Monday, July 06, 2009

சீர்காழி தமிழிசை மூவர் விழாஇசை உலகின் ஆதிமும்மூர்த்திகள் என்றுஅனைவராலும்போற்றப்படும் சீர்காழி தமிழிசை
மூவர்களாகிய அருள்மிகு முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை, அருணாசலக்கவிராயர் ஆகியோர் காலத்தால் திருவாரூர் மூவர்களுக்கு முற்பட்டவர்களாவர்.
கீர்த்தனை என்ற இசை வடிவத்திற்கு இவர்கள் மூவரும் கொள்ளிட நதிக்கு தென் கரையிலும், வடகரையிலும் சற்றுத் தொலைவில் உள்ள சீர்காழி, சிதம்பரம் ஆகிய எல்லைக்குள் வாழ்ந்து சிறப்பித்தவர்கள். சீர்காழி சட்டைநாதர் திருத்தலத்திலேயே தேவாரப் பாடல்களை அருளினர். இத்தகைய புகழ் பெற்ற சீர்காழி சட்டைநாதர் திருத்தலத்திலேயே தேவார மூவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் அவதரித்து, ஞானப்பாலுண்டு, அரிய பொக்கிஷமான தேவாரப் பாடல்களை அருளினார். இத்தகைய புகழ் பெற்ற சீர்காழி தலத்தில் தமிழிசை மூவர்கள் சிறப்பு வாய்ந்த பல தமிழிசைப் பாடல்களைப் பாடி மக்களிடையே பரவச் செய்தார்கள். இவர்களுடைய இசைப் பாடல்கள் வாயிலாக இசைத் தமிழ் எவ்வகையில் வளம் பெற்றது என்பதை நாம் அறிய முடியும். அருள்மிகு முத்துத்தாண்டவர் (வாழ்ந்த காலம் சுமார் கி.பி. 1522-1625): முத்துத்தாண்டவர் சிறு வயதிலேயே மிகுந்த இறை பக்தியுடனும், இசை, நடனம், சிவநாம சங்கீர்த்தனத்தில் ஈடுபாட்டுடனும் வாழ்ந்தார். இவர் இசை வேளாளர் மரபில் பிறந்தவர். ஆதலால், நாகசுர இசையில் இயற்கையாக ஈடுபாடு இருந்தது. இசை ஞானமும் இயல்பாக அமைந்தது. இவருக்கு இளமையிலேயே கொடிய குன்ம வியாதி பிடித்ததால் குலத் தொழிலாகிய நாகசுரம் இசைக்க இயலாமல் போனது. இவருடைய இயற்பெயர் தாண்டவன். இவர் கடவுள் பக்தி அதிகமுடையவர். ஆதலால், சீர்காழியில் வசித்த ஓர் உருத்திர கணிகையின் வீட்டிற்குப் போய் அதிக நேரம் செலவிட்டு ஆடலிலும், பாடலிலும், சிவநாம சங்கீர்த்தனத்திலும் பொழுதைக் கழித்ததால், அவர் வீட்டில் உள்ள அனைவரும் அவரை வெறுத்து ஒதுக்கினர். எனவே, அவர் வீட்டுக்குச் செல்வதைத் தவிர்த்து, கோயிலில் உறங்கியபோது குருக்களின் பத்து வயதுப் பெண் உருவில் அம்பிகை வந்து, அவருடைய பசியைப் போக்கியதோடு, சிதம்பரம் நடராஜர் கோயில் சென்று பக்தர்களின் கூட்டத்தில் வரும் முதல் வார்த்தையை வைத்துப் பாடினால் கொடிய குன்ம வியாதி தீரும் என்று தாண்டவனுக்கு அருளினார். அதன்படி, சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர் ஒருவர் மூலம் "பூலோக கைலாச கிரி சிதம்பரம்' என்ற சொல் வர, முதல் பாடலாக பவப்ரியா ராகத்தில் ஜம்பை தாளத்தில் கீர்த்தனை வடிவில் பாடினார். நிறைவாக, சிவபெருமான் பஞ்சாட்சரப் படியின் மேல் ஐந்து பொற்காசுகள் தோன்றச் செய்து தினமும் பாடி காசுகள் பெற்றுக் கொள்ளும்படி கட்டளையிட்டு அருளினார். அவ்வாறு சிறப்புகளைப் பெற்று பல அற்புதங்களை நிகழ்த்தி, முத்துத்தாண்டவர் இயற்றிய பாடல்கள் 60 நமக்குக் கிடைத்துள்ளது. இதில் 25 பதங்களும் அடங்கும். இது அகப்பொருளை உணர்த்தும் காதலைப் பற்றி அமைந்துள்ளது. பரதநாட்டியத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆடிக்கொண்டார், சேவிக்க வேண்டுமய்யா, மாயவித்தையைச் செய்கிறானே போன்ற கீர்த்தனைகள் மிகவும் புகழ் பெற்றவையாகும். இவர் கீர்த்தனையின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். அருள்மிகு மாரிமுத்தாப்பிள்ளை (வாழ்ந்த காலம் சுமார் 1712- 1787): முத்துத்தாண்டவர் போலவே தில்லை நடராஜர் மேல் பல கீர்த்தனைகளையும், பதங்களையும் பாடியவராக விளங்கியவர் இயலிசைப் புலவர் மாரிமுத்தாப்பிள்ளை. இவர் தில்லைவிடங்கன் என்ற சிற்றூரில் பிறந்தவர். இவர் சிவகங்க நாதர் என்பவரிடம் தமிழ்க் கல்வி, சமயக் கல்வி பெற்று தக்க குருவிடம் சமய தீட்சை பெற்றார். இவருடைய மூத்த பிள்ளை உடல்நலக் குறைவால் வருந்திய போது, இறைவன் இவரது கனவில் தோன்றி "நம் மீது நீ பாட்டுப் பாடினால் உன் கவலை நீங்கும்' என்றார். பிறகு, அன்று முதல் இறைவன் மேல் பாடுவதே தொண்டாகக் கொண்டு இவர் புலியூர் வெண்பா, சிதம்பரேசர், விறலிவிடு தூது, தில்லைப் பள்ளு, வண்ணம் மற்றும் பல பதிகங்களை இயற்றினார். இவர் இயற்றிய புலியூர் வெண்பா சென்னை பல்கலைக்கழகப் பாடத் திட்டத்தில் பல காலம் தமிழ்ப் பாடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இவர் சிறந்த இசை நூல் ஆசிரியர் மட்டுமன்றி சிறந்த இலக்கியகர்த்தாவும் ஆவார். இவர் இயற்றியது தில்லைவிடங்கன் அய்யனார், நொண்டி நாடகம், விடங்கேசர் பதிகம், தனிப் பாடல்கள், அநீதி நாடகம். கிடைத்தது 25 கீர்த்தனங்கள். புலியூர் வெண்பா, தில்வைவிடங்கன் பற்றி இரு தனித் தோத்திரப் பாக்களும் உள்ளன. ஏனையவை பற்றித் தெரியவில்லை. அருள்மிகு அருணாசலக் கவிராயர் (வாழ்ந்த காலம் சுமார் கி.பி. 1711-1778): இவர் இசைத் தமிழில் விசித்திரமான அமைப்புகளை எல்லாம் நிரூபித்துக் காட்டியவர். தேவார மூவரில் திருஞானசம்பந்தர் அவதரித்த சீர்காழிப் பதியே அருணாசலக் கவிராயரையும் உலகிற்குக் காட்டியது. தமிழிசையில் சீர்காழி மூவரில் நடு நாயகமாய் விளங்கிய அருணாசலக் கவிராயர் ராமபிரானைப் பற்றி பல கீர்த்தனைகள் இயற்றியுள்ளார். மற்ற இருவரும் சிதம்பரம் நடராஜர் பற்றியே பாடியுள்ளனர். இவர் திருக்கடையூர் அருகிலுள்ள தில்லையாடி என்ற சிற்றூரில் பிறந்தவர். இவருக்கு 12 வயதான போது பெற்றோரை இழந்து, இவருடைய தமயனாரின் அரவணைப்பில் வளர்ந்து, தருமபுர ஆதீனத்திலும், அம்பலவாணக் கவிராயரிடமும் சமயக் கல்வியும் பிறவும் கற்றதோடு, வடமொழி ஆகமங்களையும் கற்றுத் தேறினார். இவர் 12 ஆண்டுகள் தில்லையாடியிலும், 25 ஆண்டுகள் சீர்காழியிலும் வாழ்ந்தார். தனது 60-வது வயதில் ராம நாடக கீர்த்தனைகளைப் பாடி முடித்தார். சீர்காழிப் பள்ளு, சீர்காழிப் புராணம், சீர்காழிபக் கோவை, சீர்காழிக் கலம்பகம், சீர்காழி அந்தாதி, தியாகேசர் வண்ணம், சம்பந்தர் பிள்ளைத் தமிழ், அனுமார் பிள்ளைத் தமிழ் முதலிய நூல்கள் பலவற்றை இயற்றினார். இவற்றுள் சிலவே இன்று கிடைத்துள்ளன. பாமர மக்கள் பார்த்தும், கேட்டும் அனுபவிப்பதற்கு என்றே எழுதப்பட்ட நூல் ராம நாடக கீர்த்தனையாகும். இதில் இசைப் பகுதிகள் 258, தரு என்ற வகை கீர்த்தனை 197, திபதை 60 (திபதை என்பது 2 அடி கண்ணிகளால் ஆன இசைப் பாட்டு), தோடையம் 1 (தோடையம் என்பது 4 அடி கொண்ட ஒருவகை விருத்தப் பாட்டு). தோடையம் என்பது கடவுள் வணக்கமாகப் சொல்லப்படும் பாட்டு ஆகும். ஏன் பள்ளி கொண்டீர் அய்யா, காண வேண்டும் இலட்சம் கண்கள், யாரோ இவர் யாரோ போன்ற கீர்த்தனைகள் இன்றும் பிரபலமாகத் திகழ்கின்றன. 40 ராகங்களை தனது பாடல்களில் பயன்படுத்தியுள்ளார். இவர் துவஜாவந்தி, மங்கல கௌசிகம், சைந்தவி போன்ற அபூர்வ ராகங்களையும் பயன்படுத்தியுள்ளார். பல சிறப்புகளைப் பெற்ற சீர்காழி இசைத் தமிழ் மூவர்களுக்கு திருவையாறில் நடைபெறும் தியாகராஜர் ஆராதனை விழாவைப் போலவே, கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசால் மிகவும் முக்கியமான இசை விழாவாக "சீர்காழி தமிழிசை மூவர் ஆராதனை விழா' நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் மூன்று நாள்கள் சீர்காழி சட்டைநாதர் ஆலயத்தில் இந்த ஆராதனை விழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு ஜூலை 6,7,8 ஆகிய நாள்களில் சீர்காழி தமிழிசை மூவர் ஆராதனை விழா நடைபெறுகிறது. தமிழக அரசின் சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை, தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையம், சீர்காழி தமிழிசை மூவர் பேரவை, சீர்காழி பொதுமக்கள் ஆகியோர் இணைந்து இப் பெரு விழாவை நடத்துகின்றனர்.

கருத்து
சீர்காழித் தமிழிசைவாணர்கள் மூவரையும் தமிழிசையின் முன்னோடி என்று பலரும் தவறாகவே குறிப்பிடுகின்றனர். அவ்வாறு இல்லாமல் ' கீர்த்தனை' என்னும் இசை வடிவைச்சிறப்பித்தவர்கள் என உண்மையை உரைத்துள்ள திரு மணிகண்டனுக்குப் பாராட்டுகள்! ஆனால்,இவர் தொடக்கத்தில் குறிப்பிட்டவாறு ஆதி மும்மூர்த்திகள் எனப் பலரும் குறிப்பிடுவது தொல்காப்பிய காலத்திற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிறந்திருந்த தமிழிசையை இழித்துக் கூறுவதாகும் என்பதை உணர வேண்டும். இவர்களுக்கும பிந்தைய கருநாடக இசை மூவரை இசை மும்மூர்த்திகள் என்றதால் ஒப்பீட்டு முறையில் அவர்களுக்கும் மூத்தவரகள் எனக் கூற வந்து தவறான சொல்லாட்சி இடம் பெற்று விட்டது. இன்றைய தெலுங்கு இசை வடிவங்களுக்கு முன்னோடியான தமிழிசை வடிவங்களைப் பரப்பிய மூவர் புகழ் ஓங்குக!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/7/2009 4:18:00 AM

Post a Comment