thalaippu_ilakkuvanarkavithaigal_oaraayvu_ma.rakachanthiran

முன்னுரை

  செந்தமிழ்ப் பற்றும் சீர்திருத்தக் கொள்கையும் ஒருங்கே பெற்றவர் பேராசிரியர் இலக்குவனார். தமிழ்ப் புலமையும் தமிழ்த் தொண்டும் வாய்க்கப் பெற்றவர். தமிழ் வளர்ச்சியே தம் உயிர் எனக் கருதி வாழ்ந்தவர். வறுமை வந்து வாட்டியபோதும் செம்மை மனம் உடையவராய்த் திகழ்ந்தார். விருந்தோம்பும் பண்பை அயராது போற்றினார். தவறு கண்டபோது அஞ்சாது எடுத்துரைக்கும் ஆற்றல் பெற்றார். இருபதாம் நூற்றாண்டின் நக்கீரர் இவர் என்று கூறலாம்.
  அண்ணாவின் நட்பையும் பெரியார் ஈ. வே. ரா.-வின் பகுத்தறியும் பண்பையும் இனிதெனப் போற்றினார். இந்தி வல்லாண்மையை எதிர்த்து இருமுறை சிறை சென்றார். தமிழ் மொழி பயிற்று மொழியாக வேண்டி ‘நடைச் செலவு’ (பயணம்) மேற் கொண்டார். தமிழ் நலம் பேணுதற் பொருட்டு ‘தமிழ்க் காப்புக் கழகம்’ மதுரையில் தோற்றுவித்தார். தமிழுக்குக் குறை எனின் பாவேந்தர் பாரதிதாசனின் “கொடுவாளை எடடா” என்றார். பசுமலை சோமசுந்தர பாரதியாரையும், மறைமலையடிகளாரையும் பின்பற்றி தனித்தமிழ் தொண்டு தளராது ஆற்றினார். தமிழ்த் தென்றல் திரு.வி.க-வின் எளிய நடையைத் தம் எழுத்தில் கையாண்டார். இலக்குவனார், தமிழ் நலம் ஒன்றையே நாடுவார். தம் நலம் கருதார். சிலர் தம் நலம் நாடுவார்; தமிழ் நலத்தை எண்ணிப் பார்ப்பதே இல்லை.
  இலக்குவனார் வள்ளுவர் நெறியை வையகம் எங்கும் பரப்பினார். ‘குறள் நெறி’ என்னும்பெயரில் தமிழிலும் ஆங்கிலத்திலும் நாளிதழாகவும் வார இதழாகவும் வெளியிட்டு வந்தார். திருவள்ளுவர் திருநாளைக்கல்லூரிகளிலும் பிறவிடங்களிலும் கொண்டாடச் செய்தார். சங்கக் காலத் தமிழ் மக்களின் பண்பாட்டுச் சிறப்பை எல்லாரும் அறிய வேண்டுமென்று விரும்பினார். ‘சங்க இலக்கியம்’ என்னும் பெயரில் கிழமை இதழ் ஒன்றும் நடத்தினார். ‘இலக்கியம்’ என்னும் பெயரிலும் ‘திராவிடக் கூட்டரசு’ என்னும் பெயரிலும் இதழ்கள் நடத்தித் தமிழ் மொழியின் பண்டைச் சிறப்பை (பழமையை) வெளிப்படுத்தியுள்ளார்.
  தொல்காப்பியத்தை முதன் முதல் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஆய்வு செய்துள்ளார். ‘Tholkappiyam in English with Critical Studies’ என்னும் ஆய்வு நூலை வெளிநாட்டவரும் உணர்ந்து கொள்ளும் வகையில் காரணகாரியத் தொடர் காட்டி எழுதியுள்ளார். தொல்காப்பியம் கி.மு. ஏழாம் நூற்றாண்டைச் சார்ந்தது என்ற கருத்தைத் தக்க சான்றுகளுடன் நிறுவினார். தமிழ் இலக்கணத்தின் செம்மையைப் ‘பழந்தமிழ்’ என்னும் நூலில் தெளிவுறக் கூறியுள்ளார். தொல்காப்பியர் காலத் தமிழ் மொழியின் இலக்கிய இலக்கணச் சிறப்பை ‘தொல்காப்பிய ஆராய்ச்சி’ என்ற நூலில் புலப்படுத்தியுள்ளார்.
  திருவள்ளுவரின் தென் தமிழ்க் கொள்கையை ‘வள்ளுர் வகுத்த அரசியல்’, ‘அமைச்சர் யார்’ ‘வள்ளுவர் கண்ட இல்லறம்’ ‘காதல் வாழ்க்கை’ என்ற நூல்கள் வாயிலாகச் சிறப்பாகக் கூறியுள்ளார். இவை தவிர திருக்குறள் முழுவதற்கும் உரை எழுதியுள்ளார். திருக்குறள் எளிய பொழிப்புரை என்று அந்நூல் வழங்குகிறது. மேலும் ‘எல்லாரும் இந்நாட்டு அரசர்’ என்ற நூலிலும் வள்ளுவரின் பொருட்பால் கருத்துகளைப் புலப்படுத்தியுள்ளார். மேலும் இலக்குவனாரின் ‘தமிழ்க் கற்பிக்கும் முறை’ என்னும் நூல் தமிழாக்கம் கருதுவோர் நினைவில் வைத்துப் போற்றுவதற்குரிய செயல்கள் பலவற்றை விரித்துரைக்கின்றது. புது எண்ணங்களைத் தோற்றுவிப்பதற்குரிய கருவி நூலாகவும் இது விளங்குகின்றது.
முனைவர் ம. இராமச்சந்திரன்
(ஆய்வியல் நிறைஞர் (M.Phil) பட்டத்திற்காகச் சென்னை பல்கலைக்கழகத்திற்கு அளிக்கப்பெற்ற ஆய்வேடு
ஆய்வாளர் ம. இராமச்சந்திரன், தமிழ்த் துறை, மாநிலக் கல்லூரி,
சென்னை-60 005, திசம்பர் 1987)