Sunday, January 24, 2010

அருந்தமிழ்த் தொண்டர்-அரங்கசாமி நாயக்கர்



தமிழ் மொழிக்குத் தொண்டாற்றியவர் மிகப்பலர். அவருள் ஒரு சிலரையே இன்று நாமறிந்து போற்றி வருகிறோம். எஞ்சியுள்ளோரின் தமிழ்த் தொண்டும் அவர்தம் வரலாறும் வெளிப்படாமல் இருக்கின்றன. அத்தமிழ்த் தொண்டர்கள் தம் வரலாறு முழுவதுமாக வெளிப்பட்டாலன்றி, தமிழிலக்கிய வரலாறும் முற்றுப்பெறாததாகவே அமையும். ஆதலால், தமிழன்பர்கள் தாமறிந்த தமிழ்ச் சான்றோர்களின் வரலாற்றை வெளிப்படுத்த முன்வர வேண்டும். இதுவும் ஒருவகைத் தமிழ்த்தொண்டே.அரங்கசாமி நாயக்கர்,1884-ஆம் ஆண்டு பிப்ரவரி 6-ஆம் தேதி பிறந்தார். இவரது தாய், தந்தை பற்றிய விவரம் அறியக்கிடைக்கவில்லை. சு.அரங்கசாமி நாயக்கர், மேனாள் பிரெஞ்சிந்தியப் பகுதியான காரைக்காலைச் சேர்ந்த திருநள்ளாறு வட்டம், இளையான்குடி என்னும் சிற்றூரில் வாழ்ந்தவர். இந்திய விடுதலைப் போராட்டத்திலும், குறிப்பாகப் பிரெஞ்சிந்திய விடுதலைப் போராட்டத்திலும் பெரும் பங்காற்றியவர். பிரெஞ்சுக்காரர்களை எதிர்த்துப் பல போராட்டங்களைத் தலைமையேற்று நடத்திய பெருந்தகை. இவர் திருநள்ளாறு நகர மன்றத் தலைவராக நெடுங்காலம் பணியாற்றினார். ஏழைகள் மீது இரக்கம் மிக்கவர். தந்தை பெரியாரிடம் கொண்ட ஈடுபாட்டால் தம் இல்லத்திலேயே தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்ட அனைவருக்கும் சமபந்தி உணவளித்து மகிழ்ந்தவர்.மணியாச்சியில் ஆஷ்துரையைச் சுட்டுக்கொன்ற வீரவாஞ்சிநாதனுக்குத் துப்பாக்கி அனுப்பி உதவியவர் இப்பெருமகனாரே ஆவார் என்ற செவிவழிச் செய்தியும் உண்டு.இவரும் மற்றும் விடுதலைப்போராட்ட வீரர்கள் சிலரும் சேர்ந்து, "பிரெஞ்சிந்தியக் குடியரசுப் பத்திரிகை' என்ற பெயரில் பத்திரிகை ஒன்றை நடத்தி வந்தனர். விடுதலைப் போராட்டம் பற்றிய செய்திகளோடு, தமிழ்மொழி பற்றிய கட்டுரைகளும் இப்பத்திரிகையில் இடம்பெற்றன. குறிப்பாக தமிழ்மொழி பற்றியும், தமிழிலக்கணம் பற்றியும் அரங்கசாமி நாயக்கர் பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இக்கட்டுரைகளை நூல் வடிவாக்கி வெளியிட்டோர் அரங்கசாமியின் நண்பர்களும் விடுதலைப் போராட்ட வீரர்களுமாகிய, காரைக்கால் வ.பொன்னையா மற்றும் திருநள்ளாறு, தேனூர் பாலசுப்பிரமணிய பிள்ளை அவர்களுமாவர். இந்நூல் பொறையாறு, "ரத்னா விலாஸ் பிரஸ்' என்ற அச்சுக் கூடத்தில் அச்சிடப்பட்டு 3.2.1944-இல் வெளியிடப்பட்டது. "குடியரசு தமிழ் ஆரம்ப இலக்கணம்' என்பது நூலின் பெயர். நூலின் முகவுரையில் தமிழின்கண் வடமொழிக் கலப்புப் பற்றிய கருத்தினை வெளியிட்டுள்ளார். தொல்காப்பியர் காலத்திலேயே வடசொற் கலப்பு ஏற்பட்டுவிட்டது என்கிறார் அரங்கசாமி நாயக்கர். மேலும் தெய்வத் தொடர்பிற்கு வடமொழி உதவியது என்ற கருத்தினையும் வெளியிட்டுள்ளார். ""தெய்வ சம்பந்தங்களுக்கு மாத்திரம் வடசொற்களை வைத்துக்கொண்டு தமிழைத் தனித் தமிழாக்கிப் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை இருக்கிறது'' எனவும் அரங்கசாமி நாயக்கர் குறிப்பிட்டுள்ளது கவனத்திற்குரியது.அத்துடன், ""ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்'' என்ற தொடரினைக் குறித்து தம் கருத்தினைச் சுட்டியுள்ளார். ""அது "ஐந்திரம் அல்ல', "ஐந்திறம்', ஆகவே இருக்க வேண்டும். அதன் விவரம் வேறு கூறுவாய்'' என்று கூறியுள்ளார் (ஆனால் இந்நூலில் இதுபற்றிய செய்தி ஒன்றும் இடம் பெறவில்லை). மற்றும் வீரசோழிய இலக்கணம் பற்றியும் தம் முகவுரையில் குறிப்பிட்டுள்ளார். "பிழைகளைத் திருத்தி அமைப்பதுவே நமது இவ்வாரம்ப இலக்கணத்தின் நோக்கம்'' என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனால் இந்நூலின் நோக்கமும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நூல் எழுத்திலக்கணம் மட்டுமே இயம்புகிறது என்பதையும் சுட்டியுள்ளார்.தமிழின் ஒலிப்புமுறை, நகர, னகர பேதங்கள், லகர, ளகர பேதங்கள், ழகர, ளகர பேதங்கள், மயக்கம் (மெய்ம்மயக்கம்), முதலிடை, கடைநிலை எழுத்துகள், புணர்ச்சி என்ற தலைப்புகளில் எடுத்துக் காட்டுகளுடன் இந்நூலாசிரியர் பல செய்திகளை விளக்கிக் கூறியுள்ளார். இதுவே இந்நூல் தரும் செய்தியாகும். நூல் சிறிதாயினும், முறையாக மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுமானால் மொழிப் பிழைகள் குறைந்து பிழையின்றி எழுதும் திறம் பெறுவர் என்பதில் ஐயமில்லை.அரங்கசாமி நாயக்கர், தம் வாழ்நாளில் பெரும் பகுதிகளை விடுதலைப் போராட்டத்திலும், சமுதாய மேம்பாட்டுப் பணிகளிலும் செலவிட்டார் என்றாலும் தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது கொண்டிருந்த நீங்காப் பேரன்பினால், தாம் நடத்திய பத்திரிகையில், தமிழின் முன்னேற்றத்திற்கான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகள் பலவற்றையும் வெளியிட்டுத் தொண்டாற்றியுள்ளார்.இப்போது இந்நூல் கிடைத்தற்கரியதாய் இருப்பதால், தமிழக அரசும், தமிழ்ப் பல்கலைக்கழகமும் இதுபோன்று மறைந்து கிடக்கும் நூல்களை வெளியிடும் பணிகளை மேற்கொள்ளல் வேண்டும்.இவ்வாறு வெளிச்சத்திற்கு வராத தமிழ்த் தொண்டர்களையும், தமிழ் நூல்களையும் தமிழன்பர்களும், தமிழ் ஆர்வலர்களும் வெளிப்படுத்துவாராக! அயராமல் உழைத்த அரங்கசாமி நாயக்கர், 1943-ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி இம்மண்ணுலக வாழ்வை நீத்தார்.

No comments: