மறக்க முடியுமா? – புலவர் குழந்தை


அறிவில் முதிர்ச்சி, உணர்வில் முதிர்ச்சி, புலமையில் முதிர்ச்சி, பாக்களைப் புனைவதில் முதிர்ச்சி-ஆனால், பெயர் மட்டும் குழந்தை!
புலவர் குழந்தை, ஈரோடு நகரத்திற்கு அருகில் ‘ஒல வலசு’ என்ற சிற்றூரைச் சேர்ந்தவர்.
தாயார் சின்னம்மை, தந்தை முத்துசாமி.
ஆனி 18, 1937 / 1906ஆம் ஆண்டு  சூலை 1ஆம்  நாள் பிறந்த இவரின் கல்வி, திண்ணையில் தொடங்கி, 1937ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகத்தில் புலவர் பட்டம் பெறுவதில் போய் நின்றது.
இவரின் வாழ்க்கை ஆசிரியர் பணியில் தொடங்கி 37 ஆண்டுகள் தொடர்ந்தன.
பவானி உயர்நிலைப் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றினார்.
கவி பாட வேண்டும் என்ற வேட்கை. இளமையில் இசைக்கேற்பப் பாடத் தொடங்கினார். பின்னாளில் மரபில் மடை திறந்தார் கவிதைகளை.
நல்ல பேச்சாளர், கவிவாணர், மொழி உணர்வாளர்.
1938, 1948, 1965 ஆகிய ஆண்டுகளில் நுழைய முயன்ற இந்தி ஆதிக்கத்திற்கு எதிராகக் களம் இறங்கியவர் இவர்.
இவரின் பேச்சும், பாடல்களும் அங்கே உணர்ச்சிப் பெருக்காயிற்று, மக்கள் உணர்வுப் பிழம்பாயினர்.
1946 தொடக்கம் 1958 வரை ‘வேளாண்’ இதழைத் தொடர்ந்து நடத்திய இதழாளர்.
தந்தை பெரியார் வேண்டுகோளுக்கு இணங்க, சென்னையில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில், குறளுக்கு உரை எழுத ஒரு குழு அமைக்கப்பட்டது.
நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் அமைக்கப்பட்ட அக்குழு அறிஞர்களுடன் புலவர் குழந்தையும் இருந்தார்.
புலவருக்குத் திருக்குறள் மீது இருந்த ஆழ்ந்த புலமையால், அவர் 25 நாட்களில் திருக்குறளுக்கு ஓர் அருமையான உரையை எழுதி முடித்தார்.
அது, ‘திருக்குறள் குழந்தையுரை’ என்று அழைக்கப்பட்டது.
‘யாப்பருங்கலக் காரிகை’ சற்றுக் கடினமாக இருந்ததால், அதை எளிதாக்கி ‘யாப்பதிகாரம்‘ என்ற நூலை எழுதினார்.
பவணந்தி முனிவரின் நன்னூலை எளிமையாக்கி ‘இன்னூல்’ என்ற நூலை எழுதியிருக்கிறார்.
‘தொடையதிகாரம்’ என்பது இவரின் இன்னொரு இலக்கண நூல்.
தொல்காப்பியம் பொருளதிகாரத்திற்கு இவர் எழுதிய முழு உரை ‘தொல்காப்பியம் குழந்தை உரை’ ஆகும்.
இப்படித் தமிழோடு மட்டும் உறவாடியவர் அல்லர் புலவர் குழந்தை. இவர் தந்தை பெரியாரின்  தன்மதிப்புச்(சுயமரியாதைச்) சிந்தனையாளர்.
கம்பனோடு போட்டி போட்டவர் குழந்தை.
12 ஆயிரம் பாடல்களைப் பாடினான் கம்பன் – பெயர்  இராமகாதை, இராமாயணம்.
3100 பாடல்களைப் பாடினார் புலவர் குழந்தை – பெயர் ‘இராவண காவியம்’
இருவரும் கவிப்போரரசர்கள்தாம். ஆனால் கம்பன் ஆரியர்களுக்காகப் பாடினான், ஆரியத்தை நிமிர்த்தப் பாடினான், திராவிடர்களைப் பழித்து.
புலவர் குழந்தை ஆரியரைப் புறமொதுக்கிப்பாடினார் ஆரியத்தை தோலுரித்துப் பாடினார், திராவிடரை நிமிர்த்தப்பாடினார்.
கம்பன் பாடியது ஆரியத்திணிப்பு.
குழந்தை பாடியது தமிழரின் இனமானம்.
