thalaippu_ilakkuvanarkavithaigal_oaraayvu_ma.rakachanthiran 

2

 இலக்குவனார் ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றவர். தொல்காப்பியத்தை மட்டுமினறி வேறுசில இலக்கண நூல்களையும் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.
  1. Tamil language
  2. Semanteme and Morpheme in Tamil language
  3. A Brief study of Tamil words.
ஆகிய நூல்களை எழுதி தமிழ் இலக்கணத்தின் சிறப்பை விளக்கியுள்ளார். இவை தவிர Dravidian Federation என்னும் ஆங்கிலம் இதழும் KuralNeri என்னும் ஆங்கில இதழும் நடத்தியுள்ளார்.
ஆய்வு செய்யக் காரணம்
இத்தகு சிறப்புடைய இலக்குவனார் இளமைக் காலத்தில் கவிதைகள் பல யாத்துள்ளார். அறிஞர் பலரும் அறியாத புதிய செய்தி இதுவாகும்.
 ‘இலக்குவனார் கவிதைகள்’ என்னும் பொருளில் இதுவரை யாரும் ஆய்வு செய்திலர். மதுரை காமராசர் பலகலைக் கழகத்தில் திரு. வி. முத்துசாமி என்பார் ‘இலக்குவனார் ஆய்வுப் பண்பு’ என்ற பொருளில் ஆய்வு நிகழ்த்தியுள்ளார். 1959-இல் மது. ச. விமலானந்தம் என்பவர் ஆற்றுப்படையின் சிறப்பைக் கூறுமிடத்து ‘மாணவர் ஆற்றுப்படை’ என்னும் கவிதையை இலக்குவனார் எழுதியுள்ளதாகக் குறிப்பிடுகிறார்.
 தமிழ் அறிஞர் வ. சுப. மாணிக்கம் அவர்கள் ஒரு சமயம் குறிப்பிட்டார்கள். ‘டாக்டர் இலக்குவனார் அவர்களை’ ‘இந்திமொழித்திண்புக்கு எதிர்ப்பாளர்’ என்றுதான் இன்றைய தமிழுலகம் அறிந்துள்ளது. அவர் ஒரு சிறந்த கவிஞர். அகவல் பாடுவதில வல்லவர். இலக்குவனார் தொடக்கக் காலத்தில் கவிதைகள் பாடியுள்ளார். அவற்றை எல்லாம் தொகுத்து ஆய வேண்டும். இலக்குவனார் போலவே தேவநேயப் பாவாணரும் சிறந்த கவிஞர் என்றார். எனவே ‘இலக்குவனார் கவிதைகள்’ என்னும் தலைப்பையே ஆய்வுக்குக் கருப்பொருளாக ஆய்வாளர் எடுத்துக் கொண்டார்.
  இலக்குவனார் ஒரு சிறந்த கவிஞர்.  ஆனால் தமிழின் மீதிருந்த தீராக் காதலும் கொள்கைப்பிடிப்பும் நேர்மையும் இவரது பதவி மேம்பாட்டுக் கெல்லாம் தடைக்கற்களாய் அமைந்துவிட்டன.  ஆனால், அதுபற்றி யெல்லாம் அவர் கவலைப்பட்ட தில்லை.
 இலக்குவனார் வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டவர். வாழ்க்கையை போராட்டக் களமாக ஆக்கிக் கொண்டார். உயர் நிலையில் உள்ளவர்களிடம் சிறிது வளைந்து கொடுத்திருக்கலாம். அவரும் நல்வாழ்வு பெற்று மேலும் உயர்ந்திருக்கலாம். அவர் மூலம் தமிழ் மொழி இன்னும் ஆக்கம் பல பெற்றிருக்கும். தமிழர் உயர்ந்தாலே தமிழ் மொழியும் தானே உயர்வு அடையும். ஆனால், தமிழ் நலத்தையே எந்நாளும் எண்ணிச் செயல்பட்டமையால் தன் நலம்பற்றிச் சிறிதும் எண்ணவில்லை.
