இலக்குவனார் போலே இன்னொருவர் இதுவரையில் இல்லை
அன்னைத்தமிழ் அரும்புதல்வர் அவனிதனில் நிறைந்திருக்க
திண்ணைதனில் காத்திருந்து தன்வழியென வீற்றிராது
உணர்வுடைத்த உளத்தோடு உயிரெனவே உரமூட்டும்
தமிழினமே தரணியிலே தகைமையெனச் சான்றுடைத்து
ஆக்கமும் ஊக்கமுமாய்
ஆண்டாண்டு ஒளிர்ந்திட்ட
அன்பறமும் அறிவொளியும் அமைந்தநல் தொன்மையாய்
சிந்தைகுளிர் சொல்லுடைத்து செவ்விதழில் சிறப்புடைத்த
வண்டமிழின் வாழ்விற்கு வளமுடைத்து காத்திடவே
மொழிகளது வரிசையிலே முக்கனிகள் தோற்றோட
தென்றலது மென்மையிலே புயல்கூட வெட்கமுற
ஆழ்மனத்துச் சிந்தையிலே ஆக்கமுற நிறைந்தவளாய்
அறிவார்ந்த இனத்தோரின் அகங்குளிர வேண்டுமென
உளமார்ந்த உழைப்பாலே உரமிட்டுத் தமிழ்காத்த
தகைமைசார் தமிழரிடை தானுமுண் டெனக்கூறும்
நிலைதனையே உணர்த்திட்டு நோக்குதல் தேவையில்லை
இலக்குவனார் என்றேதான் இனிதாகப் பெயருடைத்த
தண்டமிழின் சிறப்பிற்காய்த் தனையீந்த பெருமகனார்
தனதுநலந் துறந்திட்டு தமிழ்மணக்கப் பேசியவர்
பேராற்றல் பெருகியதோர் பேராசான் என்றாகி
போர்முழக்கப் பாதைதனில் புரட்சிவிதை தூவியதால்
புலமைக்குக் காட்டாக பண்பாட்டுச் சிற்பியெனப்
படைப்புகளால் அறிந்திடவே பலவற்றைத் தந்ததனால்
தமிழறிஞர் வரிசையிலே தனியிடத்தைப் பெற்றனரே
ஓரித்தில் நில்லாது நூறிடத்தில் மாற்றமிட்டு
குதித்தோடும் பந்தெனவே கலங்கடித்த வரலாறும்
கலங்கித்தான் கிடக்கிறது கிஞ்சித்தும் ஓயவில்லை
கிள்ளைமொழி வளத்தினிலே கண்களிலே மகிழ்வுடைத்தார்
தொன்மைக்குத் தொல்காப்பியத் தரவுகளைச் சொன்னாலும்
காப்பியத்தின் காலமல்ல வள்ளுவத்தின் காலமதே
சாதியெனும் சொல்லொன்று சமவெளியில் விளைச்சலிட
முன்னேராய் வந்தயினம் முடங்கித்தான் கிடக்கிறதே
முயற்சியின்றித் தரைதனிலே மண்டியிட்டு மடிகிறதே
படைப்புவழிச் சிந்தனையால் பண்டைத்தமிழ் பரப்பிட்டு
வள்ளுவத்தின் வழிதனிலே வாழ்க்கைநெறி உரைத்திட்டு
இல்லறத்தின் பெருமைதனை இயம்பித்தான் மறைந்திட்டு
துறவறத்தின் வழிதனிலும் தூய்மையது இல்லறமே
தலைவனவன் துணையென்று தலைவிதனைப் புகழ்ந்திட்டார்
குறள்வழியே வாழ்விற்குக் கரையொன்றும் வகுத்திட்டார்
மாந்தரினம் பெருமையுற மன்னவனும் மகிழ்ச்சியுற
வள்ளுவத்தின் பாதையிலே வழங்கிட்ட அரசியலை
வரிவரியாய் விலக்கிட்டு வகைவகையாய் எடுத்துரைத்தார்
வாழ்க்கையெலாம் தனக்கன்றி வேறெவர்க்காய் வாழ்ந்திட்டார்?
காலங்கள் கடந்தாலும் கருத்தாழம் கொள்வதற்கு
தம்மக்கள் யாவருக்கும் தமிழுணர்வு ஊட்டியதால்
உணர்வூட்டி உரமுடைத்த உயர்ந்தநெறி பரப்பியதால்
மாண்பமைந்த மறைமலையார் மதிப்புடைத்த திருவள்ளுவர்
மக்களெனக் கொண்டதனால்
மாண்புடைத்து வாழ்கின்றார்
அவருடைத்த அகரமுதலி அவதரித்த வேளையிலே
அறியாமல் இருந்தாலும் அமராமல் ஒளிர்கிறது
அன்னைத்தமிழ் சிறப்பிற்கு அடிநாதம் இசைக்கிறது
தெள்ளுதமிழ் வளர்ப்பதற்கு தென்றலெனப் பொழிகிறது
தேமதுரத் தமிழோசை திகட்டாமல் இனிக்கிறது
தன்காலம் மறைந்தாலும் தந்தைபுகழ் பரப்புகின்ற
தகைமைசால் செயலுடைக்கும் தமிழாய்ந்த பிள்ளைகளும்
இலக்குவனார் படைப்பினிலே இனிதெனவே தெரிகிறது
இவர்போலே இன்னொருவர் இதுவரையில் இல்லையென
ஏங்கித்தான் தவிக்கிறது ஏனென்றும் வியக்கிறது
காலங்கள் கரைந்தாலும் கனவுகளாய் மறைந்தாலும்
விளைந்திட்ட பயிராக ஒளிர்கின்ற விளக்காக
தமிழ்போலே தழைத்திடுவார் தமிழறிஞர் இலக்குவனார்
– பாவரசு முனைவர் வதிலை பிரதாபன்
தலைவர்
மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம்