வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம்,
தமிழ்த்துறை, ம.தி.தா.இந்துக்கல்லூரி
திருநெல்வேலி
பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் -பன்னாட்டுக் கருத்தரங்கம்
கட்டுரைத் தொகுப்பு நூல்
தொகுப்புரை 3/7
“சி.இலக்குவனாரின் தமிழ்மொழிச் சிந்தனை”கள் யாவை என ஆய்வாளர் மு.ஏமலதா அருமையாக விளக்கியுள்ளார். சமற்கிருதச்
சார்புடையதாகத் தொல்காப்பியத்தைப் பிறர் தவறாகச் சொல்லி வந்ததை மாற்றித்
தமிழ்மரபில் தமிழ் மரபு காக்க உருவாக்கப்பட்டது தொல்காப்பியம்; தமிழில் தூய்மை பேணுவதே தமிழையும் தமிழரையும் காக்கும்;
வீட்டுச் சமையல் போன்ற கலப்பில்லாத தூயதமிழே தேவை; குடுகுடுப்பைக்காரன்
பிச்சை எடுத்த சோறு பலவகையாகக் கூட்டுச்சோறாக உள்ளதுபோன்ற கலப்பு மொழி
தேவையில்லை; பிற நாட்டுப் பொருள்களுக்குச் சுங்க வரி மூலம் தடை விதிப்பதுபோல், பிற மொழிச் சொற்களுக்கும் தடை விதிக்க வேண்டும்; திருத்தமான இனிய தமிழையே எப்பொழுதும் பயன்படுத்த வேண்டும் எனப் பேராசிரியர் வலியுறுத்துவனவற்றையும் தெரிவித்துள்ளார்.
“சங்க இலக்கியச் சொல்லோவியங்களில் இலக்குவனார் உத்திகள்” யாவை என ஆய்வாளர் இல.திருப்பதி செல்வம் விளக்குகிறார். வகைப்பாட்டு உத்தி,
சொல் விளக்க உத்தி, நாடக உத்தி ஆகியவற்றை இலக்கிய விளக்கத்திற்குப்
பயன்படுத்தும் புதிய முறை கையாளல்; பாலைத்திணைக்குப் புது விளக்கம்
தந்துள்ளதுபோல் புதிய விளக்கம் அளித்தல்; பதவுரை, சொல்லாராய்ச்சி,
ஆராய்ச்சிக் குறிப்பு, குறிப்புகள், உவமை எனப் புதுவகை ஆராய்ச்சிக்கு
வித்திட்டுள்ளமை; ஆகியவற்றால் பேராசிரியரின் சங்க இலக்கிய
விளக்கங்கள் மேலும் ஆய்விற்குரிய களமாகப் பரந்து அமைந்துள்ளன என்றும்
தெளிவுபடுத்துகிறார். மேலும், இவர், “சொல்லுக்குச் சொல்விளக்கம்
என்னும் பகுதியில் தெரியாத சொற்களுக்கு மட்டும் விளக்கம் தந்திருந்தால்
போதுமானது” எனக் கருத்து தெரிவித்துள்ளார். இச்சொற்பொருள் விளக்கப்
பகுதியின் பெயர் ‘பதவுரை’ என்பதாகும். பதவுரை என்பது பாடலில் இடம்
பெற்றுள்ள எல்லாப் பதங்களையும் விளக்குவதுதான். ஒருவருக்குத் தெரிந்த
பொருள் மற்றவருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஒரு காலத்தில் புரியும் சொற்
பொருள் பிறிதொரு காலத்தில் புரியாமல் போகலாம். எனவே, இலக்குவனார் கையாண்ட
முறையே சிறந்தது என்பதை அவர் உணர வேண்டும்.
திராவிட இயக்க அறிஞரான “சி.இலக்குவனார் பார்வையில் காமராசர்” வரலாறு, கூறப்பட்டிருப்பதை ஆய்வாளர் செ.சத்தியமூர்த்தி நம் உள்ளத்தில் பதித்துள்ளார்; வெறும் புகழ்ச்சி நூலாக இல்லாமல்,
ஆட்சியின் குறைகளையும் அவற்றைப் போக்க வேண்டிய தேவைகளையும் எடுத்துக்
கூறியுள்ளார்; நம் மாநிலத்திற்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்ட வேண்டும்
என்பது போன்ற தமிழ்நல வேண்டுகோள்களையும் வலியுறுத்தியுள்ளார்; காமராசரின்
வாழ்க்கை வரலாற்றினை மட்டுமல்லாமல், அக்கால அரசியல், மன்பதை நிலைகளையும்
தெளிவாகக் காட்டியுள்ளார்; காய்தல் உவத்தலின்றி, நடுநிலையோடு, தமிழ்ப்புலமையுடன் கூடிய எளிமையான நடையில் பேராசிரியர் அளித்துள்ளார் எனப் பாராட்டுகிறார்.