  இலக்குவனார் பற்றிய இவ்வாய்வு முழுவதும் போற்றிப் புகழும் போற்று முறைத்திறன் ஆய்வாக இல்லாமலும் எல்லாவற்றையும் வெறுத்துப் பேசும் கண்டன முறைத்திறன் ஆய்வாகாமலும் நிறை கண்டு போற்றியும், குறை கண்டு நீக்கியும் செய்யப்பட்டுள்ள ஒரு மதிப்பீட்டு முறைத் திறனாய்வாகும்.
  சங்கப் புலவர்கள் பல்வேறு இடங்களில் பல்வேறு காலங்களில் வாழ்ந்தபோது பாடியவை சங்கப் பாடல்களாகும்.
சங்கப் புலவர்கள் பாடிய பாடல்கள் எத்துணையோ இருந்திருந்தும் இன்று நம் கைக்குள் கிடைத்திருக்கும் பாடல்கள் குறைந்த அளவினவே. எனினும் எண்ணிக்கையை நாம் பெரிதுபடுத்தவில்லை. பாடல்களில் அமைந்துள் பொருள்நயம் கண்டு இன்புறுகின்றோம். அதுபோல இலக்குவனார் பல்வேறு இடங்களில் பல்வேறு காலங்களில் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பணிபுரிந்திருக்கிறார். கவிதைகள் பல சூழ்நிலைக் கேற்பப் பாடியுள்ளார். அவர் கவிதை மட்டும் புனைந்தாரில்லை. ஆராய்ச்சி மேற்கொண்டு ஆய்வு நூல்கள் பல எழுதியுள்ளார். புற நானூற்றுப் புலவர் கோவூர்கிழார் போலவும் பிசிராந்தையார் போலவும் அறிவுரை கொளுத்தியும் நட்பு பாராட்டியும் அரசியல் தலைவர்களுடன் தொடர்பு கொண்டும் பணி செய்திருக்கிறார். இதழ்கள் பல நடத்தியுள்ளார்.
  இலக்குவனார் இயற்றியுள்ள கவிதைகளுள் நாற்பத்தைந்து கவிதைகள் மட்டும் ஆய்வுக்குப் பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
  ‘இலக்குவனார் வரலாறும்’ கவிதை தோன்றிய சூழலும்’ என்னும் இயலில், கவிஞரின் இளமைப் பருவ நிகழ்ச்சிகளும், கல்விச் செல்வத்தையடைய கவிஞர் பட்ட இன்னல்களும், தாம் பெற்ற அறிவுச் செல்வத்தை தமிழ் மக்கள் அனைவரும் பெற்றுத் திகழ வேண்டும்; தமிழ்த் தாய்க்குத் தொண்டு செய்து உயர்வாழ்வு வாழ வேண்டும் என்ற எண்ணங்களும் விவரிக்கப்பட்டுள்ளன.
  ‘இருபதாம் நூற்றாண்டுக் கவிதையும் இலக்குவனாரும்’ என்னும் இயலில் இருபதாம் நூற்றாண்டுச் சமுதாய அரசியல் சூழ்நிலையும் கவிதைப்போக்கும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. தன்மான இயக்கக்கருத்துக்களின் தாக்கம் கவிஞரின் கவிதைகளில் வெளிப்படும் பாங்கும் இயம்பப்பட்டுள்ன.
 ‘பாடு பொருள்’ இயலில் இலக்குவனார் பாடியுள்ள கவிதை வகைகளும், கவிதையின் எண்ணிக்கையும், அடிகளும் கூறப்பட்டுள்ளன. தமிழ் மொழியையும், தமிழ்நாட்டையும் தமிழ்த்தலைவர்களையும் போற்றிப் பாராட்டிய திறம் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. தம்மை ஆதரித்த வள்ளல்களையும், தலைவர்களையும் சங்கப்புலவர் போன்று வாழ்த்திய மரபும் கூறப்பட்டுள்ளன. மொழி நலம் பேணாத தமிழ்மக்களின் அறிவீனமும், தமிழை வளர்க்க முடியாது தம்மையே வளர்த்துக் கொண்டிருக்கிற செல்வர்களை வசை பாடிய திறமும் விளக்கப்பட்டுள்ளன.
  ‘இலக்கிய வடிவங்கள்’ என்னும் இயலில், கவிதைகளின் வகைகளும் அதன இனங்களும் கூறப்பட்டுள்ளன. கவிஞர் பின்பற்றிய கவிதை மரபும், கவிஞர் கையாண்டுள்ள உவமை அணிகளும் உருவங்களும் விளக்கப்பட்டுள்ளன. மேலும் புதிய சொல்லாக்கங்களும், புறநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூல்களின் தாக்கங்களும் கவிஞரின் கவிதையில் இடம் பெற்றுள்ள முறையும் இயம்பப்பட்டுள்ளன. புதுக்கவிதைத் தோற்றுவித்திற்கு வழிகாட்டிய சூழலும் கூறப்பட்டுள்ளன.
ஆய்வின் நோக்கம்
  1. இலக்குவனார் ஒரு சிறந்த கவிஞர் என்பதைத் தமிழ் உலகத்திற்கும் புலப்படுத்த வேண்டும்.
  2. இலக்குவனாரின் தமிழ் மொழிப் புலமையை வெளிப்படுத்த வேண்டும்.
  1. இலக்குவனாரின் தமிழ்ப் பற்றை விவரித்துச் சொல்ல வேண்டும்.
  2. இலக்குவனார் ஒரு சிறந்த சான்றோர்: பண்பாளர்: புகழ் எனின் உயிரையும் கொடுக்கும் உரனுடையார் என்பதை உணர்த்த வேண்டும்.
  3. இலக்குவனார் போன்று ஒவ்வொருவரும் மொழி வளர்ச்சிக்குப் பாடுபடுதல் தலையாய கடன் என்பதை உணர்த்த வேண்டும்.
  4. தாம் பெற்ற கல்வியறிவை மற்றவர்க்கும் வழங்க இன்புற வேண்டும்.
  5. தமிழால் வாழ்பவர்கள் தமிழுக்காகவும் வாழ முனைதல் வேண்டும்.
  6. வள்ளுவர் நெறியை மற்ற மொழியினரும் ஏற்கும் வண்ணம் வாழ்ந்து காட்ட வேண்டும்.
  7. தமிழ்ச் சான்றோரை மதித்து வணங்க வேண்டும்.
  8. துன்பக் காலத்தில் செய்த உதவியை மறவாது நன்றி செலுத்த வேண்டும்.
  9. வறியவர்க்கு உதவ வேண்டும். வள்ளல் தன்மை போற்ற வேண்டும்.
  10. உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு என எண்ணித் தொண்டாற்ற வேண்டும்.
  11. சாதி சமயச் சழக்குகளை அடியோடு நீக்க வேண்டும்.
  12. அறம் காக்க வேண்டும் அல்லவை கடியல் வேண்டும்.
  13. “தமிழ்ப்பகைவர் என் பகைவர்; தமிழ் அன்பர் என் அன்பர்” எனக் கொள்ளல் வேண்டும்.
  14. தீயவை கண்டபோது துணிவுடன் எதிர்க்க வேண்டும்.
  15. உண்மையை நிலை நிறுத்த உயிரையும் கொடுத்துப் போராட வேண்டும்.
  16. பகுத்தறிவுக் கொவ்வா மூடக் கொள்கைகளை ஒழிக்க வேண்டும்.
-முனைவர் ம. இராமச்சந்திரன்
(தொடரும்)