Sunday, January 24, 2010

'கொங்குக் குலமணி' - சி.எம்.இராமச்சந்திரன் செட்டியார்



செந்தமிழ்ப் புலவராய் இருந்து தமிழை வளர்த்தோரைக் காட்டிலும், வேறு வேறு துறைகளில் புலமை பெற்றவரே தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் துணையாய் இருந்துள்ளனர்.
ந.மு.வேங்கடசாமி நாட்டார், உழவுத்தொழிலில் ஈடுபட்டிருந்து பின் புலவராகப் பொலிந்தவர். பண்டிதமணி கதிரேசச் செட்டியார், வணிகராய் இருந்து பின்னர் புலமை நலங்கனிந்தவர். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், கா.சு.பிள்ளை, ரா.பி.சேதுப்பிள்ளை முதலான பெருமக்கள், வழக்கறிஞர் தொழில் புரிந்து வண்டமிழில் தேர்ச்சி பெற்றவராவர். பா.வே.மாணிக்க நாயக்கர், பொறியாளராய் இருந்து, பின் மொழித்தேர்ச்சி பெற்றவர். புலவரேறு வரதநஞ்சைய பிள்ளை, ஊர்க்காவலராய் இருந்து, பின் ஒண்டமிழில் தேர்ச்சி பெற்றவர். சைவ ஞாயிறு கோவைக்கிழாரும் வழக்குரைஞராய் இருந்து, பிறகு தண்டமிழில் மேதையானவர். கோவைக்கிழார் கல்லூரியில் கற்றபாடம், இயற்பியல், சட்டவியல்.
கோவைக்கிழார் தமிழ் இலக்கண, இலக்கியங்களை, திருச்சிற்றம்பலம் பிள்ளை, சபாபதிப் பிள்ளை, உ.வே.சாமிநாதய்யர் போன்றோரிடம் கற்றுக்கொண்டார். கோவைக்கிழாரின் இயற்பெயர், இராமச்சந்திரன் செட்டியார்.
1888-ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி மருதாசலம் செட்டியார்-கோனம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார்.
தொடக்கக்கல்வியை கோவை நகராட்சிப் பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியை லண்டன் மிஷின் பள்ளியிலும், கல்லூரிக் கல்வியை சென்னை மாநிலக் கல்லூரியிலும் கற்றுத் தேர்ந்தார். சென்னை சட்டக் கல்லூரியில் 1912-இல் பி.எல். பட்டமும் பெற்றார். கோவையில் வழக்குரைஞராய் பல்லாண்டுகள் பணிபுரிந்தார். அத்தொழிலில் அவர் மனம் ஈடுபடவில்லை. தமிழ்த் தொண்டிலும் சமயத் தொண்டிலும் ஆர்வத்தோடு ஈடுபாடு கொண்டார்.
சென்னையில் படிக்கும் காலத்திலேயே சமுதாயப் பணியிலும் ஈடுபட்டார். தாம் வழக்குரைஞர் தொழிலுக்குச் சென்றபிறகு, தம் குலத்துச் சிறுவர்களுக்குப் பணிபுரிய விரும்பி, "தேவாங்கர் சிறுவர் சபை' என்ற ஓர் அமைப்பை நிறுவி, அதன் செயலராக இருந்து பணிபுரிந்தார். ஏழைப் பிள்ளைகளுக்கு உதவுவதற்கு நிதி திரட்டிப் பணிபுரிந்தார். அச்சபை இன்றும் கோவை-சுக்கிரவாரப்பேட்டையில் இயங்கிவருகிறது.
கோவைக் கிழார், 1918-ஆம் ஆண்டில் கோவை நகராட்சியின் துணைத் தலைவரானார். 1943, 1946 ஆகிய ஆண்டுகளில் பட்டதாரித் தொகுதியில் நின்று சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுபினராக வெற்றி பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் தமிழ் வளர்ச்சி ஆலோசகராக இருந்தார்.
கோவையில் தேவாங்கர் உயர்நிலைப் பள்ளியைத் தோற்றுவித்தார். அதன் ஆட்சிக்குக்குழு உறுப்பினராய் இருந்தார். கோவைத் தமிழ்ச் சங்கத்தை உருவாக்கி, சிவக்கவிமணி சி.கே.சுப்பிரமணிய முதலியார் தலைமையில் செயலாளராகப் பணிபுரிந்தார்.
சென்னை சுவடிச்சாலை, தஞ்சை சரஸ்வதிமகால் புத்தகசாலை ஆகியவற்றிலும் இவர் உறுப்பினராய் இருந்தார். கோவை-அரசுக் கல்லூரி பழைய மாணவர் கழகத்திலும், கோவை-காஸ்மோபாலிடன் கிளப்பிலும் (இறுதிக்காலம் வரை) தலைவராய் இருந்தார். இவர் இடம்பெறாத கல்விக் கழகங்களோ, பொதுப்பணி மன்றங்களோ, சமயச் சபைகளோ, பொழுதுபோக்கு அமைப்புகளோ, பொதுமாநாடுகளோ இல்லை என்றே கூற வேண்டும்.
