s.ilakkuvanar

பகைக்கு எரிமலை! பைந்தமிழுக்குப் பனிமலை!
பைந்தமிழ்க் காவலர் பேராசிரியர் சி.இலக்குவனார்

மொழி என்பது ஆறறிவு கொண்ட மாந்தனுக்கு மட்டும் கிடைக்கப்பெற்ற மிகப் பெரிய ஆற்றலாகும். கொப்பூழ்க் கொடி அறுத்த நாள்முதல் காலில்லா தொட்டிலில் படுக்கும்வரையில் மாந்தனுக்கு மாந்தன் உறவாடிக் கொள்ளத் தேவையான முதன்மையான வழி மொழியாகும். அத்தகைய சிறப்பு வாய்ந்த மொழியை – அதன் வாழ்வை – சிறப்பை  – பெருமையை, மேலும் அதை எவ்வாறு வளர்ப்பது என்று ஒவ்வொரு மொழி இனத்தாரும் எண்ணிச் செயல்படுகின்ற வேளையில் உலக மொழிக்கெல்லாம் மூத்ததாய்   இளமை மாறாததாய் உலகமெங்கும் பரந்து விரிந்ததாய் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரே மொழி   ஒப்பில்லா திருமொழி எதுவென்றால். அது தமிழ் மொழியைத் தவிர வேறேதும் இல்லை. இதைத் தமிழனாக இருக்கக்கூடிய நான் சொல்லவில்லை. கால்டுவெல் முதல் வீரமாமுனிவர் வரை பன்னாட்டு அறிஞர்களின் கூற்றாகப் பதிவு செய்துள்ளனர். ஆனால்   சிறப்பு வாய்ந்த தமிழ் மொழி  ஆரிய இனத்தாரின் சூழ்ச்சிகளால் ஆரியச் சொற்கள் ஊடுருவப்பட்டும்   பல்வேறு ஓலைச் சுவடிகள் நீரிலும்   நெருப்பிலும் அழிக்கப்பட்டும் தமிழின் சிறப்பு மறைக்கப்பட்டும் சிதைக்கப்பட்டு வந்தது.
ஆக இப்படி சிதைக்கப்பட்ட மொழியானது சென்ற நூற்றாண்டில்தான் விழிப்புணர்வு கொள்ளக் காலம் கனிந்தது. பரிதிமாற்கலைஞன். மறைமலையடிகள்   தேவநேயப் பாவாணர்   பாவேந்தன் என்ற தமிழக்காப்புப் படையினரில், முதல் களப் போராளியாகத் தமிழறிஞர் இலக்குவனார் அவர்கள் வருகிறார்கள்.
    தி.பி. 1940(கி.பி.1909) நளித் திங்களில் திருமிகு மு. சிங்காரவேலர் அவர்களுக்கும் திருவாட்டி அ. இரத்தினம் அம்மையார் அவர்களுக்கும் மூன்றாவது திருமகனாகப் பிறந்தவர்தான் பேராசிரியர் சி. இலக்குவனார் அவர்கள். இளமையில் கல்வி பயின்ற காலத்தில் அவருக்கு ஆசிரியராக வாய்த்த அறிஞர் சாமி சிதம்பரனார் அவர்கள்   பெற்றோர்கள் இட்ட பெயரான (இ)லட்சுமணன் என்பதை மாற்றி இலக்குவன்  என்று மாற்றினார்.  அன்றையிலிருந்து அவருக்குத் தமிழ்ப்பற்றும்   இனப்பற்றும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து சிறந்து வந்தது. பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் ஆசிரியராகப் பணி ஏற்றுக் கொண்டார். தான் பெற்ற மொழியறிவையும்   இனஉணர்வையும் தம்மிடம் படிக்கும் ஒவ்வொரு மாணாக்கருக்கும் ஊட்டி வளர்த்தார். இன்றைய ஆசிரியர் போன்று பாடநூலில் உள்ளதை அப்படியே கக்காது   தனிப் பயிற்சி வகுப்புகள் நடத்தாது உள்ளன்போடும்   உணர்வோடும் ஒவ்வொரு மாணாக்கரிடமும் தனிப்பட்ட முறையில் அக்கறை செலுத்தி சிறந்த பேராசிரியராக இருந்தார் என்றால் மிகையாகா. இலக்குவன் தான் பெற்ற புகழால் இலக்குவனார் ஆனார். பேராயக்கட்சியான காங்கிரசு அரசு இந்தி மொழியைத் தமிழர்களிடம் திணித்து வந்தது. இதை எதிர்த்துப் பலவேறு வகையில் போராட்டம் வெடித்தது. 1948-இலேயே பேராசிரியர் இலக்குவனார் தலைமையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தந்தை பெரியாரும் அறிஞர் அண்ணாவும் பங்கேற்றனர். பின்னர் 1965-இல் இந்தி நம் தலை மேல் ஏறுவதைத் தடுப்பதற்காகப் பேராசிரியர் இலக்குவனார் வழிகாட்டுதலில்   அண்ணாவால் தொடங்கப்பட்ட தி.மு.க.வும்  களமிறங்கியது. ஒரு கட்டத்தில் போராட்டத்தை அடக்குவதற்காகவும்   ஒடுக்குவதற்காகவும் அண்ணாவிடம் காவல்துறையினர் முறையிட்டார்கள். ஆனால் அறிஞர் அண்ணா அவர்கள் இந்தி மொழிப் போராட்டம் என்பது என்கையில் இல்லை. இது மாணாக்கர்களின் கையில்தான் உள்ளது; மாணாக்கர்களை வழிநடத்துவது பேராசிரியர் இலக்குவனார்தான் என்றார்.
தானுண்டு   தன்பணியுண்டு   தன்பெண்டு பிள்ளையுண்டு என்று வாழ்நாளைக் கழிக்கும் பேராசிரியர்கள் நடுவே தமிழ்மொழி   தமிழினம்   தமிழ்ப்பண்பாடு என வாழ்நாளை வாழ்வித்துக் கொண்டிருந்தார். அதற்காகத் தவறு செய்திடும் அரசையும்   அமைச்சர்களையும் எதிர்த்தும் பல கூட்டங்கள் நடத்தினார். மேலும் சங்க இலக்கியம் (கிழமை இதழ்),   இலக்கியம் (திங்கள் இருமுறை இதழ்), திராவிடக் கூட்டரசு (கிழமை இதழ்),   குறள்நெறி (திங்களிதழ்), குறள்நெறி (திங்கள் இருமுறை இதழ்),   குறள்நெறி (நாளிதழ்) எனப் பல்வேறு இதழ்களை நடத்தி மக்களிடம் தமிழ்உணர்வை ஊட்டினார். பெரும் பொருள் இழப்போடு நாட்டு மக்களின் விழிப்புணர்விற்காக மட்டுமே பாடுபட்டார். இவரது பணிகளால் எழுந்த மாணவர் படையால் பேராயக்கட்சிக்கு அச்சமும்   அதிர்ச்சியும் ஏற்பட்டன. அதனால் காவலர்கள் மூலமாகக் கண்காணிக்கப்பட்டும்   பொய்யான வழக்குப் போடப்பட்டும் சிறையில் அடைத்தார்கள். இவரோ சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றினார்.
  இவரது செயல்களைப் புரட்சிப் பாவலர் பாவேந்தர் பாராட்டி மகிழ்ந்தார். மேலும் தமிழ் மொழியைக் காட்டுமிராண்டி மொழியெனச் சொல்லிவந்த பெரியார்க்குத் தமிழ்மொழியின் சிறப்பை எடுத்துக் கூறியதோடு மட்டுமல்லாது தமிழ்மொழியின் சிறப்பு நூலான திருக்குறளுக்கு முதல்முதலாக மாநாடு போடப் பெரிதும் துணை நின்றார் என்பது வரலாற்றுப் பதிவாகும். பேராசிரியர் அவர்கள் தமிழ்மொழியில் மட்டும் புலமை பெற்றிடாது ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். அதற்குச் சான்றாக தமிழ்மொழியின் இலக்கண நூலான தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இவருக்குப் பிறகு வேறு எவரும் இதுவரை சிறப்பாக மொழிபெயர்க்கவில்லை என்பதே இவரின் ஆங்கிலப் புலமைக்குச் சான்றாகும்.
   இவர் வெறும் எழுத்தை மட்டும் பதிவு செய்யாது களத்திலும் நின்றார். அதற்காகத் தமிழ்க்காப்புக் கழகம்,   திருக்குறள் பயிற்சிக் கழகம் ஆகியவற்றின் தலைவராகவும் தமிழ்நாடு பல்கலைக் கழக ஆசிரியர் பேரவையின் துணைத் தலைவராகவும்   குறள்நெறி இயக்கம்,   திருவள்ளுவர் கழகம்,   விருதைத் தமிழ்ச் சங்கம் ஆகியவற்றில் செயலராகவும் பொறுப்பேற்று திறன்பட வழி நடத்தினார். இவரது செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட அண்ணா அவர்களே “எங்களில் ஒருவராக வாருங்கள்’’ என்றார். ஆனால் இவர்தான் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் அன்றைக்கு ஏற்றுக் கொண்டிருந்தால் தமிழ்மொழியும்   தமிழ்மண்ணும் விடுதலையாகியிருக்கும். ஏனோ நம் கெடுநிலை இன்றைக்குத் தமிழே தெரியாதவர்கள் எல்லாம் உயர்பதவியில் அமர்ந்து கொண்டு நம்மைச் சாகடிக்கின்றனர். இவையெல்லாம் முற்றுப் பெற வேண்டுமாயின் 1965இல் ஏற்பட்ட புரட்சி வெடிக்க வேண்டும். 1965-இல் எப்படி பேராயக்கட்சி வேரோடு சாய்ந்ததோ அதுபோல் திராவிடம் எனப் பெயர்ப் பலகை தாங்கிவந்திடும் கட்சிகள் காணாமல் போக வேண்டும். அதற்குப் பேராசிரியர் இலக்குவனாரைப் போல் பொதுமக்களிடம் மொழி உணர்வையும்   இன உணர்வையும் தூண்டவேண்டும்; தமிழின் நலம் கெடும் இடங்களில் எல்லாம் அதை எதிர்த்துக் கிளர்ச்சிகள் செய்திட வேண்டும். இதைப் பேராசிரியர் இலக்குவனாரின் நூற்றாண்டு விழாவில் நாம் உறுதி ஏற்க வேண்டும் என ஒவ்வொரு தமிழனையும் கேட்டுக் கொள்கிறேன்.
வாழ்வும் வளமும் தமிழுக்கு என்றால்
            வாழ்வான் தமிழன் வையகம் எங்குமே
            தாழ்வும் தடங்கலும் தமிழ்க்கு நேர்ந்தால்
            தலைமுறை சாகுமே தழனிலே வேகுமே.
thalaippu-pughazhchelvi
பரணிப்பாவலன்
பரணிப்பாவலன்