(காலுடுவெல்லும் உலகளாவிய தமிழாய்வும் 2/4 –தொடர்ச்சி)

மேற்கூறிய பிற உலகமொழிகளோடு தமிழை ஒப்பிட்டு ஒப்புமைக் கூறுகளைக் காலுடுவெல் வெளிப்படுத்தியதன் விளைவாகத் தமிழ்மொழி குறித்து 19-ஆம் நூற்றாண்டு வரை நிலவிய குறுகலான எண்ணங்கள் தூள்தூளாகச் சிதைந்தன. தமிழக மண்ணின் அடிவரை ஆணிவேரை மிக ஆழமாகச் செலுத்தி உலகெங்கிலும் விழுதுகளைப் பரப்பி, விழுதுகள் தாங்கிப் பிடிக்கும் நிலையில் உலகெங்கும் கிளை பரப்பிய மிகப் பிரமாண்ட ஆலமரமாக காலுடுவெல்லின் ஆய்வால் தமிழ்மொழி காட்சிதரத் தொடங்கியது. சமற்கிருதத்தின் திரிந்த வடிவமாக 18-ஆம் நூற்றாண்டுவரை எண்ணப்பட்ட தமிழ்மொழி ஏறத்தாழ 50-க்கும் மேற்பட்ட உலக மொழிகளின் தாயாக உருமாற்றமெய்தும் வாய்ப்புக்கள் அரும்புவது மொழியியலாளர்களை வியப்படையச் செய்தது. நடு ஆசியாவில் தோன்றி மெல்ல மெல்ல பிராகுயி மொழி பேசப்படுகின்ற பலுச்சிசுத்தான் வழியாகத் தமிழ்மொழி நகர்ந்து சிந்து சமவெளி வழியாக இந்தியாவை வந்தடைந்திருக்க வேண்டும் என்பது கால்டுவெல்லின் கருத்து.

காலுடுவெல்லின் இந்தத் தொடக்கநிலை ஆய்வுகள் உலகளாவிய நிலையில் தமிழ்மொழி குறித்த பல்வேறு ஆய்வுகளுக்குப் பல புதிய களங்களை அமைத்துத் தந்தன. திராவிடவியலின் துணையின்றி இந்தியவியல் இயங்க முடியாது என்ற நிலைப்பாடு இந்தியவியலாய்வாளர்களிடம் மெல்லமெல்ல வலுப்பெறத் தொடங்கியது. காலுடுவெல்லின் தமிழாய்வு குறித்த முயற்சிகளில் பல குறைபாடுகளும் முரண்பாடுகளும் உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. தொடக்கநிலைப் படைப்புகளில் இவை இயல்பானவையே. எனினும் இது வலிமைமிக்க காளையின் வேகத்தோடு இணைந்த முழுமையான ஒரு கன்னி முயற்சி என்பதில் ஐயமில்லை. உலக நாகரிகத்தின் முன்னோடியாகத் திகழ்ந்த ஓர் இனத்தை – அடக்கு முறையால் நலிந்துபோன ஓர் இனத்தை, நானிலம் தொழும் அமரர்களாக எண்ணப்படும் நிலைக்கு உயர்த்திய கால்டுவெல்லின் இரசவாத முயற்சி-அற்புதத்திலும் அற்புதமான ஒரு புதுமை என்பதில் ஐயமில்லை.

சப்பானிய மொழி எந்த மொழிக்குடும்பத்தைச் சார்ந்தது என்பதை நிலைநாட்ட முடியாமல் சப்பானியர்கள் பல ஐயத்தை எழுப்பிக் கொண்டிருந்த காலம் அது. உருசிய தீபகற்பப் பகுதியில் பிறந்த உரல் அல்டெயிக்கு மொழிக்குடும்பத்தைச் சார்ந்ததுதான் சப்பானிய மொழி என்பதைக் காலுடுவெல் உறுதிப்படுத்தினார். சப்பானிய மொழி தமிழோடு உறவுடையது என்று 1856-இல் காலுடுவெல் வரைந்த குறிப்பு காலப்போக்கில் சப்பானிய-தமிழ்மொழி ஆய்வு மிகப்பெரிய களமாகப் பரந்து விரிய வித்திட்டது.

ஏறத்தாழ 120 ஆண்டுகள் நீறுபூத்த நெருப்பாகக் கிடந்த காலுடுவெல்லின் இந்த சிந்தனைகள் 1974-ஆம் ஆண்டு சப்பானிய அறிஞர்களிடம் புத்துயிர் பெறத் தொடங்கியது. 1974-ஆம் ஆண்டு பேராசிரியர் சுசுமே சிபா என்பவர் திராவிட மொழிகளுக்கும் சப்பானிய மொழிக்குமிடையில் காணப்பெறும் உறவுகளை ஆராய்ச்சிக் கட்டுரையாக வெளியிட்டார். 1988ஆம் ஆண்டு திராவிட மொழிகளும் சப்பானிய மொழியும் (Dravidian Language and Japanese) என்ற தலைப்பில் விரிவான நூலினை இவர் வெளியிட்டார். இவற்றைத் தொடர்ந்து அகிரா பூசிவாரா அவர்களின் தமிழ்-சப்பானிய உறவு தொடர்பான 14 ஆய்வுக்கட்டுரைகள் வெளிவந்தன. இக்கட்டுரைகள் தமிழுக்கும் சப்பானிய மொழிக்கும் இடையேயுள்ள நெருக்கமான உறவுகளைப் பறைசாற்றின. இக் கட்டுரைகளால் ஈர்க்கப்பட்ட மினாருகோ என்னும் சப்பானியப் பேராசிரியர் அலுடெயிக்கு மொழிக் குடும்பத்திற்கும் சப்பானிய மொழிக்கும் இடையேயுள்ள உறவை ஆய்ந்ததோடு நில்லாமல் தமிழுக்கும் அலுடெயிக்கு மொழிகளுக்கும் இடையேயுள்ள உறவுகளையும் ஆராயத் தொடங்கினார்.

சப்பான் நாட்டு முதுபெரும் மொழியியல் பேரறிஞர் பேராசிரியர் சுசுமோ ஓணோ இத்துறையில் ஆழமான ஆய்வுகளை இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளைச் சார்ந்த தமிழ்ப்பேராசிரியர்களோடு இணைந்து மேற்கொண்டபோது மொழி என்னும் எல்லையைத் தாண்டி, இலக்கியம், சமயம், வாழ்வியல் சிந்தனைகள் போன்ற பல துறைகளைத் தழுவி, தமிழ்-சப்பானிய உறவு குறித்த ஆய்வுகள் மலர்ந்தன. சப்பானிய காதல் கவிதைகளின் பழந்தொகுப்பான மன்யோசு. சங்க அகப்பாடல்கள், தமிழர்களின் பொங்கல், சப்பானியர்களின் கோசகட்சு விழா ஆகியன தொடர்பான ஆய்வுகள் உலகையே வியப்பில் ஆழ்த்தின. தமிழிலிருந்து சப்பானிய மொழியானது வரலாற்றுக்கு முற்பட்ட காலமான நெல் பண்பாட்டுக் காலத்தில் (Age of Rice Culture)  தோன்றியிருக்கலாம் என்ற பேராசிரியர் சுசுமோ ஓணோவின் ஆராய்ச்சி முடிவு மொழியியலாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. இந்த அரிய ஆய்வுக்களத்திற்கு அடிக்கல் நாட்டியவர் காலுடுவெல் என்பது குறிப்பிடத்தக்கது.

1856-இல் கொரிய-தமிழ் உறவு பற்றியும் காலுடுவெல் குறிப்பிட்டு அரிய இத்துறைக்கு கால்கோள் இட்டார். கொரிய-இந்திய அல்லது கொரிய-தமிழ்ப்பண்பாட்டு உறவு குறித்த ஆய்வுகள் வரலாற்று நிலையிலும் மொழியியல் கண்ணோட்டத்திலும் வளர்ச்சியடைய காலுடுவெல்லின் பார்வை ஓரளவிற்கு உதவியது எனலாம். பழைய கொரிய நாட்டு ஆவணங்கள் இந்திய நாட்டிலிருந்து வந்த பேரரசி ஒருத்தியால் கொரியப் பேரரசு தோற்றுவிக்கப்பட்டது என்ற அரிய வரலாற்றுச் செய்தியைத் தருகின்றன. இதன் விளைவாகப் பல்வேறு அறிஞர்கள் இந்த வரலாற்றைத் தேடும் ஆராய்ச்சி முயற்சியில் இறங்கத் தலைப்பட்டனர். அயோத்தியில் இருந்து இந்த அரசி வந்திருக்கலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் அயோத்தியில் அவருக்கு நினைவு மண்டபமும் இவர்களால் கட்டப்பட்டது. கொரிய-தமிழ்மொழி உறவு குறித்து ஆய்ந்த அறிஞர்கள் தென் தமிழகத்தின் நாகப்பட்டிணம் எனும் பகுதியிலிருந்து இந்த அரசி கொரிய நாட்டை நோக்கிப் பயணத்திருக்கலாம் என நம்புகின்றனர்.

மொழியடிப்படையில் கொரிய திராவிட உறவுகள் குறித்து விரிவாக ஆய்ந்து தம் ஆய்வினை 1905 ஆம் ஆண்டு அமெரிக்க நாட்டுத் தூதுவராகக் கொரிய மன்னர்களிடம் பணியாற்றிய  எச்சு.பி.ஈபருட்டு என்பவர் வெளியிட்டுள்ளார். அவர் எழுதிய Comparative Grammar of the Korean Language and the Dravidian Language of India என்ற நூல் இத்துறையில் மிகவும் குறிப்பிடத்தக்கது. பல காலங்களுக்குப் பின் 1990-இல் திரு காம் கில் ஊர் (Kang KiL-Ur) என்பவர் எழுதிய திராவிடமும் கொரிய மொழியும் என்ற நூலும் இந்த வரிசையில் மிகவும் சுட்டத்தக்கது. தற்போது பேராசிரியர் சங் -நம் கிம் என்பவரும் அவரைச் சார்ந்த பலரும் காலுடுவெல் தொடங்கி வைத்த இத்துறையில் பல்வேறு கோணங்களில் விரிவாராய்ச்சி செய்து  வருகின்றனர்.

(தொடரும்)