தம் குலத்தினர் நெசவுத் தொழில் ஒன்றிலே நின்று, உயரும்போது உயர்ந்தும், தாழும்போது தாழ்ந்தும் துன்புறுதலைக் கண்டு உள்ளம் வருந்தினார். அத்தொழிலை வளமுடையதாக்கப் பல கைத்தறிக் கூட்டுறவு சங்கங்களை உருவாக்கினார். மாநாடுகள் பலவற்றை நடத்தினார். அவர்களின் குறைகளைப் போக்க முயன்றார்.
கோவைக்கிழார், சென்னை-ராஜதானியின் அறநிலையத்துறை ஆணையாளராக இருந்தபோது, கோயில்களின் வருவாயில் ஒரு பகுதியை, சமய வளர்ச்சிக்கென ஒதுக்க வேண்டும் என்றும், அதன் மூலம் சமயச் சொற்பொழிவுகள், நூல்கள் வெளியிடுதல், நூல் நிலையங்கள் அமைத்தல் ஆகியவற்றுக்காகத் திட்டங்கள் வகுத்துச் செயல்படுத்தினார். கோயில்களில் திருமுறைகள் ஓதுதல், திருமுறைப் பதிகங்களைக் கல்லில் பதித்தல், தல வரலாறுகள் எழுதுதல், கோயில் குடமுழுக்குகளை ஆகம முறைப்படி செய்தல் ஆகியவற்றுக்காக அயராது உழைத்தார். தவத்திரு குன்றக்குடி அடிகளாருடன் சேர்ந்து தமிழ் நாடெங்கும் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை நடைபெறப் பாடுபட்டார்.
சமய ஆதீனங்களான தருமபுரம், திருப்பனந்தாள், திருவாவடுதுறை, மயிலம் முதலியவற்றில் தமிழ்க் கல்லூரிகள் தோன்றக் காரணமாக இருந்தார். கொங்குநாட்டுப் பேரூர் சாந்தலிங்கர் திருமடத்தின் சார்பிலும் தமிழ்க்கல்லூரி ஒன்றைத் தவத்திரு சாந்தலிங்க ராமசாமி அடிகளாருடன் சேர்ந்து தோற்றுவித்தார், அக்கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றினார். திருமடத்தின் சார்பில் உயர்நிலைப் பள்ளி தோன்றவும் காரணமாக இருந்தார்.
கோவைத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராக கோவைக்கிழார் இருந்தபோது, "கொங்குமலர்' என்னும் திங்கள் இதழை நடத்தினார். சைவசித்தாந்த சமாஜத்தின் இதழான, "சித்தாந்தம்' இதழுக்கும் ஆசிரியராக இருந்து அரும் பணியாற்றினார்.
தஞ்சை சரஸ்வதி மகாலில் உறுப்பினராய் இருந்தபோது, "இராமப்பய்யன் அம்மானை' என்ற நூலையும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வழியாக "தமிழிசைக் கருவிகள்' என்ற நூலையும் பதிப்பித்து வெளிப்படுத்தினார்.
கோவைகிழார், தமிழ் நாட்டின் வரலாற்றையும், புலவர்களின் வரலாற்றையும், கல்வெட்டு-செப்பேடுகளின் துணையால் ஆராய்ந்து தெளிவுபடுத்தியுள்ளார்.
இதுவரையிலும் யாரும் அறிந்து எழுதாத "கொங்குநாட்டு வரலாற்றை' பலரும் போற்றும் வண்ணம் எழுதியுள்ளார். ஏறக்குறைய எண்பது நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இன்னும் அச்சில் ஏறாத நூல்களும் பல உள்ளன.
கோவைக்கிழாரின் பணியைப் பாராட்டி ஆங்கில அரசு, 1930-இல் "இராவ்சாகிப்' என்ற பட்டத்தையும் 1938-இல் "இராவ்பகதூர்' என்ற பட்டத்தையும் அளித்துச் சிறப்பித்தது. சென்னை மாநிலத் தமிழ்ச்சங்கம், "செந்தமிழ்ப்புரவலர்' என்ற பட்டத்தையும் சென்னை மாநிலச் தமிழ்ச்சங்கம், "சிந்தாந்தப்புலவர்' என்ற பட்டத்தையும் மதுரை ஆதீனம் "சைவஞாயிறு' என்ற பட்டத்தையும் வழங்கிப் பாராட்டியது. கொங்குநாட்டு வரலாறு என்ற நூலுக்குத் தமிழ் வளர்ச்சிக்கழகம் பரிசளித்துப் போற்றியது. கோவை நன்நெறிக்கழகம் பொற்பதக்கம் வழங்கிப் போற்றியது. தமிழ், சம்ஸ்கிருதம், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது, மலையாளம் என எட்டு மொழிகளில் சிறந்த புலமை பெற்றிருந்தார்.
இச்சான்றோர், 1969-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ஆம் தேதி இயற்கை எய்தினார். இவரின் சமாதி பேரூர் தமிழ்க்கல்லூரித் தோப்பில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments: