Saturday, October 10, 2015

தமிழ் மறுமலர்ச்சியின் குறியீடு பேராசிரியர் இலக்குவனார்

padam_photo_Dr.S.Ilakkuvanar

தமிழ் மறுமலர்ச்சியின் குறியீடு பேராசிரியர் இலக்குவனார்


  கல்வித்துறையில் இருந்து போராட்டப் பாதையில் நடைபோட்டுத் தமிழ் மறுமலர்ச்சிக்குப் பாடுபட்டவர் தமிழ்ப்புரட்சியாளர் பேராசிரியர் இலக்குவனார். இவ்வாரத்தில் பேராசிரியர் இலக்குவனாரின் நினைவுநாளான செப்.3 வருவதால் (கார்த்திகை 01, தி.பி.1940/17.11.1909 – ஆவணி 18, தி.பி.2004 / 03.09.1973) அவரை நினைவுகூரும் வகையில் சில படைப்புகள் இவ்விதழில் வெளிவந்துள்ளன. இதழ்கள், மலர்கள், நூல்கள் முதலானவற்றில் தமிழ்ப்போராளி பேராசிரியர் இலக்குவனார்பற்றி வந்துள்ள கவிதைகள், கட்டுரைகள், கட்டுரைகளின் பகுதிகள்   தரப்பட்டுள்ளன.
 வீரத் தமிழர்வெற்றிப் படையை ஊக்கிய செம்மல் எனக் கவியோகி சுத்தானந்த பாரதியார், இந்திஎதிர்ப்புத் தமிழ்ப்படையைப் பேராசிரியர் இலக்குவனார் தலைமைதாங்கியமையைக் ‘கலக்கமில்லா இலக்குவனார்‘ கவிதை இடம் பெற்றுள்ளது.
  1960 களில் சென்னை, அண்ணாமலைப் பல்கலைக்கழகங்களில் தமிழ்மாணவர்களுக்குப் பாடநூலாக இருந்தது பேராசிரியர் இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’. தமிழின் தொன்மை, தாய்மை, உயர்தனிச்செம்மொழித்தன்மை, மொழிகளின் சிறப்பு, பல்வேறு மொழிகளின் இலக்கியத் தோற்றக்காலம், மொழி மாற்றங்கள், பழந்தமிழின் எழுத்துச் சான்றுகள், தமிழ் மறுமலர்ச்சி எனப் பலவகைகளில் ஆராய்ந்து எழுதியிருப்பார். இந்நூலின் சிறப்பை முனைவர் மறைமலை இலக்குவனார் ஆராய்ந்து எழுதிவரும் இலக்குவனாரின் “பழந்தமிழ்”-ஆய்வுநூல் என்னும் கட்டுரையின் ஏழாம் பகுதியும் இடம் பெற்றுள்ளது.
  அப்போதைய நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் ஆங்கில ஒலிக்குறிப்பு போல் தமிழில் இல்லை என்றதற்கு மறுத்து ஆய்வுரை வழங்கிய பேராசிரியரின் தறுகண்மையையும் பேரறிஞர் அண்ணா பேராசிரியர் இலக்குவனார் தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஆய்வுரை வழங்கிய ஆங்கில நூலை ஏல்பல்கலைக்கழகத்திற்கு அளித்த சிறப்பையும் குறிப்பிட்டக் கவிஞர் இளையவன் செயா என்னும் கந்தையா எழுதியுள்ள ‘தமிழ்அறம்பாடி வந்தஅறிஞன்!’ என்னும் கவிதை உணர்த்துகிறது.
  ஆயிரக்கணக்கில் நாடகங்கள் எழுதியும் வானொலியில் அரங்கேற்றியும் உள்ள நாடகச் செம்மல் பட்டுக்கோட்டை குமாரவேல், ஆட்சி மாற்றத்திற்கே நெம்புகோலாய்த் திகழ்ந்த புரட்சிப் பேராசிரியரை முதலில் சந்தித்த உணர்வைப் பகிர்ந்து கொண்டதை, நம்மிடையே பகிரும் ‘மனங்கவர்ந்த செந்தமிழ் மாமணி சி.இலக்குவனார்‘ எனும் கட்டுரை இடம் பெற்றுள்ளது.
  தமிழ்க்காப்பிற்காகவும் தமிழ் நலனுக்காகவும் பேராசிரியர் சி.இலக்குவனார் நமக்கு தாம் நடத்திய இதழ்கள் வாயிலாக அறிவுறுத்துவனவற்றை ‘இதழாளர் இலக்குவனார்  வலியுறுத்தியவை’ என்னும் கட்டுரை நமக்கு உணர்ததுகிறது.
  பேராசிரியர் இலக்குவனாரை மொழியறிஞராகவும் தமிழ்ப்போராளியாகவும் அறிந்த அளவிற்கு அவரது கவிதைச் சிறப்பு அறியப்படவில்லை. மாணவப்பருவத்திலேயே எளிய தனித்தமிழில் ‘எழிலரசி அல்லது காதலின் வெற்றி’ என்னும் தலைப்பில் மொழிபெயர்ப்புக் குறுங்காவியம் படைத்தவர் பேராசிரியர் சி. இலக்குவனார். இலக்குவனார் திருவள்ளுவன் அவரைக் கவிஞராகப் படம்பிடித்துக் காட்டும் ‘தமிழ்நலப் பகுத்தறிவுக் கவிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார்’ என்னும் தொடரின் இரண்டாம் பகுதி இவ்விதழில் இடம் பெற்றுள்ளது.
  தமிழ் எழுச்சியின் மூலவராகவும் மொழியை வளர்ப்பதிலும் இனமான உணர்வை உயர்த்துவதிலும். ஓயாது உழைத்த மொழிப் போர் மறவராகவும் விளங்கியதை விளக்கும் ‘நூற்றாண்டு விழா நாயகர் பேரா. சி. இலக்குவனார்‘ என்னும் நவீன்குமார்  கட்டுரை இடம் பெற்றுள்ளது.
  பக்திக்காகப் பயணம் செய்த தமிழ்நாட்டில் “முதன் முதலாக மொழிப் போராட்டப் பயணம் மேற்கொண்டவர் இலக்குவனார்” என உவமைக்கவிஞர் சுரதா நமக்கு விளக்கும் கருத்துரை இடம் பெற்றுள்ளது.
 தினமணியின் துணை ஆசிரியர் இடைமருதூர் கி.மஞ்சுளா, ‘இலக்கணச் செம்மல் இலக்குவனார்‘ எனத் தமிழ்ப்புரட்சியை நடத்திய பேராசிரியரின் வாழ்க்கைச் சுருக்கத்தை நமக்கு எடுத்துரைக்கிறார்; நம் தாய்மொழி நலம்பெற; வளம்பெற; செழுமைபெற உழைப்பதே நாம், தமிழுக்காக தம் வாழ்வையே போர்களமாக்கிக்கொண்ட இலக்குவனாருக்கு, செய்யும் நன்றிக் கடனாகும் என நமக்கு அறிவுறுத்துகிறார்.
 “தலைமுறையில் தமிழுக்கும் தமிழருக்கும் தம்வாழ்நாள் முழுமைக்கும் தொண்டு செய்தார்!” ஆதலின் ‘இலக்குவனார் புகழ்நிலைக்கும்!‘ எனக் கவி பாடியுள்ளார் கவிஞர் கா. முருகையன்.
 இலக்குவனார் செய்த தமிழ்ப்பணி, தனியொருவர் செய்திட முடியாத செயற்கரிய பெரும் பணி என “இலக்குவனார் தமிழுக்காக வாழ்ந்தவர்”  என்பதன் மூலம் முனைவர் கா.மாரிமுத்து நினைவுகூர்ந்துள்ளார்.