தொல்காப்பியரின் பேரறிவு, பேராற்றல்,
பெரும்புலமை முதலியவற்றைத் தம் ஆராய்ச்சிவன்மையால் சிறந்த
எடுத்துகாட்டுகளுடன் நிறுவிய புலமை; தொல்காப்பியத்தில் ஆழங்கால்
பட்டவராதலால் எழுத்து, சொல், அதிகாரங்களின் மொழியியல் நுட்பங்களையும்
பொருளதிகாரம் புகலும் சமுதாயக் கருத்துகளையும் திட்பநுட்பத்துடன் விளக்கும் வியப்புமிகு திறன்; செவ்விய திருக்குறட்பணி; தமிழ்காக்கும் களப்பணியாளர்
என அவரது படைப்புகள், அமைப்புகள் மூலம் “சி.இலக்குவனாரின் அமரவாழ்வும்
அருந்தமிழ்த்தொண்டும்” நாம் போற்றி வணங்கத்தக்கன என்பதை ஆய்வாளர் மு.வரதராசன் உணர்த்துகிறார்.
“திருக்குறளில் பேரா.சி.இலக்குவனாரின் ஆளுமைத்திறன்” வெளிப்படுவதை ஆய்வாளர் பொ.ஆறுமுகச் செல்வி புலப்படுத்தியுள்ளார்; வேறுபட்ட,
மாறுபட்ட சொல்லைக் கொண்டு பொருள் சொல்லாமல்,குறளில் உள்ள அதே சொல்லைக்
கொண்டு மக்கள் எளிதில் புரிந்து வகையில் பொருள் கொடுத்துள்ளார்;
எளிய நடை, இனிய சொற்கள், நல்ல எடுத்துக்காட்டுகள், பழமொழிகள்,
உரையாசிரியர்கள் உரை மேற்கோள் மூலம், தமிழ்மக்கள் புரிந்து கொள்ளும்
வகையில் பல்வேறு உத்திகளைக் கையாண்டுள்ளார் என்று எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்குகிறார்.
“சி.இலக்குவனாரின்
மொழி: பண்பாட்டின் அடையாளம்” என்பதையும் தமிழின் செம்மொழித் தன்மையை
விளக்குவதையும் ஆய்வாளர் அ.செயந்தி ‘பழந்தமிழ்’ நூல் மூலம் பாங்குடன்
விளக்கியுள்ளார்; மொழியின் தோற்றம், மொழியின் சிறப்பு, தொடர் அமையும்
முறை, பேச்சுமொழி, எழுத்துமொழி, நூல்வழக்கு, உலக வழக்கு, திராவிடக்
குடும்பம் என்று சொல்லாமல் தமிழ்க்குடும்பம் என்று சொல்ல வேண்டியதன் இன்றியமையாமை, இந்தியா முழுவதும் வழங்கிய மொழி தமிழே, சிந்துவெளிப் பழந்தமிழும் இன்றைய தமிழும் வேறல்ல எனப் ‘பழந்தமிழ்‘ நூல் வாயிலாக இலக்குவனார் விளக்குவதை நமக்கு எடுத்தியம்புகிறார்.
வள்ளுவர் கூறும் இல்லறம் மூலம் “இலக்குவனாரின் பெண்ணியப் பார்வை”யைப் பெருமையுடன் ஆய்வாளர் இரெ.சந்தான பாபி விளக்கியுள்ளார்; பெண்ணைக்
குறிப்பது ஆணுக்கும் மனைவியைக் குறிப்பது கணவனுக்கும் மகனைக் குறிப்பது
மகளுக்கும் தாயைக் குறிப்பது தந்தைக்கும் பொருந்தும் எனச் சிறப்பாக
இருபால் சமத்துவத்தை ஆணித்தரமாக ஆய்ந்துரைத்துள்ளார்; பெண்ணியத்திற்கு எதிரான பரிமேலழகர் கருத்தைக் கடுமையாகச் சாடுகிறார்; இவ்வாறு இன்றைய
உலகின் சிறந்த பெண்ணியச் சிந்தனையாளராகப் பேராசிரியர் இலக்குவனார்
விளங்குவதைப் பல எடுத்துக்காட்டுகள் மூலம் அழுத்தமாகப்
படம்பிடித்துள்ளார்.
தொல்காப்பியர் காலத்தில் வருண வேறுபாடு இல்லை; கரணம் என்பதை வேள்விச்சடங்கு என நச்சினார்க்கினியர் கூறுவது தவறு; அக்காலத்திலேயே திருமணப் பதிவு முறை இருந்தது; எனப்
பலவகையிலும், “பேராசிரியர் இலக்குவனார் பார்வையில் கற்பியல்” ‘தொல்காப்பிய
ஆராய்ச்சி’ நூலில் தமிழ் மரபிற்கேற்ப விளக்கப்பட்டிருப்பதை இளம் முனைவர் க.வீரம்மாள் விளக்கியுள்ளார்.
நன்மாணாக்கராக, நல்லாசிரியராக, சிறந்த கல்லூரிமுதல்வராக,
புகழார்ந்த இதழியலாளராக, சிறந்த நூலாசிரியராக, ஆராய்ச்சியாளராக, இணையற்ற
மொழிபெயர்ப்பாளராக, ஆட்சிக்குழு உறுப்பினர், பேரவை உறுப்பினர், பாடத்திட்ட
உறுப்பினர் எனப்பல்வேறு கல்விநிலைப் பொறுப்பாளராக, இயக்கங்களை
வழிநடத்துபவராகத் திகழும் “இலக்குவனாரின் பன்முகத்திறன்” குறித்து ஆய்வாளர்
தி.உமாபதி சிவகுமார் பழுதற விளக்கியுள்ளார்;
முதல்முறையாக அஞ்சல்வழிக்கல்வி தொடங்கியவர், நாளிதழ் தொடங்கிய முதல்
மொழிப்பேராசிரியர், கொள்கைகளிலும் மொழிப்பற்றிலும் பிடிவாதமான உறுதியாளர்,
அஞ்சா நெஞ்சர் என்பனவற்றையும் நமக்கு நவின்றுள்ளார்.
“பேரா.சி.இலக்குவனாரின் சங்கக்காலம் காட்டும் நாட்டு வளம்” குறித்து ஆய்வாளர் ப.கிருட்டிணம்மாள்
இனிதே இயம்பியுள்ளார். இதன் மூலம், சங்க இலக்கியச் செய்திகளை
எளிமையாகவும் சிறப்பாகவும் விளக்கியுள்ளார்; நாகரிகம், பண்பாடு ஆகியவற்றின்
முதிர்ச்சிக்காலம் சங்கக்காலம் எனப் பேராசிரியர் நிறுவியுள்ளார்
என்கிறார்; நாடு, நகரம், இமயம் முதல் குமரி வரை தமிழகமாக இருந்த
நாட்டின் எல்லை,பிற நாட்டு மக்களாலும் விரும்பத்தக்க நாட்டின் வளம்,
நாட்டின் வீரம் முதலானவற்றை இலக்குவனார் விளக்கியுள்ளதை எடுத்துஆள்கிறார்.
சங்கக்காலமக்கள் நாகரிகத்திலும் பண்பாட்டிலும் விருந்தோம்பலிலும் சிறந்து விளங்கினார்கள்;
தட்பவெப்பநிலைக்கேற்பவும் செய்யும் வேலைக்கேற்பவும் மாற்றி மாற்றி ஆடை
அணிந்தார்கள்; தலைமுதல் கால்வரை பொன்னாலும் முத்தாலும் மணியாலும் செய்த
அணிகலன்களை அணிந்திருந்தனர்; அழகுக்கலையில் சிறந்திருந்தார்கள்;
கலைநுணுக்கமிக்க மாளிகைகள், எழுநிலை மாடங்கள் கட்டிக் குடியிருந்தார்கள்; இவ்வாறு, ‘இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல்‘
நூல்வழியாகப் பன்முக நோக்கில் “பேரா.சி.இலக்குவனார் விளக்கும் சங்கக்காலம்
காட்டும் நாகரிகமும் பண்பாடும்” நயம்பட உள்ளதாக ஆய்வாளர் மு.வசந்தி திறம்பட விளக்கியுள்ளார்.
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ ஆய்வுநூல்,
செந்தமிழின் செம்மொழிச் சீர்மையை விளக்குகிறது; தேசிய நெறி, அரசு நெறி,
தெரிவு நெறி, தூய்மை நெறி, எழுத்து நெறி, பயன்பாட்டு நெறி, உரிமை நெறி,
நூல் நெறி, போராட்ட நெறி, கல்வி நெறி, காப்பு நெறி, ஆளுமை நெறி, கட்சி
நெறி, குமுகாய நெறி, குறிக்கோள் நெறி ஆகிய பதினைந்து நெறிகளை வகுத்தளித்துள்ளார்; ஒவ்வொரு நெறி முறையிலும் தமிழ்ப்பற்று, தமிழ் மீட்புணர்வு மிளிர்கின்றது; எனப் “பேராசிரியர் சி.இலக்குவனாரின் பழந்தமிழ்ப்படைப்புகள்” மூலம் இளம்முனைவர் பழ.இராசகோபாலன்
பகுத்து விளக்குகிறார்; தமிழ், செம்மொழி என்னும் தகுதிப்பேற்றுக்குரிய
அனைத்துச் சீரிய பண்புகளும் பெற்றிலங்குவதைப் பழந்தமிழ் நூல் மூலம்
இலக்குவனார் உணர்த்தியுள்ளார் எனவும் விளக்குகிறார்.
இலக்குவனார்திருவள்ளுவன்
No comments:
Post a Comment