சுப்ர மண்ய வரோதயனே

தானென்று வெண்ணரன் பாசையிந் நாட்டிற் றலையெடுக்க

ஏனென்று கேட்பவ ரில்லாத் தமிழை இனிதளிக்க

நானென்று கங்கணங் கட்டிக்கொண் டாயிந்த நானிலத்தே.”

[வான்-மேகம். வெண்ணரன் பாசை-வெள்ளைக்காரர் பாசையாகிய ஆங்கிலம்.]

வேதநாயகம் பிள்ளை அவ்வப்போது பாடிய பாடல்கள் பல யாரேனும் மடத்திற்கு வந்தால் அவர்கள், “முன்சீப் வேதநாயகம் பிள்ளையவர்கள் சந்நிதானத்தைப் பற்றிப் பாடியிருக்கிறார்களாமே?” என்று கேட்பார்கள். உடனே தேசிகர் அப்பாடல்களைச் சொல்லும்படி எனக்கு உத்தரவிடுவார். நான் இசையுடன் சொல்லி அர்த்தமும் உரைப்பேன்.

தாது வருசத்தில் தமிழ் நாடெங்கும் கடுமையான பஞ்சம் உண்டாயிற்று. அப்போது அயலூரிலிருந்து உணவுக்கு வழியின்றி வந்தவர்களுக்கு வேலை கொடுப்பதற்காகச் சுப்பிரமணிய தேசிகர் பல புன்செய் நிலங்களை நன்செய்களாக்கினர். பல இடங்களில் கஞ்சித் தொட்டிகளை வைத்து சனங்களுக்குக் கஞ்சி வார்க்கச் செய்தார்.

அக்காலத்தில் தேசிகரைப் பாராட்டி வேதநாயகம் பிள்ளை பல பாடல்கள் பாடினர். அவற்றுள் ஒன்று வருமாறு:-

“எரியொத்த பஞ்ச மிடங்கரை யொத்த திடங்கர்பற்றும்

கரியொத் தனபல் லுயிர்களப் பஞ்சக் கராமடிக்க

அரியொத் தனன்சுப் பிரமணி யைய னரிசக்கரம்

சரியொத் தனவவ னீந்திடும் பொன்வெள்ளிச் சக்கரமே.”

[இடங்கர் – முதலை. கரா – முதலை. அரி – திருமால். பொன் சக்கரம் – பவுன். வெள்ளிச் சக்கரம் – உரூபாய்.]

சில சமயங்களில் அவர் சில பாடல்களைப் பாடி எனக்கு அனுப்பி, “இவற்றைச் சந்நிதானத்திடம் படித்துக் காட்டவேண்டும்” என்று கடிதமும் எழுதுவார். அக்கடிதம் செய்யுளாகவே இருப்பதும் உண்டு அவர் விருப்பப்படியே நான் செய்வேன்.

மடத்து நிருவாக சம்பந்தமாக ஏதேனும் கவனிக்க வேண்டுமாயினும், ஆங்கிலத்தில் விண்ணப்பம் முதலியன எழுத வேண்டுமாயினும் சுப்பிரமணிய தேசிகர் வேதநாயகம் பிள்ளைக்கு அதனைச் சொல்லியனுப்புவார். வக்கீல்கள் அதிகமாக மடத்திற்கு வந்து பழகும் காலமன்று அது. மிகவும் சுலபமாக விவகாரங்களைத் தீர்த்துக்கொள்ளும் வழக்கம் சுப்பிரமணிய தேசிகரிடம் அமைந்திருந்தது.

இவ்வாறு வேதநாயகம் பிள்ளையிடம் ஏதேனும் காரியம் இருக்குமானால் பெரும்பாலும் தேசிகர் என்னையே அனுப்புவார். நான் மாயூரஞ் சென்று அவர் வீட்டுக்குப்போய் அவரோடு பேசியிருந்து, சென்ற காரியத்தை முடித்துக் கொண்டு வருவேன். இங்ஙனம் போகும் சமயங்களிலெல்லாம் வேதநாயகம் பிள்ளை இயற்றிய புதிய பாடல்களை அவர் தம்பி மூலமாகப் பெற்றுப் படித்தும் படித்துக் காட்டியும் இன்புறுவேன். தமிழ் நூல் சம்பந்தமான விசயங்களைப் பற்றியும் பிள்ளையவர்களைப் பற்றியும் சம்பாசிப்போம். வேதநாயகம் பிள்ளை அதிகமாகப் பேசமாட்டார். பேசும் வார்த்தைகள் அர்த்த புசுட்டியுள்ளனவாக இருக்கும். உத்தியோகத்திலே இருந்து சிறப்புற்றவராதலின் ஒருவருடைய தாட்சண்யம் வேண்டுமென்று எதிர்பார்க்கும் நிலையில் அவர் இல்லை; அதனால் அவர் பலரோடு பழகுவதில்லை.

அத்தகையவருடைய பழக்கம் மடத்தின் சம்பந்தத்தால் எனக்கு உண்டாயிற்று. முதலிற் பழகும்போது உத்தியோகஸ்தராகிய அவரிடம் எங்ஙனம் பழகுவது என்ற அச்சம் இருந்தாலும் நாளடைவில் அச்சம் நீங்கியது; அவர் என்னிடம் மிக்க அன்போடு பழகினார். அவருடைய இறுதிக் காலம் வரையில் அப்பழக்கம் விட்டுப் போகாமல் விருத்தி அடைந்தது.

(தொடரும்)