தமிழ்ப் புலவர்கள் எல்லாம் தமிழரை இழிவுபடுத்தும் புராணக்கதைகளையே பாடிவந்தார்கள். அதற்கு மாறாக இராவண கவியத்தைப் படைத்து இழிவைப் போக்கிய புலவர் குழந்தை அவர்களைப் பாராட்டுகிறேன்” – 1971ஆம் ஆண்டு விழுப்புரத்தில் புலவர் குழந்தையை இவ்வாறு பாராட்டுகிறார் தந்தை பெரியார்.
இராவண காவியம் பழைமைக்குப் பயணச்சீட்டு. புதுமைக்கு நுழைவுச் சீட்டு” – இராவண காவிய நூலில் அறிஞர் அண்ணாவின் அணிந்துரை வரிகள் இவை
“கம்பனின் இராமாயணத்தை இராவணகவியமாக மாற்றியமைத்ததன் மூலம், செந்தமிழ்ப் பெருமக்களின் சிந்தனைத் தீயை நெய்யூற்றி வளர்த்தார் புலவர் குழந்தை” – புலவர் குழந்தையை ஒரு சிந்தனைத் தீயாக உருவகம் செய்தார் கலைஞர் 1971 இல்.
ஆரியர்களின் சமூக ஆதிக்கப் பண்பாட்டைத்  தடுத்து நிறுத்தித் தகர்த்தெறிந்த இராவண காவியம் வெளியான ஆண்டு 1948.
  1. தமிழ்க்காண்டம்
  2. இலங்கைக் காண்டம்
  3. விந்தக் காண்டம்
  4. பழிபுரிக் காண்டம்
  5. போர்க் காண்டம்
ஆகியவை இராவண காவியத்தின் 5 காண்டங்கள்.
57 படலங்கள், 3100 பாடல்களைக் கொண்ட இராவண காவியத்தின் தலைவர் இனமான இராவணன். எதிரி(ல்) இராமன்.
அவ்வளவுதான்!
இராவணனைத் தலைவனாக்கி, இராமனை வில்லனாக்கினால் விடுமா காங்கிரசு அரசு?
அன்றைய காங்கிரசு அரசால் அதிரடியாகத் தடை செய்யப்பட்டது புலவர் குழந்தையின் இராவண காவியம்.
தடைக்கு இன்னொரு காரணம் அது திராவிடர்களின் பேரிலக்கியங்களில் ஒன்று.
காலம் மாறியது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் ஏறியது.
திராவிடப் பேரிலக்கியத்தின் தடையைத் திராவிட இயக்க ஆட்சி நீக்கியது – நீக்கியவர் முதல்வர் கலைஞர், ஆண்டு 1971.
அம்மட்டுமன்று,
தொல்காப்பியப் பொருளதிகார உரை, தொல்காப்பியத் தமிழர், திருக்குறளும் பரமேலழகரும், பூவா முல்லை, கொங்குநாடு, தமிழக வரலாறு, கொங்குநாடும் தமிழகமும், அருந்தமிழ் விருந்து, அருந்தமிழ் அமிழ்து, தமிழ் எழுத்துச்சீர்திருத்தம் என 15 உரை நூல்கள் –
அரசியலதிகாரம், காமஞ்சரி, நெருஞ்சிப்பழம், ஆடிவேட்டை, கன்னியம்மாள் சிந்து, புலவர் குழந்தை பாடல்கள் என 13 கவிதை நூல்கள் ;
யாப்பதிகாரம், தொடையதிகாரம், இன்னூல் என முன்று இலக்கண நூல்களை எழுதியவர் புலவர் குழந்தை.
புறநானூற்றில், புலவர் பொன்முடியாரின் “ஈன்று புறந்தருதல் என்றலைக் கடனே” என்ற பாடலின் வழி,
“தாய்மொழி வளர்த்தல் தமிழர்தங் கடனே
வாய்மொழி புரத்தல் மற்றவர் கடனே
காய்மொழி தவிர்த்தல் கற்றவர் கடனே
ஆய்மொழி உணர்த்தல் அறிஞர் கடனே”
என்று அவர் எழுதிய யாப்பதிகாரத்தில் சொன்ன புலவர் குழந்தை, புரட்டாசி 07, 2003 / 1972ஆம் ஆண்டு செட்டம்பர்  22ஆம் நாள் மறைவு எய்தினார்.
இவரை நாம் மறக்கமுடியுமா?


மூத்த இதழாளர் எழில்.இளங்கோவன்
கருஞ்சட்டைத் தமிழர் : திசம்பர் 1-15, 2016