  “நற்றமிழ்நாடு பெயரிழந்து உரிமையிழந்து ஒற்றுமையின் பெயரால் மொழியையும் இழக்கப் போகின்றது. ” என வருந்திய பேராசிரியர் இலக்குவனார், இவ்விழிநிலை போக்கிட நாம் செய்ய வேண்டுவன யாவை என விரும்பினாரோ அவற்றை எல்லாம் நடைமுறைப்படுத்தித் தமிழையும் தமிழரையும் வாழ வைப்போம் என இலக்குவனார் திருவள்ளுவன், “இலக்குவனாரின் விழைவுகள் நிகழ்வுகளாகட்டும்!” என நம்பிக்கை வைக்கிறார்.
  இலக்குவனாரைப்போல் தமிழ்ப் பேராசிரியர் பணியை ஒழுக்கமுடனும். தமிழ் உணர்வுடனும் பயிற்றுவித்தவரும் மாணவர்களைப் பண்படுத்தியவரும் வேறு யாருமிலர் எனச் ‘செந்தமிழ் வளர்த்த செம்மல் சி. இலக்குவனார்’ மூலம் புதுவைப் புலவர் செ. இராமலிங்கம் உரைத்துள்ளார்.
  பதவியைப் பெரிய வாழ்வு எனக் கருதும் இவ்வுலகில் மொழியின் வாழ்வே தம்முடைய வாழ்வு எனக்கருதி உழைத்த அறிஞராவார் எனப் “புரட்சிப் பேராசிரியர் இலக்குவனார்” பற்றிக் கவிஞர் நா.காமராசன் கூறியுள்ளார்.
  மொழிப்போரில் கைது செய்யப்பெற்ற ஒரே பேராசிரியர், இலக்குவனார்தான் என்றும் தமிழும் தமிழரும் உயர உழைத்த முன்னோடி சி. இலக்குவனார் என்றும் ‘தமிழியக்க முன்னோடி சி.இலக்குவனார்‘ என்பதன் மூலம் பா.சு. இரமணன் பகர்ந்துள்ளார்.
 ‘பகைக்கு எரிமலை! பைந்தமிழுக்குப் பனிமலை!’ என விளங்கும் ‘பைந்தமிழ்க் காவலர் பேராசிரியர் சி.இலக்குவனார்’ குறித்துப் புகழ்ச்செல்வி மூலம் கவிஞர் பரணிப்பாவலன் இயம்பியுள்ளார்.
  “தமிழைக் காத்தவரை நாம் மறக்கலாமா? நோபல் பரிசுத் தகுதியாளர் புரட்சித்தமிழறிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார்” எனக் கூடல் மலர் வினா தொடுத்துப் பேராசிரியரின் தகைமையை நினைவுகூர்கிறது.
  சங்கத் தமிழைச் சாறாய்ப் பிழிந்த சிங்க மறவர்; சிறந்தநல் மொழியர், “இலக்குவனார் புகழ் இனிதே வாழ்க!” என வாழ்த்துப்பா பாடியுள்ளார் பாவலர் பூங்கொடிபராங்குசம்.
  இவையெல்லாம் சேர்த்தாலும் தமிழ்ப்போராளி பேராசிரியர் இலக்குவனாரை முழுமையாகக் கூறியதாக அமையாது. என்றாலும் அவர் வாழ்க்கை நமக்கெல்லாம் பாடம் என்பதையும் அவர் கருத்துகளைப் படித்து அவர் வழியில் சென்று அவர் ஆற்றிய பணிகளுள் ஒன்றையேனும் நாம் ஆற்றினாலும்கூடத் தமிழ் எழுச்சி பெறும் என்பதையும் புரிந்து கொள்வோம் என்பதில் ஐயமில்லை.
தமிழ் தலைமை பெறவும் தமிழர் முதன்மை பெறவும் நாம் தமிழ்ப்பேராசிரியர் சி.இலக்குவனார் வழியில் சென்று வெல்வோமாக!
இலக்குவனார் வழி நின்று இன்தமிழ் காப்போம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழே விழி! தமிழா விழி!
இதழுரை
அகரமுதல 94 ஆவணி 13, 2046 / ஆக.30, 2015
AkaramuthalaHeader

No comments: