Wednesday, September 02, 2015

செந்தமிழ் வளர்த்த செம்மல் சி. இலக்குவனார் -புலவர் செ. இராமலிங்கம். புதுவை

54Ilakkuvanar+11

செந்தமிழ் வளர்த்த செம்மல் சி. இலக்குவனார்

  இலக்குவனாரைப்போல் தமிழ்ப் பேராசிரியர் பணியை ஒழுக்கமுடனும். தமிழ் உணர்வுடனும் பயிற்றுவித்தவரும் மாணவர்களைப் பண்படுத்தியவரும் வேறு யாருமிலர் என்பதற்குக் கல்விச் சாலைகளின் பட்டியலே சான்றாகும்.
  சென்னை, மதுரை, அண்ணாமலை, ஐதராபாத்து உசுமானியப் பல்கலைக் கழகங்களில், பாடத்திட்டக்குழு உறுப்பினர், பேரவை உறுப்பினர், ஆட்சிக்குழு உறுப்பினர், போன்ற பொறுப்புகள் ஏற்றுத் திறமையுடன் புதுமையான பல திட்டங்கள் வகுத்தளித்துச் சிறப்புக்குரியவராய் விளங்கினார் இலக்குவனார்.
  அரசியல் காழ்ப்பு, தமிழ் உணர்வின்மை, ஆங்கில மேலாண்மை, சாதியுணர்வு இவற்றுக்கிடையே இலக்குவனாரின் தமிழ்ப் பற்றும். தன்மானக் கொள்கைப் பற்றும் கல்விப் பணியாற்றிய பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தொடர்ந்து பணியாற்றுவதற்கு இயலாத சூழல்களை உருவாக்கின. ஆயினும் உறுதியான உள்ளத்துடன் வாழ்வில் யார்க்கும் அஞ்சாத தமிழ்மறவராய் வாழ்ந்து காட்டியவர் இலக்குவனார் ஆவார்.
  1971இல் மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொறுப்பிற்கு இலக்குவனார் பெயர் முதலிரண்டு பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. துணைவேந்தராகப் பேராசிரியர் சி.இலக்குவனார் அமர்த்தப்பட்டதாகச் செய்தி அறிந்து பலரும் வாழ்த்தினர். ஆனால், செல்வம மிக்கப் படத்துறையைச் சேர்ந்த ஒருவரால் பேராசிரியருக்கு இவ்வாய்ப்பு பறிக்கப்பட்டு வேறொருவர் பெயர் அறிவிக்கப்பட்டது. இதனை மறைப்பதற்காக வழக்கத்திற்கு மாறாக மூன்றாம் பட்டியலில் அவர் பெயர் இடம் பெறாததால் நியமிக்க வில்லை என மழுப்பப்பட்டது.
சலுகை போனால் போகட்டும் – என்
அலுவல் போனால் போகட்டும்.
தலைமுறை ஒரு கோடி கண்ட – என்
தமிழ் விடுதலை ஆகட்டும்!
என்னும் பாவேந்தரின் கொள்கை வரிகளை மனத்தில் நிறுத்தித் தமிழ் வளர்ச்சிப் பணியில் முனைப்புடன் ஈடுபடும் இலக்குவனார் இது குறித்துக் கவலைப்படவில்லை. ஆனால், உலகெங்கும் உள்ள தமிழன்பர்கள் துயரத்தில் ஆழ்ந்தனர். காலமெல்லாம் தமிழுக்கு உழைத்தவரால் ஆட்சிப் பீடம் ஏறி, அவரைப் புறக்கணிப்பது அடாத செயல் என்றனர். அவர் துணைவேந்தரானால் அவரது தமிழ்க்கனவுகள் நிறைவேறித் தமிழ் அடைந்திருக்க வேண்டிய வளர்ச்சிப் போக்கிற்குப் பின்னடைவு ஏற்பட்டது என்று தமிழன்பர்கள் வருந்தினர். பேராசிரியர் பெருந்தன்மையுடன் புதிய துணை வேந்தரை வாழ்த்தினார். வாழ்நாள் இறுதி வரை தம் தமிழ்ப்பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுத் தமிழன்னைக்குப் பெருமை சேர்த்தார்.
  இன்றுள்ள தமிழ்ப் பேராசிரியர் பெருமக்கள் இலக்குவனாரின் வாழ்வியல் நிகழ்வுகளை அறிந்துணர்ந்து தமிழ்வளர்ச்சிப் பணிகளைத் தளராது ஆற்றினால் நம் வாழ்வும் வளமும். செம்மைத் தமிழ்போல் சிறப்புறுமன்றோ!
-புலவர் செ. இராமலிங்கம். புதுவை
‘செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி. இலக்குவனார்’  நூல்




No comments: