(உ.வே.சா.வின் என் சரித்திரம் 115: அத்தியாயம் 77. தொடர்ச்சி)

திருவாவடுதுறையில் இரண்டு மாதங்கள் தங்கியிருந்தேன். சுப்பிரமணிய தேசிகர் தாம் உத்தேசித்தபடியே திருப்பெருந்துறைக்கு வந்து சேர்ந்தார். சில தினங்களுக்குப் பிறகு தேசிகரிடமிருந்து தந்தையார் முதலியவர்களோடு திருப்பெருந்துறைக்கு வந்து சில காலம் இருக்க வேண்டுமென்று எனக்கு ஓர் உத்தரவு வந்தது. எங்களுக்கு வேண்டிய சௌகரியங்களைப் பண்ணுவித்து அனுப்ப வேண்டுமென்று காறுபாறு கண்ணப்பத் தம்பிரானுக்கும் திருமுகம் வந்தது. நான் என் தாய் தந்தையரை அழைத்துக்கொண்டு திருப்பெருந்துறையை நோக்கிப் புறப்பட்டேன். காறுபாறு தம்பிரான் சௌகரியங்கள் செய்து அனுப்பும்போது, “காட்டு மார்க்கமாக இருக்கும்; ஆனாலும் அங்கங்கே இருக்கும் மடபதிகள் கவனித்துக் கொள்வார்கள்” என்று என் தந்தையாரை நோக்கிக் கூறினார். நான், “நாட்டுச் சாலைவழியே போவதனால் அசௌகரியம் நேராது” என்று சிலேடையாகச் சொன்னேன். நாட்டுச் சாலை யென்பது நாங்கள் போகவேண்டிய வழியில் பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள மடத்துக்குரிய பெரிய கிராமம்.

நாங்கள் திருப்பெருந்துறையை அடைந்தோம். எங்களுக்காகத் தனி விடுதி ஒன்று அமைக்கப் பெற்றிருந்தது. சுப்பிரமணிய தேசிகரது தரிசனத்தையும் சல்லாபத்தையும் பெற எண்ணிப் பல பிரபுக்களும் வித்துவான்களும் வந்து வந்து சென்றார்கள். சிங்கவனம் சுப்பு பாரதியார், வேம்பத்தூர்ப் பிச்சுவையர், மணமேற்குடி கிருட்டிணையர், மேலகரம் திரிகூடராசப்பக் கவிராயர் முதலிய வித்துவான்களுடன் பழகி இன்புற்றேன்.

பிச்சுவையர்

பிச்சுவையர் சிறந்த ஆசுகவி. அவர் சுப்பிரமணிய தேசிகரைப் புகழ்ந்து தாம் நூதனமாக இயற்றிய பாடல்களையும் வேறு சமயோசிதப் பாடல்களையும் சொல்லிக் காட்டினார். நான் வினோதார்த்தமாகச் சில சில ஆட்சேபங்களைச் செய்தேன். அவர் சில சில இடங்களில் சிலேடையை உத்தேசித்து வார்த்தைகளின் உருவத்தை மாற்றியிருந்தார். இயல்பான இலக்கண வரம்புக்கு உட்படாமல் புறநடையின் சார்பை ஆராயவேண்டிய சில பிரயோகங்களைச் செய்திருந்தார். நான் ஆட்சேபித்தபோது சுப்பிரமணிய தேசிகர் அவ்வாட்சேபங்கள் உசிதமானவை என்பதைத் தம் புன்னகையால் தெரிவித்தார். பிச்சுவையர், “அவசரத்திற் பாடும் செய்யுட்களில் இவ்வளவு இலக்கணம் பார்த்தால் முடியுமா?” என்று சொல்லிவிட்டு உடனே பின்வரும் பாடலைச் சொன்னார்:

விஞ்சுதலை யார்சேட வித்தகனென் றாலுநின்முன்

அஞ்சு தலையுடைய னாவனால்-விஞ்சுபுகழ்க்

கோமுத்தி வாழ்சுப் பிரமணியக் கொண்டலே

மாமுத் தியைவழங்கு வாய்.”

(மிக்க தலையையுடைய ஆதிசேடனாக இருப்பினும் உன் முன்னால் ஐந்து தலையுடையவனாகிக் குறைவடைவான் என்றும், மேன்மையை உடைய ஆதிசேடனும் நின் முன்னால் பயத்தை யுடையவனாவான் என்றும் முன் இரண்டடிகளுக்கு இரண்டு பொருள்கள் தோற்றின. விஞ்சுதல் – மிகுதல்.]

அவ்வளவு விரைவில் சிலேடை நயம் தோற்றும்படி அவர் சொன்ன பாடல் எங்களைப் பிரமிக்கச் செய்து விட்டது.

ஒரு கனவான்

தேசிகரைப் பார்க்கவரும் கனவான்களிற் பெரும்பாலோர் தமிழ்க் கல்வி யறிவுடையவர்களாகவே இருப்பார்கள். தேசிகர் முன்னிலையில் எப்போதும் தமிழ் முழக்கம் விடாமல் இருப்பதை அறிந்த சிலர் அவர் திருவுள்ளக் குறிப்பை அறிந்து மாணாக்கர்களைப் பாடல்கள் சொல்லும்படி கேட்பதும் அவர்களை வினாவிப் பரீட்சை செய்வதும் உண்டு. கோட்டூரிலிருந்த பெருஞ் செல்வராகிய இரங்கசாமி முதலியாரென்னும் கனவான் தம் குடும்பத்தோடும், உறவினர்களோடும் ஸேதுசுநானத்திற்குச் சென்று திரும்புகையில் திருப்பெருந்துறைக்கு வந்து தேசிகரைத் தரிசித்துக் கொண்டார். அவர் நல்ல தமிழ்ப் பயிற்சியுடையவர். அவருடன் வந்திருந்த வேறொரு கனவான் பல தமிழ் நூல்களில் சிறந்த பயிற்சியுடையவராகத் தோன்றினார். கம்பராமாயணத்தில் நல்ல பழக்கம் அவருக்கு இருந்தது. அவர்கள் தேசிகருடன் பேசிக்கொண்டிருந்தபோது தேசிகர் மாணாக்கர்களை அழைத்து அவர்களுக்குப் பழக்கம் செய்வித்தார். அக்கனவான் கம்ப ராமாயணத்தில் எங்களைச் சில கேள்விகள் கேட்டார். அக்கேள்விகளிலிருந்தே அவருடைய கல்வியறிவு புலப்பட்டது. பெரும்பாலும் என்னையே வினாவினார். நான் திருப்தியாக விடையளித்தேன்.

புராண பாடம்

காஞ்சிப் புராணத்தை ஒருமுறை பாடங் கேட்க வேண்டுமென்ற விருப்பம் எனக்கு உண்டாயிற்று. பிள்ளையவர்கள் காலத்தில் புத்தகம் கிடைக்காமையால் அதை நான் படிக்க முடியவில்லை. அது குறையாகவே இருந்தது. அந்நூலின் முதற் காண்டம் சிரீ சிவஞான முனிவராலும் இரண்டாங் காண்டம் சிரீ கச்சியப்ப முனிவராலும் இயற்றப் பெற்றவை. என் விருப்பத்தைச் சுப்பிரமணிய தேசிகரிடம் தெரிவித்தபோது அவர் ஏட்டுப் புத்தகத்தை வருவித்து அளித்துச் சின்னப்பண்டார சந்நிதியாகிய சிரீ நமசிவாய தேசிகரிடத்திற் பாடங் கேட்கலாமென்று சொன்னார். அப்படியே கேட்கத் தொடங்கினேன்.

நமசிவாயதேசிகர் பிள்ளையவர்களிடம் படித்தவர். எப்பொழுதும் தமிழ் நூல்களை ஒழுங்காக ஆராய்ந்து படித்துவருபவர். சைவசாத்திர நுட்பங்களை நன்கு உணர்ந்தவர். மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்வதையே பொழுது போக்காக உடையவர். அவரிடம் தினந்தோறும் காஞ்சிப் புராணத்தைப் பாடம் கேட்டு வந்தேன். சிவஞான முனிவர் வாக்குக்கும் கச்சியப்ப முனிவர் வாக்குக்கும் மிக்க வேற்றுமை உண்டு. சிவஞான முனிவர் வாக்கில் கருத்தும் கவியும் ஒன்றோடு ஒன்று பின்னிச் செல்கின்றன. இயல்பாகச் செல்லும் கவியின் கதியில் கருத்துகள் தாமே வந்து பொருந்திச் சுவைபட இசைந்து நிற்கின்றன.

இரண்டாங் காண்டத்தில் கச்சியப்ப முனிவர் தம் அறிவாற்றலை வெளிப்படுத்தியிருக்கிறார். சங்க நூல்களிலுள்ள கருத்துகளையும் சொற்களையும் எடுத்து ஆளுகின்றார். இலக்கண மேற்கோளாகக் காட்டப் பெறும் அரிய சொற்றொடர்ப் பிரயோகங்களை அவர் வாக்கிலே மிகவும் காணலாம். சிவஞான முனிவர் வாக்கில் நம்மை மறந்த இன்பம் உண்டாகிறது. கச்சியப்ப முனிவர் வாக்கில் அவரது உன்னதமான அறிவாற்றலை நினைந்து வியப்படைகிறோம். காஞ்சிப்புராணம் பாடம் கேட்டு முற்றுப்பெற்றவுடன் கச்சியப்ப முனிவர் வாக்காகிய பேரூர்ப் புராணத்தைக் கேட்டேன். அது முடிந்தவுடன் மீட்டும் ஒரு முறை அவ்விரண்டு நூல்களையும் பாடம் கேட்டேன்.

மாணிக்கவாசகர் ஆலய கும்பாபிசேகம்

அக்காலத்தில் திருப்பெருந்துறைக் கட்டளை விசாரணை செய்து வந்த சிரீ சுப்பிரமணியத் தம்பிரான், கோயில் முகற்பிராகாரத்தின் மேல்புறமாக ஓர் ஆலயம் கட்டுவித்து அதில் மாணிக்கவாசகர் திருவுருவத்தைப் பிரதிட்டை செய்து கும்பாபிசேகம் நடத்தினார். மகா வைத்தியநாதையர் தமையனாராகிய இராமசாமி ஐயர் முன்பே பெரிய புராணக் கீர்த்தனம் இயற்றியிருந்தார். அதில் சைவ சமயாசாரியர்களாகிய மூவர் சரித்திரமும் அடங்கியுள்ளன. நான்கு சைவசமயாசாரியர்களில் மாணிக்கவாசகர் சரித்திரம் தமிழ்க் கீர்த்தனையாக இராமையால் அதனை அவர் தனியே கீர்த்தனை உருவத்தில் இயற்றி அங்கே அரங்கேற்றினார். அப்போது கும்பாபிசேகச் சிறப்பைப் பற்றியும் மாணிக்கவாசகர் சரித்திரத்தைப் பற்றியும் நாங்கள் தனித்தனியே பல பாடல்கள் இயற்றிப் படித்துக் காட்டினோம்.

திருப்பனந்தாள்

பிறகு திருவாவடுதுறைக்குப் புறப்படவேண்டும் என்று தீர்மானித்த தேசிகர் அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யலாயினர். என் தாய் தந்தையரைத் திருவாவடுதுறைக்கு முன்னதாக அனுப்பிவிட்டு நான் மாத்திரம் தேசிகருடன் இருந்தேன். திரும்புகையில் திருப்பனந்தாளுக்கு எழுந்தருள வேண்டும் என்று இராமலிங்கத் தம்பிரான் விண்ணப்பித்துக் கொண்டமையால் தேசிகர் அவர் விருப்பத்துக்கிணங்கித் திருப் பெருந்துறையிலிருந்து பரிவாரங்களுடன் புறப்பட்டு வழியே உள்ள பல ஊர்களிலும் அடியார்கள் செய்யும் உபசாரத்தைப் பெற்றுக் கும்பகோணத்தின் வழியாகத் திருப்பனந்தாளை அடைந்தார்.

சுப்பிரமணிய தேசிகர் வரவையறிந்து சாலையின் இருபுறங்களிலும் பல கல் தூரத்திற்கு வாழை மரங்களும் தோரணங்களும் கட்டி இராமலிங்கத் தம்பிரான் அலங்காரம் செய்திருந்தார். திருப்பனந்தாள் மடத்திற்குள் ஒரு பெரிய பங்களாவை மூங்கிலால் அமைத்தார். அதைப் பார்த்தபோது கற்கட்டிடம் போலவே தோற்றியது. சுப்பிரமணிய தேசிகர் அங்கே தங்கினார். சிரீ இராமலிங்கத் தம்பிரான் செய்த உபசாரம் இன்னபடியிருந்தது என்று சொல்வதற்கரியது. பாட்டுக் கச்சேரிகள் நடைபெற்றன. பல தமிழ் வடமொழி வித்துவான்கள் வந்து சுப்பிரமணிய தேசிகர் அங்கே எழுந்தருளிய சிறப்பைப் பாராட்டிப் பாடினார்கள். நானும் வேறு மாணாக்கர்களும் தேசிகரையும் இராமலிங்கத் தம்பிரானையும் புகழ்ந்து பல பாடல்கள் இயற்றினோம். எல்லாம் ‘பல புலவர் செய்யுட் டிரட்டு’ என்ற பெயரோடு சேர்க்கப் பெற்று ஒரு புத்தக வடிவமாக அக்காலத்தில் அச்சிடப்பெற்றன

திருவாவடுதுறை திரும்பியது

திருவாவடுதுறை ஆலய உத்சவமும் குருபூசையும் சமீபித்தமையால் தேசிகர் பல நாட்கள் திருப்பனந்தாளில் தங்க முடியவில்லை. சில நாளிருந்து பிறகு புறப்பட்டுத் துறைசையை அடைந்தார். குரு பூசை முதலியன சிறப்பாக நடைபெற்றன. தேசிகர் யாத்திரையினால் நேர்ந்த சிரமத்தை ஆற்றிக் கொண்டும் வழக்கமாக நடை பெறுவனவற்றைக் கவனித்தும் வந்தார். யாத்திரையினிடையே அங்கங்கே சந்தித்துப் பழகிய பல கனவான்களுக்குக் கடிதங்கள் எழுதச் செய்தார். இடையிடையே மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்வதும் உண்டு.

பாடம் கேட்டல்

ஒய்ந்த நேரங்களில் நமசிவாய தேசிகரிடம் நான் தமிழ்நூல்களைப் பாடம் கேட்டு வரலானேன். மாணாக்கர்கள் பலருக்குப்பாடமும் சொல்லி வந்தேன். நமசிவாய தேசிகர் சிறிதும் ஓய்வின்றிப்பாடம் சொல்லுவார். அதில் அவருக்குச் சலிப்பே இராது. மற்றவர்களுக்கு அவர் பாடம் சொல்லும்போதும் நான் உடனிருந்து கேட்டு வருவேன். அவர் விருப்பப்படி நானும் அவர் முன்னிலையில் சிலருக்குப் பாடம் சொல்வேன். எந்த விசயத்திலும் கண்டிப்பாக இருக்கும் அவர் பாடம் சொல்லும் போது நான் இராவிட்டால் உடனே அழைத்து வரச் செய்வார்.

ஊசி மிளகாய்

ஒரு நாள் பகற்போசனத்திற்கு மேல் தெற்குக் குளப்புரைத் தோட்டத்தில் நமசிவாய தேசிகர் சில மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லி வந்தார். உண்ட இளைப்பால் நான் ஓரிடத்தில் படுத்து உறங்கி விட்டேன். பாடம் நடைபெறும்போது நான் அருகில் இராமையைக் கண்ட நமசிவாய தேசிகர் உடனே என்னை அழைத்து வரும்படி ஒருவரை அனுப்பினார். அவருடைய ஆஞ்ஞையை மறுத்துப் பேச யாருக்கும் தைரியம் இராது. என்னை அழைக்க வந்தவர்கள் நான் தூங்கின இடத்தை அடைந்தார். அயர்ந்து தூங்கிய என்னைக் கூப்பிட்டுப் பார்த்தார்; நான் எழவில்லை பிறகு தட்டி எழுப்பினார்.விழித்துக் கொண்டேன். ஆயினும் எனக்கிருந்த சிரமம் நீங்கவில்லை; பாதித் தூக்கத்தில் எழுந்தமையால் சிரமம் அதிகமாயிற்று.

“பிறருடைய கஷ்டம் தெரியவில்லையே; இப்படி நிர்ப்பந்திக்கிறார்களே!” என்ற எண்ணம் எனக்கு உண்டாயிற்று. என் வருத்தத்தை நான் வெளிப்படுத்த முடியுமா? அல்லது அப்போது போகாமல் தான் இருக்க முடியுமா? நான் நடந்து சென்றேனே ஒழிய என் கால்கள் தள்ளாடின. கண் இமைகளைத் தூக்கத்தின் கனம் கீழே இழுத்தது. போகும் வழியில் ஊசி மிளகாய்ச்செடி ஒன்றிருந்தது. அதிலிருந்து ஒரு பழத்தைப் பறித்துக் கசக்கி என் கண்களில் தடவிக் கொண்டேன். எனக்கிருந்த வருத்தம் மேல் விளைவை எண்ணாத நிலையில் என்னை வைத்தது. மிளகாயைத் தடவிக்கொண்டதுதான் தாமதம்; கண்கள் முழுவதும் ஒரே எரிச்சலாக எரிய ஆரம்பித்து விட்டன. தேளுக்கு அஞ்சிப் பாம்பின் வாயிலே புகுந்த கதையாயிற்று என் நிலை. என்னால் மேலே நடக்க முடியவில்லை. கீழே உட்கார்ந்து விட்டேன். என்னுடைய செய்கையை அறிந்து யாவரும் வருந்தினார்கள். என் நண்பர்கள் மாத்திரம் எனக்கு அப்போது எவ்வளவு சிரமம் இருந்திருக்க வேண்டுமென்பதை ஊகித்துக் கொண்டனர்.

சைவ சாத்திரம் கேட்டல்

நமசிவாய தேசிகர் பாடம் சொல்லும்போது சைவ சாத்திர விசயங்கள் வந்தால் அவர் மேற்போக்காகச் சொல்லிவிட்டு விடுவார். சைவ சித்தாந்த நூல்களைத் தனியே படிக்க வேண்டுமென்பது அவர் கருத்து. பிள்ளையவர்களிடம் நான் பாடம் கேட்ட காலத்தில் அங்கங்கே வரும் சாத்திரக் கருத்துகளை நன்றாகத் தெரிந்து கொண்டேன். சுப்பிரமணிய தேசிகர் யாருக்கேனும் சிவஞான போத பாசியத்தைச் சொல்ல நேரும்போது என்னையே படித்துக்காட்டச் சொல்வார். இருப்பினும் சிவஞான போதச் சிற்றுரை முதலிய சித்தாந்த சாத்திரங்களை முறையாகக் கேட்டால் நலமாக இருக்குமென்பது என் எண்ணம்.

நமசிவாய தேசிகருக்கு ஓய்வு இல்லை. என் கருத்தைச் சிரீ சுப்பிரமணிய தேசிகர் எப்படியோ உணர்ந்தனர். என்னை ஒரு நாள் அழைத்து, “நாமே உமக்குச் சிற்றுரை முதலியவற்றைப் பாடம் சொல்வோம். படிக்க வேண்டுமென்ற ஆவலுள்ள உம்மை விடத் தக்க பாத்திரம் வேறு யார் இருக்கிறார்கள்?” என்று சொல்லிச் சித்தாந்த நூல்களை முறையாகக் கற்பிக்கக் ஆரம்பித்தார். சிவஞான போதச் சிற்றுரை, சிவஞான சித்தியார் பொழிப்புரை முதலிய பல நூல்களையும், வேறு சில கருவி நூல்களையும் கேட்டு எனக்குள்ள குறையை நிவர்த்தி செய்து கொண்டேன்.

(தொடரும்)